May 22, 2010

அமானுஷ்யத்தின் அடிப்படைகள்:தளவாய் சுந்தரத்தின் சாவை அழைத்துக் கொண்டு வருபவள்

கடவுள் அல்லது தெய்வம் உண்டா? இல்லையா? என நடக்கும் விவாதம் போலவே பேய்கள் அல்லது பிசாசுகள் உண்டா? இல்லையா? என்ற விவாதமும் தொடரும் நிகழ்வாகவே இருக்கிறது. இவ்விரு விவாதங்களுக்கும் இடையில் பலவிதமான ஒற்றுமைகள் இருந்த போதிலும் அடிப்படையான வேறுபாடும் உண்டு.

கடவுள்கள் பற்றிய விவாதம் ஆன்மீகமாக மாறி, தத்துவங்களை உருவாக்கி அறிவார்ந்த எல்லைக்குள் விரிவதாகப் படித்தவர்களும் பாமரர்களும் நம்புகின்றனர். பேய்கள் பற்றிய விவாதங்களுக்குள் அறிவார்ந்த தளத்தினர் நுழைவது குறைவு. ஆனால் பாமரர்கள் ஆர்வமாக அந்த விவாதத்திற்குள் நுழைந்து கிளர்ச்சி அடைந்து கொண்டே இருப்பதைக் காணலாம்.

ஒருவிதத்தில் இரண்டுமே கிளர்ச்சியூட்டும் விவாதங்களே என்றாலும், தெய்வங்கள் பற்றிய விவாதங்களின் முடிவில் தேடுதலும், தேடுதலின் முடிவில் கண்டடைதலும், கண்டடைந்தாக நம்பி ஐக்கியமாதலும் முக்கியப் பயணமாக அமையும். ஆனால் பேய்கள் பற்றிய விவாதத்தில் தேடுதல் இல்லாமல், விலகுதலே நோக்கமாக அமையும்.

கடவுள் அன்பு மயமானது என நம்பும் மனிதர்கள்,கடவுளைப் பார்க்க விரும்புகிறார்கள்; அதனிடம் எதையாவது கேட்க விரும்புகிறார்கள்; கேட்டதற்குப் பலனாக எதையாவது தரக்கூடும் எனவும் நம்புகிறார்கள். கடவுள் தருவதை வரம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் மனிதர்கள் பேய்களைப் பார்க்க விரும்புவதில்லை; அருகில் வந்து விடக்கூடாது என்பதற்காக விலக்குமாறு, செருப்பு போன்ற பொருட்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால் அருகில் வராது எனக் கருதிப் பக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். அதையும் தாண்டி பேய்களைப் பார்த்து விட்டால், தன்னை விட்டு விலகிப் போய்விடும்படி கெஞ்சவே செய்கிறார்கள்.

விஞ்ஞானம் இரண்டையும்- கடவுளையும், பேய்களையும் - ஒன்றாகவே வகைப்படுத்திப் பேசுகின்றது. மனித மனத்தை ஆய்வு செய்யும் உளவியல் விஞ்ஞானம் இரண்டிற்கும் வெவ்வேறு மனித உணர்வுகள் காரணம் எனக் கூறுகின்றது. கடவுளைத் தேடுதலின் பின்னணியில் அன்பு, இரக்கம், பெருமிதம், தன்னை அழித்தல், ஒப்புவித்தல் எனப் பலவிதமான உணர்வுகளும் காரணங்களும் இருக்க, பேய்களை ஒதுக்குதலின் பின்னணியில் அச்சம் என்னும் ஒரே உணர்வே காரணமாக இருக்கிறது எனச் சொல்கின்றனர். தானோ, தன்னைச் சார்ந்தவர்களோ, தவறுதலாகச் செய்த காரியத்தால் அகால மரணமடைந்தவர்களே பேய்களாகவும், பிசாசுகளாகவும் அலைவார்கள். அவர்களிடம் பலி வாங்கும் உணர்வு அணையாத பெருநெருப்பாகப் பொங்கிக் கொண்டே இருக்கும் என நம்புகிறார்கள். தனக்கு அநீதி இழைத்தவர்களுக்குரிய தண்டனையை வழங்கும் வரை அந்தப் பேய்களுக்கு அழிவு வருவதில்லை. தண்டனையை உரியவர்களுக்கு வழங்காவிட்டால், அவர்களின் வாரிசுகளுக்கும் கூடத் தண்டனையை வழங்கும் பொருட்டுச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் என அந்த நம்பிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய நம்பிக்கைகளும், அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றிய சிந்தனைகளும் இன்றும் கிராமங்களில் அதிகமாகவே இருக்கின்றன. கிராமங்களோடு ஒப்பிட்டால், நகரங்களில் அவ்வளவாக இல்லை என்று சொல்லலாம். இருட்டைத் தனது வாழ்வெளியாகக் கொண்டுள்ள பேய்களை எங்கும் எரிந்து கொண்டே இருக்கும் மின்சார விளக்குகளும், அலைந்து கொண்டே இருக்கும் வாகனங்களும் தூர விரட்டி விட்டன என்று கூடச் சொல்லலாம். இருட்டு மட்டுமே பேய்களின் உறைவிடம் என்பதை உளவியல் நம்புவதில்லை. குற்றம் செய்த தனி மனித மனமே பேய்களின் இல்லம் என்பதாகவே அது உறுதி செய்கிறது.

