November 20, 2009

பாசமுள்ள இயந்திரங்கள்: ஆர்.சூடாமணியின் விலைகடந்த இருபது ஆண்டுகளில் ஊடகங்களின் கவனத்திற்கு வந்ததால் அதிகம் விவாதிக்கப் பட்ட சில சமூகப் பிரச்சினைகள் உண்டு. பெண் சிசுக்கொலைகள் என்பதும் அவற்றுள் ஒன்று. எனது சொந்தக் கிராமம் பெண் சிசுக்கொலைகள் அதிகம் நிகழும் பகுதியாகச் சொல்லப் பட்ட உசிலம்பட்டி பகுதியில் தான் உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் ஆற்றுப் பாசனமும் குளத்துப் பாசனமும் அறியாத புன்செய்க் காடுகளும் தோட்டங்களும் நிரம்பிய கிராமங்களின் தொகுதி. வறுமையையும் வேலையின்மையையும் பிரித்துப் பார்த்தறியாத மனிதர்கள் வாழும் பிரதேசம். அவற்றின் கடந்த காலமும் நிகழ்காலமும் என் கண் முன் இருப்பவை. அந்தக் கிராமங்களைத் தவிர எனது படிப்புக்காகவும், ஆய்வுக்காகவும் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் பயணம் செய்திருக்கிறேன். வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் தங்கி இருக்கிறேன். பணி ஆற்றும் பொருட்டுப் பாண்டிச்சேரியில் எட்டாண்டுகள் இருந்திருக்கிறேன். அப்போது தமிழ் நாட்டின் வட மாவட்டங்களின் சிறுநகரங்கள், கிராமங்களுக் கெல்லாம் கூடப் பயணம் செய்ததுண்டு.சில அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்காக நாடகங்கள் போடுவதற்கான பயணங்கள் அவை.

இப்போது நான் பணி ஆற்றும் பல்கலைக்கழகப் பணி காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் சென்று வருகிறேன். எனது வாழ்க்கையும் பயணங்களும் எனக்கு உணர்த்திய அறிவுப்படி பெண் சிசுக்கொலை என்பது உசிலம்பட்டிப் பகுதியின் பிரச்சினை மட்டும் அல்ல என்பதை உறுதியாகச் சொல்வேன். இன்னும் சொல்வதானால் இது தமிழ் நாடு என்ற மாநில அளவிற்குள் நின்று போகும் பிரச்சினை என்பது கூட உண்மை அல்ல. வறுமையும் ஆணாதிக்கக் கருத்தியலும் தாண்டவமாடும் இந்தியச் சமுதாயத்தின் பிரச்சினை என்பதுதான் சரியான கருத்தாக இருக்க முடியும்.

ஆண்களின் கலவியின்பத்திற்குத் தீனிபோட்டுப் பிள்ளை பெற்றுத் தரும் எந்திரங்களாகவும் , வீட்டிலும் வெளியிலும் கிடைக்கும் பயன்படு பொருட் களில் ஒன்றாகவும் பெண்களைக் கருதும் சமூக நடைமுறைகளைத் தங்களின் சாதிப் பெருமையாகக் கருதும் சமூகங்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பெண்கள் இரண்டாம் பாலினராகக் கருதப்படுவது நம்பிக்கையாக இருக்கிறது. அத்துடன் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணுக்குக் குடும்பம் நடத்தத் தேவையான அடிப்படைப் பொருட்களைச் சீதனமாகக் கொடுத்து அனுப்ப வேண்டும். அது பிறந்த வீட்டு ஆண்களின் கடமை என நினைக்கும் சமூகங்கள், பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையையும் தங்கள் வீட்டிற்கு வந்துள்ள ஒரு செலவினமாகக் கருதுவது நடைமுறையாக இருக்கிறது. அந்தக் குழந்தை வளர வளரத் தங்கள் குடும்பத்தின் செலவினங்களும் கூடி விடும் எனக் கருதும் நிலையில் தான் பெண் குழந்தைகளைச் சிசுவாக இருக்கும் போது கொல்வதும், கருவாக இருக்கும் போதே கண்டறிந்து கலைப்பதும் நடக்கிறது.

