February 27, 2010

சிரித்துக் கொள்ள சில மணித்துளிகள்: அசோகமித்திரனின் சங்கமம்

குடியிருந்த வீடுகளின் கதை- பல ஊர்களுக்கும் மாறுதல் பெற்று வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க ஊழியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி. வாடகை வீடு தேடுவதும், வீட்டு உரிமையாளரின் கட்டு திட்டங்களைக் கேட்டு மனதைக் கெட்டியாக்கிக் கொண்டு முன்பணம் கொடுத்துச் சாவி வாங்கிக் குடியேறுவதும், நடுத்தர வர்க்க வாழ்க்கையில் பிரிக்க முடியாத சோக சித்திரங்கள் என்பதை விலாவரியாக அவர்கள் சொல்வார்கள். அத்தகைய சோக சித்திரங்களுக்குள் வாய்விட்டுச் சிரிக்கும் நாட்கள் இருந்ததா ? எனக் கேட்டால் , நிச்சயம் இல்லை என்றே பல பேர் சொல்லக் கூடும்.

வாடகை வீட்டில் குடியிருக்கும் போது அந்த வீட்டின் ஒரு பகுதியில் வீட்டின் உரிமையாளரும் இருந்து விட்டால், மனைவியின் கால் கொலுசொலியும், குழந்தைகள் வாய் விட்டு வாய்ப்பாடு சொல்லிப் பார்க்கும் வீட்டுப் பாடமும் கூட அடக்கி வாசிக்க வேண்டிய விசயங்களாகி விடும். வாடகைக் குடியிருந்தவர்களின் கதை இப்படியிருக்கும் என்றால், வாடகைக்கு வீட்டைக் கொடுத்து விட்டுத் தண்டனையை அனுபவித்த உரிமையாளர்களின் கதையோ வேறு விதமாக இருக்கும்.

சில பேர் வாடகைக்கு வரும் போது அப்பாவியாக இருந்து விட்டு உள்ளே நுழைந்தவுடன், தங்கள் சொந்த முகத்தைக் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். பாட்டுக் கேட்கிறேன் பேர்வழி என்று நடுராத்திரியில் டிரம்ஸ் பிளிறும் மேற்கத்திய சங்கீதத்தை உச்ச நிலையில் அலற விடுவார்கள். வெள்ளை அடிக்கப் பட்ட சுவர்களே தெரியாத அளவுக்கு வண்ணங்களில் சிரிக்கும் சாமி படங்கள் போட்ட மாதங்காட்டிகளையும், நாட்காட்டிகளையும் போட்டோக்களையும் மாட்ட ஆணிகளை அடித்துத் துவம்சம் செய்வார்கள்.
மாத வாடகையை மூன்று மாதங்கழித்துத் தருவதில் தொடங்கி, வங்கியில் தான் செலுத்துவேன் என வில்லங்கம் பேசி, ’மூன்று வருடம் முடிந்து விட்டால் வீட்டை மாற்றச் சொல்லி வற்புறுத்த முடியாது தெரியுமில்ல’ என்று குடியிருப்போர் சட்டம், வாடகைச் சட்டம் போன்றவற்றைப் பேசி வீட்டு உரிமையாளரைக் கிலி கொள்ளச் செய்வார்கள்.
கடைய நல்லூர், திசையன்விளை, மார்த்தாண்டம் போன்ற சிறுநகரங்களுக்கே வாடகை வீட்டுப் பிரச்சினைகள் வந்து விட்டன என்கிற போது, திருநெல்வேலி, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களிலும், சென்னை மாநகரத்திலும் அதன் பரிமாணங்கள் பலவிதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வழியாக ஆகாயத்தை நோக்கிப் பயணம் தொடங்கியிருக்கும் சென்னை வாசிகள் சந்திக்கும் சிக்கல்களும் பிரச்சினைகளும் பலவிதமானவை. அடுக்குமாடிகள் கட்டப்படும் போது சொல்லப்படும் எல்லா வசதிகளும் முடியும் போது இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருப்பதில்லை.

