வினையும் எதிர்வினையும் : சோ.தர்மனின் சிதைவுகள்

நான்கு வழிச்சாலைகளின் திறப்புக்குப் பின் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் பேருந்துப் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைந்து விட்டது என்பதில் அந்த நண்பருக்கு ஏகப்பட்ட சந்தோசம். தனது வேலை காரணமாக வாரத்திற்கு மூன்று முறை மதுரைக்குப் போய்வருபவர் அவர். இடைநில்லாப் பேருந்துகள் மூன்றரை மணிநேரத்தில் போய்ச் சேர்ந்து விடுகின்றன என்று ஒரு நாளைக்கு மூன்று முறை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
 முன்பு ஐந்து மணிக்கு எழுந்து பச்சைத் தண்ணியில் குளித்து விட்டு ஆறு மணிக்குள் பேருந்து நிலையத்தில் இரு சக்கரவண்டியை நிறுத்தி விட்டுப் பேருந்தைப் பிடித்தால் மதுரையில் போக வேண்டிய இடத்திற்குப் பத்து மணிக்குப் போய் விடுவாராம். இப்போது ஆறு மணிக்குப் பதிலாக ஆறரை அல்லது ஏழு மணிக்குக் கூடப் பேருந்து பிடித்தால் போதும் அதே நேரத்திற்குப் போய்விடலாம் என்றார். 

அவர் வேகம் வேகமாகக் கிளம்பி வந்த நிலை இப்போது இல்லை. நிதானமாகக் கிளம்பலாம். ஆனால் அவர் பயணம் செய்யும் வாகனங்கள் புதிதாகப் போடப் பட்ட நவீனத்தார்ச் சாலைகளில் வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றனவாம். இந்தத் தார்ச்சாலைகளுக்கு ஏற்ற புதிய பேருந்துகளை அரசாங்கம் வாங்கி விட்டால், இன்னும் வேகமாகப் போகலாம்;150 கி.மீட்டர் தூரத்தை இரண்டரை மணிநேரத்தில் கடந்து விடலாம் என்று கணக்கும் கூடச் சொன்னார். 

அந்த நண்பர் மட்டும் அல்ல; கணக்குகள் போடத்தெரிந்த பலரும் தங்களை மையப் படுத்தி மட்டுமே கணக்குகளை போடுகின்றனர். புதிய வரவுகள் மூலம் – அவை அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருந்தாலும் சரி, சமூக நிறுவனங்களில் ஏற்படும் மாற்றங்களில் ஏற்படும் மாற்றங்களாலும் சரி தங்களை மையப் படுத்தி யோசிப்பதை ஒருவரும் கைவிடுவதில்லை. தங்களுக்குச் சாதகமாக இருக்கும் நிலையில் அதை வரவேற்கின்றனர். இல்லையென்றால் எதிர்க்கின்றனர். குறைந்த பட்சம் மனத்தடைகளை மாற்றிக் கொள்ளத் தயாரில்லாமல் மௌனமாக இருக்கின்றனர். அப்போதெல்லாம் பலரும் உதிர்க்கும் ஒரு சொற்றொடர் “காலம் கெட்டுப் போச்சு” என்பது தான். 

காலம் என்ன தின்பண்டமா? கெட்டுப் போக. கண்ணுக்குத் தெரியாத காலம் என்னும் கருத்தியலை தாங்கள் செய்யும் செயல்களால் மட்டும் அல்ல; தங்கள் முன்னால் இருக்கும் மனிதர்களின் நடவடிக்கைகளின் மூலமே உணர முடியும் . அப்படி உணரும் போது தங்களுக்குச் சாதகமான மாற்றத்தை நல்லதாகவும் , தங்களுக்குச் சாதகமில்லாத மாற்றங்களைக் கெட்டதாகவும் கணிப்பது எந்தவிதத்தில் சரியாக இருக்கும்? 
அண்மையில் ஒரு கிராமத்தில் ஒரு சாவுச் சடங்கில் கலந்து கொள்ள நேர்ந்தது. அச்சடங்கைச் செய்யும் கிராமத்தின் சேவகர்களான நாவிதர், சலவைத்தொழிலாளி, சாவைப் பறைந்து சொல்லும் நபர்கள் என ஒவ்வொருவரும் முன்பு போல சொன்னபடி கேட்பதில்லை என்று வருத்தப் பட்டு புலம்பிக் கொண்டே இருந்தார்கள் அந்தக் கிராமத்து மனிதர்கள். 
ஒரு மனிதனைப் புதைப்பதற்குத் தேவையான குழியை வெட்டிக் கொடுத்துவிட்டு ஊர் வரன்முறைப் படுத்தியிருந்த பதினோரு ரூபாய் கூலியை வாங்கிக் கொள்ளத் தயாரில்லை என்பதை அதிக பட்ச வருத்தத்தோடு சொன்னார்கள். அப்படிப் புலம்புவதில் எந்தவித நியாயமும் இல்லை என்பது ஏன் உறைக்கவில்லை என்பதுதான் வேடிக்கை. 

