February 15, 2011

ஐயா, உங்கள் காலம் முடிந்து போய் விட்டது


அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்து நிற்கும் அவரிடம் அப்படிச் சிரித்துக் கொண்டே பேசியிருக்கக் கூடாது என்பது இப்போது உறைக்கிறது. சிரித்துக் கொண்டே சொன்ன போது அவர் நிச்சயம் கோபம் அடையவே செய்திருப்பார்.


அனுதாபப் பட வேண்டிய நேரத்தில் நான் சிரித்தது அவரைக் கேலி செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல; எனக்கு நேர்ந்த அந்த நிகழ்வு திரும்ப வந்ததனால் தான். எனக்கும் இதுபோல் நேர்ந்தது என்று சொல்வதின் மூலம்  அவரை ஆசுவாசப் படுத்தலாம் என்று கருதித்தான் நான் சிரித்தேன். இதுபோல் நேர்வது சகஜமான ஒன்று என உணரும் போது மனிதர்கள் தாங்கள் சந்தித்திக்கும் குழப்பத்திலிருந்தும் திகைப்பிலிருந்தும் விடுபடுவார்கள் என நினைப்பதின் தொடர்ச்சியே அந்தச் சிரிப்பிற்கான காரணம்.
நான் சிரித்துக் கொண்டே சொன்ன அந்த நிகழ்ச்சியைக் கேட்ட பிறகும் அவரது குழப்பமும் திகைப்பும் மாறவில்லை என்பதை முகம் காட்டியது. அதே நேரத்தில் அவரது கோபத்தையும் என்னிடம் காட்டவில்லை. காரணம் என்னுடைய தயவு அவருக்குத் தேவை. மொழி தெரியாத இடத்தில் எனது உதவியால் தான் அவருடைய சிக்கலை ஓரளவு சரி செய்ய முடியும். அவர் மலையாளத்தின் பிரதிநிதியாக அங்கு வந்திருந்தார். நான் தமிழ் நாட்டின் பிரதிநிதி. தென்னிந்தியப் பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்படும் அறிவியல் நாடகப் போட்டியின் நடுவர்களாக நாங்கள் புதுச்சேரியில் இருந்தோம்.
இந்த முறை விழா பாண்டிச்சேரியில் (ஜனவரி 23-25) என்பதால் கட்டாயம் போவது என்று தீர்மானித்தேன்.  எட்டாண்டு காலம் வாழ்ந்த புதுச்சேரியின் நினைவுகளை ஒவ்வொரு வாய்ப்பிலும் புதுப்பித்துக் கொண்டே இருப்பவன் நான். அந்தப் போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்துவது பெங்களூரில் இருக்கும் விஸ்வேஸ்வரய்யா அறிவியல் தொழில் நுட்ப மையம். நான்கைந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டிலிருந்து அழைக்கப்படும் நடுவராக என்னை அந்த நிறுவனம் அழைத்துக் கொண்டிருக்கிறது. நான் போக முடியாத சூழலில் வேறு யாரையாவது அனுப்புவேன். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அப்படித்தான். விஸ்வேஸ்வரய்யா அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் முகவரிப் பட்டியலில் இருக்கும் நபர்களுக்கே முதல் அழைப்பு. அவர்கள் வரவில்லையென்றால் அவர்களே மாற்று நபரைப் பரிந்துரை செய்யலாம்.

தென்மண்டல பள்ளி மாணவர்களுக்கான நாடக விழாவிற்கு நான்கு நடுவர்கள். மலையாளத்திலிருந்து எப்போதும் பேராசிரியர் ஐயப்பன் தான். அதே போல மைசூரிலிருந்து கன்னடத்தின் சார்பாக பசவலிங்கய்யா தான் வந்திருந்தார். ஆந்திராவிலிருந்து வந்தவர் புதியவர். திருப்பதி வானொலியில் நாடகத் தயாரிப்பாளர்.  நாடகங்கள் முடிந்து விட்டன; நடுவர்களின் வேலையும் ஏறத்தாழ முடிந்து விட்டது. மலையாள நாடகமும் கன்னட நாடகமும் தேசிய நாடக விழாவிற்குத் தேர்வு செய்யப்பட்டன. தமிழும் தெலுங்கும் பக்கத்தில் கூட இல்லை.
செய்த பணிகளுக்கான மதிப்பூதியம், போக்குவரத்துப் படிகள் வாங்கும் இடத்தில் தான் ஐயப்பனுக்கு அந்த அதிர்ச்சி. மைய அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் கலைஞர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் போன்றவர்களைச் சரியாக மதிக்க வேண்டும் என்ற அக்கறையை எப்போதும் வெளிப்படுத்துவார்கள். இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்யலாம் என அனுமதித்த போதிலும் சிலர் விமானத்தில் வந்தால் அதையும் கொடுத்து விடுவார்கள். டிக்கெட் காட்ட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத விதி. நான் குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்கிறேன் என்றால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித்தான். ஒவ்வொருவரும் தங்கள் பயணச்சீட்டுகளின் நகல்களை கணக்காளரிடம் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தோம். மலையாள நடுவராக வந்திருந்த ஐயப்பனின் பயணச்சீட்டைப் பார்த்த கணக்காளர் அடைந்த அதிர்ச்சியை அவரது சொற்களில் வெளிப்பட்ட பதற்றம் காட்டியது.

