ஆம் இவை ஆண்களின் பிரச்சினைகள் : நீல பத்மநாபனின் தனி மரம்

இலக்கியம் மனிதர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டும்; நெறிப்படுத்த வேண்டும்; வழிகாட்ட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தைப் பலரும் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்கள். ஒத்துக் கொள்பவர்களுக்குள் அதை வெளிப்படையாகச் செய்யலாமா? மறைமுகமாகச் செய்ய வேண்டுமா? என்பதில் மட்டுமே வேறுபாடுகள் உண்டு.
ஆலோசனைகள் சொல்லும் திருக்குறள் காலத்து அறநூல்கள் தொடங்கிப் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலத்து நீதிநூல் வரை வாசித்துப் பார்த்தால் பெண்களை நோக்கியே அறங்களும், ஒழுக்கங்களும் அதிகம் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன. பெண்களே நெறிப்படுத்த வேண்டியவர்கள் எனக் கருதப்பட்டதன் சமூகக் காரணங்கள் பற்பல. முதன்மையான காரணங்கள் அந்நூல்களை எழுதியவர்களில் பெரும்பாலோர் பெண்கள் அல்ல; ஆண்களே என்பதுதான். பெண்கள் பெயரில் இருக்கும் ஆத்திசூடி போன்ற நூல்களில் கூட ஆண்களின் குரல்களே வெளிப்படுகிறது என்றால், ஆண்களாக மாறிய பெண்கள் அங்கே எழுத்தாளர்களாக ஆகி இருக்கிறார்கள் என்பது தான் ஆய்வு செய்து சொல்ல வேண்டிய விசயம்.


தீவிரத் தளத்தில் இயங்கும் நவீன காலத்து ஆண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் நுட்பமாக வாசிக்கப் படும் போது இந்தப் பொதுப் போக்கிலிருந்து பெரிய வேறுபாடுகள் இருப்பது புரிய வருகிறது. தமிழின் நவீனச் சிறுகதையைத் தொடங்கி வைத்த வ.வே.சு. அய்யர் தொடங்கிப் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், வழியாகத் தொடரும் சிறுகதை இலக்கியம் அதிகம் பெண்களுக்கு ஆலோசனைகள் சொல்வதிலிருந்து விலகிச் செல்கின்றன. அவை பெண்களைக் கதாபாத்திரமாக்கிக் கொண்டு ஆண்களை நோக்கியே பேசுகின்றன. ஆண்களுக்கே அவை ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் செய்கின்றன.


ஆண் பெண் உறவு சார்ந்து ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், அதன் வழியாகக் குடும்ப அமைப்பு நெகிழ்ச்சி யுடையதாக ஆகி விட்டதையும் சுட்டிக் காட்டி, அடிப்படை விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியவன் ஆணே தவிர பெண்கள் அல்ல என்பதைப் பலரது கதைகளில் வாசிக்க முடிகிறது. அப்படிப் பட்ட பல கதைகளை எழுதிய எழுத்தாளர்களுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நீல. பத்மநாபன்.


குறிப்பான வெளிகளில் இயங்கும் மனிதர்களைப் பாத்திரங்களாகத் தேர்வு செய்யும் நீல. பத்மநாபன் தனது விரிவான தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் போன்ற தொடக்ககால நாவல்களின் வழியாகவே உடனடிக் கவனம் பெற்றவர். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்; மின்சாரத்துறையில் பணியாற்றுகிறார்; அவரது அனுபவங்களை அதிகம் எழுதுகிறார் என்பதை அவரது எழுத்துக்கள் பலவற்றில் காண முடியும். குறிப்பான வெளியில் இயங்கும் படைப்பு என்றாலும் விரிவான காலப் பரப்பைக் கொண்டிருப்பதோடு, நீண்ட காலத்துக்கும் பொருந்தக் கூடிய பொருண்மைகளைக் கருவாகக் கொண்டவை அவரது படைப்புகள். அவரது தலைமுறைகள் நாவல் மகிழ்ச்சி என்ற பெயரில் திரைப்படமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.