சாவுக்குழி வெட்டப் பதினோரு ரூபாய் கூலி என்று நிர்ணயம் செய்த காலம் எப்படிப் பட்டது? நிலவுடைமையாளர்களும், அதில் வேலை செய்த கூலிகளும், அந்த விவசாயம் சரியாக நடைபெற உதவியாக இருந்த கிராமத்துச் சமூகக் குழுக்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்த காலம் அது. ஒவ்வொருவரின் துயரத்திலும் இன்னொருவர் பங்கெடுக்க வேண்டும் என்ற அதிகாரத்தோடு கூடிய மனிதாபிமானமும் இரக்கமும் நிரம்பிய காலம். ஆனால் இன்று உடைமைக் குழுக்களிடம் மனிதாபிமானமும் இரக்கமும் காணாமல் போய்த் தனது நலன் என்னும் நிலைபாடு மட்டுமே தலை தூக்கி நிற்கும் போது, சேவைக் குழுக்களும், கூலி வேலையாட்களும் பழைய பணிவோடும், அடக்கத்தோடும் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி? அத்தோடு கடந்த அறுபது ஆண்டுகளாக இந்திய மனிதர்கள் குடியரசு தந்த அடையாளத்தைத் தாங்கியவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உடனடியாகப் புரிந்து கொள்ள வேண்டிய சங்கதி அல்லவா? 

இதனைப் புரிய வைக்க வேண்டிய பணி அரசுக்கு- அரசின் துறைகளுக்கு –இருக்கிறது. ஆனால் தொடரும் சாதி அதிகாரா மனோபாவம், இவற்றிற்கு எதிராகவே இருக்கின்றது. இந்நிலையில் அந்தப் பணிகளையும் பொறுப்பையும் எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அக்கருத்தை உள்ளடக்கிய படைப்புகளை- கவிதையாக, கதையாக- நாடகமாக ஆக்கித்தருகிறார்கள். சிறுகதை ஆசிரியர்களில் இத்தகைய கருத்தைப் பலரும் எழுதியுள்ளனர் என்ற போதிலும் தன் முனைப்புடன், ஆசிரியர் கூற்றாகவே எழுதிய கதைகள் சிலவே. அக்கதைகளுள் சோ.தர்மனின் சிதைவுகள் கதை முக்கியமானது எனக் கருதுகிறேன். தன்னுடைய சொந்த அனுபவம் சார்ந்ததாக- தன்னையே ஒரு பாத்திரமாகவும், தனது குடும்ப உறுப்பினர்களையே பாத்திரமாகவும் ஆக்கி நேரடியாகப் பேசும் அக்கதையில், கட்டுரையின் தொனி வெளிப்படுகிறது என்ற போதிலும், சமூக யதார்த்தத்தை விமரிசனம் செய்ய அந்தக் கூற்று முறையே சரியானது. அதைச் சரியாக உணர்ந்து சோ.தர்மன் எழுதியுள்ளார். அந்தக் கதை இப்படித் தொடங்குகிறது.

