December 27, 2009

குற்றவுணர்வின் மகத்துவம்: பாவண்ணனின் துரோகம்

இந்திய அரசு தனியார் மயக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆன போதும் அரசாங்க வேலைகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. அதிலும் கடந்த வருடம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி அரசு உத்தியோகத்தின் வலிமையை இன்னும் கூடுதலாக்கி விட்டது. ‘கால் காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசு வாங்குபவர்’ என்ற பேச்சு தூக்கலாகவே ஒலிக்கின்றன.

தனியார் நிறுவனங்களில் எப்போதும் கத்தி தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் நபர்கள், அரசுத்துறை அலுவலகங்களில் இருக்கும் பக்கவாட்டுக் கத்திகளைப் பற்றி அறியாதவர் களாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். தனியார் நிறுவனங்களில் தொங்கும் கத்தி ஆலோசனை செய்யாத கத்தி; உடனே பாய்ந்து விடும் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அரசாங்க அலுவலகங்களில் இருக்கும் கத்திகள் ஆழமாக யோசித்துப் பாயும்; நிதானம் கடைப்பிடிக்கப் பட்டாலும் பாய்வதிலிருந்து பின் வாங்குவதில்லை என்பது என்னவோ உண்மை தான்.
நிறுவனங்களின் இயக்கம் தனி மனிதனின் சுகங்களையும் துக்கங்களையும் எப்போதும் கணக்கில் கொள்வதில்லை; வேலைக்கு வருபவர் பெண்ணாக இருந்தால் அவளது கணவனின் மனம் பற்றியோ, குழந்தையின் உடல் நலம் பற்றியோ நினைக்கக் கூடாது; ஆணாக இருந்தால் அவனது காதலும் சாகசங்களும் நிறுவனத்திற்குப் புறம்பான விஷயங்கள். பணியில் இருக்கும் போது அவன் என்னவாக இருக்கிறானோ அதுதான் அடையாளம். அதிகாரி என்றால் அதிகாரி; குமாஸ்தா என்றால் குமாஸ்தா. காவல்காரன் என்றால் காவல்காரன்; டிரைவர் என்றால் டிரைவர். இதுதான் நிறுவனத்தின் கணிப்புகள்.
இயங்கும் எந்திரத்தின் திருகாணி போல அசைந்து கொண்டே இருக்க வேண்டியது மனிதனின் வேலை. அவனிடம் வேறு எதையும் நிறுவனம் எதிர்பார்ப்பதில்லை. இந்த இறுக்கமான இயங்குநிலையைப் பலரும் விமரிசனம் செய்தவண்ணம் அவற்றில் வேலைகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். மாதச் சம்பளக்காரர்களின் பணிநேர மனநிலை என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரிவதில்லை. அவற்றின் உறுப்பினராக மாறி, அவற்றில் ஏதாவதொன்றில் பணியாற்றத் தொடங்கும் போது இந்த உண்மை புரியக்கூடும். இதில் அரசுத்துறை நிறுவனம், தனியார் நிறுவனம் என்ற வேறுபாடுகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இரண்டு வகைப்பட்ட பணிகளில் ஈடுபட்டவர்களையும் நெருங்கிப் பேசும் வாய்ப்புகள் உண்டு.

சமீபத்தில் பெய்த பெருமழையின் போது திருநெல்வேலிக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் செய்த வேலை ஆச்சரியமூட்டக் கூடியதாக இருந்தது. இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது கால்களை வைக்கவே கூச்சப்படும் வகையில் கிடந்த சகதிக் காட்டில் நாள் முழுவதும் நிற்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள். மாநகராட்சிப் பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் கூட அவர்கள் செய்தார்கள். காக்கிச் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டுக் கூடைகளில் கருங்கல் சல்லியை அள்ளிச் சகதியில் போட்டு நிரப்பிக் கொண்டிருந்தார்கள். மேலதிகாரி அங்கே இருக்கிறார் என்றால் எந்தக் கேள்வியும் இல்லாமல் பணி ஆற்றும் மனம் அவர்களுடையது. இவர்களே பல நேரங்களில் செய்ய வேண்டிய அடிப்படையான வேலையையும் கூடச் செய்யாமல் இருக்க வகை தேடுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

