எனது இந்தியா.. எந்த இந்தியா?

இரண்டும் நடந்தது ஒரே ஊரில் அல்ல; ஒரே நாளிலும் அல்ல; ஆனால் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்.
முந்திய நிகழ்வு சிங்காரச் சென்னையில்; சென்ற வருடம் 2009 கிறிஸ்துமஸ் விடுமுறையில். இரண்டாவது நிகழ்வு மாநகர் மதுரையில் போனவாரம் ; 2010டிசம்பர்1.
இடைவெளி ஏறத்தாழ ஓராண்டு. இரண்டும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி என்று சொல்வதை விட, ஒரு நேரச் சாப்பாடு பற்றியது என்று சொல்லலாம். ஆனாலும் ஒரே நேரச் சாப்பாடும் அல்ல.
மதுரையில் காலைச் சிற்றுண்டி; சென்னையில் மதியச் சாப்பாடு.
அந்தச் சந்து எனக்கு நன்கு அறிமுகமான சின்னச் சந்து. மதுரை ரயில் சந்திப்புச் சாலைக்கு இணையாகச் செல்லும் இரண்டாவது தெரு. முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள், மாணவனாக இருந்த போது அதிகமான படங்களைப் பார்த்த தங்கம் திரை அரங்கம் இருந்த பெரிய தெருவிலிருந்து பிரிந்து செல்லும் சந்து. பெரிய தெருவின் பெயர் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி.
மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியிலிருந்து பிரிந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சந்தில் இருக்கும் கடைகளில் இட்லியும் தோசையும் சாப்பிட்ட நினைவுகள் இன்னும் இருக்கின்றன. தங்கம் தியேட்டரில் பார்த்த சினிமாக்களின் நினைவுகள் வந்து போவது போல இட்லிக் கடைகளும் வந்து போவதுண்டு. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தங்கம் தியேட்டருக்கு எதிரே மதுரையின் பிரபலமான வழக்குரைஞர்களின் வீடுகள் இருந்தன.  பிச்சிப் பூச்செடிகளும் வேப்ப மரங்களும் மறைத்து நிற்கும் அவர்களின் பங்களாக்களை இப்போது காணோம்.  எம்ஜிஆரின் சாகசப் படங்கள் பலவற்றைத் தனது திரையில் காட்டிய தங்கம் தியேட்டரும் இப்போது அங்கே இல்லை மதுரையில் படித்த காலத்தில் எல்லாத் திரை அரங்கிலும் சினிமா பார்த்திருக்கிறேன். என்றாலும் தங்கம் தியேட்டரில் திரைப்படம் பார்த்த அனுபவங்கள் மறக்காதவை. இப்போது அந்தத் தெருவில் இருப்பனவெல்லாம் உயர்தரமான உணவு மற்றும் தங்கும் விடுதிகள் தான்.  கல்லூரி ஒன்றில் பேசுவதற்காக அழைக்கப்பட்ட எனக்கு அந்தத் தெருவில் இருக்கும் விடுதி ஒன்றில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். 
தங்கம் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போய்விட்டு இடம் கிடைக்காமல் திரும்பி வந்ததாக நினைவில் இல்லை. அது, மதுரையிலேயே பெரிய திரை அரங்கம் மட்டுமல்ல; ஆசியாவிலேயே பெரிய அரங்கம் என அப்போது சொல்வார்கள். மூவாயிரம் பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம். தரைத்தளம் அரை வட்ட வடிவமாக விரிந்து கிடக்கும். மாடியிலும் அரை வட்ட வரிசைகளோடு, மதில் ஓரங்களில் முன்னோக்கி நீளும் இருக்கை வரிசைகளும் உண்டு. அவற்றில் உட்கார்ந்து படம் பார்க்க விருப்பம் உண்டு என்றாலும், பிம்பங்கள் நேர்க்காட்சியாக தெரியாது என்பதால், உடனடியாக அந்தப் பகுதிக்குச் செல்வதில்லை. நடுப்பகுதியில் இடம் கிடைக்கவில்லை என்றால் ஓர வரிசையில் உட்கார்வதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வளவு பெரிய திரை அரங்கத்தில் படம் பார்க்க நீண்ட வரிசை காத்திருக்கும்.