”நானும் எனது மனைவியும் அந்த முடிவு எடுத்த உடனேயே எனக்கு ஏற்பட்ட ஒரே கவலை அந்த வேலைக்கு யாரைக் கூப்பிடுவது என்பதுதான். பட்டிக்காடா? கூப்பிட்ட உடன் ஓடோடி வந்து கைகட்டி நின்று சேவகஞ் செய்துவிட்டுப் போவதற்கு. பட்டணக்கரையில் யார் யாரை மதிக்கிறார்கள்? இல்லை கோயில் குளம் என்றால் கவலையில்லை. அந்தந்த வேலைக்கென்று அங்கேயே ஆட்கள் இருப்பார்கள். இல்லை ஏதாவது மண்டபம் பிடித்து பத்திரிகை அடித்து தடபுடலாய் நடத்தினால் யாரைக் கூப்பிட்டாலும் ஓடோடி வருவார்கள். வீட்டுக்கு வந்து செய்து விட்டுப் போ என்கிற போதுதான் பிரச்னையே வருகிறது.”
தனது வீட்டுக்கு வந்து குழந்தையின் மொட்டையெடுக்கும் நிகழ்ச்சிக் காட்சியை இப்படி வருணிக்கிறார் தர்மன்:

“ சரி , அத விடு கருப்பசாமி, நாளக்கி நிய் என் வீட்டுக்கு வரனும் என் மகளுக்கு பொறந்த முடிய எடுத்துறனும். சொந்தம், பந்தம், பத்திரிகை, சோறு ஏதும் கிடையாது. வீட்டுல வந்து எடுத்துட்டுப் போயிறனும்.”
“சார் நீங்க கிறிஸ்டியனா சார்” “ இல்ல” “ கம்யூனிஸ்ட்டா சார்” “ இல்ல” “ தி.க.வா சார்” “ இல்ல” “ பெறவு” “மனுஷன்”
சிரித்த முகமாய் என் வீட்டுக்கு வந்தான் கருப்பசாமி. என் மகளின் கன்னத்தை ஆசையாக கிள்ளி முத்திக் கொண்டான். அவனுக்காக நாங்கள் எடுத்து வைத்திருந்த வேஷ்டி சட்டையையும் ரூவாயையும் பணிவுடன் வாங்கிக் கொண்டான். என்னோடு உட்கார்ந்து சாப்பிட்டான். சுவரில் அலங்கரித்து மாட்டப்பட்டிருந்த கவி தாகூரின் படத்தையும், புத்தக அலமாரியில் வரிசையாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த நிறைய புத்தகங்களையும் ஆச்சரியமாய் பார்த்தான். 

“இது ஒங்க தாத்தா படமா சார்?” “ ஆமா கருப்பசாமி” 
“ எறந்து எத்தன வருசம் ஆச்சு ?” “ எறந்துட்டார்னு சொல்றாக ஆனா அவர் எறக்கல”
“ நீங்க ஒரு வித்தியாசமான ஆளு சார்” “ நிய்யுந்தான்” 
“ சார்.. ஒரு விஷயம் தெரியுமா?” “………”
“நேத்து ஏங்கூட மொறச்சிட்டுப் போனார்ல கூரவீட்டு மொதலாளி மகன். அவரும் இனி ரெண்டு மூனு ஆட்களும் வந்து கடைய அடைச்சி நொறுக்கிட்டாக. கண்ணாடி சேர் எல்லாத்தையும் ஒடச்சிட்டாக. என்னையும் வசமா அடிச்சிட்டாக..” “ கருப்பசாமி நிய் என்ன சொல்ற”
“ நெசமாத்தான் சார் ஒங்க விஷயம் நல்லபடியா முடியனும்மேன்னு நான் பேசாம இருந்திட்டன் சார். இப்ப நல்லபடியா முடிஞ்சிருச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம் சார்”
அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அவன் தான் சந்தித்த ஒரு வினைக்கு எதிர் வினையாற்றப் போகிறான் என்பதைக் கதையின் முடிவாகத் தருகிறார். இதோ அந்த வரிகள்:
”நான் அவன் முகத்தையே உற்றுப் பார்த்தேன். அவன் என்னைப் பார்க்காமலேயே மழுங்கியிருந்த கத்தியை சானைக் கல்லில் தீட்டிக் கொண்டிருந்தான். சீப்பையும் கத்திரிக்கோலையும் அவன் கண்டு கொள்ளவே இல்லை. கத்தியைத் தீட்டுவதும் விரலால் தொட்டுப் பதம் பார்க்கவும் மீண்டும் தீட்டுவதும். அவன் என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.”

