November 20, 2009

வாழ்வின் நாடகம்: திலிப்குமாரின் ‘நிகழ மறுத்த அற்புதம்’

மரபையும் இந்தியப் பாரம்பரியத்தையும் பின்பற்றுகிறவர்களின் அடையாளம் என்ன? அவற்றிலிருந்து விலகிச் சென்றவர்களின் அடையாளங்கள் எவை? எனக்கேட்டால் நம்முன்னே இருப்பவர்களைச் சரியாக இனம் பிரித்துக் காட்டி விடுதல் ஒருவருக்கும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.

சரியாகச் சொல்வதானால் நாம் இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்குள் எந்தப் பக்கம் இருக்கிறோம் என நம்மையே அடையாளப்படுத்துவது கூடச் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. இவ்விரு வகைப்பாட்டிற்கும் உரியவர்கள் கிராமம்-நகரம் என வெளிகள் சார்ந்து வாழ்கிறார்கள் என உறுதியாகக் கூறிவிடலாம் என்பது கூட அவ்வளவு சுலபமாக இல்லை. கிராமத்து மனிதனிடம் நவீன மனிதனின் மனநிலை வெகுசுலபமாக வெளிப்பட்டு ஆச்சரியப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. நகரத்து மனிதர்கள் விடாப் பிடியாகப் பாரம்பரியத்தைப் போற்றிக் கொண்டு அமைதி வாழ்க்கைக்குள் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதைய துணிச்சந்தையில் கிடைக்கும் ஜீன்ஸ், கோட் போன்ற ஆண்களின் உடைகளோடும், மிடி, சுரிதார் எனப் பெண்களின் ஆடைகளோடும் நவீன மனிதர்கள் அலைகிறார்கள் என அடையாளப்படுத்தலாம் என்று நினைத்தால், அந்த ஆடைகளுக்குள்ளும் மரபைப் பின்பற்றும் மனநிலையோடு வலம் வருகிறார்கள் என்பதும் புரிகிறது. வெள்ளை வேட்டி, சட்டை சகிதமாகச் சுற்றும் அரசியல்வாதிகளும், அவரது தொண்டர்களும் பாரம்பரிய மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசியல்வாதிகள் என்பது ஓர் உதாரணம் தான். ஆடைகளுக்குள் அதற்கான முழு அர்த்தத்தோடும் மனம் ஒன்று படிந்து கிடைக்கிறது என்பதில்லை.

அப்படியானால் இவ்விரு வேறுபாடுகளும் அர்த்தமில்லாதவை என விட்டு விடக்கூடியவை தானா? அப்படியும் சொல்லி விட முடியாது. ஐரோப்பியர் களின் வருகையினால் உண்டான கல்வி, கலை இலக்கியச் சிந்தனை, அரசியல் பொருளாதாரத் தாக்கங்கள், ஊடக அறிவு போன்றவற்றால் கட்டமைக்கப் பட்டுவிட்ட இந்திய மனநிலை பாரம்பரியத்தையும் மரபையும் எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் கூடிக் கலைவதற்கும், கொண்டாடுவதற்கும் காரணங்களாக இருந்த திருமணங்கள், திருவிழாக்கள், குடும்பம் மற்றும் கோயில் சார்ந்த சடங்குகளும் அர்த்தமற்றவை போல இருந்தாலும் தேவையானவை போல விடாமல் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. அவைகளிடமிருந்து விட்டு விலகி விட ஒவ்வொரு தனிமனித மனமும் ஆர்வமாக இல்லை. நேரமில்லை காரணமாக அவற்றை முழுமையாக ஈடுபட்டுச் செய்ய முடியவில்லையே என்று தவிப்பே முதன்மையாக இருக்கிறது.

