Linggo, Hulyo 26 2009

முகம் அறியா முதலாளிகளும்
முகம் தெரிந்த முதலாளியும்

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தனம் அல்லது சரிவு இந்தியாவில் வெளிப்படை யாகத் தாக்கிய துறை தொழில் நுட்பக் கல்வித்துறை. வளாகத் தேர்வுக்கு ஒவ்வொரு கல்லூரி யையும் நாடிச் சென்று சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்த போக்கு கடந்த கல்வி யாண்டில் நடக்க வில்லை. அதன் விளைவாக இந்த ஆண்டுப் பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையில் பல பரிமாணங்களை ஏற்பட்டுள்ளன.
தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கணினி அறிவியல்,மின் அணுவியல், தகவல் தொழில் நுட்பவியல் போன்ற பாடங்களின் பக்கம் அலை அலையாகக் குவிந்த மாணாக்கர்களும் பெற்றோர்களும் அடிப்படைப் பொறியியல் பாடங் களான கட்டடவியல் (சிவில்), எந்திரவியல் (மெக்கானிகல்), ஆகியவற்றைத் தேர்வு செய்து படிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். கலை அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம், கணிதம், இயல்பியல், வேதியியல் பாடங்களுக்கும் மாணாக்கர் கூட்டம் அதிகரித்துள்ளது.

கல்லூரி வாழ்வின் இறுதித் தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டில் வந்து இரண்டு மாதங்கூடத் தங்களோடு தங்கவில்லை என ஒரு பக்கம் வருத்தம் காட்டிய பெற்றோர் இருபத்திரண்டு வயதில் இருபதாயிரத்துக்குக் குறை யாமல் சம்பளம் தரும் கம்பெனியில் வேலைக்குப் போய்விட்டதில் பெருமையும் காட்டினார்கள். அந்த வருத்தமும் பெருமிதமும் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. கடந்த பத்தாண்டுகளில் உருவான அந்த இளையோர் கூட்டம் கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது என்ற கதகதப்பில் வேலைக்கான பாதுகாப்பைத் தரும் தொழிற்சங்கம் பற்றிய நினைப்பை யெல்லாம் தவிர்த்தவர்கள். இவ்வளவு சம்பளம் கொடுத்துத் தங்களிடம் வேலை வாங்கும் முதலாளி யார் என்ற கேள்வியைக் கூட எழுப்பாமல் இருந்தவர்கள். தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பணியாளர்களில் ஏராள மானோர் தங்கள் முதலாளிகளின் முகத்தை நேரடியாகத் தரிசனம் செய்தி ருக்கக் கூட மாட்டார்கள்.

அவர்களின் வேலைக்கான ஆணை கணினி வழியாகத் தான் வந்தது. சம்பளப் பணத்தைக் கூடக் கையில் வாங்கியவர்கள் அல்ல. வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பட்டதைக் குறித்து வைத்துக் கொள்ளாமல் செலவு செய்து பழகிப் போனார்கள். கைநிறையச் சம்பளம்; வசதியான வாழ்க்கை; வேலைக்குப் போன அடுத்த ஆண்டு சொந்த வீடு வாங்கக் கடன் வசதி, கையில் பணத்தைத் தொடாமல் மின்காந்தத் தகடுகள் வழிப் பணப் பரிமாற்றம் என நடந்த வாழ்க்கை முறை பல இளையோர்களின் வாழ்க்கைப் போக்கில் திசைக் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்தத் திசைக் குழப்பம் முடிந்து உறைநிலை ஏற்பட்டு விட்டதை இப்போது காண முடிகிறது.

வேலையே இல்லை என்ற போதிலும் கிடைக்கப் போகும் வேலையை உத்தேசித்துக் கொத்துக் கொத்தாகப் பணியாளர்களைத் தேர்வு செய்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதே வேகத்தில் கொத்துக்கொத்தாக வெளியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மூன்று மாத அடிப்படைச் சம்பளம் கணக்கில் போட்டாகி விட்டது; இனி நீங்கள் வேலைக்கு வர வேண்டிய தில்லை; வேறு எங்காவது வேலை தேடிக் கொள்ளலாம் எனக் கணினி வழியே நீக்கல் உத்தரவையும் அனுப்பி விடுகிறது. கடவுளைப் போலக் கண்ணுக்குப் புலப் படாமல் இருந்த முதலாளி தந்த எல்லா வரங்களும் இப்போது சாபங்களாகி விட்டன.

இந்த நிலையைச் சந்தித்த பல நண்பர்களின் பிள்ளைகள் படும் வேதனையை நினைத்துக் கொண்டிருந்த போது கு.அழகிரிசாமி எழுதிய தியாகம் என்ற கதை எனக்கு நினைவுக்கு வந்தது. தொகுப்பை எடுத்து அந்தக் கதையை வாசிக்கத் தோன்றியது.கோவில்பட்டியில் மளிகைக்கடை நடத்தும் கதிரேசன் செட்டியாரைப் பற்றிய கதை அது.

காலையில் சரியாகப் பத்துமணிக்குப் பலகாரம் சாப்பிட்டு விட்டுப் பத்து நிமிட ஓய்வுக்குப் பின் சரியாகப் 10.25-க்குக் கடைக்கு வரும் செட்டியாரின் முக்கியமான வேலையே கடையில் வேலை பார்க்கும் சிப்பந்திகளான நாலு பேரையும் திட்டுவதுதான்.திட்டுவது என்றால் சாதாரண திட்டு அல்ல. எல்லா விதமான வசைகளும் தாராளமாக வெளி வரும். திட்டுவதற்கு அவருக்குக் காரணமே தேவை இல்லை.கடைக்கு வந்தது முதல் கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொள்ள அவர் படும் பாடுகளே பெரும் அவஸ்தையானது. செட்டியார் திட்டுவதை உணர்த்தும் விதமாகக் கு. அழகிரிசாமி பல காட்சி களை எழுதிக் காட்டினாலும் இந்தக் காட்சி ரொம்பவும் சுவாரசியமானது:

“டேய்… ஒன்னத்தாண்டா! அந்த முத்தையாபிள்ளை பாக்கியைப் போய்க் கேட்டியா? அதையும் சொன்னாத்தான் செய்வியா?”
”கேட்டேன், முதலாளி.”
”கேட்டியாக்கும்? கெட்டிக்காரன் தான்! கேட்டு வாங்கணும்னு தோணலியோ?”
”பாக்கியைக் கொடுத்திட்டாரு” என்று பெருமிதத்தோடு சொன்னான் பையன்.
”அட ! என்னமோ இவன் சம்பாத்தியத்திலே வாங்கின மாதிரியில்லே பேசறான்! கடன் வாங்கினவர் கொடுக்காமலா இருப்பாரு? முத்தையாப் பிள்ளை யோக்கியன். இவனைப் போல முடிச்சு மாறிப் பயலா இருப்பாருன்னு நெனச்சான் போல இருக்கு. அதனாலே தான் ‘குடுத்திட்டாரு’ ன்னு ரொம்பச் சவடாலாச் சொல்றான். ஏய் நீ எப்படிடா போய்க் கேட்டே? கண்டிப்பாகக் கேட்டியா!”
“கண்டிப்பாத்தான் கேட்டேன், முதலாளி..”
”கண்டிப்பாக் கேட்டியா? உன்னை யாருடா அப்படிக் கேக்கச் சொன்னது? எதம்பதமாப் பேசனும்னு ஒனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்? கண்டிப்பாப் பேசினா நாளைக்கு எவண்டா கடைக்கு வருவான்
?..
கதிரேசன் செட்டியார் கடைப் பையன்களைத் திட்டும் பல காட்சிகளைத் தரும் கு.அழகிரிசாமி அவரைப் பற்றிக் குறிப்பிடும் வேறு சில பகுதிகள் தான் அவரது இன்னொரு முகத்தை நமக்குக் காட்டுகின்றன.

”அவர்கள் அங்கே இருந்து பழகியவர்கள்.செட்டியாரின் வார்த்தைகளுக்குப் பொருள் கிடையாது என்று மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு; ஒன்று, வேறு எந்தக் கடையிலும் கடைச் சிப்பந்திகளுக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட இங்கே அதிகச் சம்பளம். தீபாவளிக்குப் புது வேஷ்டி சட்டைகளுடன் ஆளூக்குப் பத்து ரூபாய் ரொக்கமும் கொடுப்பார் செட்டியார். கடை வேலையைத் தவிர தம்மை மறந்து கூட வீட்டு வேலை செய்யச் சொல்ல மாட்டார். அவருடைய வீட்டுக்குக் கடைப் பையன்கள் போனால், முகத்தில் கடுகடுப் பில்லாமல், ’ ஐயா, ராசா’ என்று அன்போடு பேசுவார். ஏகதேசமாகச் சொல்வதும் உண்டு. எல்லா வற்றையும் விட முக்கியமாக, யார் என்ன புகார் சொன்னாலும், எந்தப் பையன்கள் வாலிபர்களாகிக் கல்யாணம் செய்து கொள்ளும்போது, கல்யாணச் செலவுக்கு ஒரு கணிசமான தொகையும் கொடுப்பது வழக்கம். அவர்கடையில் வேலை பார்த்த பையன் பெரியவனாகித் தனிக்கடை தொடங்க நினைத்தால் அதற்கும் உதவி செய்வார்.

கதிரேசன் செட்டியாரின் மனிதநேய முதலாளி முகத்தைக் காட்டும் கு.அழகிரிசாமி, செட்டியார் ஏன் திட்டுகிறார் என்பதற்கான காரணத்தைச் செட்டியாரின் நண்பரும் கடையின் வாடிக்கை யாளருமான ஷண்முகம் பிள்ளையுடன் உரையாடும் உரையாடல் வழிகாட்டுகிறார்:
“என்ன செட்டியாரையா, நம்ம சிநேகத்தைப் பொறுத்துக் கேட்கிறேன், கோவிச்சுக்கிட மாட்டீங்களே?”
“ என்ன அண்ணாச்சி, ஒங்களை எப்போ நான் கோவிச்சிருக்கேன்? என்ன இப்பிடிக் கேக்கிறீங்க? நமக்குள்ள என்ன வேத்துமை?”
“ இல்லே, நீங்க ரொம்ப தயாள குணத்தோட இருக்கிறீங்க; ஊரிலேயும் ஒங்களைப் பத்திப் பெருமையாப் பேசிக்கிறாங்க. கடைப்பையன்களுக்கு உங்களைப் போலச் சம்பளம் குடுக்கிறவங்க இல்லேன்னும் எனக்குத் தெரியும். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, இப்படி இருபத்து நாலு மணி நேரமும் கடைப்பையன்களைத் திட்டிக்கிட்டே இருக்கிறீங்க? எப்போ வந்து பார்த்தாலும் எவனையாவது நிப்பாட்டி வைச்சிக்கிட்டுப் பொரியிறீங்களே, எதுக்கு? கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்லே?”
”அண்ணாச்சி, அன்பாதரவா இல்லேன்னா நான் திட்டுவனா? அதைக் கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்க. பயகள நெசமா எனக்குப் பிடிக்கலேன்னா, ஒரே சொல்லிலே கடையை விட்டு வெளியேத்திப் பிட்டு மறுசோலி பாக்கமாட்டனா? சொல்லுங்க.இந்த முப்பது வருஷத்திலே , ஒருத்தனை நான் வேலையை விட்டுப் போகச் சொல்லியிருக்கிறனா? பயக விருத்திக்கு வரணும் தானே தொண்டைத் தண்ணியை வத்த வச்சுக்கிட்டிருக்கேன்? கத்திக் கத்தி என் உசுரும் போகுது.”
தனது உடல் நலத்துக்குக்கேடு என்று தெரிந்தபின்பும் சிப்பந்திகளின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு அவர்களைத் திட்டும் கதிரேசன் செட்டியார் செயல்பாடுகளைக் குறிக்கவே கு.அழகிரிசாமி அந்தக் கதைக்குத் தியாகம் எனத் தலைப்பிட்டுள்ளார்.
தனது வியாபார வெற்றி; தனக்குக் கிடைக்கும் லாபத்தின் அளவு என்பதை விடவும் தன்னை நம்பி வேலையில் சேர்ந்த சிப்பந்திகளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட முகம் தெரிந்த – மனிதாபி மான முகம் கொண்ட முதலாளியத்தை- முதலாளி கதிரேசன் செட்டியார் போன்ற சிறு முதலாளி களைக் காணாமல் போகச் செய்து விட்டு அதன் இடத்தில் ரிலையன்ஸ் ஷாப்பிங், ஸ்பென்சர்கள், மால்கள், பிளாசாக்கள் எனப் பெருங்கடைகள் வந்து விட்டன. பன்னாட்டு மூலதனமும், பெரு முதலாளியமும் கண்ணுக்குப் புலப்படா கடவுளைப் போல மாயத் தோற்றம் காட்டிப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய கு.அழகிரிசாமியின் தியாகம் இன்றைய நிதரிசனத்தை எதிர் மறையாக விளக்கிக் காட்டுகிறது. கதைவெளி மனிதரான கதிரேசன் செட்டியாரைத் திரும்பவும் நமது சமூகம் தேடக் கூடும்; கடந்த காலம் திரும்பும் என்ற நம்பிக்கை பொய் என்பதும் புரிகிறது.

Lunes, Hulyo 13 2009

வீடு

[சிறுகதை மூலம்:ம.மதிவண்ணன் எழுதிய திருவாளர் எம்.மின் வீடு
என்னும் கதையும் மேற்படி வீட்டுடனான உரையாடலும்]
இந்நாடகத்தில் பயன்பட்டுள்ள கவிதைவரிகளை எழுதிய கவிகள்
சி.சுப்பிரமணிய பாரதி
ஞானக்கூத்தன்
சு.வில்வரத்தினம்
பழமலய்
பசுவய்யா
சேரன்
மனுஷ்யபுத்திரன்
கண்ணதாசன்
இன்னும் சில விளம்பரங்களின் வரிகள்
====================================================================
[மேடையில் வெளிச்சம் மெலிதானதாகவும் திட்டுத் திட்டாகவும் பரவியிருக்கிறது.செவ்வக வடிவச் சட்டகங்களைத்தாங்கிய ஏழு ஸ்டேண்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேடையின் முன்புறம் ஓரங்களில் தொடங்கி உள்நோக்கிப் போகும்போது மேல்மையத்தில் ஒரு சட்டகம் உள்ளது. சட்டகங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. முடிவடையாத ஓவியங்கள்.பார்வையாளர்களுக்குச் சட்டகங்கள் மட்டுமே தெரியவேண்டும்.ஒவ்வொரு சட்டகத்தின் பின்னும் வரையும் ஓவியர்களின் கால்கள் மட்டும் தெரியவேண்டும் .மேடை இரண்டாகப் பிரிக்கப்பட்டு பின்பாதி வலைமூலம் பார்க்கப்படும்படியாக இருக்கிறது.
வெளிச்சம் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் ஊடுருவி விலகும்போது தபேலாவின் ஒலி மென் தாளமாகக் கேட்கிறது.திரையில் நடன அசைவுகளின் நிழலுருவம் .நடன அசைவு கட்டிட வேலைகளின் பரிமாணங்களாகின்றன.மண்மிதித்தல்,செங்கல்லை தூக்கி எறிதல், சித்தாளின் தலையில் சுண்ணாம்புச் சட்டி, கொத்தனாரின் தூக்கு, கரண்டி, பீச்சியடிக்கும் தண்ணீர் என நிழல்ரூபங்கள் மாறுகின்றன.அதனுடன் மெலிதாகத் தொடங்கிய 'வேண்டும்' , 'வேணும் '; 'வேண்டும்' ,'வேணும்' என்ற வார்த்தைகள் இருபிரிவினரால் மாறிமாறி மந்திரம் போல் உச்சரிக்கப்பட்டு பாடலாக மாறுகிறது.]
-அந்தக்
காணிநிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித்தரவேண்டும் - அங்குக்
கேணி அருகினிலே - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போல ...............
.
['வேண்டும், வேணும்' என்பது திரும்பவும் இருபிரிவாக ஒலித்து.. பாடலாக மாறி,]
- எங்கள்
கூட்டுக்களியினிலே -கவிதைகள்
கொண்டு தரவேணும் -அந்தக்
காட்டுவெளியினிலே - அம்மா,நின்றன்
காவலுற வேணும் - எந்தன்
பாட்டுத்திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேண்டும்....
இடது பக்கமிருந்து
ஒரு குரல்: மகிழ்ச்சி வந்து தங்கும்
மங்களம் பொங்கும் இல்லம்
நகரெங்கும்.. நாடுங்கள் என்றும்
இன்னொரு குரல்
மறுபுறமிருந்து: வீடுகள் விற்பதற்கும் வாங்குவதற்கும் எங்களை அணுகலாம்
விதம்விதமான வீடுகள்; விதம்விதமான குடியிருப்புகள்
அடுக்கு மாடிக் குடியிருப்புகள்
[ வேண்டும்...வேண்டும்..வேணும்.. வேணும்.. டும்ம் ..டும்.. நும்ம் ..ம்ம் என்ற ஓசையின் பின்னனியில் வரையப்பட்ட ஒரு ஓவியம்-பின்மையத்தில் உள்ளது பார்வையாளருக்குத் திருப்பப்படுகிறது.அது ஒரு பங்களாவின் படம். மரம்..தோட்டம்.. கார்கள் என விரியும் படம்..]
பின்னணியில் ஒரு குரல்:
கால்சட்டைப் பைக்குள்
நுழைத்துக் கொண்ட கைமாதிரி
மாடிப்படிக் கட்டுமானம் தெரிய
நின்றிருந்தது
வயல் நடுவில்
அந்த வீடு
புதிது.... புதிது...
சேரிப்பக்கத்து நாய்கள்
குரைத்தடங்கிய பின்பு
முதல் நாள் இரவு
நடந்திருக்கக்
கூடும் திருட்டென்று
சொன்னார்கள் அந்தப்
பக்கம் வந்தறியாத
சிறுசேரி மக்கள்
வெளியூர் சென்றுள்ள
வீட்டின் சொந்தக்காரன்
அத்தனை பெரிய பணக்காரனா என்று
வியப்பாய் இருந்தது ஒவ்வொருவருக்கு
திருட்டுக் கொடுத்த வீட்டுக்குள் தாமும்
நுழைந்து பார்த்ததில்
திருப்தியும் பலருக்கு உண்டென்று தெரிந்தது.
திருட்டுக்கொடுத்த வீட்டைச் சுற்றிப்
பார்த்துத் திரும்பிய நபர்கள் சொன்னதில்
புரியாமல் போனது ஒன்றுண்டு.
இடுப்பளவு தெரியும் நிலைக்கண்ணாடியைத்
திருடர்கள் தெறித்து விட்டார்களாம்.ஏன்?
இத்தனைக்கும் கண்ணாடி தன்னிடம்
தோற்றிய பிம்பத்தைத் தானே
தேக்கிக் கொல்வது கிடையாதே.
வயல்நடுவில்
நின்றிருந்தது
திருட்டுக்கொடுத்த வீடு
வயல்புறம் எங்கும்
கத்தின ஓசைப்படாமல் தவளைகள்.
குரல்: கனவு காணுங்கள்..
கணவனும் மனைவியுமாய்க்
கண்ட கனவுகள்..
குடும்பமாகும்.. குட்டிகளாகும்..
உங்கள் கனவை நிறைவேற்ற.. இதோ

