Linggo, Oktubre 25 2009


தாம்பத்தியத்தின் முழுமை
க.நா.சுப்பிரமணியத்தின் மனமாற்றம்

புதிதாக வந்துள்ள அரசு அறிவிக்கையின்படி ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடைகளைப் பெறுவதற்குத் தங்கள் புகைப் படங்களோடு வாரிசுகளின் புகைப்படத்தையும் அலுவலகத்தில் தர வேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தச் சுற்றறிக்கையைப் பார்த்தவுடன் அவர்கள் கொஞ்சம் கலங்கித் தான் போனார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தம்பதிகள்.
இதுவரை அவர்களின் நம்பிக்கை சார்ந்த யாத்திரைகளுக்கும், மருத்துவம் சார்ந்த சோதனை முயற்சிகளுக்கும் எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைத்து விடவில்லை. என்றாலும் மனம் தளர்ந்து விடவில்லை. கடைசி முயற்சியாகச் செயற்கை முறையில் கருவைத் தாங்கிக் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்திருந்தார்கள். அதன் பலனைக் காண அதற்குள் இப்படியொரு சுற்றறிக்கை வந்து அவர்களின் மனக் கலக்கத்தைக் கொஞ்சம் கூட்டி விட்டது. அவர்களுக்குக் குழந்தை இல்லை என்று பலரும் பேசியது பல நேரம் காதில் விழவில்லை என்பது போலக் காட்டிக் கொண்டு நகர்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அலுவலகத்தில் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது மனம் தவித்திருக்க வேண்டும். அடுத்த நாள் அந்தத் தம்பதியரில் மனைவி மட்டும் அலுவலகத்திற்கு வரவில்லை.
குழந்தை இல்லை என்பதற்கும் மலட்டுத்தனம் இருக்கிறது என்பதற்கும் முதலில் கலங்கிப் போவது பெண்ணாகவே இருக்கிறாள். திருமணமாகிச் சில ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கவில்லை என்றால் முதலில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதும் பெண்ணாகவே இருக்கிறாள். ஆண் முதன்மையை அல்லது ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய சமுகம் எப்போதும் பெண்ணையே கேள்விக்குரியவளாகவும், பதில் சொல்ல வேண்டியவளாகவும் வைத்திருக்கிறது.
ஆணும் பெண்ணும் காதல் செய்வதற்கான காரணம் என்ன? இந்தக் கேள்வியைக் காதல் செய்யும் ஆணிடம் கேட்டாலும் சரி, பெண்ணிடம் கேட்டாலும் சரி உடனே பதில் எதுவும் கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் திருமணம் நடக்கிறது ? எனத் திருமணம் செய்து கொண்ட ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ கேட்டால் உடனடியாகக் கிடைக்கக் கூடிய பதில் “தங்கள் வம்சத்தை விருத்தி செய்யவே திருமணம் செய்து கொண்டோஒம்” என்ற பதில் உடனடியாகக் கிடைக்கும்.
இந்தக் கேள்விக்குப் பலவிதமான பதில்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் சொல்லும் பதில் தங்கள் பரம்பரையின் தொடர்ச்சி விட்டுப் போய்விடக் கூடாது என்பதற் காகவே ஒவ்வொரு திருமணமும் நடக்கிறது என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை நிறைவேற்றம் கண் கூடாக நடக்க ஒவ்வொரு குடும்பமும் சில ஆண்டுகள் கூடக் காத்திருக்கத் தயாராக இருப்பதில்லை. திருமணம் நடந்து அடுத்த திருமண நாளில் பெண் கர்ப்பமாக இருந்தால் அந்தக் குடும்பம் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை . அப்படி நடக்கவில்லை என்றால் முதல் சந்தேகம் பெண் மேல் தான்.
தனது முதல் மனைவிக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக அவளது தங்கையை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆண்மை நிரம்பிய ஆண்கள் தங்களிடம் மலட்டுத்தனம் இருக்கக் கூடும் என நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. வாய்ப்புக் கிடைத்தால் மூன்றாவதாக ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்யவும் தயாராக இருப்பார்கள். ஆனால் இன்று கிராமங்கள் கூட மாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தை பிறக்கவில்லை என்று தெரிந்தவுடன் உடனடியாகக் கணவனையும் மனைவியையும் ஒரு சேரச் சோதனைக்கு உட்படுத்தும் மருத்துவ மனைகள் வந்து விட்டன. என்ன செய்தாலும் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்ற போதிலும் செயற்கை முறைக் கருத்தரிப்புகளும் சோதனைக் குழாய் குழந்தைப் பேறும் இருக்கிறது. அநேகமாக வாரிசு இல்லை என்ற பேச்சு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
குழந்தையின்மை அல்லது மலட்டுத் தன்மையை மையப் படுத்திய ஏராளமான சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்றாலும் எழுதியுள்ள நேர்த்தி மற்றும் அமைப்புக்காக மனமாற்றம் என்ற க.நா.சுப்பிரமணியத்தின் சிறுகதை எப்போதும் நினைவுக்கு வரும். 1950-60 களில் கோவையிலிருந்து வ.விஜயபாஸ்கரன் நடத்திய சக்தி இதழில் மனமாற்றம் கதையை எழுதிய க.நா.சுப்பிரமணியம் தமிழின் முன்னோடித் திறனாய்வாளர். மேற்கத்திய இலக்கிய வடிவங்கள் மற்றும் திறனாய்வுப் பார்வைகளில் ஆழ்ந்த புலமையும் தேர்ச்சியும் கொண்டவர் என்றாலும் இந்திய வாழ்க்கை மற்றும் இலக்கிய நோக்கு போன்றவற்றில் நம்பிக்கையும் கொண்டவர். அவரது முதன்மையான அடையாளம் இலக்கிய விமரிசனம் தான். அதற்காகவே அவருக்கு இந்திய அரசு சாகித்திய அகாடெமி விருது வழங்கிச் சிறப்பித்தது.
க.நா.சு.வின் மனமாற்றம் கதையின் மொத்தப் பாத்திரங்கள் நான்கு தான். அதில் மூன்று பாத்திரங்களுக்கு மட்டும் தான் பெயர்கண்டு. கதை நடக்கும் காலம் கூட ஒரு நாள் மாலையும் முன்னிரவும் மட்டும் தான். அலுவலகம் முடிந்து வரும் சீனிவாசனும் அவரது மனைவி லட்சுமியும் நடத்தும் உரையாடலாகக் கதையைத் தொடங்கியுள்ளார்.
” டாக்டர் வருவதாகச் சொன்னாரே, வந்தாரோ?” “ வந்தார் லட்சுமி
“ உம்.. லேடி டாக்டரைப் பார்த்தாராமா?” “ பார்த்தாராம்”
” அவள் என்ன சொன்னாளாம்” “ ஆப்பரேஷன் பண்ணத்தான் வேணும் என்றானாம்..”
“ ம்..ம்..” “ டாக்டரும் ஆப்பரேஷன் பண்ணிக் கொள்வதுதான் நல்லது என்று அபிப்பிராயப் படுகிறார்.?”
“ம்..ம்..” “ஒன்றும் பயமில்லை என்றார். ரொம்பச் சின்ன ஆப்பரேஷன் தானாம். ”
”பயமில்லேன்னாலும்.. குளோரோபாரம் கொடுத்துத்தானே ஆப்பரேஷன் பண்ணுவா?” இப்படி ஆரம்பிக்கும் உரையாடல் இருவருக்கும் இடையே ஊடலாக மாறி, ஆபரேஷனில் லட்சுமி இறந்தால் கணவன் மறுமணம் செய்வதற்குள் சென்று அவளோடு சினிவாசன் சந்தோசமாக வாழ்வதற்குள் நுழைகிறது. அந்த உரையாடலில் லட்சுமி வெளிப்படுத்துவது தனக்குக் குழந்தை இல்லை என்பதன் ஆழமான வடுக்களை என்பதைக் கதையை வாசிக்கும் போது உணரலாம்:
”உங்களுக்கென்ன? நான் போனாஇன்னொருத்தியைப் பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கொண்டு விடுவீர்கள்!” “ இதென்ன , இப்படி அசடாப் பேசறே?”.
” நான் போனப்புறம் லட்சுமி என்று ஒருத்தி இருந்தது கூட உங்களுக்கு ஞாபகம் வராது, இல்லையா? நான் சொல்றது நிஜந்தானே?” “இதோ பாரு, இந்த அசட்டுப் பேச்சை எல்லாம் விட்டு விட்டு.. ..” “ உள்ளதைச் சொன்னால் அது அசட்டுப் பேச்சோ?” ”
என்ன உள்ளதைச் சொன்னே, உள்ளதை?”

