Lunes, Setyembre 28 2009

கலையும் ஒப்பனைகள்
காட்சி:1

[அவன் ஒரு புதுவகை ஈஸிசேரில் படுத்துக் கிடக்கிறான்.உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் ஓய்வு கொடுப்பது நோக்கம்.வெளிச்சம் நேரடியாக முகத்தில் இல்லை. முகம் கர்சீப்பால் மூடப் பட்டிருக்கிறது. நிழல் திசைமாறும் பொழுதெல்லாம் குரல் தொனி மாற்றி வந்து கொண்டிருக்கிறது].
'நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்..
காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ; ஒத்துக்க முடியாது
நான் ஒத்துக்க முடியாது.
எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம்
எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம்
எனது சமயம் ; எனது மக்கள்...
அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது.
உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை
எல்லாவற்றையும் மறந்துவிடு;
மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை'

[வசனப் பயிற்சிக்காகச் சொல்லப்படுவது போல் தூரத்திலிருந்தும் பக்கத்திலிருந்துமாக வருகிறது. ஆண்குரலிலும் பெண்குரலிலுமாக மாறிமாறி ஒலிப்பதற்கேற்ப அந்த உருவத்தின்மீது மாறி மாறி விழும் வண்ணம் விளக்கு வெளிச்சம் மெதுவாகவும் சடசடவென்றும் வந்து போகின்றன. நிழலும் நீள்வதும் குறுகுவதுமாக இருக்கிறது.விளக்கு,குரலின் ஓசை, நிழலின் அளவு என ஒவ்வொன்றும் ஒத்திசைவுடன் அமைய வேண்டும்
இந்த வசனப் பயிற்சியினூடாக தூரத்தில் ஒரு ஷூட்டிங்கின் பின்னணிக் காட்சிக்கான குரல்கள்-'லைட்ஸ் ஆன்' , சீன் தேற்ட்டி பைவ்; டேக் த்ரீ போன்ற குரல்கள் கேட்கின்றன. பின் திரையில் நிழல் உருவத்தில் இயக்குநர் காமிராக் கோணம்பார்ப்பது ,டிராலியில் காமிரா முன்னும் பின்னுமாக நகர்வது போன்றன இடம் பெருகின்றன. கடைசியில் இயக்குநர் குரல் ]

" ஷாட் ரெடி ... டேக்..ஆக்ஷன்.."
[ இந்தக் குரல் கேட்டதும் அந்த நபர் எழுந்து ஆவேசமாக இந்த வசனங்களைப் பேசிகிறான்]
"நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்..
காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ;ஒத்துக்க முடியாது
நான் ஒத்துக்க முடியாது.
எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம்.
எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம்.
எனது சமயம் ; எனது மக்கள்...
அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது.
உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை
எல்லாவற்றையும் மறந்துவிடு; மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை"
[இயக்குநரின் குரல் மட்டும் கேட்கிறது]

'ஸூபர்ப் சார்.. பின்னீட்டீங்க.. ஏய்ய்.. நாளைக்கு சாருக்கு எந்த ஷெட்யூல் ;
செக்கண்ட் ஷெட்யூலா.. ஓ.கே.. சார் .நாளைக்குப் பார்க்கலாம் ..'

[அருகில் இருப்பவரிடம் சொல்வதுபோல் மெதுவாக ]

'அனுபவசாலிகளோடு ஒர்க் பண்ற சொகமே தனி தாம்ப்பா..'
காட்சி:2

[ அவன் அதை நின்று கேட்டுக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் வெளியேறுகிறான்.]

[ நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்; அவனது அசைவு காரில் பயணம் செய்வது போல் இருக்கவேண்டும். தேவைப்படும் இடத்தில் எழுந்து நடித்துவிட்டுத் திரும்பவும் அசைவுரூபத்திற்கு வந்து விடவேண்டும்]

நினைவில் இருக்கிறது
எனது நினைவில் இருக்கிறது.
எல்லாம் நினைவாய் இருக்கிறது.
எதில் தொடங்கி எங்கு முடியும் என் நினைவுகள்
எங்கள் ஊர் ஆலமரம்; அகன்று விரிந்த ஆலமரம்.
கிளைக்குப் பத்து விழுதுத் தூண்கள்.
விழுதுகள் தோறும் கிளிக்கூண்டு;
கூண்டுகள்தோறும் பச்சைக்கிளி..
...ஒற்றைக்கிளி.. இரட்டைக்கிளி..
கூண்டுகள் காணாப் பச்சைக்கிளிகள்.
மெல்ல வளைந்தோடும் உப்போடைப்பள்ளம்
மானம் பார்த்த அந்தப் பூமி
வடக்கே பார்த்தால் மேகங்களுக்கூடே
மெலிதாய் தெரிவது திடியன் கரடு
அதன் அடிவாரத்தில் அந்தவெள்ளைக் கோபுரம்.
இந்தப் பக்கம் தொழுகை போடும் சின்ன மசூதி.
வாப்பாவுக்குத் தெரியும் ஐந்து நேரத்தொழுகை;
எனக்கும் தெரியும்;
எனக்கு ஐந்து நேரத்தொழுகையுடன்
ஆறுகாலப் பூஜையின் நேரமும் தெரியும்.
காயத்திரி மந்திரம் கற்றுக்கொள்ள முயன்று தோற்றதும்
கண்ணுக்குள் நிறையும் பின்கூந்தல் அசைவும்
திரும்ப வரப் போவதில்லை.
எனது கிராமம் எங்கே போனது;
எனது இளமை எங்கே சென்றது;
நான் படித்த நடுநிலைப் பள்ளியில்
எட்டு வகுப்புக்குப் பதினொரு வாத்தியார்கள்.
பத்தைத் தாண்டிய ஒற்றை விரலாய்
இந்தி வாத்திச்சி; பர்வதவர்த்தினி;
அவர்தான் அப்புறம் கணக்கு டீச்சர்.
இந்தி வாத்திச்சி கணக்கு டீச்சர் ஆன கதை
என் நினைவில் இருக்கிறது.
பெருமாள் கோயில் அக்கிரகாரத்துக் கடைசி வீட்டில்
எங்கள் டீச்சர் இருந்தது வாடகைக்குத்தான்.
அவருடன் அவரது அம்மாவும் இருப்பார்.
கணக்கு வாத்தியார் தனசேகரபாண்டியன் தோட்டத்திலிருந்து
காய்கறிகளும் நல்ல தண்ணீரும் கொண்டு போய் இறக்க
எங்கள் வகுப்பில் ஏழு டீம் இருந்தது.
என்னுடைய முறை வெள்ளிக்கிழமை.
தொழுகைக்குப் போக முரண்டு பிடிக்கும் எனக்கு
அக்கிரகாரம் போக அலுத்ததே இல்லை.
குளித்து முடித்துக் கோதும் சிணுக்கருக்கியுடன்
எங்கள் டீச்சர் வாசலில் நிற்பாள்;
அவளுக்கு உவமை சொல்ல ஒரு சிற்பம்
மசூதியில் இருக்கவில்லை.
உவமை தேடிக் கோயிலுக்குப் போவேன்.
மலையடிவாரக் கோயிலுக்கு....
கோயிலெங்கும் கோலங்கள்; கோலமயில்கள்.
ஹிந்தி ஒழிக! தமிழ் வாழ்க!!
தமிழ் வாழ்க! ஹிந்தி ஒழிக!!
இந்திப் பேயை ஓட்டும் போரில்
இறங்கவேணும் இளைஞர்களே!
வேண்டும்! வேண்டும்!! தமிழே வேண்டும்;
எங்கும் வேண்டும்! எதிலும் வேண்டும்!!
புதுப்புனல் ஆறாய் எமது தாய்மொழி
பொங்கும் தமிழே எங்கும் வேண்டும்
வேண்டாம்! வேண்டாம்!! ஹிந்தி வேண்டாம்!
வடவராதிக்கப் பேயது வேண்டாம்.
ஆரிய பாஷை....அது நீசபாஷை..
ஆதிக்கம் செலுத்தவந்த அன்னிய பாஷை.
வேண்டாம்! வேண்டாம்!! ஹிந்தி வேண்டாம்!
பார்ப்பணக் கும்பலின் மொழியது வேண்டாம்.
கோஷம் போட்டபோது என்ன வயதிருக்கும்
நான் இளைஞனுமில்லை; என்னில் ஆர்த்தெழுந்த
திமில்கள் எதுவென அறிந்ததுமில்லை.
என்றாலும் கோஷங்கள் உண்டு; கோபங்கள் உண்டு;
கல்லெறி உண்டு; கதவடைப்பு உண்டு.
ஆனால் டீச்சரிடம் எனக்குக் கனிவ்¢ருந்தது.
தனசேகரபாண்டியன் சொன்னபோது
புரிந்தது கொஞ்சம்; புரியாதது எங்கும்;
என்ன செய்தார் பர்வதவர்த்தினி..?
எப்படி முடியும் அவரை எதிர்க்க...?
இந்தி வருது என்றபோது ; இல்லை
செதுக்கிய சிலையொன்று சிறு நடனம் புரிந்தது என்பேன்
அந்த வயதில் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான்.
என்மனதில் இருந்தது என்னவென்று எனக்கே தெரியாது.
இந்தி எதிர்ப்புப் போரில் தனசேகரபாண்டியன் தான் தளபதி
முப்பதுகளில் இருந்த அவரது அடுக்குமொழித்தமிழ்
சொக்கவைக்கும் தேன்மதுரம்; அற்புதப் பல்வரிசை.
எங்கள் பள்ளியிலிருந்து ஹிந்தி போனபோது
பர்வதவர்த்தினிக்கு வேலை போகவில்லை;
பர்வதவர்த்தினி திருமதி தனசேகரபாண்டியன் ஆனாள்.
இரண்டு வருடங்களுக்குப் பின் ஹிந்தி டீச்சர்
எங்கள் பள்ளியின் கணக்கு டீச்சரானார்.
அக்கிரகாரத்துப் பர்வதவர்த்தினி
அகமுடையாளானாள்.
இந்தியை வெறுத்த தனசேகரபாண்டியனுக்கு
இந்தி டீச்சர் பிடித்தமானவளாக இருந்தது எப்படி..?
கேள்விகள் அப்பொழுது இல்லை;விடைகள் இருந்தன.
காதலுக்குக் கண் இல்லை;
காதலுக்குக் கண்மட்டும்தானா இல்லை...?
இப்பொழுது விடைகள் இல்லை.
கேள்விகள் இருக்கின்றன.

காட்சி:3

[ அது ஒரு விழா மேடை; வெள்ளிவிழாக் கொண்டாடிய
படத்தின் கேடயம் கையில் இருக்கிறது.விருதுவாங்கிய அவனிடம்
கேள்விகள் கேட்கும்விதமாகக் குரல்கள் வருகின்றன]

'இந்த விருதுவாங்கிய கணத்தெ எப்படி உணர்றீங்க..?'

"ரொம்ப சந்தோசமா இருக்கு.. ஒரு கலைஞனுடைய சந்தோசம் என்பது அவனது காரியத்தெப் பலரும் பாராட்றதிலதான் இருக்கு;
பணம்;வசதியெல்லாம் வரும் போகும்;ஆனால் ரசிகர்கள் மனத்தில் பிடிக்கிற இடம் ரொம்ப முக்கியமானது.புகழ் அதுக்குத்தலை வணங்காம இருக்க யாரால் முடியும். ரசிகர்களின் பாராட்டுக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றவனாக என்றும் இருப்பேன் "

' இப்படியொரு கேள்வி கேக்கிறேனேன்னு கோபப்பட வேண்டாம்.இந்தப் படத்தில இந்த கேரக்டரச் செய்யும்போது இன்வால்வாகி செய்ய முடிஞ்சதா... இல்லேயின்னா வேறெ வழியில்லன்னு செய்ஞ்சீங்களா..?'

"இப்படியொரு கேள்வியெக் கேக்கிறதுக்கு என்ன காரணம்..?"

'அதாவது இதே படத்தில உங்களுக்கெதிராக நிக்கிற அந்தக் கதாபாத்திரத்த... ஐ மீன் அந்த முஸ்லீம் கதாபாத்திரத்த நீங்க இன்னும் நல்லா செஞ்சிருக்கலாமில்ல...?'

[ மனதிற்குள் கோபம் இருக்கிறது. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ]

"யூ..மீன் ஒரு பைத்தியக்காரனுக்கு மட்டும் தான் பைத்தியமா நடிக்கிறது சுலபம்னு சொல்லவர்ரீங்க.. அப்படித்தானே ."

'ஸாரி சார் ..அந்த அர்த்தத்தில சொல்லல '

"ஸாரி நானும் அந்த அர்த்ததில சொல்லல; ஒரு நடிகனெப் பொறுத்தமட்டில எல்லாம் கதாபாத்திரங்கள் தான்; நான் முஸ்லீம்கிறதுனால ஒரு முஸ்லீம் கேரக்டரெ நல்லாச் செய்ஞ்சிடுவேன்னு எதிர்பார்க்கிறது அபத்தம்ன்னு சொல்ல வந்தென்."

'அனுபவத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லங்கிறீங்களா..?'

"சம்பந்தம் இருக்கலாம்; பயிற்சியே அதைவிட முக்கியம்னு சொல்ல வர்றேன்; நாய் வேஷம் போட்டா கொரைக்கப் பழகனும்; கழுதயின்னா கத்தப் படிக்கனும்."

[மேலும் கேள்விகள் வேண்டாமே என்னும் தொனியில் உடல் சாடை
காட்டிவிட்டு இறுக்கமான முகத்துடன் வெளியேறிய அவன்
பெரும்மூச்சுடன் படுத்துக்கிடக்கிறான். அவனுள்ளிருந்து முனகலாக
வரத்தொடங்கிய குரல் பிறகு வெடிக்கிறது]

அர்த்தங்கள்..அனர்த்தங்கள்
நிற்பதிலும் நடப்பதிலும் அர்த்தங்கள்;
உண்பதிலும் உறங்குவதிலும் அர்த்தங்கள்;
எல்லா அர்த்தங்களும் புரிகின்றன.
மோகம் கொள்வதற்கும் போகம் கொள்வதற்கும்
ஒரே அர்த்தந்தானா..அனர்த்தங்கள் எதுவுமுண்டா..?
கேள்விகளும் பதில்களுமாய் ..
பதில்களும் கேள்விகளுமாய்..
ஆலமரம் தாண்டி அம்மன் கோயில்; திரௌபதியம்மன்,
பாஞ்சாலியம்மன்; அஞ்சுபேருக்கு வாக்கப்பட்ட பாஞ்சாலி

[தெருக்கூத்தில் இடம் பெறும் பாஞ்சாலி- துச்சாதனன் துகிலுரியும்
காட்சியைத் தெருக்கூத்து நடிப்பாகக் காட்டவேண்டும்]

"அடேய்..துச்சாசனா... இழுத்து வாடா.அவளை..
ஏளனம் செய்து கொல்லென்று சிரித்த அந்தப் பாஞ்சாலியை
இழுத்து வாடா.அவளை..அடேய்..துச்சாசனா...
கண்ணாடி மாளிகை கட்டியழைத்து
கலகலவெனக் குலுக்கியெடுத்து
கதிகலங்கடித்த அந்தப் பாஞ்சாலியை
அடேய்..துச்சாசனா... இழுத்து வாடா.அவளை.
என்ன காரணமென்று நான் யோசிக்க ,
என்னைக் கொல்ல வந்ததந்தச் சிரிப்பதுதான்
என்பதை உணர்ந்தேன் சோதரா...
இழுத்துவாடா அவளை.. என் தொடைமீது உட்கார்ந்து
சுண்ணாம்பு தடவிய வெற்றிலை மடித்திட
இழுத்து வாடா அவளை..
இங்கே இழுத்து வாடா அவளை...
சூதாட்டக் களத்தில் வைத்திழந்த பொருளாய்
நேர்ந்திட்டபின்னரும் இன்னுமென்ன இருக்கு
அவளுக்குக் கர்வங்கள் தானெததற்கு..
இழுத்து வாடா அவளை..துச்சாசனா..இழுத்து வாடா அவளை.
[துரியனாய் இருந்தவன் துச்சாதனனாய் மாறி துகிலுரியும்
காட்சிக்குத்தயாராக வேண்டும்].
'ஆணைகள் தானேயிட்டார் எங்கள் அண்ணா
'ஆணைகள் தானேயிட்டார்;எனக்கு
ஆணைகள் தானும் இட்டார் .
இழுத்துவரச் சொல்லி ஆணைகளும் இட்டார்
அந்தப்புரம் செல்வேன்; நானே அந்தப்புறம் செல்வேன் .
அந்தப் பாஞ்சாலி தங்கிடும் அந்தப்புரமும் செல்வேன்
ஐம்பத்தாறு தேசத்து ராசாக்களும் அவள் அலறலைக்
கேட்டு ரசிக்கவே இழுத்தே நான் வருவேன்.
இழுத்தே நான் வருவேன்.
எங்கள் அண்ணன் நோகச் சிரித்த
கோமளவல்லியை இழுத்து நான் வருவேன்.
என் அண்ணன் இடது தொடையின் உயிர்த்தள மேடையில்
உட்கார்ந்து ரசித்திட இழுத்து நான் வருவேன்".