INTEREST RATES SLASH ON HOME LOAN.
NOW REDUCED TO 8.5%
BUY YOUR DREAM HOUSE TODAY
NO PROCESSING CHARGES.
NO HIDDEN COSTS
ENTER INTO OUR BANK WITH DOCUMENTS
RECEIVE THE SANCTION ORDER OF A LOAN
அனுபவமுள்ள கட்டிடத்துறை பொறியாளர்கள்மற்றும் கட்டிடக்கலை நிபுணரால்
நிர்மாணிக்கப்பட்டது..பிருந்தாவன் அபார்ட்மெண்ட்ஸ்.
# நான்குமாடிகள் நல்ல காற்றோட்ட வசதி.
# ஒவ்வொன்றும் 1020/ 880/ 820 என்ற அளவுகளில் வீடுகள்.
# குடிநீர் வசதியும் மின்சாரவசதியும் 24மணிநேரமும்
# நிலத்தடி நீ வசதியுண்டு
#கோவில்கள், மருத்துவமனைகள்,கல்விநிலையங்கள் மிகஅருகில்
(வேறுவிதமான குரலில்)
வாழ்தலென்பது
மேய்தலெனக் கொண்டால்
பூமியொரு மேய்ச்சல் தரைமட்டும்தான்
மேய்தல், இரைமீட்டல்
வீடு திரும்புதலெனச்
சுவடகலாச் சுற்றுவட்டம்தான்
நமதுமெனின்
நாமும் விலங்குகள்தான்.
வண்டிக்காரன் தூங்குகிறான்
ஓய்ஞ்ச சலங்கையொடு
வீடுவந்து சேர்கின்றன
தூங்கல் மாடுகள்
மாடுகளுக்குத் தொழுவம் பின்கோடி
வண்டிக்காரனுக்கு முன்கோடி.
[படம் வரைகிறவன் நான்கு படங்கள் முடித்துத் திரும்பி விடுகிறான்.
சலங்கை ஒலி- நடனமிடும் பெண்ணின் சலங்கை ஒலி-கேட்கிறது.]
குரல்: செராமிக் டைல்ஸ்.. தேக்குமரக் கதவுகளும் வாசல்களும்
சிறுவர்களுக்குப் பூங்கா பெரியவர்களுக்கு கேளிக்கைவிடுதிகள்
நடைமேடையும் உண்டு;
போதும் நகரத்தின் வெக்கை.புறநகர் வாசம்; புதுவகை நேசம்..
ஏரிக்கரைமேல் நடந்தால், மேற்கே ஊர் தெரியும்
கிழக்கில் வயல்வெளி கடல் அலையாய்க் காற்று வீசும்
'ஆலங்கட்டி ' மேலே விழும்போது வலிதெரியாது,வேடிக்கைதான்.
காணிநிலம் பெருத்தவர்கள், கல்வீடு உடையவர்கள்-இருக்கிறார்கள்.
என்றாலும் எங்கள் திண்ணையிலும் நன்றாகத்தூக்கம் வரும்.
கூரையில் கூடுகட்டக் குருவிகள் வரும்.
[படங்கள் எல்லாம் திருப்பப் பட்டு விட்டன. ஒவ்வொன்றிலும் மாறிமாறி வெளிச்சம் வந்து போகிறது.பட்பட்டென்று.மாறிமாறி..]
கதவைத்திற காற்றுவரட்டும்; சிறகை ஒடி, விசிறியின் சிறகை ஒடி
விசிறிக்குள் காற்று மலடிக்குக் குழந்தை
கதவைத்திற காற்று வரட்டும்
நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால் ;அது கண்ணீரின் குருதி.
நீங்கள் ஒடுக்குபவர்களானால்; அது குருதியின் கண்ணீர்.
படம் வரைந்து கொண்டிருந்தவன்:
நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்..
கதையின் சுவாரசியம் உங்களின் காதுகளில் இருக்கிறது.
கண்களில் அல்ல. கரங்களிலும் வாயிலும்கூட இருக்கலாம்.
சுவாரசியம் கதையா..நானா..?
பின்னாலிருந்து ஒரு குரல்:
போதும் நிறுத்து. உனது கதையை.. நானொரு கவிதை சொல்லப் போகிறேன்
அதன்பின் கதைவேண்டுமா..? வேண்டாமா..?
என்பது தீர்மானிக்கப்படலாம்.
அவன்: கவிதை எதைப் பற்றி..?
குரல்: விளக்கப்படுவதல்ல கவிதை.
அவன்: விளங்காமல் இருப்பதோ..
குரல்: குதர்க்கம் வேண்டாம்.
அவன்: தர்க்கம் உண்டா..?
குரல்: வாயை மூடு.. கவிதையைக்கேள்:
நீண்ட நாளைக்குப் பின்
என் வீட்டிற்குப் போகிறேன்.
நண்பா இன்று நீ என்னோடு வரவேண்டாம்.
அவன்: ஓ ..உனது கவிதையும் எனது கதைதான்..
இருவரும் சேர்ந்தே பேசலாமே..
குரல்: கதையும் கவிதையும் ஒன்றாகுமா..?
கதை வெறும் கதைதான்.. கவிதை ..அது ..கவிதை..
அவன்: (பெரிதாகச் சிரித்துவிட்டு)
உனது கவிதைக்குள் இருக்கும் கதை
எனது கதைக்குள் இருக்கும் கவிதை.
சுவாரசியம் வந்து விட்டது..
கொஞ்சம் எல்லோரும் கை தட்டுங்கள்.
இன்னும் பெரிதாக.. சத்தமாக.. இன்னும் ..சத்தமாக.
(நிதானமாக)
வீட்டிலிருந்து தப்பித்தல் என்பது முடியாத காரியம்..
மீண்டும்..மீண்டும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
வீடு என்பதற்குக் குடும்பம் என்கிற அமைப்பு என்று பொருள் கொண்டால்
நான் பொறுப்பல்ல.வீடு என்பதே வீடேதான்.
செங்கல்லும் சிமெண்டும் கலந்து கட்டப்பட்ட கூரையும் கூடிய கட்டிடம்.
குரல்: வாரான் இதென்ன பாருங்க.. கட்டியங்காரன் வாரான் ஈதென்ன பாருங்க
வந்தான் இதென்ன கேளுங்க..கட்டியங்காரன் வந்தான் ஈதென்ன கேளுங்க..
மாடமாளிகை கூட கோபுரம் தேடிக் கொள்ளவேண்டாமா..?
அவன்: மாளிகை, இல்லம், மனை, குடில்,வீடு, குடிசை....
சொர்க்கத்தை வீடுபேறு என்று பெயரிட்டவன் கண்டிப்பாக மேல்தட்டில் பிறந்த ஓர்
அயோக்கியனாகத்தான்
குரல்: வீடுபேறு இருக்கட்டும்;மக்கட்பேறு பற்றித்திருவள்ளுவர் சொல்லியிருப்பது பற்றி தெரியுமா உனக்கு..?குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்..
குழலின் ஒலி இசையாகி யாழுடன் கலந்து நிரப்புகிறது.அவன் களிநடனம்
புரிகிறான். வியர்த்து ஒழுகும் உடல் தரையில்விழுந்து தவிக்கிறது.]
வசிப்பதற்கு வசதியாய் வீடு என்கிற இடத்தை நிர்மாணித்த அந்தமுதல் மனிதன்மீதுதான் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.மனிதர்கள் மரக்கிளைகளிலும், குகைகளிலுமே வசித்திருந்தால்கூட எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இது என்னுடைய கிளை; இந்தக்குகையில் நான் தான் வசிக்கிறேன் என்று எனது வாழிடத்தை அசூசையின்றி ஒருவனிடம் காட்டுவதற்குத் தடையில்லாமல் இருந்திருக்கும்.
அவன்: (மெல்ல எழுந்து தடுமாறி ..நாக்குழறி) வீட்டுடனான இந்த ஒவ்வாமை எப்போது
ஆரம்பம்.ஆரம்பப்பள்ளியில் படித்தபோதெல்லாம் இல்லை. மூத்திரம்பெய்ய
இடைவேளை விட்டவுடனே சகமாணவர்களுடன் ஓடிவந்து தண்ணீர் குடித்துவிட்டு
திரும்பவும் ஓடிப்போவோம்.பள்ளியிலிருந்து ஓடித்திரும்பும் தூரத்தில் எனது
வீடு.ஆனால், ஒரு தடவை, நண்பனிடம்,"அச்சச்சோ உன்னிடம் பேசிக்கொண்டே இங்குவரை வந்துவிட்டேனே..சரி.. நீ.. போ..நான் வாரேன்" என்று சொல்லி எதிர்த்திசையில் நடந்தேன். நண்பன் மறைந்தபின்னர், திரும்பவும் நடந்தும் ஓடியும் வந்து திருடனைப்போல் வீட்டிற்குள் நுழைந்தேன்..ம்..அப்பொழுது நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.
குரல்: ம்..சரி..ஆரம்பப்பள்ளி..உயர்நிலைப்பள்ளி.. கல்லூரிக்கெல்லாம் போகவில்லையா.
அவன்: போனேன்..கல்லூரியிலேயே தங்கிப்படித்தேன்..பின்னர் வேலை. இந்த ஊரில்..அந்த
ஊரில்.. என்று ஏதோவொரு தெருவுக்குள் முகம் புதைத்துக்கொண்டிருப்பது
கொஞ்சம் ஆசுவாசம்தான்.என்றாலும் வீட்டின் ஆளுகையிலிருந்து தப்பிவிட்டநிறைவு
எப்போதும் வரவில்லை.
குரல்: வீடு வரை உறவு; வீதிவரை மனைவி
காடுவரைப் பிள்ளை கடைசி வரை யாரோ..(பாடலாக ஒலிக்கிறது).
அவன்: இல்லை..எல்லாமே வீடுதான்..அது பற்றிய நினைப்பே என்னை
நடுநடுங்கச்செய்கிறது.காரை பெயர்ந்து, ஜன்னல்கதவுகள் பெயர்ந்து கீறல்களுடன்
இருக்கும் அந்தப்பலவீனமான கட்டிடத்திற்கு என்னை மிரட்டும்போது மட்டும் பலம்
வந்து விடுகின்றது.வன்மம் கொண்ட ஒரு கிழட்டுக் குஷ்டரோகியைப்போல
..அழுகும் அவயவங்களில் ஒன்றை உதிர்த்துக்கொண்டே ..அல்லது என்முகத்தில்
விசிறியடித்தபடியே.. அசைவற்று நிற்கும் அந்தக்கட்டிடம்...
குரல்: உனக்குள் இருப்பது பயமா.. எதிர்ப்பா..
அவன்: தொடர்ந்து உங்களை ஒருவன் கண்காணிக்கிறான் என்று
வைத்துக்கொள்ளுங்கள்.அவன் உங்களின் எதிரியா..? அல்லது அதிகாரியா..?
குரல் : அது கண்காணிப்பின் நோக்கத்தைப் பொறுத்தது. உங்களின் எதிர்காலத்தை
உருவாக்கும் நோக்கத்தில்கூட உங்களை கண்காணிக்கலாம் அல்லவா..?
அவன்: என்னுடைய எதிர்காலம் என்னுடையது இல்லையா...?கண்காணிப்பாளர்களின்
கையில் கொடுத்துவிட்டு விரல் சூம்பிக் கொண்டிருக்க வேண்டுமா...?
குரல்: உடனடியாகக் கோபப்படுகிறாய்..அதுதான் உனது பிரச்சினை..
அவன்: எனது பிரச்சினை உனக்குப் புரிந்துவிட்டது. ஆனால் எனக்குப்
புரியவில்லை.அப்படித்தானே சொல்லவருகிறாய். இதைத்தான் நான் கண்காணிப்பு
என்று சொல்கிறேன்.எனது வீட்டைப்போல நீயும் இருக்கிறாய்.. ஒருவேளை அதுதானா..நீ..
[அந்த ஓவியங்களுக்குள் ஓடித்தேடிப் பார்க்கிறான்.. பின்னால் மறைந்து யாரும் இருக்கிறார்களா.. என்று தேடல்.. இவன் ஓடும்போது கூடவே ஒரு கொலுசு ஒலி கேட்கிறது..நின்று பார்த்தால் சிரிப்புச்சத்தம் ..ஆண்களின் சிரிப்பில் எகத்தாளம்.. பெண்களின் சிரிப்பில் வசீகரம்..மாறி..மாறி. ..வசீகரா.. என்ற சினிமாப் பாடலின் தொடக்கம் கேட்கிறது.]
மூக்கும் முழியுமான வயசுப்பெண்களுடன் நான் உறவாடுவதை ஒரு குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டே இருக்கும்.ஆம்.. எனது வீடு.. ஒரு பயங்கரமான கண்காணிப் பாளன். அவர்களுக்கும் எனக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்கும் வரையிலும் அதுவெறுமனே ஒரு பார்வையாளன்.ஆனால் இடைவெளி குறைந்ததாகக் கருதினால் போதும், அழுகிய கிழட்டு உடலைத் தூக்கிக் கொண்டு வந்துவிடும்.என்னைப் பார்; என் அழகைப்பார் என்று பழிப்புக் காட்டும் .அந்தப் பெண்களே அதில் புழங்கத் திண்டாடி, கண்ணீர்விட்டு, காறித்துப்பி வெளியேறுவர்.எனது பெருங்கனவுகளோ...
(பலூன்கள் வெடித்துச் சிதறுகின்றன..)
காதல் என்று இல்லை.நட்புக்கும் கூட இந்த வீடு எதிரிதான்.நான் வேலைபார்த்த ஊரில்ருந்து நண்பன் பலதடவை வீட்டிற்கு வருவதாகச் சொல்லிக்கொண்டிருந்தான். எனது சாக்குப்போக்குகளையும் மீறி , ஒருமுறை குடும்பசகிதமாக வந்து இறங்கிவிட்டான். அவ்வளவு நகைகளுடன் எங்கள் தெருவில் முதன்முதலில் வந்தவர்கள் அவர்கள்தான். அவர்கள் எங்கள் தெருப் பெண்களுக்குக் காட்சிப் பொருள் ஆனார்கள்.அம்மாவுக்கோ பெருமையாக இருந்தது. வந்தவர்களுக்கோ ஏமாற்றம். அவ்வளவு சிறிய வீடுகளில் ஏறி இறங்கி அறியாதவர்கள் அவர்கள்.ஆனால் என் வீடோ தனது வெறுமையையே அழகாய் நினைத்துக் கடைவிரித்துப் பல்லிளித்தது. நண்பனிடம் கூட முதலில் சங்கடம் வெளிப்பட்டுப்பின்னர் கடுமையாகக் கசிந்தது
என் நண்பனின் வீட்டாரை வேடிக்கை பார்க்க அக்கம்பக்கத்து வீட்டுக்குழந்தைகள் வாசலில் வந்து கூடிவிட்டனர். அவர்கள் ஒழுங்காக உடுத்துவதென்பது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அல்லது கோவில் கொடைக்கு. அந்த நிர்வாண உடல்களும் அட்டுப்பிடித்த ஆடைகளும் வந்தவர்களின் முகங்களைச் சுழிக்க வைத்தது. என் தங்கை கூட்டத்தை விரட்டி கதவைச் சாத்தப் போனாள்.தாழ் இல்லாத கதவு திறந்து கொண்டது.
[பன்றிகளின் உறுமலும்.. ஒன்றோடொன்று உரசும், காமங்கொள்ளும் ஒலியும் கேட்கின்றன. பின்வரும் வார்த்தைகளை காட்சியாகவும் காண்பிக்கலாம்]
திறந்த கதவு வழியே வந்தன பன்றிகள்.வந்த வழி மறந்துவிடாதிருக்க கறுப்புத் திரவத்தை வடித்துக் கொண்டே வந்தவை, நுழைந்த பன்றி உடலைக் குலுக்கிவிடுமே என்று பயந்து தம்பி களத்தில் இறங்கினான்.நண்பனின் மனைவி, தன் குழந்தையிடம் 'குட்டி டைனோசர்' என்று வேடிக்கை காட்டும்போது முந்தானை நுனியால் நாசியை மூடியிருந்தாள்
எங்கள் வீடு பரிமாறிய இலையில் பாதியைவைத்து விட்டுக்கிளம்பும்படி அவர்களைத்
துரத்தியிருக்கவேண்டும். போய் அவன் கடிதம் எழுதியும், நான் திரும்பக்கடிதம் எழுதியும் ஆறு ஆண்டுகள் ஓடிப் போய்விட்டன.
என் வீடு என் மரியாதையின் மீது மட்டும்தான் முற்றுகை இடுகிறது. அதற்கோ பல நேசசக்திகள் உண்டு. அந்த ஒரு சம்பவம்.குடித்துவிட்டு வருபவர்களை அரவணைப்பதில் வீட்டுக்கு நிகர் வீடேதான். அப்படியொரு முறை என் பெரியம்மா வீட்டின் அரவணைப்பில் கிடந்தபோது என் இலக்கிய நண்பன் வந்தான்.வந்தவன் ஒருவித இளக்காரச் சிரிப்புடன் போய்விட்டான். அடுத்தமுறை பார்த்தபோது குடிப்பழக்கம் ஏற்படுத்தும் தீமைகள் பற்றியும், பெண்கள் குடிப்பதால் ஏற்படும் கலாச்சார சீரழிவுகள் பற்றியும் அக்கறையோடு முன்வைத்தான்.என்னுடைய பதில் அப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
"குடிப்பது தவறு என்று எனக்குத்தோன்றவில்லை;வாழ்வோடு இயைந்த ஒன்று.பழக்கம் தான்; சாப்பிடுவது பழக்கம் தான்; சாப்பிடுவதற்கு அடிமையாகிவிட்டோம் என்று கலங்குவதில்லையே.. சரி குடிப்பது தவறு என்றே இருப்பினும், 'பெண்கள் குடிப்பது தவறு ' என்று சொல்லும் நீ ஒரு ஆணாதிக்கக்காரன்;ஒழுக்கவாதி; மேல்தட்டு; மேல்சாதிமோகி.."
இந்தப் பதில் அவனைத் தாக்கியபோது, குடியில் நான் இல்லை.என்றாலும் நண்பன் கேட்டான்,'போதை உனக்குத் தெளியப்போவதில்லையா' . அன்று முதல் நானும் அந்த நண்பனும் விவாதம் என்னும் முட்டுச்சந்தில் மோதி விலகிக்கொண்டே இருந்தோம். அவனுக்கோ மட்டந்தட்டும் குரூரம்; எனக்கோ அவனைத்தவிர்த்துவிட விருப்பம்.
ஒரு குரல்: ஹலோ மிஸ்டர் எம். போதும் நிறுத்து. உன் புலம்பல்களை.ஆற்றாமையில் நீ
பேசும் பேச்சுக்கள் வெறும் பிதற்றல்கள் என்பது உனக்குத்தெரியவில்லையா..?
அவன்: யாரது..வெளியே வாருங்கள்.நான் தனியாகத்தான் இருக்கிறேன்.தைரியமாக வந்து
மோதிப்பார்க்கலாம்.
குரல்: (பலமான சிரிப்புடன்) பேச்சே மோதலாகி விடுமா..? வெறும் வார்த்தைகளுக்குச்
சக்தியை ஊட்டுவதாக நினைத்துக் கொண்டு உங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தும்
தொழிலை நிறுத்தமாட்டீர்களா.?
அவன்: நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். அது ஒன்றும் என் ஒருவனின் வெளிப்பாடு
அல்லவே.. நீயும் நானும் அவனும் அவளுமான மனிதர்களின் வெளிப்பாடுதானே.
குரல்: ஆம்..மனிதர்களின் வெளிப்பாடுதான்.. மனிதக் கூட்டத்தில் என்னை ஏன் சேர்க்கிறாய்.
அவன்: அப்படியானால்..நீ..
குரல்: நான் மனிதன் அல்ல. வீடு வெறுமனே செங்கல்லும் சிமெண்டாலும் கட்டப்பட்ட வெறும் கட்டடம் என்று தானே வீட்டைக் கருதிவந்தாய்..நான் விசுவாசம் நிரம்பியவன்;பொறுப்புடையவள்;எனக்கும்நேசங்களும் பாசங்களும் உண்டு. கோபங்களும் வன்மங்களும் உண்டு.உன்மேல் எனக்குப் பரிவும் பச்சாதாபமும் கூட உண்டு.
எனக்குள் மறைந்து நீ படும் வேதனைகளைவிட
ரகசியங்களையே வெளியில் சொல்லியிருக்கிறேன்.
ரகசியங்களெனப் பூட்டப்பட்டவை
வேதனைகள்.
வேதனைகளெனச் சொல்லப்பட்டவை
ரகசியங்கள்.
இருட்டும் வெளிச்சமும்
உருவாக்கப்பட்டன அல்ல.
உடனுறை நிகழ்வுகள்.
அவன்: (தனக்குள்) கதையில் நான் கட்டிய வீடு என்னைத்தேடியே வந்துவிட்டது.எனது விளக்கங்களை-இல்லை இல்லை எனக்கான தெளிவுகளைக் கேட்டுப் பெற்றுவிட வேண்டியதுதான்.
குரல்: என்ன முணங்குகிறாய்..உன் சதிகளை விரிக்கப்போகிறாய்..
அவன்: என் முனகல்களைச் சதியெனச் சொன்ன நீ அடிப்படையில் கோளாறான பார்வையுடையவன் என்பதை முதலில் ஒத்துக்கொள். அதன்பின்பே உன்னோடு நான் பேசமுடியும்.
குரல்: ( சிரித்து விட்டு) மனிதர்களின் இயல்புகளை எல்லாம் என்மீது ஏற்றி விடப்பார்க்கும் உனது பார்வையில் அடிப்படைக் கோளாறு எதுவும் இல்லை அப்படித்தானே..
அவன்: அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். 'மனிதர்கள் அனைவரையும் ஒன்றாகப் பாவித்துக் கொண்டு நீ பேசக்கூடாது' என்பதுதான் எனது வேண்டுகோள்.
குரல்: அதேபோல் 'வீடுகள் எல்லாம் ஒன்றாகப் பாவிக்கத்தக்கதல்ல' என்பதையும் நீ அறிந்து கொள்ளவேண்டும்.
அவன்: அதனால் தான் உன்னைத் ' திருவாளர் எம்.மின் வீடு' என்று சொன்னேன்.
குரல் : அதாவது , 'இந்த வீட்டின் உரிமையாளன் எம்.' அவனைப்பற்றி எனக்கு நிறையவே
தெரியும்.(தனக்குள் ) என்னைப் பற்றி எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத்
தெரியப்போகிறது.
அவன்: அவனைப் பற்றி என்ன தெரியும். தெரிந்ததைச்சொல்ல முடியுமா..?
[ வீடுகள் ஒவ்வொன்றாக இடம் மாறிக்கொண்டிருக்கின்றன]
குரல்: திருவாளர் எம். ஒரு கதைக்காரன். அவனுக்குப் பெயர் மோகன் அல்லது மோகனாங்கி. படித்த நபர். கதையெல்லாம் எழுதுவது பெருமையான விசயம்தான்.ஆனால் அவன் மேலேயே அவனுக்கு வெறுப்பும் பயமும் இருக்கிறது. அந்த இயலாமை ஏன் என்று தெரியவில்லை.அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
அவன்: உன்னைப் பற்றி மோசமாக எழுதிவிட்டான் என்பது அவனின் இயலாமையா..?
குரல்: ஆம். அதுதான் எனது முடிவு. எனக்கு வயதாகியிருக்கலாம்.பலவீனமாகக்கூட இருக்கலாம்.யாருக்குத்தான் இவை வராது. ஆனால் என்னைக்குறித்து அவமானமடைவதும் இழிவானதாகக் கருதுவதும் ஏன்..? என் அடையாளத்தை அணிந்து கொள்ளப் பார்க்கிறான்.இவனுக்கு வேண்டுமானால் நான் உதவவில்லை என்று தோன்றலாம்.அவனது தாத்தன் என்னைக்காட்டித்தானே ஒரு இளவயசுப் பெண்ணை மணந்துகொள்ள முயன்றான்.அது ரொம்ப வருடங்களுக்கு முன்புதான்.'தான் ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரன் என்றும்,தன்னை மணந்து கொண்டால் அவ்வீடு அவளுக்கே வந்து சேரும் என்றும் ஆசை காட்டிப்பேசினானே.. அவன் என்னைக் குறித்துப்பட்டது பெருமை..இவனுக்குத்தான் நான் சிறுமையாகத் தோன்றுகிறேன்
அவன்: இன்றைய தோற்றம் அவ்வளவு உவப்பானதாக இல்லை என்பதை நீ ஒத்துக் கொண்டபின், உன்னைப் பற்றிய அவனின் குற்றச்சாட்டு எப்படித்தவறாகும்
குரல்: என்னைக்குற்றம் சாட்டுவதில் என்ன இருக்கிறது . என்னை நிர்மாணித்தது யார்?
கட்டும்போது என்ன நினைத்துக் கட்டினார்கள். ஒரு தற்காலிகக் காங்கிரீட் குடிசை என்ற அளவில்தானே.. இந்தக்காலனியில் 31 வீடுகள் திருவோட்டில் வீசப்படும் பிச்சைக்காசு எவ்வளவு சிரத்தையுடன் வீசப்படுகிறதோ அவ்வளவு சிரத்தையுடன் தானே நாங்கள் நிர்மாணிக்கப்பட்டோம். அதற்கு முன்பு அந்த இடம் என்னவாக இருந்தது.குப்பைகளைக் கொட்டி வைக்கும் டெப்போ.திட்டமிட்டவர்களும் காண்றாக்டர்களும் எடுத்தது போக மிச்சமிருந்ததை வைத்துத்தானே நாங்கள் கட்டப்பட்டோம். இன்றைய நிலை புரிந்து கொள்ளத்தக்கது.
அவன்: கடந்தகால நிகழ்வுகள் எதற்கும் நீ பொறுப்பல்ல என்கிறாய். அப்படித்தானே.
குரல்: ஓ..அந்தக் கதாசிரியன் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது ,நண்பனின் முன்னால், தெருவுக்குள் நுழைய கூச்சப்பட்டுக் கொண்டு எதிர்த்திசையில் நடந்ததாகச் சொன்னானே.. அதற்காக..
அவன்: அதற்கும், அது மாதிரியானவற்றிற்கும்...
குரல்: என்னையும் என்னையொத்த வீடுகள் நிரம்பிய தெருவையும் குறித்த அவனது அசூயை என்பது அவனைக் குறித்த அசூயைதான் என்பதை நீங்கள் உணர வேண்டும்.ஏனெனில் அப்பொழுதெல்லாம் நான் ஒன்றும் சிதிலமடைந்திருக்கவில்லை.
அவன்: உன்னைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு எல்லா வீடுகளையும் உள்ளடக்கிப் பேசுவது சரிதானா.. உனக்கு உண்டான பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பொதுவானவைகள் தானா..?
குரல்: எல்லாவற்றிற்கும் பொதுவானவை என்று சொல்லமுடியாது. இந்தக் காலனி வீடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் அப்படி உணர்கிறார்கள் என்று சொல்ல முடியாது . இந்தக்கதாசிரியன் மாதிரி ஒன்றிரண்டு கூமுட்டைகள் அப்படி உணரலாம்.
அவன்: அப்படியானால் ..அவர்கள் படித்த கல்வியில் கோளாறு இருக்கிறது என்று சொல்லலாமா..?
குரல்: உறுதியாக அப்படித்தான் தோன்றுகிறது. இல்லையென்றால் தெருக்குழந்தைகளையும் குடிக்கும் தாய் தகப்பனையும் குறித்து ஒருவன் வெட்கமடைய நேருமா..?அவர்களைவிட்டுப் பிரிந்து வளர்ந்தபோது ..பெற்ற கல்வியில் மறைந்துள்ள கொடூரம் எத்தகையது என்பது கேள்வி அல்ல.ஆத்திரம்.. கேள்விகள் என்றால் பதில்களைத்தயார் செய்து விடுவார்கள். ஆத்திரங்களுக்கு என்ன பதில்களைத்தந்துவிட முடியும் உங்களால். யோசித்துப் பாருங்களேன். இருந்ததென்றால் இன்னொருமுறை சந்திக்கும்பொழுது முதலிலேயே மேடைக்கு வந்து விடுங்கள். அந்தப்பதிலிலிருந்து உரையாடலைத்தொடங்கலாம்.