“பெட்டி நிறையப் புதுப்புடவை வைத்திருக்கேன். அதை அவள் எடுத்துக் கட்டிப்பாள்.” “ இப்படிப் பேசிக் கொண்டே இருந்தால் நான் போறேன்.” என்று கிளம்பும் சீனிவாசன் பின்னர் அவளைச் சமாதானப் படுத்திச் சினிமாவுக்கு அழைத்துச் சென்று விட்டுக் கடைக்கெல்லாம் போய்விட்டுத் திரும்புகிறான்.
அவர்கள் இருவரிடையே நடக்கும் இந்த உரையாடல் இன்று மட்டும் நடக்கும் பேச்சு அல்ல; சமீப காலங்களில் தினசரி நடக்கும் ஒன்றாகி விட்டது. காரணத்தை ஆசிரியர் தனது கூற்றாகத் தருகிறார்: சீனிவாசனும் லட்சுமியும் பத்து வருஷங்களுக்கு முன் கல்யாணமான , ஆனால் இன்னும் புது மெருகு அழியாத, இளந்தம்பதிகள். அவர்களுடைய புது மெருகு அழியா ததற்குப் பல காரணங்கள் இருந்தன- அவர்களுடைய குழந்தை உள்ளங்கள்; அவர்களுடைய நல்ல ஸ்திதி முதலியன. ஆனால் முக்கியமான காரணம் அவர்களுக்குக் குழந்தை பிறக்காதது தான்.

சினிமாவுக்குப் போயிட்டு வரும்போது லட்சுமி ஒரு பொம்மையை வாங்கிக் கொள்கிறாள். அந்தப் பொம்மையைக் கீழ் வீட்டிலிருக்கும் சாலுவுக்குத் தரப் போவதாகச் சொல்கிறாள். சாலு எப்போதும் அவளது தனிமையைப் போக்கும் மாற்று மருந்து. அவளுக்காக ஒரு சாக்லெட் பொட்டலமும் வாங்கிக் கொண்டாள். தனக்குக் குழந்தை இல்லை என்பதால் அவள் காட்டும் பிரியத்தில் முதலிடம் இந்தச் சாலுவுக்குத் தான்.
தான் வாங்கி வந்த பொம்மையையும் சாக்லெட்டையும் தருவதற்காகச் சாலு.. சாலு.. என்று அழைத்தபடி படிகளில் இறங்கிய லட்சுமிக்கு, “ சாலு தூங்கிப் போய் விட்டாளே” என்று அவள் அம்மா சொன்னது பொய் என்பதைத் தொடர்ந்து வந்த சாலுவின் குரல் உணர்த்தியது. ஆம், ’ஏன் மாமி?’ என்று சாலுவின் குரல் அவளது அம்மாவின் குரலைத் தொடர்ந்து கேட்டது. தொடர்ந்து சாலுவின் அம்மா பக்கத்திலிருந்த பெண்ணிடம் சொன்ன அந்த வார்த்தைகள் லட்சுமியின் மனதை அப்படியே மாற்றிப் போட்டு விட்டது.

அவள் சொன்ன வார்த்தைகள் இதுதான்: “மாடியிலே குடியிருக்கிறது அந்த குழந்தையில்லாத பெண்” அந்தக் குரலைக் கேட்டபின் லட்சுமி மணமும் குணமும் முந்திரிப்பருப்பும் நிறைந்த சாக்லேட்டையும் பொம்மையையும் வீசி எறிந்து விட்டு, சீனிவாசனை அழைத்து, “ டாக்டரிடம் சொல்லி விடுங்கள்; முடியுமானால் நாளைக்கே ஆபரேஷன் செய்து விடட்டும் ” என்றாள் என்பதாகக்கதையை முடிக்கிறார்.

ஆபரேஷன் செய்து கொள்ளத் தயங்கிய அவளது மனத்தை மாற்றிய சொல் ‘குழந்தையில்லாத பெண்’ என்பதுதான். குழந்தையில்லை என்பது குற்றம் அல்ல என்ற போதிலும் நமது சமூகம் குழந்தையில்லாத பெற்றோர்களைக் குற்றவாளிகள் போலவும் பாவங்கள் செய்தவர்கள் போலவும் கணித்துத் தனிமைப் படுத்துகிறது. மலட்டுத்தனம் என்பது மட்டுமல்ல, உடல் குறைகள், இயலாமை போன்ற தனிமனிதப் பிரச்சினைகள் கூட தொடர்புடையவர்களால் உணரப் படுகிறது என்பதைவிட மற்றவர்களே அவர்களுக்கு , உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

வாரிசு என்பதைத் தனிச்சொத்து உருவாக்கத்தின் விளைவுகளோடு தொடர்பு படுத்தி சமூக விஞ்ஞானம் விளக்கிய போதும் குழந்தையின்மை என்பது தனிமனிதப் பிரச்சினை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் இனக் குழு வாழ்க்கையைத் தொடரும் பல சமூகங்களில் வாரிசுருவாக்கம் சமூகப் பிரச்சினையாகவே கருதப்படுகிறது. இந்தியாவில் பல சமூகங்கள் இன்னும் இனக்குழு வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்பாத நிலையில் இருப்பதால் குழந்தையின்மையும் சமூகப் பிரச்சினையாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கத்திற்குள்ளும் நுழையும் நமது சமூகம் அவர்களைத் தொடர்ந்து நெருக்கடிக்குள் நிறுத்துகிறது. இதை இந்திய சமூகத்தின் பலம் எனப் பலரும் சொல்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய சுமை என்பதை நிதானமாக யோசித்தால் புரிந்து கொள்ளலாம்.
அதுவுமொரு பசிதான் ! - ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா
==========================================================
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எவை எனக் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் எனப் பாடத்திட்ட அறிவைக் கொண்டு பதில் சொல்கிறோம். ஆனால் வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றுப் பசியைத் தாண்டி இன்னொரு பசி உடம்புக்குள் ஆறாத பெரு நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது எனக் கல்வியின் உயர்நிலையான உளவியல் கூறுகிறது. காமம் என்னும் அப்பெருநெருப்பு பற்றிக் கொள்ளும் நேரம், இடம், எதிர்கொள்ள வேண்டிய பின் விளைவுகள் பற்றியெல்லாம் எல்லா நேரமும் சிந்திந்துக் கொண்டிருப்பதில்லை என்பது உடல் இச்சைகளை விளக்கும் உளவியலின் பகுதிகள்.

காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலின் கர்ப்பக்கிருகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் உடல்களை இணைத்து இறுக்கிக் கொண்டிருந்த காட்சியைப்படமாக அந்தப் பத்திரிகையில் பார்த்த போது நினைவுக்கு வந்தது இந்தப்பாடங்கள் தான். பெண்ணுடலும் ஆணுடலும் இணையும் அந்தக் கணத்தில் அவர்கள் இருவரும் தங்களை மறக்கவே செய்திருப்பார்கள். அந்த ஆண் தான் புனைந் திருந்த குருக்கள் அல்லது அர்ச்சகன் என்ற பாத்திரத்தையும், அந்தப் பெண் பக்தை என்ற பாத்திரத்தையும் மறந்து அல்லது இழந்து போகாதிருப்பின் இந்தக் காட்சியை நாம் காண முடியாது. தன் விருப்பமின்றிச் சமூகம் தன் மீது சுமத்திய பாத்திரத்தை எப்போதும் விட்டு விட ஒவ்வொரு மனமும் விரும்பிக் கொண்டே இருக்கிறது. குறைந்த பட்சம் சில கணங்களாவது விட்டு விலகி விடவே விரும்புகிறது. அதற்கு இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்ப்பதில்லை.

ஒட்டு மொத்த இச்சையை உடலின் இச்சை எனப் பிரித்துப் பேசுவதன் மூலம், மனம் புனிதமானது; உடல் தீட்டானது; அது குற்றங்களைச் செய்யத் தூண்டிக் கொண்டேயிருப்பது;ஆனால் மனமோ அதைத் தடுத்து நிறுத்தி ஆற்றுப்படுத் துவது எனச் சமயம் விளக்குகிறது. சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் காரண மான மனம் கடவுளின் இருப்பிடம் எனவும், உடல் அழுக்கடையக் கூடியது; ஆசைகளின் இருப்பிடம்; சாத்தானின் வாசஸ்தலம் அல்லது அரக்கனின் கோட்டை; எனவே அது தீட்டானது எனவும் சமயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கூட ஆண் உடலை விடப் பெண் உடலே தீட்டை அனுபவித்துக் கொண்டே இருப்பது என நம்ப வைத்துள்ளது நம்பிக்கைகள்.