[கூத்து நடிப்பிலிருந்து விடுபட்டு இயல்பு நிலையில் ]

இழுத்து வரமாட்டேன். நான் இழுத்து வரமாட்டேன்.

( நின்று நிதானமாக அசைந்து அசைந்து)
மாட்டேன்.. இழுத்து வரமாட்டேன்.
எனக்கு துஷ்டன் துச்சாதனனாக நடிக்கப்பிடிக்கவில்லை.
பாஞ்சாலியைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்
அஞ்சு பேருக்குப் பத்தினியான அந்தப்
பாஞ்சாலியைக்கூட விட்டு விடுங்கள்.
பாரதமாதாவைப் பாருங்கள் கௌரவர்கள்
மட்டுமா துகிலுரியக்காத்திருக்கின்றனர்.
பாண்டவர்களின் ஆசை கூட துகிலுரிந்து பார்ப்பதில்தான்
திருப்தி கொள்ளும் போலும்.
கௌரவர்களும் சபைகளில் மட்டுமல்ல
பாண்டவர் சபைகளிலும் நிர்வாணக் கோலம்.
துரியோதனாதிகள் -இந்த தேசத்தின் துரியோதனாதிகள்
கௌரவர்கள்.. கௌரவங்கள்..தேசத்தின் கௌரவங்கள்..
பாண்டவர்கள்.. ஆண்டவர்கள். தேசத்தை ஆண்டவர்கள்
ஆள்பவர்கள்..மாள்பவர்கள்..ஆண்டவர்கள்.
கண்டவர்.. விண்டிலர்.. விண்டவர்.. கண்டிலர்..

(திரும்பவும் வேகம் பிடித்தவனாய் அடவுகள் போடத்தொடங்குகிறான்.)

எச்சபை தன்னிலும் திரௌபதியை இழுத்து வரமாட்டேன்.
துகிலுரியும் காட்சி ஒரு நடிகனின் நடிப்புக்கு சவால் விடும் காட்சி தான்.
துரியோதனனாக நடிப்பது எனக்கும் கூட அல்வா சாப்பிடுவது போலத்தான்.
ஆனால் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
பாஞ்சாலியை அல்ல; பாரததேவியை
இங்கு கௌரவர்கள் மட்டுமா துகிலுரிகிறார்கள்.
பாண்டவர்களுக்குக் கூட துகிலுரிந்து பார்க்கத்தான் ஆசை.
சந்தடி சாக்கில் துரோணாச்சாரியார்களும் வீஷ்டுமாச்சார்களும்கூட
அந்த வாய்ப்புக் கிடைத்தால் சந்தோசம் என்கிறார்கள்.

[திரும்பவும் கூத்து அடவுகளுடன் பாடு ஆடுகிறான்]

நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் -என்னை
நல்கு முரிமை அவர்க்கில்லை-புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின் - என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? -அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்;- புவி
தாங்குந் துருபதன் கன்னிநான்,-நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால் -பின்பு
தாரமுடைமை யவர்க்குண்டோ?..
"கௌரவ வேந்தர் சபைதன்னில் -அறங்
கண்டவர் யாவரு மில்லையோ? -மன்னர்
சௌரியம் வீழ்ந்திடு முன்னரே - அங்கு
சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?-புகழ்
ஒவ்வுற வாய்ந்த குருக்களும்-கல்வி
ஓங்கிய மன்னருஞ் சூதிலே- செல்வம்
வவ்வுறத் தாங்கண் டிருந்தனர்
மானமழிவதுங் காண்பரோ?
இன்பந் துன்பமும் பூமியின் -மிசை
யாருக்கும் வருவது கண்டனம்: -எனில்
மன்பதை காக்கும் அரசர்தாம் -அற
மாட்சியைக் கொன்று களிப்பரோ?-அதை
அன்புந் தவமும் சிறந்துளார் -தலை
அந்தணர் கண்டு களிப்பரோ?
[திரும்பவும் தளர்ந்த நிலைக்கு வந்து கால்கள் பின்னிப்பின்னி நடந்தபடி ]

பாஞ்சாலியின் எல்லாக் கேள்விகளும் அர்த்தம் பெற்றனவாகிவிட்டது உங்களுக்கு புரியவில்லையா.?கௌரவர்களும் பாண்டவர்களும் இன்று இல்லைதான்.அஸ்தினாபுரிகளுக்குப்பதிலாகவும் சைபர் பிரதேசங்களில் நடக்கின்றன சூதாட்டங்கள்.இந்திரப்பிரஸ்தத்துக் கண்ணாடி மாளிகைக்கீடாக புலப்படா அறிவு வாதமும் நம்முன் நிற்கின்றன.
வட்டாடும் மேஜைகளின் நிறங்களும் மாறிவிட்டன.
நீள அகலங்களும் கூட மாறித்தான் போய்விட்டன.
உருட்டப்படுவது ஜோலிகளும் சொக்கட்டாங்காய்களும் மட்டுமல்ல;
சட்டங்களும் மரபுகளும் கூடத்தான்.
வைக்கப்படுவது டாலர்களுக்கீடாக மனிதமூளைகள்.
கம்யூட்டர் சிப்ஸ்களுக்கீடாக வேம்பின் விதைகளும் ஆவின் பால்ச்சத்தும்.
ஆட்டங்களும் ஆட்டவிதிகளும் மாறித்தான் போய்விட்டன.

காட்சி:4

[ஒரு ஓரத்தில் இருக்கும் ஆல்பம் ஒன்றை எடுத்து அதன் பக்கங்களைப்
புரட்டியபடியே பேச்சு தொடர்கிறது.]

ஆனால் என் விசயத்தில் எதுவும் இயல்பாயிருக்கவில்லை.
எனது காதலும் எனது நேசமும்
எனது நட்புக்களும்கூட.
எனது விண்ணப்பங்கள் வேறுவிதமாகப்பரிசீலனை செய்யப்படுகின்றன.
எனது இருப்பு சந்தேகத்துக்குரியதாவதெங்ஙனம்..?
எனது அழுகை புன்முறுவலாவது எப்படி..?
எனது அசைவுகள் மட்டும் கண்காணிப்புடன் அனுமதிக்கப்படுகின்றன.
கண்காணிக்கப்பட்டன;ஆம் கண்காணிக்கப்பட்டன.
அது எனக்குத்தெரியும்; அறிந்தே அதனைச் செய்தேன்
எனக்கு நிகழ்ந்தன போல் அல்ல
அவளது நுழைவு காற்றில் அலையும் மயிலிறகாய் இருந்தது
எனக்கோ எத்தனை தடைகள்; எத்தனை அவமதிப்புகள்
ஓரிடத்தில் எனது உயரம் அதிகமென்றார்கள்
இன்னொரு நபரோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம் என்பார்
என்னுடைய பிளஸும் மைனஸும் எனக்குத் தெரியும்
நீளமுகத்தில் மூக்குமட்டும் துருத்திக்
கொண்டிருப்பதாகச் சொன்னவர்களுமுண்டு.

[அவன் ஒரு சதுரங்கப்பலகையை எடுத்து வைத்துக் காய்களை
அடுக்குகிறான்.அடுக்கியபடியே பேசுகிறான்.....]

அவையெல்லாம் கடந்தகாலம்;
எனது கடந்தகாலத்தில் மட்டுமல்ல.
இந்தக் கனவுலகத்திற்குள்ளும் அலையும்
மயிலிறகாகவே அவள் நுழைந்தாள்
அவளது வரவுக்காகக் கதவுகள் எல்லாம்
கரங்கூப்பி அழைத்தன.
இது பெண்களின் உலகமா..?
அப்பொழுது எவையும் புரிந்தன அல்ல.
கடந்தகாலத்தைப் புரிந்துகொள்ளத்தொடங்குவது
கசப்புகளையும் கயமைகளையும் கடந்து விடத்துடிப்பதா..?
ஆனாலும் அந்தச் சந்திப்புகளை நினைக்காமல் இருக்கமுடியாது.
அந்த உரையாடல்களைச் சொல்லாமலும் விடமுடியாது.

[காய்கள் அடுக்கி முடிந்திருக்கிறது.அவனுடைய வசனத்தை கறுப்புக்காயை
நகர்த்தியபடியும், அவளுடைய வசனத்தை வெள்ளைக்காயை நகர்த்திய
படியும் பேசுகிறான்]

'பர்வதவர்த்தினியைப் பார்க்கமுடியுமா..?'
"தினசரி நான் பார்த்துவிடுகிறேன், "
'இன்னுமா கனவில் வருகிறார்கள்..?'
"நேரில் தான்.. .. நீ இருக்கிறாயே ; உனது திரும்புதலெல்லாம்
இந்தி டீச்சரின் சாயல்தான், என்றேன்".
'கனவில் நான் வருவதேயில்லையா..?'
"கனவுகள் வருகின்றன;ஆனால்
கனவில் வருவது இந்த நகரமல்ல;
பெருமாள் கோயில் வீதி.. பர்வதவர்த்தினிக்குப்பதிலாக நீ.
கைவிரல் பிடித்து நடப்பது நான்."
கனவுகள்தான்.. எல்லாம் கனவுகள் தான்..
எங்கள் இருவரின் உலகமும் கலை உலகம்.
நானும் நடிகன்; அவளும் நடிகை
தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் காதலைக் கற்றுத்தரும் கலையுலகம்
நாங்கள் கற்றுக்கொண்டது
தோல்வியின் வலிமையை...துயரத்தின் சாயலை;
என்ன நேர்ந்தது இடையில்.எதுவுமே சொல்லப்படவில்லை.
மறந்துவிடச் சொன்ன நாள் மட்டும் நினைவில் இருக்கு
கண்களில் உருண்டு திரண்ட கண்ணீருடன் அவள் ஆடிய நடனக் காட்சி
அந்த வெள்ளிவிழாப்படத்தின் இடைவேளையாய் மட்டுமல்ல.
எங்கள் காதலின் நினைவுக்காட்சியாகவே ஆகிப்போனது.
நினைவுகள் அழியக்கூடாது என்பதற்காகவே
கடந்தகாலத்தைப் புரிந்துகொள்ள முயன்றதில்லை.
அவள் மாடப் புறா; எனது சிறகடிக்கும் மாடப்புறா.
எல்லாமும் அற்புதத் தருணங்கள்.
நினைவில் இருத்திக் கொள்ளவேண்டிய தருணங்கள்தான்.
எங்களது பயணம் இலக்குகள் இன்னும்
எனக்கு நினைவில் இருக்கின்றன.
எனது நினைவில் இருக்கின்றன.
....ம் எல்லாம் நினைவாகவே இருக்கின்றன.
"மனிதன் எவ்வளவு மேன்மையானவன்; அவனால் மட்டும்தான் அன்பு செலுத்தமுடியும்;
அவனால் மட்டும்தான் சகமனிதனுக்காக இரங்கவும் உதவவும்இயலும்;
அவனால் மட்டும்தான் காதல் செய்யமுடியும்;
காதலுக்கு மட்டும் தான் எந்த வேறுபாடுகளும் கிடையாது."

[ சதுரங்க விளையாட்டுக் குலைக்கப்படுகிறது ]

கொலை கொலையா முந்திரிக்கா
கொலஞ்சு போச்சு கத்திரிக்கா
எம்பேர்ப் பேரிக்கா....................
ஆம் எல்லாம் குழைந்து குழைந்து போய்விட்டன;
உங்களுக்கு அறிவுஜீவி என்றால் என்னவென்று தெரியுமா..?
நான் ஒரு அறிவுஜீவி..எனது வாழ்தல் எனது அறிவால் நடக்கிறது.
என் தந்தையும்கூட அறிவுஜீவிதான்.
ஆனால் தனது வாழ்தலுக்கு அறிவை மட்டும் நம்பியவரல்ல
அவருக்குத் தெரிந்தது நாடகம் மட்டுமில்லை.
நாடகம் தெரியும் ; நாற்று நடவு தெரியும்
முந்திரித்தோப்பில் குடியிருக்கவும் தெரியும்
ஆனால் அறிவுஜீவியான கதை ரொம்ப சுவாரசியமானது
எனது அறிவுஜீவி நண்பர்கள் என்னை கூட்டாளியாக்கியது ஏனென்று தெரியுமா.?
நான் பேசிய ஆங்கிலம்தான்.
ஆங்கிலம் கற்றுக்கொள்ள நான் பட்டபாடு நாய்பட்டபாடுதான்.
அந்த நேரத்தில் கிடைத்தவேலையைத் தக்கவைக்க ஒரே வழி ஆங்கிலம்தான்.
வாடிக்கையாளர்களிடம் நான் உரையாடவேண்டும்.
அவர்களைத்திருப்திப் படுத்த தரமான பொருள்களை விட
நுனிநாக்கு ஆங்கிலம் போதும்.
ஏற்கனவே சிவப்புத்தோல் வரமாகிவிட்டது.
சிவப்புத் தோலுக்கும் நுனிநாக்கு ஆங்கிலத்திற்கும் உள்ளமரியாதைகளை அனுபவித்தவர்கள்தான் சொல்லமுடியும்; நான் அனுபவித்திருக்கிறேன்.
நல்லவிதமான பலன்கள் தான்.
என்னை நடிகனாக்கியதுகூடப் பெரிய காரியமில்லை.
நட்சத்திர விடுதியின் பணியாளாக்கியதே அவைதான்.
அறிவுஜீவிகள் எப்பொழுதும் நிற்பது தோற்றுப் போகின்றவர்களின் பக்கம்தான்.
நானே பலதடவை தோற்றுப்போயிருக்கிறேன்.
சின்னச் சின்ன வெற்றிகளோடு பெரிய பெரிய தோல்விகள்.. தோல்விகளின்மேல் தோல்விகள்.. தொடர் தோல்விகள்..
இப்பொழுது சொல்லுங்கள் நான் அறிவுஜீவிதானே.
போட்ட கணக்குத் தப்பாய்ப் போக ......
ஒன்றிலிருந்து திரும்பவும் தொடங்கலாம்.
கணக்கு..கணக்கு..
கொலை கொலையா முந்திரிக்கா
கொலஞ்சு போச்சு கத்திரிக்கா
எம்பேர்ப் பேரிக்கா....................



காட்சி:5

[சோர்ந்து விழுந்து கிடப்பவனைக் கிழிக்கும் வேகத்தில் வரும் ரயில்களின் சப்தம் எழுப்பி விடுகிறது. இரண்டு மூன்று ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகின்ற ஓசை. தூரத்தில் அந்த ஓசை போய் மங்கிய பிறகு திரும்பவும் அவன் பேசுகிறான்.
அவன் பேசுகிறபோது பின்னால் கோயில்கள்,அரண்மனைகள், மசூதிகள், ஸ்தூபிகள், நினைவுத்தூண்கள் என சரித்திரத்தின் ஆதாரங்கள் படங்களாக வந்து போகின்றன.]


வரலாறு என்பது என்ன.?
அந்தக்காலம்.. அப்படியொரு காலம்.. அது ஒரு காலம்..

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்
வென்றுஎறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே
காலம்தான் வரலாறா.. இருக்கலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது;
ஆனால் எல்லாரும் அப்படி நம்புவதில்லை போலும்.
'ஒருநண்பர் சொல்வார் கடந்தகாலம் பழிவாங்கத்தூண்டும்' என்று.