Linggo, Hulyo 12 2009

வளர்ச்சியின் அடையாளங்கள்
சொந்தக் கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்பிய எனக்குத் திரும்பத் திரும்ப இமையத்தின் அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. கதையின் தலைப்பு உயிர்நாடி.வாசந்தி பொறுப்பில் இந்தியா டுடே வெளியிட்ட இலக்கியச் சிறப்பு மலர்கள் போல டைம்ஸ் ஆப் இந்தியா வுக்காக டைம்ஸ் இன்று என்ற தலைப்பில் ஒரு சிறப்பு மலரை 2008 ஆம் ஆண்டில் - பொங்கல் சமயத்தில் சுஜாதா தொகுத்தார் என்பதாக ஞாபகம். அந்தத் தொகுப்பில் தான் இமையத்தின் உயிர்நாடி கதை அச்சாகி இருந்தது.

கவிதைகள், கதைகள் அதிகமாகவும் கட்டுரைகள் குறைவாகவும் இருந்த டைம்ஸ் இன்று தொகுப்பில் அச்சான இமையத்தின் கதை- தனது நிலத்தை அதிக விலை தருகிறான் என்பதற்காக முகம் தெரியாத அந்நியனுக்கு - வேற்று மாநிலத்துத் தொழில் அதிபருக்கு விற்கச் சம்மதிக்காத சிறுவிவசாயியின் பிடிவாதத்தை- விவரித்திருந்தது. கதையைப் படித்து விட்டு இமையத்திடம் தொலைபேசியில் பேசிய போது கூட அதன் உள்ளடக்கம் சார்ந்து அதிகம் விவாதிக்காமல், கதை எழுதப் பட்டுள்ள முறையைக் குறித்தே அதிகம் பேசியது இப்போது நினைவுக்கு வந்தது.

நடைமுறையைப் பேசாமல் இலட்சியத்தை முன்னிறுத்துவதற்காக அதிக வார்த்தைகளைச் செலவு செய்திருப்பதாக நான் சொன்ன போது இமையம் கதையின் ஆன்மா நிலத்தைத் தக்க வைப்பதில் இருக்கிறது என்று வாதாடினார். மின்சார மயமான கிராமத்து விவசாயத்தோடு சேர்ந்து சொல்லாடலாக மாறிய பசுமைப் புரட்சி தமிழ் நாட்டுக் கிராமங்களை- கிராமத்துச் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிய கொடுங்கனவை நேரடியாகப் பார்த்து அனுபவித்தவன் நான். எண்பதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களில் அன்றாடக் கூலிகளும், விவசாயம் சார் தொழில் செய்தவர்களும் துண்டைத் தோளிலிருந்து உருவி வீசி விட்டு வளரும் தொழில் நகரங்களான திருப்பூர், சிவகாசி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை என நகர்ந்த போது பிடிவாதமாக நிலத்தோடு பிணைத்துக் கட்டிய சங்கிலியைக் கழற்ற முடியாமல் தவித்த நடுத்தர விவசாயக் குடும்பத்து உறுப்பினராக இருந்தவன் நான்.

பசுமைப் புரட்சியின் அகோரப் பசியைத் தோட்டத்துக் கிணற்றின் நிலத்தடி நீரும் ரசாயன உரங்களும் தீர்க்காத போது போட்டது போட்ட படி திருப்பூருக்குப் போய் பனியன் கம்பெனியில் இரண்டு ஷிப்ட் வேலை செய்தார்கள். ஓராண்டு முடிவில் சிறு பட்டறை உரிமையாளர்களாக மாறிய பின்பு மாரியம்மன் கோவில் திருவிழாவை ஊரில் வந்து கொண்டாடி விட்டுத் திரும்பவும் போனார்கள். ஒன்றிரண்டு நடுத்தர விவசாயிகள் நிலத்தை விற்று முதலீடு செய்து பட்டறை முதலாளிகளான கதை யதார்த்தம். ஆனால் கூடுதல் விலை தந்தாலும் வட நாட்டு முதலாளிக்கு விற்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்யும் இமையத்தின் கதை இலட்சிய வாதம் என்றே தோன்றியது.

சிறு விவசாயிகள் விற்ற நிலத்தை வாங்கிய பெரு விவசாயிகளும் வேளாண் தொழிலைக் கைவிட நேர்ந்த கதைதான் பசுமைப் புரட்சியின் - நவீன வேளாண்மையின் வெற்றிக் கதை என்பதை சொல்லி முடிக்கும் முன்பே இப்போது வேறு சில காட்சிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. விவசாயம் செய்யப்படாமல் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் மேய்ச்சல் நிலங்களாக இருந்த மலையடிவாரப் புஞ்சைகளும் நத்தம் புறம்போக்குகளும் சுற்றி வளைக்கப் படுவதை இந்த முறை எனது கிராமத்திற்குப் போன போது பார்க்க முடிந்தது. சில பத்தாயிரம் ரூபாய்கள் மதிப்புடைய மேய்ச்சல் நிலங்களை பல லட்சங்கள் கொடுத்துக் கொத்துக் கொத்தாக யார் யாரோ வாங்கிப் பத்திரம் பதிகிறார்கள் என்கிற தகவல் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

கலவர பூமியாக இருந்த திருநெல்வேலிக்குப் புதிய தொழில் திட்டங்களாக நாங்குநேரி தொழில் நுட்பப் பூங்காவும், கயத்தாறு தொழில் பேட்டையும் அறிவிக்கப் பட்ட போது அதன் சுற்று வட்டார நிலங்களை வாங்கியவர்களில் பாதிப்பேர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மொத்தம் மொத்தமாக பல ஏக்கர் கணக்கில் வடநாட்டு முதலாளிகள் வாங்கிப் போட அயல் நாடுகளில் வேலை செய்யும் திருநெல்வேலிக்காரர்கள் தங்கள் சேமிப்புகளை வீடுகளுக்கான மனைகளில் முதலீடு செய்து விலையேற்றத்துக்கு உதவினார்கள். பத்தாண்டு களாகப் பேசப்படும் தொழில் பூங்கா இன்னும் வந்த பாடில்லை. ஆனால் வீட்டடி மனைகள் மட்டும் ஏறு முகத்தில் தான் இருக்கின்றன.

திருநெல்வேலிக்கு அருகில் அறிவிக்கப் பட்ட நாங்குநேரி திட்டம் போல மதுரை மாவட்டத்தின் வறட்சிப் பகுதியான சேடபட்டி, உசிலம்பட்டிப் பகுதியில் புதிய பொருளாதார மண்டலமும், தொழில் பேட்டைகளும் வர இருக்கின்றன என்ற தகவல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டெல்லியில் கசியத் தொடங்கியிருக்கும் போலும். வட இந்தியப் பணக்காரர்கள் பண மூட்டைகளோடு தரகர்களைப் பிடித்துக் கொண்டு அப்பகுதிக் கிராமங்களுக்கு வந்து காடுகளையும், மலைகளையும், ஏரிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாரியம்மன் திருவிழாவிற்கும், காளியம்மன் கொடைக்கும் கிராமத்திற்கு வர வேண்டும் என்ற ஆசையோடு பட்டா நிலங்களைத் தரிசு போட்டு விட்டுத் திருப்பூருக்கும் கோயம்புத்தூருக்கும் பிழைக்கப் போனவர்கள் திரும்பவும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு காணி நிலத்துக்கு ஒரு லட்சம் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பத்து முதல் பதினைஞ்சு லட்சம் கிடைக்கிறது. தங்கள் நிலம் அதிக விலைமதிப்பில் விற்கப்படுகிறது என்ற சந்தோசத்தில் பத்திரத்தில் கையெழுத்துப் போடும் போது, தனக்குச் சொந்தமாக இருந்த விலை மதிப்பில்லா சொந்தக் கிராமம் அந்நியமாகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நினைத்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்த பூவரச நிழலும், தாழை யூத்து அருவியும், கம்பு தின்ன வந்த மயில் கூட்டமும், விலகி விலகிப் போய்க் கொண்டே இருக்கின்றன என்பதை அவர்கள் அறியவில்லை. அவை அவர்களை அந்நியர்களாக்கிக் கொண்டிருக்கின்றன.

வடநாட்டு முதலாளிகளுக்கும் கேரளத்துப் பண்ணைகளுக்கும் மொத்தமாக நிலத்தை வாங்கிக் கொடுத்து பண்ணைகள் அமைக்கும் முயற்சியில் ஏஜெண்டுகளும் புதிய புதிய ஆட்களும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாங்க ஆளில்லாமல் கிடந்த மலையடிவாரப் புஞ்சைக் காடுகள் எல்லாம் பெரிய பெரிய தோப்புகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன. வரப் போகும் முதலாளியப் பொருளாதாரம் சிறு விவசாயிகளைக் கொலை செய்து விட்டுப் பண்ணை வேளாண்மையை வளர்க்கப் போகிறது.

சொந்தக் கிராமத்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் இமையத்தின் உயிர்நாடி கதை இடம் பெற்றிருக்கும் அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுதியான வீடியோ மாரியம்மன் தொகுப்பை எடுத்து அந்த நீண்ட கதையை வாசித்து முடித்த போது வளர்ச்சியின் அடையாளம் அல்ல; இது அழிவின் அடையாளம் என்று இமையம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் அரசியல் கதையை எழுதியிருக்கிறார் என்பது உரைத்தது.

உயிர் நாடி, வீடியோ மாரியம்மன்(43-84),2008, க்ரியா , பிளாட் 3, எச்.-18, தெற்கு அவென்யூ, திருவான்மியூர், சென்னை-600041
கதைவெளி மனிதர்கள்
========================
உலகமே வேறு; தர்மங்களும் வேறு.
நிகழ்காலத் தமிழ் வாழ்வில் கலை இலக்கியத்தின் இடம் என்ன?
பொதுவான இந்தக் கேள்வியைக் கூடத் தள்ளி வைத்து விடலாம்.
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணாக்கரிடம் கவிதையை நீங்கள் வாசித்தது உண்டா? அல்லது வாசிக்கக் கேட்டதுண்டா? என்று கேட்டுப் பாருங்கள். முதுகலை படிக்க வரும் மாணவிகளிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன்.(கலைப் பிரிவுகள் மாணவிகளுக்குரிய பாடங்களாகி விட்டன)
திரைப்படப் பாடல்களைக் கேட்டதையே மாணாக்கர்கள் விடையாகத் தருகிறார்கள். ஒவ்வொரு பெரு நகரங்களிலும் விடாது ஒலித்துக் கொண்டிருக்கும் எப். எம். வானொலிகளில் தொலை பேசியில் அழைத்துப் பேசிப் பாட்டுக் கேட்கும் நேயர்கள் நிரம்பிய இந்தக் காலகட்டத்தில் அவற்றில் ஒலிக்கும் பாடல்களே கவிதைகளாகக் கருதப் படுகின்றன. அந்தப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களே தமிழின் ஆகச் சிறந்த கவிகளாகக் கருதப் படுகின்றனர்.
இதே கேள்வியை நாடகத்தை நீங்கள் பார்த்ததுண்டா? என்று கேட்டுப் பார்த்தால் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பாலோர் தொலைக்காட்சித் தொடர்களையே நாடகங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். நாடகம் என்பது அடிப்படையில் மேடையில் நடக்கும் ஒரு கலை. நடிகனும் பார்வையாளனும் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கும் ஓர் உயிருள்ள வடிவம். முதல் நாள் மேடையேற்றியதிலிருந்து அடுத்த நாள் மேடையேற்றம் மாறிவிடக்கூடிய சிறப்புடைய வடிவம் என்ற வேறுபாடுகள் எல்லாம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அநேகமாக நாடகக் கலையின் வீழ்ச்சி தொலைக்காட்சித் தொடர்களின் பரவலில் காணாமல் போய்விட்டன என்றே சொல்ல வேண்டும்.
கேட்பதற்கும் பார்ப்பதற்கும் உரிய கவிதைக்கும் நாடகத்திற்கும் இந்தக் கதி என்றால் ஒருவர் சொல்லப் பலர் கேட்பதாக இருந்த கதை வடிவத்தின் நிலையைச் சொல்லவே வேண்டிய தில்லை. ஒவ்வொரு ஊரிலும் இருந்த பொதுச் சாவடிகளில்- மந்தை வெளியில்- மண்டுக் கல்களில் உட்கார்ந்து ஒரு சின்னக் கதையைப் பல மணி நேரம் நீட்டி நீட்டிச் சொல்லிய கதை சொல்லிகள் காணாமல் போய் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டன.
வடமாவட்டத்து கூத்துக்கலை நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு பாரதக் கதையைப் பாராயணம் செய்த பின்பே தொடங்கினார்கள். அல்லியரசாணி கதை, புலந்திரன் களவு, அபிமன்னன் சண்டை போன்ற பெரிய எழுத்துக் கதைகள் பாராயணம் செய்யப் பட்டதை நான் கேட்டிருக்கிறேன். மழை வேண்டுமென்றால் பாரதக் கதையின் விராட பர்வம் வாசிக்கப் பட வேண்டும் என நம்பிய கிராம சமுதாயம் கதையோடு இருந்த தொடர்பை அறுத்துக் கொண்டு விட்டது.முதல் ஆட்டம் சினிமாப் பார்க்கப் பக்கத்துச் சிறு நகரத்திற்கு இளைஞர்களாகிய நாங்கள் கிளம்பிப் போகும் போது ஆரம்பித்த கதையைப் படம் முடிந்து திரும்பி வரும்போதும் சொல்லிக் கொண்டிருந்த கதை சொல்லிகள் எங்கள் ஊரில் இருந்தார்கள். 1960 கள் வரை இருந்த கதை சொல்லிகள், கதை சொல்லிகள் மட்டும் அல்ல; கிராமத்தின் காவலாளிகளும் கூட.
கிராமங்களில் கதை சொல்லிகள் எண்ணிக்கைகள் குறைவதும் அச்சு ஊடகங்களான இதழ்களிலும் புத்தகங்களிலும் வாசிப்பதற்கான கதைகளை எழுதிய கதாசிரியர்களின் உருவாக்கமும் சமகால நிகழ்வுகள். கதை சொல்லிகளின் இடத்தைக் கைப்பற்றிய கதை எழுத்தாளர்கள் கதையின் சொல் வடிவத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் எழுத்துக்கலை வடிவம் என்னும் புதிய வடிவத்தைத் தேர்ந்து கொண்டு புதிய கதைகளைச் சின்னச் சின்ன வடிவத்திலும் நீண்ட வடிவத்திலும் எழுதிக் காட்டினார்கள்.
சில கதாபாத்திரங்கள் மட்டுமே இடம் பெற, ஒன்றிரண்டு நிகழ்வுகளை ஒரு மைய விவாதம் சார்ந்து தொடர்பு படுத்திக் காட்டுவதன் மூலம் நிகழ்கால வாழ்வின் மீதான கேள்வியை- சிந்தனையை உண்டாக்கும் நோக்கம் கொண்டதாகச் சிறுகதை வடிவம் படிப்படியாக மாறியது என்றால், அதன் மறுதலையான நாவலின் வடிவம். வாழ்க்கையை விஸ்தாரமான இடப் பின்னணியில், நீண்ட காலகட்டத்தை உள்ளடக்கியதாக, பலவிதமான கதாபாத்திரங்கள் உலவும் ஒன்றின் கலவையாக உருக்கொண்டு முழுமையடைந்ததைச் சொல்லும் இக்கால இலக்கிய வரலாற்று நூல்கள் இல்லை. அளவு கருதி சிறுகதை, நாவல் என இரு வேறு வடிவங்களில் அழைத்தாலும் இரண்டுமே புனைவுத் தன்மை என்னும் பொதுநிலைப் பட்டன என்பதைத் திரும்பவும் விளக்கிச் சொல்ல வேண்டியுள்ளது.
புனைவு என்பது எப்படி விளக்குவது? சரியாகச் சொல்வதனால் புனைவு என்பது பல உண்மைகளை ஒன்றாக்கிப் பொய்ம்மையெனக் காட்டும் மாயம்; அதே நேரத்தில் கதைக்குள் இருக்கும் எல்லாமும் பொய்யல்ல; கதை நிகழும் வெளி கதையில் சொல்லப்படும் அந்த இடமாக இருக்காது. பொய்யான ஒரு வெளியாக அமையும். நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் அந்நிகழ்வு நடந்ததாக இல்லாமல் இருக்கலாம். பாத்திரங்களின் பெயர்களும் மாற்றம் பெற்றிருக்கலாம். எல்லாவற்றையும் மாற்றம் செய்து விடும் வேலையைத் திறம்படச் செய்யும் ஆசிரியன் புனைவில் தேர்ச்சி பெற்றவனாகிறான்.
எல்லாவற்றையும் மாற்றம் செய்த போதும் நடந்த கதை என்பதை நம்பச் செய்வதில் புனைகதை ஆசிரியனின் வெற்றி இருக்கிறது. இப்படி நம்பச் செய்வதில் தான் நவீனப் புனைகதை, பழைய புராணக் கதைகளான- பாரதம் மற்றும் ராமாயணக் கதைகளின் மையக் கதையிலிருந்தும் கிளைக்கதையிலிருந்தும் மாறித் தோன்றுகின்றன. கிராமத்து மேடையில் உட்கார்ந்து சொல்லப் பட்ட தொல்கதையிலிருந்தும் நவீன கதை தன்னைப் புதுப்பித்துக் கொண்டது இந்த நம்பகத்தன்மையை உருவாக்கியதில் இருக்கிறது என்பதை நமது தலைமுறையின் மைய நீரோட்ட வாசகக் கும்பல் உணராமல் வழி தவறிக் கொண்டிருக்கிறது. வழி தவறிப் போகும் ஆடுகளை மேய்க்கக் கூடிய மேய்ப்பர்களும் கூட வழி தவறத்தான் செய்கின்றனர்.
கதை மண்டுகளில் சொல்லப்பட்ட தொல்கதைகளான பட்டி விக்கிரமாதித்தன் கதை, தெனாலி ராமன் கதை, ஏழு கன்னிமார் கதை, குலமரபுக் கதைகள், குலதெய்வக் கதைகள் எல்லாம் ஒருவித அமானுஷ்யத்தோடு இருந்தன. அவற்றை நீங்கள் கேட்கலாம். கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்லலாம். கதையை நீங்கள் நம்ப வேண்டும் என்பது இல்லை; முன்னொரு காலத்தில் அவர்கள் அப்படி வாழ்ந்திருக்கலாம். அவர்களின் வாழ்க்கையிலிருந்து உங்களுக்குத் தேவையானவை ஏதாவது இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் கதையைக் கேட்ட சந்தோசத்தோடு களைந்து போகலாம். ஆம் சொல்வதற்கான தொல் கதைகள் தான் அவை. ஆனால் நம் காலத்தில் எழுதப்பட்ட நவீனப் புனைகதைகள் சொல்லப் படுவதற்கான கதைகள் அல்ல. வாசிக்கப்படுவதற்கான கதைகள்.
நவீனப் புனைகதைகளை வாசிக்கும் போது நிகழ்கால வாழ்வின் மீதான விவாதங்களை – அதன் இருப்பின் முரண்பாடுகளை- தனிமனிதர்கள் எடுக்கும் முடிவுகளின் ஆச்சரியங்களை- அப்பாவித்தனத்தை-எடுத்த முடிவால் சந்திக்கும் திகைப்பை- திகைத்து நிற்கும்போது கிடைக்கும் மனிதாய உறவுகளை- உறவுகளின் கறுப்பு X வெளுப்பான பக்கங்களை – எதிர்பாராத புதிர்களின் முடிச்சுகளை – முடிச்சுகளின் அவிழ்ப்பு தரும் சுகத்தை- சோகத்தை என அவை முன் வைக்கும் எல்லாம் நம் நிகழ்காலம் சார்ந்தவை. அந்த நிகழ்காலத் தன்மை தான் அவற்றைக் கதை அல்ல, நிஜம் என நம்ப வைக்கின்றன.
நிஜம் என நம்ப வைப்பதில் காலத்திற்கும், பாத்திரங்களுக்கும் புனைவுத் தன்மையை ஊட்டும் கதாசிரியன் வெளியை யதார்த்தமாகக் காட்டிடவே விரும்புகின்றனர். அந்த வகையில் கதையின் முக்கிய கூறுகளான காலம், இடம், பாத்திரம் என்ற மூன்றில் இடம் எனப்படும் வெளியே முதன்மையானது எனச் சொல்லலாம். தமிழில் எழுதப் பட்ட கதைகள் – அவற்றை எழுதிய ஆசிரியர்கள் - குறிப்பான வெளிகளை உருவாக்கித் தருவதில் அதிகக் கவனம் செலுத்திடவே செய்துள்ளனர். நவீனக் கதைகளாக இருப்பதன் காரணங்களாக மற்றவர்கள் எதனை நினைக்கிறார்களோ தெரியவில்லை. எனக்கு நவீன கதை என்பது வெளி மற்றும் பாத்திரங்களை விவரித்துக் காட்டும் எழுத்து முறையில் தான் இருக்கிறது என்பதாகவே தோன்றுகிறது.
நவீனத் தமிழ்ச் சிறுகதையின் மூலவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் புதுமைப்பித்தனின் இரண்டு கதைகளை இங்கே நினைவுக்குக் கொண்டு வருவோம். ஒன்று சங்குத் தேவன் தர்மம் (காந்தி, 1934,ஏப்ரல், 25) ; இன்னொன்று பொன்னகரம் (மணிக்கொடி. 1934,மே,13 ). இவ்விரண்டு கதைகளையும் அவரது இரண்டாவது, மூன்றாவது கதைகளாகப் புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்பு ஆசிரியர் ஆ.ரா.வேங்கடாசலபதி வரிசைப்படுத்தியுள்ளார்.
“ முருக்குப் பாட்டி முத்தாட்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். ” –இது சங்குத் தேவன் தர்மம் கதையின் தொடக்கம்.
“ பொன்னகரத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?” - இது பொன்னகரம் கதையின் தொடக்கம். இவ்விரு தொடக்கமுமே ஒரு சொல்கதையின் தொடக்கமாகத் தான் இருக்கின்றன. ஆனால் இவ்விரு கதைகளிலும் வெளியை விவரித்து எழுதும் புதுமைப்பித்தன் வரிகளை வாசித்துப் பாருங்கள்:
“ சாயங்காலம் ஐந்தரை மணியிருக்கும் முறுக்குப் பாட்டி தங்கவேலு ஆசாரியின் வீட்டுத் திண்ணையில், சுவரருகில் சாய்ந்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறாள். செம்பாதி நரைத்த தலை. ஜீவியத்தில் பட்ட கஷ்டங்களைப் படம் போட்டுக் காட்டுவது போல் கோடுகள் நிறைந்த முகம்.’பாம்படமில்லாது புடலங்காய்த் துண்டுகள் மாதிரித் தொங்கும் காதுகள்” (சங்குத் தேவன் தர்மம்). முத்தாச்சியை அறிமுகப் படுத்தும் புதுமைப்பித்தன் அக்கதையின் மையக் கதாபாத்திரமான சங்குத்தேவனை இப்படி அறிமுகப் படுத்துகிறார். “ தலையில் பெருத்த முண்டாசு, நீண்ட கிருதா, வரிந்து கட்டின அரை வேஷ்டி, திடகாத்திரமான சரீரம், அக்குளில் ஒரு குறுந்தடி”
இவ்விரு பாத்திரங்களையும் சந்திக்கச் செய்து உருவாக்கிய சங்குத் தேவன் தர்மம் கதை ஒரு விதத்தில் வசதியானவர்களிடம் கொள்ளை அடித்துத் தேவையானவர்களுக்குக் கொடுக்கும் ராபின்குட் பாணி நிகழ்ச்சியைக் கொண்டதுதான். திருடன் எனப் பொதுமனம் சொல்லும் –பயப்படும் சங்குத்தேவனின் இன்னொரு முகத்தை – திருட்டுக்கான தர்மத்தை முன்வைக்கும் அந்தக் கதை எல்லா வெளியிலும் நடந்து விடக்கூடிய கதை அல்ல; அதன் வெளி நிச்சயம் திருநெல்வேலி மாவட்டத்துக்குரியதாகத் தான் இருக்க முடியும்.
தன்னுடன் நடந்து வரும் மனிதன் தான் சங்குத் தேவன் எனத் தெரியாமல் அவனை நினைத்துப் பயந்து கொண்டு அவனது துணையுடன் செல்லும் முத்தாட்சி பயப்படுவதே தன்னிடம் இருக்கும் பாம்படத்தை சங்குத்தேவன் திருடிக் கொண்டு போய்விடக் கூடாது என்பதற்காகத் தான். சங்குத் தேவன் பற்றிய பொது வெளி பிம்பங்களை மறைக்காமல் சொல்லிக் கொண்டே வரும் முத்தாச்சியிடம் ,
“ ஏ ஆச்சி! நில்லு ,ஒரு சமுசாரம், நீ ஏழெதானே? இன்னா. இதெ வச்சுக்க! முதல் பேரனுக்கு என் பேரிடு!”
“ நீங்க மவராசரா இருக்கணும். என்ன பேரு இட?” என்று சொல்லிக் கொண்டே , தனது எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் மதி மயங்கிக் கையை நீட்டினாள்.
“ சங்குத் தேவரின்னு”
தன்னுடன் தனக்குப் பாதுகாப்பாக வந்தவன் தான் சங்குத் தேவன் என அறியும் விதமாகக் கதையை முடித்துள்ள புதுமைப்பித்தன் இந்தக் கதையை நிச்சயம் வேறு வெளியில் நடைபெறுவதாக எழுதி இருக்க முடியாது. அந்தக் கதை வெறும் வெளி சார்ந்த அடையாளம் கொண்ட கதை மட்டுமல்ல; கதையில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களின் சமூக அடையாளத்தையும் குறிப்பாகக் கொண்ட கதை. அந்தப் பாத்திரங்களை வெளியோடு சேர்த்து வாசித்துக் கொள்ளும் போதுதான் அதன் தீவிரம் வாசகனுக்குப் போய்ச் சேரும்.
ஆனால் இன்னொரு கதையான பொன்னகரம் குறிப்பான வெளியில் பாத்திரங்களை நிறுத்தியிருந்தாலும் ரயில்வே ஸ்டேஷன்கள் இருக்கும் எல்லா நகரங்களிலும் நடக்கக் கூடிய கதை தான். பொன்னகரத்தில் வரும் அம்மாளுவும் முருகேசனும் நகரத்துச் சேரிகளின் வகை மாதிரிக் கதாபாத்திரங்கள் (Typed Characters)மட்டுமல்ல; கதையின் களனான அந்த இடப்பின்னணியே தமிழ் நாட்டு நகரங்களின் ரயில் நிலைய வகை மாதிரி(Typed) யாகவே தோன்றுகின்றது.
ரயில்வேத் தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து. அதுதான் அங்கு ‘மெயின்’ ரஸ்தா .கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால் இதற்குக் கிளையாக உள்வளைவுகள் உண்டு. முயல்வளைகள் போல – இந்த வர்ணனை இன்றும் பெருநகரங்களின் ரயில் சந்திப்புகளுக்குப் பொருந்தும் வர்ணனைதான்.
“ பொன்னகரத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?” என்று தொடங்கி, “என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே ! இதுதான் ஐயா, பொன்னகரம்! ” என்று முடிகிறது. வினாக்குறியில் கதையைத் தொடங்கி ஆச்சரியக் குறியில் முடிக்கும் புதுமைப்பித்தனின் இந்தக் கதை மிகச்சிறிய கதை. மொத்தம் இரண்டே பக்கங்கள். இரண்டு பக்கங்களில் எழுதப் பட்ட பொன்னகரம் எழுப்பும் கேள்வியோ இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் கழிந்தாலும் உறுதியாக விடை சொல்லி விட முடியாத கேள்வி ஆகும்.
பாலினம் சார்ந்து ஆண் X பெண் எனப் பிரித்துப் பேதம் காட்டும் மனித குலம், பெண்ணை இரண்டாம் பாலாக ஆக்கிக் காட்ட அவளுக்கு வழங்கிய அற்புத தோன்றா அணிகலனான கற்பு என்பதை விவாதப் பொருளாக்கிய கதை அது. கற்புக் கடம்பூண்டு ஒழுகுதல் பத்தினிப் பெண்களின் ஒழுக்கம் தான். ஆனால் ஒரு பெண் பத்தினியாக இருக்க வேண்டும் என்றால் அவளது கணவன் உயிரோடு இருக்க வேண்டும் அல்லவா? உயிரோடு மட்டுமல்ல; உரத்தோடும் இருக்க வேண்டுமன்றோ? அந்தக் கேள்வியை எழுப்புவதற்காக ஒரு தம்பதியின் வாழ்க்கையின் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து நம்முன் நிறுத்துகிறார் புதுமைப்பித்தன். சேரியில் வாழும் அம்மாளு- முருகேசன் தம்பதியினரின் வாழ்க்கையில் ஒரே நாள் தான் நமக்குக் காட்டப்படுகிறது .
குஷி மூடில் இருந்த முருகேசனும் அவனது ஜட்கா வண்டிக்கான குதிரையும் சேர்ந்து தண்ணி போட்டதால் குதிரைக்குப் பலமான காயம்; முருகேசனுக்கு ஊமைக்காயம். காயம் பட்டுக் கிடக்கும் முருகேசனுக்குத் தேவை பால்கஞ்சி. அம்மாளிடமோ கையில் காசில்லை. இன்னும் இரண்டு நாள் போனால் அவள் வேலை பார்க்கும் இடத்திலிருந்து கூலி கிடைக்கலாம். ஆனால் காயம் பட்ட கணவனுக்குப் பால் கஞ்சி தருவதை இரண்டு நாள் தள்ளிப் போட முடியுமா?.
அம்மாளு தண்ணீர் எடுக்கப் போனாள். போகும் போது அவனைப் பார்த்தால். அவன் நீண்ட நாட்களாக அம்மாளு மீது ‘கண் ’ வைத்திருந்தவன். தண்ணீர் பிடித்தாள். திரும்பி வந்தாள். கும்மிருட்டு. இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம். புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்.
கணவனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தனது உடலை இன்னொருவனுக்குத் தந்த அம்மாளுவை ஒழுக்கம் சார்ந்த சமூக மனம் கெட்டுப் போனவள் என்று சொல்லக்கூடும். ஆனால் அதே சமூகம் தான் புருசனைத் தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்ற தமயந்தி என்னும் புராணக் கதாபாத்திரத்தையும், கோவலனின் மோக ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தன்னிடம் இருந்த சிலம்பையும் கழற்றித் தரத் தயாரான கண்ணகி என்னும் காப்பியப் பாத்திரத்தையும் பத்தினிகள் என்று பாராட்டுகின்றன.
அம்மாளுவும் முருகேசனும் வாழும் பொன்னகரம் என்பது ஒரு விதமான உலகம், அதன் தர்மங்களும் வேறு எனச் சொல்ல வந்த புதுமைப்பித்தன் எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும், எல்லாச் சமூகக் குழுக்களுக்கும் பொருத்தமான வாழ்க்கைக் கோட்பாடுகளும் கருத்தியல்களும் பின்பற்றுதல்களும் இருக்க முடியாது என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறார்.
ஆம் . ஒரு நவீன கதையைப் படிப்பது என்பது வெறும் பொழுது போக்கல்ல; வாழ்தலின் புரிதல்.

