தீர்க்கமான முடிவு: ஜெயகாந்தனின் யுகசந்தி

சன் தொலைக்காட்சியில் இரவு ஒளிபரப்பில் முக்கிய நேரத்தில் ஒளி பரப்பப் படும் கோலங்கள் தொடர் எப்போது முடியும்? இந்தக் கேள்வியைப் பத்திரிகைச் செய்தியாக, நடைபாதைப் பேச்சாக, ஒத்த கருத்துடையவர்களின் கலந்துரையாடலில் மையப் பொருளாகப் பல இடங்களில் நான் கேட்டிருக் கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம். பெரும்பான்மை மக்களால் விரும்பியோ விரும்பாமலோ பார்க்கப்படும்-படிக்கப்படும் கலை இலக்கியங்களைப் பொருட் படுத்திப் பேச வேண்டியது பண்பாட்டியல் துறை சார்ந்தவனின் ஒருவனின் கடமை என்ற நிலைபாட்டோடு தொலைக்காட்சித் தொடர்களை அவ்வப்போது கவனித்து வைப்பதும், விரும்பிப் பார்க்கும் பல தரப்பட்ட மக்களிடம் உரையாடிப் பார்ப்பதும் எனது விருப்பம்.
அப்படிக் கேட்கும் போதும் உரையாடும் போதும் அந்தக் கதைத் தொடரை அதன் இயக்குநர் அவ்வளவு சுலபமாக முடித்து விட முடியாது என்றே எனக்குத் தோன்றும். ஊடகங்கள் பின்பற்றும் ‘ரேட்டிங்’கில் அந்தத் தொடர் முதல் இடத்தில் இருப்பது என்ற காரணத்தையும் தாண்டி வேறு ஒரு காரணம் இருக்கிறது என்பது எனது கருத்து. இரண்டாவது திருமணத்தை ஏற்க வைப்பது என்ற சிக்கலான கதைப் பின்னலைக் கொண்ட கோலங்களுக்கு அதன் பெரும்பான்மைப் பார்வையாளர்களாகிய பெண்கள் கூட்டம் ஏற்கத்தக்க முடிவை அதன் இயக்குநர் திருச்செல்வன் தர வேண்டும். அது இயக்குநருக்குப் பெரும் சவாலான ஒன்று. அப்படித் தருவதற்கு தீர்மானமான முடிவு எடுக்கும் திறன் வேண்டும்; ஜெயகாந்தனின் கௌரிப் பாட்டியைப் போல என மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். ஆம் கௌரிப் பாட்டி தீர்மானம் செய்வதில் முதன்மயானவள் என்பது மட்டுமல்ல; அதற்கான காரணங்களை முன் வைப்பதிலும் கைதேர்ந்தவள் என்பதை யுக சந்தி என்னும் கதையை வாசித்தால் நீங்களும் உணரக் கூடும். கோலங்கள் தொடரின் கதையைப் பற்றி விவாதிப்பது இங்கு நோக்கமல்ல. ஜெயகாந்தனின் கதையை நினைத்துக் கொண்டதற்கு அது ஒரு காரணம் தான்.