'ஒரு நண்பர் சொல்வார் கடந்தகாலம் பழிவாங்கத்தூண்டும்' என்று.
வரலாற்றில் பல வக்கிரங்கள் நடந்தேறி இருக்கின்றன;
முல்லைக்குத்தேர் தந்த பாரியின் வாரிசுகள்
கந்துவட்டிக்கடை நடத்த நேர்ந்தால்
பாரிமகளிரைக் கழுவேற்ற முடியுமா..?
நந்தனை எரித்த மிச்சம் காக்கப்படுகிறதென்றால்
தீவட்டி ஏந்தலாம்;
அக்கிரகாரங்கள் அடையாளமிழந்தபின்
பூணூல் அணிவதும் பூணூல் அறுப்பதும்
வீரவிளையாட்டுக்களா...?
வரலாற்று விளையாட்டுக்களா...
அதிகாரங்கள் இடித்த கோட்டைகளுக்கு
அப்பாவிகள் எப்படிப் பொறுப்பாக முடியும்..?
நாலு தலைமுறைக்குச் சேர்த்த சொத்தாய்
நயவஞ்சகம் இருந்தால்
ஆடிப்பார்க்க வேண்டியது வெறியாட்டங்கள்தான்.
நீர்வழிப்படூஉம் புனைபோல நீந்தித்திரியும்
எனது தேசம் எது ..? யார்தான் கேளிர்...?
யாரைப் பழிவாங்குவது நான் ...?
என்னையே நானா..?
நானே எனது அடையாளத்தையா.....?
அடையாளம் ...எனது அடையாளம்..
அழிக்கமுடியாத எனது அடையாளங்கள்
எனக்கென்றொரு கருத்து இருப்பது எனது அடையாளமா..?
உருவாக்கிக்கொண்டதென் அடையாளங்களில்லையா...?
விட்டுவிடுதல் சாத்தியமில்லையென்றால்
திணிப்பதுமட்டும் பொருந்திப்போவதெப்படி..?
எனது பெயர் சந்தேகத்துக்குரியதா..?
எனது செயல்களுக்கு உள்நோக்கமுண்டு
எனச் சொன்னது யார்..?
இப்பொழுதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
[ரயிலில் ஓட்டப்பின்னணியில் சில உருவங்கள் அதன் போக்கில்
அசைவதாகக் காட்சிகள் அமைக்கப்படவேண்டும்]

யார் அந்த உரையாடலைத் தொடங்கியது .
தொடங்கியது நானில்லை; என்றாலும்
என்னில் வந்து மையம் கொண்டது.
ஏன் இப்படி நடக்கிறது;
எல்லாம் கேள்விகள் தான்..
பதில்கள் தேடும் கேள்விகள்.
"நாளைக்கு சூட்டிங் இருக்காது ;
அப்படியே குன்னூர் போயிட்டு வந்துரலாம்"
'குன்னூரில்தானே சூட்டிங்; போயிட்டு எங்கெ வரப்போறீங்க.'
"இல்ல, ஊட்டியில தான் சூட்டிங்;அங்கெ
சூட்டிங் நடத்திறதில் பிரச்சினை இருக்காது.'
"ரிஸ்க் எடுக்க டைரக்டர் தயாராயில்லை;
அதானால நாளைக்கு ரெஸ்ட் தான்."
'நேத்து நடந்தா மாதிரி இருக்கில்ல ; ஆனா
நடந்து ஆறு வருஷமாயிப்போச்சு..?'
"இல்ல பன்னிரண்டு வருஷமாச்சு"
' எதெச் சொல்றீங்க; கோவைக் கலவரத்தயா..
மும்பை வன்முறைகளயா..?'
" இல்ல என் நினைவில் இருப்பது 1992,
டிசம்பர்,6 பாப்ரி மஜ்ஜித் இடிக்கப்பட்ட நாள்"
' ஏன் உனக்கு மும்பையில் நடந்த வெறியாட்டம் நினைவில் இல்ல'
"எல்லா ஆட்டங்களும் நினைவிலிருக்கிறது எனக்கு
நான் ஆடாத ஆட்டங்களா.. கோலாட்டம்..,கும்மியாட்டம்
கரகாட்டம்.., காவடியாட்டம்... சிலம்பாட்டம்...., தப்பாட்டம்....
"உடம்புக்குள்ளெ அதிர்வுகள நுழைக்கச் சொல்லி
நான் எல்லா ஆட்டங்களும் ஆடியிருக்கிறேன்...
ஏனோ பரதநாட்டியத்தை மட்டும் விரும்பியதில்லை.
அதில் உடம்பின் அதிர்வுகள் இல்லையென்று
தோழர் சொல்லியிருந்தது காரணமாக இருக்கலாம்
ஆளும் வர்க்கக் கலையில் உழைப்பின் அதிர்வுகள்
எப்படி நுழைய முடியும்.. ? இதுவும் அவர் கேட்ட கேள்விதான்.
கலையை நேசிப்பதிருக்கட்டும் முதலில் மனிதனை நேசி என்பார்.
மனிதன் என்றால் அவரைப் பொறுத்தவரைக்கும்
உழைக்கின்ற மனிதனாய் இருக்கிறவன் தான்
மனிதன் மனிதனாகத்தான் இருக்கமுடியும்
நானும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் வித்தியாசங்களுடன்..
உழைக்கின்ற மனிதன் இந்துவாகவும் இருக்கிறான்
முஸல்மானாகவும் இருக்கிறான்....
வேதக்காரனாகவும் இருக்கிறான்..
மனிதன் என்பவன் மனிதன் தான்
"மனிதன் எவ்வளவு மேன்மையானவன்;
அவனால் மட்டும்தான் அன்பு செலுத்தமுடியும்;
அவனால் மட்டும்தான் சகமனிதனுக்காக இரங்க முடியும்."
இல்லை இல்லை இதுவும் உண்மையில்லை
அவன் தான் கருத்துக்களை கட்டமைக்கிறான்
அவன் தான் வேறுபாடுகளைக் காட்டிச் சிரிக்கிறான்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் அந்த நண்பன் கேட்டபோது
நாடி நரம்புகள் தளர்ந்து போய்விட்டன.
அவனை அவ்வாறு கேட்கத்தூண்டியது எது..?

[கூடைப்பந்து மைதானத்தில் தரையில் பந்தைத் தட்டிக்கொண்டே
விளையாடுவதாகப் பாவனை. இவனுடன் இன்னும் சிலர் விளையாடிக்
கொண்டிருக்கின்றனர். விளையாட்டின் போக்காகவே உரையாடல்
நடக்கிறது]

'அயோத்தியில் கோயில் இடிக்கப்பட்டபோது
நீ எங்கே இருந்தாய்..?'

"இல்லை இடிக்கப்பட்டது கோயில் இல்லை; மஜ்ஜித்..
மஜ்ஜித் என்பது மசூதி..."

'ஆ..ங். கோயில் இல்லை மசூதி..அதிருக்கட்டும்
அப்போது நீ எங்கிருந்தாய்..?'

"எதிருக்கட்டும் மசூதியா...? கோயிலா...?"

'அதைப்பற்றியல்ல நான் பேசவந்தது. நான் கேட்பது நீ எங்கே இருந்தாய் என்பதைத்தான்..'

"எனக்கு நினைவில் இல்லை; தெரிந்து என்ன செய்யப் போகிறாய்..?
ஆனால் அடுத்து வந்த நாட்களில் நான் வீட்டில்தான் இருந்தேன்.
அடுத்தநாள் மட்டும் அல்ல; ஒருமாதம் வீட்டில் தான் இருந்தேன்."
'காரணம் ..?'

"காரணம் ..யாரையாவது தாக்கிவிடுவேன் என்று
அவர்கள் நினைத்திருக்கக் கூடும்."

'உன்னை யாராவது தாக்கிவிடலாமென்று நினைத்திருக்கலாமில்லயா..?
"வெறிநாய்களுக்குத்தான் கூண்டுகள் தேவை."

'விலைமதிப்பில்லாப் பொருள்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை தான்'
"இன்று நான் சொல்லிக்கொள்ளலாம்; விலைமதிப்பில்லாப் பண்டமென்று.
அன்று நினைக்கப்பட்டது வெறிநாயாகத்தான்."

'அப்படியொரு மனநிலை உன்னிடம் இருந்தது இல்லையா..?'

"அன்று இருந்ததில்லை ;ஆனால் இன்று இருக்கிறது.
இன்னுமொரு மசூதி இடிக்கப்படும்போது என்னருகில்
நீயிருந்தால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது"

'என்ன நடந்து விடமுடியும்..?'
"ஒருவேளை உனது காதைக் கடித்துவிடுவேனாக இருக்கலாம்."

'இப்படிச் சொல்ல உனக்குக் கூச்சமாக இல்லை.'

"இல்லை; இல்லை; இல்லவே இல்லை.
என்னிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்க நீ கூச்சப்படாதபோது
அப்படியொரு பதில்சொல்ல நான் ஏன் கூச்சப் படவேண்டும்."

கேள்விகளும் பயணங்களும் மட்டுமில்லை
எல்லா ஆட்டங்களும் நினைவில் இருக்கத்தான் செய்கிறது.
கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம்,
பறையாட்டம்,தப்பாட்டம், மட்டும் அல்ல.
வெறியாட்டங்களும்கூட நினைவில் இருக்கின்றன.
வெறியாட்டம்;ஆம் வெறியாட்டம்.
1992-ல் உத்தரபிரதேசத்தில் பாப்ரி மஜ்ஜித் காரணமாய்
1994......., 1998....,2000...., 2002....,2004
மும்பை ....,கோவை..., கோத்ரா.....ஹாஷியாபாத்...,
இடையிடையே நடந்த கிரிக்கெட் ஆட்டங்களும்
ஒருநாள் ஆட்டங்கள்...டெஸ்ட் ஆட்டங்கள்..
நல்லெண்ணப்பயணங்கள்..,கலாசாரத்திருவிழாக்கள்....,
திரும்பத் திரும்ப அரிதாரங்கள்
திரும்பத் திரும்ப ஒப்பனைகள்
கலைக்கப்படும் ஒப்பனைகள்நடிப்புக்கலையின் அரிச்சுவடி
ஆனால் வாழ்க்கை.. ஒப்பனைகளோடு ... வாழ்தல் .. எப்படிச்சாத்தியம்.
ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்;
கனவுகளோடு வாழ்தல் வேண்டும்;
நினைவுகளோடு வாழ்தல் வேண்டும்
ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்.
நான் மட்டும் அல்ல; நாங்களும்
நீங்கள் மட்டுமல்ல;நாம்.
ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்;
கனவுகளோடு வாழ்தல் வேண்டும்;
நினைவுகளோடு வாழ்தல் வேண்டும்
ஒப்பனைகளின்றி வாழுதல் வேண்டும்.
=======================================
=================================================














.
மேடு நோக்கிப் பாயும் ஆறு: கிராஜநாராயணின் தாவைப்பார்த்து
******************************************************************************
எனக்கு நேர்கிற அனுபவம் மட்டும் அல்ல; என்னைப் போல நகரவாசியாக மாறிய பிறகு அவ்வப்போது சொந்தக் கிராமத்திற்குப் போய்வரக் கூடிய ஒவ்வொருவருக்கும் நேர்கிற அனுபவம் தான் இது. இந்த முறை ஊருக்குப் போன போது எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.எந்தப் பாகுபாடும் இல்லாமல் வீட்டிற்கு ஒரு டி.வி.பெட்டி- கிடைத்ததில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கிடைத்ததில் இருந்த மகிழ்ச்சி அது.

தங்களைப் போன்ற அப்பாவிகளுக்கெல்லாம் அரசின் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பற்ற மனிதர்கள் அவர்கள். அரசின் அதிகாரிகள் தங்கள் கிராமத்திற்கு வந்து ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி கண்ணில் படும் இடத்தில் ஜம்மென்று அந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து விட்டுப் போனார்கள் என்றால் மகிழ்ச்சி ஏற்படாமல் என்ன செய்யும் .

இதே மகிழ்ச்சியை ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகைக்கு ஊர்ச்சாவடிக்கு வந்த சேர்ந்த வேட்டி சேலைக்குவியல் கொண்டு வந்தது. அது மட்டுமல்ல. அந்தக் கிராமத்திற்கு அப்படியான மகிழ்ச்சி வந்து சேர்ந்த தருணங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பிள்ளையும் காலில் செருப்புப் போட்டுக் கொண்டு பள்ளிக் கூடத்திற்குப் போனதையும், பின்னர் பெண் பிள்ளைகள் எல்லாம் சைக்கிளில் ஏறிப் பக்கத்து ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குப் போனதையும் பார்த்துப் பெற்றவர்களின் மனம் மகிழவே செய்தது.

இந்த மகிழ்ச்சியையெல்லாம் விடக் கூடுதலான மகிழ்ச்சியை எனது கிராமம் அனுபவித்த நாளாக எங்கள் கிராமத்திற்கு ஓராசிரியர் பள்ளிக்கூடம் வந்ததைத் தான் சொல்ல வேண்டும். நானெல்லாம் எனது தொடக்கப் பள்ளியைப் பெறுவதற்காக ஒரு கிலோமீட்டரும், உயர்நிலைப் பள்ளிக்காக மூன்று கிலோ மீட்டரும் சென்று வந்தவன். நான் கல்லூரிக்கு வந்தபின் தான் எங்கள் கிராமத்திற்குப் பள்ளிக் கூடம் வந்தது. அதுவும் ஓராசிரியர் பள்ளி. இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்வுக்கு எங்கள் கிராமத்திற்கு, பள்ளிக்கூடத்தைத் திறந்து வைக்கச் சட்டமன்ற உறுப்பினர் வந்தார். கிராமமே அவரை வரவேற்று மகிழ்ந்தது. வரவேற்று மகிழ்ந்த கிராமத்தினர் அவரிடம் தந்த கோரிக்கை மனுக்கள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

ஊருக்குப் பக்கத்தில் ஓடி வரும் ஓடையை மறித்து ஒரு சிறு கண்மாய் அமைக்க வேண்டும் என்ற முதல் கோரிக்கை ஏற்கப்படும் என்றார். ஆனால் கண்மாயும் வரவில்லை. ஏற்கெனவே இருந்த சின்னச் சின்னக் குளங்களும் மேடுகளாகிப் போய்விட்டன. வானம் பொய்த்துப் போனதில் ஓடையில் நீர் வரத்தும் இல்லாமல் போய்விட்டது. விவசாயம் படுத்துப் போனதில் பாதிப் பேர் அந்த ஊரை விட்டுவிட்டுப் பல ஊர்களுக்கும் போய் விட்டார்கள். திருப்பூர் பனியன் கம்பெனிகளிலும் கோயம்புத்தூர் நகைக்கடைகளிலும் வேலை செய்து விட்டு ஆண்டுக்கொரு முறை ஊருக்கு வருகிறார்கள். கிராமத்து உழைப்பாளிகள் தான் நகரத்திற்குப் போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது. கிராமங்களுக்கு வந்து சேர வேண்டிய அரசின் பங்குத் தொகையும் நகரங்களுக்கே போய்க் கொண்டே இருக்கின்றன.

வளைந்து வளைந்து செல்லும் அடுக்குப் பாலங்களுக்கும், வழுக்கிச் செல்லும் நகரத்து வீதிகளுக்கும், அரசுத்துறைகளுக்கான அடுக்குமாடிக்கட்டடங்களுக்கும் என நமது அரசுகள் செலவழிக்கும் பணத்தில் அந்தக் கண்மாயை வெட்டி யிருந்தால் விவசாயம் இவ்வளவு வேகமாகக் காணாமல் போயிருக்காது என்பது தான் உண்மை. கண்மாய்களும் குளங்களும் நிலத்தடி நீரைத் தக்க வைத்து மரங்களையும் செடிகளையும் காத்திருக்கும். மரங்களும் செடிகளும் மழையைக் கொண்டு வந்திருக்கும். அந்தச் சுழற்சியைக் கெடுக்கும் விதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய மோட்டார் பம்புகள் இப்போது விருதாவாய்க் கிடக்கின்றன. இந்தச் செப்டம்பர் மாதம் சித்திரை வைகாசியில் இருக்கும் முன்னேழு பின்னேழு நாட்களை – அக்கினி நட்சத்திர வெயிலை நினைவு படுத்தும் விதமாக வேர்த்துக் கொட்டுகிறது. கிராமத்து விவசாயம் – குறிப்பாகப் புஞ்சை வேளாண்மையைக் கவனிப்பின்றி விட்டுவிட்டதன் பலனை நமது கிராமவாசிகளும், நலத் திட்டங்களைப் போடும் அரசு அதிகாரி களும் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நினைக்கும் போதெல்லாம் கரிசல் இலக்கியத்தின் முன்னோடிக் கதாசிரியரான கி.ராஜ நாராயணனின் பல கதைகள் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும்.

கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அரசும் , அதன் நிறுவனங்களும் தொடர்ந்து கிராமத்தைப் புறக்கணித்தன என்பதைத் தனது கதைகளில் பெருங்குற்றச்சாட்டாக வைத்துக் கதைகள் எழுதியவர் கி.ராஜ நாராயணன். கோயில்பட்டிக்கருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்து அறுபத்தைந்து வயது வரை நகரங்களைக் கிராமங்களின் எதிர்வாகப் பார்த்து வந்த கி.ரா. கடந்த 20 வருடங்களாகப் புதுச்சேரியில் வசித்து வருகிறார் என்பது ஒரு சுவாரசியமான முரண் தான். தனது முதல் நாவலான கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காகச் சாகித்திய அகாடமியின் விருதினைப் பெற்றவர். அவரது கோபல்ல கிராமத்தில் இடம் பெற்றுள்ள சில நிகழ்வுகளும், கிடை குறுநாவலும் பாரதிராஜாவின் புகழ்பெற்ற படமான முதல் மரியாதையின் கதைப் போக்கைத் தீர்மானித்துள்ளன என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

புஞ்சை விவசாயிகளையும் விவசாயத்தையும் படம் பிடிக்கும் கதவு,மாய மான், கரண்டு, கறிவேப்பிலைகள், எங்கும் ஓர் நிறை, கொத்தைப் பருத்தி, அவுரி, நிலை நிறுத்தல், தாவைப் பார்த்து, கிடை, கரிசல் காட்டில் ஒரு சம்சாரி போன்ற கதைகளை வாசிக்கவே நகர வாசிகள் சிரமப் படுவார்கள். கிராமத்தில் பிறந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர்களிடம் குற்ற உணர்வை உண்டாக்கும் இந்தக் கதைகள், நகரவாசிகளுக்கு முழுதும் புரியாத ஒரு பிரதேசத்தையும் மொழியையும் அறிமுகம் செய்வன. அந்தக் கதைகளின் மொழியின் சிக்கலற்ற எளிமைக்குள் தகிக்கும் வெப்பம் கரிசல் பூமியின் வெப்பம் மட்டுமல்ல; தமிழகக் கிராமங்கள் பலவற்றின் வெப்பமும் கூட. அவரது கதைகளைப் பல காரணங்களுக்காகப் பலதடவை வாசித்திருக்கிறேன் என்றாலும், தாவைப் பார்த்து என்னும் கதையைப் பல பேரிடம் படிக்கச் சொல்லிப் பரிந்துரை செய்திருக்கிறேன்.
சிறுகதையின் கட்டுப்பெட்டி அம்சங்களிலிருந்து விலகி நிற்பது போலத் தோன்றும் அக்கதையின் சுப்பாநாயுண்டுவின் ஆதங்கம் எடுத்துச் சொல்லப் பட வேண்டிய ஒன்று.தண்ணீர் தாவைப்பார்த்துப் பாயும் என்ற இயற்கைக் குணத்தை மாற்றிப் போட்டுப் பணம் மேட்டைப் பார்த்தே பயணம் செய்கிறது என்னும் இயங்கியல் பொருளாதார விதி ஒன்றைக் கதையாக்கிய அற்புதமான கதை அது.
ஒவ்வொருவரையும் தங்கள் நலனை முன்னிறுத்தியே செயல்படும்படி தூண்டும் பணம் சார்ந்த சமூகத்தின் நிலையைக் கிராம வாழ்க்கையின் ஊடாகப் பதிவு செய்யும் அக்கதையின் முக்கியப் பாத்திரம் சுப்பாநாயுண்டு என்னும் புஞ்சைக் காட்டு வியாபாரி. அவரது மனைவி அசோதெ. அவர்களின் சுயநலம் சார்ந்த ஒரு செயலை அறிமுகம் செய்யும் விதமாகத் தொடங்கும் கதை, அவரை ஏமாற்றிப் பணம் பெருக்கும் பருத்தியேவாரி செல்லையா வையும், மில் முதலாளியையும் அவர்களுக்கு மட்டுமே அனுகூலமாக இருக்கும் கடவுளையும் மனதிற்குள் திட்டிப் புழுங்கும் நினைவுகளோடு முடிகிறது.

