June 03, 2010

நகரவாசியான கதை

திருநெல்வேலி , கட்டபொம்மன் நகர்,
ஏழாவது தெரு, செந்தில் நகர், மனை எண் 10.
இந்த முகவரிக்கு நான் குடிவந்தது 2002, பிப்ரவரி மாதம் ஆம் தேதி. தனிக் குடித்தனம் தொடங்கிய பின் குடியேறும் எட்டாவது வீடு.

இதற்கு முன் குடியிருந்த ஏழு வீடுகளும் வாடகை வீடுகள். இது சொந்த வீடு.
30-06-1982 இல் எனக்குத் திருமணம் நடந்தது. அதற்கு முன்பே குடும்பம் பாகப்பிரிவினையை முடித்து விட்டது. மே, மாதம் முதுகலைத் தேர்வை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது அண்ணன்கள் இரண்டு பேரும் தனித்தனியாக சமையல் பண்ணத் தொடங்கி இருந்தார்கள். அதற்கு முன்பே நடந்த பாகப்பிரிவினையின் போது தனித்தனியாக எழுதப்பட்ட பாகவஸ்திப் பத்திரங்களில் கையெழுத்துப் போட்டு விட்டுப் போனவன் திரும்ப வீடு வந்த போது யார் வீட்டில் சாப்பிடுவது என்ற சின்னக் குழப்பம் இருந்தது. குடும்பத்தின் தலைவராகவும் வழிநடத்துபவராகவும் இருந்த தாய்மாமன் பெரிய அண்ணனுடன் இருக்க, அம்மாவும் அய்யாவும் இளையவருடன் இருந்தார்கள்.

எனது மனைவி எனக்கு நெருங்கிய சொந்தம் என்று சொல்ல முடியாது என்றாலும், அந்நியம் என்றும் சொல்லி விட முடியாது. எனது அம்மாவும் எனது மனைவியும் ஒரே சாமியைக் கும்பிடும் பங்காளிகள். எங்கள் விவசாயத்திற்கு உதவிடும் வகையில் என் மனைவியின் குடும்பத்தினர் கடன் கொடுத்த போது தங்கள் மகளை எனக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என அவர்கள் நினைத்திருந்தார்கள் என்பது முதலில் தெரிந்திருக்கவில்லை, பின்னர் எனது படிப்பைக் காரணம் காட்டி எனது மாமா கேட்ட கடனையும் தந்தபோது இந்த நோக்கம் இருந்ததை மாமா புரிந்து கொண்டு அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தார் என்பதைப் பின்னர் அவரது பேச்சிலிருந்து புரிந்திருந்தேன்.

இரண்டாகப் பிரிந்திருந்த குடும்பம் எனது திருமணத்திற்குப் பிறகு மூன்றாகும் என்பது நிச்சயம். மூன்று குடும்பம் என்றாலும் மூன்று வீடுகள் என்ற நிலை இல்லை. எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் வீடு என்பது சமையல் கட்டு தான். ஒரே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உட்கார முடியாது. பெரும்பாலான நேரங்களில் வீட்டு முன் உள்ள வெளியில் அமர்ந்து தான் நாங்கள் சாப்பிடுவோம். என்றாலும் அந்த வீடுகள் சொந்த வீடுகள்.