தங்கம் தியேட்டரில் பார்த்த சினிமாக்களையும் சின்னச் சந்தில் இருந்த இட்டிலிக் கடைகளில்  சாப்பிட்ட நினைவுகளையும் ஒருசேர உருவாக்கிக் கொண்டு அந்தச் சந்திற்குள் இப்போதும் நுழைந்தேன் அந்தச் சந்து பெரிய மாறுதலை அடைந்திருக்கவில்லை. மாடுகளின் சாணம் குவியல் குவியல்களாகக் கிடந்தன.தெருவில் நிறுத்திப் பசு மாட்டில் பால் கறக்கும் மனிதர் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். மூங்கில் தட்டி வைத்து மறைக்கப்பட்ட கொட்டகையில் பெஞ்சுகளில் உட்கார்ந்து இட்லிக்காக நான்கு பேர் காத்திருந்தார்கள். அடுப்பின் மேல் இட்டிலிச் சட்டி நீராவியை வெளியே தள்ளிக் கொண்டிருக்க, அந்த முதிர்வயதுப் பெண் விறகைக் கொஞ்சம் வெளியே இழுத்தாள். அவள் எடுத்து வைக்கும் இட்டிலிகளைச் சூடாக வாங்கிக் கொண்டு போய்க் காத்திருப்பவர்களுக்குப் பரிமாறத் தயாராக இருந்தான் அந்த இளைஞன்.
சிற்றுண்டிச் சாலையின் மூங்கில் கதவில் ஒரு சிலேட்டு தொங்கியது. அதில் இட்டிலி இரண்டு ரூபாய்; தோசை மூன்று ரூபாய்; பொங்கல் எட்டு ரூபாய்; வடை இரண்டு ரூபாய் என்று எழுதப்பட்டிருந்தது. காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நான் தர வேண்டிய பணம் எவ்வளவு என மனதிற்குள் கணக்குப் போட்டேன். அதிக பட்சம் 15 அல்லது 20 ரூபாயைத் தாண்டாது என மனக்கணக்கு சொன்னது. அதே மனம் என்னிடம் பத்து, இருபது ரூபாய்த்தாள்கள் இல்லை என்பதையும்  நினைவு படுத்தியது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மட்டுமே என்னிடம் இருந்தன. சாப்பிட்டு முடிந்த பின் அந்தப் பெண்ணிடம் அதில் ஒன்றை நீட்டினால் என்ன நடக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தேன். நிச்சயம் மனதிற்குள் திட்டுவாள். அல்லது எங்காவது போய் சில்லரை மாற்றி வரும்படி சொல்வாள்.   முதலிலேயே கேட்டு விட்டுச் சாப்பிடுவோம் என்று முடிவு செய்து, தயக்கத்தோடு கேட்டேன். வார்த்தையாகப் பதில் சொல்லவில்லை; உதட்டைப் பிதுக்கினாள்.
சில்லரையாக மாற்றிக் கொண்டு திரும்பலாம் என மனதின் ஒருபக்கம் சொன்னாலும், இன்னொரு பக்க மனசு வேறுவித நெருக்கடியைத் தந்தது.  அருகில் இருக்கும் நட்சத்திர விடுதியின் குளிரூட்டப்பட்ட சாப்பாட்டு அறையில் ஓரத்தில் இருக்கும் ஒற்றை நாற்காலியில் தனியாக அமர்ந்து சிற்றுண்டி சாப்பிடும்படி தூண்டியது. அதை என்னால் மீற முடியவில்லை. உள்ளே நுழைந்து உட்கார்ந்து விட்டேன். வெளியில் மழை பெய்து மதுரையே குளிரூட்டப் பட்ட நகரமாக இருந்தாலும், அந்த உணவு விடுதியின் குளிர் வேறுவிதமான குளிர். உணரும் குளிர்.