தங்கள் கிராமத்துச் சாவடியில் படுத்திருக்கும் அந்த இளைஞனை வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுத்து வேலைக்காரனாக ஆக்கியபின் , அவனது குலம் கோத்திரத்தை விசாரித்து முடித்துத் தனது மகளைக் கல்யாணம் செய்து வைத்து விடலாம் எனச் சுப்பாநாயுண்டு எடுக்கும் முடிவில் உள்ள சுயநலத்தை வெளிச்சம் போடும் கி.ரா., பருத்தியாவாரியிடம் அல்லல் படும் விதத்தைச் சின்னச் சின்ன உரையாடல்களின் வழி புலப்படுத்திக் காட்டுகின்றார். புஞ்சைக்காட்டில் சின்னப் பருத்தியை விளைவித்து வீட்டில் அடைந்து வைக்கும் விவசாயிக்கு அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை; எங்கேயோ இருக்கும் மில்லுக்காரனிடம் அந்த உரிமை இருக்கும்படி வியாபார நியதிகள் இருப்பதைச் சொல்லும்,"பருத்தி வெலையை நாமளா வெக்கிறோம். அது மில்லுக்காரனில்லா வெக்கான்; வெலையெ ஏத்துறதும் எறக்கிறதும், அவம்பாடுதான்” என்ற இந்த வரிகள் இன்றும் தமிழக விவசாயிகளின் நிலை தான்.

விவசாயி கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்துக் கொண்டு போக அவனிடம் பருத்தியை வாங்கி மில் முதலாளிக்கு விற்கும் வியாபாரியும் மில் முதலாளியும் பெருத்துக் கொண்டே போகிறார்கள். போட்ட பருத்திக்குப் பணம் கேட்டுப் போகும் சுப்பாநாயுண்டுவிடம் பருத்தியேவாரி செல்லையா மில் மொதலாளி இன்னொரு மில் ஆரம்பிக்கப் போவதாகவும், அதற்கான அழைப்பிதழ் இருப்பதாகவும் எடுத்துக் காட்டுகிறார். தான் விற்ற பருத்திக்கான விலையை உடனே தராமல் தள்ளிப் போடும் மில் முதலாளியும் வியாபாரியும் மேலும் மேலும் பணக்காரர்களாகத் தானும் தன்னையொத்த விவசாயிகளும் ஓட்டாண்டிகளாக ஆகிக் கொண்டிருப்பதை அவரது வார்த்தை களில் வெளிப்படும் கோபத்தின் வழியாகக் காட்டுகிறார். அந்தக் கோபம் மனிதர்களை விட்டு விட்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதோடு பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் கடவுளின் மீது மோதும் வார்த்தைகளாக வெளிப்படுகிறது. பணம் கேட்டுப் போய்ப் பாதிப் பணத்தோடு திரும்பும் வழியில் பருத்தி எடைபோட்டு எண்ணும் சத்தம் நீளமாகக் கேட்கிறது.
”வெங்கடாசலபதி முன்னிற்க.. லாபம்.
” வெங்கடாசலபதி முன்னிற்க..! என்பதில் விழுந்த அழுத்தம் நாயுண்டுவுக்கு ரொம்பத்தான் எரிச்சலைக் கிளப்பி விட்டுவிட்டது!”
“ முன்னிற்க, என்னத்தெ முன்னிற்க!”

வெங்கடாசலபதியும் வெங்கடாசலபதியின் மில்லுந்தான் முன்னிற்கி! தா அவனுக்கு மாசம் அம்பது லச்சம் அறுபது லட்சம் உண்டியல்லெ வந்து விழுது; இவனுகளுக்கு வருசம் அம்பது கோடி அறுபது கோடிண்ணு லாபம் வருது.
முன்னிற்கங்கிறது அவனுக்கு; லாபம்ங்கிறது இவனுக்கு!
முக்குத்திரும்பி ஐயி நாயக்கர் வீட்டுக்கு முன்னாலெ கூடி வந்தபோது, அங்கெ ஐயி நாயக்கர் குத்துக்கால் வைத்து உட்கார்ந்து கொண்டு எண்ணெய் படாத தலையை பறட் பறட் என்று சொறிந்து கொள்வதும் கோமணத்தை இழுத்து சரிசெய்து கொள்வதும் இவருடைய கண்ணில் பட்டது. ஒருவினாடி அதை நின்று பார்த்துக் கொண்டிருந்த நாயுண்டுவுக்கு பளிச்சென்று சில விஷயங்கள் புலப்பட்டதுபோல் தெரிந்தது எனக் கதை முடிகிறது.

புரிந்த விஷயம் என்பது வேறொன்றுமில்லை. மழை பெய்துபுரளும் தண்ணீர் தாவைப் பார்த்துப் போகும்; அது இயற்கை. ஆனால் பணம் என்பது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட செயற்கை. அதன் குணம் மேட்டை நோக்கிப் பாயும் என்பது தான்.

Sabado, Setyembre 26 2009

தொடரும் துன்பக்கேணி : வண்ணநிலவனின் துன்பக்கேணி
-----------------------------------------------------------------------------------
திரும்பவும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும்; பனை மரங்களையும் தென்னை மரங்களையும் தங்கள் காடுகளிலும் தோட்டங்களிலும் வளர்த்திருக்கும் விவசாயி களுக்குப் பனை மரத்திலிருந்தும் தென்னை மரத் திலிருந்தும் கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் அடிப்படை யில் போதை ஊட்டும் மதுபானங்கள் அல்ல; அவை உடல் நலத்திற்கு உதவக் கூடிய மருந்துகள் என்ற வாதம் கள் ஆதரவாளர்களிடமிருந்து வருகின்றது.

நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெருவுக்கு ஒரு கடை என்று அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு மதுப்பிரியர்களின் தேவைகளை அரசே நிறைவேற்றி வைத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் பாரம்பரிய மதுவான கள்ளைக் குடிப்பதற்கும், கள்ளை மரங்களிலிருந்து இறக்குவதற்கும் அனுமதி இல்லை என்பது ஒரு விநோதமான முரண் தானே எனக் கேட்கும் கள் ஆதரவாளர்களுக்கு எதிரான குரல்களும் இல்லாமல் இல்லை.

நமது தமிழ் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டாலும் அந்நிய நாட்டு மதுபானங்கள் என அழைக்கப்படும் ஒயின், ரம், விஸ்கி, பிராந்தி,பியர் போன்ற விலையுயர்ந்த மதுபானங்களை தினசரிக் கூலிகளான அடித்தட்டு மக்கள் தினசரி குடிக்க மாட்டார்கள்; குடிக்க முடியாது. எனவே எப்போதாவது வாரம் ஒருமுறையோ, விசேச நாட்களிலோ தான் குடிப்பார்கள். அதனால் மதுவுக்கு செலவழிக்கும் தொகை குறைவாகவே இருக்கும். அதற்குப் பதிலாகக் கள் இறக்க அனுமதி அளிக்கப் பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப் பட்டால்,அடித்தட்டு மக்கள் கள்ளுக் கடைகளுக்குச் செல்வதும், தினசரி கள்ளைக் குடிப்பதும் அதிகரித்து விடும். அடித்தட்டு மக்களைக் குடியின் பிடியில் கொண்டு போய்ச் சேர்க்கும் கள்ளுக்கடைகளை அனுமதிக்கக் கூடாது என்று அதன் எதிர்ப்பாளர்கள் வலுவான சமூகப் பொருளாதாரக் காரணங்களை வைக்கின்றனர்.

கள்ளை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்ற விவாதம் நடக்கும் அதே நேரத்தில் எல்லாவகை யான மதுக்கடைகளையும் மூடிவிட வேண்டும்; மதுப் பழக்கத்தால் தமிழ்ச் சமூகம் தன் சமகால வாழ்வை இழப்பது மட்டுமல்ல; எதிர்காலத் திட்டமிடலையும் இழந்து நாசமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் குரல்களும் கேட்கின்றன. ஆனால் மதுவருமானத்தை அரசின் முக்கியமான வருவாய் இனங்களில் ஒன்றாகக் கருதும் அரசும், அதிகார மையங்களும் மதுக் கடைகள் மூடப் பட்டால் கள்ளச்சாராயம் பெருகும்; அதனால் உண்டாகும் உயிர் இழப்புக்களும்,சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளும் அதிகமாகும் என்ற வாதத்தை வைக்கின்றன.

இந்த வாதங்கள், வாதங்களாக நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் மது பானம் சார்ந்த நேரடி நினைவுகளும், அனுபவங்களும் வந்த போதிலும் வண்ண நிலவனின் துன்பக்கேணி அவை எல்லாவற்றையும் உள்ளே அமுக்கி விட்டு விரிவதைத் தடுக்க என்னால் முடியவில்லை. அந்தக் கதை கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் இல்லாதிருந்த தமிழகத்தைப் பின்னணி யாகக் கொண்ட கதை. அவை இல்லை என்பதற்காகச் சாராயமே இல்லாமல் இருந்த தமிழகம் என்று நினைத்து விடக்கூடாது.கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதனைக் கள்ளத்தனமாக விற்பனை செய்வதும், கள்ளத் தனமாகவே அதைக் குடிப்பதும் நடந்து கொண்டிருந்த ஒரு சூழல். அந்தச் சூழலையும் பின்னணி யையும் வெளிப்படுத்தும் வண்ணநிலவனின் அந்தக் கதை இன்றுள்ள தூத்துக் குடி மாவட்டக் கிராமங்களில் ஒன்றில் நடப்பதாக எழுதப் பட்டுள்ளது.

பிரிக்கப் படாத திருநெல்வேலிமாவட்ட (இப்போதுள்ள தூத்துக்குடி மாவட்டமும் அடங்கியது) மனிதர்களையும் கிராமங்களையும் மொழியையும் கதைகளாக மாற்றிய வண்ணநிலவனின் கடல்புரத்தில் தமிழில் எழுதப் பட்ட முதல் கடலோர நாவல். கடலும் கடல் சார்ந்த நிலத்தைத் நெய்தல் எனப் பிரித்துப் புரிந்து கொண்ட தமிழ்ச் சமூக வரலாற்றிலும், நாவல் வரலாற்றிலும் உறுதியான இடத்தைப் பிடித்துள்ள கடல்புரத்தில் என்னும் நாவல் மட்டும் அல்ல அவரது கம்பாநதி, ரெயினிஸ் அய்யர் தெரு போன்ற நாவல்களும் தென் மாவட்ட மனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகளே. அவள் அப்படித்தான் என்ற மாற்றுச் சினிமா முயற்சியில் உடன் இருந்த வண்ணநிலவன் அதிகம் பணியாற்றிய இடங்கள் பத்திரிகை அலுவலகங்களே. அவரது மொத்தச் சிறுகதைகளும் இப்போது வண்ணநிலவன் கதைகள் எனத் தனியாக ஒரே தொகுதியாகக் கிடைக்கிறது.

எப்போதும் தென்மாவட்ட வாசனையைக் கக்கிக் கொண்டே இருக்கும் பாத்திரங்களை எழுதிய வண்ணநிலவன், வெறும் மொழிநடையில் மட்டும் அல்லாமல் மனித மனம், பிடிவாதம், முரண்டு என அசலான திருநெல்வேலி மனிதர்களை எழுதிக் காட்டியவர். துன்பக்கேணி கதையின் பாத்திரங்கள் பேசுவதாக இடம் பெற்றுள்ள உரையாடல்களை வாசித்துப் பாருங்கள் : “இது எதுக்கு மாமோய்? வயசு காலத்துல நீங்களே புள்ள குட்டியள வச்சுக்கிட்டு அநேகம் பாடுபடுதீய, இதுல எஞ்சொமை வேறயா ஒங்களுக்கு?”

“ ஏழைக்கு ஏழைதான தொணை.. என்ன பெரிய சொமை? பத்தோட பதினொண்ணுன்னு நீயும் எனக்கு ஒரு மவ. அம்ம்புட்டுத்தானல்ளா.!..

இந்த உரையாடல் அந்தக் கதையின் மையப் பாத்திரங்களான வண்டி மலைச்சியும் நம்பித் தேவரும் பேசும் பேச்சு. இதே வண்டிமலைச்சி, சாராயத்தை நடுராத்திரியில் தேரிக்காட்டில் தூக்கிப் போகும் இரு ஆண்களுடன் பேசும் பேச்சாகப் பின்வரும் உரையாடல் அமைகிறது.

“ மணி என்ன இருக்கும்” என்று படுத்துக் கொண்டாள் வண்டி மலைச்சி. டின்னைச் சுமந்து வந்ததில் பிடரியும், தோள்களும் ரொம்பவும் வலித்தன. மணி வானத்தை அண்ணாந்து பார்த்தான். “ என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒண்ணு ஒண்ணரை இருக்கும்!!..” என்றான். “ ஒடம்பு வலிக்கிற வலியில இந்தக் காத்தும், நெலா வெளிச்சமும் எம்புட்டுச் சொகமா இருக்குது தெரியுமா? அப்படியே படுத்துத் தூங்கிறலாமான்னு இருக்குது..”
“ அதுக்குத் தான் ஒரு ரெண்டு செரட்டை குடிச்சியானா கெச்சலா இருக்கும்.. என்றான் மணி.”
“ குடிக்கலாந்தான்.. ஆனா வவுத்துல புள்ளண்டு ஒண்ணு கெடக்குதே. அது என்னம்மாவது ஆயிப்போச்சின்னா?..” வண்டி மலைச்சியின் நிலை இது.அவளைச் சாராய டின் தூக்க அழைத்து வந்த சங்கரபாண்டியிடமும் மணியிடமும் கேட்கும் கேள்வியாக,
“ எடே!.. இது ஆரு? .. ஏ. இது நம்ம கிட்ணத்தேவர் மவ வண்டிமலைச்சியில்லாடே?.. இவ எங்கன கிடந்து ஆம்புட்டா?..
என்று ஆச்சரியத்தோடும் பிரியத்தோடும் கேட்டார் நம்பித்தேவர் என்று கதையைத் தொடங்கும் வண்ணநிலவன், “ இந்தத் திமிருனாலதாம்லே தேவமாருக கெட்டுக் குட்டிச் சொவராப் போறானுக.. அந்தப் பெய சம்முகம் மட்டும் சயிலுக்குப் போவாம இருந்தான்னாக்க இந்தப் புள்ள இன்னைக்கு இப்பிடியா சாராய டின்னு தூக்க வந்திருக்கும் ?... என்று சொல்லும் இன்னொரு உரையாடல் வழியாக அந்த வண்டிமலைச்சியின் வாழ்க்கை ஒரு துன்பக்கேணியாக உருவகம் செய்து உருவாக்கிக் காட்டுகிறார்.
வண்டி மலைச்சியின் புருசன் சண்முகம் அவளைக் கல்யாணம் செய்து கொண்டு ஆரம்பத்தில் அவளைச் சந்தோசமாக வைத்திருந்த காலத்தை அவளது நினைவலைகளாகத் தருவதோடு, தன்னுடைய அவசரப் புத்தியாலும், கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ன பாடுபடுவாள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஒருவனோடு சண்டையிட்டு, அவனை வெட்டிக் கொன்று போட்டு விட்டு இப்போது திருச்செந்தூர் சப் - ஜெயிலில் இருக்கிறான் என்பதையும் , அவன் ஜெயிலுக்குப் போன பின்பு கர்ப்பமாக இருக்கும் வண்டி மலைச்சி, அவளது அண்ணனிடம் போனாள் என்றும், கல்யாணத்துக்கு முன்பு ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று பாசங்காட்டிய அண்ணனும் அவளுக்குச் சேர வேண்டிய எதையும் தராமல் அவளைப் பாரமாகக் கருதி பேச்சு வார்த்தையே ஆகி விட்டான் என்பதையும் அவளது நினைவுகள் வழியாகவே தருகிறார்.
கணவன் இல்லாத நிலையில் பல வேலைகள் செய்து பார்த்தும் வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் தான் நடுராத்திரியில் அவள் சாராய டின் சுமக்க வந்திருக்கிறாள். அவளை அழைத்து வந்த சங்கர பாண்டி யும் மணியும் அவள் மீது கொண்ட இரக்கத்தால் தான் அவளை அழைத்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை தரும் நம்பித்தேவர் அவள் மீது பரிவும் பாசமும் கொண்டு, இந்த வேலையை அவள் செய்ய வேண்டாம் என்று கூறி சிறிது பணம் கொடுத்து அனுப்ப நினைக்கிறார். ஆனால் அவள் அதை ஏற்காமல் அந்த வேலையை- கள்ளச் சாராய டின்களைத் தூக்கிக் கொண்டு போய் அதனைத் திருட்டுத்தனமாக விற்பனை செய்யும் நபர்களிடம் சேர்க்கும் வேலையை ஏற்றுச் செய்கிறாள். அவளது போதாத காலம் மறுநாள் திருச்செந்தூர் சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், சங்கரபாண்டி, மணி இவர் களோடு, வண்டி மலைச்சியும் உட்கார்ந்திருந்தாள் என்று கதையை முடிக் கிறார் வண்ணநிலவன்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் பனை மரத்திலிருந்தும் தென்னை மரத்திலிருந்தும் கிடைத்த கள்ளைக் குடித்து உழைப்பின் வலியைப் போக்கிக் கொண்ட பாட்டாளி மக்கள், தங்களுக்குக் கூடுதலான போதை வேண்டுமென்ற போது கண்டு பிடித்த சரக்கு தான் சாராயம். அந்தச் சாராயம் சீமையிலிருந்து வந்ததால் சீமைச்சாராயம் என அழைக்கப் பட்டது. அதையே கள்ளத்தனமாகக் காய்ச்சி,கள்ளத்தனமாக விற்றுக் கள்ளத்தனமாகக் குடித்த வாழ்க்கையைத் தான் வண்ணநிலவன் துன்பக்கேணி என்று உருவகப் படுத்துகிறார். இன்று கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் குடிப்பதும் நின்று போய்விட்டன. கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லாமல் போய்விட்டன. ஆனால் அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளில் தனது வருமானத்தின் பெரும்பகுதியைச் செலவழித்து விட்டுக் குடும்பம் குழந்தைகளை மறந்து வாழ்க்கையைத் தொலைக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை துன்பக் கேணியாக இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆத்திரமும் வறுமையும் ஓர் எளிய குடும்பத்தைத் துன்பமென்னும் கேணிக்குள் தள்ளியதாக உருவகப் படுத்தியுள்ள வண்ணநிலவன் தனது முன்னோடி களிடமிருந்து விலகிச் செல்வதுபோல தோன்றினாலும் அந்த உருவகம் ஒவ்வொருவரிடமும் பெண்களின் துயர நிலைக்கே படிமமாகி இருக்கின்றது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. தமிழின் நவீன மனநிலையைத் தொடங்கி வைத்த இரு பெரும் ஜாம்பவான்களான கவிபாரதியும், சிறுகதை முன்னோடியான புதுமைப்பித்தனும் துன்பக்கேணி என்னும் உருவகத்தை பெண்கள் சார்ந்தே உண்டாக்கி உள்ளனர். கரும்புத் தோட்டத்திலே கவிதையில் வரும் அந்த வரிகள்,