கடவுளை நினைக்கும் பக்தன் அந்த நேரத்தில் தன் இருப்பையே மறந்து தன்னை இழப்பதையே பக்த மனத்தின் உச்சநிலை எனச் சொல்வதற்கீடாக தனிமனிதன் காம விருப்பில் தன்னை இழந்து அதை அடையும் ஆவலோடு இருப்பதை எல்லோரும் பல கணங்களில் உணரவே செய்கிறார்கள். ஆனால் சமூக ஒழுங்கு கருதி அதை வெளியில் சொல்வதில்லை. வயிற்றின் பசியைத் தீர்க்க ஒரு தனிமனிதன் சமூகத்தின் விதிகளையெல்லாம் தள்ளி வைத்து விட்டுக் காரியங்களில் இறங்கும் நிலையில் அவனைக் குற்றவாளி எனச் சொல்லும் சமூக ஒழுங்குகள் தான் உடலின் பசிக்கான முயற்சிகளையும் குற்றம் எனவும், கள்ள உறவு எனவும் சொல்லிக் காட்டித் தண்டனை வழங் கவும், தள்ளி வைக்கவும் முயல்கிறது.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற கருத்தைச் சொன்ன அறிஞனின் கூற்றை ஒவ்வொரு மனிதர்களும் விருப்பம் இல்லாமலேயே பின்பற்றிக் கொண்டிருக் கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் சமூகத்தின் நிர்ப்பந்தம், சூழல், கட்டுப்பாடுகள் என்பனவற்றை முழுமையாகப் புறக்கணித்து விட்டுத் தன்னுடைய வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்வதையே எப்போதும் மனித மனம் விரும்புகிறது. ஆனால் சமூகமும் அதன் நிறுவனங்களும் உண்டாக்கி வைத்துள்ள கட்டுப்பாடுகளும், அதனால் கிடைக்கும் பாதுகாப்பும் இன்னொரு பக்கம் இழுத்துக் கொண்டிருப்பதில் நிலைகுலையாமல் மனித வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

மனிதனை உடல் என்றும் மனம் என்றும் பிரித்துப் பேசுவது சமய அறிவின் முறையியல் எனச் சொல்லும் உளவியல், உடல் இச்சை என்று சொல்வது கட்டியெழுப்பும் ஒரு புனைவு என விளக்குகிறது. உடலுக்குத் தான் இந்தப் பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை எல்லாம் என்று சொல்வதை மறுத்து, உடல் பருண்மையாக- தூலமாக- தெரிவதைப் போல மனத்தின் இடம் எது எனச் சொல்ல முடியுமா? எனக் கேட்கிறது. மனம் என ஒன்று தனியாக இல்லை. உடலும் மனமும் ஒன்று தான் எனப் பேசும் உளவியலைத் தங்கள் படைப்புகளின் ஆதாரக் கோட்பாடாகக் கொண்டு தமிழில் பல எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை எழுதியுள்ளார்கள். இதற்கு முழுமையான உதாரணமாக ஒரு படைப்பாளியைக் காட்ட வேண்டும் என்று கேட்டால் நான் ஜி.நாகராஜனையே முன் மொழிவேன்.

ஜி.நாகராஜன் இந்த உலகில் வாழ்ந்த காலம் வெறும் ஐம்பத்திரண்டே ஆண்டுகள் (1929-1981) தான். இதற்குள் அவரது படைப்புலக வாழ்க்கை என்பது 24 வருடங்கள் கொண்டது. இந்த 24 வருடங்களுக்குள் எத்தகைய இலக்கிய வரலாற்றிலும் இடம் பெறத்தக்க புனைகதைகளை எழுதி விட்டுச் சென்றுள்ளவர் ஜி.நாகராஜன். தொடக்கத்தில் இடதுசாரி இயக்கங்களில் இணைந்து செயல்பட்டார். அவர் பின்னாளில் அவ்வியக்கங்களுக்கும், அவை பின்பற்றிய இறுக்கமான கோட்பாடுகளுக்கும் எதிராகத் தன்னை நிறுத்திக் கொண்டவர். அவரது நாளை மற்றும் ஒரு நாளே என்ற நாவலுக்கும் குறத்தி முடுக்கு என்ற குறுநாவலுக்கும் அவற்றின் கதைக்களம் மற்றும் முன்நிறுத்தும் பாத்திரங்கள் சார்ந்து முன் மாதிரிகள் கிடையாது. எப்போதும் வெளிசார்ந்து மட்டும் அல்லாமல் சமூக நிலை, அதன் மதிப்பீடுகள், விதிகள், நிறுவனங்கள் , அவை வலியுறுத்தும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல் என அனைத்துத் தளத்திலும் விளிம்பில் இருக்கும் மனிதர்களை எழுதிக் காட்டியவர் ஜி.நாகராஜன்., கதைசொல்லும் லாவகம், கதைக்களம், மைய நீரோட்ட வாசிப்பு மட்டுமே கொண்டவர்களைத் திக்குமுக்காடச் செய்யும் கேள்விகள் எனப் புதுமை காட்டும் அவரது மொத்தப் படைப்புகளும் ஜி.நாகராஜன் படைப்புகள் எனக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றுள்ளன. முதலில் தமிழ்ப் படைப்புகளை மட்டுமே வெளியிட்ட பதிப்பகத்தார் இப்போது வந்துள்ள புதிய பதிப்பில் அவர் எழுதிய ஆங்கிலப் பனுவல்களையும் இணைத்துள்ளனர். அவர் எழுதியதாக அச்சிடப் பெற்றுள்ள 34 சிறுகதைகளில் ஒன்று கல்லூரி முதல்வர் நிர்மலா என்பது.
கல்லூரி முதல்வர் நிர்மலா கதையை ஜி.நாகராஜன் எழுதியுள்ள விதம் திரும்பத் திரும்பப் படித்துப் படைப்பாளிகள் பின்பற்றத் தக்கதாக இருக்கிறது. மனிதர்களுக்குள் உறையும் காமத்தின் இயல்புக்கு முன்னால் வயது, பதவி, கட்டிக்காத்த பிம்பம் என எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் விதம் அற்புதமானது. கல்லூரி முதல்வரின் அலுவலக அறையைக் கதை நிகழும் இடமாகக் கொண்டிருந்தாலும், கதையின் ஒவ்வொரு நிகழ்வும் நினைவுகளிலும், கடித வரிகளின் விரிவா கவும் தரப்பட்டுள்ள லாவகம் சிறப்பான ஒன்று. எழுதப் போகும் விசயத்தின் கூர்மையைக் கவனத்தில் கொண்டு இந்த உத்திகளைப் பின்பற்றியுள்ள ஜி.நாகராஜன் தமிழ்ச் சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் என்பதற்கு இந்த ஒரு கதையே போதும்.

“ எனக்கு முதலில் பயமாக இருந்தது,ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் ‘ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும் போது, ‘ பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை;பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச்சொல்லும் போது சமயங்களில் அவன் கை என் மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்”

இப்படித் தொடங்கும் கதையின் தொடக்கம் உண்மையில் ஒரு கடிதத்தின் தொடக்கம். இதைப் படிப்பவள் அந்தக் கல்லூரியின் முதல்வர் மிஸ் நிர்மலா. அவள் வாசித்த அந்தக் கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். அவள் கவனக் குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்தச் சஞ்சிகையை எடுத்த அவள் அண்ணன் மூலம் தகப்பனார் சந்திரசேகரன் கைக்குப் போய் வாட்ச்மேன் காதர் மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைக்காக மிஸ் நிர்மலாவின் மேஜைக்கு வந்துள்ளது.
நிர்மலா மணியை அழுத்திக் காதரை உள்ளே வரச் சொல்லி அவனிடம், “ஹாஸ்டலுக்கு வேற வாட்ச்மேன் போட்டிருக்கேன்” என்றவளிடம், ‘சரிங்க’ என்று சொல்லி ஏற்கிறான். தொடர்ந்து அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு “ உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?” எனக் கேட்க, “ தோட்ட வேலைக்குத் தானே நம்மெ காலேசுக்கு வந்தேன்.” என்கிறான். அவள், “ அப்படியா.. எனக்குத் தெரியாதே! இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க.. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்” என உத்தரவு போடுகிறாள்.

காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனதுவலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்து கொள்வது போல், இல்லை மார்பகத்தைத் தடவிக் கொள்வது போல, சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று. அவ்வளவுதான்.

இந்த உத்தரவு காதருக்குத் தரப்பட்ட தண்டனையா? அல்லது ஒருவிதமான பரிசா? என்று கேள்வியை எழுப்பும் விதமாகக் கதையை முடிக்கும் ஜி. நாகராஜன் அதற்கான பதிலை வாசகர்களுக்குத் தரும் விதமாக நிர்மலாவின் கடந்த காலம் பற்றிய நினைவொன்றை ஒருபத்தியில் எழுதிக் காட்டியுள்ளார். அந்தப் பத்தியை நினைத்துக் கொண்டாள் நிர்மலா காதருக்கு அளித்தது தண்டனை அல்ல; இது காமத்தை இயல்பான ஒன்றாக நினைத்துக் கொண்ட நிர்மலாவின் சரியான முடிவு என்பது புரியும். அந்தப் பத்தியின் வரிகள் இதோ:வருஷம் பூராவும் இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்து விட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் தட்டுப் படவில்லையே! ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகள் இல்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்து விட்டான். இப்ப இருவரும் சேர்ந்து ‘ அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.

ஜி.நாகராஜன் எழுதிக் காட்டும் இந்த வரிகள் கல்லூரி முதல்வர் நிர்மலாவின் நினைவுகளாக வருபவை.இந்த நினைவுதான் காதரைத் தன் தோட்டக்காரனாக ஆக்கிக் கொண்டது என வாசித்துக் கொள்ளத்தூண்டுகிறது.