இலக்கியத்தின் தோற்றம் தொடங்கி இன்று வரை அதற்கான அடிப்படை உணர்ச்சியாக இருப்பது காதல் என்பதை ஒவ்வொரு இலக்கிய மாணவனும் ஒத்துக் கொள்ளவே செய்வான். அதே போல் ஒவ்வொரு காலகட்டத்துச் சமூக மாற்றத்திற்கும் சளைக்காது ஈடுகொடுத்துத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் சமூக நிறுவனம் குடும்பம். இவ்விரண்டும் எல்லாவற்றிற்குமான அடிப்படைக் கச்சாப் பொருள்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
பாரம்பரியமும் மரபும் காதல் என்பதை எப்போதும் நேர்மறையாக எதிர்கொண்டு ஏற்றுக் கொண்டதில்லை என்ற போதிலும், காதல் என்பதை வெறுப்புக்குரிய ஒன்றாகக் கருதி ஒதுக்கி விட வேண்டிய ஒன்று என்றும் சொல்லி விட வில்லை. அதற்கு மாறாக அது ஒரு புனிதமான ஒன்று எனக் காட்டிப் போற்றிப் புகழ்ந்து தனிமைப் படுத்திட விரும்பியது. அதே போல் குடும்பம் என்பதை விட்டுக் கொடுத்தல் என்பதன் மேல் கட்டப்பட்ட மாறாத ஒரு அமைப்பாகப் பாரம்பரியம் நினைக்கிறது. ஆனால் நவீனத்துவம் அப்படி நினைப்பதில்லை.

நவீனத்துவத்திற்கும் பாரம்பரியத்திற்கும் இடையே இருக்கும் இந்த உரசல் நமது காலப் படைப்பாளிகளின் முக்கியமான பாடுபொருளாக- உள்ளடக்கமாக இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள் தொடங்கி எண்பதுகளின் கடைசிவரை எழுதிய தீவிர இலக்கியவாதிகளின் தன்னிலையே இந்த இரட்டை எதிர்வுக்குள் எதாவது ஒரு பக்கம் சாய்வது என்பதாகத் தான் இருந்தது. இதனைத் திறனாய் வாளர்கள் காலனியத்திற்குப் பிந்திய மனநிலை எனக் குறித்துக் காட்டுவார்கள்.

அரசியல் விடுதலையில் பருண்மையாகத் தன்னைக் காட்டிக் கொண்ட நவீனத்துவம், சமூக விடுதலையினூடாகத் தனிமனித விடுதலை நோக்கி நகர்ந்து இன்று அனைவருக்குள்ளும் சுதந்திரம் என்னும் வேட்கையை உருவாக்கி விட்ட பெருநெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. அந்த வேட்கையின் வெளிச்சத்திலேயே எல்லாவற்றையும் விளக்கிடப் பார்க்கும் நவீன மனநிலைக் காதலையும் குடும்ப அமைப்பையும் கூட விடுதலையின் பரிமாணங்கள் வெளிப்படும் வெளியாக மாற்றவே விரும்புகிறது.

நவீனத்துவ மனநிலைக்குள் நுழைந்து விட்ட இந்திய வாழ்க்கைக்கும் இடையே இருக்கக் கூடிய ஆகப்பெரிய வேறுபாடு வெளிப்படும் சமூக நிறுவனம் எது? எனக் கேட்டு விடை தேட முயலும் சமூகவியல் மாணவனின் ஆய்வுக்களமாக இருப்பது இந்தியக் குடும்ப அமைப்பு. காதல் என்பது இரு நபர்கள் சம்பந்தப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடோ கொள்கை வேறுபாடோ காட்டாத அனைவரும் காதலின் தொடர்ச்சியாக அமையப்போகும் திருமணத்தையும் அப்படிப் பார்ப்பதில்லை. இந்தியத் திருமணங்கள், அவை காதல், கலப்பு, ஏற்பாட்டுத் திருமணங்கள் என எவையாக இருந்த போதும் ’இருமனங்களின் சங்கமம்’ என்பதற்குப் பதிலாக ’இரு குடும்பங்களின் கலப்பாகவே- இருசமூகக் குழுக்களின்’ சங்கமமாக இருக்கின்றன. ஆனால் நவீனத்துவத்தின் அடையாளமான மேற்கத்திய வாழ்க்கையில் திருமணங்கள் கூட இரு மனங்கள் சம்பந்தப்பட்டவை தான். விவாகங்களை இருமனங்களின் சங்கமமாகப் பார்க்கும் மேற்கத்திய சமூகம், விவாகரத்துக் களையும் அதே நிலைப்பாட்டோடு தான் எதிர்கொள்கின்றன. ஆனால் இந்திய மனநிலை அப்படி அல்ல என்பதுதான் முக்கியமான வேறுபாடு.