ஜெயகாந்தனின் கதைகளில் மையப் பாத்திரங்களாக வரும் எந்தவொரு பாத்திரமும் தான் நினைத்ததைத் தைரியமாகச் செய்யக் கூடிய-சொல்லக் கூடிய- பாத்திரங்கள் என்பதை ஜெயகாந்தனின் தீவிர வாசகர்கள் அறிவார்கள். அதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு வழக்கத்தின் மையத்தில் நிற்கும் பாத்திரமாக இருந்தாலும், அந்தப் பாத்திரம் தீர்மானமாக முடிவெடுத்து நடைமுறைப் படுத்துவதைத் தனது கதையில் காண்பிப்பவர் ஜெயகாந்தன். ஏனென்றால் ஜெயகாந்தனே சொன்னது போல அவரது கதைகளில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் அவர் தான். தன்னையே ஒவ்வொரு பாத்திரத்திலும் வைத்து எழுதிப் பார்க்கும் ஜெயகாந்தன் தனது முடிவுகளைப் பாத்திரங்களின் முடிவுகளாகத் தந்து விடுகிறார். இப்படித் தருவதே அவரது கதைகளின் பலம் என்று சொல்லும் விமரிசகர்களும் உண்டு; அதுவே அவரது பலவீனம் என்று வருணிப்பவர்களும் உண்டு. அந்த விமரிசனங்களைப் பற்றி அவர் அதிகம் அலட்டிக் கொண்டவரல்ல.
மாறிவரும் சமூகத்தின் புதிய கீற்றுக்களைச் சரியாக அடையாளப்படுத்தி அதன் பிரதிநிதிகளைக் கதாபாத்திரங்களாக எழுதிக் காட்டிய பல கதைகள் அவரது தொகுப்புகளில் உள்ளன. முத்திரைக் கதைகளாக ஆனந்தவிகடனில் அவர் எழுதிய கதைகள் வெளிவந்த காலத்தில் பலத்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டவை. யுகசந்தி கதையும் அப்படிப் பட்ட கதைதான். யுகசந்தியைத் திட்டமிட்டுக் கதைகளை எழுதுபவர் ஜெயகாந்தன் என்பதை உறுதி செய்யும் உதாரணக் கதை என்று கூடச் சொல்லலாம். பேனா வழியாகக் கதை தன்னை எழுதிக் கொள்கிறது, பாத்திரங்கள் தங்களை எழுதிக் கொள்கிறார்கள் என்று சொல்லும் சில நவீன எழுத்தாளர்கள் போல ஜெயகாந்தன் சொல்பவர் அல்ல. அவர் எழுத நினைக்கும் கதை அல்லது கதாபாத்திரம் முழுமையின் நிழலாக அவரது மூளைக்குள் இருப்பதாக நம்புபவர். அப்படி இருப்பது தானே சாத்தியமும் கூட.

நெய்வேலியிலிருந்து கடலூரில் இருக்கும் மகன் வீட்டிற்கு வருவதற்காகப் பேருந்து நிலையத்தில் வந்திறங்கிடும் கௌரிப் பாட்டி, மகன் வீட்டில் ஒரு இரவு முழுவதும் தூங்காமல் தங்கி இருந்து விட்டு அடுத்த நாள் அவசரம் அவசரமாகத் தனது பேத்தி இருக்கும் நெய்வேலிக்குச் செல்ல வேண்டும் எனப் பேருந்து நிலையத்திற்குத் திரும்புவதோடு முடியும் கதை யுகசந்தி. எழுபது வயதுப்பாட்டி கௌரி, இளம் வயதிலேயே விதவையானவள். தனது விதவைக் கோலத்தை ஒவ்வொருவருக்கும் உணர்த்தும் விதமாக விதவைகளுக்கே உரிய ஆடையை உடுத்தி, தலையை மழித்து, உணவை உண்டு ஆசாரம் காத்து வந்தவள். அதே நிலை கணேசய்யரின் மூத்த மகள்- கௌரிப்பாட்டியின் பேத்தி கீதாவுக்கும் ஏற்பட்ட போது அடைந்த வலி தாங்க முடியாத ஒன்றாய் உணர்ந்தவள். ”மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை,நாடகப்பூச்சைக் கலைப்பது போல கலைத்து விட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ்சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து விழுந்து குமுறியழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசிச் சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கௌரிப் பாட்டி” என்று ஜெயகாந்தன் எழுதிக் காட்டியதன் வழி கௌரிப் பாட்டியின் சித்திரத்தை உணரலாம்.