ஐயா, உங்கள் காலம் முடிந்து போய்  விட்டதே ஆங்கிலத்தில் அவர் சொன்ன வாக்கியத்தின் அர்த்தம் அதுதான். பேராசிரியர் ஐயப்பனும் அதே பதற்றத்துடன் என்ன சொல்றீங்க நீங்கஎன்று மலையாளத்தில் சொல்லி விட்டு ஆங்கிலத்திற்கு மாறினார். கணக்காளர் பயணச்சீட்டில் தர வேண்டிய பணத்தை மட்டும் பார்க்காமல் அனைத்து அம்சங்களையும் சரி பார்த்திருக்கிறார். அப்படிப் பார்த்த போது தான் அதை உணர்ந்துள்ளார். அந்த பயணச்சீட்டின் படி பயணம் செய்திருந்தால் இந்நேரம் அவர் கேரளத்திலுள்ள கோழிக்கோட்டை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதில் பயணம் செய்யாமல் இன்னமும் பாண்டிச்சேரியில் இருக்கிறாரே என்பதில் தான் அவர் அதிர்ச்சியடைந்து விட்டார். 

வாசிப்பவர்களுக்கு இது புரிய வேண்டும் என்றால் இன்னமும் நான் விளக்க வேண்டும். குழம்பி நின்ற பேராசிரியர் ஐயப்பனுக்குக் கணக்காளர் விளக்கியது போலவே நானும் உங்களுக்கு விளக்குகிறேன்.
பேராசிரியர் ஐயப்பன் வாங்கிய பயணச்சீட்டு, சென்னை -மங்களூர் ரயிலில் 25-01-2011, அன்று இரவு 0.25 -க்கு விழுப்புரம் ரயில் சந்திப்பில் ஏற வேண்டும் எனச் சொல்லியது. இப்போது நேரம் 25-01-2011 பகல் 02.35. ஏறத்தாழ பதினான்கு மணி நேரம் கடந்து விட்டது. இந்நேரம் சென்னை- மங்களூர் விரைவு ரயில் கோழிக்கோட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கும். இந்த உண்மையைத் தான் கணக்காளர் சொன்னார். அதை விளக்கிச் சொன்ன பிறகுதான் பேராசிரியர் ஐயப்பனுக்குத் தனது காலக்கணக்கில் நேர்ந்த தவறு உரைக்க ஆரம்பித்தது. அவரைப் பொறுத்தவரையில்  25-01-2011-க்கான இரவு இனிமேல் தான் வரும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்திய ரயில்வேயின் காலக்கணக்கு 25- 01-2011 -க்கான பாதி இரவை முடித்து விட்டது. இன்னொரு பாதி ராத்திரி இனிமேல் 18-01 மணிக்குத் தொடங்கும் எனச் சொல்லும்.

பெரும்பாலான இந்திய மனிதர்களுக்கு ஒருநாள் என்பது காலை 06.00 முதல் தொடங்குவதாக நினைத்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் என்பது இருபத்தி நான்கு மணிநேரம் என்பதில் மனிதர்களுக்கும் ரயில்வேக்கும் வேறுபாடு கிடையாது. ஆனால் சாதாரண மனிதர்கள் ஒருநாளைச் சரிபாதியாகப் பிரித்துப் பன்னிரண்டு மணிநேரத்தைப் பகலுக்கும் இரவுக்கும் பிரித்துக் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் இந்திய ரயில்வே ஒருநாளின் இருபத்திநான்கு மணி நேரத்தையும் ஒரே கணக்காக -தனியான காலக்கணக்கை வைத்திருக்கிறது.  ரயில்வேயைத் தொடங்கிய ஆங்கிலேயர்கள் காலம் தொடங்கி அதுதான் ரயில்வேயின் கணக்கு. அதனைப் பொறுத்தவரையில் ஒருநாளின் முதல் மணித்துளி நள்ளிரவு 00.01 மணிக்குத் தொடங்குகிறது.  ஆனால் பகல்- இரவு என நாட்களைப் பிரித்துப் பிரித்துப் பழகிப் போன மனித மனம் அதற்கு உடனே மாற்றிக் கொள்வதில்லை. பேராசிரியர் ஐயப்பன் 25-01-2011 இரவுக்குத் தான் முன்பதிவு செய்திருந்தார். அவரது கணக்குப் படி அந்த இரவு இனிமேல் தான் வரும் என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ரயில்வேயின் கணக்குப் படி அந்த இரவு கடந்து போய்விட்டது.