Biyernes, Oktubre 09 2009

சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட சாகசங்கள்
-----------------------------------------------------------
சுசி கணேசனின் கந்தசாமியை முன் வைத்து
இது கந்தசாமி படத்திற்கான விமரிசனம் அல்ல;விமரிசனம் எழுதும் அளவிற்குப் பொருட்படுத்த வேண்டிய படமும் அல்ல கந்தசாமி. திரைப் படத்தின் மொழியையும் ஆக்கத்தையும் அறிந்தவர்களாகவும், அதன் வழியே வெகுமக்களுக்குத் தீங்கிழைக்காத பொழுது போக்குப் படங்களைத் தருவார்கள் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்களின் தோல்வியும், திசைதவறிய பாதைகளும் கூடப் பொருட்படுத்திப் பேச வேண்டிய ஒன்று என்ற அளவில் கந்தசாமி படம் பற்றிப் பேச வேண்டியுள்ளது.
கந்தசாமி படத்தில் இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற தகுதியை பெற்ற விக்ரம் நடித்துள்ளார். எந்தக் கதாபாத்திரத்தையும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்துவார் என நம்பப்படும் நடிகர் அவர். அதற்காகப் பண வரவு பற்றிக் கவலைப் படாமல் காலத்தையும், தனது உடல் மற்றும் மன ரீதியான உழைப்பையும் தரக்கூடியவர். சுசி கணேசனும் பத்திரிகையாளர் என்ற முன் அனுபவத்தோடு இலக்கிய வாசிப்புடையவர் என்ற அடையாளத் தையும் வெளிப்படுத்திக் கொண்டவர். வணிக சினிமாவில் வெற்றி கரமான படங்களைத் தந்த இயக்குநரிடம் திரைப்பட நுட்பங்களைக் கற்று இயக்குநராக மாறியவர். படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது படத்தை உருவாக்க ஆகும் செலவைப் பற்றிக் கவலைப்படாதவர். இம்மூவரும் இணைந்தும் இந்தப் படத்தை நல்லதொரு பொழுதுபோக்குப் படமாக ஆக்கி, வணிக ரீதியாக வெற்றி பெறச் செய்ய முடியாமல் போனதெப்படி? கந்தசாமி படம் பொது நிலைப்பட்ட பார்வையாளர் களுக்குப் பிடிக்காமல் போனது ஏன்?
பார்த்தவர்கள் எல்லோரும் படத்தில் கதை இல்லை என்று சொல்கிறார்கள். அந்தக் கூற்று உண்மை தானா? நிச்சயம் இயக்குநர் அதை மறுக்கவே செய்வார். கதை, வசனம், திரைக்கதை இயக்கம் எனத் தனித்தனியாக எழுத்துப் பலகைகளைக் காட்டிய சுசி. கணேசன் கதை இல்லை என்பதை எப்படி ஒத்துக் கொள்வார்? படத்தில் ஒரு கதை இருக்கிறது. தமிழில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற எல்லாச் சினிமாக்களிலும் இருப்பது போல நாயகனின் சாகசங்களைச் சொல்லும் கதை ஒன்று இருக்கவே செய்கிறது.
இந்தியாவில் ஏழை – பணக்காரர்களிடம் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடாக ஆகி விட்டதை உணர்ந்த ஒரு இளைஞனின் கதை அது. இப்படியான வேறுபாடுகள் தோன்றக் காரணம் அரசியல்வாதிகள், தாதாக்கள், கள்ள மார்க்கெட் வியாபாரிகள் ஆகியோரிடையே உள்ள உறவும், அதனால் கிடைக்கும் பணத்தை வெளிநாடு களில் உள்ள மறைமுக வங்கிகளில் பதுக்கி வைப்பதும் தான் என்பதை உணர்ந்த இளைஞனும் அவனது பள்ளிக்கூடத் தோழர்களும் சேர்ந்து செய்யும் சாகசங்கள் தான் கந்தசாமி படத்தின் கதை. மக்களின் சொந்தப் பிரச்சினை களையும் பொதுப் பிரச்சினைகளையும் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதித் திருப்போரூரிலுள்ள முருகன் கோயிலில் உள்ள மரத்தில் கட்டி விட்டால் தீர்த்து வைக்கப்படும். முருகனாகிய கந்தசாமி வந்து தீர்த்து வைக்கிறான் என்ற வதந்தியை உருவாக்கி மக்களை நம்ப வைத்து, கந்தசாமி என்கிற சிபிஐ அதிகாரியும், நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணி யாற்றும் அவனது வகுப்புத் தோழர்களுமே அதைச் செய்கிறார்கள் என்று கதை பின்னப் பட்டிருக்கிறது.

இந்தக் கதையைப் பார்வையாளன் மனம் ஏற்கும் விதமாகவும், அவனது நடப்பு வாழ்க்கையோடு ஓரளவுதொடர்புடையது என மூளை நம்பும் விதமாகவும் சொல்லப் படவில்லை (முழுமையாக இருக்க வேண்டுமெனப் பார்வையாளர்கள் எதிர் பார்ப்பதில்லை) என்பது மட்டுமல்ல காரணம். இந்தப் படத்தின் கதையும் சரி , சொல்லப்பட்ட விதமும் சரி மிகச் சமீபத்தில் வந்து வெற்றி கரமாக ஓடிய சில படங்களின் கதையாகவும், கதை சொல்லும் முறையாகவும் இருக்கிறது என்பதும் கூடப் பார்வையாளர்களைக் கவராமல் போனதற்குரிய காரணங்களாக இருக்கலாம்.

கறுப்புப் பணம், ஹவாலா வழியாகப் பணப் பரிமாற்றம், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குதலைப் பேசிய சிவாஜி படம் வந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை.அதை இயக்கியவர் சங்கர் . கடமையைச் செய்யாமல் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்- கடமையைச் செய்ய லஞ்சம் வாங்கும்- அதிகாரிகளையும், கள்ள மார்க்கெட்டில் ஈடுபடும் வியாபாரிகளையும், சுய நலத்தை மட்டுமே கொண்ட உறவுக்கார மனிதர்களையும் அம்பி என்கிற அசட்டு வக்கீல் அந்நியன் என்ற அசகாய சூரனாக மாறிக் கொன்றழிக்கிறான் என்ற கதையையும் சங்கர் தான் இயக்கியிருந்தார். இவ்விரு படங்களையும் சுசி கணேசன் பார்க்காமலா இருந்திருப்பார்? கந்தசாமி கதையோடு இன்னும் நெருக்கமான கதையைக் கொண்ட இன்னொரு படம் ரமணா. இதை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்காந்தின் நடிப்பில் கடைசியாக வெற்றி கரமாக ஓடிய படம். அந்தப் படத்தின் கதை மக்களின் அன்றாட வாழ்க்கை யோடு நெருங்கிய தொடர்புடைய சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை, காவல்துறை போன்றவற்றில் நடக்கும் ஊழல்களையும் சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளையும் களைய ஒரு பேராசிரியர் தன் மாணவர்களைப் பயன்படுத்தினார்; சாகசங்கள் செய்தார் என்பதுதான். அந்தப் படம் வந்து நான்கைந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றாலும் நமது தொலைக்காட்சிகள் திரும்பவும் போட்டுக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

பார்த்த படத்தைத் திரும்பவும் ‘புதிய படம்’ என்று பார்க்கும் அளவுக்கு நமது பார்வையாளர்கள் ஏமாளிகள் அல்லவே. சுசி கணேசன் மட்டும் அல்ல; நமது நாயக நடிகர்களுக்காகக் கதை செய்யும் பல இயக்குநர்களும் பார்வையாளர்களை ஏமாளிகள் என்றே நினைக்கின்றனர். விஜய் வேகமாக நடனம் ஆடுகிறார் என்பதற்காக; விசால் வித்தியாசமாய்ச் சண்டை போடுகிறார் என்பதற்காக; வன்மையான நெருக்கத்துடன் சிம்புவும் பரத்தும் தனுஷும் பெண்களின் உடலைக் கையாள்கிறார்கள் என்பதற்காக; வித்தியாசம் காட்டி விக்ரமும் சூர்யாவும் நடிப்பை வெளிப்படுத்துகின்றனர் என்பதற்காக - திரும்பத் திரும்பப் பணம் கொடுத்துப் பார்க்கப் பார்வை யாளர்கள் தயாராக இருப்பார்கள் என்று இயக்குநர்கள் நம்புவது எப்படி என்பது தான் புரியவில்லை. சொல்லப்பட்ட கதையை அதே முறையில் சொன்னால் அலுப்பும் சலிப்பும் உண்டாகும் என்பது ஒரே பாணியில் நடித்துப் பழகிப் போன நடிகர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஓர் இயக்குநருக்கும் அது புரியாது என்றால் அவர் வேறு தொழிலைப் பார்க்க வேண்டியதுதான்.
பார்வை யாளனின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்காத படங்களைப் பார்க்கத் திரை அரங்கிற்கு வர,தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்கள் தயாராகவே உள்ளனர் என்பதற்குச் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வந்திருக்கும் நாடோடிகள் கடைசி உதாரணமாக இருக்கிறது. ‘நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே ’ என்ற ஒற்றை வரியின் மேல் எழுப்பப்பட்ட நாடோடிகள் கதை முழுமையும் நடக்கத்தக்க யதார்த்தக் கதை அல்ல. அதுவும் ஒரு சாகசக் கதை தான். பணபலம், அரசியல் பலம், சாதி வேறுபாடு என்ற தடைகளையெல்லாம் பற்றிக் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல், காதலித்த நண்பனின் காதலை வெற்றி அடையச் செய்வது எனக் கிளம்பும் ஒரு இளைஞனின் சாகசம் மட்டும் அல்ல; செய்யப்போவது சாகசம் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் நண்பனோடு கிளம்பிப் போன இருவரின் வலிகளும் துயரங்களும் என நாடோடிகள் கதை பின்னப் பட்டுள்ளது. கதையை உருவாக்குவதன் அனைத்து அடிப்படைகளையும் ஓரளவுக்குச் சரியாகச் செய்துள்ள அந்தப் படம் வெற்றிப் படமாகத் திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