யாதும் ஊரே ; யாவருங்கேளிர் என்று புறநானூற்றுத் தமிழ்க் கவி கணியன் பூங்குன்றனின் வாக்கியம் மற்ற தமிழர்களுக்குப் பொருந்துகின்றதோ இல்லையோ நிச்சயமாக மாதச் சம்பளம் வாங்கும் தமிழர்களுக்குப் பொருந்தும். எந்த நேரத்திலும் தூக்கி அடிக்கப்படும் வேலையில் இருக்கும் மாதச் சம்பளக்காரர்கள் என்ற தனியொரு வர்க்கம் தோன்றிய பின்பு தான் வாடகை வீடு என்ற கருத்தும் உண்டாகி இருக்க வேண்டும். மாதச்சம்பளக்காரர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் வாடகைக்கென வீடுகள் இல்லை என்பதை நினைத்துக் கொண்டால் இது புரியலாம்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னது முழுமையாகச் சரியானதா என்று தெரியவில்லை. ஆனால் வாடகை வீடு அமைவது இறைவன் கொடுக்கும் வரம் என்பதைத் தொடர்ந்து வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒத்துக் கொள்ளவே செய்வார்கள். வாஸ்து பகவான் எப்போதும் சொந்த வீட்டுக்காரர்களுக்கு மட்டும் தான் உதவி செய்வான்; வாடகைக்குக் குடியேறுபவர்களுக்கு எப்போதும் உதவ மாட்டான் என்பதே பலரது அனுபவம். வீட்டின் சொந்தக்காரர் கீழே குடியிருக்க, அந்த வீட்டின் மாடியில் ஒருத்தர் வாடகைக்குக் குடி போகக் கூடாது என்பது வாஸ்து முனிவர் எழுதாமல் விட்ட ஷரத்து. மாடி வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரரின் வீட்டுக் குழந்தையின் கொலுசுச் சத்தத்தைக் கூடச் சீனி வெடிச் சத்தம் என்றே காது சொல்ல, ஆணி அடிக்கும் காரியம் எல்லாம், வீட்டை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும் கைங்கரியம் என்று தான் சொந்தக்காரர் நினைப்பார்.

இருபது வருடங்களுக்கு முன்னால், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தவுடன் முதன் முதலில் குடிபோன அந்த வீட்டில் பலவிதமான வசதிக்குறைவுகள் இருந்தது என்றாலும், அங்கு தான் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் குடியிருந்தோம். வீட்டின் சொந்தக்காரர்கள் அதிகம் தொல்லை தராதவர்கள் என்பதை விட அந்த வீடு இருந்த பகுதி முழுமையும் நகரம் என்று சொல்ல முடியாத பகுதி என்பது தான் அந்த வீடு பிடித்துப் போனதற்கு முதல் காரணம். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா தச்சபட்டி என்னும் சிறிய கிராமத்திலிருந்து விடுதிகளில் தங்கிப் படித்து விட்டு நகரங்களில் வாழ வேண்டிய நெருக்கடியைச் சந்தித்த எனக்கு எப்போதும் நகரங்களின் மையப்பகுதியில் வீடு பார்த்துக் குடியேறுவது விருப்பமானதாக இருந்ததில்லை. இந்தக் காரணத்தினாலேயே வாடகைக்கு வீடுகள் தேடியபோதும் சரி, சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளலாம் என மனை தேடிய போதும் சரி, நகரத்தின் மையத்தை விட்டு விலகிய விரிவாக்கப் பகுதிகளையே என் மனம் நாடும்.

வாடகை வீட்டு வாசம் கல்யாணம் ஆன ஒரு வருடத்திலேயே தொடங்கி விட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ’மணமான ஆய்வாளர்களுக்கான குடியிருப்பு’ வாசம் தான் முதல் வாடகை வீடு, வீட்டு உரிமையாளர்கள் தரும் வாடகை வீட்டிற்கான அனுபவங்கள் அதிகம் இல்லாத வாசம். மகள் சிநேகலதா பிறந்து மாதக்கணக்கு மூன்று முடிந்தவுடன் அங்கே வந்து விட்டோம். டாக்டர் பட்ட ஆய்வை மூன்று வருடத்தில் முடித்த போதும் நான்கு வருடங்கள் அங்கே வாசம். பல்கலைக்கழகம் குறைந்த வாடகையைப் பெற்றுக் கொண்டு சிறிய குடும்பத்திற்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்திருந்தது.

நாகமலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த அந்தக் குடியிருப்பு கோடைகாலத்தில் மட்டும் கடும் கோடையின் தகிப்பைத் தாங்க முடியாது. சூரியனின் வெப்பத்தை சாப்பிட்டு விட்டுத் திருப்பி அனுப்பும் பாறைகளின் வெப்பம் அனல்காற்றாக வீசும். என்றாலும் வீடுகளின் முன்னால் வரிசையாக வைக்கப்பட்டிருந்த வேப்பமரங்கள் தரும் நிழல் ஆசுவாசம் அதை மறக்கச் செய்து விடும். ஆய்வேட்டைச் சமர்ப்பித்து விட்டு அமெரிக்கன் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த பின்பும், ஆய்வேட்டின் மீது வாய்மொழித் தேர்வு முடியும் வரை குடியிருந்தேன். மதுரை நகரத்து இலக்கியவாதிகளும் நாடகக்காரர்களும் இடதுசாரி அரசியல் சார்ந்த நண்பர்களும் அந்த வீட்டு முன்னிருந்த வேப்ப மர நிழலில் உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள். வெறும் கதை, கவிதை வாசித்துக் கொண்டிருந்த என்னை அரசியல் சார்ந்த வாசகனாகவும் செயலாளியாகவும் மாற்றிய வீடு அது. மு.ராம்சாமி தஞ்சாவூரில் இருந்தார். அவரில்லாத நிலையில் இந்த வீட்டிலிருந்து தான் நிஜநாடக இயக்கத்தின் தீவிரமான செயல்பாடுகளைக் கவனித்தேன்.

அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராக இரண்டாவது வருடமும் தொடர்ந்த போது கே.கே. நகரில் ஒரு ஒண்டுக் குடித்தனவாசியாக மாறிய போதுதான் வாடகை வீட்டின் வாசம் உறைக்க ஆரம்பித்தது. படுக்கையறை, சமையலறை, வாசிப்பறை என எல்லாமும் அந்த ஒரே அறையில் தான்.

அந்த வீடு நண்பர் சுந்தர் காளி மூலம் கிடைத்தது. வீட்டின் உரிமையாளரும் கொஞ்சம் இலக்கிய ஆர்வம் கொண்டவர். என்னால் தர முடிந்த இருநூற்றைம்பது ரூபாய் வாடைக்கு கே.கே. நகர் போன்ற உயர் மத்தியதர வர்க்கப் பகுதியில் ஒண்டுக்குடித்தனப் பகுதி கிடைப்பதே சுலபமல்ல என்பதைப் பின்னர் உணர்ந்தேன். வீட்டில் தனியான அறைகள் இல்லை என்பது மட்டும் தான் குறை. கழிப்பறை, குளியலறை தனியாக இருந்தது. குடிதண்ணீர்ப் பிரச்சினை கிடையாது. சாயந்தரம் நண்பர்கள் வந்து விடுவார்கள். இலக்கியம்,சினிமா, அரசியல், நாடகம் எனப் பேசிக் கொண்டிருந்த நாங்கள் சுதேசி நாடகக் குழுவை அந்த வீட்டின் மொட்டை மாடியில் தான் ஆரம்பித்தோம்.

மொட்டை மாடியில் இருந்த ஒற்றை அறையில் இலங்கையிலிருந்து வந்து ஈழத்தமிழ் குடும்பம் ஒன்று இருந்தது. குடும்பம் என்று சொல்ல முடியாது. மீனா என்ற அந்தப் பெண் அங்கே இருந்த அரசுக் கல்லூரியிலும், அவளது தம்பி சுதன் நான் வேலை பார்த்த அமெரிக்கன் கல்லூரியிலும் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் அந்த நண்பர் குறைந்த வாடகையில் அந்த மொட்டை மாடிப் பகுதியை வாடகைத் தந்து இருந்தார். அந்த நண்பரின் பெயர் அரவிந்தன்.

