November 15, 2010

மணற்கேணி - அறிமுகம்

1989 இல் புதுவைப் பல்கலைக் கழகத்தின் நாடகப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றச் சென்ற சில மாதங்களுக்குள் அவருடன் ஏற்பட்ட நட்பு இன்றளவும் தொடரும் ஒன்று. தொண்ணூறுகளில் தமிழ் அறிவுச் சூழலில் ஏற்பட்ட கருத்தியல் முன் வைப்புக்களுக்கும், செயல்தள மாற்றங்களுக்கும், விமரிசனத் திசை அறிதலுக்கும் மையமாக இருந்தவர் ரவிக்குமார் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை.
சமூக விமரிசனத்தை முன் மொழியும் தெரு நாடகங்கள், சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வை மையமிட்ட கூட்டு நாடகங்கள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லும் பொருட்டுத் தொடங்கப்பட்ட புதுவைக் கூட்டுக்குரல், பின்னர் பல்லக்குத்தூக்கிகள், அகல்யா, சிற்பியின் நரகம், யாசகன் அல்லது செத்த நாய். திருப்பிக் கொடு போன்ற மேடை நாடகங்களை மேடை ஏற்றிய குழுவாக மாறியது. அதுவரை எனது வழிகாட்டுதலில் மட்டுமே செயல்பட்ட அக்குழு தண்ணீர், வார்த்தை மிருகம் போன்ற தலித் நாடகங்களை அரங்கேற்றும் குழுவாகத் திசை மாறியதன் பின்னணியில் ரவிக்குமாரின் ஆலோசனைகளும் ஊக்கமூட்டலும் இருந்தன என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இடதுசாரி அரசியல் வழியாக இடதுசாரி இலக்கியப் பார்வையைப் பெற்றிருந்த ரவிக்குமாரும், இடதுசாரி இலக்கியத்தின் வழியாக இடதுசாரிக் கருத்தியலுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டிருந்த நானும் தலித்தியச் சொல்லாடல்களுக்குள் இணைந்தே தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நுழைந்தோம் என்று நினைத்துக் கொள்கிறேன்.
வெகுமக்கள் அரசியலில் தயக்கத்தோடு இறங்கினானலும் தான் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுப் பல வழிகளில் முன் மாதிரிச் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நண்பர் ரவிக்குமார். அரசியல் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற அளவிலும், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவ என்ற நிலையிலும் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு அவரும் அவரது அரசியல் இயக்கமும் மட்டுமே பொறுப்பு. அதன் மீது பல நேரங்களில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை என்ற போதிலும் அது குறித்து அவரோடு விவாதத்தில் இறங்கியதில்லை. ஏனென்றால் அதற்கான காரணங்களும் நியாயங்களும் அவருக்கு இருக்கவே செய்கின்றன. அவை மற்றவர்களுக்கு உவப்பானதாகவும், ஏற்கத்தக்கனவாகவும் இல்லாமல் இருக்கலாம். இங்கே ஒவ்வொரு தனிமனிதனும் படைப்பாளியும் பிற மனிதர்களுக்கு உவப்பானதையும், ஏற்புடையதையும் மட்டுமேவா செய்கிறார்கள்? இயங்குகிறார்கள். அவரவர் நியாயம்! அவரவர் இயக்கம்!! அவரவர் எழுத்து.