சினிமாவுக்குக் கதை உருவாக்கும் போது கவனிக்க வேண்டிய ஒன்று அந்தக் கதையில் பின்னப்படும் காட்சிகளின் நிகழ்தகவுகள் அல்லது சாத்தியப் பாடுகள் என்பன தான். இதை நடிகர்களுக்காகக் கதை உருவாக்கும் இயக்கு நர்கள் மறந்து விடுகிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒரு சாகசக் கதையைச் சமுத்திரக் கனி, ‘இந்தக் கதையின் தொடக்கம் ராஜபாளையம் என்ற சிறு நகரம்’ என்று குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் தொடங்கி, நாமக்கல் என்ற இன்னொரு நகரத்திற்கு நகர்த்துவதன் மூலம் கதையை நம்ப வைக்கிறார். கிராமங்களில் கதை சொல்லிகளிடம் இது எப்படி? அது எப்படி? என்று குறுக்குக் கேள்விகள் கேட்டால் கதைக்குக் காலுண்டா? என்று சொல்லி விட்டுக் கதையை வளர்த்து கொண்டு போவார்கள். ஆனால் சினிமாக் கதைக்குக் கட்டாயம் கால் வேண்டும். அந்தக் கால் தான் கதையின் வெளி.

ராஜபாளையத்து விசைத்தறிகளும் குறுகலான தெருக்களும், அம்மன் கோயில் திருவிழாவும் மட்டுமே கதையை நம்பச் செய்தன என்பதில்லை. அதே போல் நாமக்கல்லின் கோழிப் பண்ணைகளும் புரோட்டாக் கடைகளும் மட்டும் நம்பகத் தன்மையை உண்டுபண்ணி விடும் என்று நினைக்க வேண்டிய தில்லை. அக்கதைவெளிகளில் வரும் பாத்திரங்களின் செயல்பாடு களும் மன உணர்வுகளும் கூட ஏற்கத்தக்கதாக- நம்பத் தக்கதாக இருக்க வேண்டும்.சாகசங்கள் செய்யும் மூன்று இளைஞர்கள் அசட்டுத் தைரியசாலிகளாக இருந்தாலும், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள் என அனைவரும் தினசரி வாழ்வில் பார்வை யாளர்கள் சந்திக்கக் கூடியவர்கள்.‘அரசாங்க வேலைக்குப் போகிறவனுக்குத் தான் பெண்ணைக் கொடுப்பேன்’ என்று பிடிவாதமாக இருக்கும் அந்த மாமா கதாபாத்திரம் ஒன்று போதும் கதையை முழுமையாக நம்பத் தக்கதாக ஆக்க.
கந்தசாமி படத்தில் இப்படியான எந்தவொரு பாத்திரமும் இல்லை என்பதுதான் அதன் மிகப்பெரிய பலவீனம். வைகைப் புயல் வடிவேல் நடித்துள்ளார் என்றால் அவரது நகைச்சுவையைப் பார்க்கவாவது பார்வையாளர்கள் வருவார்கள் என்று காட்டுவதற்காகச் சேர்த்துள்ள ஒரேயொரு காட்சி மட்டுமே நம்பத் தக்கதாக இருக்கிறது. விளையாட்டுத் தனமாகச் சேவல் வேஷம் கட்டிப் போலீஸ்காரர்களின் வலையில் சிக்கிச் சித்திரவதைகளையும் வேடிக்கையாகவே எதிர் கொள்ளும் இந்தக் காட்சி நம்பத் தக்கது என்றாலும், வடிவேல் வேறுசில படங்களில் திரும்பத் திரும்பச் செய்துவிட்ட- ‘கிலிஷே’- காட்சி என்பதையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது .

கந்தசாமியின் இயக்குநரும் ‘திருப்போரூர்க் கந்தசாமிக் கோயில்’ என்ற குறிப்பான வெளியையும், ‘வேதாரண்யம் பள்ளியில் படித்தவன் நாயகன்’ என்று ஒரு தொடக்கத்தையும் தருகிறார் என்றாலும், அந்தக் காட்சி களைத் தொகுத்த விதமும், பின்னணி இசையும் காட்சிகளின் மீது ஈடுபாட்டை -நம்பகத் தன்மையை-ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் பார்வையாளனைப் படத்தி லிருந்து விலகிச் செல்லவே வைக்கின்றன. விக்ரமின் பள்ளிப் பருவம், அவரது நட்பு வட்டம், சின்ன வயதிலிருந்தே அறச்சீற்றம் கொண்டவர்களாக அந்த நண்பர்கள் இருந்தார்கள் என்பதைக் காட்ட அருமையான வாய்ப்பு இருந்தும் அத்தகைய காட்சிகளை உருவாக்காமல் விட்டது இயக்கம் என்பதில் இருக்கும் மிகப்பெரிய குறை.
கந்தசாமி படத்தின் மிகப் பெரிய பலவீனம் நடிகர்கள் தேர்வு. எந்த நடிகரையும் தேர்வு செய்து விட்டு அவர்களிடமிருந்து தேவையான நடிப்பைப் பெறும் திறமை இருந்தால் யாரையும் தேர்வு செய்யலாம். இயக்குநர் சுசி. கணேசன் விக்ரம் தவிர எந்த நடிகரிடமும் பொருத்தமான நடிப்பைப் பெறவில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது.எழுதிக் கொடுத்த வசனங்களை உணர்ச்சிகரமாகப் பேசினால் போதும் என்பதாகவே பலரது நடிப்பு இருக் கிறது.சில காட்சிகளில் விக்ரமின் நடிப்பே கூடப் பொருத்தமின்றியே இருக்கிறது. அத்தோடு இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரேயாவைத் தேர்வு செய்ததும் இயக்குநரின் பெருங்குறை என்று தான் சொல்ல வேண்டும். தனது உடலைக் காட்சிப் பொருளாக ஆக்கிக் காட்ட முழுவதும் சம்மதமாக இருக்கும் ஸ்ரேயா படத்தின் நாயகியாக முழுவதும் பொருந்திப் போக வில்லை என்பதை சாதாரணப் பார்வையாளனும் சொல்லி விடுவான். அவரது உடல் அசைவுகள் மட்டுமல்ல; முகச்சுளிப்பு, வசன உச்சரிப்புகளுக்கு அசைக்கும் வாய், அவரது உடல் வடிவத்திற்குப் பொருந்தாத உடைகள் என எதுவுமே பொருத்தமாக இல்லை என்பதை விட, அவரது மொத்த உடலுமே தமிழ்ச் சினிமாவுக்குப் பொருத்தமற்ற உடல் என்பதை நமது இயக்குநர்கள் எப்போது உணரப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

களிப்பூட்டும் சினிமாவை எதிர்பார்த்துத் திரை அரங்கிற்குச் செல்லும் பார்வையாளன் முழுமையும் எதார்த்தமான-வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் உணர்வுகளையும் கொண்ட கதையை எதிர்பார்ப் பதில்லை என்பதற்குச் சமீபத்தில் வெற்றி அடைந்த படங்களே சாட்சிகளாக இருக்கின்றன. பருத்தி வீரன் தொடங்கி, சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிக் குழு, நாடோடிகள் முதலான படங்களின் நாயகக் கதாபாத்திரங்கள் எதுவும் சாதாரணப் பார்வையாளர்களின் வாழ்க்கையில் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் பாத்திரங்கள் அல்ல. அக்கதாபாத்திரங்களை வார்த்தெடுத்த கதாசிரியர்கள் மற்றும் இயக்குநர்களிடமிருந்து பார்வையாளன் போதனை எதையும் எதிர்பார்த்தும் வரவில்லை.பார்வையாளனுக்குத் தேவை ஓரளவுக்கு நம்பகமான கதையும், அக்கதையில் வரும் பாத்திரங்களின் சாகசங் களும் களிப்பு மனநிலையும் தான். அதனூடே அவர்களும் அவர்களைச் சார்ந்தவர் களும் இன்பங்களும் வலிகளும் அனுபவத்தார்கள் என்பதைப் பார்க்கவே திரையரங்கிற்கு வருகிறார்கள். அதைத் தராமல் வேறு எது எதையோ தரும் படத் தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் பார்வையாளர்கள் தயவு தாட்சண்யமின்றித் தண்டிக்கவே செய்கிறார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளவந்தான் என்ற படத்தில் பெற்ற தண்டனையை இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டார் என்பதுதான் ஆச்சரியம்.
=======================================================

