February 05, 2011

சசிகுமாரின் ஈசன் : சமகாலத் தமிழ்வாழ்வின் பெருந்துயரம்


வெற்றியை மட்டுமே கொண்டாடும் நமது திரைப்பட உலகமும், பார்வையாளர் மனமும் தோல்விப் படம் எடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வெற்றியாளரின் அடுத்த பாய்ச்சலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றன. இந்த மனநிலை திரைப்படம் சார்ந்தது மட்டுமல்ல. போட்டிகள் நிரம்பிய மனித வாழ்க்கையின்பல தளங்களின் இயக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன.

தனது முதல்  படத்தை வியாபாரக் கணக்கில் வெற்றிப்படமாக உருவாக்கியவர்சசிகுமார்.  அந்த ஆண்டில் வந்த படங்களில் கவனிக்கத் தக்கதாகவும் அசலான தமிழ்ச் சினிமாவின் மொழியைக் கண்டடைந்ததாகவும் அவரது சுப்பிரமணியபுரம் கொண்டாடப்பட்டது. ஒரு பெருநகரத்தின் கிராமிய மணம் மாறாத புறநகர்ப் பகுதியைக் களனாகக் கொண்டு, கால் நூற்றாண்டுக்கு முந்திய அரசியல் சமூக வாழ்விற்குள் தமிழர்களை அழைத்துச் சென்ற படம் அது. 
மனிதர்களின் வாழ்விட வெளிகளின், வெளிச்சமும் இருட்டுமான வாழ்க்கையும், இருக்க வேண்டிய அளவில் இருந்த சப்தங்களும் மௌனங்களும் என எடுக்கப்பட்டிருந்த சுப்பிரமணியபுரம், தமிழ் வாழ்வின் அசலான சில பக்கங்களைக் காட்டிய படம். அதன் சமகாலகால அரசியல் நடவடிக்கைகளின் மறைமுக நிகழ்வுகளை யதார்த்தமாகச் சித்திரித்த அந்தப் படத்தில் ஏற்கெனவே அறிமுகமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களோ, நடிகைகளோ நடிக்கவில்லை. அறிமுகமான நடிகர்கள் இருந்தால் தான் வியாபாரரீதியாகப் பெருவெற்றியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்கச் செய்து, தமிழ்ச் சினிமா ரசிகர்களின் தேர்ந்த ரசனைக்குச் சான்றாக நின்றது.

ஒரு இயக்குநர் படைப்பியல் சார்ந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக நம்பும் அதே நேரத்தில் பெரு வணிகத்தின் அனைத்து விதிகளும் செயல்படும் களத்தில் இருப்பதான தன்னுணர்வுடன் செயல்பட வேண்டியது திரைப்பட இயக்கம். அதனால் தங்களின் முதல் படத்தை மிகுந்த சிரத்தையோடு எடுக்கவே எல்லா அறிமுக இயக்குநர்களும் விரும்புகிறார்கள்.  முதல் படத்தை வெற்றிப் படமாகத் தர வேண்டும் என நினைப்பது விருப்பம் மட்டுமல்ல; நிர்ப்பந்தம். அப்படி அமையாமல் போனால் அவரது திரையுலக வாழ்க்கையே காணாமல் போய்விடும். இயக்குநர் சொல்லும் கதையையும், சொல்லிய முறையையும் நம்பி சில கோடி ரூபாய்களை முதலீடு செய்யும் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க முடியாமல் போகும் விபத்தின் கூறுகளும் கொண்டது திரைப்படத் தயாரிப்பு. பலர் வெற்றி அடைகிறார்கள்; அதே அளவுக்குப் பலர் தோல்வியும் அடைந்து காணாமலும் போகிறார்கள். முதல் படத்தை வெற்றிப்படமாகத் தந்த இயக்குநர் சசிகுமாரின் இரண்டாவது படம் ஈசன்.

