September 27, 2009

நண்டு தின்னும் ஊரில் : பூமணியின் குடை

“வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளின் வீட்டில் லஞ்சப் பணம். லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி”
“லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையின் எதிரொலி. பத்திரவுப் பதிவுகள் முடக்கம்”
“பல்கலைக்கழகத்துணைவேந்தர் நீக்கம். லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளால் அரசு முடிவு”
இப்படிப் பட்ட செய்திகள் சமீபத்தில் அடிக்கடி செய்தித் தாள்களில் வருகின்றன.

கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதல் இல்லாத அரசை நிறுவியுள்ள டாக்டர் மன்மோகன்சிங் அரசு, நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் அன்றாடப் பிரச்சினை களுக்கும் இருக்கும் தடைகளில் முதன்மையானது லஞ்சமும் கடமையுணர்வு தவறுதலும் தான் என்பதை உணர்ந்து அதை நீக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு தினசரிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டி ருக்கின்றன. அச்செய்திகளை வாசித்தவர்கள்,நமது தமிழ்ச் சினிமாக்களில் லஞ்சத்தையும் பொறுப்பின்மையையும் ஒழிக்கக் கிளம்பிய இந்தியன் தாத்தா, பேராசிரியர் ரமணா, அந்நியன் அம்பி, சிபிஐ ஆபிசர் கந்தசாமி போன்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கதாநாயகர்களாக வலம் வரத் தொடங்கி விட்டனர் எனக் கேலியாகப் பலர் பேசிக்கொள்வதும் ஆங்காங்கே காதில் விழுந்தது.

அதே நேரத்தில் எதையும் மாத்தி யோசிக்கிற அறிவுஜீவிகளும் ஆங்கிலப் பத்திரிகைகள் படித்து விவாதங்களில் ஈடுபடும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களும் , “இதெல்லாம் வெறும் கண் துடைப்பு சார் ; சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்து கிடைக்கும் லஞ்சத்தை ஒழிக்க முடியவே முடியாது” எனப் பேசிக் கொள்வைதையும் கேட்டிருக்கலாம். லஞ்ச மரத்தின் கிளைகளை வெட்டினால் போதாது. விஷ விதையாக முளைத்து ஆணி வேர் போட்டு வளர்ந்திருக்கும் லஞ்சமென்னும் மகாமரத்தை அடியோடு வெட்டிச் சாய்க்க வேண்டும்; புரட்சி நடந்தால் தான் சரியாகும் எனச் சொல்லும் நண்பர்களின் சவடால்களையும் கேட்டிருக்கிறேன்.

நம் கண்முன்னே கொள்ளை கொள்ளையாகப் பணம் சேர்த்த அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தவித உடல் உழைப்பிலும் ஈடுபட வில்லை. தொழிலில் ஈடுபடாமல் சொத்துச் சேர்த்து விட்டுத் தொழில் அதிபர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளை நெருங்காமல் , சொந்த வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த முடியாமல் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் லஞ்சம் வாங்கும் அலுவலகச் சிப்பந்திகளையும் கடைநிலை ஊழியர்களையும் கைது செய்யும் லஞ்ச ஒழிப்புத் துறையை அரசு அவ்வப்போது தூண்டிவிடும்; பலரைக் கைது செய்யும்; ஒருவிதப் பயத்தையும் அச்சத்தையும் உண்டாக்கி விட்டுப் பிறகு ஒதுங்கிக் கொள்ளும். ஒருவிதத்தில் மக்களை ஏமாற்றும் திசை திரும்பல்கள் எனச் சொல்பவர்களின் கருத்தை மறுக்கவும் முடியாது.