விதவையான மகளை விதவைக்கோலம் ஏற்கச் செய்யாமல், ஆசிரியப் பணிக்கு அனுப்பும் முடிவைத் தனது மகன் கணேசய்யர் எடுத்த போது அமைதி காத்தவள் மட்டுமல்ல; அவளோடு போய் அவளுக்கு உதவியாக இருக்கிறேன் எனக் கிளம்பி கீதா வேலை பார்க்கும் நெய்வேலியில் அவளுடன் இருப்பவள். அப்படி இருந்தாலும் தன் ஆசார அடையாளமான மொட்டை போடுவதற்காக ஒவ்வொரு முறையும் கடலூருக்கு வருபவள். வந்து வழக்கமாகத் தலை மழிக்கும் நாவிதன் வேலாயுதத்திடம் தலையை மழித்து கொள்பவள். அப்படித் தலையை மழித்து மொட்டை போட்டுக் கொள்ளத்தான் கௌரி அன்றும் வந்தாள். வரும்போது பேத்தி தன் தந்தை கணேசய்யரிடம் கொடுக்கச் சொன்ன கடிதத்தையும் கொண்டு வருவதில் தான் கதை தொடங்குகிறது.
நாவிதனைக் கூட மாற்றிக் கொள்ளாமல் ஆசாரம் காத்த கௌரிப் பாட்டி. தான் அனுபவித்த விதவைத் துயரைத் தனது பேத்தி கீதா அனுபவிக்கக் கூடாது என நினைத்து எடுக்கும் முடிவு தான் அவளை யுகங்களின் சந்திப்பாக மாற்றுகிறது. தன்னுடன் பள்ளியில் வேலை பார்க்கும் இந்தி பண்டிட் ராமச்சந்திரனை மறுமணம் செய்வது என்று பேத்தி கீதா எடுத்திருக்கும் முடிவை வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், நான் ஏற்று கொள்கிறேன் ; இப்படியொரு முடிவை எடுத்த அவளுக்கு ஆதரவாக நான் இருக்க வேண்டும் என்று கருதி உடனடியாகத் தலையைக் கூட மழித்துக் கொள்ளாமல் திரும்பிச் செல்கிறாள் என்பதாகக் கதை முடிகிறது.
 
யுகசந்தியின் கதை முடிச்சே கௌரிப் பாட்டி கொண்டு வரும் கடிதத்தில் தான் இருக்கிறது. பேத்தி கீதா தன்னிடம் கொடுத்த கடிதத்தைத் திறந்து பார்க்காமல் அவளது அப்பா கணேசய்யரிடம்- தன் மகனிடம் சேர்த்து விட்டு ஆயாசமாக அமர்ந்த கௌரியைக் கணேசய்யர் கடிதத்தைப் படித்து விட்டு அடைந்த அதிர்ச்சியும் ஆவேசமும் நிலை குலைய வைக்கிறது. மறுமணம் செய்வது எனக் கீதா எடுத்துள்ள முடிவைச் சொல்லும் கடிதத்தைப் படித்தவுடன் கணேசய்யர் “அவ செத்துட்டா..தலையெ முழுகிட வேண்டியது தான் என்று நிர்த்தாட்சயண்யமான குரலில் உறுதியாகச் சொன்ன போது ’பாட்டி திகைத்தாள்’ என்று எழுதுகிறார் ஜெயகாந்தன். திகைத்தவள் தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படிக்கிறாள். அதில், இப்படி இருக்கிறது: “ ரொம்ப சுயநலத்தோட எடுத்த முடிவு தான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, தியாகம் செய்து விட்டீர்கள்..?” இந்தக் கேள்வி பாட்டிக்கு சுருக்கென்று உரைத்ததால் நாக்கைக் கடித்துக் கொண்டாள். எதுவும் பேசாமல் திரும்பத் திரும்பக் கடித வரிகளை நினைவுக்குக் கொண்டு வருவதும் கீதாவை நினைத்துக் கொள்ளாமல் இருந்த கௌரிக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை.

