October 06, 2010

இறந்த காலமல்ல; கடந்த காலம்

கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழ்நாட்டின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டு விவசாயிகள் தமிழ்நாட்டுக்குத் தேவையான நெல்லை விளைவிக்கிறார்கள். குறைந்தது இரண்டு போகம் விளையும் விதமாகக் காவிரியில் நீர் வருவதுண்டு. அதனைத் தேக்கி வைத்துப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதற்காகவே காவிரியின் குறுக்கே
மேட்டூர் அருகே அணை கட்டப்பட்டுள்ளது. 

காவிரியில் கட்டப்பட்டுள்ள அணை சேலம் மாவட்டத்தில் இருந்தாலும், அங்கிருந்து வரும் நீரை அதிகம் பயன்படுத்துவதில் தஞ்சை மாவட்டமே முதலிடத்தில் இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் அதிகம் பயன்படுத்தும் மாவட்டம்.தமிழகத்திற்குத் தேவையான நெல்லை விளைவிக்கும் தஞ்சாவூர் தமிழகத்தின் ‘நெற்களஞ்சியம்’ எனவும்,‘காவிரியின் கொடை’ எனவும் அழைக்கப்படுகிறது.
இப்படியான ஒரு பாடத்தை நமது பள்ளி மாணாக்கர்கள் நிலவியல் பாடத்தில் படித்திருப்பார்கள். நிலவியல் பாடம் தஞ்சையைப் பற்றிச் சொல்லும் செய்திகளைப் போல வரலாற்றுப் பாட நூல்களும் சில செய்திகளைத் தருகின்றன. சேர, சோழ, பாண்டியர்கள் என மூவேந்தர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் சோழப்பேரரசின் தலைநகராகக் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. பின்னர் கி.பி.850 –க்குப் பிறகு ஏற்பட்ட பிற்காலச் சோழர்கள் ஆட்சி ஏற்பட்ட போது பூம்புகார் என்னும் காவிரிப் பூம்பட்டினம் கடலுக்குள் மூழ்கியதால் அவர்கள் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டார்கள். தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பிற்காலச் சோழர்களில் மிக முக்கியமானவர்கள் ராஜராஜசோழனும், அவனது மகன் ராசேந்திரச் சோழனும் ஆவர். தங்களின் வீரத்தின் காரணமாகவே அவர்கள் ஈழம் வென்றவர்களாகவும், கங்கை கொண்டவர்களாகவும், கடாரம் வென்றவர்களாகவும் பட்டப் பெயரோடு வலம் வந்தார்கள். 

ராஜராஜ சோழனும் ராசேந்திரச் சோழனும் வீரர்கள் மட்டுமல்ல; நிர்வாகத்திறமை மிக்கவர்களும் கூட. அத்துடன் கலையார்வமும் கொண்டவர்கள். அவர்கள் தான் நிலத்தைக் கோலால் அளந்து நிர்வாகக் கிராமங்களை உருவாக்கியதோடு, பல கிராமங்களை இணைத்து மண்டலங்களையும் , மகாமண்டலங்களையும் அமைத்தார்கள் என்பனவும், கிராம ஆட்சியில் மக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்பதற்காகக் குடவோலை முறையை அறிமுகப்படுத்தினார்கள் என்பதும் அவர்களின் நிர்வாகத்திறனுக்கு எடுத்துக் காட்டுகளாக இருப்பவை. அதே போல் 1000 ஆண்டுகளுக்குப் பின்னும் கால வெள்ளத்தில் சிதைந்து போகாமல் நிற்கும் ராஜராஜேச்சுரப் பெருவுடையார் கோயிலும், கங்கை கொண்ட சோழபுர அரண்மனையும் அவர்களின் கலை ஈடுபாட்டுக்கு ஆதாரங்கள். தஞ்சாவூரின் வரலாற்றுப் பெருமைகளைச் சொல்லும் இக்குறிப்புகள் எல்லாம் வரலாற்றுப் புத்தகத்தில் மாணாக்கர்கள் படித்த பாடங்கள்.நான் பள்ளியில் படிக்கும் போது சரித்திரமும் பூகோளமும் எனத் தனித் தனியாகப் பாடங்கள் இருந்தன. இன்று அவ்விரு பாடங்களும் சமூக அறிவியல் என ஒரே பாடமாகக் கற்றுத் தரப் படுகிறது. ஒன்றாக ஆக்கப் பட்டாலும் தஞ்சாவூரைப் பற்றிய செய்திகளை நமது மாணாக்கர்கள் கடந்தே பள்ளியை விட்டு வெளியேறுவார்கள் என நினைக்கிறேன்.