மனம் அறிந்து தான் செய்த குற்றத்திற்காக- அளித்த தண்டனைக்காக- பலி வாங்க விரும்பும் பேய் அவர்களது மனத்தையே இருப்பிடமாகக் கொள்கிறது என்பது உளவியல் தரும் விளக்கம். அடிமனத்தில் தங்கி இருக்கும் அக்குற்ற உணர்வு தனிமையில் இருக்கும் போது மேலெழும்பிப் பயணம் மேற்கொள்கிறது. அதன் காரணமாக அன்றாட நடவடிக்கைகளில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். அதனையே பேய் பிசாசுகளின் செயலாக மனித மனம்- குற்ற உணர்வில் இருக்கும் மனித மனம் - நம்புகிறது.

விஞ்ஞானம் தரும் விளக்கம் போல வெளிச்சம் போட்டுப் படைப்பாளிகள் பேசுவதில்லை என்றாலும், அத்தகைய பாத்திரங்களின் மன நிலையை மென்மையாகக் கீறி விளக்கம் தரும் நிலையைச் செய்பவனே சிறந்த படைப்பாளியாக- சமகாலப் படைப்பாளியாகக் கருதப்படுகிறான். திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடிக் கிராமம் ஒன்றில் பிறந்து சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் தளவாய் சுந்தரம் எழுதியுள்ள சாவை அழைத்துக் கொண்டு வருபவள் என்ற கதை, உளவியல் விஞ்ஞானத்தை முன் மொழியும் தன்மையில் எழுதப் பட்டது என்றாலும், கிராமத்து மனிதர்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்காமல் புனைகதையாக்கி உள்ளது.

தனது சந்ததியில் ஒருவர் செய்த குற்றம் தன்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது என நம்பும் பெரியவர் ஒருவரோடு படித்த இளைஞன் நடத்தும் உரையாடல் வடிவில் அமைந்துள்ள அக்கதை பேய்கள் பொய்யா? புனைவா? என்ற கேள்விக்குள் செல்லாமல், மருத்துவ அறிவின் மீது நம்பிக்கை வைக்கும் நிலையைச் சொல்கிறது.

விதவையாக இருந்த பெண்ணொருத்தி தனது உடல் இச்சையைச் சாதியில் கீழ் அடுக்கில் இருக்கும் சாம்பானோடு தீர்த்துக் கொண்டாள் என்பதற்காக அவளது தமையனால் பட்டப்பகலில் நீரில் மூழ்கடித்துக் கொள்ளப்படுகிறாள். அந்தத்தண்டனைக்குப் பலி வாங்க நினைத்து அந்த வம்சத்து ஆண்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறாள் எனக் கதைக்களனை அமைத்துத் தனது கதையை எழுதியுள்ள முறை - அதில் நடத்தும் உரையாடல் வடிவம் மூலம்- கதையை நிகழ்காலக் கதையாக ஆக்கியுள்ளார்.