லஞ்சம், கையூட்டு, கமிஷன், மால், மாமூல் எனப் பல பெயர்களில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த அரக்கனின் தோற்றம் அறஞ்சார்ந்த வாழ்க்கையிலிருந்து விலகியதன் காரணமாகவே தோன்றியது. அறஞ்சார்ந்த வாழ்க்கையிலிருந்து விலகியதற்குக் காரணம் கடவுளையும் மதத்தையும் விட்டு விலகியது தான் என ஒருசாரார் பேசுவதையும் கேட்டிருக்கலாம். அளவிற்கு மிஞ்சிய ஆசையில் தனிமனிதன் ஒழுக்கத்தை மீறுகிறான்; அதனால் நமது கல்வியில் நீதிபோதனை வகுப்புக்களும் ஒழுக்கவியல் மதிப்புகளும் சேர்க்கப்பட வேண்டும் என வாதிடுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய விவாதங்களையும் வைக்கப்படும் காரணங்களையும் அப்படியே ஏற்கவும் முடியவில்லை; தள்ளவும் முடியவில்லை என்பதுதான் உண்மை. லஞ்சத்தை ஒழிப்பது என்ற பெருங் காரியத்தைப் பெரிய மனிதர்களும் பெரிய பெரிய நிறுவனங்களும் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் தான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் எனது காரியம் முடிய வேண்டும்; அதற்காக நான் லஞ்சம் தரத் தயாராக இருக்கிறேன் என நினைப்பதை விட்டு விட்டு, எவ்வளவு காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை; முறைப்படி நடக்கட்டும்; நான் லஞ்சம் தர மாட்டேன் என முடிவு செய்து செயல்படவும் வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு முடிவு எடுப்பவர்களாக மட்டும் இருந்து விட்டால் போதுமா? என்று கேட்டால் போதாது. நீங்கள் இருக்கும் இடத்தில் – வேலை பார்க்கும் அலுவலகத்தில்- லஞ்சம் வாங்கு வதை அனுமதிக்காதவர்களாக-பொறுப்புணர்வைப் பேணுபவர்களாக- கடமையை வலியுறுத்துபவர்களாக இருப்பதும் அவசியம் . இதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் கதை ஒன்று உண்டு. குடை என்ற தலைப்பில் பூமணி எழுதியது.

கோயில்பட்டிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்து சென்னையில் கூட்டுறவுத் துறையில் உயர் பதவி வரை வகித்த பூமணி கரிசல் இலக்கியம் என்னும் வகைப்பாட்டில் கி.ராஜநாராயணனுக்கு அடுத்து முக்கியமாகச் சொல்ல வேண்டிய சிறுகதை மற்றும் நாவலாசிரியர். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம் போன்ற தொடக்ககால நாவல்களுக்காகவும் ரீதி என்ற சிறுகதைக்காகவும் அதிகம் கவனிக்கப் பட்டவர். பின்னர் வரப்புகள், வாய்க் கால் போன்ற நாவல்களையும் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடுபவர்களை மையப்படுத்தி கருவேலம்பூக்கள் என்றொரு திரைப்படத்தையும் எடுத்தவர்.

அவரது குடை கதை லஞ்சம் என்ற மையப் பொருளை வித்தியாசமாக அணுகிய கதை. லஞ்சம் வாங்கப்படும்- கொடுக்கப்படும் கதை வெளியைக் கதைக்களனாகக் கொள்ளாமல், லஞ்சம் வாங்கும் ஒருவனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் தைரியத்தைக் குறித்து இருவர் பேசிக் கொள்வதாக அமைந்த கதை. பூமணியின் கதைகளின் மிகப்பெரிய பலமே அவர்களது கதாமாந்தர்கள் பேசிக்கொள்ளும் எளிய உரையாடல்கள் தான். முழுவதும் உரையாடல்கள் மூலமே அமைந்த கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். அப்படியான உரையாடல் மூலம் நகரும் குடை கதை இப்படித் தொடங்குகிறது:

“ஏன் ஏட்டையா ஒரு மாதிரி இருக்கீக” “ரெண்டு மூனு நாளா மனசே சரியில்லே ஆத்தி”
“ஏன் வீட்ல சண்டையா”
“ சண்டை போடுறதுக்குத் தானா தெம்பிருக்குது.நாட்ல நடக்கிற அனியாயத்தப் பாத்துக்கிட்டு துக்கல்லா நிக்கிறத விட நாண்டுக்கிறலாமான்னு இருக்குது”
“ அப்படியென்ன காணாறதக் கண்டுட்டீக.”
“ ஆத்தி எங்கயோ நாலு நல்ல மனுசரு இருக்கிறதனாலதான் அப்பப்ப மழ பேயிது.”


