பின் தொடரும் அச்சம் :கிருஷ்ணன் நம்பியின் மாமியார் வாக்கு

பொதுவாக மக்களும், ஊடகக்காரர்களும் பொதுத்தேர்தல்களையே தேசத்தின் அரசியல் நடவடிக்கையாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். இப்போது பொதுத்தேர்தல் என்ற சொற்சேர்க்கையின் அர்த்தமே மாறிப்போய்விட்டது. 
இந்தியாவில் மைய அரசை உருவாக்கத் தேவையான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத்தேர்தலும், மாநில அரசுகளை உருவாக்கும் சட்டமன்றத் தேர்தல்களும் ஒரே சமயத்தில் நடந்த காலங்கள் உண்டு. ஒருதடவை வாக்குச் சாவடிக்குள் நுழைந்து திரும்பும் வாக்காளர்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும் தேர்ந்தெடுக்கத் தேவையான வாக்குச் சீட்டுகளில் முத்திரைகளைக் குத்தித் தனித்தனிப் பெட்டிகளில் போட்டு விட்டு வந்த காலம் இப்போது இல்லை. வாக்குச் சீட்டுகளும் இப்போது இல்லை; வாக்களிக்க முத்திரை குத்திரை வேண்டியதுமில்லை. நீங்கள் விரும்பும் சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால் போதும் வாக்காளரின் வாக்கு கணக்கில் சேர்ந்து விடும் நிலையை எலக்ட்ரானிக் வாக்கு எந்திரங்கள் கொண்டு வந்து விட்டன. எல்லாம் வெளிப்படையாக இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டால் வாக்குகள் அளிக்கப் படும் அதே நேரத்திலேயே ஒவ்வொரு வேட்பாளர்களும் பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கைகளை அந்த எந்திரங்கள் காட்டும் படி செய்வதில் சிரமம் எதுவும் இல்லை. வாக்குப் பதிவு முடிந்தவுடன் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கிடைத்த வாக்குகளைக் கூட்டி ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளைச் சொல்லி விடலாம். வெற்றி தோல்விக்காக இரண்டு மூன்று நாட்களுக்குக் காத்திருக்கத் தேவையில்லை. ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை என்பதால், ஓட்டுப் போட்டவர்களும் அதனைப் பெற்றவர்களும் கொஞ்சம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பொதுத்தேர்தல்களின் முடிவுக்காகக் காத்திருப்பதை விட இடைத்தேர்தல் முடிவுகளாகக் காத்திருப்பது இன்னும் பரபரப்பாக இருக்கிறது. ஆம், இப்போதெல்லாம் இடைத்தேர்தல்களே அதிகப் பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. அறிவிக்கப்படும் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு ஆளுங்கட்சிகள் செயல்படுகின்றன. 
எதிர்க்கட்சிகள் எப்படியாவது ஆளுங்கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று நெருக்கடியைச் சந்திக்கின்றன. இடைத்தேர்தல்களின் வெற்றி தோல்விகள், வரப்போகும் பொதுத்தேர்தல்களில் போடப்போகும் கூட்டணிப் பலத்திற்கும், அதன் மூலம் அடையப்போகும் வெற்றிக்கும் அடிப்படை எனக் கருதப்படுகின்றன. அதன் காரணமாக எப்படியாவது வெற்றிக் கனியைப் பறித்தாக வேண்டும் என்ற கட்டாயம். கூட்டம் காட்டி மிரட்டுவது ; பணம் கொடுத்து மயக்குவது என எல்லாவழிகளிலும் அரசியல் கட்சிகள் இறங்கிக் கடுமையான தேர்தல் வேலைகளைச் செய்கின்றன. வாக்காளர்களைக் கவருவது என்பதை விடத் தங்கள் கட்சிக்காரர்களைத் திருப்திப் படுத்துவதும், அவர்களைத் தங்கள் ஆதரவாளர்களாக நீட்டிக்கச் செய்வதும் வேட்பாளர்களின் முக்கியப் பிரச்சினையாக இருக்கின்றன. 
தேர்தலின் நோக்கங்களும், நடைமுறைகளும், வாக்களிக்கும் முறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் வாக்களிக்கும் வாக்காளர்களின் மன நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியைக் கேட்டால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. வாக்காளர்களை ஏதோ ஒருவித அச்சமும் பீதியும் பின் தொடர்ந்து வந்து இயக்கிக் கொண்டே இருக்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது
ஜனநாயக அரசைத் தேர்ந்தெடுப்பதில் தனி மனிதர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களும் தேர்வுகளும் செயல்பட விடாமல் சாதி, மதம் போன்ற கும்பல் மனோபாவம் உண்டாக்கும் அச்சமும் பீதியும் பல நேரங்களில் காரணிகளாக இருக்கின்றன. இல்லையென்றால் வெற்றி பெறுபவர்களோடு தங்களை இணைத்துக் கொள்ளுதல் என்ற பயத்தின் பின்னணி காரணமாக இருக்கின்றன. அண்மைக்காலங்களில் தரப்பட்ட பணத்திற்கு வாக்களிக்கவில்லை என்றால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் என்ற அச்ச உணர்வு வாக்களிக்கும் போது கையைப் பிடித்து வாக்களிக்கச் செய்கின்றன.