ஐரோப்பிய இலக்கியத்தில் தனிமனிதனின் –மனுசியின் விடுதலையை மையப்படுத்திக் காட்டி விட விரும்பித்தான் பலரும் முயன்றார்கள்; வெற்றி பெற்றார்கள். ஹென்றிக் இப்சன் போன்ற நாடகாசிரியர்கள் பொம்மை வீடு போன்ற நாடகங்களை எழுதிக் காட்டினார்கள். அவரது நோரா வெகுசுலபமாக வீட்டின் முன்வாசல் கதவைப் பின்காலால் எம்பித் தள்ளி விட்டு வெளியேறினாள். ஆனால் இந்தியாவில்- தமிழில் எந்தப் படைப்பாளியும் நோராவைப் போன்றப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆர்வம் காட்டவில்லை என்பதை விட அது யதார்த்தம் என்பதல்ல என்றே சொல்ல விரும்பினார்கள்.

போதும் இந்தக் குடும்ப வாழ்க்கை எனச் சொல்லிக் கிளம்பிச் சாமியான கணவன்களை எழுதிக் காட்டிய படைப்பாளிகள் பெண்களை அவ்வாறு படைத்து விடவில்லை. கணவனை விட்டுப் பிரிந்து விட நினைத்துக் கிளம்பி விட்டுத் திரும்பவும் தவிப்போடு திரும்பிய பல பெண்களையே தமிழ்ச் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நான் வாசித்திருக்கிறேன். அவற்றில் பல கதைகள் நினைவில் இருக்கின்றன என்றாலும் திலிப்குமாரின் அந்தக் கதை போல என் மனதை விட்டு நீங்காத கதையாக வேறொன்றைச் சொல்ல முடியாது. நிகழ மறுத்த அற்புதம் என்னும் உருவகத் தலைப்பில் அவர் எழுதிய அந்தக் கதை, வடிவத்திலும் புதுமையானது. முன்மாதிரியோ பின்பற்றுதல்களோ இல்லாத கதை. ஜேம்ஸ், திருமதி ஜேம்ஸ் எனக் கணவன் –மனைவி என இரு கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் நீண்ட உரையாடலாக எழுதப்பட்டது. தொடக்கத்தில் பேசுபவளாக இருக்கும் திருமதி ஜேம்ஸ் தொடர்ந்து எதுவும் பேசாதவளாகவே இருந்து விட்டுக் கடைசியில் தன் நிலையிலிருந்து இறங்கி விடுவதாகப் படைக்கப் பட்டுள்ளாள். கதையைத் திலிப்குமார் இப்படித் தொடங்குகிறார்:

திருமதிஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள்.
“ நான் போகிறேன்” என்றாள்.
சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், “ என்ன அவ்வளவு தானா?.. ” “ நிஜமாகவா..? என்னை விட்டுப் பிரியும்போது உனக்குச் சொல்ல வேறு ஒன்றுமே இல்லையா..? “ என்று கேட்டார்.“ ஒன்றுமே இல்லை என்றுதான் நினைக்கிறேன்”
“ எங்கே போவாய்..? ” “ எங்கோ.. வெகுதூரம்.. யாருமற்ற தனிமைக்கு..இறக்கும் போதேனும் நான் மட்டும் நான் மட்டும் தனியாக வெறுமையுடன் கொந்தளிப்பற்ற மனத்துடன் இறக்க விரும்புகிறேன்”.”
“ பைத்தியம் போல் உளறாதே. இறக்கும்போதுஎல்லாரும் அப்படித்தான் இறக்க வேண்டும். அவரவர்கள் மட்டுமே தனியாக, தனித்தனியாக, உலகமே திரண்டு வந்து நின்றாலும் மரணம் உன்னைத் தனிமையில் ஆழ்த்தித் தான் அணுகும்”.
திருமதிஒன்றுமே சொல்லவில்லை
“ உன் 42 ஆவது வயதில் இப்படியொரு முட்டாள் தனத்தைச் செய்ய விரும்புவாய் என்று நான்
சற்றும் எதிர்பார்க்கவில்லை.என் பேச்சைக் கேள். பேசாமல் இங்கேயே இருந்து விடு”
“ இல்லை நான் போக வேண்டும்”. “ அப்படியே தான் என்றாலும், நீ விரும்பும் தனிமைக்கு இங்கு என்ன குறைவு.? நீயும் நானும், எவ்வளவு ஆண்டுகளாக - இதே வீட்டில் தான் என்றாலும்- இரண்டு முதிர்ந்த பிராணிகளைப் போல் தனித்தனியாகத் தானே இருந்து வருகிறோம். நீ விரும்பினால் இன்று முதல் வேறு வேறு அறையில் படுத்துக் கொள்ளலாம். ”
“ இல்லை, நான் நிச்சயித்து விட்டேன்.நான் போய்த்தான் தீர வேண்டும்”
இப்படி உறுதியைக் காட்டிய திருமதி ஜேம்ஸ் கடைசியில் வெகு நேரமாகத் தன் கணவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த திருமதி ஜேம்ஸ் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு மெல்ல அவரிடம் சென்று, அவரது தோள்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள் என முடிக்கிறார். இடையில் இருவருக்கும் நடக்கும் பலவிதமான பரிமாணங்கள் கொண்ட உரையாடலில் ஒருவித நாடகத்தன்மை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து அவர் பேசிக் கொண்டே இருக்க, ’திருமதி ஜேம்ஸ் ஒன்றும் சொல்லவில்லை’ எனத் திரும்பத்திரும்ப எழுதிக் காட்டும் உத்தியைத் திலீப்குமார் அற்புதமாகக் கையாண்டுள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலின் பகுதிகள் சிலவற்றை நாடக உரையாடலாக மாற்றியே நான் வாசித்திருக்கிறேன். இதோ சில.
திரு: [ அவளுக்கு நேர் எதிரில் அமர்ந்து விட்டார்]
முதுமையையும் வெறுமையையும் யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாது. என்றாலும் ஒருவருக்கொருவர் துணை என்ற ஆசுவாசம் நமக்கு நிச்சயம் கிடைக்கும். இரண்டு குடிகாரர்களைப் போல், தனித்தனிக் கோப்பைகளில் நமக்கான விஷத்தைக் குடிப்போம். என் விஷம் என்னைக் கொல்லும் வரை அல்லது உன் விஷம் உன்னைக் கொல்லும் வரையேனும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை] #####

திரு: [தன் மனைவியின் கைகள் தன்மீது பட்டவுடன் திரு ஜேம்ஸ் மேலும் சத்தமிட்டு அழுதபடி அவளை இறுகத் தழுவிக் கொண்டார்.]
திருமதி [ஒன்றும் சொல்லவில்லை] #####

திரு: உன் அந்த நாளைய முகம் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. செம்மையும் பளபளப்பும் மிகுந்த கன்னங்களுடன் ஓர் அற்புத ஜ்வாலையைப் போல் நீ என்முன் நின்ற கோலம் எனக்கு என்றுமே மறக்காது. அந்த நேரத்தில் நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் தெரியுமா?
திரு: அப்போது நானும் அழகாக இருந்தேன். என் புஜங்களையும் மார்பு ரோமங்களின் அடர்த்தியையும் கருமையையும் பார்த்துப் பார்த்து எவ்வளவு மமதை கொண்டிருந்தேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை] #####


