இடுகைகள்

ஆகஸ்ட், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமயங்களின் உள் முகங்கள்

ஒரு முன் குறிப்பு: நானும் ஜெயமோகனும் பரிமாறிக் கொண்ட  இந்தக் கடிதப் போக்குவரத்து சரியாக ஒருவருடத்திற்கு முந்தைய நிகழ்வு. இக்கடிதங்களில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் எங்கள் இருவருக்குமானவையாக இல்லை; பொதுவில் வைக்கப்பட வேண்டியவை என்று அப்போதே  தோன்றியது என்றாலும் பதிவேற்றம் செய்யவில்லை; காரணம் இருவருக்கும் எதோ பிரச்சினை எனக் கருதிக் கொள்ளும் சூழல் தான் காரணம். தமிழில் அறிவார்ந்த விவாதங்கள் தனி நபர் பிரச்சினைகளாகப் பார்க்கப்படும் ஆபத்து இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இப்போது வலைப்பதிவில் ஏற்றுகிறேன்.

ஏமாற்றங்கள்

இந்த ஏமாற்றம் ஒன்றும் புதியது அல்ல. சரியாகச் சொல்வதானால் நான் ஏமாறவில்லை என்பது தான் உண்மை. ஏமாந்தது சுந்தரமூர்த்திதான். ‘ ப்ளீஸ் டைம் ’ என்ற குரல்தான் அவளைப் பார்க்க வைத்தது. கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்ப்பதற்கு முன்னால் அவளைப் பார்த்தேன். என்னை விடக் கூடுதலான உயரம். புருவங்களை உயர்த்திப் பார்க்க வேண்டியிருந்தது. அவளைப் பார்க்க விரிந்த கண்கள் கடிகாரத்தைப் பார்க்கும் போது உதவ மறுத்தன. நேரத்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் போனதற்கு உள்ளே போயிருந்த ஜின் கூடக் காரணமாக இருக்கலாம். போதை அதிகம் இல்லையென்றாலும் தெளிவாக எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் இருந்தது. அவள் கேட்டதற்கு நான் பதில் சொல்லாமல் இருந்ததைக் கவனித்த சுந்தரமூர்த்தி, என் கையை இழுத்து கடிகாரத்தைத் திருப்பி ‘ ஒன்பது நாற்பத்தி எட்டு’ என்று துல்லியமாகச் சொன்னான். அவ்வளவு துல்லியத்தை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது சிரிப்பு வெளிப்படுத்தியது. சிரித்ததோடு ‘தேங்க் யூ வெரி மச்’ என்றும் சொன்னாள். அப்படிச் சொன்னபோது அவள் முகம் என்னிடமிருந்து சுந்தர மூர்த்தியிடம் திரும்பியிருந்தது.

வரையறுக்கப்பட்ட நாடகவெளிகள் என்று சொல்லி

இந்தக் கண்காணிப்புப்பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து போகிறது. கடந்த நான்கு வாரங்களாக ஞாயிறு தவிர ஆறுநாட்களும் அதே பேருந்தில் பயணம். குறிப்பிட்ட காலம் சார்ந்த வினைகள் எப்பொழுதும் ஒழுங்கினை உண்டாக்கி விடத்தக்கன. தேர்வுகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்பட வேண்டியன. அதில் சிறு பிசகு நேர்ந்தாலும் மொத்த ஒழுங்கும் குலைந்து விடும் அபாயம் உண்டு. அப்படியானதொரு அபாயம் நிகழ்ந்து விடாமல் இருக்க, நான் கண்காணிப்பாளனாக அனுப்பப் பட்டேன். கண்காணிப்பு ஒருவிதத்தில் நம்பிக்கையின் அடையாளமும், இன்னொரு விதத்தில் நம்பிக்கை யின்மையின் வெளிப்பாடும்கூட . தனக்குக் கீழ் இருப்பவன் கண்காணிக்கப் பட்டால் ஒழுங்காகச் செயல்படுவான் என்பதான நம்பிக்கை.

உலகமயம் குறித்த முதல் விவாதம்: எதிரெதிர்த்திசைகளில்...

விஜய் தொலைக்காட்சி அலைவரிசையின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா.? நானா..? அத்துடன் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம் பெறும் விவாத நிகழ்ச்சிகளில் முதல் இடத்தில் இருக்கும் நிகழ்ச்சி என்றும் ஊடகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.சமூகத்தின் பல தரப்பட்ட மனிதர்களும் பங்கேற்க வாய்ப்பளிக்கும் தன்மையுடன் கூடிய பாவனை அதற்கு உண்டு. அத்துடன், சமூகத்தின் பொதுப்புத்திக்குள் உறையும் பல்வேறு கருத்துக்களை சரி அல்லது தவறு என எதிரெதிராக அணி பிரித்து நிறுத்தி வைத்து விவாதங்களை நடத்தி இறுதியில் ஒரு தீர்வைச் சொல்லி விடும் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் போன்றதல்ல என்பதுதான் அதன் பலம். 

கடைசிப் புகலிடமா? முதன்மையே அதுதானா?

