February 24, 2011

காலம் என்னும் பெருங்கணக்கு: ஒரு வாரத்திற்குப் பின் ஒரு குறிப்பு

எனது பாடங்களுக்கு நான் கற்பிக்கும் முறையில் எனக்கு எப்போதும் திருப்தி இருப்பதில்லை. அதனால் திறனாய்வாளர்களையும் படைப்பாளிகளையும் அழைத்து அவர்களோடு உரையாடும் வாய்ப்பை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்தித் தருவது ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்வு. இந்த வருடம் கடந்த வாரம் சிறுகதையாளர் வண்ணதாசனும், நாவலாசிரியர் இமையமும் எங்கள் துறைக்கு வந்திருந்தனர்.
அவர்களோடு திறனாய்வாளர்கள் தி.சு.நடராசனும் காசி மாரியப்பனும் முறையே சிறுகதை பற்றிச் சொல்லவும், நாவல் பற்றிச் சொல்லவும் வந்திருந்தார்கள். முதல்  நாள் சிறுகதைக்கான அமர்வு; இரண்டாவது நாள் நாவல் பற்றிய அமர்வு.

அதிகமானவர்களை அழைக்காமல் ஒரு நாளைக்கு இருவர் எனச் சுருக்கமான நபர்களோடு செய்த ஏற்பாடு கூடுதல் பலன் அளித்தது எனத் தோன்றியது.
வண்ணதாசன் அனுபவத்தைக் கலையாக்கும் வித்தை எவ்வாறு நடக்கிறது என்பதை அவருக்கே உரிய பதற்றமான மொழியில் பேசியதும், போகப்போகத் தாமிரபரணியின் ஓட்டத்தைப் போல அலையின்றி நகர்ந்ததும் மாணாக்கர்களுக்குக் கிடைத்த புது அனுபவம்.

.
இரண்டாவது நாள் இமையத்தோடு நடத்திய உரையாடலின் போது படைப்பின் காலம், படைப்பில் காலம் என்பன முக்கியமான மையமாக மாறின. ஒரு படைப்பாளி தனது படைப்பை குறிப்பான காலத்தில் வைத்துக் காட்டவில்லை என்றால், அந்தப் படைப்பு வாசகனைக் கவராமல் போய்விடும் வாய்ப்பைத் தனதாக்கிக் கொண்டுவிடுகிறது எனச் சொன்ன முன்னுரைக் குறிப்பைத் தொடர்ந்து, தமிழ் எழுத்தாளர்கள், குறிப்பாகச் சிறுகதையில் செயல்படும் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பில் காலம் பற்றிய பிரக்ஞையின்றியே எழுதுகின்றனர் என்றார் இமையம். இப்படி எழுதும் படைப்புகள் எதிர்கால வாசகனுக்கு எந்த அனுபவத்த்தையும் தராது என்று குற்றச்சாட்டாகவே சொன்னார்.

பெண்ணியம், தலித்தியம் சார்ந்த கேள்விகளின் போது அனுபவத்தை எழுதுதல் என்ற பொருளின் அர்த்தமின்மையைப் பல உதாரணங்களோடு மாணவர்கள் மோதிப் பார்த்தனர்; தலித்தின் அனுபவம் தலித் வாசகருக்கு மட்டுமே வாசிப்பனுபவத்தைத் தரும் என்பது போலப் பெண் அனுபவமும் பெண் வாசகர்களுக்குரியதாக ஆகி விடும் ஆபத்தை அந்த உரையாடல்கள் சுட்டிக் காட்டின.
இமையம் எப்போதும் அவரது படைப்பு பற்றி மட்டும் பேசாமல், தமிழ்ப் படைப்புகளின் மீதான தனது பொதுக்கருத்தை வைப்பதில் தயங்குவதில்லை. அண்மையில் அம்ருதாவில் அவர் எழுதிய கட்டுரையில் தமிழ்ப்படைப்பாளிகளின் மொழியாளுமை பற்றிய குறிப்புகளைப் போலவே காலம் பற்றிய கருத்தும் முக்கியமானதாகவே தோன்றுகிறது. படைப்பாளிகள் அவரோடு விவாதிக்கலாம்

.

No comments :