அடிப்படையில் சிசுக் கொலைகள் என்பது தனிமனிதர்களின் குற்றமனம் சார்ந்ததல்ல; சமூக நடைமுறைகள் சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொள்ளும் நிலையிலேயே அக்குற்றங்கள் நடப்பதைச் சமூக ரீதியாகக் களையும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இம்முயற்சிகளுக்கு அரசும் சமூக இயக்கங்களும் பெரிதும் பணியாற்ற முடியும் என்ற போதும் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் படைப்பாளிகளும் தங்கள் படைப்புகள் மூலம் விழிப்புணர்வை உண்டாக்க முடியும். அப்பணிகளைத் தமிழ் படைப்பாளிகள் அவரவர் அளவில் காத்திரமாக செய்துள்ளனர். வாரப் பத்திரிகை போன்ற அச்சு ஊடகங்களின் வழியாக முதலில் கவனம் பெற்ற பெண் சிசுக் கொலைகள் பின்னர் படைப்பாளிகளின் கவனம் பெற்றுக் கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் எழுதப் பட்டன. அதன் உச்சமாக இரண்டு படைப்பு களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முதலாவது எப்போதும் தனது படைப்புகளைக் களப்பணி மூலம் உருவாக்கும் ராஜம் கிருஷ்ணன்,உசிலம்பட்டிப் பகுதிகளில் களப்பணி செய்து அந்நிலப்பகுதியையே பின்னணியாகக் கொண்டு எழுதிய ‘மண்ணகத்துப்பூந்துளிகள் ’ என்னும் நாவல். இரண்டாவது பாரதிராஜாவின் கருத்தம்மா என்ற திரைப்படம். இரண்டும் அதனதன் அளவில் பெண் சிசுக் கொலை என்னும் பிரச்சினையைச் சமூகப் பொருளாதாரப் பின்னணிகளோடு முன் வைத்து விவாதங்களை உருவாக்கிய படைப்புக்கள்.

பெண் சிசுக்களைக் கொலை செய்யும் போக்கை நேரடியாகச் சுட்டிக் காட்டிப் படைப்புகள் வந்த நேரத்தில் ஒரு படைப்பாளி அப்பிரச்சினையை வேறு ஒரு கோணத்தில் எழுதிக் காட்டினார். குழந்தை பெறுவது பெண்களின் விருப்பத் திற்குரிய ஒன்றாக இல்லை; ஆண்களின் விருப்பமே அதனை முடிவு செய்கிறது என்று கூறிடும் தொனியில் தனது சிறுகதை ஒன்றை எழுதிக் காட்டினார். அந்தக் கதையின் பெயர் விலை; கதையின் ஆசிரியர் ஆர்.சூடாமணி.

குழந்தைகளைப் பெறுவதும் வளர்ப்பதும் கொல்வதும் ஆணின் விருப்பம் சார்ந்தது; அவனின் விருப்பத்திற்கு இணங்கிச் செயல்படும் பெண் ஒரு கருவிதான் என முன் வைக்கும் சூடாமணியின் விலை என்னும் சிறுகதை முழுமையாக அந்தப் பாவத்தில் பெண்ணுக்குப் பங்கில்லை எனவும் வாதிடவும் இல்லை. ஆணின் ஏவலுக்கு அடிபணிந்து தனது உடலைத் தரும் போது கிடைக்கும் உடல் சுகத்தைப் பெண்ணுடலும் விரும்புகிறது; மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறது. பின்னர் பெற்ற குழந்தை சுமையாகி விடும் என்ற கணவனின் வாதத்தை ஏற்றுக் கொலை செய்யவும் தயாராகிறாள் என்பதை அக்கதை பேசுகிறது.

இந்திய சமூகத்தில் புரையோடிப் போன இப்பிரச்சினையைச் சூடாமணி ஒரு நிகழ்காலக் கதையாக எழுதவில்லை. வரலாற்றில் எப்போதோ நடந்தது என்றும் சொல்லவில்லை. ஒரு புராணக்கதையின் மறுவிளக்கமாக அக்கதை எழுதப்பட்டுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

மதுரா நகரம் ஆனந்தக் கிளர்ச்சி கொண்டிருந்தது. கம்சன் அழிந்து விட்டான் . கோகுலத்திலிருந்து அக்ரூரால் அழைத்து வரப்பட்டிருந்த பலராமனும் கிருஷ்ணனும் முதலில் மல்லர்களைக் கொன்று அரசனின் மற்ற சூழ்ச்சிகளையும் வென்றபின் இறுதியாகக் கண்ணன் மாமனின் மார்பில் ஏறி உட்கார்ந்து அவனை வதம் செய்தான் எனக் கதையைத் தொடங்கும் சூடாமணி, கதையின் காலத்தைப் புராண காலம் எனக் காட்டி கண்ணனின் வருகையைக் கொண்டாடும் மதுரா நகரத்துக்கு வாசகர்களைப் பின்னோக்கி அழைத்துப் போகிறார். அங்கே வெளியிலிருந்து கோஷங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