தெலுங்கு பேசுவதில் ஆர்வம் கொண்ட அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் தெலுங்கு பேசாதவர்களாக இருப்பதில் ரொம்ப வருத்தம். அநேகமாக அவர்கள் வீட்டில் குடி வருவதற்காக தெலுங்கு பேசும் நாய்க்கர் சாதியைச் சேர்ந்தவன் எனப் பொய் சொல்கிறேனோ என்று கூடச் சந்தேகப் பட்டிருக்கலாம். அரவிந்தனின் அப்பா பொறியாளர்; பொறியாளராக இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே இறந்து போனவர். அவரது விதவை மனைவி இரண்டு மகள்கள், இரண்டு மகன்களோடு இருந்தார். அந்தக் குடும்பத்துக் கதை விரியக் கூடிய கதை. அவரது மகள்களும் மகன்களும் அழகாக இருந்தார்கள் என்பதை விட அவர்கள் எல்லாருக்கும் அ- வில் ஆரம்பிக்கும் பெயர்களோடு இருந்தார்கள் என்பது இப்போதும் நினைவில் இருக்கிறது. நண்பர் அரவிந்தனின் அக்கா பெயர் அருணா; தங்கை அமுதா; தம்பி அருண். அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு வந்த பிறகு இரண்டு முறை அந்த வீடு உள்ள தெருவிற்குச் சென்றேன். அந்த வீட்டில் இருந்த யாரையும் சந்திக்க முடியவில்லை. நண்பர்களிடம் விசாரித்த போதும் சரியான தகவல் கிடைக்கவில்லை. அந்த வீட்டை வாங்கி வேறு யாரோ குடியிருக்கிறார்கள். என்ன நடந்திருக்கும் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு?
வாடகை வீடுகளில் அதிக நாட்கள் குடியிருந்த வீடு என்றால் 46, அங்காளம்மன் நகர் வீடு தான். பாண்டிச்சேரி கடலோரக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முத்தியால் பேட்டையின் ஓரத்துத் தெரு ஒன்றின் மாடி வீடு.

புதுச்சேரி, முத்தியால் பேட்டை, அங்காளம்மன் தெருவை நகரத்தின் பகுதி என்று சொல்ல விடாமல் தடுத்தது அங்கிருந்த தென்னந் தோப்புகளும், எருமைக் கூட்டமும், மீன் வாடையும் தான். காலையில் நடைப்பயிற்சிக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் ஐந்து தென்னந்தோப்புகள் வந்து விடும். எப்போதாவது கொஞ்சம் பாதை விலகிச் சென்றால் மீனவர் குப்பங்களுக்குள் நுழைந்து கருவாட்டை மிதிக்காமல் செல்லப் படாதபாடு படவேண்டும். கடற்கரை மணலையும் கடல் அலைகளையும் ரசிக்கலாம் என்றால் அதுதான் அங்கே முடியாது. கடலோர குப்பத்து வாசிகள் கடற்கரை மணல் பரப்பைத் தான் தங்கள் கழிப்பிடங்களாகக் கருதிக் குந்தியிருப்பார்கள். பூட்டிய கக்கூஸில் காலைக் கடன் கழித்துப் பழகிப் போன நடுத்தர வர்க்க மனத்திற்குப் பரந்த வெளியில் மலஜலம் கழிப்பது சட்ட விரோதமாகத் தோன்றுவது ஆச்சரியமான ஒன்றல்ல.

வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருக்க, மாதந்தோறும் வாடகையை அவரது வங்கிக் கணக்கில் சேர்த்து விடும் ஒப்பந்தம் செய்து கொண்டு வாடகை வீட்டில் குடியிருக்கச் சொன்னால், எனக்குச் சொந்த வீடு வேண்டாம் என்று தான் சொல்வேன். இரண்டுவிதமான வீட்டிலும் வாடகைக்கு குடியிருந்த அனுபவம் எனக்கு உண்டு.

பாண்டிச்சேரியில் முத்தியால் பேட்டை வீடு மட்டும் அல்ல; லாஸ்பேட்டை,ராஜாஜி நகர் வீடுகளும் அப்படித்தான். ராஜாஜி நகரில் இரண்டரை வருடம் இரண்டு வீடுகளில் இருந்தோம். பாண்டிச்சேரியின் இலக்கியவாதிகளாக அப்போதிருந்த பலரும்- கி.ரா., பஞ்சாங்கம், ரவிக்குமார், ராஜ்கௌதமன், அருணன், லெனின் தங்கப்பா, விசாலம், பிரதிபா ஜெயச்சந்திரன், மதியழகன் என ஒரு பெருங்கூட்டம் லாஸ்பேட்டின் பல வீதிகளில் இருந்தார்கள் அத்தோடு பல்கலைக்கழகத்தில் என்னுடன் வேலை பார்த்த ஆசிரியர்கள் பலரும் அங்கே தான் இருந்தார்கள். நடுத்தர வர்க்க அடையாளங்கள் அதிகம் கொண்ட பகுதி. பாதிப்பேர் சொந்த வீட்டுக்காரர்கள்; பாதிப்பேர் வாடகை வீட்டுக்காரர்கள் என்ற கலவைதான் நடுத்தர வர்க்கப் பகுதியின் முக்கியமான அடையாளங்கள் என்பது எனது கணிப்பு.