தப்பிய கணக்கில் கலங்கிப் போன பேராசிரியர் .ஐயப்பனுக்குப் பணம் போனதில் பெரிய கலக்கம் இல்லை. இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பயணக் கட்டணம் ஓர் ஆயிரமும் சில நூறுகளும் போனால் பரவாயில்லை என்று சொல்லி விட்டு அரசாங்கப் பேருந்தில் போவதைப் பற்றித்தான் பெரிதும் கலங்கினார். குளிர்சாதன வசதியில் ரயில் அல்லது விமானத்தில் மட்டுமே நீண்ட தூரப் பயணங்களுக்குப் பழகிப் போன அவரால் 14 மணி நேரத்தைப் பேருந்தில் கடப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தட்கால் முறையில் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்றால் மூன்று நாள் இங்கே தங்க வேண்டும். ஒருவழியாக அவரைத் தேற்றிப் பேருந்தில் உட்காரும் மனநிலைக்குக் கொண்டு வந்த பிறகு நான் எனது பயணத்தைத் தொடங்கினேன். புதுச்சேரியிலிருந்து சென்னை சென்று அடுத்த நாளில் திருநெல்வேலி செல்ல இருந்ததால் எனக்கு அவசரம் எதுவும் இல்லை.பேராசிரியர் ஐயப்பனுக்கு ஆறுதல் சொல்லவும் வழிகாட்டவும் பலர் இருந்தோம். ஆனால் நான் இதே போன்று காலத்தைத் தப்ப விட்ட அந்த நாள் கொடுங்கனவின் பெரும்பாரமான ஒரு நாள் என்று தான் சொல்ல வேண்டும். ஆறுதல் அடைய வேண்டும் என நினைத்து அவரிடம் சொன்ன நிகழ்வை உங்களிடம் சொல்கிறேன்.

 மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு இலக்கியக் கூட்டத்திற்காக விருத்தாசலம் வந்திருந்தேன். வரும் போது நானே பயணச்சீட்டு வாங்கி விட்டேன். அன்று காலை வந்து இரவு கூட்டம் முடிந்தவுடன் திரும்பவும் திருநெல்வேலி திரும்பி விடத்திட்டம். பதினோரு மணிக்கு மேல் வரும் ரயிலில் முன் பதிவு செய்யும்படி அழைத்திருந்த நண்பர்களுக்குச் சொல்லியாகி விட்டது. அவர்களும் டிக்கெட் வாங்கி வைத்திருந்தார்கள். கூட்டம் முடியும்போது மணி பத்தரை. அதன் பிறகு இலக்கியவாதிகளுக்கே உரிய உண்டாட்டுடன் இரவு உணவு முடித்து ரயில் வரும் நேரத்துக்கு முன்பே ரயிலடியில் இலக்கியச் சர்ச்சைகளோடு காத்திருந்தோம்.

ரயில் வந்தது. நண்பர்கள் கைகாட்டிக் கொண்டிருக்கும்போது ரயில் நகர்ந்தது. கையில் இருக்கும் இரண்டாம் வகுப்புப் படுக்கைக்கான முன்பதிவுச் சீட்டுடன் நான் ஏறி எனது படுக்கையின் எண்ணைத் தேடிப் போனேன். அங்கே ஒருவர் நல்ல குறட்டையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை நானே எழுப்பியிருக்கலாம். எதோ ஓர் எச்சரிக்கை உணர்வு தடுத்து விட்டது. அந்தப் பெட்டிக்குரிய பயணச்சீட்டுப் பரிசோதகரின் உதவியை நாடிச்சென்றேன். அவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். நான் ஏறியவுடன் எனது வருகையை வரவு வைக்க அவர் எழுந்து தான் ஆக வேண்டும் என்ற தைரியத்தில் எழுப்பி டிக்கெட்டைக் காட்டி எனது இருக்கையில் வேறொருவர் படுத்திருக்கிறார் என்றேன்.