பாடங்களைப் பாடங்களாக மட்டும் படித்துத் தேர்வுகள் எழுதி விடும்போது சிந்திப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் பாடங்கள் நம்முன்னால் வந்து நின்று நிகழ்காலத்தின் இயக்கத்தோடு உரசல் ஏற்படுத்திக் கொள்ளும் போது மனிதர்களின் தன்னிலை – நமது அறிவு- மறுவிளக்கம் பெற்று விடும். அதனால் மனிதன் அதற்கேற்பத் தூண்டப்பட்டு வினையாற்றும்படி நெருக்குதல் ஏற்படும். இது மனிதச் சிந்தனையின் அனிச்சை நிலைபாடும் கூட. வரலாறு எப்போதும் நம்முன்னே பிறந்த நாள் அல்லது நினைவு நாள் விழாக்களாக வந்து போவதுண்டு.
நிலவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தஞ்சையைப் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் இன்று அப்படியே உண்மையாக இருக்கின்றனவா? தஞ்சை, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தானா? காவிரி, தஞ்சை மாவட்டத்தின் நெல் விளைச்சலுக்குத் தேவையான நீரைக் கொடுக்கிறதா? காவிரி தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன் எத்தனை அணைகளில் தடுத்து நிறுத்தப் படுகிறது? எல்லா ஆண்டும் தமிழ் நாட்டின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கும் வாய்ப்பு காவிரிக்கு இருக்கிறதா? என ஒரு மாணவன் கேள்விகளை எழுப்பினால் விடை சொல்ல ஆசிரியர்கள் படும் பாடு பெரும்பாடாக இருக்கும். காவிரியைப் பற்றி நிலவியல் சொல்லும் விசயங்கள் எல்லாம் கேள்விக்குரிய ஒன்றாக மாறி விட்டன என்றாலும், காவிரியும் தஞ்சை மாவட்ட நெல் விளைச்சலும் தமிழ்நாட்டின் நிகழ்காலப் பெருமைகள் என்பதை மறந்து விட முடியாது; மறுத்தும் விட முடியாது. ஆனால் அந்நிகழ்காலப் பெருமை தொடர்ச்சியற்ற ஒன்றாக இருக்கிறது என்பது நடைமுறை உண்மை.