இப்போதுள்ள நடிகர்களுள் சிறந்த நடிகர் யார் ? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட நண்பர் தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்துத் தரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார். போன வாரம் கேட்ட இதே கேள்வியைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை கேட்டார். சிறந்த நடிகர் ஒருவரது பேட்டியை அந்த வருடம் தீபாவளிக்கு ஒளிபரப்ப விரும்புவதாக ஒரு தொலைக்காட்சி அலைவரிசை சொல்லி இருப்பதாகவும், நடிப்பின் நுட்பங்கள் பற்றியெல்லாம் பேச வேண்டும்; நடிகர் பெயரையும் சொல்லி விட்டு அவரிடம் கேட்க வேண்டிய வினாக்களையும் சொன்னால் நல்லது என்று கேட்டுக் கொண்டார்.

எளிய மனுசியின் இலக்கு : மீரான் மைதீனின் கவர்னர் பெத்தா

மேல் நோக்கிய பயணம் – இந்த வாக்கியத்தைப் பலரும் சொல்கிற போது ஆன்மீகம் சார்ந்த வாக்கியமாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நமக்குக் கிடைத்திருக்கிற – நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற - இந்த வாழ்க்கை அவ்வளவு இனிமையானது அல்ல என்ற நினைப்பு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. இந்த எண்ணமும் தவிப்பும் இருப்பதில் அப்பாவிகள் என்றும், அறிவார்ந்தவர்கள் என்றும் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மேலான வாழ்க்கை என்பதைப் புரிந்து வைத்திருப்பதிலும், அதை அடைய முடியும் என நம்புவதிலும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கிடைத்திருக்கும் வாழ்க்கை மீதான அதிருப்தியின் அளவும், அதனை மாற்றிட வேண்டும் என்ற விருப்பமும், அதற்கான எத்தணிப்புகளும் எல்லாரிடமும் ஒன்று போல இருப்பதில்லை. அறிவார்ந்த தளத்திலும், நம்பிக்கைகளோடு கூடிய நடைமுறைகளைப் பின்பற்றுபவதிலும் கவனமாக இருக்கும் மனிதர்களின் எத்தணிப்புகளிலிருந்து திட்டமிட்டு வாழ்க்கையை முன்னகர்த்தும் வழியற்ற அப்பாவிகளின் எத்தணிப்புகள் பெருமளவு விலகியே இருக்கிறது.

திரும்பக் கிடைத்த முகவரிகள்

படம்
நிகழ்காலத்தில் நிகழ்கால வாழ்க்கையை வாழ வேண்டும் என நாம் முடிவு செய்தால் தினந்தோறும் கணினியின் திரையைச் சந்திக்காமல் தப்பிக்க முடியாது. துறவு வாழ்க்கையின் மீது விருப்பம் கொண்டு விலகிச் சென்றால் மட்டுமே கணினியிடமிருந்து தப்பிச் செல்லல் சாத்தியம். 

மணிரத்னத்தின் ராவணண் : தொன்ம உருவாக்கத்தின் தோல்வி

படம்
தமிழ்ச் சினிமாவின் நோக்கம் வியாபார வெற்றி. இது இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் அல்ல. கடந்து காலங்களிலும் அதுதான் நிலைமை. ஆனால் கடந்த காலங்களில் தமிழ்ச் சினிமா வியாபாரத்தை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதே நேரத்தில் தமிழில் சினிமாவைப் பற்றிய பேச்சு எப்போதும் வியாபாரத்தை முதன்மைப் படுத்திப் பேசாமல், கலை வடிவம் ஒன்றைப் பற்றிய பேச்சாகவே தொடர்ந்து வந்திருக்கிறது.

இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்..

கல்வி கற்பதில் அதிக அக்கறை காட்டும் மக்கள் வாழும் மாவட்டங்கள் எவை? இந்தக் கேள்விக்கு மூன்றாவது இடத்தை எந்த மாவட்டம் பிடிக்குமோ எனக்குத் தெரியாது.முதலிரண்டு இடங்கள் எவை என நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். முதல் இடம் தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்குத் தான். இரண்டாவது இடத்தை அதனை யொட்டி இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்துக்குக் கொடுக்கலாம்.

விபத்துகள் அல்ல; ஆபத்துகள்

படம்
            முகம் தெரிந்த மனிதர்களும் முகம் தெரிந்திராத மனிதர்களும் சந்திக்க நேரும்போது விவாதிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று வாகன  விபத்துகள். தினசரி ஒன்றிரண்டு பேருந்து விபத்துகளைக் காணொளியாகக் காண்கிறோம்.  சராசரியாக மாதத்திற்கு இரண்டுக்கும் குறையாமல் பெரும் ரயில் விபத்துகளைக் காட்சி ஊடகங்கள் தங்கள் செய்திகளில் காட்டுகின்றன.  அடுத்த நாள் கூடுதல் விவரங்களாக இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைத் தருவதோடு இத்தகைய விபத்துகளின் வரலாற்றையும் தருகின்றன செய்தித்தாள்கள். பொறுப்போடு இருப்பதாக நினைக்கும் அதன்  ஆசிரியர்கள் ஆலோசனைகளைக் குறிப்பிட்டுத் தலையங்கம் ஒன்றை எழுதிவிட்டு அடுத்த பெரும் நிகழ்வொன்றிற்காகக் காத்திருக்கிறார்கள்.