Huwebes, Hulyo 09 2009

நிகழ மறுத்த அற்புதம்
==================
சிறுகதை மூலம்: திலிப்குமார்
நாடகவடிவம்: அ.ராமசாமி

முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு ஹால்.
பின் இடது புறம் சமையலறையின் ஒரு பகுதி தெரிகிறது.
பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது. பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி, கணினி போன்றன தெரிகின்றன.

ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால்
மூவர் அமரக் கூடிய ஒரு சோபா
அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள்.
வேலைப்பாடுகள் கொண்ட டீபாய்.
நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது.
அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம்.
இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம்.
தொலைக்காட்சிப் பெட்டி ஒரு மரத்தாலான வேலைப்பாடுகள் நிரம்பிய
ஸ்டேண்டில் வைக்கப் பட்டிருக்கிறது.
சமையலறையிலிருந்து வந்த திருமதி ஜேம்ஸ் ஒரு முறை நின்று
திரு ஜேம்ஸைப் பார்க் கிறாள்.
அவர் தினசரித்தாளை அகலவிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.
வந்தவள் படுக்கையறைக்குள்போய்விட்டு உடனடியாகத்திரும்புகிறாள்.
படுக்கையறைச் சுவரில் இயேசுவின் படம் ஒன்று மாட்டப்பட்டுள்ளது.
அதன் அருகில் சில நிழற்படங்கள். அவர்கள் இருவரும் இருக்கும் படங்கள்.
வெவ்வேறு வயதில்.
தயாராக இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தவள் வாசலில் நின்றபடி
திருமதி: நான் போகிறேன்
திரு: [சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ்] என்ன அவ்வளவுதானா..? நிஜமாகவா..? என்னை விட்டுப் பிரியும்போது உனக்குச் சொல்ல வேறு ஒன்றுமே இல்லையா..? என்று கேட்டார்.
திருமதி: ஒன்றுமே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
திரு: எங்கே போவாய்..?
திருமதி: எங்கோ.. வெகுதூரம்.. யாருமற்ற தனிமைக்கு..
[ இடதுபுற ஒற்றைச் சோபாவுக்குப் பக்கத்தில் வந்து நின்றபடி]
இறக்கும் போதேனும் நான் மட்டும் தனியாக வெறுமையுடன் கொந்தளிப்பற்ற மனத்துடன் இறக்க விரும்புகிறேன்.
திரு: பைத்தியம் போல் உளறாதே. [சாய்வு நாற்காலியிலிருந்து எழும்பி இரண்டடி முன் நடந்து]
இறக்கும்போதுஎல்லாரும் அப்படித்தான் இறக்க வேண்டும். அவரவர்கள் மட்டுமே தனியாக. தனித்தனியாக . உலகமே திரண்டு வந்து நின்றாலும் மரணம் உன்னைத் தனிமையில் ஆழ்த்தித் தான் அணுகும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: உன் 42 ஆவது வயதில் இப்படியொரு முட்டாள் தனத்தைச் செய்ய விரும்புவாய் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
[ சோபாவைச் சுற்றி வந்து]
என் பேச்சைக் கேள். பேசாமல் இங்கேயே இருந்து விடு
திருமதி: இல்லை நான் போக வேண்டும்.
[எதிரிலுள்ள சோபாவை நோக்கி நகர்ந்து செல்கிறாள். கையில் உள்ள பெட்டி அவளை யறியாமல் அங்கு உள்ள டீபாயின் மேல் குறுக்குவாட்டில் நிற்கிறது. அதன் மீது ஒட்டப் பட்டுள்ள படத்தில் ஒரு பறவை கிளையில் உட்கார்ந்திருக்கிறது. தூரத்தில் நீருக்கு மேலே ஒரு பறவை பறந்து கொண்டிருக்கிறது]
திரு: அப்படியே தான் என்றாலும், நீ விரும்பும் தனிமைக்கு இங்கு என்ன குறைவு.? நீயும் நானும், எவ்வளவு ஆண்டுகளாக - இதே வீட்டில் தான் என்றாலும்- இரண்டு முதிர்ந்த பிராணிகளைப் போல் தனித்தனியாகத் தானே இருந்து வருகிறோம். நீ விரும்பினால் இன்று முதல் வேறு வேறு அறையில் படுத்துக் கொள்ளலாம்.
திருமதி: இல்லை, நான் நிச்சயித்து விட்டேன்.நான் போய்த்தான் தீர வேண்டும்
[ கடந்த இரண்டு மாதங்களாகவே திருமதி ஜேம்ஸுக்குள் அந்த எண்ணம் பதுங்கிப் பதுங்கி வளர்ந்திருந்தது. மெல்லமெல்ல அது ரத்தமும் சதையுமாய்த் திரண்டு ஒரு வினோத பூதத்தைப் போல் அவளைப் பற்றிக் கொண்டது. முதல் நாள் இரவு முற்றத்தில் அமர்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் ஜேம்ஸ் தீர்மானித்தாள். மறுநாள் சென்றுவிடுவதென்று. மேகங்களற்ற வானத்திற்கு அப்பாலிருந்து அவளை யாரோ மீண்டும் மீண்டும் அழைப்பது போல் தோன்றியது. திரும்பவும் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
திரு ஜேம்ஸ் தன் நரைத்த தலைமுடியை இரு கைகளாலும் வருடிக் கொண்டே கீழ் நோக்கிப் பார்த்தபடி யோசித்தார். நடந்து வந்து சோபாவில் செய்வதறியாமல் உட்கார்ந்தார்.
திருமதி ஜேம்ஸ் பேசாமல் நின்றிருந்தாள். சில கணங்களுக்குப் பின் அவள் கதவை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.
உடனே திரு ஜேம்ஸ், சிறிது உணர்ச்சி வசப்பட்டவராய்,விரைவாக ஒரு குழந்தையைப் போல் அவளை நோக்கி நகர்ந்தார். வலது புறச் சோபாவிற்கருகில் வந்து]
திரு: கொஞ்சம் பொறு. 25 ஆண்டுகளாக நீடித்திருந்த நம் வாழ்க்கையையும் பிணைப்பையும் பொருளற்றதாக்கி விடாதே
திருமதி: [ஒன்றும் சொல்லவில்லை அவளுக்குச் சொல்ல ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப் போனால், இனி அவளுக்குச் சொல்ல மட்டுமல்ல, பேச, நினைக்க, யோசிக்க, சிரிக்க,
துக்கப்பட எதற்குமே ஒன்றுமில்லை. அவள் முற்றாக உலர்ந்துவிட்டிருந்தாள். ஆனால் திரும்பி நின்று கேட்கத் தயாராக இருந்தாள்.]