சாவை அழைத்துக் கொண்டு வருபவள் என்ற அந்தக் கதையையே தனது சிறுகதைத் தொகுதியின் தலைப்பாக ஆக்கி வெளியிட்டிருக்கும் இளம் எழுத்தாளரான தளவாய் சுந்தரம் கதையை நகர்த்தும் முறை தேர்ந்த கதை சொல்லியின் லாவகத்தை கொண்டிருக்கிறது. நம்பிக்கையுடன் இருக்கும் பழைய சமூகத்து மனிதனின் பய உணர்வைத் துல்லியமாகக் காட்டியுள்ள அவர் மொழி பெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு ஒன்றுக்கும் தொகுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். சாவை அழைத்துக் கொண்டு வருபவள் என்னும் நீண்ட தலைப்பு கொண்ட அக்கதையில் தொடங்கி விரியும் நிகழ்வுகள் சிலவற்றைக் காணலாம்:

ஐயாக்குட்டி மாமா, ஒரு வருடத்திலோ, இரண்டு வருடத்திலோ மரணம் நிகழ்ந்திருக்கும். அதற்கு மேல் தாக்குப்பிடிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. எனக்குப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. கடைசி காலத்தில் சேற்றை வாரிப் பூசிக் கொண்டதுபோல் இப்படிச் செய்திருக்க வேண்டாம்.
“ ம்ம்ம்” “ நாண்டுக்கொண்டு செத்துப் போனான் என்று கேட்பதற்கு நல்லாவா இருக்கும்?” “ ஆனால் அப்படி அல்ல”
“ பின் எப்படி எடுத்துக் கொள்ள முடியும். மருந்து சாப்பிடும் அளவுக்கு என்னதான் நடந்து விட்டது. இரண்டு குழந்தைகள். புருஷனை இழந்த தாய். நீங்களும் போய்ச் சேர்ந்தால் வெள்ளைச் சேலை பெண்கள் இரண்டுபேர் வீட்டிலிருப்பார்கள்” “நான் சொல்ல வந்தது அதையல்ல” ############

“ பின் என்ன செய்யச் சொல்கிறாய்.எனக்கு இது தேவைதானா. அறுபத்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது. நான் பிறந்து எவனாவது ஒரு குற்றம் சொல்ல முடியுமா. அவள் மீண்டும் வரும் போது கேட்கலாம் என்றிருக்கிறேன்”

“யாரு?” ” சாவை அழைத்துக் கொண்டு வருபவள்”
“என்ன சொல்றீங்கன்னே புரியலை”
“ எப்படி புரியவைக்க முடியும். ஆனாலும் நான் அவளிடம் சொல்வேன். இந்த முறை நான் சாக விரும்பவில்லை. நாண்டுக் கொண்டு செத்தான் என்ற அவப்பெயர் எனக்கு வேண்டாம்” “ காலையில் யாரோ வந்தாங்கன்னு சொன்னீங்களே?”
“ ஆமாம். கொலுசு சப்தம் கேட்டபோது வராண்டாவில் யாரோ நடந்து போகிறார்கள் என்று நினைத்தேன். நர்ஸுகள் அடிக்கடி கொலுசு சப்திக்க நடந்து போவார்கள். அறைக்குள் மரணவாடை நுழைவதை உணர்ந்த போதுதான் அவள் வருகிறாள் என்று தெரிந்து கொண்டேன். ############

“ எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. யாரோ ஒரு பொண்ணு வந்து நீங்க அமாவாசையில் செத்துப் போவீங்க சொல்றது. அதுவும் இந்த விஞ்ஞான யுகத்தில்”

“ யாரோ ஒரு பொண்ணு இல்லை அவள். நான் அவளை பலமுறை பார்த்திருக்கிறேன். அந்த ஒவ்வொரு முறையும் தெய்வங்களின் துணை தான் அவளிடமிருந்து காத்தது. உங்களுக்குப் புரியாது. நீங்கள் விஞ்ஞானத்தில் நம்பிக்கை கொண்டு இது எப்படி நிகழ முடியும் என்று கேட்பீர்கள். ############

“ முதலில் நீங்க அவளை எப்பப் பார்த்தீங்க?” “ ஒரு வெள்ளிக்கிழமை இரவு நடுஜாமம் இருக்கும் அந்த சம்பவத்திற்குப் பின்னாடி ஜாதகத்தை கொண்டு போய் கணபதியாபிள்ளையிடம் காண்பித்தேன்…..
இருபத்தியொன்றாவது வயதில் ஒரு அமாவாசை இரவு உனக்கு கண்டம் இருக்கிறது. ஆனால் நீ கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சாவு உனக்கு இணையான கோட்டில் உன்னுடன் வந்து கொண்டேயிருக்கும் என்று சொன்னார்”

அந்த வாரம் நானும் கணபதியாபிள்ளையும் வீட்டிற்குத் தெரியாமல் அவருக்குத் தெரிந்த ஒரு மலையாள மாந்திரீகரைப் பார்க்கப் போனோம். …..
அவன் சொன்னவை ஞாபகம் வந்து இன்னும் எத்தனை தலைமுறைக்கு இந்த சாபம் தொடருமோன்னு பயமாயிருக்கு. என் தாத்தாவுக்கு தாத்தா தலைமுறையில் அது நடந்ததுன்னு அவன் சொன்னான்.
அவர் பெயர் கூட நான் கேள்விப் பட்டதில்லை. புருஷன் இறந்து போய் இவருடன் வீட்டோடு இருந்த தங்கச்சிக்கு ஒரு சாம்பானோடு தொடர்பிருக்கிறது என்று கேள்விப் பட்டு மானாவெளியில் இருந்த தொட்டியில் முக்கி கொன்று விட்டாராம்.