குறிப்பிட்ட சூழலில் தனிமனிதர்கள் தவறுகள் செய்யக் கூடும்; அதைப் புரிந்து கொள்ளாமல் தண்டனை வழங்கி விடுவது அதிகாரத்தின் முகம் மட்டுமல்ல. தனிமனிதர்களின் சுயநலம் சார்ந்ததும் கூட என நினைக்கும் மனம் ஒரு உன்னதமான மனநிலை. அதிலும் அரசு இயந்திரத்தின் அதிகாரப் படிநிலையில், அதைச் செலுத்தும் இடத்தில் இருக்கும் ஒருவர் அவ்வாறு நினைப்பது பொருத்தமற்றது எனக் கருதும் நிலைமை நிலவும் சூழலில் இக்கதையில் வரும் அந்தப் பாத்திரம் தன்னைத் தொடர்ந்து குற்றவுணர்வுக்குள் நிறுத்திக் கொண்டே கதையைச் சொல்லுகிறது. நடந்து போன தவறுக்கு நேரடியான காரணமாகத் தான் இல்லாத போதும்- தரப்பட்ட தண்டனைக்கும் தான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்ற போதும்- அந்தப் பாத்திரம் குற்றவுணர்வுடனேயே தன்னைப் பிணைத்துக் கொள்கிறது. இப்படிப்பட்ட அபூர்வமான மனிதர்களைக் காண்பது கதையில் மட்டுமே சாத்தியம் எனப் பலர் நினைக்கலாம். நான் நேரிலும் பார்த்திருக்கிறார்கள். ஒரு மனிதன் பல நேரங்களில் மோசமானவனாக வெளிப்பட்ட போதிலும், சில தருணங்களில் தனது குற்றவுணர்வை வெளிப்படுத்தவே செய்கிறான் என்பதே எனது அனுபவம்.

தொடக்கத்திலிருந்தே சிறுகதை எழுதுவதில் விருப்பம் காட்டி வந்த பாவண்ணன் கர்நாடக மாநில தொலைத்தொடர்புத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிவருபவர். நுட்பமாகப் படித்தால் கதை நிகழ்வுகள் பல அந்தத்துறை சார்ந்து இருப்பது புலனாகலாம். ஆனால் அவரது நாவல்கள் பெரும்பாலும் அவரது பிறந்த ஊர்ப் பிரதேசமானப் புதுச்சேரியைக் களனாகக் கொண்டவை. சமூக நிகழ்வுகளைப் படம் பிடிப்பதாக மொழியைப் பயன்படுத்தும் நுட்பங்கள் கொண்டவர். கர்நாடகத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததால் கன்னட மொழியைக் கற்று நாடகங்களையும் தலித் தன் வரலாறுகளையும் தமிழுக்குத் தந்துள்ளார். அதற்காகச் சாகித்திய அகாடெமி விருதையும் பெற்றுள்ளார்.

அரசு சார்ந்த- சேவைத்துறை- ஒன்றில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் பலதரப்பட்ட பணியாளர்களின் மனப்போராட்டத்தைப் பேசும் பாவண்ணனின் துரோகம் கதை திரும்பத் திரும்ப வாசிக்கப்பட்ட கதைகளில் ஒன்று. அந்தக் கதையின் மையக் கதாபாத்திரமாக இருக்கும் கதைசொல்லிக்குப் பெயர் எதுவும் இல்லை. நான் என்று தன்மை ஒருமையில் அந்தப் பாத்திரம் தனது அலுவலகப் பணி சார்ந்த நிகழ்வுகளை அடுக்கிக் காட்டும் விதமாக எழுதப் பட்ட கதை அது. கதைசொல்லியாக வரும் பாத்திரம் கதையை எழுதிய கதாசிரியர் தானோ என்ற சந்தேகத்தை வலுவாக ஏற்படுத்தும் சொல்முறை கொண்ட கதை துரோகம்.
பாவண்ணனின் துரோகம் கதை இப்படித் தொடங்குகிறது:

“ ஒங்கள் உட்டா ஒத்தாசைக்கு யார்கிட்ட போவேன் சார்?” உடைந்த குரலில் கெஞ்சிய முனுசாமியை ரொம்ப நேரத்துக்கு நேருக்கு நேர் பார்க்கச் சங்கடமாய் இருந்தது. அவனது கண்கள் புதைந்த குண்டுகள் போல உள்ளடங்கிப் பரிதாபமாய் இருந்தன. இப்படி விவரித்துத் தொடங்கும் கதை மெல்ல மெல்ல விரிந்து சிக்கல்களாகவும் அவிழ்ப்புகளாகவும் மாறிமாறி நகர்கிறது. அக்கதையின் விசேஷம் என்னவென்றால் ஏற்படும் சிக்கலுக்கும், விடுவிப்புக்கும் காரணமாகக் கதைசொல்லியே காரணகர்த்தாவாக இருக்க நேர்கிறது என்பதுதான்.