திரு: நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் குடிகாரன். கவிஞன். அதனால் உளறுகிறேன். எப்போதும் தரையில் கால் பதியாமல் மிதக்கிறேன் என்றுதானே.
திரு: உண்மைதான். நான் மிதப்பில்தான் உளறுகிறேன் என்றே வைத்துக் கொள். ஆனால் தரையோடு பிணைந்த வாழ்க்கையின் சிறுமை, மிதக்கும்போதுதான் கண்களுக்குப் புலப்படும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை] #####

திரு: இத்தனையும் நீ என்னை விட்டுப் பிரிந்துவிடுவாய் என்பதற்காகச் சொல்லவில்லை.[ அவளைத் தூக்கி நிறுத்த நினைத்துக் கைகளை நீட்டுகிறார். அவள் அந்தக் கரத்தைப் பற்றிக் கொள்ளாமல் எதிர்ப்புறம் பார்த்து எழுகிறாள். பெட்டிக்கருகில் சென்று விட்டாள்]
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை.] #####

திரு: சரிதான் . நீ என்னை விட்டுப் பிரிவது ஒரு வகையில் ரொம்பவும் சரிதான். ஒருவேளை நான் நீயாக இருந்து நீ நானாக இருந்திருந்தால் நிச்சயம் வெகு நாட்களுக்கு முன்பே உன்னை விட்டு நான் பிரிந்திருப்பேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை] #####

திரு: வாழ்க்கையில் அநேக சந்தர்ப்பங்களில் நம்மால் சரியானதை யோசிக்க மட்டுமே முடிகிறது. செய்ய முடிவதில்லை. வாழ்க்கை எத்தனை கொடூரமானது என்பதை நீ அறியமாட்டாய்.
திரு: நானும் அப்படி யோசித்துப் பார்த்ததுண்டு. ஆனால் நான் வேறு மாதிரி இருந்திருப்பேனா என்பதை நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. இதுவரை வாழ்ந்ததை விடச் சற்றுக் கண்ணியமானவனாக வாழ்ந்திருக்கக் கூடும். என்றாலும் அப்போதும் நான் இன்று போலவே ஒரு பரிதவித்த ஆத்மாவாகவே இருந்திருப்பேன். அப்போதும், இப்போது போலவே காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமைதான் என் கண்களில் பட்டிருக்கும்.[ பேசியபடி இடதுபுற மேடைக்கு வந்து விட்டான். கையில் ஆல்பத்தைத் தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் உள்ள இடத்தில் வைக்கிறார்]
திரு: உனக்குத் தெரியுமா? வாழ்க்கையின் வெறுமையை அனுபவங்களால் நிரப்பிச் சரிக்கட்டிவிட முடியாது. அன்பாலுங்கூட அதை நிரப்பிவிட முடியாது என்றே தோன்றுகிறது.

திரு: வயோதிகத்தில் அனுபவங்களுக்கும் அன்புக்கும் வாய்ப்புகளே இல்லை. வயோதிகம் எல்லாவற்றையும் உலர்த்திவிடும்.
வயோதிகம் எவ்வளவு இரக்கமற்றது தெரியுமா? அது உனக்குப் புலப்பட இன்னும் நாட்கள் பிடிக்கும். நீ என்னைவிடப் பதினைந்து வயது இளையவள். உன் கால்களில் இன்னும் பலம் இருக்கிறது. நடப்பதற்கும் கடப்பதற்கும் உனக்குப் புரியாது.
திரு: என் பேச்சு நாடகத்தன்மை மிகுந்ததாக இருக்கிறது என்று உனக்குத் தோன்றுகிறதா? வாழ்க்கை எப்போதும் அப்படித்தான். ஆனால் நாம் தான் அது அப்படியில்லை என்று எதிர்நாடகம் ஆடுகிறோம்.
திரு: வயோதிகம் எப்படிப் படர்கிறது தெரியுமா? வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்றுச் சந்தடியின்றி திடீரென்று இழைந்துவிடுவதைப் போல் வெகு ரகசியமாய் உனக்குள் பாய்ந்துவிடும் அது. உன் நாளங்களை வற்றச் செய்துவிடும். உன் அழகிய கரிய கேசத்தை உதிர்த்து, உன் காதோரங்களில் நரைபடியச் செய்துவிடும்.
திரு: நான் சொல்வதை, நீ என்னை விட்டுப் பிரிந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் நீ நிச்சயம் உணர்வாய்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை] #####