Miyerkules, Oktubre 07 2009


வேறுபாடுகளுடன் கூடிய நட்பின் இழப்பு – பாலாவுக்கு அஞ்சலி

பாலச்சந்திரன் என்னும் நீண்ட பெயரைச் சுருக்கி நண்பர்கள் பாலா என அழைத்த போது அதைத் தனது கவிப்பெயராக ஆக்கி விடும் ஆசை அவருக்கு இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. இதை அவரிடமே கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் என நினைத்தாலும் இனி இயலாது. அந்தப் பெயருக்கும், அந்தப் பெயர் விட்டுவிட்டுப் போயிருக்கும் பதிவுகளுக்கும் சொந்தக்காரரான பாலச்சந்திரன் இப்போது நம்மோடு இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற போது இனி அவர் செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்தி அனுப்பி வைத்தோம். அதில் ஒன்றிரண்டைக் கூட முடிக்க விடாமல் காலம் தனது கணக்கை முடித்துக் கொண்டு விட்டது.

நான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் படித்துக் கொண்டிருந்த போது பாலாவை அவரது புத்தகங்களின் வழியாகச் சந்தித்தேன். புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை என்ற நூல் அப்போது தான் அன்னம் வெளியீடாக வந்திருந்தது. புதுக்கவிதை என்னும் வஸ்துவை விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அது குறித்துப் பேசுவதற்கான தளமொன்றை உருவாக்கித் தந்த புத்தகம் என்ற அளவில் அந்த நூல் கல்வித்துறை வட்டாரத்தில் அங்கீகாரம் பெற்றது. புதுக்கவிதைக்கான அங்கீகாரத்தை உருவாக்கித்தந்த புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை, பாலா என்ற பெயரையும் அங்கீகரிக்கப் பட்ட எழுத்தாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அங்கீகாரத்தின் தொடர்ச்சியை அவரது இன்னொரு நூலான சர்ரியலிசம் உறுதிப்படுத்தியது. வானம்பாடிகளின் பொதுக் குணமான ’ பெருங்கூட்டத்தை நோக்கிப் பேசும்’ புறநிலைக் கவிதைகளையே பாலாவும் எழுதியுள்ளார். அவர் எழுதிய கவிதைகள் தரும் வாசிப்பனுபவத்தை விட அவர் மொழி பெயர்த்த கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் ஒரு படி உயர்ந்தது என்றே சொல்ல வேண்டும். வித்யாபதியின் காதல் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். தனது இலக்கியத் தேர்வை மையமாகக் கொள்ளாமல் நண்பர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுதல் என்ற நெருக்கடி காரணமாக அவர் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவை பலவும் காத்திரமான இலக்கியப் பகுதிகளாக இல்லாமல் இருந்தன. என்றாலும் அவரது மொழி பெயர்ப்புகள் மூலமும், ஆங்கிலக் கட்டுரைகள் மூலமும் தமிழின் பிரபலக் கவிஞர்களான சிற்பி, மு.மேத்தா, மீரா, வைரமுத்து, தமிழ் நாடன் போன்றவர்கள் பிறமொழியாளர்களின் கவனத்துக்குச் சென்றுள்ளனர். அவரது ஆங்கிலப் புலமையை முழுவதும் பயன்படுத்தித் தமிழின் வளமான கவிதைகளையும் புனைகதைகளையும் ஆங்கிலம் வழியாக சர்வதேசக் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியும். அதை ஒரு கோரிக்கையாக வைத்துத் தான் நான் பல்கலைக்கழகப் பணி ஓய்வின் போது வழி அனுப்பினேன். அது நடக்காமலேயே போய்விட்டது

அரசுக் கல்லூரியொன்றில் ஓர் அறிவியல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கித் தனது இலக்கிய வாசிப்பு, எழுத்தார்வம், ஆசிரியர்கள்,இலக்கிய நண்பர்கள் போன்றோரின் தூண்டுதல் போன்ற காரணங்களால் இலக்கியத்திற்குள் வந்தவர் பாலா. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பதிலும், பேசுவதிலும் பெருவிருப்பம் கொண்டு இலக்கிய மாணவராக மாறி, ஆங்கிலம் கற்று கல்லூரி ஆசிரியராகி, நிறைவாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரை உயர்ந்தவர். அவர் பணியாற்றும் இடங்களில் எப்போதும் ஒலிபெருக்கியின் முன்னால் ஒரு சங்கீதத்தின் தாளலயத்துடன் ஒலித்துக் கொண்டே இருக்கும் . தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கான கடமையைக் கூடச் செய்யத் தயங்கும் நிலை வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர் பணியாற்றும் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வேலைகளைச் செய்வதில் அவர் ஒருவித லயிப்பைக் கொண்டிருந்தார். அத்தகைய வேலைகளைச் செய்பவர்களுக்குச் சில நேரங்களில் அந்த நிறுவனம் பொறுப்பான பதவிகளை வழங்குவதுண்டு. அப்படியான பல வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் அதை ஏற்றுக் கொள்ளாமல் விலகி நின்றவர். அத்தகைய பதவிகள் தனது இலக்கியம் சார்ந்த, தனிமனித சுதந்திரம் சார்ந்த வேலைகளில் ஈடுபட முடியாமல் கட்டிப் போட்டுவிடும் என்ற உண்மையைப் புரிந்து வைத்திருந்தது தான் காரணம்.

அதே நேரத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்ற தகுதி வழியாகக் கிடைத்த சாகித்ய அகாடெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை மட்டும் தட்டிக் கழிக்கவில்லை. சாகித்ய அகாடெமியில் பாலா பதவி வகித்த காலத்திலும் அதன் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் விருது அறிவிப்புகளும் விமரிசனத்துக் குரியனவாகவே இருந்தன. அவர் பொறுப்பில் இருந்த போது சாகித்ய அகாடெமி ஏராளமான கருத்தரங்குகளை நடத்தியது என்றாலும், அதன் பொதுவான போக்கில் பெரிய மாற்றம் எதுவும் நடந்து விடவில்லை.தமிழ் நாட்டில் அங்கீகரிக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு எது சரியான இலக்கியம் என்ற புரிதல் இருந்த போதிலும் அதனை அங்கீகரித்து வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆசையை அவர்கள் வெளிப் படுத்துவதில்லை. அப்படியான ஆசையை வெளிப்படுத்தாமல் போவதற்குப் பல்வேறு புறச்சூழல்களும் காரணமாக இருக்கின்றன. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள், நம்பிக்கைகள், தான் சார்ந்த குழுக்களையும் குழுவின் உறுப்பினர்களையும் மேலே தூக்கி விடும் நோக்கம் ஆகியனவும் காரணங்களாகி விடுகின்றன. இவைகளையெல்லாம் இன்று முழுவதும் பலவீனம் என்று சொல்லி விட முடியாது. பல நேரங்களில் அவை ஆளுமையையும் அதிகாரத்தையும் தருவனவாக இருக்கின்றன.

பல்கலைக்கழகத்திற்குள் நட்போடும், இலக்கிய வெளியில் முரண்பாடுகளும் வேறுபாடுகளும் பழகும் நண்பராக இருந்த பாலா இப்போது இல்லை என நினைக்கும் போது இனி வேறுபாடு கொண்டு விவாதிக்க ஒருவர் இல்லை என்ற வருத்தம் துரத்திக் கொண்டிருக்கிறது.
===================================================

Lunes, Oktubre 05 2009

தேடும் பறவைகள்: மீரானின் இரைகள்
==================================
இந்த வசதிகள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களுக்குக் கிடைக்காதவை. வளைவுகளற்ற நான்குவழி, ஆறுவழிச் சாலைகளில் வழுக்கிக் கொண்டு போகும் ஆம்னி பஸ்கள், விரைவுப் பேருந்துகள் உட்பட்ட போக்கு வரத்து வசதிகள், விதவிதமாய்க் கல்வியைக் கற்றுத் தரும் கல்விச் சாலைகள், தனித்தனி உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவம் தரும் பாலி கிளினிக்குகள், டிக்கெட் கிடைக்கவில்லையென்று தியேட்டருக்குப் போன பின்பு திரும்பி வரத் தேவையில்லாத அளவுக்கு ஒரே இடத்தில் பல தரப்பட்ட சினிமாக்களைச் சேர்த்து வைத்திருக்கும் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், சாப்பிடும் போதே பிள்ளைகள் விளையாடத் தனி அறைகள், குடும்பமாகச் சாப்பிடும் போது மற்றவர்களுக்குக் கேட்காதவாறு தடுக்கும் இசைக் கோலங்களை உமிழும் ரம்மியமான சூழல் கொண்ட உணவு விடுதிகள், அந்நிய நாடுகளில் மட்டுமே கிடைத்த வண்ண ஆடைகளைக் கட்டித் தொங்க விட்டு அசத்தும் துணிக்கடல்கள், காலனிக் காட்சிக் கூடங்கள், வீட்டுபயோகப் பொருட்காட்சி அரங்குகள் என வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது உலகமயப் பொருளாதாரம்.