காலைச் சிற்றுண்டி முடிய நாற்பது நிமிடம் ஆனது. அதற்கான தொகை எவ்வளவு என்பதை மூடிய புத்தகம் போன்ற ஒன்றில் வைத்து அந்தப் பணியாளர் கொண்டு வந்து வைத்தார். எடுத்துப் பார்த்தேன். வாட் வரியுடன் சேர்த்து 138 ரூபாய் என்றிருந்தது. 1000 ரூபாய் தாளொன்றை எடுத்து வைத்து விட்டுக் காத்திருந்தேன். பணியாளர் திரும்ப வந்து அந்தப் புத்தக வடிவ அட்டையை வைத்து விட்டு ஒதுங்கி நின்றார். திறந்த போது மேலே 2 ரூ.,10 ரூ.,50 ரூ. ஆகியவற்றில் ஒவ்வொன்றும் 100 ரூபாயில் எட்டுத் தாள்களும் எனச் சரியாகவே இருந்தன. நூறு ரூபாய்த் தாள்களையும் ஐம்பது ரூபாய்த் தாளையும் எடுத்துக் கொண்டு மீதியை அவருக்கான டிப்ஸாக வைத்து விட்டு எழுந்து வந்து விட்டேன்.
வெளியில் வந்தவுடன் மனம் ரொம்பவும் பாரமாக இருந்தது. 12 ரூபாய் இனாமாகப் போய்விட்டதே என்பதால் ஏற்பட்ட பாரமல்ல. அந்தப் பன்னிரண்டு ரூபாயில் காலைச் சிற்றுண்டியை முடிக்கும் வாய்ப்பு ஒரு நூறு அடிக்குள் இருக்கும் போது அதைத் தள்ளி வைத்து விட்டு அதே காலைச் சிற்றுண்டிக்கு 150 ரூபாய் செலவு செய்யும் மனிதனாக மாறிப் போய்விட்டோமே என்ற பாரம் தான்.
இதே பாரமான மனநிலை தான் போன வருடம் சென்னையிலும். உடனே அந்த நாள் நிகழ்வுகள் மனதிற்குள் ஓடின.
பல்கலைக்கழக வேலையாகச் சென்னை சென்று இருந்தேன். சென்னையில் ஒரு வேலை மட்டுமே இருக்கிறதென்றால் நகரப் பேருந்தில் செல்வது என முடிவு செய்யலாம். அப்போதும் அந்த இடத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாகப் போவது எனத் திட்டமிட்டுக் கொண்டு புறப்பட வேண்டும். இல்லையென்றால் ஆட்டோ அல்லது கார் என வேறொன்றைத் தான் நாட வேண்டும். இப்போதெல்லாம் சென்னையில் ஆட்டோவை விட கார்கள் வசதியான வாகனங்களாகக் கருதப் படுகின்றன.
தொலைபேசி அழைப்பின் பேரில் கார்களை அனுப்பும் (கால் டாக்சி) நடைமுறை சென்னை போன்ற பெருநகரங்களின் புதிய அடையாளம். ஆட்டோ ஓட்டும் தொழிலில் உலகமய அடையாளம் அது. தொலைபேசியிலேயே புறப்படும் இடம், போக வேண்டிய இடம், புறப்படும் நேரம் சொல்லி விட்டால் சரியாக வந்து நிற்கிறார்கள். நாள் முழுவதும் அல்லது மணிக்கணக்கு எனப் பேசிக் கொண்டும் கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அப்படியொரு காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு எனக்கிருந்த வேலைகளை முடித்துக் கொள்வது எனத் திட்டமிட்டேன் .ரயில் பயணம், வாடகைக்கார், மதிய உணவு, தேநீர் என அனுமதிக்கப்பட்ட செலவுகளுக்கான ரசீதுகளைக் கொடுத்து விட்டால் அலுவலகத்தில் அதற்கான பணத்தைத் திருப்பிக் கொடுப்பார்கள் என்பதால் உயர் வகுப்பு ரயிலில் பயணம், உயர் வகுப்பார் உண்ணும் உணவு விடுதியில் மதிய உணவு, கணிணியில் ரசீது கபேயில் தேநீர் எனச் செலவு செய்ய மனம் தயங்கவில்லை. அசைவ உணவு வகைகளைச் சாப்பிட்ட அந்த மதிய உணவுக்கான பில் தொகை 850 ரூபாய்.