நிதானமும் புத்திசாலித்தனமும் நிரம்பிய கருப்பசாமி கோபம் கொள்ளும் படியாக நடந்தநிகழ்வுகளைக் கதையின் நிகழ்வுகளாகப் பின்னோக்கு உத்தியாகவும், முன்னோக்கு உத்தியாகவும் அமைத்துக் கதையை எழுதியுள்ளார். ஆரம்பக்காட்சி இது:
“ போதுமா சார், இன்னியும் கொஞ்சம் முடியக் கொறைக்கவா” “ போதும்ப்பா”
“ இதுக்கு மேல கொறச்சா முன் வழுக்க அகலமா தெரியும் சார்” “… … ” 
“ சார் இந்தாங்க மிச்சம் இரண்டு ரூவா” “ வச்சுக்கோப்பா”
“ இல்ல சார் , எட்டு ரூவா தான். யார்ட்டயும் அதிகம் வாங்கிறதில்ல” அதற்கப்புறம்.. வாரம் ரெண்டு தடவை சேவிங். மாசம் ஒரு தடவை கட்டிங். இரண்டு வருடமாய் மகேஸ்வரி சலூன் கருப்பசாமி ரொம்பவும் பழக்கமாகிப் போனான். வேறு கடைக்கும் போகாதபடிக்கு.
“சார் வாங்க உக்காருங்க, என்ன ஒரு மாதிரி டல்லாயிருக்கீக.” “ ரெண்டு நாளா சரியான அலைச்சல்ப்பா.”
“வெளியூரா..? ” “ எல்லா ஊரும் தான், வெளியூர், உள்ளூர்”
“ யோவ்.. தலை சீவ வர்ரவரு, இங்க நான் ஒருத்தன் இருக்கம்ல ஒரு வார்த்த கேக்கலாம்ல்ல. இதென்ன மடம்னு நெனச்சீரா,” வேகமாய் வந்து சீப்பும் கையுமாய் கண்ணாடி முன் நிற்பவன் முறைத்துக் கொண்டு போவான்.
“நான் சொல்றது சரிதான சார், ஏங்கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு தல சீவுனா அவுக மதிப்பு கொறஞ்சு போகுமாம்”

இந்த இரண்டு வருடங்களில் இப்படி எத்தன எத்தனையோ சம்பவங்கள். கருப்பசாமியின் இன்னொரு முகத்தை- பழைய நினைவுகளைக் கொண்டு வந்த சம்பவமும் கதையில் உள்ளது:
“சார்.. வாங்க உக்காருங்க.” “ …. … ..”“ சார் ஒங்களத்தான் வாங்க உக்காருங்க.” சங்கிலிக்காரர் அவசரமாய் உட்காரப் போனார்.
“நீங்க இருங்க, சார் வாங்க சார்” “ டேய் மொதல்ல வந்தவன் நான் இருக்கன்ல்லடா” 
“நீரு மொதல்ல வந்தாளுன்னு எனக்குத் தெரியும்” “ அப்புறம் எதுக்குடா அவரக் கூப்டுற”
“ செரைச்சா துட்டுக் குடுக்கிற ஆளுக்குத் தான வேல செய்யனும்.”
“ நாங்க துட்டுக் குடுக்காமெ வேற என்னத்தக் குடுக்கோம்” “ இதோட நாலு சேவிங்காச்சு. நயாப் பைசா குடுத்திருப்பீரா. எங்க பிள்ள குட்டிக என்ன மண்ணவா திங்கும்”
“ இந்தாடா ஓந்துட்டு, பெரிய துட்டு” “ ஒம்ம நூறு ரூவாத்தாளக் கொண்டு போயி நாயிக்குப் போடும். எனக்குத் தேவ நாலாட்டச் செரச்ச கூலி”
“டேய் ஒங்கப்பன் சம்முவம் பேரக் கெடுத்துராதடா” “ எங்கப்பம் பேரு அப்படியே இருக்கு. நீருதான் ஒங்க அப்பா பேரக் கெடுத்திட்டு அலையியீறீரு.” 
“ அடேய் ஒங்கப்பன் சாகுமட்டும் எங்கப்பாவ ஏறிட்டுப் பாத்திருப்பானாடா, எள்ளுண்ணா எண்ணெய்யா வந்து நிப்பாண்டா” “ அது அந்தக் காலம். அது மலையேறிப் ரொம்ப நாளாச்சு”
“ ஓகோ நீங்க இந்தக் காலத்து ஆளுகளோ, திமிர் வச்சுப் போச்சுனா எல்லாம் பேசுவீகடா. டவுன்ல வந்து நாலு காசப் பாத்த ஒடன பழையது எல்லாம் மறந்து போகுது என்னடா” “ வளவளன்னு பேச்சு வளக்காதிரும் ஒமக்கு வேல செய்ய முடியாது. பேசாமப் போரும்”