மாதத்தின் முதல் வாரத்தில் வாடகையைக் கொடுத்து விடுவதோடு வீட்டைப் பற்றி அதிகம் கவலைப் படாமல் கையை வீசிக் கொண்டு சொந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் வாய்ப்புடைய வாடகை வீட்டில் குடியிருக்கும் அனுபவம் இனிமையானது. மின்சார உபயோகத்திற்கான தொகையை விடக் கூடுதலான தொகையை வீட்டுச் சொந்தக்காரர் கேட்டுப் பெற்றுக் கொள்வார் என்றாலும், கரண்ட் பில் கட்ட வரிசையில் நிற்க வேண்டிய நேரம் மிச்சம். அவர் கூடுதலாகக் கேட்ட தொகையைச் சத்தம் போடாமல் கொடுத்து விட்டு வேலைக்குப் போய் விடலாம். வீட்டு வரி கட்டும் அலுவலகத்தில் போய்க் காத்திருக்க வேண்டியதில்லை. அப்போதைக்கப்போது ஏற்படும் ஓட்டை உடைசல்கள், மின்சாரப் பழுதுகள் என மராமத்து வேலைகளைச் செய்யக் கூலி ஆட்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த அனுபவத்தை திருநெல்வேலியில் இரண்டாவதாக வசித்த எம்.எல்.பிள்ளை நகர் வீடு தந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு வங்கி அதிகாரி. மாறுதலில் பம்பாய் போய்விட்டுத் தனது பிள்ளைகள் படிப்புக்காகச் சென்னையிலேயே தங்கி விட்டார்.

அவருக்காக அந்த வீட்டைச் சொந்த வீட்டுக்காரன் போலக் கவனித்துக் கொண்டிருந்தேன் என்றாலும் அவரது மனைவிக்குத் திருப்தியாக இல்லை. நான் வீடு கட்டிச் சொந்த வீட்டிற்குப் போகப் போகிறேன் என்பதை அறிந்து கொஞ்சம் கோபமாகவே வந்து வாழ்த்தி(!) விட்டுப் போனார். ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் சொந்த வீட்டுக் கனவு விரியத் தொடங்கிய ஓராண்டிற்குள் அதை நிறைவேற்றி விட்டேன்.

எனது சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றிக் கொள்ள விரும்பி மனைகள் தேடிய போது நகரத்தின் மையப்பகுதிகளில் இருந்த எந்த இடமும் மனதிற்கு ஒப்பவில்லை. அத்துடன் அவையெல்லாம் எனது சேமிப்பையும், எனக்குக் கிடைக்கக் கூடிய கடனையும் ஒரே வாயில் முழுங்கி விட்டுச் சொந்த வீட்டுக் கனவைக் கனவாகவே ஆக்கி விடும் என்று தோன்றிய போது தான் கட்டபொம்மன் நகர் விரிவாக்கப் பகுதிக்குள் நுழைந்தேன். ஒரு மழைக்காலத்தின் மாலை நேரம் தனது கண்காணிப்பில் இருந்த பல மனைகளை அந்தக் கட்டிட ஒப்பந்ததாரர் காட்டியபோது கட்டபொம்மன் நகர் வடபகுதியின் கிழக்குக் கடைசியாக இருந்த செந்தில் நகர் மனை பிடித்துப் போனது.