இந்த அச்ச உணர்வுகள் எல்லாம் இல்லாத நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு அப்பாவி மருமகளை அவளது மாமியாரின் பயமுறுத்தும் சொல்- வாக்கு- எப்படிப் பயமுறுத்தி வாக்களிக்கச் செய்தது என்பதைச் சுவாரசியமான அங்கதம் கலந்த தொனியில் ஒரு கதையாக எழுதியுள்ளார் சிறுகதை ஆசிரியர் கிருஷ்ணன் நம்பி. அவரது மாமியார் வாக்கு என்ற அந்தக் கதை இன்றைய அரசியலை விமரிசனம் செய்வதற்காக எழுதப்பட்ட கதை இல்லை. மாமியார்- மருமகள் உறவுக்குள் செயல்படும் அதிகாரம் சார்ந்த செயல்பாடுகளைச் சொல்ல எழுதப்பட்ட கதையே என்ற போதும் வாக்களிப்புக்குள் தொடரும் அச்சத்தின் நீட்சி என்பதும் அந்தக் கதையின் மைய உணர்வு என்பதை மறுத்து விட முடியாது.
தமிழின் முக்கியப் படைப்பாளியாகவும் ஆளுமையாகவும் மாறிய சுந்தரராமசாமியின் சமகாலத் தவராக அவரோடு நட்புக் கொண்டிருந்த கிருஷ்ணன் நம்பியும் நாகர்கோவிலில் பிறந்தவர். இலக்கணச் சுத்தமான சிறுகதைகளை எழுதிய அவர் மிகக்குறைந்த வயதிலேயே மரணத்தைச் சந்தித்து விட்டார். இப்போது அவரது எல்லாக் கதைகளும் கிருஷ்ணன் நம்பியின் கதைகள் என்றொரு தொகுப்பாக வெளி வந்துள்ளது. கிருஷ்ண நம்பி பத்து பக்கத்தில் எழுதிய கதையின் சில பகுதிகளை இங்கே தருகிறேன். இதனை வாசித்தாலே அந்தக் கதையின் சாரமும், நோக்கமும் தெளிவாகப் புரியும்.
மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப்போட்டி.கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் ரெண்டு பட்டு நின்றது.
சமையல் வேலைக்குப் போகிறவர்களும் கோவில் கைங்கர்யக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக் கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்குக் கடனுக்குப் பால் வார்த்துக் கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான்.
மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாக பசு இருந்தது. வேளைக்குக் கால்படி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு மிச்சத்தை நியாயமாகத் தண்ணீர் சேர்த்து விலைக்கு விற்றுவிடுவாள்.ரொக்கம்தான். கடனுக்குத் தான் இந்தக் கடன்கார வீரபாகுக் கோனார் இருக்கிறானே.
மீனாட்சி அம்மாள் அப்படியொன்றும் வறுமைப்பட்டவள் அல்ல.இருந்த வீட்டுக்கும், ஊரடியில் அறுபத்தாறு செண்ட் நஞ்சைக்கும் அவள் சொந்தக்காரி. தாலுகா பியூனாக இருந்து சில வருஷங்களுக்கு முன் இறந்து போன அவள் கணவன் அவள் பெயருக்கே கிரையம் முடித்து வைத்த சொத்து இது. ராமலிங்கம் ஒரே பையன். ஸாது. தகப்பன் வேலையைப் பாவம் பார்த்துப் பையனுக்கே சர்க்கார் கொடுத்து விட்டது அவனுடைய அதிர்ஷம்தான். கல்யாணமும் பண்ணி வைத்து விட்டாள் மீனாட்சி அம்மாள். தள்ளாத வயதில் உதவிக்கு ஒரு மருமகள் வேண்டும் அல்லவா? ருக்மினி மெலிந்து துரும்பாக இருந்தாலும் வேலைக்குக் கொஞ்சமும் சளைக்காதவள். அதிகாலையில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகுமுன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பதுவரை எல்லா வேலைகளையும் அவள் அப்பழுக்கில்லாமல் செய்து விடுவாள்.
ருக்மிணியும் மாமியாரும் என்றுமே சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். பரிமாறியபடியே, “ பெண்டிற்கழகு உண்டி சுருக்குதல்” என்று மீனாட்சி அம்மாள் அட்சர சுத்தத்துடன் கணீரெனக் கூறுகையில், அந்த அரிய வாக்கை மீனாட்சி அம்மாளே அவளது சொந்த அறிவால் சிருஷ்டித்து வழங்குவது போலத் தோன்றும்.