டிக்கெட்டை வாங்கிப் பார்த்து விட்டு அவரது கையில் இருக்கும் பட்டியலைப் பார்த்தார். ஏற்கெனவே இன்னொருவர் அதற்குரிய டிக்கெட்டுடன் இருப்பதை அப்பட்டியல் உறுதி செய்தது. விளக்கைப் போட்டு திரும்பவும் சரி பார்த்தார்.  தவறு எங்கே நடந்துள்ளது என்பதை கண்டு பிடித்து விட்டுச் சிரித்தார். உண்மையில் அவர் கோபப்பட்டிருக்க வேண்டும். சிரித்தபடியே இந்த டிக்கெட்டில் நீங்கள் நேற்றே பயணம் செய்திருக்க வேண்டும். ஆனால் ஒரு நாள் தாண்டி இப்போது ஏறி இருக்கிறீர்கள் என்றார்.
நானும் அந்தப் பயணச்சீட்டினைப் பார்த்தேன். சென்னையிலிருந்து கிளம்பி திருவனந்தபுரம் செல்லும் அந்த ரயில் விருத்தாசலத்திலிருந்து நள்ளிரவு 12.05.-க்குக் கிளம்புவதாக இருந்தது.  நண்பர்களின் கணக்கும் எனது கணக்கும் மனிதர்களின் சாதாரண நடப்புக் கணக்கு. ஆனால் ரயில்வேயின் கணக்கு அந்த ரயில் என்னும் எந்திரத்தின் பயணக் கணக்கு. அதன்படி இந்தச் சீட்டுக்குரிய ரயில் நேற்றே போய்விட்டது

காலம் மட்டும் அல்ல; எல்லாமே குழம்பி நின்றன. டிக்கெட் இல்லாப் பயணம் சட்டப்படி தவறு. முறைப்படி அபராதம் கட்ட வேண்டும் என்றார் டி.டி.ஆர். ஆனால் காலக்குழப்பம் என்பதைப் புரிந்து கொண்டதோடு நான் இருந்த நிலையையும் உணர்ந்து கொஞ்சம் இறங்கி வந்தார்.  அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விட வேண்டும்; இறங்கி சாதாரண பயணத்துக்கான டிக்கெட் வாங்கிக் கொண்டு பின்னால் இருக்கும் முன் பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்யுங்கள் என்றார். விருத்தாசலத்தை அடுத்த அரியலூரில் இறங்கி டிக்கெட் வாங்கி வரும் வரை ரயில் நிற்காதே என்றேன். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்று கேள்வியைப் பதிலாகச் சொல்லி விட்டு அந்தப் பெட்டியின் கடைசியில் இருக்கும் கழிப்பறையின் அருகில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார். உட்கார மட்டும் தான் அனுமதி. தூங்கி விட்டால் அபராதம் கட்ட வேண்டும் என்றார்.

அரியலூரில் இறங்க வேண்டும் என்ற நினைப்பில் தூக்கம் வரவில்லை. அரியலூரில் நின்றவுடன் இறங்கினேன். பின்னால் இருந்த சாதாரண இருக்கை வசதி கொண்ட பெட்டியில் ஏறி அமர்ந்து விட்டேன். கையில் டிக்கெட் எதுவும் இல்லை. ஆனால் திருச்சியில் போய் டிக்கெட் எடுத்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான அவகாசம் அங்கு கிடைக்கும். இடையில் பரிசோதகர் வந்தால் உன்மையைச் சொல்லி விளக்கிப் பார்க்கலாம் என்ற தைரியத்துடன் அமர்ந்து விட்டேன்.  வண்டி வேகம் பிடித்தது. மனம் ஒரு முடிவுக்கு வந்தவுடன் தூக்கமும் வந்து விட்டது. திரும்பவும் விழித்த போது ரயில் திருச்சியைத் தாண்டி திண்டுக்கல்லில் நின்றிருந்தது. இறங்கி ஓடிப் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏறினேன். விருத்தாசலம் முதல் திண்டுக்கல் வரை டிக்கெட் இல்லாத இலவசப் பயணம் உறுத்தவே செய்தது. படுக்கை வசதியில்லாத அந்தப் பெட்டியில் உட்கார்ந்தபடியே தூங்க முயன்றேன்.  பாதிப்பேர் கீழே படுத்திருந்தனர்; சிலர் சரக்குகள் வைக்கும் பலகைகளில் தூங்கினர்.

பேருந்துப் பயணங்களில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் எனக்கும் உண்டு. ஆனால் தப்பிய காலக்கணக்கு அன்றைய தூக்கத்தையும் கடத்திக் கொண்டு போய்விட்டது.

1 comment :

Jana said...

பலவற்றை யோசிக்கவைக்கின்றது...