இந்த உரையாடலில் நல்லவர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது எனப் பேசும் ஆத்தியும் ஏட்டய்யாவும் (இந்தக் கதாபாத்திரங்கள் பூமணியின் பல கதைகளில் இடம் பெறும் கதை சொல்லிகள்) தொடர்ந்து பேசி, அந்த நாலு நல்லவர்களில் ஒருவரை- ஒரு பெண்ணை- பொதுப் பணித்துறை அலுவல கத்தில் வேலை பார்க்கும் கிளார்க் சந்தானலச்சுமியை அடையாளம் காட்டு கிறார்கள். அப்படி அடையாளம் காட்டும் குடை கதை இப்படி முடிகிறது:
“ இத்தனைக்கும் அந்தப் பொண்ணு கொஞ்சங்கூட கலங்கல. பாக்க வாறவு கிட்ட சாதாரணமாப் பேசிக்கிட்ருக்கு”
“ அது வைராக்கியம்”
“ கூடப் படிச்ச பொண்ணு ஒண்ணுவந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்ருந்துச்சு. பொறப்புட்டுப் போகும்போது இனிமேலயாச்சும் கண்டறிஞ்சு பொழச்சுக்கோன்னு அது சொல்லுது. அதுக்கு சந்தானலச்சிமி என்ன சொல்லுது தெரியுமா. என்னய எவனும் காப்பாத்த வரல. என் கொடதான் காப்பாத்தீருக்கு. ஒரு வெரலத்தான் வெட்டீருக்கான்... கேட்டயா.”
“ அப்படிப் போடு”
“ எனக்குச் செருப்பால அடிச்சமாதிரி இருந்தது. மனசுக்குள்ள கொட்டிக் கெடந்த வேதனையெல்லாம் பறந்துருச்சு. சந்தோசம் பொங்குது. அந்தப் பொண்ண கொஞ்சநேரம் பெருமையோட பாத்துக்கிட்டே இருந்தென்..”
“ ஒடனே நானும் போயிப் பாக்கணும் ”
“ இப்பத் தெரிஞ்சதா ஆத்தி ஊரு ஒலகத்துல ஏன் மழ பேயிதுன்னு”
“நல்லாத் தெரிஞ்சுக் கிட்டே ஏட்டையா”

நாட்டில் மழை பெய்வதற்குக் காரணமாக ஏட்டையாவும் ஆத்தியும் கண்டறிந்த சந்தானலச்சுமி ஏட்டையாவின் வீட்டிற்கும் பக்கத்து வீட்டில் குடியிருப்பவள். அவளது கணவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். சுட்டித்தனமான இரண்டு பெண்பிள்ளைகள் என வாழும் அவளது வைராக்கியமும் கலங்காத மன உறுதியும் வெளிப்படும் பின்னணியில் இருந்தது அவள் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சமும், அரசு அலுவலகத்தையும் தவறாகப் பயன் படுத்தும் பொறுப்பற்ற தனமும் தான்.
சந்தானலச்சுமி வேலை பார்ப்பது பொதுப்பணித்துறையில். பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், சாலை வசதி போன்றவைகளுக்குப் பொறுப் பான அத்துறை எல்லா வேலைகளையும் ஒப்பந்தக்காரர்களை வைத்தே முடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எந்தப் பகுதியில் வேலையைச் செய்வது என்பதில் தொடங்கி, யாருக்கு ஒப்பந்தம் விடுவது , முடிந்த வேலைக்குப் பணம் வழங்குவது என அனைத்துக்கும் லஞ்சம் பெறும் பொறி யாளர்களும் அலுவலகப் பணியாளர்களும் நிரம்பிய இடம். அதன்-வாட்ச்மேன் முப்பிடாதிக்கும் சந்தான லச்சுமிக்கும் இடையே ஏற்படும் முரண்பாட்டின் வழியாகவே கதை உருவாகிறது.
பொதுப்பணித்துறை அலுவலகத்தின் பொதுப் போக்கோடு ஒத்துப் போகாமல் - லஞ்சப் பணத்தில் தன் பங்கை வாங்கிக் கொள்ளாமல், தானுண்டு தன் வேலையுண்டு என வந்து போய்க் கொண்டிருக்கும் சந்தான லச்சுமியைக் கண்டு அங்கிருக்கும் ஒவ்வொருவரும் பயப்படுகின்றனர். எங்காவது காட்டிக் கொடுத்து விடுவாளோ என்று ஒவ்வொருவரும் பயம் கொண்டு அவளை மிரட்ட நினைக்கின்றனர்.அதற்கு பயன்படுகிறவனாக முப்பிடாதி இருக்கிறான்.
முப்பிடாதி முரடன். ஒப்பந்தக்காரர்களுக்குக் காரியம் முடிச்சுக் கொடுக்கக் காசு வாங்குபவன் மட்டுமல்ல; அங்கே இருக்கும் குடிதண்ணீரைக் காசுக்கு விற்பவன். வெளியூர்க்காரர்களை இரவில் தங்க வைத்து அவர்கள் காசில் சாராயம் வாங்கி அலுவலக வளாகத்திலேயே குடித்துக் கும்மாளம் போடுகிறவன். இதையெல்லாம் சந்தானலச்சுமி கண்டிக்கிறாள். அவளும் லஞ்சம் வாங்கினாள் என்று காட்ட ஒரு முறை ஒரு நூறு ரூபாயை வைத்து ஒரு கோப்பைத் தருகிறான். அவள் அந்தப் பணத்தைத் தலைமைப் பொறி யாளரும் கொடுத்துவிட்டுப் புகாரும் செய்து விடுகின்றாள். இந்த நிலையில் தான் அவன் வேறு வழியை யோசித்து முரட்டுத்தனமான வழியில் செயல் படுத்துகிறான்.