ஒருவர் அலுவலகப் பொறுப்பாளர் என்றால், விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தாலும் வேலை நடப்பதைக் கண்காணிக்க கைபேசி போதும். ஆம் எல்லா வசதிகளையும் கொண்டு வந்து சேர்த்து விட்டது தாராளமயப் பொருளாதாரமும் அதன் பின் விளைவுகளும். உலகமயமாக்கலின் வெளிப் பாடுகள் சாதாரணமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அக்கறை கூட புது வசதிகளின் வழியாகச் சாத்தியமாவதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். மனித நேய முகத்துடன் கூடிய உலகமயப் பொருளாதாரம் பற்றி மதிப்பிற்குரிய பிரதமர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இன்னின்ன துறைகளில் தான் என்றில்லை. ஒரு ஆட்டோக்காரரை அழைக்க அவை நிற்கும் இடங்களுக்கு போக வேண்டியதில்லை. தையல்காரரிடமும், சலவைக்காரரிடமும் துணிகள் தயாராகி விட்டதா எனத் தெரிந்து கொள்ள அக்கடைகளுக்கும் அலைய வேண்டியதில்லை. கையிலிருக்கும் அலைபேசி மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு கிளம்பிப் போகலாம். அதன் உபயோகம் ஆச்சரிய மூட்டக் கூடியதாக மாறி விட்டது. நகரவாசிகள் இன்று அலைபேசியிலேயே அன்றாடத் தேவை களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். வீட்டுக்குப் பத்துப் பேர் விருந்தினர்களாக அழைக்கப் படும் போதே உணவு விடுதிக்கும் என்ன கொண்டு வர வேண்டும் சொல்லி அனுப்பி விடுகிறார்கள். சரியான நேரத்திற்கு அவை வந்து நிற்கும் விதத்தில் பணியாற்றிட நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

நான்கு மாதக் கர்ப்பத்தின் போதே பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பார்த்துச் சொல்வதோடு எந்தத் தேதியில் குழந்தை பிறக்கும் என்று சொல்லும் வசதி வந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர் விரும்பினால் நல்ல நாளில், நல்ல நேரத்தில் குழந்தையை வெளியே எடுத்துத் தரும் அறுவை சிகிச்சைகள் இன்று சாத்தியம். பேறுகால வலி என்பது நவீனப் பெண்ணுக்கு வேண்டாம் என்றாலும் நமது நவீன மருத்துவம் உதவத் தயார். கட்ட வேண்டிய பணம் சில பத்தாயிரங்கள் கூடும்; அவ்வளவு தான்.

விபத்து நடந்தால் ஒரு தொலைபேசி அழைப்பு செய்தால் போதும் ஒரு வசதி மிக்க மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் அந்த இடத்தில் வந்து விபத்தில் காயம் பட்டவரை அள்ளிப் போட்டுக் கொண்டு போகிறது. அழைக்காமலேயே ரோந்து சுற்றும் ஆம்புலன்ஸ்கள் நெடுஞ்சாலைகளில் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்றன. நீங்கள் சொல்லாமலேயே நவீன வசதி கொண்ட எலும்புச் சிகிச்சை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் நிலையும் இல்லாமல் இல்லை. இப்படி இந்திய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சாதகங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை வரவேற்று அதற்குத் தகுந்தவர்களாக ஆவதில் பெரும்பான்மை மக்கள் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதன் மறுபக்கம் தெரிவதில்லை. இந்த வசதி இங்கு எல்லோருக்கும் கிடைக்கிறதா? என்று கேள்வியை அவர்கள் கேட்டுக் கொள்வதில்லை.

தங்களின் சுகமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தந்துள்ள அதன் சாதகங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப் படுத்திக் கொள்ளும் பொதுப்புத்தி கொண்டவன் அல்ல படைப்பாளி. அவன் எதையும் திருப்பிப் போட்டுப் பார்த்துக் கருத்துச் சொல்பவன். திருப்பிப் போட்டு மறுபக்கத்தை மட்டும் என்றில்லை, ஒரு நிகழ்வின் பல பரிமாணங்களையும் பார்ப்பவனே சிறந்த படைப்பாளியாக மதிக்கப்படுகிறான். அப்படிப் பட்ட படைப்பாளிகளில் ஒருவர் தோப்பில் முஹம்மது மீரான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

தனது கடலோரக் கிராமத்தின் கதை என்னும் முதல் நாவல் மூலம் இலக்கியவாசகனைத் தன்பால் ஈர்த்த தோப்பில் முஹம்மது மீரான் கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, துறைமுகம் என அடுத்தடுத்த நாவல்களின் வழி இலக்கிய இருப்பை உறுதிப் படுத்தியவர். இறுக்கமான இசுலாமியச் சட்டங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள் மீது காத்திரமான விமரிசன இழைகளைப் படர விடுவதைக் கொண்டு இசுலாமிய விரோதத்தைக் கொண்ட எழுத்துக்காரர் என யாரும் முத்திரை குத்தி விட முடியாது. எந்தவொரு சமயமும் அதனைப் பின்பற்றுபவர்களும் காலதேச வர்த்தமானங்களுக்கேற்பத் தனது நடைமுறைகளையும் இயல்பையும் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இசுலாமியச் சமுதாய வாழ்நெறிக்குள்ளிருந்தே வலியுறுத்தும் எழுத்துகள் அவருடையவை. அவரது நாவல்கள் அளவுக்கு சிறுகதைகள் வாசகனை ஈர்க்கவில்லை என்ற போதிலும் அவரது விமரிசனபாணி எழுத்து என்பது சிறுகதைகளிலும் வெளிப்படவே செய்கிறது. அனந்தசயனம் காலனி என்ற முதல் தொகுப்பை அடுத்து ஒருமரமும் கொஞ்சம் பறவைகளும் என்ற இரண்டாவது தொகுப்பு வந்துள்ளது. அதில் உள்ள ஒரு கதை இரைகள் என்பது. அது உண்டாக்கும் விமரிசனம் இப்போதுள்ள நவீன மருத்துவ மனைகள் இரக்கமற்ற கொலைக்களங்கள் என்பதாகக் குற்றம் சாட்டுகிறது.

இரைகள் கதை மட்டும் அல்ல இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் தன்மைக் கூற்றுக் கதைகளாக இருக்கின்றன. ஆசிரியரே கதையின் ஒரு பாத்திரமாக நின்று தான் பார்த்த- பங்கெடுத்த நிகழ்வுகளைக் கதை யாக்கித் தந்துள்ளார். இத்தகைய கதைகளில் ஒரு பத்திரிகை யாளனின் விவரிப்புத்தன்மை இருக்கும். அதனால் அது கதையாக இல்லாமல் நேரடி வருணனை யாக மாறி விடும் ஆபத்தைச் சந்தித்து விடும். இதனைக் கதையின் பலவீனம் என்று நினைத்தால் அது உண்டாக்கும் நம்பகத் தன்மையைப் பலம் என்று சொல்ல வேண்டும். கதை சொல்லியாகப் பங்கெடுக்கும் படைப்பாளியின் மொழி ஆளுமை மற்றும் நுட்பமான கவனப் பதிவு ஆகியவற்றால் அந்த நம்பகத் தன்மை உருவாக்கப் படும். மீரான் உண்டாக்கும் நம்பகத்தன்மை தான் இரைகள் கதையைச் சமகால விமரிசனக் கதையாக மாற்றுக் காட்டுகிறது.

இலவச ஆம்புலன்ஸ் உதவிக்குக் கூப்பிட வேண்டிய தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் ஓரங்களில் நாட்டப்பட்ட நெடுஞ்சாலை, சாலை ஓரங்களில் தயார் நிலையில் நிற்கும் பளபளப்பான ஆம்புலன்ஸ்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தானிருக்கும். அனைத்து வசதிகளும் அமையப் பெற்ற விலை உயர்ந்த வெண்ணிற வாகனங்களை மக்கள் சேவைக்காகச் சாலை ஓரங்களில் நிப்பாட்டியிருக்கும் கருணை உள்ளங்களை, அது வழியாகப் பயணிக்கும் போதெல்லாம் முன்பு வாழ்த்தாமல் இருந்ததில்லை.