முதல்படத்தில் உருவாக்கும் படைப்படையாளத்தைப் பல இயக்குநர்கள் அடுத்தடுத்த படங்களில் மெல்ல மெல்ல கைகழுவுவார்கள். விதிவிலக்குகளாக இருப்பவர்கள் சிலநபர்கள் தான். தமிழ்ச் சினிமாவில் இயக்குநர் பாலா அத்தகைய விதிவிலக்குகளில் ஒருவர். அவரிடம் பாடம் பயின்ற சசிகுமாரும் அதே பாதையில் பயணம் செய்துள்ளார். அவரது முதல் படத்தைப் பற்றிப் பேசும் போது உண்டான அத்தனை உணர்வுகளும் மகிழ்ச்சியும் இரண்டாவது படமான ஈசனைப் பற்றிப் பேசும்போதும் ஏற்படுகிறது. ஈசன், சுப்பிரமணியபுரத்தை விடவும் முக்கியமான படம் என நினைப்பதுதான் காரணம். எடுக்கப்பட்டுள்ள விதத்தாலும், முன் வைக்கும் விசாரணைகளாலும் இப்படம் நமது சமகாலத்தின் தேவையாக இருக்கிறது. காதல் அல்லது காமம் சார்ந்த சிக்கல்கள் மட்டுமே ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் தலையாய பிரச்சினைகள் எனத் தமிழ்ச் சினிமா உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் அவற்றிற்கான தீர்வுகளை முன்மொழிந்து விட்டு வேறு சிக்கல்களில் கவனம் செலுத்தலாம் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்களோ என்று கூடப் பல நேரங்களில் தோன்றும். இந்தப் பிடிவாதமும் அலுப்பும் சேர்ந்து, தமிழ்ச் சினிமாக்களின் மையக் கதாபாத்திரங்களின் சராசரி வயதை இருபத்தைந்துக்கு மேல் மிகாமல் பார்த்துக் கொள்கின்றன. இப்படியான மந்தைத் தனத்திலிருந்து சசிகுமாரின் முதல் படமான சுப்பிர மணியபுரமும் கூட அதிகம் விலகிச் செல்லவில்லை. அதன் மையமும் கூட விடலைத்தனமான காதல் தான். ஆனால்  அப்படம் முழுமையாகக் காதலைச் சொல்லும் நோக்கம் கொண்டதல்ல. குறிப்பிட்ட காலம் மற்றும் வெளிசார்ந்த வட்டார அரசியலையும், அதற்குள் இயங்கும் வன்முறை உருவாக்கும் அச்சத்தின் பரிமாணங்களையும் பார்வையாளர்களுக்குச் சொல்ல விரும்பிய படம் அது. இப்போது வந்துள்ள ஈசன் திரைப்படத்தில் காதலோ காமமோ கருவாக ஆகவில்லை என்பதோடு காதலன் -காதலி எனச் சுட்டிக் காட்டும்படியான பாத்திரங்களே இடம் பெறவில்லை என்பதை முக்கியமான வேறுபாடாகச் சொல்லத் தோன்றுகிறது.

படத்தின் இடைவேளைக்கு முந்திய நிகழ்வுகளையும் பிந்திய நிகழ்வுகளையும் இணைத்துப் பார்த்துச் சாராம்சமாக இதுவும் வழக்கமான பழிவாங்கும் ஒருதமிழ்ச் சினிமா என ஒற்றை வரி விமரிசனத்தால் படத்தை ஒதுக்கி விட்டுப் போகும் வாய்ப்பை அந்தப் ஈசன் கொண்டிருக்கிறது. இதை முதலில் சொல்லி விட்டுத் தான் அதன் தனித்தன்மைகளையும் பேச வேண்டியுள்ளது. முதல் சிறப்பு முன்பாதிக்கும் பின் பாதிக்கும் பெருமளவு தொடர்புகள் இல்லாதவாறு உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதை. பலி வாங்குவதற்கான நியாயங்களையும் பின்னணிகளையும் விரிப்பதை முன் பாதியாகவும், எவ்வாறு பலி வாங்குதல் நிகழ்த்தப் பட்டது;அதன் மூலம் அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலை நாட்டப்பட்டது எனக் காட்டுவது பின்பாதியாகவும் அமைவது பலி வாங்கும் தமிழ்ச் சினிமாவின் பொதுவான திரைக் கதை அமைப்பு முறை. இந்த அமைப்பு முறையையே ஈசனும் கொண்டுள்ளது; ஒரு பெரிய வேறுபாட்டுடன். 