நாட்டை நினைப்பாரோ? – எந்த நாளினிப்
போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர்.

தமிழ்ப் பெண்கள் கரும்புத் தோட்டத்தில் பட்ட துயரத்தைத் துன்பக் கேணியாகப் பாடிய பாரதியின் வரிகளை நீண்ட கதையாக மாற்றிய புதுமைப் பித்தன் அக்கதையின் வெளியாக இலங்கைத் தீவின் மலையகத் தேயிலைத் தோட்டமாக மாற்றிக் கட்டமைத்து அச்சொற்சேர்க்கையையே – துன்பக்கேணி உருவகத்தைப் படிமமாகக் காட்டுகிறார். அக்கதையில் வரும் மருதியின் இன்னொரு வடிவமாக வண்ணநிலவன் வண்டிமலைச்சியை உருவாக்கிக் காட்டியுள்ளார்.
அந்த வகையிலும் துன்பக்கேணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
======================================
நண்டு தின்னும் ஊரில் : பூமணியின் குடை
=============================================
“வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளின் வீட்டில் லஞ்சப் பணம். லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி”
“லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையின் எதிரொலி. பத்திரவுப் பதிவுகள் முடக்கம்”
“பல்கலைக்கழகத்துணைவேந்தர் நீக்கம். லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளால் அரசு முடிவு”
இப்படிப் பட்ட செய்திகள் சமீபத்தில் அடிக்கடி செய்தித் தாள்களில் வருகின்றன.
கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதல் இல்லாத அரசை நிறுவியுள்ள டாக்டர் மன்மோகன்சிங் அரசு, நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் அன்றாடப் பிரச்சினை களுக்கும் இருக்கும் தடைகளில் முதன்மையானது லஞ்சமும் கடமையுணர்வு தவறுதலும் தான் என்பதை உணர்ந்து அதை நீக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு தினசரிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டி ருக்கின்றன. அச்செய்திகளை வாசித்தவர்கள்,நமது தமிழ்ச் சினிமாக்களில் லஞ்சத்தையும் பொறுப்பின்மையையும் ஒழிக்கக் கிளம்பிய இந்தியன் தாத்தா, பேராசிரியர் ரமணா, அந்நியன் அம்பி, சிபிஐ ஆபிசர் கந்தசாமி போன்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கதாநாயகர்களாக வலம் வரத் தொடங்கி விட்டனர் எனக் கேலியாகப் பலர் பேசிக்கொள்வதும் ஆங்காங்கே காதில் விழுந்தது.

அதே நேரத்தில் எதையும் மாத்தி யோசிக்கிற அறிவுஜீவிகளும் ஆங்கிலப் பத்திரிகைகள் படித்து விவாதங்களில் ஈடுபடும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களும் , “இதெல்லாம் வெறும் கண் துடைப்பு சார் ; சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்து கிடைக்கும் லஞ்சத்தை ஒழிக்க முடியவே முடியாது” எனப் பேசிக் கொள்வைதையும் கேட்டிருக்கலாம். லஞ்ச மரத்தின் கிளைகளை வெட்டினால் போதாது. விஷ விதையாக முளைத்து ஆணி வேர் போட்டு வளர்ந்திருக்கும் லஞ்சமென்னும் மகாமரத்தை அடியோடு வெட்டிச் சாய்க்க வேண்டும்; புரட்சி நடந்தால் தான் சரியாகும் எனச் சொல்லும் நண்பர்களின் சவடால்களையும் கேட்டிருக்கிறேன்.

நம் கண்முன்னே கொள்ளை கொள்ளையாகப் பணம் சேர்த்த அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தவித உடல் உழைப்பிலும் ஈடுபட வில்லை. தொழிலில் ஈடுபடாமல் சொத்துச் சேர்த்து விட்டுத் தொழில் அதிபர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளை நெருங்காமல் , சொந்த வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த முடியாமல் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் லஞ்சம் வாங்கும் அலுவலகச் சிப்பந்திகளையும் கடைநிலை ஊழியர்களையும் கைது செய்யும் லஞ்ச ஒழிப்புத் துறையை அரசு அவ்வப்போது தூண்டிவிடும்; பலரைக் கைது செய்யும்; ஒருவிதப் பயத்தையும் அச்சத்தையும் உண்டாக்கி விட்டுப் பிறகு ஒதுங்கிக் கொள்ளும். ஒருவிதத்தில் மக்களை ஏமாற்றும் திசை திரும்பல்கள் எனச் சொல்பவர்களின் கருத்தை மறுக்கவும் முடியாது.

லஞ்சம், கையூட்டு, கமிஷன், மால், மாமூல் எனப் பல பெயர்களில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த அரக்கனின் தோற்றம் அறஞ்சார்ந்த வாழ்க்கையிலிருந்து விலகியதன் காரணமாகவே தோன்றியது. அறஞ்சார்ந்த வாழ்க்கையிலிருந்து விலகியதற்குக் காரணம் கடவுளையும் மதத்தையும் விட்டு விலகியது தான் என ஒருசாரார் பேசுவதையும் கேட்டிருக்கலாம். அளவிற்கு மிஞ்சிய ஆசையில் தனிமனிதன் ஒழுக்கத்தை மீறுகிறான்; அதனால் நமது கல்வியில் நீதிபோதனை வகுப்புக்களும் ஒழுக்கவியல் மதிப்புகளும் சேர்க்கப்பட வேண்டும் என வாதிடுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய விவாதங்களையும் வைக்கப்படும் காரணங்களையும் அப்படியே ஏற்கவும் முடியவில்லை; தள்ளவும் முடியவில்லை என்பதுதான் உண்மை. லஞ்சத்தை ஒழிப்பது என்ற பெருங் காரியத்தைப் பெரிய மனிதர்களும் பெரிய பெரிய நிறுவனங்களும் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் தான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் எனது காரியம் முடிய வேண்டும்; அதற்காக நான் லஞ்சம் தரத் தயாராக இருக்கிறேன் என நினைப்பதை விட்டு விட்டு, எவ்வளவு காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை; முறைப்படி நடக்கட்டும்; நான் லஞ்சம் தர மாட்டேன் என முடிவு செய்து செயல்படவும் வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு முடிவு எடுப்பவர்களாக மட்டும் இருந்து விட்டால் போதுமா? என்று கேட்டால் போதாது. நீங்கள் இருக்கும் இடத்தில் – வேலை பார்க்கும் அலுவலகத்தில்- லஞ்சம் வாங்கு வதை அனுமதிக்காதவர்களாக-பொறுப்புணர்வைப் பேணுபவர்களாக- கடமையை வலியுறுத்துபவர்களாக இருப்பதும் அவசியம் . இதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் கதை ஒன்று உண்டு. குடை என்ற தலைப்பில் பூமணி எழுதியது.

கோயில்பட்டிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்து சென்னையில் கூட்டுறவுத் துறையில் உயர் பதவி வரை வகித்த பூமணி கரிசல் இலக்கியம் என்னும் வகைப்பாட்டில் கி.ராஜநாராயணனுக்கு அடுத்து முக்கியமாகச் சொல்ல வேண்டிய சிறுகதை மற்றும் நாவலாசிரியர். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம் போன்ற தொடக்ககால நாவல்களுக்காகவும் ரீதி என்ற சிறுகதைக்காகவும் அதிகம் கவனிக்கப் பட்டவர். பின்னர் வரப்புகள், வாய்க் கால் போன்ற நாவல்களையும் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடுபவர்களை மையப்படுத்தி கருவேலம்பூக்கள் என்றொரு திரைப்படத்தையும் எடுத்தவர்.

அவரது குடை கதை லஞ்சம் என்ற மையப் பொருளை வித்தியாசமாக அணுகிய கதை. லஞ்சம் வாங்கப்படும்- கொடுக்கப்படும் கதை வெளியைக் கதைக்களனாகக் கொள்ளாமல், லஞ்சம் வாங்கும் ஒருவனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் தைரியத்தைக் குறித்து இருவர் பேசிக் கொள்வதாக அமைந்த கதை. பூமணியின் கதைகளின் மிகப்பெரிய பலமே அவர்களது கதாமாந்தர்கள் பேசிக்கொள்ளும் எளிய உரையாடல்கள் தான். முழுவதும் உரையாடல்கள் மூலமே அமைந்த கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். அப்படியான உரையாடல் மூலம் நகரும் குடை கதை இப்படித் தொடங்குகிறது:

“ஏன் ஏட்டையா ஒரு மாதிரி இருக்கீக” “ரெண்டு மூனு நாளா மனசே சரியில்லே ஆத்தி”
“ஏன் வீட்ல சண்டையா”
“ சண்டை போடுறதுக்குத் தானா தெம்பிருக்குது.நாட்ல நடக்கிற அனியாயத்தப் பாத்துக்கிட்டு துக்கல்லா நிக்கிறத விட நாண்டுக்கிறலாமான்னு இருக்குது”
“ அப்படியென்ன காணாறதக் கண்டுட்டீக.”
“ ஆத்தி எங்கயோ நாலு நல்ல மனுசரு இருக்கிறதனாலதான் அப்பப்ப மழ பேயிது.”

இந்த உரையாடலில் நல்லவர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது எனப் பேசும் ஆத்தியும் ஏட்டய்யாவும் (இந்தக் கதாபாத்திரங்கள் பூமணியின் பல கதைகளில் இடம் பெறும் கதை சொல்லிகள்) தொடர்ந்து பேசி, அந்த நாலு நல்லவர்களில் ஒருவரை- ஒரு பெண்ணை- பொதுப் பணித்துறை அலுவல கத்தில் வேலை பார்க்கும் கிளார்க் சந்தானலச்சுமியை அடையாளம் காட்டு கிறார்கள். அப்படி அடையாளம் காட்டும் குடை கதை இப்படி முடிகிறது:
“ இத்தனைக்கும் அந்தப் பொண்ணு கொஞ்சங்கூட கலங்கல. பாக்க வாறவு கிட்ட சாதாரணமாப் பேசிக்கிட்ருக்கு”
“ அது வைராக்கியம்”
“ கூடப் படிச்ச பொண்ணு ஒண்ணுவந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்ருந்துச்சு. பொறப்புட்டுப் போகும்போது இனிமேலயாச்சும் கண்டறிஞ்சு பொழச்சுக்கோன்னு அது சொல்லுது. அதுக்கு சந்தானலச்சிமி என்ன சொல்லுது தெரியுமா. என்னய எவனும் காப்பாத்த வரல. என் கொடதான் காப்பாத்தீருக்கு. ஒரு வெரலத்தான் வெட்டீருக்கான்... கேட்டயா.”
“ அப்படிப் போடு”
“ எனக்குச் செருப்பால அடிச்சமாதிரி இருந்தது. மனசுக்குள்ள கொட்டிக் கெடந்த வேதனையெல்லாம் பறந்துருச்சு. சந்தோசம் பொங்குது. அந்தப் பொண்ண கொஞ்சநேரம் பெருமையோட பாத்துக்கிட்டே இருந்தென்..”
“ ஒடனே நானும் போயிப் பாக்கணும் ”
“ இப்பத் தெரிஞ்சதா ஆத்தி ஊரு ஒலகத்துல ஏன் மழ பேயிதுன்னு”
“நல்லாத் தெரிஞ்சுக் கிட்டே ஏட்டையா”

நாட்டில் மழை பெய்வதற்குக் காரணமாக ஏட்டையாவும் ஆத்தியும் கண்டறிந்த சந்தானலச்சுமி ஏட்டையாவின் வீட்டிற்கும் பக்கத்து வீட்டில் குடியிருப்பவள். அவளது கணவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். சுட்டித்தனமான இரண்டு பெண்பிள்ளைகள் என வாழும் அவளது வைராக்கியமும் கலங்காத மன உறுதியும் வெளிப்படும் பின்னணியில் இருந்தது அவள் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சமும், அரசு அலுவலகத்தையும் தவறாகப் பயன் படுத்தும் பொறுப்பற்ற தனமும் தான்.
சந்தானலச்சுமி வேலை பார்ப்பது பொதுப்பணித்துறையில். பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், சாலை வசதி போன்றவைகளுக்குப் பொறுப் பான அத்துறை எல்லா வேலைகளையும் ஒப்பந்தக்காரர்களை வைத்தே முடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எந்தப் பகுதியில் வேலையைச் செய்வது என்பதில் தொடங்கி, யாருக்கு ஒப்பந்தம் விடுவது , முடிந்த வேலைக்குப் பணம் வழங்குவது என அனைத்துக்கும் லஞ்சம் பெறும் பொறி யாளர்களும் அலுவலகப் பணியாளர்களும் நிரம்பிய இடம். அதன்-வாட்ச்மேன் முப்பிடாதிக்கும் சந்தான லச்சுமிக்கும் இடையே ஏற்படும் முரண்பாட்டின் வழியாகவே கதை உருவாகிறது.
பொதுப்பணித்துறை அலுவலகத்தின் பொதுப் போக்கோடு ஒத்துப் போகாமல் - லஞ்சப் பணத்தில் தன் பங்கை வாங்கிக் கொள்ளாமல், தானுண்டு தன் வேலையுண்டு என வந்து போய்க் கொண்டிருக்கும் சந்தான லச்சுமியைக் கண்டு அங்கிருக்கும் ஒவ்வொருவரும் பயப்படுகின்றனர். எங்காவது காட்டிக் கொடுத்து விடுவாளோ என்று ஒவ்வொருவரும் பயம் கொண்டு அவளை மிரட்ட நினைக்கின்றனர்.அதற்கு பயன்படுகிறவனாக முப்பிடாதி இருக்கிறான்.
முப்பிடாதி முரடன். ஒப்பந்தக்காரர்களுக்குக் காரியம் முடிச்சுக் கொடுக்கக் காசு வாங்குபவன் மட்டுமல்ல; அங்கே இருக்கும் குடிதண்ணீரைக் காசுக்கு விற்பவன். வெளியூர்க்காரர்களை இரவில் தங்க வைத்து அவர்கள் காசில் சாராயம் வாங்கி அலுவலக வளாகத்திலேயே குடித்துக் கும்மாளம் போடுகிறவன். இதையெல்லாம் சந்தானலச்சுமி கண்டிக்கிறாள். அவளும் லஞ்சம் வாங்கினாள் என்று காட்ட ஒரு முறை ஒரு நூறு ரூபாயை வைத்து ஒரு கோப்பைத் தருகிறான். அவள் அந்தப் பணத்தைத் தலைமைப் பொறி யாளரும் கொடுத்துவிட்டுப் புகாரும் செய்து விடுகின்றாள். இந்த நிலையில் தான் அவன் வேறு வழியை யோசித்து முரட்டுத்தனமான வழியில் செயல் படுத்துகிறான்.