தனலச்சுமி போகும் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது அரிவாளை வைத்து மிரட்டுகிறான். அவள் பயப்படாமல் பேசிய போது அரிவாளை வீசுகிறான். அவள் கையில் வைத்திருந்த குடையால் தடுத்து விடுகிறாள். திரும்பவும் இரண்டு முறை குடை தடுத்து விடுகிறது. ஆனால் கடைசியாக குடை ஒடிய அவளது விரல் ஒன்று வெட்டுப் படுகிறது. இந்த நிகழ்ச்சி அலுவலகத்திற்குப் பக்கத்தில் நடந்தும் அவளை ஒருவரும் காப்பாற்ற வரவில்லை என்ற போதும் அவள் கலங்கவில்லை என்பதைத் தான் ஏட்டையா, ஆத்தியிடம் சொல்லி ஆச்சரியப்படுகிறான். ’நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக்கு ’எனக் கேட்டு வாங்கித் தின்னப் பழகிக் கொள்பவர்கள் நிரம்பிய உலகத்தில் வன்முறையான அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் மனதில் உறுதிகாட்டும் சந்தானலச்சுமிகளும் உண்டு என்று காட்டும் பூமணியின் கதை எளிய கதை என்றாலும் அவரது கதைகள் எப்போதும் ஒரு கதையோடு நின்றுவிடுவதில்லை. ஒரு கதைக்குள் இன்னொரு கதை, அதிலிருந்து மற்றொரு கதை எனத் தொட்டுத் தொட்டுப் பிரியும் தன்மை கொண்டவை.குடை கதையிலும் அப்படிப் பட்ட தன்மையைக் காணமுடிகிறது.
பெரும்பாலும் சிறுகதை வடிவம் ஒரு பாத்திரத்தை மையப்படுத்தி முன்னிறுத்தும் நோக்கம் கொண்டவை. அப்பாத்திரத்தோடு தொடர்புடைய - அதன் எதிர்நிலைப் பாத்திரத்தின் இயல்பும் கூடச் சில நேரங்களில் பேசப்படுவதுண்டு. குடை கதை நேரடியாக தனலச்சுமி என்ற பாத்திரத்தை மையப்பாத்திரமாக முன்னிறுத்தினாலும், அவளது பொறுப்பான கணவனையும் கூட முழுமையாகவே வாசகனுக்குக் காட்டுகிறார்.இக்குடும்பத்தின் கதையைச் சொல்லும் ஏட்டையாவின் குடும்ப இருப்பும் அவரது பேச்சு வழியாக விரிகிறது. அதே போல் ஏட்டையாவிடம் கதை கேட்கும் ஆத்தியின் உறவினர்கள், அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை எனப் பரவிப் பரவிச் செல்லும் விரிவான கதைப் பரப்பைக் காட்டுகிறது கதை. ஒரு சிறுகதை யிலேயே முழுமையான வாழ்க்கைச் சிதறல்களையும் பரிமாணங்களையும் காட்டும் பூமணியின் கதைகள் மிக நீளமானவை அல்ல என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


No comments :