கடைசிப் புகலிடமா? முதன்மையே அதுதானா?

இப்போதுள்ள நடிகர்களுள் சிறந்த நடிகர் யார் ?
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட நண்பர் தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்துத் தரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார். போன வாரம் கேட்ட இதே கேள்வியைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை கேட்டார். சிறந்த நடிகர் ஒருவரது பேட்டியை அந்த வருடம் தீபாவளிக்கு ஒளிபரப்ப விரும்புவதாக ஒரு தொலைக்காட்சி அலைவரிசை சொல்லி இருப்பதாகவும், நடிப்பின் நுட்பங்கள் பற்றியெல்லாம் பேச வேண்டும்; நடிகர் பெயரையும் சொல்லி விட்டு அவரிடம் கேட்க வேண்டிய வினாக்களையும் சொன்னால் நல்லது என்று கேட்டுக் கொண்டார்.
கேட்ட நண்பரிடம் நான் நடிகர் நாசரிடம் பேட்டி காணுங்கள் என்று சொன்னேன். இங்கு பல பேர் நடிப்பானாலும் சரி கவிதை எழுதுவதானாலும் சரி, பாடுவதானாலும் சரி இறைவன் கொடுத்த வரம் என்று நினைக்கிறார்கள். அவர்களிடம் அவர்கள் சார்ந்த துறையின் நுட்பங்களைக் கேட்டால் சொல்லத் தெரியாது. நாசர் அப்படி நினைப்பவரல்ல; அவரது நடிப்பு அவரே பயிற்சி செய்து உருவாக்கிக் கொண்ட திறமை என்று நம்புகிறார். தொடர்ந்து கற்றும் கேட்டும் பயிற்சி செய்கிறார். அதனால் நடிப்பின் ஆதாரம், பயிற்சி முறைகள், வகைகள், கட்டுக்குள் வைப்பது என்பது போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வார் என்று விரிவாகச் சொன்னேன். 
வில்லன் நடிகர் ஒருவரை சிறந்த நடிகர் என்று சொன்னதை அவர் விரும்பவில்லையா? அல்லது இசுலாமியர் என வெளிப்படையாகச் சொல்லிக் கொண்ட ஒருவரைத் தீபாவளிக்குப் பேட்டி காண்பது பொருத்தமில்லை என்று நினைத்தாரா என்று தெரியவில்லை. அந்தத் தீபாவளிக்கு நடிகர் நாசரிடம் பேட்டி எடுக்கவே இல்லை அந்த நண்பர்.

நடிகர் நாசர் தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் ஒருசில தேர்ந்த நடிகர்களுள் ஒருவர் என்பதை திரைத்துறை சார்ந்த பலரும் ஒத்துக் கொள்வதுண்டு.நடிகர் கமல்ஹாசன் தனது படங்களில் தனது பாத்திரத்தை எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தெடுக்க வேண்டும் என விரும்புவாரோ அதற்குச் சமமாகத் தனது எதிர்க் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவமும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். கமல்ஹாசனின் முக்கியமான படங்களான தேவர் மகன், குருதிப் புனல், படங்களில் தனக்குச் சமமாக நடிக்கக் கூடிய வாய்ப்பை நாசருக்கு ஏற்படுத்தித் தந்திருப்பதை இப்போது படம் பார்த்தாலும் ஒத்துக் கொள்ளத் தோன்றும்.

இந்த இரண்டு படங்களிலும் சில காட்சிகளில் கமல்ஹாசனின் நடிப்பை விடவும் தேர்ந்த – நுட்பமான நடிப்பை நாசர் வெளிப்படுத்தியிருப்பார். தனது சொந்தத் தயாரிப்பான மகளிர் மட்டும் படத்தில் மையப் பாத்திரமாகவே நடிகர் நாசரை நடிக்கச் செய்து அவரது திறமையை வெளிப்படச் செய்தவர் கமல்ஹாசன். நாசர் வெறும் வில்லன் நடிகர் மட்டும் அல்ல என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்ல முடியும். வில்லனாக நடித்த படங்களிலே ஆகச் சிற்ந்த படம் எது என்று என்னைக் கேட்டால், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்று சொல்வேன். தமிழ்ச் சினிமாவில் இருக்கும் இன்னொரு ஒப்பற்ற நடிகரான வடிவேலு நாயகனாக நடித்த அந்தப் படத்தில் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.