அவள்தான் இவள். அன்றிலிருந்து எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகளே கிடையாது. ஆண்களும் தரிப்பது இல்லை. நீ கணக்கிட்டுப் பாத்தீன்னா எங்கள் குடும்பத்திலேதான் வெள்ளைச் சேலை கட்டும் பெண்கள் எண்ணிக்கை அதிகம். வீட்டிற்கு ஒருவராவது கட்டாயம் இருப்பார்கள். அதிக நாள் இருந்தவன் நான் தான். ############

இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமான்னு பார்க்கலாம்.
“ செய்திருக்கணும். இப்பத்தான் ஐயாகுட்டிகிட்ட சொன்னேன். துரை செத்துப் போனதுக்கு முன்னாடியே செய்திருந்தால் ஒருவேளை அவனைக் காப்பாற்ற முடிந்திருக்கலாம்.
என்ன செய்ய. எல்லாம் முடிஞ்சாச்சு. இனி செய்யணும்னா ஐயாகுட்டிதான் செய்யனும். தோட்டத்தில ஈசான மூலையில் கோவில் கட்டி வருஷத்துக்கு ஒரு முறை கொடை கொடுத்தா சாபம் நிற்குமென்று அந்த மாந்த்ரீகன் சொன்னான். ”

“அந்தப் பெண்ணை அப்புறம் எப்பவாவது பார்த்தீங்களா?”
” பலமுறை அவள் மீண்டும் வந்தாள்.” சந்தையில் இருந்து வர ஒருநாள் நேரமாகிவிட்டது. பைக்கில் ஒற்றைக்கு வந்து கொண்டிருந்தேன். நாலா பக்கமும் இருள் கவிழ்ந்திருந்தது. மோட்டாரின் சப்தம் எங்கோ எதிரொலித்தது. தூரத்தில் ஒரு பெண் உருவம் நிற்பதைக் கண்டேன்.
காவல்கிணறு ரயில்வே கிராசிங் பக்கத்தில் அவள் நின்று கொண்டிருந்தாள். கேட் அடைக்கப்பட்டிருந்தது. கையில் ஒரு குழந்தை. ரயில்வே கேட் கீப்பர் தெரியும் என்று கேட்டுக் கொண்டதால் தான் அவளை அழைத்துக் கொண்டு போனேன். அவள் குறிப்பிட்ட தோட்டத்தில் வீடு இருந்தது. ############
குழந்தையுடன் வந்த பெண் குறித்து மனது திருப்தி கொள்ளாமல் இருந்ததால் அந்தப் பெண் இறங்கிக் கொண்ட தோட்டத்திற்குப் போனேன். பூ பறித்துக் கொண்டிருந்தார்கள். இரவு நான் பார்த்த வீடு இருந்த இடத்தில் வாழைகள் குலை தள்ளும் பருவத்தில் இருந்தன.

யாருக்கும் நான் குறிப்பிட்ட அடையாளத்தில் உள்ள பெண்ணை தெரிந்திருக்கவில்லை. நான் கண்டது ஊர் சுற்ற வந்த இசக்கியம்மையை என்று அவர்கள் சொன்னார்கள். ரயில்வே கேட் கீப்பர் இரவு என்னைப் பார்க்கவே இல்லையென்றும் நான் குறிப்பிட்ட நேரத்தில் வண்டியே கிடையாது என்றும் சொன்னான். ############

“ இதற்கும் நீங்கள் மருந்து குடித்துக் கொண்டதற்கும் என்ன சம்பந்தம்?” “ நீ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு என்னை யாரும் கொண்டு சேர்க்கவில்லை” “அதற்கு” “ எனக்கு செத்துதான் போகணும்னா எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வரணும்?”
“ அப்படின்னா?”
“ கடைசியாக அவள் ஐந்து நாட்களுக்கு முன்னாடி வந்தாள்.
“நான் கேட்டேன். என்ன வேண்டும்?
அவள் சிரித்தாள். தெரிந்து கொண்டு தெரியாததுபோல் கேட்பதன் மூலம் காலத்தைத் தள்ளிப்போட முடியாது என்பது போல் இருந்தது அவள் சிரித்தது.”