பலி வாங்கும்  மையப்பாத்திரம் எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அமைப்பை ஈசன் திரைப்படம் முன் நிறுத்தவில்லை. படத்தின் தலைப்பாக அமையும் பாத்திரம் இடைவேளைக்குப் பிறகுதான் அறிமுகமாகின்றது. இதுவே ஒரு வேறுபாடு தான் என்றாலும், பலி வாங்கப்படும் நபரை தனிநபர் சார்ந்த எதிரி என்பதாக அடையாளப் படுத்தாமல், குறிப்பிட்ட காலகட்டத்துச் சமூகத்தின் விளைவால் உருவாகும் பாத்திரங்கள் என்பதாகக் காட்டியிருப்பதை மிக முக்கியமான
வேறுபாடு என்று சொல்வதை விட முக்கியமான படைப்புச் செயல் எனக் கூறத் தோன்றுகிறது. தான் வாழுங்காலத்தின் சமூக அசைவுகளையும், அதனைத் தீர்மானிக்கும் அரசியல், பொருளாதார அமைப்புகளுக்கிடையே இருக்கும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான உறவுகளையும் சரியாகப் புரிந்து கொள்ளக் கூடிய படைப்பாளிகளுக்கு மட்டுமே கைகூடக் கூடியது இந்தப் படைப்பு மனம். ஈசன் படத்திற்குத் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள சசிகுமாருக்கு அது கூடியிருக்கிறது. சுப்பிரமணியபுரத்தில் வெளிப்பட்ட அவரது படைப்பாளுமை இப்படத்தில் உறுதியாகி இருக்கிறது. நம்பிக்கையூட்டும் இயக்குநராக சசிகுமாரின் அடையாளம் வளர்வதைப் பாராட்ட வேண்டும்.
உலகமயப் பொருளாதாரச் சூழலின் ஓரடையாளமான இரவுக்கொண்டாட்டம் முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் யுவதி ஒருத்தியின் கொலையுடன் படம் தொடங்குகிறது. அவளது கொலைக்குக் காரணம் தாங்கள் விரும்பும் பெண்களை ருசித்துப் பார்த்து விடத் துடிக்கும் அதிகாரப் பின்னணி கொண்ட மேட்டுக்குடி யுவன்களின் சாலைத் துரத்தல். மது அருந்தியபின் களியாட்டம், சாலைப்பயணம், வாகனத் துரத்தல், கொலை, போலீஸ் வருகை, காவல் நிலையம், விசாரணை, இடையீடு செய்யும் தொலைபேசிக் குரல்கள் என அடுக்கப்படும் காட்சியின் தொடர்ச்சியாக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், அடாவடி அரசியல்வாதிக்கும்- நன்மைக்கும் தீமைக்கும்- இடையே நடக்கப்போகும் முரண் தான் படம் என மனம் முடிவு செய்யும் போது (அண்மையில் ஆகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்த  ஹரியின் சிங்கம் போல) ஒரேயொரு மாற்றத்தின் மூலம் இந்தப் படம் அவ்வகைப்படம் அல்ல எனக் காட்டியுள்ளார் இயக்குநர். காவல் துறை உதவி இயக்குநர்(சமுத்திரக்கனி) எத்தகைய அதிகாரத்துவ மிரட்டலுக்கும் வளைந்து கொடுக்காத- நேர்மையே வடிவம் கொண்டவர் அல்ல எனக் காட்டியதன் மூலம் நிகழ்கால வாழ்க்கையின் யதார்த்த நிலைக்குள் படத்தை நகர்த்தியுள்ளார்.  