நடந்தது இதுதான். மங்களூரின் எல்லையில் இருக்கும் ஊரொன்றில் எங்கல் ப்ராஜெக்ட் சோதனைகளை முடித்துக் கொண்டு எல்லாரும் புறப்பட்டோம். அப்போதே இரவு எட்டு ஆகி விட்டிருந்தது. மேல் அதிகாரி, நாலு டெக்னீஷியன்கள், இரண்டு மஸ்தூர்கள், நான் எல்லோரும். முனுசாமி தான் வண்டி ஓட்டினான். காலை புறப்படும் போதே சாயங்காலம் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று சொல்லியிருந்தான்.

அது நடக்கவில்லை; அதற்குப் பதிலாக அன்றிரவு விபத்து நடந்து விடுகிறது. அதை டிரைவர் முனிசாமி விவரிப்பதைக் கேளுங்கள்: “ ஆக்ஸிடெண்ட்டானது தப்புதா, இல்லன்னு சொல்லல. தலவிதி அப்பிடி சார். என் நெலமையும் யோசிச்சுப் பாக்கனும். நமக்கு வேலதா பெரிசு. ஊரூரா ஓடி ஓடி செய்யணும்னு பொழப்பு. ஒரு ஜேஈ போனா இன்னொரு ஜேஈ வராரு. ஒரு ஏஈ போனா இன்னொர் ஏஈ வராரு. ஆனா எல்லாருக்கும் ட்ரைவர் ஒருத்தர்தான். மாசத்துக்கு ரெண்டு நாளு லீவ் கெடைச்சாலே ஏதோலாபம். அப்பப் போயி பொண்டாட்டிகூட இருந்தாதான் உண்டு. ரெண்டு மாசமா டார்கெட்டார்கெட்னு ஊருக்கே உடல. சுத்திக்னே இருந்தம். ஊருக்குப் பக்கத்ல வந்ததும் ஊட்டு ஞாபகம் வந்திடுச்சி. போயி பொண்டாட்டி புள்ளய பார்க்கணும்னு வேகம். அதனாலதா அன்னிக்கு சாயங்காலமே பர்மிஷன் கேட்டேன். நீங்க என்னடான்னா ராத்திரி ஆக்கிட்டீங்க. அவ்ளோ நேரத்துக்கு மேல கெளம்பிட்டன். சீக்கிரமா திரும்பிரனும்னுதா நெனச்சன். என் தலையெழுத்து வழில இந்தமாதிரி ஆய்டுச்சி. நா இன்னாசார் செய்றது.

சோர்ந்து போய் வெளியே வந்ததும் முனிசாமி நெருங்கினான். அவனைப்பார்க்கவே வருத்தமாய் இருந்தது. “ என்ன சொல்றாரு சார் பெரியவரு” “ சார்ஜ்ஷீட் தரணுமாம்” “ நீங்கதான் எழுதினீங்களா..” சங்கடத்துடன் அவனை நிமிர்ந்தேன்.
“ தப்புக்கள ஒத்துக்கிறியா இல்லியான்னு எழுதித்தரணும் முனுசாமி” “ அதான் எப்படி ஆச்சின்னு சொன்னேனே சார்” “ எழுதித் தரனும் முனுசாமி”
“ எழுதித்தந்தா உட்டுடுவாங்களா சார்?” ஏற்கெனவே போலீஸ் கேஸ் ஒண்ணு தெனமும் வந்து போலீஸ்காரன் பாடாபடுத்தறான். இது நடுவுல இந்தச் சங்கடம் வேறயா சார்”
“ டிபார்ட்மெண்ட்ல ரொம்ப ப்ரஷர் முனுசாமி, வேற வழியில்ல”
“ நீங்களே பதில் எழுதிக் குடுங்க சார்”
“ நானா?” அந்த நேரத்தில் தான் உடைந்த குரலில் முனுசாமி கெஞ்ச, சங்கடத்தில் நகர்ந்து நின்றேன்.
திரும்பவும் மேசைக்கு வந்து எழுதத் தொடங்கினேன். முனுசாமியின் கதையை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன்.
“ நீங்கதா அவனுக்கு வக்கீல் போல”
“ எழுதத் தெரியலன்னு சொன்னான். என்ன செய்ய முடியும். சொல்லுங்க. எல்லார்க்குமா இங்கிலீஷ் தெரிது” கடைசி வார்த்தையை வேண்டுமென்றே அழுத்தினேன்.