பிறந்த நாளும் நினைவு நாளும் இல்லையென்றாலும், நிலவியலில் பாடமாக இருக்கிற காவிரியை ஒவ்வோர் ஆண்டும் மாநிலம் தவறாது நினைத்துக் கொண்டே இருக்கிறது. 1924 ஆம் ஆண்டு போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பின்னால் 1974 இல் திருப்பவும் புதுப்பிக்கப் படாமல் போன பின்பு காவிரியின் கொடையாக இருந்த தஞ்சாவூர் – தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை மாவட்டம்- காவிரியின் துயரமாக மாறி விட்டது. அதனைப் போக்கும் வாய்ப்புகளும் மாற்றும் முயற்சிகளும் தூரம் தூரமாகப் போய்க் கொண்டே இருக்கின்றன.
நிலவியல் சார்ந்த தஞ்சையின் நினைவுகள் தூரம் தூரமாகப் போகும் அதே நேரத்தில் வரலாறு சார்ந்த அதன் நினைவுகள் தமிழ் நாட்டில் திரும்பத் திரும்ப வந்து நிற்கின்றன. கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளாகவும், ஆட்சியாளர்களின் பெருமித அடையாளங்களாகவும் வரலாறும், வரலாற்றுப் பாத்திரங்களும் திரும்பத் திரும்ப நினைக்கப்படுவது எல்லாத் தேசங்களிலும் நடக்கும் ஒன்று தான். தமிழ் நாட்டில் அவ்வாறு அடிக்கடி நினைக்கப்படும் பேருருவாக இருக்கும் வரலாற்றுப் பாத்திரம் ராஜராஜ சோழன். அண்மையில் தஞ்சையில் நடந்த தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ராஜராஜனையும் அவனது மகன் ராசேந்திரனையும் ஒருசேரத் திரும்பக் கொண்டுவந்து நிகழ்காலத்தில் நிறுத்தியுள்ளது. 

கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் தமிழ்நாட்டின் கட்டடக் கலையின் பெருமைகளில் முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. 60 கி.மீ. சுற்றளவில் மலைகளே இல்லாத தங்கள் தலைநகரில் இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள் என்று நினைக்கும் ஒவ்வொரு தமிழ்நாட்டு மனிதனும் பெருமை பட்டுக் கொள்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. சிற்பக்கலையின் அதிகபட்ச சாத்தியப்பாடுகளையும் கட்டடக் கலையின் தேர்ந்த நுட்பங்கள் பலவற்றையும் உள்ளடக்கி நிற்கும் அந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நினைக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஓர் இடம் சார்ந்து நிகழ்காலத்துயரங்கள் இருந்த போதிலும், கடந்த காலப் பெருமைகள் நினைக்கப்பட வேண்டும் ; அந்நினைப்பு மன ஆறுதலை அளிக்கும் என்பதே மனித வாழ்க்கையின் சாரம். 

தஞ்சையில் நடந்த அந்தப் பெருவிழாவில் 1000 ஆண்டுகளைத் தாண்டிய தஞ்சைப் பெரிய கோயில் தான் நினைக்கப்பட்டதா? அல்லது அக்கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனும் அவரது மகன் ராசேந்திர சோழனும் நினைக்கப்பட்டார்களா? அங்கு நடந்த நிகழ்வுகளும் பேசிய பேச்சுக்களும் தஞ்சைக் கோயிலைப் பின்னுக்குத் தள்ளி விட்டுப் பேரரசர்களான ராஜராஜனையும் அவனது மகன் ராசேந்திரனையும் தான் முன்னிலைப் படுத்தின என்று சொல்கின்றன பத்திரிகைச் செய்திகள். நிகழ்காலமும் கடந்த காலமும் சந்திக்க இடங்களை விட நபர்களே அதிகம் பயன்படுவார்கள் என்பது காரணமாக இருக்கலாம்.
பார்வையாளப் பங்கேற்புக்கு பல்வேறு தளங்களில் வாய்ப்பளிக்கும் தமிழக நாட்டார் கலைகளைச் சென்னையில் நடத்தியதன், திரள் மக்களை வெறும் பார்வையாளத் திரளாக ஆக்குவதில் வெற்றி கண்டுள்ளது சென்னை சங்கமம் நிகழ்ச்சி. அதன் நகல் தான் தஞ்சையிலும் அரங்கேறின. நடத்தப் பட்ட ஆய்வரங்கு கூடக் கோயிலை மையப்படுத்தி ‘இந்தியக் கலை வரலாற்றில் ராஜராஜ சோழேச்சுரக் கோயில்’ என்பதாக அமைக்கப்படாமல் ‘இந்திய வரலாற்றுக்குத் தஞ்சையின் பங்களிப்பு’ என்பதான மையப் பொருளையே கொண்டிருந்தது. அத்துடன் கூடுதலாக நடத்தப் பெற்ற கலைநிகழ்ச்சியாக 1000 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற பரத நாட்டியம் சார்ந்த நாட்டியாஞ்சலி மட்டுமே தஞ்சையின் பழம் வரலாற்றோடு தொடர்புடைய ஒன்று. இதுவும் நேர்மறைத் தொடர்புடையது அல்ல; எதிர்மறைத் தொடர்பு கொண்டது என்பதைச் சோழர்கால வரலாற்று ஆய்வுகளை வாசித்தவர்கள் அறிவார்கள். 