“ இந்தமுறை மட்டும் நீ போய்விடு. நீ கேட்கும்படியே உனக்கு கோவில் கட்டுகிறேன். அப்புறம் எப்பொழுது நீ வந்தாலும் தயாராகவே இருக்கிறேன். அழுது விடுவேனோ என்று பட்டது. என் அழுகையில் அவள் கரைந்து அனுதாபம் கொள்ளக்கூடும் என்று தோன்றியது. ஆனால் உனக்குக் கொடுக்கப்பட்ட காலங்களை எல்லாம் நீ விரயமாக்கினாய் என்று அவள் சொன்னாள். என்னைக் கடந்து படியிறங்கினாள்.
எருக்கம் பால் வாசனையை ஒத்த ஒன்று அவளைப் பின் தொடர்ந்தது….
மறுநாள் மதியம் மோட்டார் அறையில் படுத்திருந்தேன். காற்று மண்ணை வாரிக் கொட்டியதால் கதவை அடைத்துவிட்டேன். கிணற்றுக்குள்ளிருந்து வந்த குளுமையான காற்றில் அசந்து உறங்கினேன்.

வெளியே யாரோ என் பெயர் சொல்லி மூன்று முறை அழைத்தார்கள். பழக்கப்பட்ட குரல் மாதிரி இருந்தது. யாரென்று ஊகிக்க முடியவில்லை. துண்டை எடுத்து வியர்வையை துடைத்துக் கொண்டே கதவைத்திறந்தேன். அவள் நின்று கொண்டிருந்தாள்… அவள் முன் போய் நின்றேன். என்ன நடக்கிறதென்று தெரிந்து அவள் சொல்படி கேட்பதுதான் நல்லபிள்ளைக்கு அடையாளம் என்பது போல் நடந்து கொண்டேன்.
அவள் எழுந்து போய் அலமாரியில் இருந்த மருந்து பாட்டிலை எடுத்தாள். மிளகுக்கு அடிக்க வாங்கியது. என் தாடையோடு அணைத்து மருந்தை வாய்க்குள் ஊற்றினாள். நான் அவள் கண்களை பார்த்தபடியே இருந்தேன். பாட்டில் தீர்ந்தபோதுதான் உணர்வுக்கு வந்தேன்.…. ஒரு சக்திதான் என்னை அவளிடம் இருந்து காப்பாற்றியது.
நல்லவேளை பக்கத்திலேயே ரோக்கர் இருந்தது. அதைக் குடித்திருந்தால் இவ்வளவு தூரம் வண்டி ஓட்டி வந்திருக்க முடியுமா? ஆனாலும் என்ன செய்ய முடியும். நான் என்ன பாவம் செய்தேன்?.
“ பயப்படாதீங்க மாமா அமாவாசைக்கும் இன்னும் நாட்கள் இருக்கே. அதற்குள் நமக்கு எதாவது செய்ய முடியும்” ” என்னமோ என்னுடைய காலம் முடிஞ்சி போச்சின்னுதான் தோணுது. குழந்தைகள் நல்லா இருந்தா அதுவே போதும். ஐயாகுட்டி மறந்தாலும் மறந்திடுவான். என்னை மாதிரி சோம்பல் பட்டுட்டான்னா நீதான் அவன் கிட்டே சொல்லணும்”. ############
கிராமங்களில் தெய்வங்களாகக் கோயில் கட்டி வணங்கப்படும் அம்மன்கள் பலவும் முதலில் பேய்களாகவும் பிசாசுகளாகவும் பின்னர் தெய்வங்களாக ஆக்கப்பட்டவர்களே என மானுடவியல் ஆய்வுகளும், நாட்டாரியல் ஆய்வுகளும் சொல்கின்றன.

தளவாய் சுந்தரம் தெய்வமாக ஆசைப்பட்ட ஒரு பேயின் கதையை அதன் கோணத்தில் சொல்லாமல், நவீன காலத்து இளைஞனின் கோணத்தில் சொன்னதன் மூலம் நவீன கதை சொல்லியாகப் பரமாணம் அடைந்துள்ளார் என்பதே கவனிக்க வேண்டிய ஒன்று.

No comments :