இப்படித் தொடங்கி கதையை விரிக்கும் கதைசொல்லி அதை முடிக்கும்போது வேறு மாதிரி சொல்கிறார் கதை சொல்லி: இப்போது பஸ் பயணம் செய்யும் போது, கண்களை இறுக்க மூடிக் கொண்டும் உறங்குவது போல் இருக்கை யில் சாய்ந்து கொள்வேன். ஏனென்றால், சாலையோர ஆம்புலன்ஸ்கள் கண்ணில் பட்டாலே உடன் நடுங்குகிறது. இது கதையின் முடிவு. இடையில் நடந்தது என்ன என்பது தான் கதை.

நூக்கண்ணு , தனது ஒன்றுவிட்ட தம்பியின் மகன் சாவுக்குக் காரணமாக இருந்தது அப்படிப் பட்ட ஆம்புலன்சும், அது கொண்டு போய்ச் சேர்த்த மருத்துவ மனையும் தான். தனது வாப்பா வாங்கித் தந்த புதுச் சைக்கிளில் வாப்பாவிற்கு உணவு கொண்டு போன நூக்கண்ணுவை ஒரு சிவப்பு டொயட்டோ கார் தட்டி விட்டு நிற்காமல் போய்விட்டது. லேசான காயத்துடன் கீழே விழுந்தவனை விரைந்துவந்த அந்த ஆம்புலன்ஸ் யாரையும் கேட்காமல் அந்த ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்து விட்டுப் போய்விட்டது. பின் தொடர்ந்து வந்த அவனது வாப்பாவால் ஆஸ்பத்திரிக்குக் கட்ட வேண்டிய அட்வான்ஸும் அதன் நடைமுறைகளும் பணம் தேடிக் கொண்டு வரும்படி விரட்டி விடுகிறது. இச்செய்தியை கேட்டு நூக்கண்ணுவைப் பார்க்க வரும் ஆசிரியரின் கூற்றாகவே கதை அமைகிறது. வந்தவர் , “ லேசான காயம்தானா” வரவேற்பாளரான பெண்ணிடம் விசாரித்தேன். நெத்திலிக் கருவாடு போன்ற உடல் அமைப்புள்ள அந்தப் பெண், ஒரு எரிஞ்சு விழுகிற ஜன்மம். ‘ எனக்கு அதுபற்றித் தெரியாது, டூட்டி நர்சிடம் கேளுங்கள். எல்லோருக்கு வழிகாட்டுவதுதான் என் வேலை.’
“தீவிர சிகிச்சைப் பிரிவு எந்தப் பக்கம்?” அருகில் இருக்குமானால் எட்டிப் பார்க்கலாமென்றுதான். ‘நாலாவது மாடியில்’ “ லிப்ட் வழியாக நாலாவது மாடிக்குப் போகலாமா”
‘இதுபார்வை நேரமல்ல; அனுமதிச்சீட்டு இல்லாமல் நாலாவது மாடியில் நுழைய முடியாது’ “அனுமதிச் சீட்டு எங்கே வாங்கனும்” ‘சிகிச்சைக்கு முன்பணம் கட்டி வச்ச பிறகு தான் அனுமதிச் சீட்டு கொடுப்பாங்க. நீங்க பார்க்க வந்த நோயாளிக்குச் சிகிச்சை செய்ய முன் பணம் இன்னும் கட்டல’
பணம் தேடிப் போன தம்பி இன்னும் வரவில்லை. வரும் வரை காத்திருக்கும் ஆசிரியர் அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கவனமாக பார்த்துக் கொண்டி ருக்கிறார். அடுத்தடுத்து வந்த ஆம்புலன்ஸ் காயம் பட்ட சில பேரைக் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. ஆஸ்பத்திரி வேகமாக உயிர்காக்கும் பணிக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. இறந்து போன ஒருவரைப் பிணமாகக் கொண்டு போய்ச் சேர்க்க ரூ.4500/- கட்டினால் தான் தூக்கிப் போக முடியும் அதே ஆம்புலன்ஸ் டிரைவர் பேரம் பேசுகிறார்.

போதிய பணமின்றி வந்த நூக்கண்ணுவின் வாப்பா, ‘டாக்டர், டாக்டருடைய இரக்கம் நாடித் தாழ்மையுடன் கூப்பிட்டவாறு, தான் ஒரு கடையில் குமாஸ்தா வேலை செய்யக் கூடியவன், நான் நெனச்சா இவ்வளவு பணம் உடனே ஒரு நாளில் திரட்ட முடியாது, டாக்டர். பல முயற்சிகளும் செய்து பார்த்தேன். கெடக்கல்ல. எப்படியும் பண்டம் கட்டிடுவேன்.. தயவு செய்து..’
“ தயவு தாட்சண்யம் பாத்தா , ஆஸ்பத்திரி நடத்த முடியாது பாய்.. பணம் கட்டி வைங்க. அவசரமாக ஆபரேசன் செய்யணும் . பிறகு எங்க மேல பழி போடக் கூடாது. சொல்லிப் போட்டேன்..” நூக்கண்ணுவின் வாப்பா கட்ட வேண்டிய பணம் ரூ. 35000/-.இது முடியாது என்ற நிலையில் தர்மாஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்கின்றனர். டாக்டர் சம்மதிக்கிறார். ஆனால் இதுவரை வைத்திருந்த செலவுக்கான பில்லை முடித்துக் கொண்டு அரசாங்கத்தின் தர்மாஸ்பத்திரிக்குப் போகலாம் என்பது நிலை.

அடுத்த நாள் ஆசிரியருக்கு வந்த தொலைபேசி சொல்கிறது. இப்போதும் கட்ட வேண்டிய பணம் ரூபாய் 35000/- என்ற போது அதிர்ந்து போகிறார். வைத்தியமே செய்யாமல் அதே தொகை கட்ட வேண்டும் என்றால் அதிராமல் என்ன செய்வார். வேறு வழியின்றி பணத்தைக் கட்டிய பிறகு மருத்துவமனை நர்சு சொல்கிறாள். நேற்று இரவு நூக்கண்ணுவிற்கு உடம்பு சீரியஸ் ஆன தாகவும், ஆபரேசன் செய்ய எடுத்துப் போகும் போது அவன் இறந்து விட்டான் என்று.

மருத்துவம் செய்யாமல், வைத்திருந்தது மட்டுமல்லாமல், அவனது சாவுக்குக்காரணமான அந்த மருத்துவமனை நிர்வாகம் எந்தவிதக் குற்றவுணர்வும் கொள்ளாமல் பணம் பிடுங்குவதில் குறியாய் இருந்ததைப் படம் பிடிக்கும் தோப்பில் , இத்தகைய மருத்துவமனைகள் விபத்தில் காயம் பட்டவர்களைத் தேடி அலையும் ஆம்புலன்ஸுகளை வைத்திருப்பது போல விபத்துக்களை உண்டாக்கும் டொயட்டோ கார்களையும் குவாலிஸ் வண்டிகளையும் கூடச் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கின்றனவோ என்ற ஐயத்தை உண்டாக்குகிறார்.

இப்படி நடப்பதை பொதுப் புத்தி சார்ந்த மனிதன் ஏற்காமல் போகலாம். இவையெல்லாம் இன்று சமூகத்தில் நிகழாத ஒன்று என்று சொல்லி விட முடியாது என்பதுதான் நிதர்சனம். பல கோடி விலையில் வாங்கிப் போடும் நவீன மருத்துவக் கருவிகளுக்கான இரைகளைத் தேடித் தர வேண்டிய கட்டாயம் அந்த நிர்வாகங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால், அதற்காக விபத்துக்களை உருவாக்கும் அறமற்ற செயலை அவர்கள் செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதையும் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

நவீனக் கருவிகளை வாங்கிப் போட்டு பத்திரிகை நடத்தும் அச்சு ஊடக நிறுவனங்கள், அவற்றிற்குத் தீனி போட ஒவ்வொரு நாளும் –ஆன்மீகம், குடும்பம், பக்தி, ஜோதிடம், வணிகம், பெண்கள், விளையாட்டு, பங்கு வர்த்தகம் என ஒவ்வொருதுறைசார் பத்திரிகைகளைக் கொண்டு வந்து , சமூகத்தைப் பின்னிக்கு இழுக்கும் வேலையைச் செய்வது போல , செயற்கைக் கோள் தொலைக் காட்சிகளின் வழியே செய்யப்படும் மனக்கொலைகளின் பின்னணியில் எந்த அறமும் இல்லை என்பதும் உண்மை தானே. ஊடகங்களை நடத்துபவர்கள் ஒவ்வொரு நாளும் மனக்கொலைகளைத் திட்டமிட்டுச் செய்யத் தயங்காத நிலை தொடரும் நிலையில் நவீன மருத்துவ மனைகள் உடல் கொலைகள் செய்யும் என்பதையும் நம்பித் தான் ஆக வேண்டும். அப்படியொரு எண்ணத்தை உண்டாக்குவதில் மீரானின் கதை இரைகள் முழுவெற்றி பெற்றுள்ளது.