அடுத்த நாள் காலை நாவிதன் வேலாயுதம் வந்து நின்றதை நினைவுபடுத்திக் கணேசய்யர், “ அம்மா வேலாயுதம் வந்திருக்கான்.. அவள் செத்துட்டான்னு நெனச்சித் தலையைச் செரைச்சி தண்ணிலே போயி முழுகு.. என்று சொல்கிறார். அப்போது கௌரி, “வாயை மூடுடா..” என்று குமுறி எழுந்து “ காலங்கார்த்தால அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்ன பேச்சு!.. இப்ப என்ன நடந்துடுட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே? என்று தாங்க முடியாத சோகத்துடன் கேட்கிறாள். பிறகு தனது மகனிடம், “ அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான். அதுக்கென்ன சொல்றே? என்று கேட்டு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டு தான் இதுவரை காத்த ஆசாரம், அனுஷ்டானம் போன்றவற்றின் தீவிரமான கேள்விகளைத் தொடுக்கிறாள். அந்தக் கேள்வி கீதாவுக்காகக் கேட்டதா..? இவ்வளவு காலமும் தன்னை விதவையாக ஆக்கிப் பார்த்த சமூகத்தின் கட்டுப்பாடுகள் மீது கேட்கும் கேள்விகளா? என்று திகைக்கும் படியாக அவளது வினாக்கள் இருக்கின்றன.
அவளின் தர்க்கங்களும் தன் மகன் கணேசனுடன் அவள் நடத்தும் விவாதங் களும் ஒரு கதைக்குள் நிகழ வாய்ப்புண்டா என்றால் இல்லை தான். உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் போது மனிதர்கள் தர்க்க ரீதியாகப் பேசிக்கொள்வதில்லை என்பது யதார்த்தம். என்றாலும் ஜெயகாந்தனின் பாத்திரங்கள் அறிவுப் பூர்வமாகப் பேசவே செய்வார்கள். கௌரிப் பாட்டியும் அப்படித்தான் பேசுகிறாள்.

கௌரி ஆசாரத்தைக் காத்தது போலக் கீதாவையும் விதவைக் கோலத்தில் இருக்கச் செய்யாமல் தொடர்ந்து படிக்கவும், வேலை பார்க்கவும் அனுமதித்த போதே ஆசாரம் மீறப்படுதல் நடந்து விட்டது; வேலை பார்த்த போது அவள் திலகம் இட்டுக் கொண்டாள்; வண்ண வண்ண ஆடைகளை அணிந்து கொண்டாள். அதையெல்லாம் அனுமதித்து விட்டு, இப்போது மறுமணம் என்றவுடன் ஆசாரம், அனுஷ்டானம் எனப் பேசுவது என்ன நியாயம் ? என்று கேட்ட அம்மாவுக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நிற்கும் கணேசய்யரிடமும் அவரது மனைவி பார்வதியிடமும் “ வீட்டைச் சமத்தாப் பார்த்துக்கோ ” என்று சொல்லி விட்டுக் கிளம்புகிறாள். கிளம்பும்போது வழியில் நின்ற வேலாயுதத்திடம், “ நீ போடாப்பா.. நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு.. ” என்று அவனிடம் நாலணாவைத் தந்து அனுப்பினாள். “ இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை.. அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது! நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக் கொள்ளக் கூடாதா?” என்று எண்ணிச் சிரித்துக் கொண்டாள் கௌரி என்று எழுதும் ஜெயகாந்தன் அந்தக் கதையை இப்படி முடிக்கிறார்:வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர்கொண்டழைத்துத் தழுவிக் கொள்ளப் பயணப்படுவதென்றால் .. ஓ! அதற்கு ஒரு பக்குவம் தேவை!

விதவை மறுமணம் என்ற நிலை அதிகம் வெளியில் தெரியாமல் மாறிவிட்ட இன்றையச் சூழலில் இந்தக் கதை முக்கியமான கதையாகத் தோன்றாமல் போகலாம். ஆனால் பால்ய விவாகம், அதனால் ஏற்பட்ட விதவைகள் பிரச்சினை என்று தமிழ்ச் சமூகத்தினை அலைக்கழித்த அந்தச் சிக்கலைத் தீவிரமாக எதிர்கொண்ட ஒரு எழுத்தாளன் எடுத்த முடிவை இந்தக் கதையின் பாத்திரமான கௌரி உக்கிரமாக வெளிப்படுத்துவதை யுகசந்தியில் இன்றும் வாசிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்