தஞ்சைப் பெரிய கோயில் போன்ற ஒரு கட்டடத்தைக் கட்டியெழுப்ப எவ்வளவு நிதியாதாரங்களும் மனித உழைப்பும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் போது அதன் காரணமாக உண்டாகும் பெருமித உணர்வில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் மட்டுமே பங்கெடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அப்படியொரு கட்டடத்தைக்க் கட்ட வேண்டும் என நினைத்த நினைப்பும் கனவும் ராஜராஜசோழனுடையதாக இருக்கலாம். அதை நிறைவேற்றித் தந்தவர்கள் அவன் காலத்து மக்கள் அல்லவா?. திட்டமிட்ட கட்டடக் கலைஞர்களும், கட்டிட வேலை செய்த பணியாளர்களும் இன்றுள்ள ஒவ்வொருவரின் முன்னோர்கள் தானே. அவர்கள் எவ்வளவு உழைப்பை வழங்கியிருப்பார்கள் என்பதை நினைக்கும் போது, இன்று உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உழைப்பாளியும், அந்தப் பெருமையில் தமக்குப் பங்கிருப்பதாகக் கருதிக் கொள்வதில் தவறொன்றும் இல்லை. தங்களின் கடந்த காலப் பெருமைகளில் ஒன்றாகத் தஞ்சைப் பெரிய கோயிலைச் சுட்டிக் காட்டுவதில் தமிழர்கள் ஒவ்வொருவரும் பங்கு கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அப்படியான விருப்பத்தோடு இருக்கும் மக்களுக்கு அவர்களும் பங்கேற்று மகிழும் விதமாகப் பெருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும்.
மக்கள் பங்கேற்று மகிழும் விழாவாக நடத்தாமல், கடந்த காலத்தை நினைவூட்டி, ராஜராஜசோழன் மற்றும் ராசேந்திரச் சோழனின் ஆட்சிக் காலத்திற்குள் மக்களை அழைத்துச் செல்லும் விழாவிற்கான நிகழ்காலத் தேவை என்ன? கடந்த கால அரசர்களைப் பேசும் விதமான பொருண்மையில் நிகழ்கால அரசை நினைவூட்டும் சாத்தியங்கள் அதிகம் உண்டு என்பது அரசியல் பண்பாட்டு ஆய்வாளர்கள் தரும் பதில். கடந்த காலப் பெருமை பற்றிய நினைவூட்டல் எப்போதும் நிகழ்காலத்தோடு பொருந்திக் கொள்ளும் என்பதோடு இருமுனை விளைவுகளையும் உண்டாக்கவல்லது என்றும் அவர்கள் கூறுகின்றனர். பெரும் விழாக்கள் எப்போதும் அதன் ஏற்பாட்டாளர்களுக்குச் சாதகமான விளைவுகளை மட்டுமே உண்டாக்கும் என்பதில்லை; எதிர்மறை விளைவுகளும் உண்டாகலாம். இந்தக் கூற்று பல நேரங்களில் – கடந்த காலத்தில் மட்டுமல்ல; நிகழ்காலத்திலும் கூட உண்மையாக ஆகியிருக்கிறது.