நீல பத்மநாபனின் தனிமரம் கதை, இன்றைய நவீன குடும்பங்கள் ஒவ்வொன்றும் சந்திக்கும் சிக்கல் ஒன்றை வெட்டிப் பிளந்து காண்பிக்கிறது. ஒருவரையொருவர் புரிந்து கொண்டு காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட இளம் தம்பதிகளுக்கிடையில் தோன்றும் சிக்கலாகப் பத்மநாபன் கதையை அமைத்திருந்தாலும், இந்தப் பிரச்சினை இன்று மாதச் சம்பளம் வாங்கும் வேலையில் இருக்கும் தம்பதிகளுக்கிடையே தோன்றும் தவிர்க்க முடியாத சிக்கல் என்பதை மறுக்க முடியாது.


மனைவியை வேலைக்கு அனுப்பாமல், வீட்டில் இருக்க வைக்கும் கணவன்களின் உள் மனத்திற்குள் இருப்பது என்ன? என்ற உளவியல் ஆழத்திற்குள் செல்லும் இந்தக் கதை ஒரு தீவிரமான குற்றச் சான்றுடன் தொடங்குகிறது.


“இந்த ஆண்களே மகா பொறாமைக்காரங்க .. நீங்க மட்டுமாவது விதிவிலக்கா இருக்கமாட்டீங்களா என்று நான் ஆசைப்பட்டேன். அது பொய்த்து விட்டது..” என்றாள் திருமதி சித்ரா சபேசன். அதைக் கேட்க சபேசனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது.
குற்றச்சாட்டிற்குப் பதில் சொன்ன கணவனிடம் அவள் தொடர்ந்து பேசுகிறாள்.


“நீங்களல்லவா என்னை வதைக்கிறீர்கள்! இந்த இரண்டு வருஷமாக இல்லாத புதுமையாக இன்று நான் பிற ஆண்களிடம் கூத்தடிக்கிறேன் என்று குற்றம் சாட்ட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?”
“தாலி கட்டிய என்னுடைய மனைவிக்கு வேறு இளைஞர்களிடம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது..?”


“ தாலி கட்டிய பெண்டாட்டி என்பதற்கும் ‘மூக்கணாங்கயிறு போட்டு விட்ட கொட்டடி மாடு என்பதற்கும் உங்கள் அகராதிப்படி ஒரே அர்த்தம் தான் போலிருக்கிறது..” சுள் என்று மீண்டும் ஆத்திரம் கொழுந்து விட்டது சபேசனுக்கு.உரிய பதில் சொல்ல வரவில்லை. நினைத்துப் பார்க்க மாட்டாமல் அடித்தது கோபம்.


“வார்த்தைக்கு வார்த்தைக்கு வார்த்தை என்னை எதிர்த்துப் பேசி மடக்கி, என்னை மட்டம் தட்ட வேண்டுமென்று உனக்கு இவ்வளவு அகங்காரம் இல்லையா…? ”


“ நீங்கள் பேசுவதற்கு நான் பதில் சொல்லாவிட்டால், ‘என்ன காது செவிடா’ என்றோ இல்லை ‘ நாக்குத் தாழ்ந்து போச்சா’ என்றோ ஏசுவீர்கள். .. பதில் சொன்னாலோ இப்படி வாதிப்பது..! பின் நான் என்ன செய்ய வேண்டும்?”
சமையலறைக்கு அவள் போகும் முன் இருந்த அதே நாற்காலியில் அப்படியே மோட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டு சபேசன் இருப்பதைக் கண்டு அவள் திடுக்கிட்டாள். அவன் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டாள். “ எதுக்கு இப்படி மனசைப் போட்டு அலட்டிக்கிறீங்க? உங்களுக்கு என்னைத் தெரியாதா? எனக்கும் உங்கள் மனசைத் தெரியும். பின் எதற்காக அர்த்தமில்லாத கற்பனைகளில் முழுகி மனசை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டும்?