ஒவ்வொரு கட்டத்திலும் பணத்தைக் கொடுத்து விட்டு முடியும் நாளுக்காகக் காத்திருக்கும் நடுத்தரவர்க்க மனிதன் இருக்கும் குறைகளைச் சகித்துக் கொண்டு குடியேறவே விரும்புவான். அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பலவீனமான கட்டிடங்களையும் அனுமதி பெறாமல் கட்டிய மாடிகளையும் கூட விற்று விடுகிறார்கள் என்பது அன்றாடப் பிரச்சினைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
வாடகை வீடு, சொந்தவீடு என்ற பிரச்சினைகளை மட்டும் அல்லாமல் சென்னை போன்ற பெருநகரத்து நடுத்தர மக்களின் சின்னச் சின்னப் பிரச்சினைகளின் பரிமாணங்களையும் சிறுகதைகளாக எழுதிய எழுத்தாளர்கள் பலருண்டு. அவர்களுள் முக்கியமானவரும் முதன்மையானவருமாகக் கருதப்பட வேண்டியவர் அசோகமித்திரன் தான். கரைந்த நிழல்கள், இருபத்தோராவது அட்சக்கோடு, ஒற்றன், மானசரோவர், தண்ணீர் என நாவல்களை அசோகமித்திரன் எழுதிய போதும், அவரது இலக்கிய வடிவம் சிறுகதைதான் என்பது எனது கருத்து. எழுதுவதற்கு ஏற்ற விசயம் என்று கருத முடியாத ஒன்றைக் கூட மிகச் சிறந்த சிறுகதையாக எழுதிக் காட்டியவர்.

மனிதர்களுக்கிடையே நிகழும் பேச்சை அதன் எளிய வடிவத்திலேயே பதிவு செய்து நடப்புநிலையைக் கொண்டு வந்து நிகழப் போகும் ஒரு திருப்பத்திற்குள் வாசகனை நுழைத்து விடும் ஆற்றல் கொண்டது அசோகமித்திரனின் எழுத்து. அவரது கருத்து அல்லது நோக்கம் எதனையும் கதையில் கொண்டு வராமல் விலகி நிற்கும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் அவர். அவரது எந்த ஒரு கதையை வாசித்தாலும் இதை உணரலாம். இங்கே அவரது சங்கமம் கதையை வாசித்துப் பார்க்கலாம். ஒரு சிறுகதையின் தொடக்கமும் முடிவும் ஓர்மையுடன் இருக்கும் போது அந்தக் கதை சுவாரசியமாக அமையும் என்ற சிறுகதை இலக்கணத்தைத் தன்னகத்தே கொண்ட கதை இது. நடுத்தர வர்க்க வாழ்க்கையில் வெளிப்படையாகச் சிரித்துக் கொள்ள வாய்ப்பின்றிப் புன்னகைத்துக் கொள்ளும் ஒரு நிலையைச் சொல்லும் கதை.
அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் ஒரு முதிய தம்பதியோடு சொட்டும் சாக்கடைத் தண்ணீருக்காக முதல்நாளில் முரண்படும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் துன்பம் அடுத்த நாளில் புன்னகைத்துக் கொள்ளும் ஒன்றாக மாறிவிட்டதைச் சித்திரிக்கும் சங்கமம் கதை இப்படித் தொடங்கி நீள்கிறது:

முதலிலியே பலமாக அழுத்தியிருக்கலாம். அழைப்புமணியை அவன் இன்னொரு முறை அழுத்தினான். கிழவர் அவன் முன் நின்றான்.
“ என்னப்பா?” “ உங்க சாக்கடை சார்” ”என்ன?”
“உங்க சாக்கடைத் தண்ணி எங்க வீட்டுல ஒரேயடியாக் கொட்டறது.”
“போனவாரம் ரிப்பேர் பண்ணினாயே” “ ஆமாம்”
“ நாங்க அந்த இரண்டு நாளைக்கு அங்க தண்ணியே விடலே. எல்லாப் பாத்திரத்தைச் சேத்து வைச்சு மூணாம் நாள் தேய்ச்சோம்.”
“ அது சரியா ரிப்பேர் ஆகலை சார். இப்போ இன்னும் மோசமா யிடுத்து. முன்னே சும்மா சொட்டிண்டு இருந்தது. இப்போக் கொட்டறது”