தனலச்சுமி போகும் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது அரிவாளை வைத்து மிரட்டுகிறான். அவள் பயப்படாமல் பேசிய போது அரிவாளை வீசுகிறான். அவள் கையில் வைத்திருந்த குடையால் தடுத்து விடுகிறாள். திரும்பவும் இரண்டு முறை குடை தடுத்து விடுகிறது. ஆனால் கடைசியாக குடை ஒடிய அவளது விரல் ஒன்று வெட்டுப் படுகிறது. இந்த நிகழ்ச்சி அலுவலகத்திற்குப் பக்கத்தில் நடந்தும் அவளை ஒருவரும் காப்பாற்ற வரவில்லை என்ற போதும் அவள் கலங்கவில்லை என்பதைத் தான் ஏட்டையா, ஆத்தியிடம் சொல்லி ஆச்சரியப்படுகிறான். ’நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக்கு ’எனக் கேட்டு வாங்கித் தின்னப் பழகிக் கொள்பவர்கள் நிரம்பிய உலகத்தில் வன்முறையான அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் மனதில் உறுதிகாட்டும் சந்தானலச்சுமிகளும் உண்டு என்று காட்டும் பூமணியின் கதை எளிய கதை என்றாலும் அவரது கதைகள் எப்போதும் ஒரு கதையோடு நின்றுவிடுவதில்லை. ஒரு கதைக்குள் இன்னொரு கதை, அதிலிருந்து மற்றொரு கதை எனத் தொட்டுத் தொட்டுப் பிரியும் தன்மை கொண்டவை.குடை கதையிலும் அப்படிப் பட்ட தன்மையைக் காணமுடிகிறது.
பெரும்பாலும் சிறுகதை வடிவம் ஒரு பாத்திரத்தை மையப்படுத்தி முன்னிறுத்தும் நோக்கம் கொண்டவை. அப்பாத்திரத்தோடு தொடர்புடைய - அதன் எதிர்நிலைப் பாத்திரத்தின் இயல்பும் கூடச் சில நேரங்களில் பேசப்படுவதுண்டு. குடை கதை நேரடியாக தனலச்சுமி என்ற பாத்திரத்தை மையப்பாத்திரமாக முன்னிறுத்தினாலும், அவளது பொறுப்பான கணவனையும் கூட முழுமையாகவே வாசகனுக்குக் காட்டுகிறார்.இக்குடும்பத்தின் கதையைச் சொல்லும் ஏட்டையாவின் குடும்ப இருப்பும் அவரது பேச்சு வழியாக விரிகிறது. அதே போல் ஏட்டையாவிடம் கதை கேட்கும் ஆத்தியின் உறவினர்கள், அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை எனப் பரவிப் பரவிச் செல்லும் விரிவான கதைப் பரப்பைக் காட்டுகிறது கதை. ஒரு சிறுகதை யிலேயே முழுமையான வாழ்க்கைச் சிதறல்களையும் பரிமாணங்களையும் காட்டும் பூமணியின் கதைகள் மிக நீளமானவை அல்ல என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


தீர்க்கமான முடிவு: ஜெயகாந்தனின் யுகசந்தி

சன் தொலைக்காட்சியில் இரவு ஒளிபரப்பில் முக்கிய நேரத்தில் ஒளி பரப்பப் படும் கோலங்கள் தொடர் எப்போது முடியும்? இந்தக் கேள்வியைப் பத்திரிகைச் செய்தியாக, நடைபாதைப் பேச்சாக, ஒத்த கருத்துடையவர்களின் கலந்துரையாடலில் மையப் பொருளாகப் பல இடங்களில் நான் கேட்டிருக் கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம். பெரும்பான்மை மக்களால் விரும்பியோ விரும்பாமலோ பார்க்கப்படும்-படிக்கப்படும் கலை இலக்கியங்களைப் பொருட் படுத்திப் பேச வேண்டியது பண்பாட்டியல் துறை சார்ந்தவனின் ஒருவனின் கடமை என்ற நிலைபாட்டோடு தொலைக்காட்சித் தொடர்களை அவ்வப்போது கவனித்து வைப்பதும், விரும்பிப் பார்க்கும் பல தரப்பட்ட மக்களிடம் உரையாடிப் பார்ப்பதும் எனது விருப்பம்.
அப்படிக் கேட்கும் போதும் உரையாடும் போதும் அந்தக் கதைத் தொடரை அதன் இயக்குநர் அவ்வளவு சுலபமாக முடித்து விட முடியாது என்றே எனக்குத் தோன்றும். ஊடகங்கள் பின்பற்றும் ‘ரேட்டிங்’கில் அந்தத் தொடர் முதல் இடத்தில் இருப்பது என்ற காரணத்தையும் தாண்டி வேறு ஒரு காரணம் இருக்கிறது என்பது எனது கருத்து. இரண்டாவது திருமணத்தை ஏற்க வைப்பது என்ற சிக்கலான கதைப் பின்னலைக் கொண்ட கோலங்களுக்கு அதன் பெரும்பான்மைப் பார்வையாளர்களாகிய பெண்கள் கூட்டம் ஏற்கத்தக்க முடிவை அதன் இயக்குநர் திருச்செல்வன் தர வேண்டும். அது இயக்கு நருக்குப் பெரும் சவாலான ஒன்று. அப்படித் தருவதற்கு தீர்மானமான முடிவு எடுக்கும் திறன் வேண்டும்; ஜெயகாந்தனின் கௌரிப் பாட்டியைப் போல என மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். ஆம் கௌரிப் பாட்டி தீர்மானம் செய்வதில் முதன்மயானவள் என்பது மட்டுமல்ல; அதற்கான காரணங்களை முன் வைப்பதிலும் கைதேர்ந்தவள் என்பதை யுக சந்தி என்னும் கதையை வாசித்தால் நீங்களும் உணரக் கூடும். கோலங்கள் தொடரின் கதையைப் பற்றி விவாதிப்பது இங்கு நோக்கமல்ல. ஜெயகாந்தனின் கதையை நினைத்துக் கொண்டதற்கு அது ஒரு காரணம் தான்.
ஜெயகாந்தனின் கதைகளில் மையப் பாத்திரங்களாக வரும் எந்தவொரு பாத்திரமும் தான் நினைத்ததைத் தைரியமாகச் செய்யக் கூடிய-சொல்லக் கூடிய- பாத்திரங்கள் என்பதை ஜெயகாந்தனின் தீவிர வாசகர்கள் அறிவார்கள். அதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு வழக்கத்தின் மையத்தில் நிற்கும் பாத்திரமாக இருந்தாலும், அந்தப் பாத்திரம் தீர்மானமாக முடிவெடுத்து நடைமுறைப் படுத்துவதைத் தனது கதையில் காண்பிப்பவர் ஜெயகாந்தன். ஏனென்றால் ஜெயகாந்தனே சொன்னது போல அவரது கதைகளில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் அவர் தான். தன்னையே ஒவ்வொரு பாத்திரத்திலும் வைத்து எழுதிப் பார்க்கும் ஜெயகாந்தன் தனது முடிவுகளைப் பாத்திரங்களின் முடிவுகளாகத் தந்து விடுகிறார். இப்படித் தருவதே அவரது கதைகளின் பலம் என்று சொல்லும் விமரிசகர்களும் உண்டு; அதுவே அவரது பலவீனம் என்று வருணிப்பவர்களும் உண்டு. அந்த விமரிசனங்களைப் பற்றி அவர் அதிகம் அலட்டிக் கொண்டவரல்ல.
மாறிவரும் சமூகத்தின் புதிய கீற்றுக்களைச் சரியாக அடையாளப்படுத்தி அதன் பிரதிநிதிகளைக் கதாபாத்திரங்களாக எழுதிக் காட்டிய பல கதைகள் அவரது தொகுப்புகளில் உள்ளன. முத்திரைக் கதைகளாக ஆனந்தவிகடனில் அவர் எழுதிய கதைகள் வெளிவந்த காலத்தில் பலத்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டவை. யுகசந்தி கதையும் அப்படிப் பட்ட கதைதான். யுகசந்தியைத் திட்டமிட்டுக் கதைகளை எழுதுபவர் ஜெயகாந்தன் என்பதை உறுதி செய்யும் உதாரணக் கதை என்று கூடச் சொல்லலாம். பேனா வழியாகக் கதை தன்னை எழுதிக் கொள்கிறது, பாத்திரங்கள் தங்களை எழுதிக் கொள்கிறார்கள் என்று சொல்லும் சில நவீன எழுத்தாளர்கள் போல ஜெயகாந்தன் சொல்பவர் அல்ல. அவர் எழுத நினைக்கும் கதை அல்லது கதாபாத்திரம் முழுமையின் நிழலாக அவரது மூளைக்குள் இருப்பதாக நம்புபவர். அப்படி இருப்பது தானே சாத்தியமும் கூட.
நெய்வேலியிலிருந்து கடலூரில் இருக்கும் மகன் வீட்டிற்கு வருவதற்காகப் பேருந்து நிலையத்தில் வந்திறங்கிடும் கௌரிப் பாட்டி, மகன் வீட்டில் ஒரு இரவு முழுவதும் தூங்காமல் தங்கி இருந்து விட்டு அடுத்த நாள் அவசரம் அவசரமாகத் தனது பேத்தி இருக்கும் நெய்வேலிக்குச் செல்ல வேண்டும் எனப் பேருந்து நிலையத்திற்குத் திரும்புவதோடு முடியும் கதை யுகசந்தி. எழுபது வயதுப்பாட்டி கௌரி, இளம் வயதிலேயே விதவையானவள். தனது விதவைக் கோலத்தை ஒவ்வொருவருக்கும் உணர்த்தும் விதமாக விதவைகளுக்கே உரிய ஆடையை உடுத்தி, தலையை மழித்து, உணவை உண்டு ஆசாரம் காத்து வந்தவள். அதே நிலை கணேசய்யரின் மூத்த மகள்- கௌரிப்பாட்டியின் பேத்தி கீதாவுக்கும் ஏற்பட்ட போது அடைந்த வலி தாங்க முடியாத ஒன்றாய் உணர்ந்தவள். ”மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை,நாடகப்பூச்சைக் கலைப்பது போல கலைத்து விட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ்சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து விழுந்து குமுறியழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசிச் சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கௌரிப் பாட்டி” என்று ஜெயகாந்தன் எழுதிக் காட்டியதன் வழி கௌரிப் பாட்டியின் சித்திரத்தை உணரலாம்.
விதவையான மகளை விதவைக்கோலம் ஏற்கச் செய்யாமல், ஆசிரியப் பணிக்கு அனுப்பும் முடிவைத் தனது மகன் கணேசய்யர் எடுத்த போது அமைதி காத்தவள் மட்டுமல்ல; அவளோடு போய் அவளுக்கு உதவியாக இருக்கிறேன் எனக் கிளம்பி கீதா வேலை பார்க்கும் நெய்வேலியில் அவளுடன் இருப்பவள். அப்படி இருந்தாலும் தன் ஆசார அடையாளமான மொட்டை போடுவதற்காக ஒவ்வொரு முறையும் கடலூருக்கு வருபவள். வந்து வழக்கமாகத் தலை மழிக்கும் நாவிதன் வேலாயுதத்திடம் தலையை மழித்து கொள்பவள். அப்படித் தலையை மழித்து மொட்டை போட்டுக் கொள்ளத்தான் கௌரி அன்றும் வந்தாள். வரும்போது பேத்தி தன் தந்தை கணேசய்யரிடம் கொடுக்கச் சொன்ன கடிதத்தையும் கொண்டு வருவதில் தான் கதை தொடங்குகிறது.
நாவிதனைக் கூட மாற்றிக் கொள்ளாமல் ஆசாரம் காத்த கௌரிப் பாட்டி. தான் அனுபவித்த விதவைத் துயரைத் தனது பேத்தி கீதா அனுபவிக்கக் கூடாது என நினைத்து எடுக்கும் முடிவு தான் அவளை யுகங்களின் சந்திப்பாக மாற்றுகிறது. தன்னுடன் பள்ளியில் வேலை பார்க்கும் இந்தி பண்டிட் ராமச்சந்திரனை மறுமணம் செய்வது என்று பேத்தி கீதா எடுத்திருக்கும் முடிவை வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், நான் ஏற்று கொள்கிறேன் ; இப்படியொரு முடிவை எடுத்த அவளுக்கு ஆதரவாக நான் இருக்க வேண்டும் என்று கருதி உடனடியாகத் தலையைக் கூட மழித்துக் கொள்ளாமல் திரும்பிச் செல்கிறாள் என்பதாகக் கதை முடிகிறது.
யுகசந்தியின் கதை முடிச்சே கௌரிப் பாட்டி கொண்டு வரும் கடிதத்தில் தான் இருக்கிறது. பேத்தி கீதா தன்னிடம் கொடுத்த கடிதத்தைத் திறந்து பார்க்காமல் அவளது அப்பா கணேசய்யரிடம்- தன் மகனிடம் சேர்த்து விட்டு ஆயாசமாக அமர்ந்த கௌரியைக் கணேசய்யர் கடிதத்தைப் படித்து விட்டு அடைந்த அதிர்ச்சியும் ஆவேசமும் நிலை குலைய வைக்கிறது. மறுமணம் செய்வது எனக் கீதா எடுத்துள்ள முடிவைச் சொல்லும் கடிதத்தைப் படித்தவுடன் கணேசய்யர் “அவ செத்துட்டா..தலையெ முழுகிட வேண்டியது தான் என்று நிர்த்தாட்சயண்யமான குரலில் உறுதியாகச் சொன்ன போது ’பாட்டி திகைத்தாள்’ என்று எழுதுகிறார் ஜெயகாந்தன். திகைத்தவள் தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படிக்கிறாள். அதில், இப்படி இருக்கிறது: “ ரொம்ப சுயநலத்தோட எடுத்த முடிவு தான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, தியாகம் செய்து விட்டீர்கள்..?” இந்தக் கேள்வி பாட்டிக்கு சுருக்கென்று உரைத்ததால் நாக்கைக் கடித்துக் கொண்டாள். எதுவும் பேசாமல் திரும்பத் திரும்பக் கடித வரிகளை நினைவுக்குக் கொண்டு வருவதும் கீதாவை நினைத்துக் கொள்ளாமல் இருந்த கௌரிக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை.
அடுத்த நாள் காலை நாவிதன் வேலாயுதம் வந்து நின்றதை நினைவுபடுத்திக் கணேசய்யர், “ அம்மா வேலாயுதம் வந்திருக்கான்.. அவள் செத்துட்டான்னு நெனச்சித் தலையைச் செரைச்சி தண்ணிலே போயி முழுகு.. என்று சொல்கிறார். அப்போது கௌரி, “வாயை மூடுடா..” என்று குமுறி எழுந்து “ காலங்கார்த்தால அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்ன பேச்சு!.. இப்ப என்ன நடந்துடுட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே? என்று தாங்க முடியாத சோகத்துடன் கேட்கிறாள். பிறகு தனது மகனிடம், “ அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான். அதுக்கென்ன சொல்றே? என்று கேட்டு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டு தான் இதுவரை காத்த ஆசாரம், அனுஷ்டானம் போன்றவற்றின் தீவிரமான கேள்விகளைத் தொடுக்கிறாள். அந்தக் கேள்வி கீதாவுக்காகக் கேட்டதா..? இவ்வளவு காலமும் தன்னை விதவையாக ஆக்கிப் பார்த்த சமூகத்தின் கட்டுப்பாடுகள் மீது கேட்கும் கேள்விகளா? என்று திகைக்கும் படியாக அவளது வினாக்கள் இருக்கின்றன.
அவளின் தர்க்கங்களும் தன் மகன் கணேசனுடன் அவள் நடத்தும் விவாதங் களும் ஒரு கதைக்குள் நிகழ வாய்ப்புண்டா என்றால் இல்லை தான். உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் போது மனிதர்கள் தர்க்க ரீதியாகப் பேசிக்கொள்வதில்லை என்பது யதார்த்தம். என்றாலும் ஜெயகாந்தனின் பாத்திரங்கள் அறிவுப் பூர்வமாகப் பேசவே செய்வார்கள். கௌரிப் பாட்டியும் அப்படித்தான் பேசுகிறாள்.
கௌரி ஆசாரத்தைக் காத்தது போலக் கீதாவையும் விதவைக் கோலத்தில் இருக்கச் செய்யாமல் தொடர்ந்து படிக்கவும், வேலை பார்க்கவும் அனுமதித்த போதே ஆசாரம் மீறப்படுதல் நடந்து விட்டது; வேலை பார்த்த போது அவள் திலகம் இட்டுக் கொண்டாள்; வண்ண வண்ண ஆடைகளை அணிந்து கொண்டாள். அதையெல்லாம் அனுமதித்து விட்டு, இப்போது மறுமணம் என்றவுடன் ஆசாரம், அனுஷ்டானம் எனப் பேசுவது என்ன நியாயம் ? என்று கேட்ட அம்மாவுக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நிற்கும் கணேசய்யரிடமும் அவரது மனைவி பார்வதியிடமும் “ வீட்டைச் சமத்தாப் பார்த்துக்கோ ” என்று சொல்லி விட்டுக் கிளம்புகிறாள். கிளம்பும்போது வழியில் நின்ற வேலாயுதத்திடம், “ நீ போடாப்பா.. நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு.. ” என்று அவனிடம் நாலணாவைத் தந்து அனுப்பினாள். “ இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை.. அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது! நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக் கொள்ளக் கூடாதா?” என்று எண்ணிச் சிரித்துக் கொண்டாள் கௌரி என்று எழுதும் ஜெயகாந்தன் அந்தக் கதையை இப்படி முடிக்கிறார்:வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர்கொண்டழைத்துத் தழுவிக் கொள்ளப் பயணப்படுவதென்றால் .. ஓ! அதற்கு ஒரு பக்குவம் தேவை!
விதவை மறுமணம் என்ற நிலை அதிகம் வெளியில் தெரியாமல் மாறிவிட்ட இன்றையச் சூழலில் இந்தக் கதை முக்கியமான கதையாகத் தோன்றாமல் போகலாம். ஆனால் பால்ய விவாகம், அதனால் ஏற்பட்ட விதவைகள் பிரச்சினை என்று தமிழ்ச் சமூகத்தினை அலைக்கழித்த அந்தச் சிக்கலைத் தீவிரமாக எதிர்கொண்ட ஒரு எழுத்தாளன் எடுத்த முடிவை இந்தக் கதையின் பாத்திரமான கௌரி உக்கிரமாக வெளிப்படுத்துவதை யுகசந்தியில் இன்றும் வாசிக்கலாம்.