நகரங்களின் விரிவாக்கப்பகுதி என்பது இந்திய நாகரிக வளர்ச்சியில் ஒரு நூற்றாண்டு மனிதர்களின் அடையாளம். அதன் சிறப்பான அடையாளம் எதுவெனக் கேட்டால் பெயர்கள் இல்லாத தெருக்கள் என்று தான் சொல்வேன். தெருக்கள் அல்லது வீதிகளுக்கு நபர்களின் பெயர்களை வைக்க முடியாமல் எண்களின் பெயரால் அழைக்கப்படும் சாலைகள் பெயர்களாக மாறி ஒரு இடத்தின் அடையாளங்களாக ஆக்கப்படுகின்றன என்றால் அங்கே நகர நாகரிகம் வந்து விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கமே கட்டிக் கொடுத்த காலனிகளானாலும் சரி, மக்களே உருவாக்கிக் கொண்ட நகர்களானாலும் சரி ஏழாவது முதன்மைச்சாலைக்குள் நான்காவது குறுக்குத் தெருக்களில் தான் வீட்டு எண்கள் இருக்கின்றன.

ஆறு மாதத்தில் வீட்டைக் கட்டிக் குடி வந்த போதுதான் வாடகை வீட்டில் இருந்த பல வசதிகள் சொந்த வீட்டில் கிடையாது என்பது புரிந்தது. சொந்தமாக வீடு எழும்பிக் கொண்டிருந்த வேகத்தில் சாலைகள் இல்லை என்பதும், வீட்டிற்குக் குடி தண்ணீர் வருவதில் சிக்கல்கள் இருக்கின்றன என்பதும் நினைவுக்கு வரவே இல்லை. வீட்டிலிருந்து நகரப் பேருந்தைப் பிடித்து வேலைக்குப் போக வேண்டும் என்றாலும் கடைகளுக்குச் சென்று சாமான்கள் வாங்க வேண்டும் என்றாலும் குறைந்தது 20 நிமிடங்கள் நடந்தாக வேண்டும் என்பதும் முதலில் உறைக்கவே இல்லை. பக்கத்தில் வங்கி இல்லை பாளையங்கோட்டைக்கு நாலு கி.மீ.தூரம் போக வேண்டும் ; தபால் அலுவலகத்திற்கு; மார்க்கெட்டிற்கு; தொலைபேசி அலுவலகத்திற்கு என ஒவ்வொன்றிற்கும் நான்கு கி.மீட்டர் போக வேண்டும் என்றால் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் செலவு என்னாகும் என்ற கணக்கு எல்லாம் அப்போது கண் முன் இல்லை. கண் முன் இருந்ததெல்லாம் சொந்த வீட்டில் பால் காய்ச்ச வேண்டும் என்பது மட்டும் தான்.

மாதச்சம்பளம் வாங்கத் தொடங்கிய மூன்றாவது வருடத்தில் ஆரம்பித்த சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றிக் கொள்ளாமல் ஓய்வு பெற்ற கதைகள் வேண்டுமென்றால் பல நகரங்களில் இருக்கும் விரிவாக்கப் பகுதிகளுக்குத் தான் ஒருவர் வர வேண்டும். அவர்களின் கதையோடு கிராமப் புறங்களிலிருந்து முதல் தலைமுறைப் படிப்பாளிகளாக நகரத்துக்குக் குடி வந்து மாதச் சம்பளக்காரர்களாக மாறி, பி.எப். அட்வான்ஸில் பிள்ளைகளைப் படிக்க வைத்து விட்ட சந்தோசத்தில் ஐம்பது வயதைத் தாண்டியவர்களின் கதைகளையும் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். இருவகைப் பட்ட கதைகளோடு வங்கிகள் தரும் கடன்கள், அதை வாங்கும் முறை, தவணை கட்டும் முறைகள், தவணை தவறினால் ஏற்படும் மன உளைச்சல் எனப் பல தகவல்களையும் விரிவாக்கக் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். வேலை பார்த்த காலங்களில் சொந்த வீட்டைப் பற்றி யோசிக்காமல் இருந்து விட்டுக் கடைசி காலத்தில் நாலரை செண்டில் ஒரு மனை வாங்கிச் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றிக் கொண்ட ஓய்வூதியதாரர்களின் அனுபவங்களும் கூடுதல் போனஸாக இங்கு கிடைக்கும்.