அவர் கருப்பசாமியை முறைத்துப் பார்த்துக் கொண்டே வேகமாக வெளியே போனார்.
“சார் வந்து உட்காருங்க” “ என்ன கருப்பசாமி நாந்தான் கொஞ்சம் வெயிட் பண்ணுவம்ல, அப்புறம் எதுக்கு வீணா சண்ட போடுற” 
“அதுக்கில்ல சார். அவரு இன்னியும் பழைய காலத்த நெனச்சிட்டு அலையிறாரு. எங்க அய்யா அவுக அய்யாவுக்கு ஓசில செரச்சாராம். நானும் ஓசிய செரைக்கணும்னு நெனக்காரு பாவம் .
************************

கருப்பசாமி நீண்ட பெருமூச்சுடன் கண்களைத் துடைத்துக் கொண்டான். அவன் முகம் வாடியிருந்தது. “ அப்படி ஒரு ஒறவு இருந்தது சார் அந்தக் காலத்துல முந்தி சம்சாரிக இல்லாம கூலிக்காரக இல்ல. கூலிக்காரக இல்லாம சம்சாரிக இல்ல. அப்பிடி ஒரு சொந்தம் இருந்துச்சு. இன்னக்கி பாதிச் சம்சாரிக காடு கரைய எல்லாத்தையும் வித்திட்டு வெவசாயத்த மறந்திட்டு டவுனுக்கு வந்துட்டாக. கூலிக்காரக எல்லாரும் அன்னன்னைக்கு ஒழச்சு காலந்தள்றாக. இவுக ஒதவி அவுகளுக்கு தேவையில்ல. அவுக ஒதவி இவுகளுக்குத் தேவையில்லாமப் போச்சு. அதோட மரியாதையும் போச்சு; பணிவும் போச்சு. ஒங்கள அண்டிப் பெழச்சாத்தாஅ மரியாதக் குடுக்கனும். அதனால பழைய காலத்த நெனைச்சிக்கிட்டு அலையிற இந்தப் பாடாவதி மாதிரி ஆட்களாலதான் பெரச்சினையே வருது. ஊர்ல இருந்த நெலத்தப் பூராத்தையும் வித்துட்டு வந்து அநியாய வட்டிக்கு குடுத்து சம்பாத்யம் பண்றார். செரச்ச துட்டக் கேட்டா மொறச்சிட்டுப் போறாரு. காலம் எப்படிப் போகுது பாத்தீகளா சார்” 
இக்கதையில் இடம் பெறும் எழுத்தாளர் சோ. தர்மனே என்ற போதிலும் மற்ற பாத்திரங்கள் அனைத்தும் சமூகத்தில் இருக்கும் குழுக்களின் வகைமாதிரிகளே. கிராம சமுதாயத்தின் பழைய நடைமுறைகளைப் படம்பிடித்து, நடந்துள்ள மாற்றங்களைக் காட்டி வாசகனிடம் தீர்மானமாகப் பேச விரும்பும் படைப்பாளியின் சமூக விமரிசனத்திற்கு ஏற்ற வடிவம் வகைமாதிரிப் பாத்திரங்களை உருவாக்கும் படைப்பு முறையே என்பது திறனாய்வாளர்களின் முடிவு. இதைச் சோ.தர்மன் பல கதைகளில் சரியாகச் செய்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்