Biyernes, Setyembre 04 2009

திக்குத்தெரியாத காட்டில்…
==========================
இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் நுழைய உள்ளவர்களில் ஏறத்தாழப் பாதிப்பேர் தமிழ் வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைச் சாளர முறையின் வழியாகச் சேர உள்ள மொத்த மாணாக்கர்களில் 43.5 % பேர் தமிழ்வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 26.34 சதவீதம் தான். 43.5 % பேரும் தங்கள் பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடித்து எதிர்காலத்தைச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் ; அவர்களது பெற்றோரின் விருப்பமும் அதே. இன்னும் சொல்வ தானால் இந்தச் சமூகத்தின் வேண்டுகோளும் கூட அதுதான். ஆனால் அது நடக்கப் போவதில்லை. சேர்ந்த அத்தனைபேரும் வெற்றிகரமாக வெளியேறு வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி வெளியேற வில்லை என்பதே நடைமுறை உண்மையுங்கூட.

தொழிற்கல்விக்குள் நுழைந்தவர்களைப் பற்றிப் பேசும் நமது ஊடகங்களும், கல்வி நிறுவனங்களும் படிப்பை முடிக்காமல் போனவர்களையும், படிப்பு கெட்டுப் போனதால் திசைமாறியவர்களையும் பற்றி நமது சமூக நிறுவனங்களும் திட்டமிடல் பொறுப்பாளர்களும் கவலைப்படுவதில்லை; கண்டு கொள்வதுமில்லை. நமது பொதுப்புத்தியோ அவர்களைக் குற்றவாளி களாகக் கருதி ஒதுக்கவும் செய்கிறது. இப்படிப் பட்ட புறக்கணிப்பால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். அவர்கள் இந்தச் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் ஊடகங்கள் வழியாகக் கவனத்திற்கு வரும் குற்ற நடவடிக்கைகளின் பின்னால் தொழிற்கல்வி மாணவர்களும், பட்டதாரிகளும், பாதியில் நிறுத்தியவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காவல் துறையின் ஆவணங்கள் சொல்கின்றன.
பள்ளிக் கல்வியை முடித்துவிட்டுத் தொழிற்கல்வியைப் பெறும் ஆசையோடு பெரும்பணத்தைக் கட்டணமாகச் செலுத்திய பிறகும் படிப்பை முடிக்காமல் போவதின் காரணங்கள் பலவாக இருக்கக் கூடும். தனிநபர் சார்ந்த காரணங் களுக்கும் பலவாக இருக்க, நமது அரசும், கொள்கை வகுப்பாளர்களும் கண் மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு நடைமுறையும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. தனிநபர் சார்ந்த காரணங்களுக்கே ஆலோசனைகள் வழங்கி வழி நடத்திட இன்று கல்வி நிலையங்கள் ஆலோசனை மையங் களை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதைவிடவும் கூடுதலான கவனத்துடன் செய்ய வேண்டியது மாணாக்கர்களின் தொடர்பு மொழிப் பிரச்சினையாகும்.

பள்ளிக் கல்விக்குப் பிந்திய தொழிற்கல்விப் பட்டங்கள் நூறு சதவீதம் ஆங்கிலவழிப் பாடங்களாகவே கற்பிக்கப்படுகின்றன. படிப்பதற்கான மொழி மட்டுமே ஆங்கிலம் என்று நினைத்து விட வேண்டாம். பொறியியல் போன்ற தொழிற்கல்வியைத்திறம்பட முடித்துவிட்டு வெளியேறும் பட்டதாரிகளுக்குப் பணிகளை வழங்கத் தயாராக இருக்கும் நிறுவனங்களின் தொடர்புமொழியும் ஆங்கிலம் தான். தமிழக மாணவர்களின் ஆங்கில மொழிப் பயன்பாடு அவர்களின் விருப்பமின்றிக் கூடிக் கொண்டே இருக்கிறது. இதைச் சரியாகப் புரிந்து கொண்ட சில கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழியைத் தொடர்பு மொழி என்ற அளவில் கற்பதற்கான வழிகளை உருவாக்கி அதையும் வெற்றி கரமான வியாபாரமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் வணிகமாகப் பார்க்கும் போக்கு மிக மிக ஆபத்தானது. தமிழ் நாட்டு மாணவர் களின் மொழிப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை முன் வைப்பதே அரசுக்கு ஆலோசனை வழங்கும் கல்வியாளர்களின் முக்கியக் கடமை மட்டும் அல்ல; அவசரக் கடமையும் கூட.
ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்கும் ஒரு மாணவர் பள்ளிக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் தாய் மொழியாகிய தமிழையும் ஒரு பாடமாகவும் படிக்கிறார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் நினைக்கிற ஒரு விசயத்தை அல்லது கற்ற பாடங்களைத் தமிழில் சொல்லவோ, எழுதவோ இயலாதவராகவே வெளியேறுகிறார். இதே நிலை தான் தமிழ் வழிக் கல்வி கற்கும் மாணாக்கர்களிடமும் இருக்கிறது.பாடங்கள் அனைத்தையும் தமிழ் வழியில் படிக்கும் அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பும் அந்த மொழியைத் தொடர்பு மொழியாகக் கூடப் பயன் படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது.
இந்தப் பிரச்சினை வெறும் மொழிப்பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி தரமான கல்வியைத் தரமுடியாமல் தவிக்கும் உயர்கல்வியின் தலையாய பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வியில் முதன்மைப் பாடங்களான கணிதம், உயிரியல், வேதியியல், இயல்பியல் போன்றவற்றிற்குத் தரும் முக்கியத்துவத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் மொழிக் கல்வியைக் கற்பிக்க வேண்டும்.
நடைமுறையிலோ இதற்கு எதிரான நிலையே இருக்கிறது. மொழிக் கல்வியும் மொழி ஆசிரியர்களும் இரண்டாவது மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதே நிலவரம். பாடங்களை நடத்துவதை விட வேறு விதமான பணிகளே அவர்களுக்கு பள்ளியில் காத்திருக்கும். அவர்களும் தங்கள் கல்விப்பொறுப்பை உணராமல், நிர்வாகம் ஏவும் வேலைகளைச் செய்யும் பொறுப்பையே பெரிதாக என்ணிச் செயல்படுகிறார்கள். மொழியைக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் ஏராளமான புதிய உத்திகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதனை நமது பள்ளிகளின் மொழி ஆசிரியர்கள் அறிய வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு நமது மொழி ஆசிரியர்கள் அனுப்பப் பட வேண்டும்.
தாங்கள் கற்ற கல்வியை- பாடங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லக் கூடியவர்களாக – எழுதக் கூடியவர்களாக மாணவர்களை மாற்றுவது என்பது மொழி ஆசிரியர்களின் முக்கியமான கடமை. அக்கடமை அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கான கடமை அல்ல; இந்தச் சமூகத்திற்கும் தேசத்தின் எதிர் காலத்திற்கும் அவர்கள் செய்ய வேண்டிய கடமை. அவர்களைச் செய்யத் தூண்ட வேண்டியது கொள்கை வகுப்பாளர்களின் கடமை என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
பன்னிரண்டு வருடங்கள் தாய்மொழியின் வழியாக- தமிழ் வழியாகக் கல்வியைப் பெற்றுக் கொண்டு உயர்கல்விக்காகக் கல்லூரிக்குள் –அதிலும் பொறியியல் ,மருத்துவம் போன்ற தொழிற்கல்வி வகுப்புகளுக்குள் அடியெடுத்து வைக்கும் தமிழ் நாட்டு மாணவன் ஒருவனின் நிலையைச் சரியாகச் சொல்வதற்கு எனக்குப் பாரதியின் இந்தக் கவிதைத் தலைப்பு தான் நினைவுக்கு வந்தது.
பாடங்களைப் பயிலும் மொழி எதுவாக இருக்கிறதோ அதுவே தேர்வுகள் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பயிற்று மொழிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழிக்கல்வியின் பிரச்சினையாகவும் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு பட்ட வகுப்பிற்கும் மூன்று பாடத்திட்டக் குழுக்கள் பாடங்களைத் தயார் செய்கின்றன.
பகுதி -I தமிழ் பாடத்திட்டக்குழு, பகுதி -II ஆங்கிலமொழிப் பாடத்திட்டக் குழு, அப்பட்டத்தின் முதன்மைப் பாடத்திட்டக்குழு என்பன தான் அவை. இம்மூன்று குழுக்களும் கூடும் நாட்களும் வேறு வேறு; பாடங்களைத் திட்டமிடும் நோக்கங்களும் வேறு வேறு. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நோக்கங் களுடன் கூடித் தயாரிக்கப் படும் பாடத்திட்டங்கள் வேறு வேறு வகையான பாதையில் தான் செல்லும். அதற்குப் பதிலாக இம்மூன்று குழுக்களும் இணைந்து ஒற்றை நோக்கத்துடன் பாடத்திட்டத்தைத் தயாரித்தால் அடைய வேண்டிய இலக்கைச் சுலபமாக அடையும் வாய்ப்புக்கள் உண்டு.
மொழிக்கல்வியில் ஆங்கிலேயர்கள் முன் வைத்த நோக்கங்களே இன்னும் நோக்கங்களாக உள்ளன. ஒரு பட்டப்படிப்பை முடிக்கும் இந்தியன், ஆங்கில மொழியைப் பயன்பாட்டு மொழியாகக் கற்பதோடு ஆங்கில இலக்கியத்தின் சிறப்பான பகுதிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதன் வழியாக ஆங்கிலேயர்களின் மேலான பண்பாட்டை அறிந்து கொள்வான். அறிந்து கொண்ட நிலையில் இந்தியர்கள் அவர்களின் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்வார்கள் ;எதிர் மனநிலைக்குச் செல்ல மாட்டார்கள் என்பது மறைமுக நோக்கமாக இருந்தது.
அந்த மறைமுக நோக்கத்தை நமது கல்வி முறை இன்றும் ஒத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் தொடர்பு மொழியாக வேண்டும் என்பதில் இன்று மாற்றுக் கருத்துக் கூற முடியாது; ஆனால் ஷேக்ஸ்பியரும் மில்டனும் தேவை என்று சொன்னால் அதை அபத்தம் என்று தான் சொல்ல வேண்டும். ஆங்கில இலக்கியத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காத ஒரு மாணவர் உலக இலக்கியத்தைக் கற்க விரும்பினால் அவர் நாட வேண்டியது நூலகங்களாகத் தான் இருக்க வேண்டும்; வகுப்பறைகளாக இருக்க வேண்டியதில்லை.
இதே அணுகுமுறையைத் தான் தமிழ் மொழியைப் பயிற்றுவிப்பதிலும் பின்பற்ற வேண்டும்.ஆங்கில வழியாகவோ, தமிழ் வழியாகவோ தான் கற்ற கருத்துகளை- செய்திகளை- தமிழ் வழியாகப் பேசவும், எழுதவும் கூடியவராக மாற்றும் விதத்தில் தமிழ் மொழிக்கல்வி அமைய வேண்டும். அவர்களுக்குச் சங்க இலக்கியத்தின் சில பகுதிகளையும் சிலப்பதிகாரத்தின் ஒரு காதை யையும் தேவாரப் பதிகங்கள் சிலவற்றையும் கற்றுத் தருவதால் அவர்களுக்கு தமிழ் இலக்கிய ஆர்வம் எதுவும் வந்து விடாது. மொழிக் கல்வியை முழுமையாகக் கற்பிக்கும் நிலையில் - மாணாக்கர்களின் முதன்மைப் பாடங்களோடு தொடர்புடைய மொழிப் பாடங்களாகக் கற்பிக்கும் போது தான் இவற்றின் முழுப் பயனும் மாணாக்கர்களுக்குப் போய்ச் சேரும். அப்படியில்லாத மொழிப்பாடக் கல்வி தொடர்ந்து விழலுக்கு இறைக்கும் நீர்தான்.
முழுமையைத் தவற விட்ட முன் முயற்சி.
தேர்தல் அரசியலை ஏற்றுத் தமிழ் நாட்டில் இயங்கும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அதிகம் நம்புவது பேச்சு மேடைகளையும் அச்சு ஊடகங்களையும் தான். அச்சு ஊடகமான பத்திரிகை மற்றும் நூல்களை வெளியிட அதிகாரபூர்வமான கட்சி அமைப்புகளை நீண்டகாலமாகக் கொண்டுள்ளன அக்கட்சிகள். அவ்வதிகாரபூர்வமான அமைப்புகள் வழியாகச் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்யச் சில துணை அமைப்புகளை உருவாக்குவதும் உண்டு. அத்துணை அமைப்புகளைப் பொறுப்பேற்று நடத்தும் தனிநபரின் விருப்பம் மற்றும் தொடர்புகளின் அடிப்படையில் அத்துணை அமைப்புகளின் எல்லைகளும் செயல்பாடுகளும் விரிவடையும்.
தமிழகப் பெருநகரங்கள் அனைத்திலும் கிளைகளைக் கொண்டுள்ள பாரதிபுத்தகாலயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடுகளையும், அதன் துணை அமைப்புகளின் நூல்களையும் விற்பனை செய்யும் ஒரு பதிப்பக இயக்கம். அதன் வெளியீடுகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாகப் புதிய புத்தகம் பேசுது என்றொரு இதழையும் நடத்தி வருகிறது. அந்த இதழை அவ்வப்போது சிறப்புமலராகவும் வெளியிடுவதுண்டு. ஏப்ரல் ,2009 இல் அத்தகைய சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அச்சிறப்பு மலரின் பொதுப் பொருள் தமிழ்ப் புத்தக உலகம்,1800-2009.
இப்பொதுப் பொருளில் 44 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக அச்சிறப்பு மலர் வந்துள்ளது. தமிழில் புத்தகங்களை அச்சிடத் தொடங்கிய காலம் தொடங்கி இன்று வரையிலுமான புத்தக உலகம் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள தொகுப்பு நூல் என்று பொருள் படும்படியான தலைப்பினைக் கொண்டுள்ள இந்தூலில் பலர் பொறுப்புடன் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொத்தக் கட்டுரைகளின் வாசிக்கும் போது இச்சிறப்பு மலரைப் புத்தகங்களின் உலகம் என்று சொல்வதை விடப் பதிப்புகளின் உலகம் எனச் சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது.
மொத்தம் உள்ள 44 கட்டுரைகள் தனி மனிதப் பதிப்புகள்-11, பொதுக் கட்டுரைகள்- 27, நிறுவனம் சார்ந்த பதிப்புகள்-6 எனப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. 1800க்குப் பின் தமிழில் அச்சாகியுள்ள புத்தகங்களின் உலகம் அல்லது பதிப்புகளின் உலகம் என்றிருந்தாலும் பெரும்பாலும் மரபுத்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த தனிநபர்கள், நிறுவனங்கள், மட்டுமே கவனப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றிலும் கூடச் சில விடுபடல்கள் இருக்கின்றன. பதிப்பாசிரியர் குழு அமைத்துத் தமிழில் ஏராளமான மரபுத் தமிழ் நூல்களைப் பதிப்பித்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பற்றிய கட்டுரையும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை பற்றியொரு கட்டுரையும் இடம் பெறவில்லை என்பது கவனத்தில் உடனடியாக வந்தவை.
அதே போல் பொதுவுடைமைப் பதிப்புகள் பற்றிய கட்டுரை வெறும் பட்டியலாக இருப்பது ஏனென்று புரியவில்லை. இப்போது நவீன இலக்கியங்களைப் பதிப்பித்துக் கொண்டிருக்கும் பதிப்பகங்களை விட்டு விட்டால் கூடப் பரவாயில்லை. ஏற்கெனவே புத்தகங்களைப் பதிப்பித்து நின்று போன முக்கியமான பதிப்பகங்கள் மற்றும் தனிநபர்கள், இயக்கங்கள் பற்றிய விரிவான கட்டுரைகள் இடம் பெற்றிருந்தால் இத்தொகுப்பு இன்னும் சிறப்புடையதாக அமைந்திருக்கும். சக்தி காரியாலயம், கலைமகள் காரியாலயம், அல்லயன்ஸ் பதிப்பகம், திராவிடப் பண்ணை, பெரியார் புத்தகப்பண்ணை, வாசகர் வட்டம், மாஸ்கோ பதிப்பகம், சி.சு. செல்லப்பாவின் எழுத்துப் பிரசுரம், பரந்தாமனின் அஃ, போன்றவற்றைப் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்க வேண்டும். தலித் பிரசுரங்களும் நூல்களும் பற்றிய கட்டுரையை எழுதிய ஸ்டாலின் ராஜாங்கம் கூடத் தனது எல்லையாக 1990 என வரையறுத்தது ஏனென்று தெரியவில்லை. அதற்குப் பின்பே தலித் நூல்களை வெளியிடுவதற்கெனத் தனிப் பதிப்பகங்களும் தனிநபர்களும் முயன்றார்கள். ஒதுங்கி நின்ற தலித் பிரசுரப் போக்கை இன்று மையநீரோட்டம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது என்றால், முன்னோடிப் பதிப்பகங்களான விடியல், விளிம்பு, சமூகநீதிப் பதிப்பகம், தலித், ஐடியாஸ் போன்ற பதிப்பகங்கள் தொடங்கி வைத்த முன்னோடி நடவடிக்கைகளும், தனிநபர்களின் தீவிரமுமே காரணம் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். இப்படிச்சுட்டிக் காட்டுவது குறை சொல்வதற்காக அல்ல. விடுபடல்கள் எதிர்காலத்தில் சரி செய்யப்படலாம் என்ற நம்பிக்கை காரணம் தான்.
தமிழ்ப் பதிப்பகங்கள், தமிழ்ப் புத்தகங்கள் , தமிழ் அகராதிகள், நிகண்டுகள், கலைக்களஞ்சியங்கள், தொகை நூல்கள், மொழிபெயர்ப்புகள் எனப் பலவற்றைத் தொகுத்தளிக்கும் கவனிக்கத் தக்க சிறப்பு மலரைக் கொண்டு வந்துள்ள புத்தகம் பேசுது ஆசிரியர் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இத்தொகுப்பில் கட்டுரை எழுதியுள்ள கல்வித்துறை சார்ந்தவர்களும் சாராதவர்களும் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்தவர்களாக வெளிப்பட்டுள்ளார்கள். இத்தொகுப்பு இன்னும் சரி செய்யப்பட்டு ஒவ்வொரு நூலகத்திலும், ஒவ்வொரு ஆய்வாளர்களின் கைகளிலும் இருக்க வேண்டும்.