நாயகன் வடிவேலுவின் சூழ்ச்சிக்கார மாமனாக நடித்த நாசர் மேற்கத்தியச் செவ்வியல் நடிப்பை உள்வாங்கித் திறமையாக வெளிப்படுத்த, இந்தியப் பாரம்பரிய அரங்கில் வெளிப்படும் தன் போக்கான வெளிப்பாடுகளை நடிகர் வடிவேலு செய்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அல்லாமல், அவரது நடிப்பு பல படங்களில் ’நடிக்கிறார் என்று தெரியாமலேயே வெளிப்படும் அற்புதம்’ என்று தான் சொல்ல வேண்டும். அதே நண்பர் நடிகர் வடிவேலுவை எனது பரிந்துரை இல்லாமலேயே பல பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பு விட்டார். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நடிகர் வடிவேலு இல்லாத தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லை; பொங்கல் இல்லை; புத்தாண்டு இல்லை என்னுமளவிற்கு வடிவேலுவின் நேர்காணலைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

அவரது நடிப்பு அவருக்குக் கிடைத்த வரம் என்றே சொல்ல வேண்டும். தனது உடல் அசைவின் மூலமே பலவிதமான அர்த்தங்களைக் கொண்டு வரும் உடல் மொழி வாய்க்கப் பெற்ற நடிகராகத் திகழும் வடிவேலு திரையில் மட்டுமே நடித்துத் தன்னை ஒரு சிற்ந்த காமெடியன் என ஏற்கச் செய்தவர். இந்த ஆண்டு தீபாவளிக்கும் அவரது நேர்காணல்களையும், அவர் நடித்த படங்களின் காட்சிகளையும் எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஒளிபரப்பும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பை அவரே விலக்கி விட்டார் என்று தோன்றுகிறது.
தனது அலுவலகமும் வீடும் கும்பல் ஒன்றினால் தாக்கப் பட்டபோது அவரது கோபம் ஆவேசமாக வெளிப்பட்டது. முதலில் அவரது கோபத்திலும் ஆவேசத்திலும் வெளிப்பட்டது நியாயமான உணர்வு என்று தோன்றியது. ஆனால் அடுத்தடுத்து அவர் சொன்ன வார்த்தைகளும், அளித்த பேட்டிகளும் தேர்ந்த நடிகரின் தொழில் திறமையின் வெளிப்பாடோ என்று தோன்றுவதை யாரும் தவிர்க்க முடியாது.

தன் அலுவலகமும் வீடும் தாக்கப் பட்டதற்குக் காரணம் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம் என வடிவேலு நம்பும் நிலையில் அதைக் குறிப்பிட்டே காவல்துறையிடம் புகார் அளிக்கலாம். அப்படியான புகார் ஒன்றை அளித்ததோடு அவர் நின்றிருந்தால் அவரது ஆதங்கமும், இழப்பும் ஒரு காமெடி நடிகரின் இழப்பாகக் கருதப்பட்டு இரக்கத்திற்குரிய நபராகக் கருதப்படும் வாய்ப்பிருந்தது.
காவல் துறை மீது நம்பிக்கை வைத்து நீதி கேட்டுச் சென்றவர், அடுத்துச் செல்ல வேண்டிய இடமான நீதித்துறையை அணுகாமல், மக்கள் மன்றத்தை நாடுவேன் எனச் சொல்லும் போது நிகழ்வின் நோக்கம் கேள்விக்குறியாக நிற்கிறது. நடிகர் வடிவேலு மட்டும் அல்ல; தமிழ் நாட்டில் ஏதோ ஒருவிதத்தில் பரபரப்பாக ஆனவர்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கும், துயரத்திற்கும் நாட வேண்டிய துறைகளை அல்லது நபரை நாடாமல் மக்கள் மன்றத்தில் வந்து முறையிடுகிறார்கள் என்பது தான் தமிழ் நாட்டிற்கு நேர்ந்த பெரிய அவலம் என்று சொல்லத் தோன்றுகிறது.