திரு: என் பேச்சைக் கேள்! நீ என்னை விட்டுப் பிரிவது ஒரு வகையில் சரிதான் என்றாலும்கூட நீ என்னை விட்டுப் பிரியாதே. தயவுசெய்து வயோதிகத்தின் வெறுமையையும் தனிமையையும் ஏற்றுக் கொள்ளாதே. அது மிகவும் பயங்கரமானது. அதைவிட உன்னை நீ மாய்த்துக் கொள்; உனக்காக நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை.அவரது குரூரத்தைப் புரிந்து கொண்டவளாய்க் கோபத்துடன் கிளம்பத் தயாரானவளிடம்]
திரு: நீ நினைப்பது போல் இயற்கை அவ்வளவு ரம்மியமானதல்ல. இதோ பார்! வெளியே பனிக்காலம் முடிந்து வசந்தம் வரத்தொடங்கிவிட்டது. எங்கும் பசுமை படர்ந்து சிரிக்கிறது. ஆனால் என்ன? அது உன்னை என்ன செய்யும்? ஒன்றுமே செய்யாது. வசந்தம் வயதானவர்களை ஒன்றுமே செய்யாது. வாழ்க்கையின் வெறுமைக்கு முன் இயற்கையின் பாத்திரம் ஒன்றுமில்லை.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை] #####

திரு: ஏன் கர்த்தருக்குக் கூட வெறுமையில் ஏதும் பாத்திரம் இல்லை. ஒருவேளை வழங்கியதைத் தவிர.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு: சொல்வதைக் கேள். பேசாமல் இங்கேயே இருந்துவிடு. நம் பிரிவு நம்மிருவருக்கும் மேலும் அதிகமான துக்கத்தைத் தான் தரும். நாற்பத்திரண்டாவது வயதில் ஒருவிடலைச் சிறுமியைப் போல் நடந்து கொள்ளாதே.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை] #####

திரு: காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும் அல்லது மறக்கச் செய்துவிடும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை] #####

திரு: [ஜன்னல்களைத் திறந்து வைத்து]
பார். குளிர்ந்த மலைக்காற்று கூர்மையாக வீச ஆரம்பித்துவிட்டது. வெளியே முற்றாக இரவு சில்லிட்டுப் பரவி விட்டது. நிலவும் நட்சத்திரங்களும் அற்ற பனிக்காலத்து இரவு எல்லையற்ற ரகசியம்போல் சூழ்ந்து விட்டது. அங்கு ஒன்றுமில்லை. இருளைத் தவிர. மௌனமும் வெறுமையுமே படிந்திருக்கிறது எங்கும்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை. காற்று உண்டாக்கிய உணர்வில் ஈடுபட்டவளாய்த் திரும்பவும் பெட்டியை மடியில் வைத்தவளாய்ச் சோபாவில் அமர்கிறாள்]
திரு: [பொருட்கள் ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்தபடி]இந்தப் புராதன வீட்டின் நிசப்தம் என்னை அச்சுறுத்திக் கொன்றுவிடும். தயவுசெய்து என்னை விட்டுப் போகாதே, என் தளர்ந்த முகத்தைப் பார். என் நடுங்கும் மெலிந்த கைகளைப் பார்.
திருமதி: [ஒன்றுமே சொல்லவில்லை] #####

No comments :