தமிழ்ப் புத்தக உலகம்,1800-2009
புதிய புத்தகம் பேசுது –சிறப்பு மலர்
பாரதிபுத்தகாலயம்,421,அண்ணாசாலை, சென்னை, 600 018 பக்.320, விலை.ரூ.95
பண்பாட்டு வரலாற்றுக்கொரு புது வரவு
ஒவ்வொரு சமூகத்தின் இருப்பையும் இயக்கத்தையும் அச்சமூகத்தில் நிலவும் கருத்தியல்களே தீர்மானிக்கின்றன. கருத்தியல்கள் உருவாகக் காரணமாக இருப்பவை அச்சமூகத்தில் நிலவும் பகை முரண்களின் வெளிப்பாடுகள். பகை முரண்களைத் தீர்மானிப்பவை அக்காலகட்டத்தின் பொருளாதார அடித்தளம் என்பது மார்க்சியம் சொல்லும் ஒரு சூத்திரம்.
நிகழ்காலத் தமிழ் வாழ்வில் நாம் உணரும் முரண்பாடுகள் பலவிதமானவை. சில முரண்கள் தற்காலிகத் தன்மை கொண்டவை; சில முரண்கள் நிரந்தரத் தன்மை கொண்டவை. விரிந்த எல்லைப் பரப்பு தேவைப் படாததாகவும் உடனடி வெளிப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும் தற்காலிக முரண் பாடுகள்,பொருளாதார அடித்தளத்தோடு நெருக்கம் கொண்டனவாக இருக் கின்றன.ஆனால் நிரந்தரமான முரண்பாடுகள் எல்லா நேரத்திலும் பொருளா தார அடித்தளத்தோடு நேரடித் தொடர் புடையனவாகக் காட்டிக் கொள்வ தில்லை.அதற்கு மாறாகப் பண்பாட்டியல் அடையாளங்களோடு உறவு கொண்டனவாகக் காட்டிக் கொள்கின்றன.

சிந்திப்பவர்களாகக் கருதிக் கொள்ளும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கருத்தியல் அடியோட் டத்தில் தீர்மானகரமான ஒரு முரணாகப் பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதோர் என்ற முரணிலை இருந்து கொண்டே இருக்கிறது. பார்ப்பணர் x பார்ப்பணர்அல்லாதார் முரண்பாடு போலவே தமிழர்-வட இந்தியர்(வடமொழி); தமிழ்- பிறமொழி(யினர்) போன்ற முரண்பாடுகள் எல்லாம் இன்று தமிழகத்தில் தூக்கலாக இருக்கின்றன. பார்ப்பணர் அல்லாதோர் இயக்கம் தோற்றுவிக்கப் பட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திற்குப் பின்பு தான் தமிழ் நாட்டுத் தமிழ் மனம் இப்படியான முரணிலைகளின் அடிப்படையில் சிந்திக்கிறதா? இன்று இடதுசாரி இயக்கங்கள் திரும்பவும் பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதார் என்ற முரணிலயைத் தொட்டு விவாதிக்கும் புள்ளியை நெருங்கிக் கொண்டிருப்பதன் காரணங்கள் எவை? சாதிக் கட்டு மானத்தைத் தகர்ப்பது என வெளிப்படையான நோக்கத்தோடு தொடங்கும் தலித் இயக்கங்கள் கடைசியில் பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதார் என்ற முரண்பாட்டிற்குள் வந்து நுழையும் நிலை ஏன் ஏற்படுகிறது? இந்த முரணிலையைத் தவிர்த்து விட்டு ஒரு தமிழ் மனம் சிந்திப்பது இயலாது என்ற நிலை உருவாக்கப்பட்டது எப்படி? இப்படிப் பல வினாக்களுக்கு விடை தேட நினைக்கும் போது செய்ய வேண்டிய ஆய்வாக வைதீக சமயம் பற்றிய ஆய்வு முன்னிற்கிறது.

வைதீக சமயம் வெளியில் இருந்து வந்த பார்ப்பணர்களின் சமயம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு விவாதிக்கப்படும் இத்தகைய முரண்பாடுகள் பண்பாடு சார்ந்து தங்கள் அடையாளத்தைத் தேடும் நோக்கம் கொண்டவை என்ற போதும் தூய்மை வாதம் என்னும் அடிப்படைவாதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதையும் மறந்து விடக் கூடாது. பூமி புத்திரர்கள் அல்லது மண்ணின் மைந்தர்கள் என்னும் கருத்தியல் சார்ந்து இயங்குபவர்கள்,தங்கள் அடையாளங்கள் எவை எனத் தேடும் போது அவர் களை அறியாமல் மற்றமை மீது வெறுப்பை உண்டாக்கிக் கொண்டே போவதும் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்தக் காரணம் பற்றியே இடதுசாரி விமரிசகர்கள் இம்முரணிலையைத் தவிர்த்து விட்டுப் பொருளாதார முரண்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே சிந்திக்கும் படி தூண்டினார்கள். ஆனால் இந்திய சமூகத்திற்குச் சாதி வேறுபாடுகள் என்ற கருத்தியலையும், அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறை வடிவத்தையும் கொண்டு வந்து சேர்த்தது பார்ப்பணீய நலனை மையப்படுத்திய வைதீக சமயம் என்பது பாரதூரமான உண்மையாக இருக்கும் நிலையில் வைதீக சமயத்தின் தோற்றம், அவற்றின் பரவல், அதிகாரத்தைக் கைப்பற்ற அது பின்பற்றிய கருவிகள் போன்றவற்றைக் கண்டறிந்து சொல்ல வேண்டிய கட்டாயம் அறிஞர்கள் முன்னே இருக்கும் முக்கிய கடப்பாடு. அந்தக் கடமையை மேற்கொள்ளும் போது முன்னரே குறிப்பிட்டபடி நிகழ்காலச் சமூகத்தில் மோதல்களைத் தூண்டிவிடும் ஆபத்திருக்கிறது என்ற எச்சரிக்கை உணர்வுடனும் செய்ய வேண்டும்.
அத்தகைய எச்சரிக்கை உணர்வுடன் ஆய்வு செய்திட மார்க்சிய இயங்கியல் என்னும் முறையியல் தொடர்ந்து தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கு ஒரு கைவிளக்காக இருந்து வந்துள்ளது.அந்த விளக்கின் வெளிச்சத்திலேயே திறனாய்வாளர் தி.சு.நடராசன் வரலாறும் வக்கணைகளும் என்றொரு துணைத்தலைப்புடன் தமிழகத்தில் வைதீக சமயம் என்றொரு நூலை எழுதியுள்ளார்.
பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதார் என்ற நிகழ்கால முரணை அதே சொல்லாடலில் தேடாமல் வைதீக சமயத்தின் தோற்றம், தமிழகத்தில் அதன் வளர்ச்சி, இடத்திற்கும் நேரத்திற்கும் தக்கவாறு வைதீக சமயம் தன்னைத் தகவமைத்துக் கொண்ட பாங்கு, தகவல்களின் நிரல் வரிசையான வரலாற் றையும் கருத்தியல் உருவாக்கத்தின் முக்கியக் கருவியான இலக்கியத் தையும் வைதீக சமயம் பயன்படுத்திக் கொண்ட விதம் என்பதை ஒரு நேர்கோட்டு வரலாறாகச் சொல்லாமல் முன்னும் பின்னுமாகப் போய் விவரிக்கும் கதையாடல் பாணியில் சொல்கிறது இந்நூல்.
1. தொடரும் சமயப் பேச்சு
2. தமிழ்ச் சூழலும் பார்ப்பணர் வருகையும்
3. வைதீக வருணப்பகுப்பு: தமிழ்ச் சூழலோடு
4. அந்தணர் நூலும் மன்னவன் கோலும்
5. மறுவாசிப்பில் சிலம்பு: சமயநிகழ்வுகளை முன்னிட்டு
6. வேள்விக்குடிகளும் வேதவாக்கும்
7. பக்தி இயக்கம்
8. வைதீக சமயம்: பயணங்கள் பாதைகள்
9. வேதமும் கடவுளரும் தமிழ் அடையாளமும்
என அமைக்கப்பட்ட ஒன்பது இயல்களும் வைதீக சமயத்தின் வரலாற்றைச் சொல்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டவை என்றாலும், அதனூடாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியப் பனுவல்களைச் சமுதாயவியல் அணுகுமுறை மற்றும் கட்டவிழ்ப்பு முறையியலைப் பயன்படுத்தித் திறனாய்வு செய்வதையும் துணைமை நோக்கமாகக் கொண்டுள்ளன.
முதல் நான்கு இயல்கள் சங்க இலக்கியப் பனுவல்களை ஆதாரமாகக் கொண்டு வைதீக சமயத்தின் தமிழக வருகையை உறுதி செய்ய ஐந்தாவது இயல் தமிழின் தனிப்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பு செய்வதன் மூலம் புதிய முரண்பாடுகள் அதன் காலத்தில் எப்படி இருந்தன என்பதைக் காட்டுகிறது. இளங்கோவடிகளின் கண்ணகி உருவாக்கம் தமிழ் அடையாள உருவாக்கம் என்பதைச் சொல்லும் அக்கட்டுரை, சிலம்பில் காணப்படும் மறையோர் என்ற சொல் பிரயோகத்தையும், மாடல மறையவன் என்ற துணைக் கதாபாத்திர வார்ப்பையும் மட்டும் விளக்கிக் காட்டுவதன் மூலம் சாதித்துக் காட்டுகிறது. இதன் மூலம், தமிழ் திறனாய்வுப் போக்கிற்கு அக்கட்டுரை ஒரு புதுவகைத் திறனாய்வு முறையை அறிமுகம் செய்துள்ளது. அதனை அடுத்து அமைந்துள்ள இயல் வரலாற்றுச் சான்றுகளை மறுவாசிப்புச் செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தித் தமிழக வரலாற்றின் திருப்பு முனை ஆதாரமான வேள்விக்குடிச் செப்பேடுகளை மறு வாசிப்பு செய்வதன் மூலம் அச்செப்பேடுகள் ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளை உறையச் செய்த புனைவு வரிகள் எனக் காட்டுகிறார். இவ்விரு கட்டுரைகளும் இந்நூலின் ஆகச் சிறந்த கட்டுரைகள் எனலாம். பண்டைய தமிழ் இலக்கியப் பயிற்சி உள்ளவர்கள் இக்கட்டுரையைப் படிக்கும் போது ஒரு புனைகதையை வாசிக்கும் அனுபவத்தைப் பெறுவார்கள்.
பின்னர் வரும் கட்டுரைகள் பக்தி இலக்கியங்களைத் தரவுகளாகக் கொண்டு சைவx வைணவ அடையாளங்களைத் தக்கவைப்பதற்குள் வைதீக சமயம் தன்னை வளர்த்துக் கொண்ட பின்னணி சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லும் போது பக்தி இயக்கமே வைதீக சமயத்தைத் தமிழ்ச் சமயமாக ஆக்கியது என்பதை அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகிறார் தி.சு.நடராசன். இதன் தொடர்ச்சியாகச் சிற்றிலக்கியங்களை ஆதாரங்களாகக் கொண்டு இன்னொரு கட்டுரை எழுதிச் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். பக்தி இயக்கம் தன்னைத் தமிழ் அடையாளத்தோடு வளர்த்துக் கொண்டதன் தொடர்ச்சி அறுபட்டதை அவ்விலக்கியங்கள் தங்கள் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் கொண்டிருப்பதை அதன் மூலம் எடுத்துக் காட்டியிருக்க முடியும். அத்தோடு வைதீக சமயம் தமிழல்லாத பிறமொழியாளர்களின் ஆட்சியில் இறுக்கமான சமூகக் கோட்பாடுகளைத் தனக்குள் வாங்கிக் கொண்ட காலகட்டம் அது என்பதையும் அக்கட்டுரை மூலம் சுட்டிக் காட்டலாம். இதனைச் செய்தவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட புலவர்கள் அல்ல; தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவப் புலவர்கள் என்ற உண்மையை விளக்கிக் காட்டி அதன் காரணங்களையும் நூலாசிரியர் பேசியிருக்க முடியும்.
நிகழ்காலத் தமிழ்ச் சிந்தனைத் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்படும் பலரும் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் ஒவ்வொரு விதமாக விவாதப் படுத்தக் கூடும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன இக்கட்டுரைகள். இலக்கியங்களிலிருந்து தேவையான சான்றாதாரங்களைத் தொகுத்துக் கொண்டு கல்வித்துறை முறையியலைச் சரியாகப் பின்பற்றிச் செல்லும் இந்நூல் கல்வியியல் ஆய்வாளர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க ஒரு நூல் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இப்படிச் சொல்லும் அதே வேளையில் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைத் தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகவும் மார்க்சீய இயங்கியல் ஆய்வு முறையை ஆய்வுக்கருவியாகவும் கொண்டு ஆய்வுகள் செய்துள்ள க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை, க.சுப்பிரமணியன், கோ.கேசவன் போன்றவர்களிடமிருந்து தி.சு.நடராசன் வேறுபடும் விதம் ஒன்றைச் சுட்டிக் காட்டவும் வேண்டியுள்ளது. அவர்கள் தங்கள் நூலை வாசிப்பவர்களைப் பலராகக் கணித்து படர்க்கைநிலைக் கூற்றில் எழுதிட, தி.சு.நடராசன் தன்னுடைய கட்டுரைகளை ஒரேயொரு வாசகனோடு உரையாடும் முன்னிலைக் கூற்றாக அமைத்துள்ளார் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டி யுள்ளது. இம்முன்னிலைக் கூற்று வாசகனை வேறுபக்கம் திசைமாறி விடாமல் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் நோக்கம் கொண்டது. தான் காட்டும் இடங்களை யெல்லாம் பார்த்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்துவது. விவாதங்களை உள்வாங்கி தாங்களே கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சிந்தனை சார்ந்த - வரலாற்றுக்குள் நுழையும் இவ்வகை நூலுக்கு அத்தகைய வலியுறுத்தல் எவ்வளவு தூரம் ஏற்புடையது என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.
தமிழகத்தில் வைதீக சமயம்
வரலாறும் வக்கணைகளும்
தி.சு.நடராசன்
முதல் பதிப்பு: டிசம்பர்,2008
நியூசெஞ்சுரி ஹவுஸ் (பி)லிட், சென்னை-600098, விலை : ரூ.110/-