நிறப்பிரிகையின் மையமாக இருந்து செயல்பட்ட ரவிக்குமாரின் தூண்டுதலின் பேரிலேயே ஊடகம் என்ற பத்திரிகையை நாங்கள் தொடங்கினோம். பொதுப்புத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், மேடைக்காட்சிகள், திருவிழாக்கள் எனப் பலவற்றைப் பற்றிய விமரிசனப் பார்வையைப் பின்னர் வைப்பதற்கான அடிப்படை நூல்களை ஊடகத்தின் பொருட்டே நானும், ஊடகத்தோடு தொடர்புடைய நண்பர்களும் வாசித்து விமரிசனக் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டோம். நிறப்பிரிகைக்காகத் தனது முழு நேரத்தையும் செலவழிக்கும் அவர் ஊடகத்திற்காகவும் ஒவ்வொரு இதழிலும் கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார். அவரைப் போலத் தொடர்ந்து சொந்த வேலைகளையும், அலுவலக வேலைகளையும், சமூக, இலக்கிய வேலைகளையும் சளைக்காமல் செய்ய முடியவில்லையே என்று வருத்தம் கொண்டதுண்டு; அந்த வருத்தம் இன்றளவும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
சளைக்காத அந்த உழைப்புச் செயலைத் தக்க வைக்கும் முயற்சியாக இப்போது மணற்கேணி என்றொரு இருமாத இதழைத் தொடங்கி நடத்துகிறார். இரண்டு இதழ்கள் வந்து விட்டன. மணற்கேணிக்காகவும் அவரோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதன் ஆசிரியர் குழுவில் நானும் இருக்கிறேன்.  இமையம்,தேன்மொழி, அழகரசன் ஆகியோரும் உள்ளனர்.  என்றாலும், நாங்களெல்லாம் எழுத்துப் பங்காளிகள் மட்டும் தான். முதலீடு, அச்சிடல், விற்பனை, தொடர்புகள்  என அனைத்தும் ரவிக்குமார் தான். தமிழக நூலக ஆணைக்குழுவின் பரிந்துரையைப் பெற்று விடும் வாய்ப்பு ரவிக்குமாருக்கு இருக்கிறது. எனவே மணற்கேணி தொடர்ந்து வரும் வாய்ப்பும் உண்டு. இப்போது அதற்கு எழுதும் கைகள் தான் வேண்டும். இப்போதைக்குத் தனிச்சுற்றுக்கு மட்டும் தான், நன்கொடை.ரூ. 40 . அடுத்த இதழில் ஆண்டுச் சந்தா அறிவிப்பு வரக்கூடும்.
மணற்கேணியின் இரண்டாவது இதழ்(செப்டம்பர்- அக்டோபர்,2010) கிடைக்கிறது. முகவரி: மணற்கேணி பதிப்பகம், முதல் தளம், அறை எண்.2, புதிய எண். 10, பழைய எண். 288.டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை- 600 005, தொலைபேசி: 9443033305. manarkeni@gmail.com ,
இரண்டாவது இதழில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள்: 
·     தஞ்சைப் பெரியகோயில் ஆயிரம் ஆண்டு ரகசியம் -ரவிக்குமார் (கட்டுரை)
·     ஈழக்கவிதைகள் : யேசுராஜா, பா.அகிலன்,பஹீமா ஜஹான், சித்தாந்தன்
·     நாணல் காடு -தேன்மொழி (சிறுகதை)
·     எனது பள்ளிப்பருவமும் ஆசிரியர்களும் -இமையம் (நினைவுக்குறிப்புகள்)
·     இந்திராபார்த்தசாரதியோடு ஒரு நேர்காணல் -அ.ராமசாமி
·     சிறப்புப் பகுதி : வங்க இலக்கியம்
·     விதை - மகாஸ்வேதா தேவியின் வங்க மொழிக்கதை தமிழில் என்.எஸ். ஜெகந்நாதன்
·     வங்கமொழியில் தலித் இலக்கியம் - மனோரஞ்சன் வ்யாபாரி (மீனாக்‌ஷி முகர்ஜியின் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் தேன்மொழி) ஜாய் கோஸ்வாமி கவிதைகள்
·     பார்தா சாட்டர்ஜி -நேர்காணலும் மொழியாக்கமும்: அழகரசன்
·     நாம் சந்திப்பதற்கு வேறு இடமே இல்லையா? - நாதின் கார்டிமரின் கதை. மொழிபெயர்ப்பு: ஆர்.ராஜகோபால்.
·     எடுவர்டோ கலியானோ: இலக்கியமாகும் வரலாறு , வரலாற்றுக் குறிப்புகள்
·     ரவிக்குமாரின் மூன்று நூல்களுக்கான அறிமுகங்கள்: செய்துள்ளவர்கள் கவி சேரன், இந்திரா பார்த்தசாரதி,தேன்மொழி
 [ மணற்கேணிக்காக நான் எடுத்த இ.பா.வின் நேர்காணல் தனிப்பதிவாக உள்ளது. விரும்புபவர்கள் படித்துப்பாருங்கள்].


No comments :