அதிகாரத்தின் மையப்புள்ளிகளாக இருக்கும் நிகழ்கால அரசியல்வாதிகள் வைத்துள்ள உறவுகளின் பரிமாணங்களைக் காட்டுவதில் இப்படம் ஆகக் கூடிய சாத்தியங்களை அடைந்துள்ளது. 
வன்முறை சார்ந்த மிரட்டல்களுக்காக நகரத்துச் சேரி மனிதர்களோடும், சொகுசான வாழ்க்கைக்காகவும், எதிர்கால அரசியல் வெற்றிகளுக்காகத் அதிகாரத் தரகர்களோடும், தரகு முதலாளிகளோடும் அரசியல்வாதிகள் கொள்ளும் உறவுகளின் நோக்கங்கள் வசனங்களாகவும் காட்சிகளாகவும் விரிந்துள்ளன. அரசியல்வாதிகளின்  மொழியைப் புரிந்து கொண்டவர்களாகவும், மொழிபெயர்ப்பவர் களாகவும் இருக்கும் அதிகாரிகளின் இருப்பும் உறவுநிலையின் நோக்கங்களும் எப்படியெல்லாம் நேரத்திற்குத் தக்கனவாகவும் தன்னல நோக்கங்களோடும் இருக்கின்றன என்பதையும் படத்தின் காட்சிகள் பார்வையாளர்களிடம் முன் வைக்கின்றது.  ஒவ்வொருவருக்கும் பின்னாலும் இயங்கும் சுயநல முயற்சிகளை அம்பலப்படுத்துவதோடு, நிகழ்கால நகர வாழ்வின் மொழி தரகர்களின் மொழியாக மாறிக் கொண்டிருக்கும் சூழலின் பயங்கரத்தைச் சரியாகக் காட்டியுள்ளது. பெருநகரங்களின் மொழியைத் தரகர்களின் மொழியாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சொல் திட்டங்கள் (ப்ராஜெக்ட்) என்பதாகும். சென்னையின் புதுவகை மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எவ்வகையான துறைகளில் பணியாற்றும் நபர்களாக இருந்தாலும் சிறியதும்,பெரியதுமாக எதாவது ஒருதிட்டத்தோடு தங்களைப் பொருத்திக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். அந்த நிர்ப்பந்தம், தனிமனிதர்களாக அவர்களிடம் இருந்து வந்த மதிப்பீடுகள் அனைத்தையும் கேள்விக் குள்ளாக்கிப் புதுவகை மதிப்பீடுகளுக்குள் வேகமாக நகர்த்தி விட்டுள்ளன. இவற்றின் பருண்மையான வெளிப்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவனவாக இருப்பன ஆண்-பெண் பழக்கமும், உறவுகளும் என்பதை ஊடகங்கள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் வெளிப்படுத்தி வருகின்றன. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் விவாதிக்கப்படும் முறைகளைக் கவனிப்பவர்கள் இதனை உணர்ந்திருக்கக் கூடும்.