“ சித்ரா ! உன்னிடம் என்குறை நிறைகள் எல்லாவற்றையும் நான் முன்னாலேயே சொல்லித் தீர்த்துவிட்டேன் என்று தான் நம்பியிருந்தேன்.. ஆனால் இப்போ கொஞ்ச நாட்களாகத்தான் ஒரு விஷயம் கூட சொல்ல வேண்டியிருக்கிறது என்று எனக்குத் தெரிந்தது…”
“ அது என்னவென்று எனக்குத் தெரியும்…!” “ தெரியுமா?”
“ ஆம்.. நான் உங்களைத் தவிர வேறு ஆண்கள் யாரிடமும் உரையாடுவது உங்களுக்கு கட்டோடு பிடிக்காது என்பது தானே..? அதைத்தான் பொறாமைக்குணம் என்கிறேன்..”


“ என்ன சித்ரா .. மீண்டும் மீண்டும் அதையே சொல்லுகிறாய்…! பொறாமையாகவே இருந்துவிட்டுப் போகட்டும்… ஆனால் அதை விளக்கமாக உன்னிடம் சொல்லி விடுகிறேன்”
நெறியில் நீ அக்னி தான் என்பது வேறு யாரையும் விட எனக்குத் தெரிந்திருந்தும் ! ஆம்… இந்த நூற்றாண்டில் இம்மாதிரி நான் அர்த்தமில்லாமல் அவஸ்தைப் படுவது- பொறாமைப் படுவது மிகவும் கீழ்த்தரமானது தான். வெறுக்கத்தகுந்தது தான். அதனால் தான் இத்தனை நாளாக மனத்திற்குள் குமுறிக் கொண்டிருந்தேன். என் சின்னப் புத்தியை அமுக்கி அடக்கிவிட ராட்சஸ முயற்சி செய்தேன். ஆனால் முயற்சிக்க முயற்சிக்க நான் மீண்டும் மீண்டும் தோற்று, இன்று என் மனம் முழுதும் ஒரே பொறாமை மயமாகி விட்டது. என் குணம் மாறமாட்டேன் என்கிறது… மனம் விட்டே சொல்கிறேன்…! நீ உத்தியோகத்திலிருந்து ராஜினாமாச் செய்துவிட்டு வீட்டோடு இருந்துவிடு. நான் காரியாலய வேலைக்குப் பிறகு இன்னும் ‘பார்ட்டைமில்’ வேலை செய்து சம்பாதித்து உன் ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி உன்னைச் சந்தோஷமாக வைத்திருப்பேன். என்னைத் தவிர வேறு யாரிடமும் நீ பேச வேண்டாம். சிரிக்கவும் வேண்டாம்…”
‘திருமணத்திற்குப் பிறகும், பார்க்கும் வேலையில் தொடர சம்மதிக்கிறேன்’ என்று அவள் கேட்டுக் கொண்டபடிதான் வாக்குறுதியளித்த நிகழ்ச்சி சபேசனுக்கு நினைவில் வந்தது.


அந்த நினைவுக்கு வருவதற்கு முன்னால், இருவருக்குமிடையே நடைபெறுவதாக நீல. பத்மநாபன் எழுதும் உரையாடல் பகுதிகள் விரிவானவை; அவற்றைத் தொடர்ச்சி அறுபடாமல் படிக்கும் போது தான் அதற்குள் இருக்கும் நியாயங்கள் புரிபடக் கூடும். ஓர் ஆண் தன்னை இறக்கிக் கொள்ளாமல் பேசும் போது, விழிப்புணர்வு அடைந்த ஒரு பெண், அவள் அவனது மனைவியாகவே இருந்த போதும் எப்படிப் பேசுவாள் என்பதைத் தர்க்க நியாயங்களோடு நடுநிலை தவறாமல் எழுதிக் காட்டியுள்ளார் . அவர் ஓர் ஆண் என்ற போதிலும் தன்னிலையை அழித்துக் கொண்டு எழுதும் எழுத்தாளன் இவ்வாறே எழுதுவான். இந்த வாதங்களுக்குப் பின் அந்த ஆண் முரட்டுத் தனம் என்பதிலிருந்து இறங்கி, இரக்க நிலையைப் பெற்று விடும் உத்தியைப் பயன்படுத்தும் விதத்தை எழுதிக் காட்டும் பகுதிகளும் கதையில் இடம் பெற்றுள்ளன. சில காட்சிகள் இதோ,