தேர்தலுக்கு முன் தின இரவுப் பேச்சுக் கச்சேரியில் தேர்தல் விஷயம் பிரதானமாக அடிபட்டதில் ஆச்சரியம் இல்லை. மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், “ ஒங்க ஓட்டுக் கிளிக்குத்தானே மாமி?” என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. “ ஏண்டி .. எல்லாம் தெரிஞ்சு வெச்சிண்டே என்னைச் சீண்டறயா?” என்றாள் மீனாட்சி அம்மாள். “ ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?” என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்து விட்டது. “ பொண்டுகளா.. என்னையும் அவளையும் பிரிச்சா பேசறேள்; நானும் அவளும் ஒண்ணு. அது தெரியாதவா வாயிலே மண்ணு” என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.
நான் இன்னைக்கு ஓட்டுப் போறேன். நான் ஆருக்குப் போடனும் நீ சொல்லு... சொல்லுவியா.. நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமா? கிளி பிடிக்குமா? சொல்லு.. எனக்கு ஆரப் பிடிக்குமோ, அவாளத்தான் ஒனக்கும் பிடிக்கும் இல்லியா?.. நெஜமாச் சொல்றேன் எனக்குக் கிளியைத் தான் பிடிக்கும் . கிளி பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அதமாதிரிப் பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும்.. ஆனா அதைவிடக் கிளியப் பிடிக்கும். ஆனா பூனைக்கு கிளியைக் கண்டாலே ஆகாது.
மீனாட்சி அம்மாள் சொல்லி வைத்திருந்தபடி, பக்கத்து வீட்டுப் பெண்கள் சிலர் ருக்மிணியையும் சாவடிக்கு அழைத்துச் செல்ல , இருப்பதில் நல்ல உடைகளணிந்து வந்திருந்தனர். .. “ சரி, சரி கிளம்புங்கோ..” என்று எல்லோரையும் தள்ளி விட்டாள் மாமியார் அம்மாள். படி இறங்கியவளைக் கையைத் தட்டி, “ இந்தா, சொல்ல மறந்துட்டேனே.. ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ” என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத்தணித்து, “ஞாபகம் வெச்சிண்டிருக்கியா.. தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா.. பூனைப் படமும் கிளிப்படமும் போட்டிருக்கும். பூனைப் படத்துக்குப் பக்கத்துல முத்திரை குத்திடு. வழீல இதுகள்ட்ட வாயைக் குடுக்காதே.. போ” என்றாள்.
ருக்மிணி அன்றுவரை கியூ வரிசைகளை எங்குமே கண்டவளில்லை.. இது அவளுக்குப் புதுமையாகவும் ஒரு நல்ல ஏற்பாடாகவும் தெரிந்தது. ரெயில் மாதிரி நீளமாக இருந்த வரிசை இப்போது குறுகிப் போய்விட்டதே. ஆண்கள் ஏழெட்டுப் பேரே நின்றனர். சாவடி அவள் பக்கம் வேகமாக வந்து கொண்டிருந்தது.
கடைசியில் , ஒரு ஸ்கிரீன் மறைப்பிற்குள் எப்படியோ தான் வந்து விட்டதை ருக்மிணி உணர்ந்தாள். அவளுக்குப் பின்னால் திரைக்கு வெளியே ஒரு பெண் சிரிப்பொலி தெறித்து, நொடியில் அடங்கிற்று. ஸ்வாமி, என்ன அவஸ்தை இது! பற்கள் அழுந்தின. “ஐயோ, பால் கறக்க நேரமாயிருக்குமே” என்று நினைவு வர மடியில் பால் முட்டித் தெறிக்கும் மறுகும் பசுவும், கட்டிலிலிருந்து தாவித் தவிக்கும் அதன் கன்றும் “ ம்மாம்மா” என்று அவள் செவிகளில் அலறிப் புடைக்கலாயின. அவள் உடம்பு இப்படிப் பதறுவானேன்? மாரும் லேசாக வலிக்கிறது.. ஆ. கிளி! கை ருக்மிணியின் கையைப் பற்றவும், திடுக்கிட, “யாரது” என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் அங்கில்லை.. ஆனால் அவள் கையை வேறொரு கை இறுகப் பற்றியிருந்ததென்னமோ நிஜம். பெண் கைதான். வேறு யாருடைய கையும் அல்ல; மாமியார் மீனாட்சி அம்மாளின் கைதான்! கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை, பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்து விட்டது. ஆ. ருக்மிணியின் வாக்கு பூனைக்கு! ஆம் .. பூனைக்கு!
பரபரவெனச் சாவடியை விட்டு வெளியேறினாள் அவள் . அவளுக்காகப் பெண்கள் காத்திருந்தனர். இவள் வருவதைக் கண்டதும் அவர்கள் ஏனோ சிரித்தனர். பக்கத்தில் வந்ததும், “ருக்கு யாருக்குடி போட்டே” என்று ஒருத்தி கேட்க, “ எங்க மாமியாருக்கு” என்ற வார்த்தைகள் அவள் அறியாது அவள் வாயில் நின்றும் வெளிப்படவும் கூடி நின்ற பெண்கள் பெரிதாகச் சிரித்தார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்