திரு: யோசித்துப் பார். 25 ஆண்டுகள் நாம் ஒன்றாகவே பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆவலும் வேகமும் மிகுந்த அந்த முதல் இரவிலிருந்து, நாளங்கள் உலர்ந்து, உறைந்து போய்விட்ட இந்தச் சோகம் மிகுந்த மாலை நேரம்வரை. நீ என்னை விட்டு விலகிவிடலாம். ஆனால் நினைவுகளின் சுமையை என்ன செய்வாய்?
திருமதி: [ஒன்றும் பேசவில்லை. நினைவுகளைச் சுமக்க மனம் தொடங்கிய போது கை பெட்டியை நழுவ விட்டது.]
திரு: உன் அந்த நாளைய முகம் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. செம்மையும் பளபளப்பும் மிகுந்த கன்னங்களுடன் ஓர் அற்புத ஜ்வாலையைப் போல் நீ என்முன் நின்ற கோலம் எனக்கு என்றுமே மறக்காது. அந்த நேரத்தில் நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் தெரியுமா?
திருமதி: [ஒன்றும் பேசவில்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த நிழற்படத்தை உற்றுப் பார்த்தபடி நிற்கிறாள்]
திரு: என் உடலெங்கும் படர்ந்த உன் வெப்பமான மூச்சுக்காற்றின் அலாதியான போதை, ஒரு சிவந்த திரட்சியான சர்ப்பத்தைப் போல் நீ என்மீது படர்ந்திருந்தது- எதையும் மறக்கவில்லை.
திருமதி: [ஒன்றும் பேசவில்லை]
திரு: ஆனால் பார், காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. உணர்வுகளின் பிரவாகத்தில் எதுவும் பதிவாவதில்லை
திருமதி: [ஒன்றும் பேசவில்லை]
திரு: உனக்கு நினைவிருக்கிறதா... திருமணமான மூன்று மாதத்தில் நீ படுத்தபடுக்கையாகிவிட்டாய். உன் வயிற்றில் அந்தக் கொடூரமான கட்டி வளர்ந்திருந்தது. கோழையும் குருதியும் திரண்டு ஒரு அருவருப்பான பெரிய அழுகிய முட்டையைப்போல்
திருமதி: [ஒன்றும் பேசவில்லை. ]
திரு: அந்த நாட்களில் நான் எவ்வளவு துடித்துப் போனேன் தெரியுமா? உன் வயிற்றிலிருந்த கட்டி புற்றுக் கட்டி அல்ல என்று டாக்டர்கள் சொல்லும்வரை
திருமதி: [ஒன்றும் பேசவில்லை]
திரு: உனக்குத் தெரியுமோ என்னவோ... அறுவை சிகிச்சைக்கு முன்பான எத்தனை இரவுகளை நான் உறக்கமின்றிக் கழித்தேன் என்பது. நீ என்னருகில் ஒரு குழந்தையைப் போல் கவலையற்று அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய்
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. தாக்கத் தொடங்குகிறான் என்பதை உணர்ந்தவள் போல் அவனைக் கூர்மையாகப் பார்க்கிறாள். திருப்பித் தாக்கும் ஆவேசம் அதில் தெரிகிறது]
திரு: நான் உன்னையே வெறித்துக் கொண்டிருப்பேன்.உன் சீரான மூச்சுக் காற்றின் ஒலியைக் கேட்டபடி, பின் திடீர் திடீரென்று ஆவேசமும் வாஞ்சையும் கொண்டு உன் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிடுவேன். உன் உள்ளங்கையைப் பற்றி என் மார்பின் மீது பதித்துக் கொள்வேன். உறக்கம் சற்றும் கலையாது நீ அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. இதையெல்லாம் கேட்கத் தயாரில்லை என்பது போல் விடுவிடுவென்று சமையலறைக்குள் நுழைந்து ஜக்கிலிருந்து டம்ளருக்குத் தண்ணீரை மாற்றிக் குடித்தபடி வருகிறாள். டம்ளரை சோபாவின் முன்னுள்ள டீபாயில் வைத்து நிமிர்ந்த போது அவளைத் தொடர்ந்து வந்த ]
திரு: அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று வருடங்கள் நாம் உடலுறவு கொள்ள இயலவில்லை. நினைவிருக்கிறதா உனக்கு?
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: எத்தனை இரவுகள், கொடூரமான இரவுகள், என் இளமையின் ஆவேசத்தையும் வேட்கையையும் இரக்கமற்று அழித்துக் கொண்ட இரவுகள்!
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: அப்போது நீ மிதிபட்டு வதங்கிய கொடியைப் போல் உறங்கிக் கிடப்பாய். உன்னருகே நான் விரகத்திலும் அதிருப்தியிலும் உறைந்து ஒரு எஃகுத் துண்டைப் போல் கிடப்பேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. தாக்கப்பட்டவள் போல் சோபாவில் விழுகிறாள்]
திரு: நீ உடல் தேறும்முன் நான் முற்றாகத் தணிந்துவிட்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் கலவிச் சுகம் நமக்கு என்றுமே பூரணமாக வாய்த்ததில்லை. இளமையின் சக்தியை நுகர்ந்து, திளைத்துத் துவளும் இன்ப லஹரி என்றுமே கானலாகத்தான் இருந்தது. கலவியின் உச்ச சுகத்தை ஸ்பரிசிக்கும் முன் ஒவ்வொரு முறையும் அது கைநழுவியே போனது. இளமை மின்னிய உன் உடலின் செழுமை எனக்கு அங்குல அங்குலமாக இன்றும் நினைவிருக்கிறது. உன் தாபமூட்டும் பளிங்கு போன்ற ஸ்தனங்களையும், வெறியூட்டும் வாளிப்பான தொடைகளையும் நான் எப்படி நேசித்தேன் தெரியுமா?
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: அப்போது நானும் அழகாக இருந்தேன். என் புஜங்களையும் மார்பு ரோமங்களின் அடர்த்தியையும் கருமையையும் பார்த்துப் பார்த்து எவ்வளவு மமதை கொண்டிருந்தேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. திரும்பவும் கிளம்பத் தயாரானவள் போல் எழுகிறாள்]
திரு: நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.ஆனால் என்ன பயன்? நாம் வெறும் உடல்களாகத்தானே வாழ்ந்தோம் என்று நினைக்கிறாய். வாஸ்தவம் தான். நாம் வெறும் உடல்களாகத்தான் வாழ்ந்தோம். வயது வந்த இரண்டு வெற்று உடல்களாக. ஏழு ஆண்டுகளுக்குப் பின் தெரிந்தது. நான் மலடன் என்பது. என் ஜீவனற்ற விந்துக்களை எத்தனையோ முறை பெற்றும் கூட உன் கருப்பை அதல கிணற்றைப் போல் மௌனமாய் இருந்ததன் ரகசியம் எனக்குப் புரிந்தது.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. மௌனம் நிறைந்த மனதுடன் நடக்கத் தொடங்கு கிறாள்]
திரு: உண்மைதான். நான் மலடன் தான். நான் குடிகாரன் தான். உனக்குத் தெரியுமா, உலகில் மலடிகளைவிட மலடர்கள் குறைவு என்று . அந்தக் குறைவானர்வர்களில் நானும் ஒருவன் என்றால் எப்படி இருக்கும்?
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: ஆண் மலடுகள் ஒன்று தற்கொலை செய்து கொள்வார்கள். அல்லது சமூக சேவையில் ஈடுபடுவார்கள். எனக்குத் தற்கொலை செய்துகொள்ளத் துணிவில்லை. அதனால் குடிக்க ஆரம்பித்தேன். குடித்துக் கொண்டே சமூகசேவையில் ஈடுபட முடியாது என்பதால் கவிதைகள் எழுதினேன். கழிவிரக்கத்தில் தோய்ந்த உதவாக்கரைக் கவிதைகள். இப்போதுகூட எழுதுகிறேன். நேற்றுகூட ஒன்று எழுதினேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. அவர் உட்கார்ந்திருந்த சாய்வு நாற்காலியின் விளிம்பில் சாய்ந்து நிற்கிறாள்]
திரு: [வலது பக்க அறைக்குள் சென்று அந்தத் தாளை எடுத்து வந்து வாசிக்கிறார்]
வாழ்க்கையின் எல்லாப் பருவங்களும்
முடிந்து மறைந்துவிட்டன.
பூக்களில் மகரந்தம் வற்றிவிட்டது?
தளிர்விட்ட இறகுகள் சருகாகிவிட்டன.
சிறகசைப்பு ஓய்ந்துவிட்டது?
இதோ , அந்தியும் சாய்ந்துவிட்டது.
நாளங்கள் உலர
நரம்புகள் தளர்ந்து தேகம் சில்லிடுகிறது.
இரவும் மணமும் கவியும்போது எல்லாம்
குளிர்ந்துவிடும்
நிச்சயமாய்
அமைதி பனி போன்று படர்ந்து போர்த்திவிடும்
எல்லாவற்றையும்.....
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. நகர்ந்து வலது பக்கச் சோபாவில் கையை இறுகப் பற்றிய படி நிற்கிறாள். அவள் வைத்த டம்ளரை இறுகப் பற்றியபடி]
திரு: உண்மைதான். நான் நிறையத்தான் குடித்தேன். இரவு பகல் என்று பாராமல், வீடு வெளி என்று பாராமல்..
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: என் வேலையைக் கூட விட்டுவிட்டேன். தெருப் பையன்கள் என்னைக் கேலி செய்தார்கள். ரிக்ஷாக்காரர்கள் முதல் சாராயக்கடைக்காரர்கள் வரை எல்லோரிடமும் வசையும் உதையும் வாங்கினேன். வாஸ்தவம் தான். நான் மீள முடியாத குடிகாரனாகிவிட்டேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: எல்லாவற்றுக்கும் மேலாக உன்னை நான் வெறுத்தேன். உன்னைத் தவிர நான் யாரை வெறுத்திருக்க முடியும்? என் வெறுப்பைப் பொருட்படுத்துபவர்கள் வேறு யாரிருக்கிறார்கள் எனக்கு!
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [ அவளை மேலிருந்து பார்த்தபடி வந்து இடுப்பில் பார்வையை நிறுத்தி]
என் மலட்டுத் தன்மையைப் பரிகசித்தது உன் வெறும் வயிறு. உன்னை நான் மிகவும் வெறுத்தேன். போதையூட்டிய உன் தேகத்தைக் குதறிவிட விரும்பினேன். கட்டுக் குலையாத உன் அடிவயிற்றை உதைத்துவிட விரும்பினேன். சில சமயம் அப்படிச் செய்யவும் செய்தேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: எனக்குத் தெரியும் நீ மிக நல்லவள் என்பது.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [அவளைக் கவனிக்காதவர் போல நடந்தபடி]
மாதம் தோறும் ரேஷன் வாங்க நீயே சென்றாய். காய்கறி வாங்கவும் நீயே சென்றாய்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [மேலும் நடந்து தொலைக்காட்சிப் பெட்டி அருகில் வந்து]
அடகு வைக்க மார்வாடிக் கடைக்கு நீதான் போனாய். எல்லாம் நீதான். துவைத்துப் போட, உதைவாங்க, பட்டினி கிடக்க, எல்லாம் நீதான்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [ வேகமாகத் திரும்பி வந்து அவள் அருகில் நின்று]
இவ்வளவுக்கும் பிறகும் நான் அவ்வளவு மோசமான மனிதன் என்று எனக்குத் தோன்றவில்லை.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [ எதிர்ப்புறம் நடந்து பார்வையாளர்கள் அருகில் வந்து] பெண்களின் சுகதுக்கங்களை நான் நன்கறிவேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: அதுசரி, நான் உனக்கு இழைத்த அநீதிகளை நீ ஏன் சகித்துக் கொண்டாய்?
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: உண்மையில் நீ எவ்வளவு மென்மையானவள் என்பது எனக்குத் தெரியும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: நம் வீட்டு அசோக மரத்திலிருந்து அழகிய கோலம் போல மலர்கள் இறைந்து கிடப்பதைப் பார்க்க உனக்குப் புல்லரித்துவிடும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை.அவனது பேச்சைக் கேட்கத் தயாரானவன் போல பெட்டிக்கும் சோபாவுக்கும் இடையில் அமர்ந்து விடுகிறாள்]
திரு: மழை நாட்களில் நனைந்த காகம் எதிர்வீட்டு மொட்டை மாடியில் ஈரச் சிறகுகளைப் படபடவென்று ஓசையுடன் அடித்தபடி தன் சிறிய கழுத்தை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிச் சிலிர்த்துக் கொள்வது உனக்கு மாபெரும் அற்புதம்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: சமையலறையில் சற்றும் பயமின்றித் திரியும் அந்தச் சுண்டெலி சோற்றுப் பருக்கையை வாயில் திணித்துக் கொண்டே முழித்துமுழித்துப் பார்ப்பதை நீ எப்படி ரசிப்பாய் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: குளியலறைத் தடுப்புச்சுவர் மீது அசையாமல் கிடந்த அந்தச் சாம்பல் நிறக் கர்ப்பிணிப் பல்லியைக் கூடத்தான் நீ மிகவும் நேசித்தாய்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: நம் வீட்டுக் காம்பவுண்ட் சுவரருகே இருக்கும் தென்னை மரம் ஒவ்வொரு பருவத்திலும் காய்களை இரவோடிரவாகத் திருட்டுக் கொடுத்துவிட்டு நிற்கும். அந்த அசட்டுத் தென்னை மரத்திற்குக் கூட மழை நாட்களில் வந்துவிடும் மேனிச் செருக்கை நீதான் எனக்கு உணர்த்தினாய்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை.அவனது பேச்சு உண்டாக்கிய நினைவுக்குள் மிதந்து கொண்டிருக்கிறாள்]
திரு: உன்னிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: நீ காட்டித் தந்த சந்தோஷங்களை நான் மறுப்பதற்கில்லை என்றாலும் உன் உலகம் சிக்கலற்றது. அது முகிழ்ந்த மலர்களாலும் ஈரக் காக்கைகளாலும் சுண்டெலிகளாலும் கர்ப்பிணிப் பல்லிகளாலும் அசட்டுத் தென்னை மரங்களாலும் ஆனது.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: ஆனால் என் உலகம் அப்படியல்ல. அது சுண்டெலிகளுக்கும் கர்ப்பிணிப் பல்லிகளுக்கும் வெகு அப்பால் இருந்தது. வேதனையும் தள்ளாட்டமும் ஏமாற்றமும் நிறைந்தது.
[சொல்லும்போது ஏற்படும் பதட்டம் மேசையில் இருந்த ஆல்பத்தைத் தட்டி விட்டு விடுகிறான்.விரிந்து விழுகிறது]
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [ஆல்பத்தின் பக்கங்களைப் புரட்டியபடி]
மலைக்காற்று வீசும்போது உனக்கு அதன் குளிர்ச்சி தெரிகிறது. எனக்கு அதனால் சோகம்தான் ஏற்படுகிறது. காற்றுக்குள் காலமும் காலத்திற்குள் வெறுமையும் மறைந்து கிடக்கின்றன.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் குடிகாரன். கவிஞன். அதனால் உளறுகிறேன். எப்போதும் தரையில் கால் பதியாமல் மிதக்கிறேன் என்றுதானே.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: உண்மைதான். நான் மிதப்பில்தான் உளறுகிறேன் என்றே வைத்துக் கொள். ஆனால் தரையோடு பிணைந்த வாழ்க்கையின் சிறுமை, மிதக்கும்போதுதான் கண்களுக்குப் புலப்படும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: இத்தனையும் நீ என்னை விட்டுப் பிரிந்துவிடுவாய் என்பதற்காகச் சொல்லவில்லை.[ அவளைத் தூக்கி நிறுத்த நினைத்துக் கைகளை நீட்டுகிறார். அவள் அந்தக் கரத்தைப் பற்றிக் கொள்ளாமல் எதிர்ப்புறம் பார்த்து எழுகிறாள். பெட்டிக்கருகில் சென்று விட்டாள்]
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை.]
திரு: சரிதான் . நீ என்னை விட்டுப் பிரிவது ஒரு வகையில் ரொம்பவும் சரிதான். ஒருவேளை நான் நீயாக இருந்து நீ நானாக இருந்திருந்தால் நிச்சயம் வெகு நாட்களுக்கு முன்பே உன்னை விட்டு நான் பிரிந்திருப்பேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: வாழ்க்கையில் அநேக சந்தர்ப்பங்களில் நம்மால் சரியானதை யோசிக்க மட்டுமே முடிகிறது. செய்ய முடிவதில்லை. வாழ்க்கை எத்தனை கொடூரமானது என்பதை நீ அறியமாட்டாய்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: எப்படியிருந்தாலும் உனக்கு நான் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்பே கிடையாது. நான் மலடன் என்றால் அதற்கு நீ என்ன செய்வாய்? என் தவறுகளை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தவறுகளை ஒப்புக் கொள்வதால் மட்டும் என்ன பயன்?
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. பெட்டியை எடுத்துவிட்டாள்]
திரு: ஒருவேளை, ஒருவேளை எனக்கு ஒரு குழந்தை, ஒரேயொரு குழந்தை மட்டும் பிறந்திருந்தாலும் கூட நான் முற்றிலும் வேறு விதமாக வாழ்ந்திருப்பேனா என்று நீ யோசிக்கக் கூடும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. ஓரடி கதவை நோக்கி நடந்தவளைத் திரும்பவும் திருப்பிவிடும் பாவனையில்]
திரு: நானும் அப்படி யோசித்துப் பார்த்ததுண்டு. ஆனால் நான் வேறு மாதிரி இருந்திருப்பேனா என்பதை நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. இதுவரை வாழ்ந்ததை விடச் சற்றுக் கண்ணியமானவனாக வாழ்ந்திருக்கக் கூடும். என்றாலும் அப்போதும் நான் இன்று போலவே ஒரு பரிதவித்த ஆத்மாவாகவே இருந்திருப்பேன். அப்போதும், இப்போது போலவே காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமைதான் என் கண்களில் பட்டிருக்கும்.
[ பேசியபடி இடதுபுற மேடைக்கு வந்து விட்டான். கையில் ஆல்பத்தைத் தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் உள்ள இடத்தில் வைக்கிறார்]
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. பெட்டியுடன் அவரைப் பின் தொடர்ந்து வந்தவள் இப்பொழுது நடு மேடையில் நிற்கிறாள்.]
திரு: உனக்குத் தெரியுமா? வாழ்க்கையின் வெறுமையை அனுபவங்களால் நிரப்பிச் சரிக்கட்டிவிட முடியாது. அன்பாலுங்கூட அதை நிரப்பிவிட முடியாது என்றே தோன்றுகிறது.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: வயோதிகத்தில் அனுபவங்களுக்கும் அன்புக்கும் வாய்ப்புகளே இல்லை. வயோதிகம் எல்லாவற்றையும் உலர்த்திவிடும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: கால்களின் ஆடுசதை சூம்பிவிடும்போது ஓட்டம் நின்றுவிடும். அப்போது காலம் என்ற வேசை உன்னைச் சூறையாட உன்முன் அம்மணமாய் வந்து நின்றுவிடுவாள்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [ அவளைச் சுற்றி வந்தபடியே]
வயோதிகம் எவ்வளவு இரக்கமற்றது தெரியுமா? அது உனக்குப் புலப்பட இன்னும் நாட்கள் பிடிக்கும். நீ என்னைவிடப் பதினைந்து வயது இளையவள். உன் கால்களில் இன்னும் பலம் இருக்கிறது. நடப்பதற்கும் கடப்பதற்கும் உனக்குப் புரியாது.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: என் பேச்சு நாடகத்தன்மை மிகுந்ததாக இருக்கிறது என்று உனக்குத் தோன்றுகிறதா? வாழ்க்கை எப்போதும் அப்படித்தான். ஆனால் நாம் தான் அது அப்படியில்லை என்று எதிர்நாடகம் ஆடுகிறோம்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: வயோதிகம் எப்படிப் படர்கிறது தெரியுமா? வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்றுச் சந்தடியின்றி திடீரென்று இழைந்துவிடுவதைப் போல் வெகு ரகசியமாய் உனக்குள் பாய்ந்துவிடும் அது. உன் நாளங்களை வற்றச் செய்துவிடும். உன் அழகிய கரிய கேசத்தை உதிர்த்து, உன் காதோரங்களில் நரைபடியச் செய்துவிடும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: திடீரென்று, ரொம்பவும் திடீரென்று உன்னை யாரோ ஒரு விண்வெளிக் கப்பலில் ஏற்றி வெகு தூரம் அழைத்துச் சென்று யாருமற்ற ஒரு தனிக் கோளத்தில் இறக்கி விட்டது போலிருக்கும். முதுமை என்னும் அந்தக் கோளத்தில் தனியாக நீ மட்டும் , நீ மட்டுமே இருக்க நேர்ந்துவிடும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: இளமையும் வேகமும் மிகுந்த உலகம் உன் கண்முன் இயங்கித் துடித்தாலும் அதை நீ நெருங்க முடியாது. உனக்கும் அதற்கும் இடையில் ஒரு பெரிய கண்ணாடித் திரை விழுந்துவிட்டிருக்கும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: நான் சொல்வதை, நீ என்னை விட்டுப் பிரிந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் நீ நிச்சயம் உணர்வாய்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: என் பேச்சைக் கேள்! நீ என்னை விட்டுப் பிரிவது ஒரு வகையில் சரிதான் என்றாலும்கூட நீ என்னை விட்டுப் பிரியாதே. தயவுசெய்து வயோதிகத்தின் வெறுமையையும் தனிமையையும் ஏற்றுக் கொள்ளாதே. அது மிகவும் பயங்கரமானது. அதைவிட உன்னை நீ மாய்த்துக் கொள்; உனக்காக நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை.அவரது குரூரத்தைப் புரிந்து கொண்டவளாய்க் கோபத்துடன் கிளம்பத் தயாரானவளிடம்]
திரு: வயோதிகத்தின் தனிமை மனிதனிடம் ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் வினோதமானவை. மாலையில் சூரியன் அஸ்தமித்து இருள் சூழத் துவங்கும்போது எல்லாமே மாறிவிடும் நீ கற்பித்துக் கொண்டிருக்கிற தனிமையின் வசீகரம் திடீரென்று மறைந்துவிடும். மேகங்கள் குவிந்து அவற்றில் மஞ்சளும் செம்மையும் படர, அக்குறுகிய நேரம் ஆழ்ந்த கசப்புணர்வை விளைவித்துவிடும். அப்போது மனிதத் துணைக்காகப் பரபரப்புடன் யாசித்து நிற்கும் உன் மனம்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: நீ நினைப்பது போல் இயற்கை அவ்வளவு ரம்மியமானதல்ல. இதோ பார்! வெளியே பனிக்காலம் முடிந்து வசந்தம் வரத்தொடங்கிவிட்டது. எங்கும் பசுமை படர்ந்து சிரிக்கிறது. ஆனால் என்ன? அது உன்னை என்ன செய்யும்? ஒன்றுமே செய்யாது. வசந்தம் வயதானவர்களை ஒன்றுமே செய்யாது. வாழ்க்கையின் வெறுமைக்கு முன் இயற்கையின் பாத்திரம் ஒன்றுமில்லை.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: ஏன் கர்த்தருக்குக் கூட வெறுமையில் ஏதும் பாத்திரம் இல்லை. ஒருவேளை வழங்கியதைத் தவிர.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: நான் வாழ்க்கையைக் கண்டு பயப்படுகிறவன்.
அதன் வெறுமைக்கு முன் எப்போதும் கையைப் பிசைந்து கொண்டு நிற்பவன்.
உனக்கு நினைவிருக்கிறதா?
நீ ஒவ்வொரு ஞாயிறன்றும் ஸ்தோத்தரிக்கும் அந்த சங்கீத வரிகள்!
அவற்றை நான் இப்போது அடிக்கடி உச்சரிக்கிறேன்.
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்.
என் விண்ணப்பத்தின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல;
பெரிய காரியங்களிலும் எனக்கு மிஞ்சிய காரியங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.
தாயின் பால் மறந்த குழந்தையைப் போல்
என் ஆத்மாவை அமரப்பண்ணினேன்..
என் ஆத்மா பால் மறந்த குழந்தையைப் போல் இருக்கிறது.
தேவனே, மௌனமாய் இராதேயும், பேசாமல் இராதேயும், தேவனே சும்மா இராதேயும்.
வாழ்வின் வெறுமை ஒருவகையில் பால் மறந்த
குழந்தையின் உணர்ந்தும் உணராததுமான சோகத்தைப் போன்றதுதான்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: சொல்வதைக் கேள். பேசாமல் இங்கேயே இருந்துவிடு. நம் பிரிவு நம்மிருவருக்கும் மேலும் அதிகமான துக்கத்தைத் தான் தரும். நாற்பத்திரண்டாவது வயதில் ஒருவிடலைச் சிறுமியைப் போல் நடந்து கொள்ளாதே.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும் அல்லது மறக்கச் செய்துவிடும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [ஜன்னல்களைத் திறந்து வைத்து]
பார். குளிர்ந்த மலைக்காற்று கூர்மையாக வீச ஆரம்பித்துவிட்டது.
வெளியே முற்றாக இரவு சில்லிட்டுப் பரவி விட்டது.
நிலவும் நட்சத்திரங்களும் அற்ற பனிக்காலத்து இரவு
எல்லையற்ற ரகசியம்போல் சூழ்ந்து விட்டது.
அங்கு ஒன்றுமில்லை.
இருளைத் தவிர. மௌனமும் வெறுமையுமே படிந்திருக்கிறது எங்கும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. காற்று உண்டாக்கிய உணர்வில் ஈடுபட்டவளாய்த் திரும்பவும் பெட்டியை மடியில் வைத்தவளாய்ச் சோபாவில் அமர்கிறாள்]
திரு: [பொருட்கள் ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்தபடி]இந்தப் புராதன வீட்டின் நிசப்தம் என்னை அச்சுறுத்திக் கொன்றுவிடும். தயவுசெய்து என்னை விட்டுப் போகாதே, என் தளர்ந்த முகத்தைப் பார். என் நடுங்கும் மெலிந்த கைகளைப் பார்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [ அவளுக்கு நேர் எதிரில் அமர்ந்து விட்டார்]
முதுமையையும் வெறுமையையும்
யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாது.
என்றாலும் ஒருவருக்கொருவர் துணை என்ற
ஆசுவாசம் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
இரண்டு குடிகாரர்களைப் போல்,
தனித்தனிக் கோப்பைகளில் நமக்கான விஷத்தைக் குடிப்போம்.
என் விஷம் என்னைக் கொல்லும் வரை
அல்லது
உன் விஷம் உன்னைக் கொல்லும் வரையேனும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: [திடீரென்று கைகளால் முகத்தை மூடியபடி விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தார்]
திருமதி:[வெகு நேரமாகத் தன் கணவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த திருமதி ஜேம்ஸ் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு மெல்ல அவரிடம் சென்று, அவரது தோள்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.]
திரு: [தன் மனைவியின் கைகள் தன்மீது பட்டவுடன் திரு ஜேம்ஸ் மேலும் சத்தமிட்டு அழுதபடி அவளை இறுகத் தழுவிக் கொண்டார்.]
திருமதி [ஒன்றும் சொல்லவில்லை]

Miyerkules, Hulyo 08 2009

சுகமான சுமைகள்
-----------------------------------------------------------------------------------------
படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோ என்று போவான்
-சி.சுப்பிரமணிய பாரதி.

முன்னுரையாக சில கேள்விகள்

இந்திய/ தமிழகக் கல்விமுறை மேற்கத்திய மயமாகி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. மேற்கத்தியமாகி விட்டது என்பதற்காகப் பெரிதாக வருத்தப்பட வேண்டிய தில்லை. மேற்கத்தியக் கல்விமுறை வெறும் கணக்குப்போடுகிறவர்களையும் கங்காணி களையும் மட்டும்தான் உருவாக்கியது என்று சொல்லப்படும் வாதங்கள் எல்லாம் உள்நோக்கங்கள் கொண்டன.மேற்கத்தியக் கல்விதான் எல்லோரும் கற்கலாம் எனச் சொன்னது; ஒருசாதிக்குள்ளேயே ஆசானையும் சீடனையும் வைத்திருந்த குருகுலக் கல்விமுறையை ஒழித்தது.ஒவ்வொரு மனிதனும் மதிக்கத்தக்கவன் என்ற சுயமரியாதை யுணர்வு உண்டாகக் காரணமாக இருந்தது. எதனையும் பகுத்து ஆராய்ந்து கேள்விகள் எழுப்பும் அறிதல் முறையை நமக்கு அளித்ததும் அந்த மேற்கத்தியக் கல்விமுறைதான். இந்திய சுதந்திரத்திற்குமுன்பே மேற்கத்தியக் கல்விமுறை இவற்றைச் சாத்தியமாக்கியிருந்தது.ஆனால் சுதந்திர இந்தியாவில் நமக்குத் தேவையென வரித்துக்கொண்ட சில பாடங்களின் நோக்கம் இந்திய மனிதனின்/ சமூகத்தின் தேவை கருதியது தானா..? சமூகவியலின் பகுதிகளான மொழியியில், மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் போன்றன இந்திய சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் முறையியலோடு உள்வாங்கப்பட்டிருக்கின்றவா...? அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முந்திய இந்திய வாழ்க்கைமுறைக்குத்திரும்பிப் போகும் நோக்கங் களோடு வந்து சேர்ந்திருக்கின்றவா...? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட வேண்டி யுள்ளன. கேள்விகள் கேட்கவேண்டியுள்ளன.
ஒரு நிழல் படத்தை வைத்துச் சில குறிப்புக்கள்
1999-ம் ஆண்டில் எங்கள் பல்கலைக்கழகத் தொடர்பியல் துறையில் படித்துக் கொண்டிருந்தாள் ஒரு மாணவி. அவள் எடுத்த ஒரு நிழல்படம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை நிழற்படத்துறை சார்ந்த உலகவரைபடத்திற்குள் இடம் பிடிக்கச் செய்தது. யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருந்த ஒரு போட்டியில் ஆகச் சிறந்த படமாக அவள் எடுத்த படம் தேர்வு பெற்று பெருந்தொகை அவளுக்குக் கிடைக்கக் காரணமாயிற்று.(அந்தப் படம் யுனெஸ்கோ சார்பு வெளியீடுகளிலும், சில தேசிய ஆங்கில இதழ்களிலும், நிழல் படக்கலை சார்ந்த சர்வதேச இதழ்களிலும் இடம் பெற்றது.) அந்தப் படத்தில் ஒரு சிறுமியும் ஒருசிறுவனும் அழுக்கடைந்த சட்டை களுடன் கையில் வைத்திருக்கும் சிலேட்டில் எழுதிக் கொண்டிருப்பார்கள். பக்கத்தில் சில புத்தகங்கள், கொஞ்சம் தள்ளி ஓர் ஆட்டுக்குட்டி மதிலின் நிழலில் படுத்திருக்கும். இந்தப் படம் எடுக்கப்பட்ட கிராமம் திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டுக்கருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்.ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் நிழல் படத்தில் இருந்த அந்தச் சிறுமியைச் சந்திக்கும் வாய்ப்பு இன்னொரு மாணவருக்குக் கிடைத்தது. கண்ணன் என்னும் பெயருடைய அவர் அதே தொடர்பியல் துறையில் இந்த ஆண்டு -2004 இல்- பயிலும் மாணவர். அவருக்குக் கிடைத்த இந்த வாய்ப்புத் தற்செயலான வாய்ப்புத்தான். திட்டமிட்டுக்கொண்டு போய்ப் பார்த்தாக வேண்டும் என்றெல்லாம் போனவர் இல்லை.
அவருடைய பயணத்தின் பின்னால் ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது. உண்மையான பாரததேசத்தின் நாகரிகமும் பண்பாடும் கிராமங்களில் படிந்து கிடக்கின்றன; அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் பதிவு செய்து விடவேண்டும் என்கிற நம்பிக்கைதான் அது. அந்தப் பயணத்தின் முடிவில் அவருடைய நம்பிக்கை ஈடேறியிருக்கலாம்; அவரும் இந்தியப் பண்பாட்டின் அல்லது தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களைப் பதிவு செய்து கொண்டுவந்து நகரவாசிகளுக்குக் காட்டலாம்;பரிசுகள் வாங்கலாம். அல்லது அவளுக்குக் கிடைத்தது போல அச்சு ஊடகத்திலும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையிலும் பணிகள் தேடி வந்தது போல தேடிவரலாம். அப்புறம் அவர் அந்தக் கிராமத்தையும் அதன் மனிதர்களையும் அவர்களின் வாசனையையும் -பண்பாட்டின் வாசனையை-மறந்து போகலாம் ஆனால் முதலில் படம் எடுத்துவிட்டு வந்த அந்தப்பெண்ணுக்காக இவர் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் நேர்ந்தது என்பதை மறுத்து விடமுடியாது.
"இப்பிடித்தே ஒரு அக்கா வந்து படம் புடிச்சிட்டுப் போச்சு; பரிசெல்லாம் வாங்குச்சாம் ; உடனிக்கெ ஒருக்காவந்துச்சி; அப்பொறம் எங்கிருக்கின்னு தெரியல; மவராசி நல்லா இருக்கணும்."