நான் சாப்பிடுவதற்காக இறங்கும் போது காரின் ஓட்டுநரிடம் 100 ரூபாய் கொடுத்து சாப்பிட்டு விட்டு ரசீது வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன். சரியென்று சொல்லி விட்டுச் சென்ற அவர் நான் திரும்ப வந்தபோது காத்திருந்தார். காரில் ஏறியபின் ரசீதையும் மீதிப் பணத்தையும் தந்தார். மீதிப் பணம் 65 ரூபாய் இருந்தது. நல்ல சாப்பாடு சாப்பிட்டதாகத் திருப்தியுடன் சொன்னார் அந்த ஓட்டுநர். வாடகைக்கு வண்டி எடுப்பவர்கள் ஓட்டுநருக்கு சாப்பிடத் தனியாகப் பணம் தர மாட்டார்களாம். நான் பெரிய மனதுடன் தந்ததற்கு நன்றி சொன்னார். நானும் அரசாங்கப் பணத்தைத் தான் தந்தேன் என்று அவரிடம் சொல்லவில்லை.
ஒரே காரில் செல்லும் இரண்டு பேரில் ஒருவர் 35 ரூபாய்க்கு நல்ல சாப்பாடு சாப்பிட முடிகிறது சென்னையில். இன்னொருவர் 850 ரூபாய்க்கு நல்ல சாப்பாடு சாப்பிடுகிறார். இது ஓர் உதாரணம் தான்.  நாம் விரும்பினால் மதிய உணவை 15 ரூபாயில் முடிக்க முடியும்; 1500 ரூபாயிலும் சாப்பிடலாம். ஆம் இந்தியா இப்படித்தான் பாரதூரமான வேறுபாட்டுடன் பிரிந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒளிரும் இந்தியாவில் இருக்கும் வேறுபாடுகள் கண்ணுக்குப் புலனாகாத அரூபமான வேறுபாடுகள் அல்ல.
இந்தியா பீடு நடை போடுகிறது என்றொரு வாக்கியத்தை 1975 இல் பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி ஆப்த வாக்கியமாகச் சொன்னார். நான் முன் வைக்கும் இருபது அம்சத் திட்டத்தை நிறைவேற்ற என்னை அனுமதியுங்கள்; அதற்கு எதிராக இருப்பவர்கள் என்னுடைய எதிரிகள் அல்ல; இந்தியாவின் எதிரிகள் என்றும் சொன்னார்.
கட்டுக் கடங்காத எதிர்ப்புக் கிளம்பியது என்பதுதான் வரலாறு. எதிர்த்துப் பேசுகிறவர்களை அடக்கும் அவசரநிலைச் சட்டத்தைப் பிரகடனம் செய்து விட்டு, எனது அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள், இந்தியாவின் வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் என்று குற்றம் சாட்டும் தொனியில் எதிரிகளை அடக்கினார். நடக்க வேண்டிய தேர்தலைத் தள்ளிப் போட்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் அவரது சொந்தத் தொகுதியான ரேபரேலி தொகுதியில் தோற்றார். அவரது தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சி எதிர்க் கட்சி வரிசையில் அமர நேர்ந்தது. இதுவும் வரலாறு தான். 
அதே காங்கிரஸ் இன்று வேறுவிதமான மொழியில் பேசுகிறது. இந்த மொழி இன்று முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சிக்கும் உவப்பான மொழி என்பதுதான் நிகழ்காலத்தின் அபத்தம்.  இந்தியா ஒளிர்கிறது எனவும்,’மாறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் முகம் எனவும் நாகரிகமான மொழியில் பேசிக்கொண்டிருப்பவர்கள், பன்னாட்டு மூலதனத்தின் உதவியோடு, உயர்வகுப்பாரின் சொகுசு வாழ்க்கைக்கான ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தொடங்கி நகர இந்தியாவின் முகத்தையும் அடையாளத்தையும் மாற்றிக் காட்டி விடத் துடிக்கின்றனர். அதை மறுப்பவர்களையும், விமரிசிப்பவர்களையும் வளர்ச்சியின் விரோதிகள் எனவும், தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் எனவும் பழி போடவும் தயங்குவதில்லை அவர்களின் மொழி.
