June 22, 2010

பயணங்கள் அற்ற கோடை விடுமுறை..

இந்தக் கோடை விடுமுறையில் விருப்பமான பயணம் என ஒன்றையும் மேற்கொள்ளவில்லை. சொந்தக் காரணங்களால் இப்படி நேர்ந்து விட்டது. கோடை விடுமுறை முடியப்போகும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்தால் எனது நீண்ட பயணங்கள் எல்லாம் கோடை விடுமுறையில் நிகழ்ந்தனவாகவே இருக்கின்றன என்பது புரிகிறது


ஒருவிதத்தில் எனக்கு ஆசிரியர் பணி விருப்பமான பணி என்பதாகவே நினைக்கிறேன். இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் இப்படி நினைக்கிறேன் என்பதில்லை. தொடக்கம் முதலே அதன் மீதான காதல் குறைந்ததே இல்லை. காரணங்கள் பல உண்டு என்றாலும் முதன்மையான காரணம் மொத்தமாகக் கிடைக்கும் கோடை விடுமுறை தான். அதுவும் பல்கலைக்கழக ஆசிரியராக இருப்பவர்கள் இன்னும் கொடுத்து வைத்திருப்பவர்கள். மே முதல் தேதி முதல் ஜுன் 30 வரை அறிவிக்கப்படாத விடுமுறை நாட்கள். மொத்தமாக 60 நாட்கள் விடுமுறை கிடைக்கின்ற பணி வேறு எதுவும் இல்லை தானே?

எனது நீண்ட பயணங்கள் எல்லாம் கோடை விடுமுறையில் இருக்கும். பாண்டிச்சேரியில் இருக்கும் போதும் சரி திருநெல்வேலிக்கு வந்து பிறகும் சரி எல்லாக் கோடை விடுமுறையிலும் சில ஆயிரம் கிலோமீட்டர் தூரமாவது பயணம் செய்திருப்பேன். அதிலும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வந்த பிறகு எடுத்துக் கொண்ட பல்வேறு பொறுப்புகள் காரணமாகப் பயணங்களின் தூரம் அதிகமாகி விட்டன. பலரும் விரும்பி ஏற்காத வேலைகளை நான் எடுத்து கொள்வதே பயணங்களின் மீதான விருப்பத்தின் காரணமாகத்தான். பல்கலைக் கழகத்தின் தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்கள் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்றன என்றாலும் எப்போதும் நான் கேரளத்தின் வழியாகப் போகும் வாய்ப்பையே தேர்வு செய்வேன்.
மலையாள எழுத்துக்களை நிறுத்தி வாசிக்கவும் மலையாளிகளோடு வேகம் குறைவாகப் பேசவும் முடியும் என்பது காரணமாக அல்லாமலேயே கேரளத்தின் வனப்பு என்னை ஈர்ப்பதாகவே இருக்கிற்து. நீல நிறமாக இல்லாமல் பச்சை வண்ணத்தில் அலைஅலையாய் நகரும் நதிகளும் குளங்களும் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும் கேரள பூமியை ஒரு முறை பார்த்தவர்கள் திரும்பவும் பார்க்கவே விரும்புவார்கள்.
கேரளத்தின் திருச்சூருக்குப் பத்துக்கும் மேற்பட்ட முறை பயணம் செய்துவிட்டேன் என்றாலும் முதல் பயணம் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது. 1988 ஆம் ஆண்டு திருச்சூரில் நடந்த மார்க்சீய லெனினிய சம்மேளம் ஒன்றில் நாடகம் போடுவதற்காக மதுரையிலிருந்து நண்பர்கள் எட்டுப் பேர் பயணம் போனோம். போடப்போகும் நாடகம் பல்லக்குத்தூக்கிகள். சுந்தரராமசாமியின் கதையை நான் தான் நாடகமாக ஆக்கி இருந்தேன். அந்தப் பயணம் ஒருவிதப் பயத்துடன் கூடிய பயணம். மார்க்சிய லெனிய இயக்கங்கள் ஆபத்தானவை என்ற கருத்தியல் வலுப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த மாநாடு நடந்தது. அத்தோடு அம்மாநாட்டில் கேரளத்தின் வயநாட்டுப் பழங்குடிகளும் அவர்களை வழி நடத்தும் இயக்கமும், அதன் தலைவர்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது கூடுதல் அச்ச உணர்வை உருவாக்கி இருந்தன. ஆனால் அந்த மாநாட்டின் பின்விளைவுகளாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
அந்தப் பயணம் எனக்கு கேரளத்தின் மீது காதலை ஏற்படுத்தி விட்டது. அதிகாலை நேரத்தில் ஒலிக்கும் கோயில் மணிகளும், ஆறுகளில் குளிக்கும் மனிதர்களும், மெல்ல நகர்ந்து செல்லும் படகுகளும் இப்போதும் ஈர்ப்பனவாக இருக்கின்றன என்றாலும் இப்போது கேரளத்திற்குச் செல்வதை விடவும் தமிழ் நாட்டின் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டின் கிராமங்கள் சுத்தமாகத் தங்கள் அடையாளங்களை இழந்து வருகின்றன. இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு கிராமத்திலிருந்து வந்து நகரவாசியான நான் திரும்பவும் சென்று ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு வாரம் தங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தனவும் இல்லாமல் போய்விட்டனவும் எவை என்று எழுதப் பட வேண்டும்.
இல்லாமல் போனதற்காக வருத்தம் மட்டுமே கொள்ள வேண்டும் என்பதில்லை. தொலைய வேண்டியன தொலைந்திருந்தால் அதையும் பதிவு செய்ய வேண்டும் தானே. அந்த வாய்ப்பை அடுத்த கோடை விடுமுறையாவது தர வேண்டும்.

2 comments :

manjoorraja said...

கேரள பயணம் எப்பவுமே சுகமானது தான். தமிழ்நாட்டிலும் பல கிராமங்கள் இன்னும் அதே மண் வாசனையுடன் தான் இருக்கின்றன என்றாலும் கல்வி, நகரமயமாக்கல், இணையம், தொலைக்காட்சிகளின் மூலம் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதும், அடுத்து மிக முக்கியமாக விவசாயிகளில் பலரின் அடுத்த தலைமுறையினர் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலைகளில் ஆர்வம் கொண்டு நகரங்களுக்கு குடிப்பெயர்வதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் கிராமங்களை கொஞ்சம் கொஞ்சமாக அதன் வாசனையை இழக்க செய்து வருகிறது என்பது கசப்பான உண்மை. நல்லதொரு பதிவு

ராம்ஜி_யாஹூ said...

nice sir,thanks for sharing.

You can visit in and around chennai like pettia, tirunankoil, cheranmadevi, kallur, maaranthai.