இந்தச்சொற்கள் கேள்விகள் இல்லை. கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியவர் கண்ணனும் இல்லை. அந்தச் சொற்களுக்குப் பின்னால் இருப்பது வேறொன்று. அதுதான் கிராமத்து அப்பாவிகளின் வாழ்க்கை.
ஏழு வயசுச் சிறுமியாகத் தன்னுடைய குடிசையின் நிழலில் ஆட்டுக் குட்டியோடு சேர்ந்து பாடம் படித்த அந்தப் பெண்ணுக்கு இப்பொழுது வயது பதினாலு. உடம்பு நோஞ்சானாக இருந்தாலும் குமரியாகி விட்டாள். அவளுடன் சேர்ந்து பாடம் படித்த ஆட்டுக்குட்டி மட்டும் இப்பொழுது அவளுடன் இல்லை என்று நினைத்து விடவேண்டாம்; அவளது கைகளில் இருந்த சிலேட்டும் புத்தகங்களும் காணாமல் போய் சில ஆண்டுகள்கிவிட்டன. அவற்றை அவள் கைவிட நேர்ந்த அந்தவருடத்தில் யுனெஸ்கோ எடுத்த "இடையில் படிப்பை நிறுத்தியோர் (drop outs) எண்ணிக்கைப் பட்டியலில் " அவளும் ஒருத்தியாகக் கணக்கிடப் பட்டிருக்கக்கூடும். அந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு, 'மூன்றாம் உலகநாடுகளில் கல்வி' என்ற தலைப்பில் ஒரு கல்வியியல் துறை அறிஞர் சர்வதேசக் கருத்தரங்கில் கட்டுரையொன்றை வாசித்திருக்கக் கூடும். அதே தகவல் 'வளரும் நாடுகளில் பெண் கல்வி 'என்ற ஆய்வேட்டிலோ, 'தமிழகக் கிராமங்களில் மகளிரின் குடும்பப் பொறுப்புகள்' என்ற தலைப்பிலான ஆய்வுத் திட்டத்திலோ கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட முதன்மை ஆதாரமாகக் காட்டப் பட்டிருக்கலாம். இந்த முதன்மை ஆதாரம் பின் வரும் ஆய்வுகளுக்குத் துணைமை ஆதாரமாக ஆகவும் கூடும். ஆம், அவளின் முகமும் வாழ்க்கையும் நிழல்படத்தில் பதிவு செய்யப்பட்ட கணத்திலிருந்து -மின்னணுச் சாதனங்களுக்குள் அடக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து - கலைப் பொருளாகவும் ஆதாரங்களாகவும் ஆகிக் கொண்டுவிட்டன; புகைப்படக்கலை சார்ந்த கலைஞனுக்கு கலைப்பொருளாக இருக்கும் அதே படம் சமூக வியலாளனுக்கும் நாட்டார் வழக்காற்றியலாளனுக்கும் தரவுகள். ஆனால் அந்தப் படத்தில் இருந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் தங்கள் முகங்களைத் தாங்களே பார்த்துக்கொண்ட சந்தோசமான தருணங்கள்.அவ்வளவுதான்.
தகவல்கள்-நுகர்பொருட்கள்-பணமதிப்பு.
மனிதவாழ்க்கையும்,பண்பாடும் அதன் கூறுகளும் களஆய்வுச்சேகரங்களாக ஆகின்றபொழுது தகவல்களாக ஆக்கப்படுகின்றன என்பதைச் சமுதாய வியலின் பகுதிகளான மொழியியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர்களில் பலரும் மறுத்துவிட மாட்டார்கள். அதுவும் இன்று மின்னணுத் தொழில் நுட்பக் கருவிகளின் வழியே சேகரிக்கப்படும் பொழுது அவை நம்பகமான தகவல்கள். இந்தத் தகவல்கள், இன்றைய தகவல் வலைப் பின்னலில் மிகச் சுலபமாக இடம்பெயரத்தக்கன. இடப்பெயர்ச்சி என்பதை வெறும் ஊர் விட்டு ஊர் பெயர்வதாகக் கருதிவிட வேண்டிய தில்லை. தேசம்விட்டுத்தேசமும் கண்டம் விட்டுக் கண்டமும் கடந்து போகும் வாய்ப்புக்கள் கணம் தோறும் உள்ளன.தொடர்ந்து இடம்பெயரும் இந்தத் தகவல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஆக்கப்பட்டுக் கச்சாப் பொருளின் கூறுகளாக ஆகிவிடுகின்றன என்று சொன்னால், கல்வித்துறைசார் ஆய்வாளர்கள் பலரும் ஒத்துக்கொள்ளத்தயக்கம் காட்டக்கூடும். ஆனால் இவர்கள் தயங்குகிறார்கள் என்பதற்காக தகவல்கள் கச்சாப்பொருட்களாக ஆக்கப்படுவதோ அதன் தொடர்ச்சியாக பண்டமாக மாற்றப்படுவதோ நிறுத்தப் படுவதில்லை. தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆய்வாளர் களில் பலரும் நேரடியாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒலி, ஒளிநாடாக்களிலும் கச்சாப்பொருள்களாகவே விற்றுக்கொண்டு இருப்பது கண்கூடு. 'மன்மத ராசா.. மன்மதராசா...' என்பதாகவோ,' சின்ன வீடா வரட்டுமா..? பெரியவீடா வரட்டுமா..?' என்று கேட்பதாக விற்பது வேறொரு வகை வியாபாரம்.
நாட்டார் தெய்வங்களின் ஆக்ரோசமும் கோபமும்தான் தமிழ்நாட்டுக் கிராமமக்களின் உடைகளின் வண்ணங்களாக உறுதிசெய்யப்படுகின்றன என்பதைக் கூட்டல் வாய்ப்பாட்டில் 'இரண்டும் இரண்டும் நாலு
என விடைகாட்டுவதுபோல் காட்டிவிடமுடியாது. பெருந்தொழில் நிறுவனங் களில் செயல்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவுகளின் விஞ்ஞானிகள் இத்தகைய வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள் என்பது தேசபக்தி நிரம்பிய இந்தியனுக்குச்சொல்லப்பட்ட செய்திகள் அல்ல. ஆனால் தற்போதைய உலகின் பொருளாதார உறவுகள், அதற்குள் உள்ளிழுக்கப்படும் பண்பாட்டுக் கூறுகள், பண்பாட்டு அமைப்புகளைக் கையகப் படுத்தியிருக்கிற ஊடகவலைப்பின்னல்களின் சாத்தியங்கள், அதன் வழிக் கட்டமைக்கப்படும் தனிமனிதத் தன்னிலையும் கூட்டுத்தன்னிலையும் செயல்படும்விதம் என அடுக்கடுக்காக யோசித்தால் இந்த உறவுகள், தகவல்கள்>> நுகர்பண்டம்>> பணமதிப்பு என்கின்ற உறவு புரியாமல் போகாது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளுக்கான ஆதாரங்களைச் சேகரித்தல் என்ற பெயரில் அவற்றைக் குறுந்தகடுகளில் பதிவு செய்து பாதுகாத்தல் என்பது பன்னாட்டு மூலதனக் குழுமங்களின் வியாபாரத்தயாரிப்புகளுக்கும் அவர்களின் முகவர்களான தேசிய முதலாளிகளின் விளம்பர உத்திகளுக்கும் தொடர்ந்து பயன்படுவது என்பது தான்.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் :இதுவரை நடந்தவைகளின் பின்னணிகள்.
இலக்கியத் துறைகளின் ஒரு பகுதியாகவும் சமுதாயவியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாகவும் கடந்த கால் நூற்றாண்டுக்கால ஆய்வுலகில் நாட்டார் வழக்காறுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு ஆய்வு செய்யப் பட்டுள்ளன. நாட்டார் இலக்கியங்கள் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவற்றைத் தொகுக்கும்போதும் ஆய்வுக்குட்படுத்த முயன்ற போதும் சொல்லப்பட்ட/ நம்பப்படும் காரணங்களைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். எழுத்துமரபு நகர்ப்புற, உயர்,உயர் நடுத்தர மக்களின் விருப்பங்களையும் வாழ்க்கையையும் அறிவையும் மட்டுமே காட்டுவனவாக உள்ளன; கிராமப் புற அப்பாவிகளின் ஆசைகளையும் வாழ்க்கை யையும் அறிவாற்றலையும் காட்டுவனவாக இல்லை. அவர்களின் உணர்வுகளும் கோபங்களும் அறியப்பட வேண்டும்; அவர்களின் வாழ்க்கை மாற்றப்பட வேண்டும் எனவாதிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டன. காற்றில் கரைந்து கொண்டிருந்த ஏட்டில் எழுதா இலக்கியங்கள் அச்சுக்கு வந்ததால் கிராமப்புற அப்பாவிகளின் இருப்பும் வாழ்க்கையும் திசைமாறி விடவில்லை. கிராமப்புறத்தை பிரதிநிதித்துவப் படுத்தச் சில அறிவாளிகள் உருவானார்கள் என்பதைத் தவிர. சில பதிப்பகங்களின் வணிகலாபத்திற்கும் அவை காரணமாக இருந்தன என்பது கூடுதல் பலன். நாட்டார் இலக்கியங் களின் உரிமையாளர்களுக்குக் கிடைத்தன என்ன? என்று பார்த்தால் எதுவுமில்லை.
அறுபதுகளில் தொடங்கி எண்பதுகள் வரை தொடர்ந்த நாட்டார் ஆய்வுகளின் கதைக்குப் பின்னிருந்த அடியோட்டம் இதுவென்றால் எண்பதுகளின் கதை வேறானது. வாய்மொழி இலக்கியங்களை அடுத்து நாட்டார் கலைகளை நோக்கி ஆய்வாளர்களின் கவனம் திசை திருப்பப்பட்டது. ஆட்டங்கள், கூத்துக்கள், நாடகங்கள், கச்சேரிகள் என நிகழ்த்துக்கலைவடிவங்கள் கவனம் பெற்றன. செவ்வியல் கலைளுக்கெதிரான யுத்தமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அவை தேடிச்சேகரிக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாட்டார் கலைகளின் எடுத்துரைப்பு முறை (narrative method ), உடை, ஒப்பனை, பயன் படுத்தப்படும் பொருட்கள், அடவுகள்,அளவுகள்,அவற்றிற்கான இசைப் பின்னணிகள், அவற்றை எழுப்பும் இசைக்கருவிகள் என நாட்டார் அழகியல் வெளிப்பாடுகள் முன்னிறுத்தப்பட்டன. முன்னிறுத்தலின்போது , செவ்வியல் வடிவங்களை விடவும் சிறப்புற்று விளங்கும் அம்சங்கள் என ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியதை மறந்து விடக்கூடாது. அப்படி ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டதன் பலன் என்ன ?நாட்டார் நிகழ்த்துக்கலைகளுக்கு மேடைகள் கிடைத்திருக்கின்றன; ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருக் கின்றன.திரைப்படங்களின் கச்சாப் பொருளாகவும் ஆகியிருக் கின்றன .தேசிய அரங்கக்கலையை (National theatre ) உருவாக்குவதில் நாட்டார் கலைக்களுக்கும் பங்கு தர வேண்டும் என்பது கூட ஒத்துக்கொள்ளப்பட்ட சங்கதியாக ஆகி யிருக்கிறது. இந்தப் பின்னணியில் - அப்படி ஆனதால் பயன் பெற்றொர்-அதிகப் பயன்பெற்றோர் யாரெனக் கணக்கிட்டால் நாட்டார் கலைகளின் உரிமை யாளர்கள்-கலைஞர்கள் அடைந்த பலன்களைவிட அதனை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள் அடைந்த பலன்கள் தான் அதிகம். தெருக்கூத்தை ஆய்வு செய்தவர் பல்கலைக்கழகப் பேராசிரியானதால் தெருக்கூத்துக் கலைஞர் களுக்கு ஆனதென்ன ? நாட்டார் அரங்கவடிவங்களான தேவராட்டம் , கணியான் ஆட்டம், கும்மியாட்டம், பறைமேளம் என எல்லாம் ஆய்வுக் குரியனவாக ஆகி-கருத்தரங்க விவாதப் பொருள்களாக ஆகிச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்தக்கலைகளின் இருப்பும் நிலையும் மாற வில்லை; இன்னுஞ்சொல்வதானால் முன்னர் இருந்ததைவிடக் கூடுத லான அழிவை நோக்கியே சென்றுள்ளன.
இந்தக் கூற்றுக்களைத் தனிநபர்களின் மீதான விமர்சனமாகக் கொள்ளத் தேவையில்லை. விற்கத்தக்க பண்டமாக மாறும் எதுவும் உற்பத்தி செய்தவனி டமிருந்து அந்நியமாகிவிடும் சாத்தியங்கள் கொண்டது என்பதையும் அதன் மூலம் முதலீடு செய்தவனும் இடையிலிருக்கும் தரகர்களும் அதிகப் பலன் அடைவார்கள் என்பதையும் விளங்கிக் கொண்டாலே போதுமானது; அப்புறம் இதற்கு உடந்தையாக இருப்பதா ? எதிர் நிலைப்பாடு எடுப்பதா? என்பதை அவரவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

வாய்மொழி இலக்கியங்கள், நாட்டார்இசை, நாட்டார் நிகழ்த்துக்கலைகள் என்பதான ஆய்வுகள் ஏற்படுத்திய விளைவுகளைவிட மோசமான ஆபத்தான விளைவுகளைச் சடங்குகள் குறித்த ஆய்வுகள் ஏற்ப்படுத்தியுள்ளன. குலச் சடங்குகள், வாழ்க்கைவட்டச்சடங்குகள், வழிபாட்டுச்சடங்குகள், என எல்லாம் தொகுக்கப்பட்டு ஆவணமாகியுள்ளன.இந்த ஆவணங்கள் தொகுக்கப்பட்டதன் மேல்விளைவாக இந்திய/தமிழகச் சமூகம் மதச்சார்பற்றச் சமூகமாக மாறியிருக்கிறதா? அல்லது மதநம்பிக்கைகள் இறுக்கமும் பிடிப்பும் பெற்ற சமூகமாக மாறியிருக்கிறதா? என்று யோசித்தால் இரண்டாவதே நடந்திருக் கிறது என உறுதியாகச் சொல்லலாம். சாதிஒழிப்புப் பற்றிக்கூட வேண்டாம்; சாதிகளிடையே முரண்கள் குறைந்து இணக்கமும் அங்கீகாரமும் தனிமனிதனை மனிதனாக மதிப்பதும் என்பதையாவது ஏற்படுத்தியிருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். எல்லாவற்றையும் அதிகமாக்கி யிருக்கிறது என்பது மேலும் உணர வேண்டிய ஒன்று. இன்று இடைநிலைச் சாதிகள் ஒவ்வொன்றும் தங்கள் சாதிப்பெருமைகளைப்பட்டியல் இடுவதற்கும் வைதீகச்சமய நம்பிக்கைகளுடன் உறவுகொண்டாடுவதற்கும் சடங்குகளைக் கடைப்பிடிப்பவர்களாக ஆகியிருப்பதற்கும் இந்த ஆய்வுகள் மறைமுகப் பங்காற்றி யிருக் கின்றன என்பதை எந்த ஆய்வாளரும் மறுத்துவிட முடியாது. அதன் தொடர்ச்சியாக மத அடிப்படை வாதங்களும் சாதிப் பெருமை களும் தூண்டியும் விட்டிருக்கிறது என்பதுங்கூட உண்மைதான்.
தமிழ் அடையாளம், நாட்டார்மரபும் செவ்வியல் மரபும் இணைதலின் புள்ளிகள், வைதீக மதத்திற்கு எதிரான போராட்டவடிவம், விளிம்புநிலை மனிதர்களின் பண்பாட்டு வரலாற்று ஆவணங்கள், நகரங்களுக்கெதிரான முரண்களைக் குவித்தல் என அவ்வப்போது காரணங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் நடப்பதென்னவோ;பெரிதும் மாறிவிட வில்லை. தொடர்ந்து ஆய்வாளர்கள் தரவுகளைச் சேகரித்த வண்ணமே தான் உள்ளனர்.சேகரித்த தகவல்களின் மேல் பகுப்பாய்வுகளோ , அணுகுமுறை களைப் பயன்படுத்தித் திறமான-இந்தியச்சூழலுக்குகந்த முடிவுகளை நோக்கிய ஆய்வுகள் எதுவும் நடந்ததாகத்தெரியவில்லை.
முடிவுரையாகச் சில நம்பிக்கைகள்
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் குறித்து இப்படிச் சொல்வதைப் பொறுப்பற்ற அவதூறான அரசியல் சொல்லாடல் என நினைத்துப் பலரும் சுலபமாக ஒதுக்கிவிடமுடியும். அப்படி ஒதுக்கிவிடுபவர்களையோ ஒதுங்கி விடுபவர் களையோ யாரும் எதுவும்செய்து விடமுடியாது. அவர்களின் பணி அதேபாணியில் தொடரட்டும் ; பயன்படட்டும்; பயன்பெறட்டும்.ஆனால் இதனை நியாயமான குற்றச்சாட்டு எனக்கருது பவர்கள், உடனடியாகத் தங்களின் நாட்டார் வழக்காறுகள் சார்ந்த ஆய்வுப் பணிகளை மூட்டைகட்டி விடவேண்டும் என்பதுமில்லை. நாட்டார் வழக்காறுகள் பண்பாட்டின் தாரங்களாக இருக்கின்ற அதேநேரத்தில் ,அழுத்திவைக்கும் சுமைகளாகவும் இருக்கின்றன என்ற தன்னுணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்தத் தன்னுணர்வு நமது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களிடம் அதிகம் இல்லாத ஒன்று. ஆனால் உடனடியாக கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அத்தகைய தன்னுணர்வு இருக்கும் நிலையில் செயல்படும் ஆய்வாளர்களுக்கென்று தனியான கடமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அரிய பொக்கிசங்கள் என நம்பப்படும் அந்த வழக்காறுகள்¢லிருந்து பிரித்து எறிய முடியாமல் தவிக்கும் கடந்தகாலத்தின் சுமைகள் எவையெனக் கண்டறிந்து சொன்னாலே பெரிய கடமையாற்றியதாக அமையும்.
நாட்டார் வழக்காறுகள் நிறுவனமதத்திற்கு உள்ளே இருப்பதாகநம்பினாலும்சரி வெளியேயிருப்பதாக நிறுவப்பட்டாலும்சரி அவை இந்திய மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் கூறுகட்டிப் பார்க்கும் சாதியடுக்கைக் காப்பாற்று வனவாக இருக்கின்றன; தக்கவைக்க முயல்கின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அந்தச்சுமையை வழக்காறுகளிலிருந்து பிரித்துக் காட்டித் தெளிவுபடுத்தி விட்டு அவற்றின் முற்போக்குப் பாத்திரத்தைப் பேசும் ஒரு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளனுக்காக எத்தனை ஆண்டு காலம் வேண்டுமானாலும் நாம் காத்திருக்கலாம்.
################# ################ ################