“ ஒரு ஆபீஸர் ஆபீஸுக்குத்தா சின்சியரா இருக்கணும். அதுக்குத்தா சம்பளம். துரோகம் பண்றதுக்கில்ல.” என்னை மிகவும் உசுப்பிவிட்டது இவ்வார்த்தைகள். வாதிக்க இது சந்தர்ப்பமில்லை என்பதால் அமைதியானேன். என் மௌனம் அவர் தொடர்ந்து பேசத் தடையாய் இருந்தது. புறப்பட்டுப் போய்விட்டார்.

இரண்டாவது கட்ட விசாரணையும் இறுதிக்கட்ட விசாரணையும் பத்து நாட்கள் இடைவெளியில் நடந்தன. இதற்கான மடல்களையும் நானே தான் அதிகாரிக்கு எழுதித் தர வேண்டியிருந்தது. முனுசாமிக்கும் அதை மொழி பெயர்த்து விளக்க வேண்டியிருந்தது. என் புத்திக்குத் தட்டுப் பட்ட விதிகளின் ஓட்டைகள் பற்றியும் எடுத்துரைத்தேன்.

குறிப்பிட்ட நாளில் அதிகாரி வண்டியில் புயல்போல வந்து இறங்கினார்..

கைப்பையைத் திறந்து சில தாள்களை எடுத்து என் பக்கம் நகர்த்திப் படிக்கச் சொன்னார் அவர். என் மேல் நம்பிக்கையற்றதால் கோட்ட அலுவலகத்தில் வைத்துத் தானே எழுதியதாய் கர்வமுடன் சொன்னார். ஆறுமாசம் சஸ்பெண்ட். இரண்டு வருஷ இன்க்கிரிமெண்ட் கட் இதுதான் விசாரணை எழுதிய தீர்ப்பு. திடுக்கென்று தூக்கிப் போட்டது. என்னையே கொண்டு போய் முனுசாமியிடம் கொடுக்கச் சொன்ன தோரணை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“ ஆபீஸர்லாம் சேர்ந்து இப்பிடித் துரோகம் பண்ணீட்டிங்களே. நாயமா சார் இது” என் சமாதானம் எதையும் பொருட்படுத்தாமல் உச்ச ஸ்தாயியில் சத்தமிட்டான் அவன். மோதிவிடுவான் போல நெருங்கி நின்று கூச்சலிட்டான். இதுவரைக்கும் பார்த்திராத முனுசாமியின் முகம் அது. “ ப்ளீஸ், கொஞ்சம் அமைதியாக இருங்க” என்றபடி எழுந்த என்னை மறித்து அவன் கூறினான். “நீங்க சொல்லிக் குடுத்த மாதிரிதான் சார் செஞ்சன். கடசில இப்டி முதுவுல குத்தீட்டீங்களே சார்”

விவரிக்கப்பட்ட கதையில் வரும் முனுசாமி பரிதாபத்துக்குரியவனா? அவனுடைய மீட்சிக்கு வழி சொல்லத் தெரியாத கதைசொல்லியாக அந்தப் பாத்திரம் பரிதாபத்துக்குரியவரா? என்பதுதான் கதை எழுப்பும் சிக்கல். அதிகாரியின் சொல்லைத் தட்டாமல் செய்து முடிக்கும் அதே வேளையில் முனுசாமியைக் காப்பாற்றிவிடவும் முடியும் என நம்பும் அவருக்கு ஏற்பட்டது தோல்வி. அந்தத் தோல்வி முனுசாமியின் தோல்விதான் என்றாலும், தனக்கு ஏற்பட்ட தோல்வியாகவே அந்தப் பாத்திரம் கருதுகிறது. அதனால் தான் கடைசியில் முனுசாமி “ ஆபீஸர்லாம் சேர்ந்து இப்பிடித் துரோகம் பண்ணீட்டிங்களே. நாயமா சார் இது” என்று கேட்ட போது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது எனக் கூறலாம்.

தனியார் நிறுவனமோ, அரசு நிறுவனமோ, குற்றவுணர்கள் நிரம்பிய அதிகாரிகளால் அவை நிரப்பப் படும் போது தனிநபர்களுக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கே அவை வெளிச்சங்களைத் தரக்கூடும்.

No comments :