பழைய சமூகத்தின் கட்டுப் பெட்டித்தனத்திலிருந்து விடுபடுவதாக நினைத்துக் கொண்டு புதுவகை மோஸ்தருக்குள் நுழையும் கொண்டாட்ட மனோபாவம் உருவாக்கி வைத்துள்ள நிகழ்ச்சிகளையும், பணம் சம்பாதிப்பதிலும், அதிகாரத்தைச் செயல்படுத்துவதிலும் மட்டுமே தனது அடையாளம் தங்கி இருப்பதாக நினைக்கும் அரசியல்வாதிகளின் திட்டமிடல்களையும் இணைநிலைக் காட்சிகளாக அமைத்து முன்பாதிப் படம் நகர்த்தப்பட்டுள்ளது. பணத்திற்காகவும்,அதிகாரத்திற்காகவும் எவ்வெவ்வற்றை இழக்கவும், ஏற்கவும் தயாராக இருக்கிறது புதுவகை வாழ்க்கை முறையும் அதிகாரத்தின் கண்ணிகளும் என்பதைச் சொல்லும் ஈசன் படத்தின் முன்பாதி தீவிரமான சமகால அரசியல் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வை உண்டாக்குகிறது. அதனாலேயே அதிகமான நேரம் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

உலகமயமாதலுக்குப் பின் உருவாகி நிற்கும் சென்னை போன்ற மாநகரத்தின் புதுவகை வளர்ச்சிகளையும், அதனால் உண்டாகும் அதிர்ச்சிகளையும் காட்சிகளாக விரிப்பதோடு. சில ஆயிரங்கோடிகளில் விரியும் வியாபார கேந்திரங்களும்,அவைகளில் பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட புதுவகை நடுத்தர வர்க்கமும் பெருநகரங்களில் எத்தகைய வாழ்க்கை முறைக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன என்பதை விரிக்கும் காட்சிகளில், நிகழ்கால ஜனநாயக அரசின் அமைப்புகளின் திசை தெரியாக் குழப்பமும் பார்வையாளர்களை முகத்தில் அறையும்படிசொல்லப்படுகின்றன. திசைக்குழப்பத்தில் இருப்பதாகக் காட்டப்படும் முக்கியமான அமைப்புகள் காவல்துறையும், அதிகார வர்க்கமும் என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குநர்.

ஈசன் திரைப்படத்தில் ஒற்றைக் கதாபாத்திரங்கள் சார்ந்த கதையோ,தொடர்ச்சியான நிகழ்வுகளோ இல்லை என்பதுதான் தனித்துவம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் வழியாகப் புதுவகை சினிமாவைப் பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இங்கே தான் ஊடகங்களில் செயல்படும் விமர்சகர்களின் பொறுப்புணர்வு இருக்கிறது. கதை இருக்கிறதா? என்ன கதை? என்று கேட்டுச் சுருக்கம் சொல்லிப் படம் பார்க்கப் பழக்கியிருக்கும் வெகுமக்கள் ஊடகங்கள் எதிர்பார்க்கும் நேர்கோட்டுக் கதை இப்படத்தில் இல்லை. ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் பெருந்துயரத்தை எதிர்கொள்ளும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை இப்படத்தில் உள்ளது.