Linggo, Hulyo 05 2009

தி.ஜானகிராமனின் நாடகங்கள்
=========================== =====
தமிழின் புனைகதைப் பரப்பிற்குத் தனது கதை நிகழ்வுப் பரப்பாலும், அப்பரப்பில் உலவிய விதம் விதமான கதாபாத்திரங்களாலும்-குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களின் புறவெளியின் நிலைபாட்டையும் மனத்தின் சுழற்சி யையும் எழுதிக்காட்டியதின் மூலம்-புதிய வீச்சையும் அலையையும் உருவாக்கித் தந்தவர் தி.ஜானகிராமன். நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தனது சிறுகதைகளாலும் நாவல்களாலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள தி.ஜானகிராமன் நாடகங்களையும் எழுதியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருந்த போதிலும் அவை அதிகம் கவனம் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.தி.ஜானகிராமன் மட்டுமே நாடகக் காரராகக் கவனிக்கப்படவில்லை என்று யாரும் கருதி விடவேண்டியதில்லை.
நவீனத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பு செய்துள்ள மணிக்கொடி எழுத்தாளர்களில் பலரும் நாடகங்கள் எழுதியுள்ளனர்.பின்னர் அதன் தொடர்ச்சியாக சி. சு. செல்லப்பா நடத்திய எழுத்துப் பத்திரிகையிலும் அதன் எழுத்தாளர்கள் சிலர் நாடகங்கள் எழுதியுள்ளனர். சிலர் பத்திரிகையில் எழுதியதோடல்லாமல் அக்காலத்தில் நாடகங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த நாடகக் குழுக்களுக்காகவும் நாடகங்கள் எழுதியுள்ளனர். அவ்வாறு எழுதப்பட்ட நாடகங்கள் பலவும் முதலில் மேடையேற்றம் பெற்றபின் அச்சு வடிவம் பெற்றுள்ளன. இக்கட்டுரை தி.ஜானகிராமனின் நாடகங்களை மதிப்பீடு செய்யும் விதமாக அமைகிறது.
நாடகம் எழுத வந்தது விவரங்கள்
தி.ஜானகிராமன் எழுதியதாக நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார் என இரண்டு நாடகங்கள் கிடைத்துள்ளது.* தி.ஜானகிராமன் புனைகதை எழுதுவதில் கொண்டிருந்த தன்விருப்பம் அல்லது ஈடுபாடு போல நாடகம் எழுதுவதிலும் விருப்பத்தோடு இருந்தார் எனச் சொல்ல முடியாது. வடிவேலு வாத்தியார் அச்சான போது அதற்கு முன்னுரை எழுதியுள்ள பி.எஸ். ராமையா இப்படி எழுதுகிறார்: "ஸேவாஸ்டேஜினருக்காக நான் நாடகம் எழுதத் தொடங்கிய வுடன் நாடக இலக்கியப் படைப்பிலே கிட்டும் உள்ளக் கிளர்ச்சியை உணர்ந்தேன். அதைப்பற்றி திரு. தி.ஜானகிராமனிடம் சொல்லி அவரும் நாடகம் எழுத வேண்டும் என்ற என் ஆசையை வற்புறுத்தினேன். அவர் 'நாலு வேலி நிலம் ' எழுதினார். நாடக இலக்கியச்சுவை அவரையும் பற்றிக் கொண்டது.' வடிவேலு வாத்தியார்' என்ற இந்த இரண்டாவது நாடகத்தை எழுதினார்". பி.எஸ். ராமையாவின் கூற்றுப்படி தூண்டுதலின் பின்விளைவே அவரது நாடக எழுத்து என்பது தெரிய வருகிறது.
1957, ஜூலை 15-இல் ஊரும் தேரும் என்னும் பெயரில் எஸ்.வி. சகஸ்ர நாமத்தின் சேவாஸ்டேஜ் குழுவினர் நடத்திய நாடகமே ஒருமாதத்திற்குப் பின்னர் -1957, ஆகஸ்டு 15, சுதந்திர நூற்றாண்டு விழாவின் போது முழு நாடகமாக மேடையேறியுள்ளது.ஜுலையில் மேடையேறிய போது அதன் வடிவம் ஓரங்க நாடகமே. ;முழு நாடகமாக எழுதி, சென்னை கார்ப்பரேஷன் ஸ்டேடியம் மேடையில் அரங்கேறியபோது அதன் பெயர் நாலுவேலி நிலம்.இந்த நாடகம் பின்னர் சென்னை அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட் சார்பில் முதல் பதிப்பாக ஜூலை 1958-ல் நூல் வடிவம் பெற்றுள்ளது.விலை 30 புதுக்காசுகள்.அவரது இரண்டாவது நாடகம் வடிவேலு வாத்தியார் சரியாகப் பத்தாண்டு இடைவெளிக்குப் பின் - 1968 -ல் அச்சாகியுள்ளது. சென்னை , மணிக்கொடிப் பண்ணை வெளியீடாக அந்நாடகம் அச்சாக்கம் பெறுவதற்கு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் நிதி உதவி செய்துள்ளது.விலை ரூ.2.75. வடிவேலு வாத்தியார் நாடகமும், நாலுவேலி நிலம் போல முதலில் மேடையேறிய பின்னரே நூலாக்கம் பெற்றுள்ளது. ஆனால் கால இடைவெளி நீளமானது; பத்தாண்டுகள். இந்நாடகத்தை மேடையேற்றிய குழுவும் அதே சேவாஸ்டேஜ் குழுவினர்தான்.1959, நவம்பர் 19 அன்று சென்னை அண்ணா மலை கலைமன்ற மேடையில் அரங்கேற்றப் பட்டதாக நூலில் உள்ள குறிப்பு கூறுகிறது.நாலுவேலி நிலம் நாடகத்தின் முதல் மேடையேற்றத்தில் யார் யார் பங்கேற்றார்கள் என்றவிவரம் இல்லை. ஆனால் வடிவேலு வாத்தியாரின் முதல் மேடையேற்றத்தில் பங்கேற்று நடித்தவர் களாக எஸ்.வி.சகஸ்ரநாமம், முத்துராமன், வீரப்பன், வீராசாமி,முருகன், வைத்தீஸ்வரன், எஸ்.என்.லக்ஷ்மி, தேவிகா, கல்பகம்,வசந்தா ஆகிய பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.இரண்டு நாடகங்களுக்கும் காட்சிகளை அமைத்தவர் கலாசேகரம் ராஜகோபால். இயக்கியவர் எஸ்.வி.சகஸ்ரநாமம்.
நாடகக் கட்டமைப்பு
தி.ஜானகிராமனின் முதல் நாடகமான நாலுவேலி நிலத்திற்கும் இரண்டாவது நாடகமான வடிவேலு வாத்தியாருக்கும் நூலாக அச்சிட்டதில் பத்தாண்டு இடைவெளி இருந்தபோதிலும் மேடையேற்றத்தில் அந்த இடைவெளியில்லை. ஓராண்டு இடைவெளியில் எழுதப்பட்ட இரண்டு
நாடகங்களும் அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே மேடையேற்றமும் கண்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு நாடகங்களையும் இன்று - நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் - படிக்கின்ற ஒருவருக்கு இரண்டு நாடகங்களும் ஒரே நபர் அடுத்தடுத்த ஆண்டுகளில் எழுதியிருக்க முடியாது. சில ஆண்டுகள் இடைவெளி இருந்திருக்கும் எனக் கூறத்தோன்றலாம். ஏனெனில் முதல் நாடகமான நாலுவேலி நிலத்திலிருந்து வடிவேலு வாத்தியார் வடிவரீதி யாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் பெரிய அளவு வேறுபாடுகளைக் கொண்டதாகத் தோன்று கின்றன. இரண்டு நாடகங்களுமே மேற்கத்திய நாடகவடிவமான நல்முறைக் கட்டமைப்பு( Well made play) வடிவத்தை அறிந்த ஒருவரின் நாடகப்படைப்பு என்பதற்கான சான்றுகளைக் கொண்டவைதான். இரண்டிலுமே நாடக இலக்கியத்தின் ஆதார அம்சமான முரண்நிலை அமைந்துள்ளன. என்றாலும், நாலுவேலி நிலம் நாடக இலக்கியத்தின் உள்கட்டமைப்பான நாடகத்தொடக்கம், முரண், சிக்கல், உச்சநிலை, விடுவிப்பு, முடிவு ஆகியவற்றிலும் புறநிலைக் கட்டமைப்புக்கூறுகளான அங்கம்,(Act) காட்சி,(Scene) போன்றனவற்றிலும் கறாரான தன்மையைக் கொண்டிருக்க வில்லை. இன்னும் சொல்வதனால் முதல் நாடகத்தை எழுதும் பொழுது நாடக இலக்கியம் பற்றிய மேற்கத்திய வரையறைகளை தி.ஜானகிராமன் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூடக் கூறலாம். ஆனால் வடிவேலு வாத்தியார் எழுதியபோது முழுமையாக அந்த வரையறைகளைக் கற்றுத் தேர்ந்து, பி.எஸ்.ராமையா சொல்லியுள்ளது போல் 'அது தரும் கிளர்ச்சியை அனுபவித்தே எழுதியுள்ளார்' எனலாம் .
நாலுவேலி நிலம்
காவிரிப் பாசனத்தஞ்சை மாவட்டக் கிராமத்தின் கோயில் மண்டபம்,தேரடி,வயல், ஆஸ்பத்திரி, போலீஸ் ஸ்டேசன், களம், ரயிலடிக்கும் போகும் சாலை எனப் பொது இடங்களிலும் தலைமைக் கதாபாத்திரமான கண்ணுச்சாமியின் வீடு, அவருக்கெதிராகச் செயல்பட்டு நாடகமுடிவில் மனம் மாறும் வாள்சுத்தியாரின் வீடு என்பன இந்நாடகத்தின் நிகழ்வெளிகள். இந்நாடகத்தின் நிகழ்வுக் காலமாக சுமார் ஓராண்டு எனக் கூறலாம்.உறுதியாக இத்தனை மாதம் அல்லது நாள் எனக்கூறும்படியாகக் குறிப்புக்கள் இல்லை.
இருபத்து ஆறு காட்சிகளில் விரியும் நாலுவேலி நிலம் சொத்து, ஊர் மரியாதை, பாரம்பரியப் பெருமை முதலானவற்றில் முரண்படக்கூடிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் குடும்ப முரண் களைத்தாண்டிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிற கதையைத்தான் காட்சிகளாக விரித்துள்ளது. இரண்டு பண்ணையார்களின் குடும்பப் பகையில் தொடங்கி, இடையில் அப்பகை பலரின் தூண்டுதலால் வளர்ந்து, இறுதியில் காதலின் முன்னால் தோற்றுப்போக சுமுகமான முடிவுடன் நிறைவு பெறுவது என்பது 1950 - கள் தொடங்கிப் பல தமிழ்ச் சினிமாக்களின் கதைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ள கதைக்கரு தான்.சிக்கல், உச்சம், முடிவு என்ற முத்திருப்புப் புள்ளிகள் கொண்ட எளிமையான நாடகவடிவம் இது.இத்தகைய நாடகங்களின் நாடக முத்திறமான வெளி, காலம், கதாபாத்திரங்கள் என்ற மூன்றும் ஓர்மையுடன் அமைந்து விடும் நிலையில் அந்நாடகம் நல்திறக் கட்டமைப்புக் கொண்ட நாடகமாக ஆகிவிடும்.நாலி வேலி நிலம் அவ்வோர்மைகளை மிகச் சரியாகப் பின்பற்றியுள்ள நாடகமாகத் தோன்றவில்லை. அதற்கு மாறாக ஒரு நிகழ்வுக்கு முரணாக அமையும் இன்னொரு நிகழ்வு என்னும் எதிர் நிலை உத்தியைப்பயன்படுத்தியே அமைந்துள்ளது.
ஊர்த் தேரோட்டத்தின் போது சிம்மவாகனப்புறப்பாடு நடத்தும் பொறுப்பு பழைய பணக்காரர் வாள்சுத்தியார் குடும்பத்தினுடையது.ஆனால் அவரது பொறுப்பற்ற நடவடிக்கைகளாலும் சோம்பேறித்தனத்தாலும் குடும்பம் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் இருப்பதால் , அந்தக்குடும்பத்திற்குப் பாரம்பரி யமாகக் கிடைத்து வந்த அந்தப் பெருமை கை மாறுகிறது. ஊரின் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கண்ணுச்சாமி தனது பொறுப்பில் அந்தச் சிம்ம வாகன ஓட்டத்தை நடத்துகிறார்.அதன் தொடர்ச்சியாக வாள் சுத்தியாருக்கும் கண்ணுச்சாமிக்கும் இடையில் பகை வளர்கிறது. ஆனால் வாள் சுத்தியாரின் மகன் நடராஜனுக்கும் கண்ணுச் சாமியின் மகள் நீலாவுக்கும் இடையில் காதல் வளர்கிறது. பாரம்பரியமான வறட்டுக் கௌரவத்துடன் முரண்படும் கருத்தமைவுகளாக, விட்டுக் கொடுத்துச் செல்லும் ஜனநாயகமும் (வாள்சுத்தியார்-கண்ணுச்சாமி), புதிய தலைமுறை யினரின் காதலும் (வாள்சுத்தியார்-நடராஜன்) என எதிர்நிலைகளைக் கட்டமைக்கும் தி.ஜானகிராமன் விட்டுக் கொடுத்தலே வெற்றி பெற வேண்டியது என்பதைச் சொல்லத் தவறவில்லை.
வாள் சுத்தியார் பாரம்பரியமான வறட்டுக் கௌரவத்தின் அடையாளமாக நிற்கக் கண்ணுச்சாமி, புதிதாகக் கிராமத்திற்கு அறிமுகமாகியுள்ள தேர்தல் அரசியலின் வழி முக்கியத்துவம் பெறும் நபராகவும் விட்டுக்கொடுத்து நடக்கும் மனநிலை கொண்டவராகவும் காட்டப்படுகிறார். அதே போல் வாள் சுத்தியாரின் மகன் நடராஜனும் மாறியுள்ள சூழலில் தனது தந்தையின் வறட்டுக் கௌரவமும் வீம்பும் கூடாநட்பும் எதிர்க்க வேண்டியது என உணர்ந்தவனாகக் காட்டப்படுவதும் தந்தை மீட்கத்தவறிய சொத்துக்களைத் தனது சாதுரியத்தாலும் முயற்சியாலும் மீட்டுக் கொண்டு வந்தான் எனக் காட்டுவதும் முக்கியமான அம்சங்கள். தந்தை-மகன் உறவை இவ்வாறு புதிய நிலைமைகளுக்குள் நிறுத்திப் பேசும் இந்நாடகம் அதன் சூழலில் முக்கியமான படைப்பாகக் கணிக்கத்தக்கது.உயர் கல்வி கற்றுத்திரும்பிய பின்னும் தனது சந்ததியினரின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டது இந்திய சமூகம்.அதற்கு மாறாகப் புதிய தலைமுறையின் செயல்பாடு மிகச்சரியாக இருக்கிறது எனக்காட்டி அதன் மீது நம்பிக்கை வைக்கும்படி வலியுறுத்தும் இந்நாடகம் இன்றையச் சூழலிலும் கூடப் பொருத்தமான நாடகம்தான்.
ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கையுள்ள அரசியலின் பிரதிநிதியான கண்ணுச்சாமியைக், குறைகளே இல்லாத -அப்பழுக்கற்ற மனிதனாக தி.ஜானகி ராமன் படைத்துக்காட்டவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தன்னிடம் வந்துள்ள புதிய பதவியின் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, வங்கிக்கடன் பெற்று,புதிய நிலங்களை வாங்கிப் போடுவது போன்ற விருப்பங்கள் அவருக்கும் உண்டு என்றும் அதனால் அவர் ஏமாறும் நிலைமை உண்டானது என்றும் காட்டுவது மூலம் தனது நாடகத்தின் தலைமைக் கதாபாத்திரத்தை இலட்சியக்கதாபாத்திரமாகப் படைத்திட ஜானகிராமன் விரும்பவில்லை என்று சொல்லலாம்.நாலு வேலி நிலம் நாடகத்தின் மையக்கதாபாத்திரமான கண்ணுச்சாமி அன்றைய காலகட்டத்துக் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் பிம்பம் எனவும் அதன் சாராம்சத்தை தன்னிலையாகக் கொண்ட எதிர்கால நம்பிக்கை தான் அவருக்கு மருமகன் ஆகப் போகும் நடராஜன் எனவும் கூறலாம்.
வடிவேலு வாத்தியார்
தி. ஜானகிராமனின் இன்னொரு நாடகமான வடிவேலு வாத்தியார் நாலுவேலி நிலத்திலிருந்து பெருமளவு வேறுபடுகின்ற நாடகம். நாடகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள விதம் அதன் கதாபாத்திர உருவாக்கங்கள், அவைகளை தி.ஜானகிராமன் முன்னிருத்தும் பாங்கு, இதன்வழி வெளிப்படும் அவரது படைப்பு நோக்கம் என அனைத்துமே திட்டவட்டமானவை.இருபத்தோரு கதாபாத்திரங்களுடன் ,வடிவேலு வீடு, வீரமுத்து வீடு, சாமியப்பா வீடு, தலைமையாசிரியர் அறை, நந்தவனம், ரிஜிஸ்தரார் வீடு,தெரு எனக் குறிப்பான நிகழிடங் களைக் கொண்ட வடிவேலு வாத்தியார் நாடகம் அரிஸ்டாடிலிய வடிவக் கட்டமைப்பில் நான்கு அங்கங் களையும் 17 காட்சிகளையும் கொண்டதாக வடிவம் பெற்றுள்ளது. வெள்ளி விழாக் கொண்டாடப் போகும் ஒரு பள்ளியின் நேர்மையான தலைமையாசிரியர் வடிவேலு, கல்வித் துறையில் நுழையும் சுயநலமிக்க மனிதர்களுக் கெதிராக நடத்தும் அறப் போராட்டத்தையும், இறுதியில் அவரது வெற்றியையும் காட்டும் நாடகம், அறம் வெல்லும்;மறம் தோற்கும் என்ற முரணின்- நம்பிக்கையின்மேல்- கட்டமைக்கப் பட்ட நாடகம் தான் .தன்னலமற்ற போராட்டங்களை நடத்துபவர் களுக்குத் துயரங்கள் வந்த போதும் நல்லவர்கள் அவர்களை ஆதரிக்க இறுதி வெற்றி நியாயத்தின் பக்கம் இருப்பவர்களுக்கே எனக் காட்டும் நோக்கம் கொண்ட இந்நாடகம் வடிவேலு வாத்தியார் என்ற ஒற்றைக் கதாபாத்திரத்தைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது.
முதல் அங்கத்தின் முடிவில் நாடகமுரணைத் தெளிவாகக் காட்டத்தக்கதாகக் காட்சிகள் அமைந்துள்ளன. முதல் காட்சியிலேயே வடிவேலு வாத்தியாரின் நாயகத்தனத்தைக் கட்டமைக்க விரும்பும் தி.ஜானகிராமன்,அவரது தொழில் பக்தியைப் பாராட்ட பல வருடங்களுக்கு முன்பு அவரிடம் பயின்ற இருவர் வந்து அவரது கற்பிக்கும் முறையையும் மாணாக்கர்களிடமும் ஆசிரியப் பணிமீதும் காட்டிய மரியாதையையும் நினைவு கூர்ந்து பாராட்டி விட்டுச் செல்வதாகவும் அவரது சொந்த வாழ்க்கை அமைதியான குடும்ப வாழ்க்கையாக இருக்கிறது எனவும் காட்டுகிறார். இதற்குப் பங்கம் ஏற்படும் நிகழ்வுகள் அடுத்தடுத்தக் காட்சிகளில் நடந்து முதல் அங்கத்தின் முடிவில் வடிவேலு வாத்தியார் X பள்ளியின் புதிய நிர்வாகக்குழுவின் தலைவர் சாமியப்பா என எதிர்வு கட்டப்படுகிறது. ஆசிரியப் பணிக்குப் பொறுத்தமற்ற செயல் பாடுகளில் ஈடுபட்டதால் வடிவேலுவின் கண்டனத்திற்கு உள்ளாகும் ஆசிரியை மங்களத்தை முன்னிட்டு உருவாகும் இவ்வெதிர்வின் பின்னணியில் சாமியப்பாவின் மாணவப்பருவக் காலத்தில் அவன் செய்த ஒரு பெரும் தவறும் அதனைக் கண்டித்த வடிவேலுவின் மீது அவன் கொண்ட பகை உணர்வும் இருந்தது என நாடகப்பின்னல் கட்டப்பட்டுள்ளது.
வடிவேலுவை எதிர்க்கும் சாமியப்பாவின் அணியில் பள்ளி நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களான நாகராஜன், கிட்டுப்பிள்ளை, வன்னியர் ஆகியோருடன் ஆசிரியை மங்களம், அவரது ஜோஸியர் தந்தை,கிராமத்தில் அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபடும் காளியப்பன் எனப் பலரும் இருப்பதாகவும் இவர்களின் அணிச்சேர்க்கை நியாயத்திற்கானதாக இல்லை; சுய நலத்திற்காகவும் அதிகாரத்திற்கு அடங்கிப்போவதாகவும் இருக்கிறது எனக்காட்டுகிறார். செல்வச் செழிப்பு, அதன் காரணமாக வந்து சேரும் அதிகாரம், அதற்கு அடங்கிப் போகும் சுயநலம் என்பனவற்றிற்கு எதிராக ஒற்றையாளாக தனது தொழில் பக்தியையும் நேர்மையையும் காட்டும் வடிவேலு வாத்தியார் பள்ளித்தலைமையாசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட அவருக்கு ஆதரவாக மாணவர்கள் நிற்கிறார்கள். மாணவர் தலைவரான தசரதன், லோகநாத வாத்தியார், பள்ளி அலுவலகத்தில் ரைட்டராக வேலை பார்க்கும் ஹிருதயம்பிள்ளை முதலானவர்கள்தான் அவரது ஆதரவு சக்திகள்.தனது தந்தை சாமியப்பாவின் மோசமான நடவடிக்கைகள் தெரிந்த பின்பு சாமியப்பாவின் மகள் வள்ளியும் வடிவேலுவின் ஆதரவு சக்தியாக மாறுகிறாள்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட எதிர்வுகளின் வழி நாடகத்தின் முடிச்சுக்களையும் திருப்பு முனைகளையும் அமைத்துள்ள தி.ஜானகிராமன், நாடகத்தின் உள் ரகசியமாக இன்னொன்றையும் வைத்துள்ளார். அதனை இரண்டாவது அங்கத்தில் கசியவிட்டு மூன்றாவது அங்கத்தில் வெளிப்படுத்தியுள்ள விதம் படைப்பு நுட்பம் சார்ந்த ஒன்று. நாடகத்தின் தொடக்கத்தில் வடிவேலு வாத்தியாரின் மகளாக அறிமுகமாகும் கமலம், உண்மையில் அவரின் மகளே இல்லை என்ற தகவலும், அவள் சாமியப்பாவின் மகள்தான் என்ற உண்மையும் நாடகத்தின் பார்வையாளனுக்கு அந்நாடக நிகழ்வின்மீது ஈர்ப்பு உண்டாக்கும் அம்சங்களாகும். மாணவனாக இருந்த போது தன்னைக்கண்டித்த வடிவேலு வாத்தியாரைப் பழிவாங்கும் பொருட்டு அவரது மனைவி கௌரியையே மிரட்டி உறவு கொள்ள முயன்றவன் சாமியப்பா;ஆனால் அவளின் திடமான பேச்சாலும் நடவடிக்கைகளாலும் அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அவனால் ஏமாற்றப்பட்ட ஓர் அபலைப் பெண்ணின் மகள்தான் கமலம்.அந்தப் பெண் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டுச் செத்துப் போக அவளைத் தங்களது சொந்த மகள்போல வளர்த்து வருகின்றனர் வடிவேலு- கௌரி தம்பதியினர் என்பதுதான் நாடகத்தின் உள் ரகசியம்.
ஒரு கதாபாத்திரத்தின் பிறப்பு சார்ந்த ரகசியம் ஒன்றை உருவாக்கி, இடையில் அந்த ரகசியம் வெளிப்படத் தொடங்குவதும் முடிவில் அதன் முழு உண்மையும் வெளிப்படுவதும் புதிதான படைப்பு நுட்பம் என்று சொல்வதற்கில்லை. பலநாடகங்களிலும் திரைப்படங்களிலும் திரும்பத் திரும்பப் பார்த்த ஒன்று தான்.தி.ஜானகிராமன் எழுதிய அந்தக் கால கட்டத்திலும் கூட அவர்தான் இதன் முன்னோடி என்று சொல்லி விட முடியாது. ராஜகுமாரிகள் காட்டில் வளர்வதையும் காட்டுவாசிகள் அரண்மனை இளவரசனாக வளர்க்கப் படுவதையும் புராணம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் பல காட்டியுள்ளன.