**************
தொடக்கச் சந்திப்பின் உரையாடல் நீண்டு கடைசியில் இப்படி ஒரு முடிவுக்கு வருகிறது:
“நான் இங்கே வாடகைக்கு இருக்கிறவன். நீங்கள்ளாம் சொந்தக்காரங்க. நான் மாசா மாசம் வாடகையைக் கொடுக்கறதுக்கே சிரமப் பட்டுண்டிருக்கேன். அதுலே வீட்டை ரிப்பேர் பண்ணு, சாக்கடையை மாத்துன்னா முடியற காரியமா?”
“சார், என் தலையிலே உங்க சாக்கடைத் தண்ணி கொட்டறது!.”
“நான் கொட்டலை.” “ நீங்கதான் கொட்டறீங்க”
“வீட்லே சாக்கடைன்னா அதுலே தண்ணீ வராம இருக்குமா?”
“ உங்களுக்குச் சரி சார். அது என் தலை மேலே விழுறது.”
“ நீ வேணும்னா உன் கீழ் வீட்டுக்காரன் தலை மேலே கொட்டு.”
“ இது என்ன பேச்சு சார்? எங்க கஷ்டம் தெரியாம பேசறீங்களே?”
கிழவர் புன்னகை புரிந்தார். “ உன் கஷ்டம் தெரியாம இல்லேப்பா.. நான் என்ன பண்ண முடியும்? உனக்கு இருக்கற மாதிரி எனக்கும் இந்த வீட்டில இது ஒரு சாக்கடை தான். இங்கே தான் பாத்திரம் கழுவணும், துணி தோய்க்கணும். எங்களுக்கும் ஒரே பாத்ரூம். அது வெறும் பாத்ரூம்தான். நாங்க இரண்டே பேர். எவ்வளவு பாத்திரம் இருக்கப் போறது? அதையெல்லாம் எங்கேப்பா சுத்தம் செய்யறது? எல்லாம் இந்த பால்கனிச் சாக்கடையிலே தான்.

********************
முதியவரின் நியாயங்களை ஏற்றுத் திரும்பிய அவன் , தனது மனைவியை எதிர்கொள்ளும் நிகழ்ச்சியையும் உரையாடலாகவே தருகிறார் அசோகமித்திரன்:
“சும்மா சும்மா நாம்பளே ஏன் கட்டிட ரிப்பேரெல்லாம் செஞ்சுக்கணும்? போய் பில்டர்கிட்டே சொல்லணும்.”
“ என்ன நீ துரத்திண்டே இருக்கே.? நீ சொன்னா மாடிக்காரங்கிட்டே சொல்லணும். இப்போ நீ இன்னொன்னு சொன்னா பில்டர்கிட்டே சொல்லணும்”.
“ சாக்கடைத் தண்ணி என் தலை மேலதானே விழுறது. இந்த வீட்டுக்கு ஒரு மாடிதான் சாங்க்ஷன். இந்த பில்டர் இரண்டு மாடி கட்டினதாலே தான் இப்படி ஆயிருக்கு.’’
” உனக்குத் தெரியுமா எதுக்கு சாங்க்ஷன் இருக்கு. எதுக்கு இல்லேன்னு?”
“ எனக்கென்ன, எல்லாருக்குமே தெரியும். நம்ப மாடி கட்டி ஒரு வருஷத்துக்கப்புறம் தானே இரண்டாம் மாடி கட்டினான்? நம்பளைக் கேட்டுண்டு கட்டினானா! அடிச்சுப் பிடிச்சுக் கட்டி எல்லா ஃபிளாட்டையும் விக்கவும் வித்திட்டான். இப்ப நம்ம தலையிலே சாக்கடைத் தண்ணி அருவியாக் கொட்டறது.”
ஐந்து நிமிஷத்திற்குள் சாக்கடைக் கவலையை ஒதுக்கி வைத்து விட்டு அவன் ஆபீஸுக்குக் கிளம்ப வேண்டியிருந்தது. அவன் கிளம்பி ஐந்து நிமிடத்திற்கெல்லாம் அவன் மனைவியும் கிளம்பி விடுவாள்.