படத்தின் பிற்பாதியில் ஈசன் என்ற அந்தச் சிறுவனின் வருகையோடு விரியும் சிவகங்கை மாவட்டத்து மனிதனின் கதை அப்பாவித்தனமான வாழ்க்கைக் கதை மட்டுமல்ல. நவீனக் கல்வியும், அதன் அறிவும் எதிர்கால வாழ்வை ஒளிமயமானதாக ஆக்கும் என நம்பி அதன் பின்னால் அலையும் தமிழ்ச் சமூகத்தின் மந்தைப் போக்கைத் தடுத்து நிறுத்தி மறுவிசாரணை செய்யக் கோரும்  விமரிசனமும்கூட. தனது குடும்பம், அதனைக் காப்பாற்றுவதற்கான உழைப்பு, நம்புவதற்கும் கொண்டாடுவதற்கும் தேவையான கடவுள்கள் என வாழும் ஒருவன், நிம்மதியான தனது வாழ்க்கைக்குத் தேவையான வேலையைக் கொடுத்த கல்வியைப் போலவே, தனது சந்ததியினரின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான புதுவகைக் கல்வியைப் பெறும் பொருட்டுத் தனது தொப்புள் கொடி உறவுகளையும் கிராமத்தையும் விட்டுப் பிரிந்து சென்னை நகரத்தில் குடியேறுகிறான். குடியேறிய அவனின் நம்பிக்கைகள் பொய்த்துப் போனால் கூடப் பரவாயில்லைத் தட்டுத்தடுமாறி வேறு திசையில் பயணம் செய்திருப்பான். அல்லது திரும்பவும் கிராமத்திற்குத் திரும்பிப் போயிருப்பான். தானுண்டு, தன் வேலையுண்டு, தன் இரண்டு பிள்ளைகளுண்டு என இயங்கியவனுக்கு நகரம் தந்த பரிசு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்என்பதுதான். குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும்படியான நெருக்கடிக்கு எந்தவிதத்திலும் அவனோ, அவனது பிள்ளைகளோ காரணம் அல்ல. இந்த நகரத்தின் நாகரிகப் போக்குகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவலோ, ஆசையோ இல்லாத அவனின் மகள் (பிறவி ஊமை -அபிநயா) கல்லூரியில் இருக்கும் நடைமுறையால் அதற்குள் இழுக்கப் படுகிறாள். அதன் தொடர்ச்சியாகவே அந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குச் செல்கிறாள். குடியும் போதையும் தலைக்கேறிய ஆண்களின் கும்பலால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி உருக்குலைந்து வீடு திரும்புகிறாள். தனது மனைவி இல்லாத குறையைத் தனது பாசத்தால் நிறைவு செய்து வளர்த்த அந்தத் தந்தைக்கு, மகளுக்கு நேர்ந்த அந்தத் துயரத்தை மாற்றி வேறு பாதையைக் காட்டத் தெரியாத நிலையில் மூன்று பேரும் சேர்ந்து கூட்டாகத் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்து நிறைவேற்றுகிறார். ஆனால் அசம்பாவிதமாகத் தப்பிய அவரது மகன்-பள்ளிப்பருவத்தில் இருக்கும் ஈசன்- தனது தமக்கைக்கு நேர்ந்த துயரத்திற்கும், தன் குடும்பத்திற்கு நேர்ந்த நிர்க்கதிக்கும் காரணமானவர்களைப் பலி வாங்குவதுதான் படம். துயர முடிவைச் சந்திக்கும் அக்குடும்பத்தின் கிராம வாழ்க்கை மிகவும் சந்தோசமாகவும், சிக்கல் இல்லாததாகவும் இருந்தது எனக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டதால், அந்தப் பின்நோக்கிய கதையும் நீளமாக அமைந்து படத்தை  மிக நீளமான படமாக ஆக்கி விட்டன. இன்னும் சரியாகத் திட்டமிட்டிருந்தால் இந்த நீளத்தைக் குறைத்திருக்க முடியும்.

உலகமயமாகும் பொருளாதார நடைமுறையில் வீங்கிப் பெருக்கும் நகரங்களைப் பொருளாதார நிபுணர்களும், தனியார் மயத்தையும், வேறுபாடுகளின் வித்தியாசத்தையும் வளர்ச்சியின் அடையாளமாகவும் காட்டிக் கொண்டிருக்கும் போக்கிற்கெதிராக சசிகுமாரின் ஈசன் தீவிரமான விமரிசனத்தை முன்மொழியும் அரசியல் படமாக இருக்கிறது. உழைக்கவும், தங்களின் சூதுவாதற்ற இயல்புகளை மாற்றிக்கொள்ளாமல் வாழவும் விரும்பும் பெரும்பான்மை மக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இந்தப் புதிய சூழல்- புதிய சமூக அமைப்பு- அச்சமூட்டும் அமைப்பாகவும், தற்கொலைக்குத் தூண்டும் நெருக்கடியை முன் மொழியும் அமைப்பாகவும் இருக்கிறது என்ற விமரிசனத்தை எந்தவிதத் தடுமாற்றமும் இல்லாமல் வைத்துள்ளார் இயக்குநர் சசிகுமார்.