தனது வீட்டிற்குப் போகும் பாதை அடிக்கடி மறிக்கப் படுகிறது என்பதற்காகக் குரல் கொடுத்து அரசியல் அடையாளம் பூசிக் கொண்ட ரஜினிகாந்தைப் போலவே, தனது அலுவலகமும் வீடும் ஒரு ரவுடிக் கும்பலால் தாக்கப் பட்டது என்பதற்காக நான் அரசியலுக்கு வருவேன் என்பதும், எம். எல். ஏ. ஆவேன் என்பதும் வேடிக்கையாக இருப்பது மட்டுமல்ல. தமிழ் நாட்டு மக்களைப் பற்றிய அவர்களது அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்துகிறது. நாயகனாகவோ, காமெடியனாகவோ திரைப்படத்தில் நடித்ததால் கிடைக்கும் பரப்புவாதத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு வாக்களிப்பார்கள் தமிழர்கள் என அவர்கள் நம்புவது எந்த அடிப்படையின் பேரில் என்பதுதான் புரியவில்லை.
தமிழ் சினிமாவில் இருக்கும் நாயகனோ, காமெடியனோ, வில்லனோ அவரவர் அளவில் நடிகர்களாகத் திறமையை வெளிப்படுத்தும் போது தமிழ்ச் சமூகம் அவர்களின் திறமையை மெச்சவும், பாராட்டவும், காட்சிகளைக் கண்டு களிக்கவும் தயங்காது. ஆனால் அந்தப் பரப்புவாதத்தை வைத்துக் கொண்டு எங்களின் பிரதிநிதிகளாக – எங்களை ஆள்பவர்களாக ஆகும் ஆசையைக் கைவிடுங்கள் என்பதைப் படம் பார்க்கும் போது காட்ட முடியாது. தேர்தல் மூலம் தான் அதை உணர்த்த முடியும். அவ்வாறு உணர்த்தும் படியாக மக்களைத் தயார் படுத்தும் பணியில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பங்குண்டு. குறிப்பாக ஊடகத்துறையினருக்கும், அறிவுத்துறையினருக்கும் இதில் கூடுதல் பொறுப்பு இருப்பதாகவே நினைக்கிறேன்.

வெற்று அறிமுகமும், பரபரப்பு வாய்ச்சவடால்களும் மட்டுமே அரசியலுக்குப் போதாது. கொள்கைகளும், சமகாலத்தைப் புரிந்து கொள்ளும் சிந்தனைத் திறனும், மக்களின் தேவையை அறிந்து நிறைவேற்றும் திட்டங்களும் தான் அரசியல் வாதிகளின் அடிப்படைத்தேவைகள். அதை விட்டு விட்டு வெறும் பரப்பு வாதம் போதும் என்று எண்ணுகிற எண்ணமே இங்கு ஒழிக்கப் பட வேண்டும்.
நடிகர்களின் எல்லாப் பாரத்தையும் சுமக்கும் அப்பாவிகள் அல்லவே மக்கள். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பதற்கு மாறாக, நடிகர்களுக்கு முதல் புகலிடமே அரசியல் தானோ?

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
நீதித்துறையை அணுகாமல், மக்கள் மன்றத்தை நாடுவேன் என்னும் மனப்பான்மை .

மக்கள் மன்ற ஆதரவு மூலம் நீதி மன்ற போக்குகளை மாற்றி அமைக்கலாம் என்னும் நடைமுறை எதார்த்தம் & வரலாறே தான் இதற்கு காரணம் .

திரு ஜெயலலிதா அவர்கள் மக்கள் மன்றத்தால் வெற்றி பெற்ற உடன் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி பதவி ஏற்க அழைத்தது , பதவிக்காக மதுரை தினகரன் வழக்கை மாற்றியது , குஷ்புவின் கற்பு வழக்குகள் மாற்றம் , மக்கள் மன்ற வெற்றியால் முலாயம் மாயாவதி பாஸ்வான், சிபு சோரன் வழக்குகள் மாற்றம்
என வரலாறு அவ்வாறு தானே இருக்கிறது இங்கே .

மக்கள் மன்ற ஆதரவு & பணம் கிடைக்கும் என்பவை தானே சினிமா /டிவி துறை நோக்கி ஒருவரை இழுக்கும் ஈர்ப்புகள் . அவை இல்லாவிடில் இந்தத் துறைக்கு யாரும் வர மாட்டார்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்