அவர்கள் மகன் மேலிருந்து சாக்கடைத் தண்ணீர் சொட்டுவதற்கு முன்பே காலை ஏழேகால் மணிக்குப் பள்ளிக்குக் கிளம்பி, பகல் இரண்டரை மணிக்கு வீடு திரும்பி, அம்மா வருவதற்காக மாடிப்படியில் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருப்பான். இப்படிக் காத்துக் காத்து உட்கார்ந்தே அவன் குழந்தை முகம் வயதுக்கு மீறிய அமைதியைக் காட்ட ஆரம்பித்து விட்டது. அவன் பெரியவனாகி இதே வீட்டில் சாக்கடைப் பிரச்சினை மீண்டும் எழுமானால் அவன் அதிகம் வருத்திக் கொள்ளாமல் அதற்கு ஒரு தீர்வு காண்பான்.
வீட்டுப்பிரச்சினைகளும், உறவுகளின் சிக்கல்களும் மட்டுமே நடுத்தர வர்க்கத்தின் நெருக்கடிகள் கிடையாது. அவர்களின் உண்மையான நெருக்கடிகள் வீட்டை விட்டு வெளியே கிளம்பிப் போவதிலும், அங்கே மனிதர்களைச் சந்திப்பதிலும், அவர்களைத் திருப்திப் படுத்துவதிலுமே இருக்கிறது. அந்தப் பகுதிக்குள் அசோகமித்திரனின் இந்தக் கதை நுழையவில்லை. வீடு, சாக்கடைத் தண்ணீர் உண்டாக்கிய நெருடல் என்பதிற்குள்ளேயே நிற்கும் அந்தக் கதையின் முடிவும் ஓர் உரையாடல் காட்சியாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடல் பழைய உரையாடல் அல்ல; அந்த மனிதன் கீழ்த் தளத்தில் குடியிருக்கும் இன்னொரு குடும்பத்தினருடன் நடத்தும் உரையாடல். இதோ அந்த உரையாடல்.
பொழுது விடிந்து முதல் அரை மணி நேரம் எல்லாம் சரியாக இருந்தது. அதன் பிறகுதான் முதல் சொட்டு விழுந்தது. அவன் மனைவி அவனைப் பார்த்தாள். “இரண்டு நாள் பொறுத்துக் கொள். சனி, ஞாயிறில் நிச்சயமாக ஆளை அழைத்து வந்து சரி செய்கிறேன்” என்றான்.

அப்போ அவன் வீட்டு அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்தால் ஒரு சிறுவன்.
“ என்னப்பா.. யார் நீ?” “ எங்க அப்பா உங்களை அழைச்சிட்டு வரச்சொன்னார்.”
“யாரு உங்க அப்பா?” “ இதற்குள் அவன் மனைவி , “இது கீழ் வீட்டுப் பையன்” என்றாள்.
“வாங்க.. வாங்க” என்று அப்பையனின் அப்பா வரவேற்றார். “ ஒரு சின்ன விஷயம், உள்ளே வாங்க” என்றார்.
அவன் அவரைப் பின் தொடர்ந்தான். அந்த வீட்டுக்காரர்கள் கழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். “ இதைப் பாத்தீங்களா!” என்று மேலே காட்டினார். கூரையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவன் வீட்டிலிருந்து தான்.
அவன் சிரித்துவிட்டான். அவர் அதைத் தவறுதலாக எடுத்துக் கொள்ளாமல் ,” என்ன” என்று கேட்டார்.
“என் வீட்டிலேயும் மேலேயிருந்து கொட்டறது. இப்போ இங்கே விழுற தண்ணி எங்க வீட்டுத்தண்ணியா, எங்க மாடி வீட்டுக்காரங்க தண்ணியான்னு யோசிச்சேன்.
அவன் மீண்டும் சிரித்தான்.ஆனால் அவர்கள் சிரிக்கவில்லை.

***************
பொதுவாக மனிதர்கள் எல்லாப் பிரச்சினைகளும் தங்களுக்கு மட்டுமே வருவதாக நினைக்கிறார்கள். அப்படி நினைப்பதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை மறைமுகமாகச் சொல்லும் இக்கதை மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதைப் பளிச்சென்று சொல்லி விடுகிறது. எல்லாவிதமான பிரச்சினைகளும் எல்லாருக்கும் வரத்தான் செய்யும்; இந்தப் பிரச்சினை இல்லை என்றால், அதைப் போன்ற இன்னொரு பிரச்சினையை அந்த மனிதன் சந்தித்துத் தீர்வு கண்டிருப்பான். இதைப் புரிந்து கொள்ளும் போது புன்னகைக்கவும், சிரிக்கவும் யோசிக்க வேண்டியிருக்காது.

No comments :