இந்த உள்ரகசியம் நாடகத்தின் பார்வையாளனுக்கு ஆர்வம் ஊட்டத்தக்கது என்ற போதிலும், நாடகத்தின் பொதுத்தள விவாதத்தைச் சுருக்கி இருநபர் களுக்கிடையே உள்ள சொந்தப்பகை சார்ந்த முரணைப் பேசும் நாடகமாக ஆக்கியுள்ளது என்பதுதான் உண்மை. தான் பணியாற்றும் கல்வித்துறையில்- பள்ளிக்கூட நிர்வாகி களாகக் கல்விக்குச் சற்றும் தொடர்பில்லாத கள்ளமார்க்கெட் வியாபாரி, பொறுப்பற்ற அரசியல்வாதி, கலப்பட வியாபாரி போன்றவர்கள் வருவதால் ஏற்படும் சமூக விளைவுகளுக்கு எதிராக வடிவேலு நடத்தும் போராட்டமாக நாடகம் தொடங்குகிறது. ஆனால் அதற்கான தீர்வை நோக்கி நாடகம் நகராமல் சாமி யப்பாவின் மாணவப் பருவத் தவறும் அதன் பின்விளைவுகளும் என்ற தனிநபர் ஒழுக்கப் பிரச்சினைக்குள் திசை மாறிக் கொள்கிறது. ஒழுக்கத் தவறுக்கான தண்டனை யாகச் சாமியப்பா ,வடிவேலுவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய சூழலை அவளது சொந்த மகள் வள்ளியே உருவாக்கினாள் என நாடகம் முடிகிறது. இந்தத் திசை மாற்றத்திற்குக் காரணம் நாடகத்தின் பார்வையாளனுக்கு ஆர்வத்தை உண்டாக்குவதற்காக தி.ஜானகிராமன் உருவாக்கிய உள்ரகசியம்தான் எனலாம். இத்தகைய உள்ரகசியத்தை நாடகத்தின் ஒரு பகுதியாக வைப்பது அக்காலகட்டத்தின் பொதுவான ஒரு போக்காக இருக்கலாம் என்று கூறத்தோன்றுகிறது. ஏனெனில் தி. ஜானகிராமன் நாடகம் எழுதிய காலகட்டத்தை ஒட்டி முன்னும் நாடகங்கள் எழுதிய திராவிட இயக்க நாடக ஆசிரியர்களும் பலரும் -சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி உள்பட - இந்த அம்சங்களைத் தங்கள் நாடகங்களின் கூறாகவே கொண்டுள்ளனர்.
தி.ஜானகிராமன் நாடகங்களின் அரசியல் தளம்.
பொதுவாக நாடகக் கலை மற்றெல்லாக் கலை வடிவங்களைவிடவும் கூடுதலாக அதன் சமகால அரசியல், சமூகப் பின்னணிகளைக் காட்டிவிட வல்ல ஒரு வடிவம். இதற்கு முதன்மையான காரணங்கள் இரண்டு. ஒன்று நாடகக் கலையின் சாராம்சக் கூறாக இருக்கும் முரண். இரண்டாவது அதன் நிகழ்த்துநிலை நோக்கம். எழுதப்பட்ட பிரதியில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிகன் ஒருவனால் வேடந்தாங்கி நடிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் அவைகளின் சமூகப் பொருளாதார அரசியல் பின்புலங்களும் குறியீடுகளும் வெளிப்படையாக அமைய வேண்டியது அவசியமானது. தி.ஜானகிராமனின் இரண்டு நாடகங்களிலும் எழுதப்பட்ட மற்றும் மேடை யேற்றப் பட்ட காலத்தின் பின்புலங்கள் தெளிவாகவே வெளிப்பட்டுள்ளன.அத்துடன் நாடக ஆசிரியர் தி.ஜானகி ராமனின் ஆதரவு நிலைப்பாடு எதற்கு என்றும் காட்டப்பட்டுள்ளது.
முன்னரே கூறியபடி நாலுவேலி நிலம் நாடகம், தமிழ் நாட்டுக் கிராமங் களுக்குள் புது வகை அதிகார உருவாக்க நடைமுறையான தேர்தல் அரசியல் நுழையும் காலகட்டத்தை அடையாளப்படுத்தியுள்ளது. பாரம்பரியமான குடும்பப் பெருமையின் வழிச் செல்வாக்குப் பெற்றிருந்த வாள்சுத்தியாருக்குப் பதிலாக ஓட்டெடுப்பின் வழி தேர்ந்தெடுக்கப் படும் கண்ணுச்சாமியையே மையக் கதாபாத்திரமாக ஆக்குவதுடன் அதன் செயல்பாடுகளை ஆதரித்துப் பேசும் தொனியும் நாடத்தில் வெளிப்படுகிறது.அன்பு ,விட்டுக்கொடுத்தல், தனது தவறுக்குத்தானே வருந்தும் குணம் போன்றவற்றின் சாரமாக கண்ணுச்சாமியைப் படைக்க முயன்றுள்ளார் தி.ஜானகிராமன்.
ஒருவிதத்தில் இக்குணங்கள் ஒரு காந்தியவாதியின் குணங்கள். நாலுவேலி நிலத்தின் கண்ணுச்சாமியும் வடிவேலு வாத்தியார் நாடகத்தின் மையக் கதாபாத்திரமான வடிவேலுவும் ஏறத்தாழ காந்தியவாதிகளின் குறியீடுகள் தான். தவறு செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று நினைக்காமல் அவர்களே உணர்ந்து திருந்தும் படியாக நடந்து கொள்வது என்பது அந்த இரண்டு கதாபாத்திரங்களின் சாரமாக இருக்கின்றன. இதற்கு மாறாக நிற்கும் வாள்சுத்தியார், சாமியப்பா என்ற இரு கதாபாத்திரங்களும் ஒரே அச்சில் வார்க்கப் பட்ட எதிர்நிலைக் கதாபாத்திரங்கள் அல்ல. நாலுவேலி நிலத்தின் வாள்சுத்தியார் மாற்றத்தை மறுக்கிற மனிதர்களின் குறியீடு. ஆனால் சாமியப்பா மாற்றத்தைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ளும் மனிதர்களின் குறியீடு.
காங்கிரசுக்கு மாற்றாக வந்த திராவிட இயக்க அரசியல், பொதுநலனைக் கருத்தில் கொள்ளாமல் சுயநலத்தை மட்டும் கவனத்தில் கொண்ட அரசியல் என்றும் அதன் தலைவர்களும் அவர்களின் வழித் தோன்றல்களும் ஆட்சியதிகாரத்தையும் பொதுத்துறை நிறுவனங் களையும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படும்படியாக மாற்றிக் கொண்டவர்கள் என்ற விமரிசனக் கருத்து தமிழ்நாட்டின் அரசியல் தளத்திலும் இலக்கிய விமரிசனத்தளத்திலும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அத்தகைய விமரிசனத்தை திராவிட இயக்கத்தினரின் தாக்குதலுக்கும் எதிர்ப்புக்கும் அதிகம் உள்ளான பிராமண எழுத்தாளர்களின் படைப்புக்கள் தீவிரமாகவே முன்வைத்துள்ளன. அந்த வரிசையில் தி.ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் நாடகமும் தன்னை இணைத்துக் கொள்ளும் விருப்பம் உடையது என்று சொல்லலாம். சாமியப்பா என்ற எதிர்நிலைக்கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ள விதத்தை மட்டும் வைத்து அப்படிக் கூறவில்லை. அவருக்குத் துணையாக இருந்து பள்ளிக்கூட நிர்வாகக் கமிட்டியையும் பள்ளிக்கூடத்தையும் தங்கள் விருப்பம் போல் நடத்தி விடத்துடிக்கும் நாகராஜன், கிட்டுப்பிள்ளை, வன்னியர்வாள் முதலான கதாபாத்திரங்களை அவர் படைத்துள்ள விதமும் அதனை உறுதி செய்துள்ளது. தி.ஜானகிராமனும் அவரைப் போல வேறு பல எழுத்தாளர்களும் திராவிட இயக்க அரசியல்மீது வைக்கும் அந்தப் பரிமாணம் மட்டும் தான் அதன் அடையாளமா? அல்லது வேறுசில பரிமாணங்களும் -நேர்மறை அம்சங்களும்- திராவிட இயக்க அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்டா..? என்று விவாதிக்க வேண்டும். அந்த விவாதம் இதனுடன் நேரடித்தொடர்புடையது அல்ல என்பதால் இந்தக் கட்டுரை இங்கு முடிக்கப்படுகிறது.
========================= ======================= ========================
அரங்கியல் பேராசிரியர்கள் இருவர்.
============================== ======
நாடகக் கல்வி: கிழக்கும் மேற்கும்
இன்று, நாடகக் கலை ஒரு கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம்,இசை, ஓவியம்,சிற்பம்,திரைப்படம் எனக் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்துக்கலைகளும், நுண்கலை களும், நிலைக் கலைகளும் கூடக் கல்வித்துறைசார் படிப்புகளாகி இருக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பட்டப்படிப்பாகவும் பட்டமேற்படிப்புகளாகவும் இவை யெல்லாம் கற்றுத் தரப்பட்டு பட்டங்கள் தரப்படுகின்றன. இப்படிச் சொல்லுவதால் இவையெல்லாம் இப்பொழுதுதான் கற்றுத் தரப்படுகின்றன என்றோ, அதற்கு முன்பு அத்தகைய கல்வி இல்லை என்றோ அர்த்தமில்லை. சுதந்திரத்திற்கு முன்னும்கூட இக்கலைகளைக் கற்றுத்தருபவர்களும் கற்றுக் கொள்பவர்களும் இருந்தார்கள். கல்வி நிறுவனங்களும் இருந்தன ; ஆனால் வேறுவிதமாக இருந்தன. குரு-சிஷ்யப்பாரம்பரியத்தில் ஒருசில குழுக்களுக் குள்ளேயே / சாதிகளுக்குள்ளேயே கற்றுக் கொள்ளப்பட்டன.
சுதந்திர இந்தியாவில் கலைகள் பட்டங்கள் தரும் கல்வித்துறைசார் படிப்பாக ஆனதற்குத் தெளிவான நோக்கங்களும் இலக்குகளும் உண்டு. எதிர்கால இந்தியாவைப் பற்றித் தனக்கெனத் தனித்துவமான பார்வைகளையும் இலக்கு களையும் கொண்டிருந்த பண்டித ஜவகர்லால் நேருவின் பண்பாட்டுக் கொள்கை இதன் பின்னணியில் இருந்தது. எல்லாவகையான படிப்புகளும் ஜனநாயகப் படுத்தப்படவேண்டும் என்ற வகையில், அவர்காலத்தில் கலை களைப் பற்றிய படிப்புக்குள்ளும் மேற்கத்தியக் கற்பித்தல் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. அதன்வழிப் பட்டம் பெற்ற பலரும் அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் தங்கள் கலைசார்ந்த பணிகளை விருப்பத்தோடும் விருப்பமின்றியும் செய்து வருகின்றனர்.சிலர் தனித்துவமான கலைஞர்களாக உலா வருகின்றனர். இன்னும் சிலர் வெகுமக்கள் ஊடகங்களின் தேவைக்கான சரக்குகளை உற்பத்தி செய்யும் பணியாளர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர் களாகவும் வெளிப்பட்டுள்ளனர். கலைகளைப் பல்கலைக் கழகப் பட்டங்களாக ஆக்குவதில் இவ்வாறு பல்வேறு நன்மைகளும் உண்டு;தீமைகளும் உண்டு. என்றாலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் ஒரு துறையாக கலை ஆகின்ற பொழுது அது அனைவரும் கற்கக் கூடிய ஒன்றாக ஆகிவிடுகின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ராமானுஜமும் மௌனகுருவும்
பேராசிரியர் ராமானுஜம், பேராசிரியர் மௌனகுரு- இந்த இரண்டு பெயர்களும் தமிழில் நாடகக்கலை சார்ந்த செயல்பாட்டாளர்களின் மனதில் தங்கிவிட்ட பெயர்கள்.கல்விப்புலங்களுள் ஒன்றாக நாடகக்கலை ஆனபின்பு, தன்விருப்பத் தோடு இப்புலத்திற்குள் நுழைந்த தமிழ் நாடகக் கலை மாணவன் இவ்விரு பெயர்களையும் பலமுறை உச்சரித்திருக்ககூடும். நாடகக்கலை சார்ந்து ஓய்வினை அறியாத பேரா.சே.ராமானுஜம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பேரா.மௌனகுரு இலங்கையின் கல்விச்சூழல் காரணமாகத் தனது அறுபதாவது வயதிற்குப் பின்னரும் தான் பணியாற்றிய மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தின் நுண்கலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இவ்விரு பேராசிரியர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர ஒரு காரணமும் உள்ளது.அவர்களது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு நூல்களாகக் கிடைக்கின்றன என்பதுதான் அந்தக்காரணம்.தனது எழுத்தின் படிகளைச் சேர்த்து வைப்பதில் அதிக அக்கறை காட்டிக் கொள்ளாதவர் பேராசிரியர் ராமானுஜம். நாடகக் கலையின் மாணவன், அதில் பெறும் செய்முறைப் பயிற்சி சார்ந்த கல்வியின் மூலமே வல்லுநனாக ஆக முடியும் என்பது அவரது நம்பிக்கை; அந்த நம்பிக்கை முழுமையான உண்மையும்கூட. செய்முறைப்பயிற்சி பெற்றுக் கொள்ளாத நாடகக்காரன். நாடகக்காரனாகச் சாதனைகள் எதுவும் செய்துவிட முடியாது. தொடர்ந்த பயிற்சிகள் என்பதும், பயிற்சிகளைப் பயன்படுத்தி தயாரிப்புப் பணிகளைச் செய்வது என்பதும்தான் நாடகக்கலையின் கற்றல் முறையும்கூட.
டெல்லி, தேசிய நாடகப்பள்ளியின் தலைசிறந்த இயக்குநரும் நாடகத் துறையில் சர்வதேச அளவில் அறியப் பட்டவருமான இப்ராகீம் அல்ஹாசியின் மாணவர் சே.ராமானுஜம். அவரது படிப்பையும் பயிற்சியையும் தொடக்கத்தில் தமிழகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை.அவர்கற்றுத் திரும்பிய வுடனே அவரைப் பயன்படுத்திக் கொள்ளும்படியான கல்விச்சூழல் தமிழ் நாட்டில் இல்லாமல் இருந்தது என்று கூடச் சொல்லலாம். கேரளாவின் திருச்சூர் நாடகப்பள்ளியில் பயிற்றுநராக இருந்த ராமானுஜத்தை அழைத்து வந்து தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையின் தலைவராக்கியவர் அதன் முதல் மற்றும் முதன்மையான துணைவேந்தர் பேராசிரியர் வ.அய்.சுப்பிர மணியம்.
பேரா.சே. ராமானுஜம் நாடகத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றினாலும் அவரது விருப்பங்கள் அதிகமும் எழுத்து சார்ந்தன அல்ல. பயிற்சிகள், நாடகத் தயாரிப்புகள் சார்ந்தனவே. தனியான பட்டறைகளாகவும் நாடகத் தயாரிப்புக் கான பட்டறைகளாகவும் அவர் முன்னின்று நடத்திய பட்டறைகள் பல. அவற்றிலிருந்து உருவான நாடக நடிகர்களும் நாடகக்கலைசார்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களும் பலருண்டு. அப்பட்டறைகளில் அவர் பயிற்று விக்கும் முறைகள் அனைத்தும் எழுத்துப் பதிவுகளாகவும் ஒளிநாடாக் களாகவும் ஆக்கப்பட வேண்டியவை. பின்வரும் சந்ததியினருக்கு பேரா. சே. ராமானுஜத்தின் பங்களிப்புக் களை அப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும். அதை யார் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. பேராசிரியர் ராமானு ஜத்தின் எழுத்துசார்ந்த பங்களிப்பைத்தொகுத்து தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தும் பணியை நாடகக்காரரும் பத்திரிகையாளருமான சி.அண்ணாமலை செம்மையாகவே செய்துள்ளார். ராமானுஜத்தின் நாடகங்கள் தனியாகவும், அவரது கட்டுரைகள் தனியாகவும் தொகுக்கப்பட்டு இரண்டு நூல்களாக காவ்யா பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. அதற்காக சி.அண்ணாமலையும் காவ்யா பதிப்பகத்தாரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.
ராமானுஜத்தின் எழுத்துக்கள் எழுதவேண்டும் என்ற வேட்கையுடன் எழுதப் பட்டன அல்ல. தனது செய்முறைப் பயிற்சி சார்ந்த கற்பித்தல் முறையின் போக்கில் சில தேவைகளுக்காக எழுதப்பட்டவைகளே அவரது நாடகப்பிரதிகள். அவை வாசிப்பில் தருகின்ற அனுபவங்களையும் அர்த்தங் களையும்விட மேடையேற்றத்தில் தருகின்ற அர்த்தங்களும் அனுபவங்களும் கூடுதலானவை. அவரது கட்டுரைகளும்கூட தனித்த ஓர்மையோடு விவாதங் களையும் விமரிசனங்களையும் முன்வைக்கும் தன்மையன அல்ல. அவ்வப் போது நாடகத்துறைசார்ந்த நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளும், சில நாடக நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளும் தான்.இவை நாடகத்துறைக்கு வெளியேயிருந்து அதனை அறிந்து கொள்ள முயலும் ஒரு வாசகனுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று சொல்ல முடியாது.ஆனால் நாடகத் துறைசார்ந்த கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இவற்றின் பயன் திறமானவை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
#########################################################
பேராசிரியர் மௌனகுருவின் கட்டுரைகள் அரங்கியல் என்னும் தலைப்பில் ஒரு நூலாகவும் அவரது மணிவிழா மலராக-அவரது எழுத்துக்களும் அவரைப் பற்றிய எழுத்துக்களுமாக- ஒரு நூலும் வெளிவந்துள்ளது. மணிவிழா மலரில் இலங்கையைச்சேர்ந்த கல்வியாளர்கள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அக்கட்டுரைகள் தமிழகக் கல்வியாளர்களுக்கு புலம்சார்ந்த கட்டுரை களின் நுண்மான் நுழைபுலம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் காட்டக்கூடியன.அத்துடன் பேராசிரியர் மௌனகுருவின் கல்விப்பணிகளையும் அரங்கியல் பணிகளையும் விரிவாகக் கூறுகின்றன.
தமிழ் அரங்கியல் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுகிறவர்களுக்கும் அவற்றைப் பயிற்சி செய்து பார்க்கத் துடிக்கும் இளம் மாணவர்களுக்கும் பேரா.மௌன குருவின் அரங்கியல் என்னும் நூல் மிகமிக உதவிகரமாக விளங்கக் கூடியது. மூன்று பகுதிகளையுடைய அந்நூலில் முதல் இரண்டு பகுதிகள் தமிழக அரங்கியல் மாணவர்களும் கற்றுக் கொள்ளவேண்டிய பகுதிகள்.சர்வதேச அளவில் அரங்கவியலில் காணப்படும் சொல்லாடல்களை மிகத்தெளிவாகவும் சுருக்க மாகவும் விளக்கும் கட்டுரைகள் முதல் பகுதியில் இடம் பெற்றுள்ளன. நாடகக் கலையின் பயன்கள், நடிப்பு முறைகள் பற்றிய எண்ணக்கருக்கள், முழுமை அரங்கு, ஐரோப்பிய நவீன நாடக அரங்கும் ஆசிய நாடக அரங்கும், சிறுவர் களுக்கான நாடகங்களும் ஆசிரியர்களும் என்ற ஐந்து கட்டுரைகளும் அரங்கியல் அடிப்படைகளைத் தமிழில் சொல்லும் கட்டுரைகள். இத்தகைய கட்டுரைகள் தமிழில் இதுவரை எழுதப்படவில்லை என்பதுதான் உண்மை. இரண்டாவது பகுதியில் தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைப் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பும் பின் நவீனத்துவப் பின்னணியில் தமிழ்ப் பாரம்பரியக் கூத்தைப் புரிந்து கொள்ளவேண்டிய முறையியலும் பேசப்படுகின்றன. இக்கட்டுரைகளில் காணப்படும் முறையியலும் தெளிவும் தமிழக அரங்கியலாளர்களிடம் காணப்படாத ஒன்று.
வரலாற்றைச் சமகாலத்தேவைகளின் பின்னணியில் புரிந்து கொள்ள இலங்கையைச்சேர்ந்த பேராசிரியர்களிடம் தான் தமிழகம் பாடம் கேட்க வேண்டியுள்ளது.இலக்கியத்தளத்தில் இத்தகைய பாடங்களைப் பேராசிரியர்கள் க. கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் ஏற்கனவே நடத்தியுள்ளனர் என்பதைத் தமிழ்க் கல்வியுலகம் நன்கு அறியும். இத்தகைய பாடங்கள் நான் முன்பே சொன்னபடி மேற்கையும் கிழக்கையும் சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.தமிழகக் கல்வியாளர்கள் பலருக்கு மேற்கின் விமரிசன முறையும் கைவரப்பெறவில்லை. மரபின் சமகாலத் தேவையையும் சொல்ல இயலவில்லை. மரபு என்பதற்காக போற்றுவது மட்டுமே சாத்தியமாகிறது.
மூன்றாவது பகுதி இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களின் மரபுக்கலைகளின் நிகழ்கால நிலைமைகள் குறித்து எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்.ஈழம், மட்டக்களப்பு, பாண்டிருப்பு என அதற்குள்ளும் இருக்கும் பிரதேச வேறுபாடு களை அடையாளப்படுத்தி அரங்கியல் நிகழ்வுகளை ஆய்வு செய்துள்ளார் மௌனகுரு. மொத்தத்தில் இந்த நூல் தமிழ் அரங்கியல்/ நாடகக் கல்விக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கக் கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. #######################################################
பேரா.ராமானுஜமும் பேரா.மௌனகுருவும் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நாடகக் காரர்கள். ஏனென்றால் தமிழர்கள் அனைவரும் நாடகக் கலையின் பார்வையாளர்களாக ஆக்கப்படவேண்டும் என்பது அல்ல அவர்கள் விருப்பம். நாடகக் கலையின் மூலம் தமிழர்கள் இந்த உலகத்தினை- சமகால வாழ்வைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது அவர்கள் இருவரது விருப்பங்கள். அதற்காகத் தமிழர்கள் அனைவருக்கும் நாடகக்கலையைக் கற்பிக்கும் விருப்பம் கொண்ட பேராசிரியர்கள். அதிலும் மேற்கையும் கிழக்கையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்ட பேராசிரியர்கள். தங்கள் கற்பித்தல் முறையில் இந்திய /கீழ்த்திசைப் பாரம்பரியத்தின் எல்லைகளை எங்கே நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கும் மேற்கின் விமரிசன அறிவை எங்கெல்லாம் நமதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கும் அவர்களிடம் தெளிவான பார்வைகள் உண்டு.
வார்த்தை சார்ந்த மொழியும் உடல் மொழியும் அரங்கியலின் பிறகூறுகளுடன் இணைந்து உருவாக்கும் மொழியே மேடை மொழி. அரங்கியல் செயல்பாடுகளின் அடிப்படையான இதில் தெளிவு இல்லாத நிலையில் எந்த இயக்குநரும் நல்ல படைப்புகளைத் தந்து விடமுடியாது.இந்தத் தெளிவுகள் கைவரப்பெறாத சிலபேர் தங்களின் நாடகங்கள் என்ன நோக்கத்தொடு மேடையேறுகின்றன என்பதைக் கோடி காட்டக் கூட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களது மேடையேற்றங்கள் பார்வையாளர்களிடம் தொடர்பு கொள்ளத் தேவையான தொடர்பு மொழி எவையென்பதையே உறுதிசெய்து கொள்ளாமல் தவிக்கின்றன. வார்த்தை சார்ந்த மொழியின்வழி பார்வையாளனுடன் உறவு கொள்வதா..? உடல்மொழியால் தொடர்பு கொள்வதா என்ற தெளிவுகள் இல்லாத நிலையில்.. தொடர்புநிலை தொடர்ந்து அறுபட்டுக்கொண்டே இருப்பதே இத்தகைய அரங்கியல் செயல்பாடுகளின் பாணியாக இருக்கிறது. இதுதான் இன்று தமிழில் நாடகம் செய்ய-நவீன நாடகங்கள் செய்ய விரும்பும் பலரது பிரச்சினையாக இருக்கிறது. அது பற்றிப் பின்னொரு முறை பேசலாம்.