நட்சத்திர நடிகர்கள் மட்டுமே வியாபார வெற்றிக்கு உத்தரவாதமானவர்கள் எனத் தமிழ்ச் சினிமா உலகம் வைத்திருக்கும்  மூட நம்பிக்கை மீது தனது முதல் படத்தின் வெற்றி மூலம் முதல் அடியைத் தந்த  சசிகுமார், இந்தப் படத்தின் மூலம் அக்கருத்தை மேலும் வலுவிழக்கச் செய்துள்ளார். ஒரு திரைப்படத்திற்குத் தேவை இயக்குநர் சொல்ல விரும்பும் கருத்தை மையப்படுத்தும் கதையும், அதனைக் காட்சிகளாக உருவாக்க வாய்ப்பளிக்கும் திரைக்கதையும் மட்டுமே என்பதைச் சரியாகவே புரிந்து கொண்டுள்ள அவர், இதற்குத் தேவையான முகங்கள் கொண்ட நடிகர்களையே தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார். சமுத்திரக்கனி, அபிநயா போல ஒருசிலர் மட்டுமே இதற்கு முன்பு திரைப்படத்தில் நடிகர்களாக அறிமுகமானவர்கள். மற்ற பாத்திரங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்கள். புதுமுகங்களைத் தேர்வு செய்வது சுலபம்; ஆனால் அவர்களை கதாபாத்திரங்களாக ஆக்கிப் பார்வையாளர்களை நம்பச் செய்வது அவ்வளவு சுலபமல்ல. பல அறிமுக இயக்குநர்கள் தோல்வியைச் சந்திக்கக்  காரணமாக இருப்பது புதுமுகத்தேர்வும், அவர்களைப் பாத்திரங்களாக ஆக்குவதில் ஏற்படும் தோல்வியும் தான் என்பதைப் பல உதாரணங்கள் வழியாகப் பேசலாம். அது இங்கே நோக்கமல்ல. சசிகுமார் தேர்வு செய்த நடிகர்களைப் பாத்திரங்களாக மாற்றியிருக்கிறார். அவர்கள் இருக்கும் இடப் பின்னணிகளைச் சரியாக உருவாக்கித் தரக்கூடிய கலை இயக்குநர்களைத் தெரிவு செய்திருக்கிறார். அவ்விடங்களில் எழக்கூடிய சத்தங்களையும், மௌனத்தையும் உருவாக்கும் இசையமைப்பாளரையும் அடையாளம் கண்டு பயன்படுத்தியுள்ளார்.

படத்தில் இடம் பெற்றுள்ள சில பாடல்கள் கேட்பதற்காக அல்லாமல், கதாபாத்திரங்களின் பின்னணிகளை விளக்குவதற்காக இடம் பெற்றுள்ளன. நட்சத்திர விடுதிகளில் நடக்கும் கொண்டாட்டங்களின் போது இடம் பெறும் பாடல்களோடு, கடற்கரையில் சாராயம் விற்கும் பெண் பாடுவதாக அமையும் கானாப் பாடலும் அத்தகையனவே. ஒரு பாத்திரத்தின் வாழ்க்கையின் சுகதுக்கங்களைச் சுருக்கிச் சொல்லிவிடும் இயல்பு கொண்ட ஒற்றைப் பாடல்கள் பல படங்களில்  இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல் அர்த்தம் பொருந்தியது மட்டுமல்ல; குரலிசையின் உச்சத்தைத் தொட்டுள்ள பாடலும் கூட. 

தனித்துவம் கொண்டதும், வியாபார வெற்றிகளை அடைவதுமான படங்களாகச் சசிகுமாரின் இரண்டு படங்களும் அமைந்ததின் பின்னணியில் அவரே இவ்விரு படங்களின் தயாரிப்பாளரும் என்ற காரணமும் இருக்கிறது. அதனால்,படைப்பாளிக்கான எல்லாச் சுதந்திரத்தையும் தனதாக்கிக்க் கொள்வதில் அவருக்குச் சிக்கல்கள் எதுவும் நேர்வதில்லை. நல்ல சினிமா எனத் தான் நினைத்த ஒன்றை எடுத்து முடிக்கவும், பார்வையாளர்களுக்குத் தரவும் இங்கே தடையாக இருப்பவர்கள் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் என்பது கண்கூடான உண்மை. நியாயமான லாபம் என்ற பொதுவான வணிக நோக்கத்தைத் தாண்டிக் கொள்ளை லாபம் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் திரைப்பட வணிகத்தின் இயக்குசக்திகளாக இருக்கும் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் அவரைநெருங்க விடாமலும், நெருக்கடிக் குள்ளாக்காமலும் இருப்பது இந்த தயாரிப்புப் பணி என்றால் மிகையாகாது.


No comments :