பீகாரிலும் வங்காளத்திலும் கிராம மக்களோடு இணைந்து போராடும் மாவோயிஸ்டுகளைச் சந்தித்து விட்டு வந்த அருந்ததிராய் அவர்களின் கோரிக்கை நியாயமானது எனச் சொல்வதைக் குற்றவாளியின் குரலாகக் கருதுவதை எப்படிப் புரிந்து கொள்வது?
காஷ்மீரில் தனது பலத்தை அதிகப் படுத்துவதற்காக ஒட்டு மொத்த இந்தியர்களின் வரிப்பணத்தை ஏன் இப்படிச் செலவு செய்ய வேண்டும் எனக் கேட்கும் அவரது குரலைத் தீவிரவாதிகளின் ஆதரவுக் குரல் எனக் கூறுவதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கோஷம் எழுப்புபவர்களை எப்படி விளங்கிக் கொள்ள முடியும்?
சென்னை, பெங்களூரு, ஹைடிராபாத் போன்ற பெருநகரங்களில் சில நூறு ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாசா, மாயாஜால் போன்ற மால் களும், சில பத்து மாடிகளில் உயர்ந்து நிற்கும் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்களின் உள் அறைகளும் 24 மணிநேரமும் குளிரூட்டப் பட்ட கட்டிடங்களாக நிற்கின்றன. மின் வெட்டு அல்லது தட்டுப்பாடு என்பதை அதன் உள்ளே உள்ளவர்கள் உணராதபடி தடங்கலின்றி மின்சாரம் தரப்படுகிறது. ஆனால் சிறுநகரங்களின் தொழிற்கூடங்களுக்கோ இரண்டிலிருந்து நான்கு மணிநேரம் மின்வெட்டு அமுலாகிறது.
கிராமத்து விவசாயத்திற்கோ அதைவிடவும் குறைவாகவே மின்சார விநியோகம் நடக்கிறது. பம்புசெட்டுகள் இயங்கும் மும்முனை விநியோகம் ஒரு நாளின் பாதி நேரம் கூடக் கிடையாது.
இந்த வேறுபாடுகளோடு கூடிய இருப்பை வளர்ச்சி எனப் பாராட்டினால் காலத்தோடு ஒட்ட ஒழுகிய புத்திசாலி என நாம் நம்மையே பாராட்டிக் கொள்ளலாம். இல்லையென்றால் எதிர்மறையான மனம் கொண்ட மனிதன் என விமரிசிக்கப் படலாம்.
இன்றைய இருப்பில் சிந்திக்கும் ஒருவன், ’டிப்ஸாகத் தரும் பணத்திலேயே காலைச் சிற்றுண்டியை முடிக்கும் கண்ணியமானவனாக இருப்பதா? அதைப் போல் பத்து மடங்குப் பணத்தில் சிற்றுண்டி சாப்பிடும் கனவானாக இருப்பதா? என்பது தான் சிக்கல். ஆனால் இரண்டு பேருமே இந்தியாவின் மக்கள் தான். நாம் எந்த இந்தியாவில் இருக்க விரும்புகிறோம் என்பது தான் இப்போதைய கேள்வி

கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
INTHIYAA ENUM SANTHAIKU IPADI ORU MUKAWARI IRUPATHAI IPOTHU ARIKIREN
hariharan இவ்வாறு கூறியுள்ளார்…
சுயவிமர்சனத்தொடு எழுதிய கட்டுரை மிக அருமை..

ஒரு பேராசிரியராக இருந்து கொண்டு அரசின் ஊதியத்திற்காக மட்டும் வேலை பார்க்காமல் இந்த ச்முதாயத்திற்காக சிறந்த கருத்துக்களை நீங்கள் அளிப்பதும் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மனிதர்கள் மீது கொண்டுள்ள அக்கறை போன்றவை உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

உங்களுக்கு எனது பாராட்டு கலந்த வணக்கம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்