வேறுபாடுகளுடன் கூடிய நட்பின் இழப்பு – பாலாவுக்கு அஞ்சலி



பாலச்சந்திரன் என்னும் நீண்ட பெயரைச் சுருக்கி நண்பர்கள் பாலா என அழைத்த போது அதைத் தனது கவிப்பெயராக ஆக்கி விடும் ஆசை அவருக்கு இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. இதை அவரிடமே கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் என நினைத்தாலும் இனி இயலாது. அந்தப் பெயருக்கும், அந்தப் பெயர் விட்டுவிட்டுப் போயிருக்கும் பதிவுகளுக்கும் சொந்தக்காரரான பாலச்சந்திரன் இப்போது நம்மோடு இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற போது இனி அவர் செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்தி அனுப்பி வைத்தோம். அதில் ஒன்றிரண்டைக் கூட முடிக்க விடாமல் காலம் தனது கணக்கை முடித்துக் கொண்டு விட்டது.

நான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் படித்துக் கொண்டிருந்த போது பாலாவை அவரது புத்தகங்களின் வழியாகச் சந்தித்தேன். புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை என்ற நூல் அப்போது தான் அன்னம் வெளியீடாக வந்திருந்தது. புதுக்கவிதை என்னும் வஸ்துவை விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அது குறித்துப் பேசுவதற்கான தளமொன்றை உருவாக்கித் தந்த புத்தகம் என்ற அளவில் அந்த நூல் கல்வித்துறை வட்டாரத்தில் அங்கீகாரம் பெற்றது. புதுக்கவிதைக்கான அங்கீகாரத்தை உருவாக்கித்தந்த புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை, பாலா என்ற பெயரையும் அங்கீகரிக்கப் பட்ட எழுத்தாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அங்கீகாரத்தின் தொடர்ச்சியை அவரது இன்னொரு நூலான சர்ரியலிசம் உறுதிப்படுத்தியது. வானம்பாடிகளின் பொதுக் குணமான ’ பெருங்கூட்டத்தை நோக்கிப் பேசும்’ புறநிலைக் கவிதைகளையே பாலாவும் எழுதியுள்ளார். அவர் எழுதிய கவிதைகள் தரும் வாசிப்பனுபவத்தை விட அவர் மொழி பெயர்த்த கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் ஒரு படி உயர்ந்தது என்றே சொல்ல வேண்டும். வித்யாபதியின் காதல் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். தனது இலக்கியத் தேர்வை மையமாகக் கொள்ளாமல் நண்பர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுதல் என்ற நெருக்கடி காரணமாக அவர் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவை பலவும் காத்திரமான இலக்கியப் பகுதிகளாக இல்லாமல் இருந்தன. என்றாலும் அவரது மொழி பெயர்ப்புகள் மூலமும், ஆங்கிலக் கட்டுரைகள் மூலமும் தமிழின் பிரபலக் கவிஞர்களான சிற்பி, மு.மேத்தா, மீரா, வைரமுத்து, தமிழ் நாடன் போன்றவர்கள் பிறமொழியாளர்களின் கவனத்துக்குச் சென்றுள்ளனர். அவரது ஆங்கிலப் புலமையை முழுவதும் பயன்படுத்தித் தமிழின் வளமான கவிதைகளையும் புனைகதைகளையும் ஆங்கிலம் வழியாக சர்வதேசக் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியும். அதை ஒரு கோரிக்கையாக வைத்துத் தான் நான் பல்கலைக்கழகப் பணி ஓய்வின் போது வழி அனுப்பினேன். அது நடக்காமலேயே போய்விட்டது

அரசுக் கல்லூரியொன்றில் ஓர் அறிவியல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கித் தனது இலக்கிய வாசிப்பு, எழுத்தார்வம், ஆசிரியர்கள்,இலக்கிய நண்பர்கள் போன்றோரின் தூண்டுதல் போன்ற காரணங்களால் இலக்கியத்திற்குள் வந்தவர் பாலா. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பதிலும், பேசுவதிலும் பெருவிருப்பம் கொண்டு இலக்கிய மாணவராக மாறி, ஆங்கிலம் கற்று கல்லூரி ஆசிரியராகி, நிறைவாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரை உயர்ந்தவர். அவர் பணியாற்றும் இடங்களில் எப்போதும் ஒலிபெருக்கியின் முன்னால் ஒரு சங்கீதத்தின் தாளலயத்துடன் ஒலித்துக் கொண்டே இருக்கும் . தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கான கடமையைக் கூடச் செய்யத் தயங்கும் நிலை வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர் பணியாற்றும் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வேலைகளைச் செய்வதில் அவர் ஒருவித லயிப்பைக் கொண்டிருந்தார். அத்தகைய வேலைகளைச் செய்பவர்களுக்குச் சில நேரங்களில் அந்த நிறுவனம் பொறுப்பான பதவிகளை வழங்குவதுண்டு. அப்படியான பல வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் அதை ஏற்றுக் கொள்ளாமல் விலகி நின்றவர். அத்தகைய பதவிகள் தனது இலக்கியம் சார்ந்த, தனிமனித சுதந்திரம் சார்ந்த வேலைகளில் ஈடுபட முடியாமல் கட்டிப் போட்டுவிடும் என்ற உண்மையைப் புரிந்து வைத்திருந்தது தான் காரணம்.

அதே நேரத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்ற தகுதி வழியாகக் கிடைத்த சாகித்ய அகாடெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை மட்டும் தட்டிக் கழிக்கவில்லை. சாகித்ய அகாடெமியில் பாலா பதவி வகித்த காலத்திலும் அதன் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் விருது அறிவிப்புகளும் விமரிசனத்துக் குரியனவாகவே இருந்தன. அவர் பொறுப்பில் இருந்த போது சாகித்ய அகாடெமி ஏராளமான கருத்தரங்குகளை நடத்தியது என்றாலும், அதன் பொதுவான போக்கில் பெரிய மாற்றம் எதுவும் நடந்து விடவில்லை.தமிழ் நாட்டில் அங்கீகரிக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு எது சரியான இலக்கியம் என்ற புரிதல் இருந்த போதிலும் அதனை அங்கீகரித்து வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆசையை அவர்கள் வெளிப் படுத்துவதில்லை. அப்படியான ஆசையை வெளிப்படுத்தாமல் போவதற்குப் பல்வேறு புறச்சூழல்களும் காரணமாக இருக்கின்றன. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள், நம்பிக்கைகள், தான் சார்ந்த குழுக்களையும் குழுவின் உறுப்பினர்களையும் மேலே தூக்கி விடும் நோக்கம் ஆகியனவும் காரணங்களாகி விடுகின்றன. இவைகளையெல்லாம் இன்று முழுவதும் பலவீனம் என்று சொல்லி விட முடியாது. பல நேரங்களில் அவை ஆளுமையையும் அதிகாரத்தையும் தருவனவாக இருக்கின்றன.

பல்கலைக்கழகத்திற்குள் நட்போடும், இலக்கிய வெளியில் முரண்பாடுகளும் வேறுபாடுகளும் பழகும் நண்பராக இருந்த பாலா இப்போது இல்லை என நினைக்கும் போது இனி வேறுபாடு கொண்டு விவாதிக்க ஒருவர் இல்லை என்ற வருத்தம் துரத்திக் கொண்டிருக்கிறது.
===================================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்