“வாழ்க கிருஷ்ணன்!”
“வாழ்க பலராமன!”
“ கொடுங்கோலன் ஒழிந்தான்!”
“ உக்ரேசன மகாராஜா வாழ்க!”
“கண்ணன் இறைவனின் அவதாரம்!”
“ திருமால் வந்தான் எமைக்காக்க!”
“திருமால் புகழ் ஓங்குக!”
கம்சனின் உயிர் பிரிந்த கணம் விண்ணுலகம் கண்ணனின் மேல் பொழிந்த மலர்மழை இன்னும் அவன் முடியில் அங்குமிங்குமாய் ஒட்டிக் கொண்டிருந்தது. தேவகி உடல் நடுங்கத்தொடங்கியது. “இறைவன் அவதாரம், திருமால் வந்தான். ஆனால் இந்தத் தெய்வப்பிறப்புக்காக அவள் கொடுத்த விலை!” ஆறு சிசுக்களின் உயிர் அல்லவா எனத் தாயின் உள்ளம் தன்னைத்தானே கேள்வி கேட்டு குற்ற உணர்வுக்குள் தள்ளியது என எழுதுகிறார் சூடாமணி.

ஆகச்சிறந்த படைப்புகள் எவையெனக் கேட்டு விடை சொல்லும் திறனாய்வாளர்கள் குற்ற வுணர்வுடைய பாத்திரங்களைப் படைத்துக் காட்டிய அத்தகைய குற்றவுணர்வு கிளம்பும் மனநிலையை வாசகர்களுக்குத் தரும் படைப்புகளே சிறந்த படைப்புகள் என்கின்றனர். தனது கதைகளில் குற்றவுணர்வுடைய பாத்திரங்களையே அதிகம் படைத்துள்ள சூடாமணி இந்தக் கதையிலும் அதனைச் செய்து காட்டியுள்ளார் என்பதுதான் இந்தக் கதை மறக்காமல் இருப்பதின் காரணம் ஆகும்.
நகரமே விழாக்கோலம் பூண்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கக் குற்றவுணர்வில் தவித்த தாயின் மனநிலையை எழுதிக் காட்டும் அந்த வரிகளை வாசிக்கலாம்:
“ குழந்தைகள் ஒவ்வொன்றையும் பிறந்தவுடனேயே உன்னிடம் தந்துவிடுகிறேன்” என்று கம்சனுக்கு வசுதேவர் வாக்களித்த போது புரிந்து தான் பேசினாரா? பிஞ்சுக் கொலைகளுக்கு உடந்தையாய் இருக்கிறேன் என்ற அர்த்தம் மனதில் தைக்கவே இல்லையா? மனைவியைக் கொல்ல வந்த மைத்துனனிடம், “ இவளைக் கொல்லாதே. இவளையும் என்னையும் பிரித்து வைத்து விடு, உன் பிரச்னை தீர்ந்தது” என்று சொல்லியிருக்கலாமே? அப்படியின்றி பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தையையும் மறுகணமே சாகக் கொடுக்கப் போகிறோம் என்பது தெரிந்தே ஒவ்வொரு முறையும் கருவுற்று .. இறைவனுக்கே என்றாலும் இந்தப் பலிகள் நியாயமா?
என்று எழுதி விட்டுக் கணவனின் பக்கம் அவள் பார்வை விழித்துக் கனன்றது. வெறும் சதைவேட்கையாக இவர் வாழ்வு.. ஆனால் நானும் தானே ஒப்புக் கொண்டேன். அப்படி ஒப்புக் கொண்ட கணத்திலேயே இன்னும் பிறந்திராத ஆறு குழந்தைகளையும் கம்சனுக்கு முன்பாகவே கொன்றுவிட்ட தாயல்லவா நான்? இந்தப் பாவத்தின் கனம் என்றாகிலும் நெஞ்சை விட்டு நீங்குமா? என்று கேட்டு விட்டு , ‘ ஐயோ என் குழந்தைகளே.. என் குழந்தைகளே..’ எனக் கதறுகிறாள் தேவகி.

இந்தக் காட்சியை இப்படி எழுதிக் காட்டும் சூடாமணியின் நோக்கம், வசுதேவர், தேவகி என்ற புராணக் கதாபாத்திரங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் திரும்பவும் எழுப்பி நியாயத் தீர்ப்பு வழங்குவது அல்ல. அதற்கு மாறாக இந்தக் கதையைப் படிக்கும் ஒரு வாசகனோ, வாசகியோ அத்தகைய சிசுக் கொலைகளைச் செய்து விடக் கூடாது என்பதற்காகத் தான். செய்யாமல் கைவிடுவது மட்டுமல்ல; செய்யத் துணை போகாமல் இருப்பதுதான் ஒரு படைப்பின் நோக்கமாக இருக்க முடியும். அந்த வகையில் சூடாமணியின் விலை என்னும் சிறுகதை நிகழ்காலத்தைப் புராண காலத்தோடு தொடர்புபடுத்தி விசாரணை மேற்கொண்டு வெற்றி பெற்ற கதை என்பதில் ஐயமில்லை.

No comments :