ஓய்வூதியதாரர்களின் கதைகள் மட்டும் அல்ல; அவர்களது செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் சந்திக்க வேண்டிய இடம் விரிவாக்க நகர்களில் தொங்கும் நலச்சங்கப் பலகையில் உள்ள பெயர்களைத் தான். நான் கட்டபொம்மன் நகரில் குடி வந்த போது எனக்குத் தெரிந்த நபர்கள் என்று ஒருவரும் இல்லை. ஒரு மாலையில் நாலைந்து பேர் என் வீட்டின் முன் வந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவராக எமது பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சதக் அப்துல்லா கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முகம்மது நாசர் அவர்களும் இருந்தார்.

பார்க்கும் பணி சார்ந்து இருவரும் ஒரே நிலைப்பட்டவர்கள் என்பதால் அவர் சொன்னவுடன் சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஒத்துக் கொண்டேன். ஒத்துக் கொண்டு கலந்து கொண்ட என்னை அனைவரும் சேர்ந்து பொருளாளர் பதவியில் அமரச் செய்து விட்டார்கள். நான்கு ஆண்டு காலம் நான் அந்தப் பதவியில் இருந்தேன். வழக்கமாக காலையில் நடக்கும் பழக்கம் இருந்த எனக்கு முதல் வருடம் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களின் சனி, ஞாயிறுகளில் அதற்கும் விடுமுறை கொடுக்க வேண்டியதாக இருந்தது. இரண்டு மூன்று பேராகக் கிளம்பி சங்க உறுப்பினர் சந்தாவை வசூலிக்கக் கிளம்பி விடுவோம்.

சங்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஓய்வு பெற்றவர்களாக இருக்க நான் மட்டும் பணியில் இருந்து கொண்டு பணியாற்றினேன். அவர்கள் செல்லும் இடங்களுக்குப் பல நேரங்களில் அவர்களுடன் என்னால் செல்ல இயலாது. அவர்கள் எடுத்துச் செய்யும் வேலைகளில் முழுமையாக ஈடுபட இயலவில்லை. எனவே ஒரு குற்றவுணர்வோடு தான் பொருளாளராகப் பணியாற்றினேன். எனவே அதிலிருந்து விடுபடுவது என முடிவு செய்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் விலகினேன். ஆனால் ஒரு பொது நலச் சங்கத்தின் இருப்பும் பணிகளும் இன்னும் தேவையாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
திரும்பவும் கணியன் பூங்குன்றனின் அந்த வரிகளை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இப்போது எனது ஊர் கட்டபொம்மன் நகர்; எனது உறவினர்கள் இங்கு குடியிருக்கும் ஒவ்வொருவரும் தான். சாதிகளைக் கடந்து, மதங்களை மறந்து நமது உறவினர்களையும் நண்பர்களையும் தேடிக் கொள்ள விரும்பும் ஒருவருக்கு விரிவாக்க நகரங்கள் இனிமையான வெளிகள். அதில் நலச்சங்கம் ஒன்றும் இருந்து விட்டால் பாதுகாப்புக்கும் சேவைக்கும் உத்தரவாதமும் உண்டு.

2 comments :

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு.

பதிவை விட எனக்கு முதல் இரண்டு வரிகள் தான் மிகவும் பிடித்தது.

பத்து ஆண்டுகளாக இணையம் பயன் படுத்தி வருகிறேன். யாகூ, ரெடிப்ப், கூகிள் , முகபுத்தகம் காலம்.

என் பார்வையில் முதல் முதலாக வீடு முகவரியை நேர்மையாக வேலிடிட்ட முதல் பதிவர் என்றே சொல்வேன் உங்களை.

வாழ்த்துக்கள்.
This is what the real development in the cyber world, Where virtual life meets real life.

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு.

பதிவை விட எனக்கு முதல் இரண்டு வரிகள் தான் மிகவும் பிடித்தது.

பத்து ஆண்டுகளாக இணையம் பயன் படுத்தி வருகிறேன். யாகூ, ரெடிப்ப், கூகிள் , முகபுத்தகம் காலம்.

என் பார்வையில் முதல் முதலாக வீடு முகவரியை நேர்மையாக வேலிடிட்ட முதல் பதிவர் என்றே சொல்வேன் உங்களை.

வாழ்த்துக்கள்.
This is what the real development in the cyber world, Where virtual life meets real life.