குறிப்பாகக் கடந்த காலப் பெருமைகளில் அனைத்து வகைத் திரள் மக்களும் பங்கேற்கும் படியான திட்டமிடல்கள் மட்டுமே சாதகமான விளைவுகளை உண்டாக்கும். அவ்வாறில்லாமல் திரள் மக்களை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறவர்களாக வைத்திருக்கும் பெருவிழாக்கள் எப்போதும் ஏற்பாட்டாளர்களுக்குப் பாதகமான விளைவுகளையே உண்டாக்கும். ஜனநாயக காலத்தில் ஆட்சியாளர்களின் பகட்டான ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பெரும் விழாக்களை மக்கள் முகச்சுளிப்போடு தான் பார்த்து விட்டுப் போகிறார்கள். பிறந்த நாட்கள் என்றில்லை; மணவிழாவானாலும்சரி, மொழி மாநாடாக இருந்தாலும்சரி அப்படித்தான் பார்க்கப் படுகின்றன. இது உணரப்பட வேண்டும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் 1000 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் திரள் மக்களின் பங்கேற்புக்கு வாய்ப்புகள் எதுவும் வழங்கப் படவில்லை என்பது வெளிப்படையான உண்மை. அதன் தொடர்ச்சியாக அந்நிகழ்வு ராஜராஜசோழனின் வீரம், கலையார்வம், நிர்வாகத்திறமை என்பதை மட்டுமே நினைவூட்டியிருக்கும் என்று மட்டும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் ராஜராஜன் மற்றும் ராசேந்திரன் காலத்தில் தான் வட இந்தியாவிலிருந்து ஏராளமான பிராமணர்கள் தமிழகத்தில் குடியேற்றப்பட்டார்கள் என்பதற்கும், அவர்களுக்கு இறையிலியாக நிலங்கள் வழங்கப்பட்டுச் சதுர்வேதி மங்கலங்களும், பிரமதேயங்களும் உண்டாக்கப்பட்டன என்பதும், வைதீக சமய்த்தின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிய சமயமாக சைவசமயம் மாற்றிக் கட்டமைக்கப்பட்டது என்பதும் வரலாற்றுண்மை. 

பெருங்கோயிலைக் கட்டிய பிற்காலச் சோழர்கள் காலத்தில் சதிர் என்ற பெயரில் நாட்டியமாடும் கலைஞர்களாகப் பெண்கள் கோயிலோடு பிணைக்கப்பட்டார்கள். அவர்களே பின்னர் பதியிலார் என்றும் தேவரடியார் என்றும் அழைக்கப்பட்டுத் தேவதாசி முறை தோன்றக் காரணமானார்கள் என்பதும் கடந்த கால உண்மைகள் . இவையெல்லாம் சோழர்கள் ஆட்சிக் காலம் பற்றிய எதிர்மறைக் குறிப்புகள். சோழ அரசர்களின் வீரம் சார்ந்த தேசப்பரப்பு விரிவாக்கம், ஆட்சி நிர்வாகம், கலைகளின் பால் ஈடுபாடு என்பதை நினைவூட்டும் போது இவைகளும் நினைவுக்கு வருவதை யார் தடுக்க முடியும். நிகழ்கால இலக்கியத்தோடு தொடர்புடையவர்களுக்குக் கவி இன்குலாப் எழுதிய ‘ கண்மணி ராஜம்’ கவிதையும் அதன் விமரிசன வீச்சும் கூட நினைவுக்கு வரத்தான் செய்யும்.

3 comments :

ஆரூர் பாஸ்கர் said...

புதிய கோணம். ஆழ்ந்த சிந்தனை. தனி நபர் வழிபாட்டிலிருந்து, சமூகம் சார்ந்த சிந்தனையே மாற்றங்களை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.
உங்களை போன்ற சிந்தனை சிற்பிகளை அரசு நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

சதிர் ?

அ.ராமசாமி said...

மாற்றிவிடலாம். சதிர் தான் சரியான சொல்