“ சித்ரா.., என்னைப் பொறாமைக்காரனென்று குற்றம் சாட்டுகிறாய்.. அதைப் பொய்யென்று நான் சாதிக்க மாட்டேன்.. ஆனால் அந்தப் பொறாமை நீ நினைப்பதை விட எத்தனையோ மடங்குத் தீவிரமானது என்று இப்போது, நானே உன்னிடம் ஒப்புக் கொள்கிறேன்.


‘‘ இத்தனைக்குப் பிரமாதப் படுத்தி வருத்தப்படும் அளவுக்கு என்ன வந்து விட்டது உங்களுக்கு? எப்படியும் இனி பிரசவமெல்லாம் கழிஞ்சுதானே பார்க்கணும். இப்போதே எதுக்காக மனசைப் போட்டு அலட்டிக்கிறீங்க?” அம்மட்டோடு அப்போதைக்கு, சபேசனுக்கு மனசில்லா மனசோடுதான், அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


சித்ராவின் பிரசவம் கழிந்து இரண்டு மாதத்திற்குப் பின் சபேசனும் மூன்று மாத காலம் லீவ் எடுத்திருந்தான். ஆதலால் அடிக்கடிச் சீக்காளிக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் போகவும் வரவும் உதவியாக இருந்தது. வேறு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்க வேண்டியதில்லை.
“லீவ் எல்லாம் முடிந்து நேற்றோடு முடிந்து போய் விட்டது. பாலைக் காய்ச்சி பிளாஸ்கில் ஊற்றி வைத்திருக்கிறேன், குழந்தை அழுதால் கோமு (வேலைகாரப் பெண்) கொடுப்பாள்.. நான் ஆபிஸுக்கு போய் வருகிறேன்..” என்றாள் சித்ரா.


தெரு நடையில் சபேசன் வந்து பார்த்த போது தெரு முனையில் சித்ரா திரும்பிக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் தூளியில் கிடந்த குழந்தையும் வீல்’லென்று வீடு முழுவதும் நடுநடுங்கும்படி ‘கச்சேரி வைக்க’த் தொடங்கி விட்டது.


நீல பத்மநாபனின் கதை கூற்றுமுறையை வாசிக்கும் போது இயல்பாகவே அவரது சார்பு சபேசன் என்கிற ஆணின் பக்கம் அல்ல என்பது சுலபமாகப் புரிந்து விடும். சித்ரா என்னும் புத்திசாலியான மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டிய நிலையிலும், தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலும் சபேசன் இருக்கிறான் என்பதைச் சொல்லும் இந்தக் கதை பெண்களின் பிரச்சினையைப் பேசுகிறது என்று சொல்வதைவிட நவீன காலத்து ஆண்களின் மனச் சிக்கல்களைப் பேசுகிறது என்பதே சரியாக இருக்கும்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சபேசன் தனக்கு பொறாமை இருப்பதை ஒத்துகொள்கிறானே...அதுவே மகிழ்ச்சிதான்.......ஏனெறால் ஆண்மனம் அவ்வளவு எளிதில் அதை ஒத்துகொள்ளாதே....கதை ஒட்டம் அருமை.முழுவதையும் படிக்க ஆவல்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்