August 12, 2009

குறியீட்டுக் கதைகள் தரும் சுதந்திரம்:சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகளும் மேல்பார்வையும்.


குறியீட்டுத் தன்மை கொண்டதாக நவீன நாடகப் பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த பின், தேர்வு செய்த கதை பல்லக்குத்தூக்கிகள். தமிழில் நவீன நாடகத்தைப் பிரதி வடிவில் ஆரம்பித்து வைத்தவர் ந.முத்துசாமி. அவரது தொடக்க நாடகங்களான நாற்காலிக்காரர், காலம் காலமாக,அப்பாவும் பிள்ளையும் ஆகிய மூன்று நாடகங்களும் அடங்கிய நாற்காலிக்காரர் தொகுப்பை வாசிக்கும் ஒருவர் நவீன நாடகம் என்பது கதைத் தன்மையைக் கைவிட்ட - குறியீட்டுத் தன்மை கொண்டதே நவீன நாடகம் என்று புரிந்து கொள்வார். பல்லக்குத்தூக்கிகள் சிறுகதையை நாடகமாக ஆக்கியதற்கு முன்பு ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தைப் பயிற்சியாகவும், இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களைப் பாடமாகவும் படித்திருந்தேன். ந.முத்துசாமியின் பாணியிலிருந்து மாறுபட்டது இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள். அவரது தொடக்ககால நாடகங்களான பசி, மழை, போர்வை போர்த்திய உடல்கள் போன்றவற்றில் ஒருவித கதைத் தன்மை உண்டு.

நாடகத்தின் நவீனத் தன்மையைப் புரிந்துகொண்டு பிரதிகளைத் தமிழுக்குத் தந்தவர்கள் வரிசையில் வயிறு நாடகத்தைத் தொகுப்பைத் தந்த ஞான .ராஜசேகரனுக்கும், மனுஷா மனுஷா தொகுப்பைத் தந்த ஜெயந்தனுக்கும் முக்கியமான பங்குண்டு. மதுரையில் செயல் பட்ட நிஜநாடக இயக்கத்தோடு முழுமையாக இணைந்து செயல்பட முடியாத நண்பர்கள் சுதேசிகள் என்றொரு கலை இலக்கிய அமைப்பை உருவாக்கி நாடகங்கள், கவிதா நிகழ்வுகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றன நடத்துவது என முடிவு செய்தார்கள். திட்டமிடல், விவாதித்தல், முறைப் படுத்தல் போன்றவற்றை ஜனநாயகப் பூர்வமான விவாதங்கள் அடிப்படையில் உறுதி செய்வதில் சுதேசிகள் கவனமாக இருந்தது. ஆனால் படைப்பாக்கச் செயல் பாட்டில் தனி நபரின் பங்களிப்பை எப்போதும் மறுத்ததும் இல்லை. பத்துக்கு மேற்பட்ட நாடகக் குழுக்களால் சில நூறு தடவைக்கு மேல் மேடையேற்றப்பட்டுள்ள பல்லக்குத் தூக்கிகள் பிரதியுருவாக்கத்தில் – நாடகமாக- மாறியதில் எனக்குக் கூடுதல் பங்கு உண்டு என்றாலும் நண்பர்களோடு நடத்திய விவாதங்களின் விளைவே அது என்பதையும் மறப்பதற்கில்லை.
நாடக இலக்கியத்தின் அடிப்படை அலகான முரண், வெளிப்படும் சிறுகதைகள் தமிழில் ஏராளமாக உண்டு. நவீன நாடகம் வெளிப்படையான பாத்திர முரண்பாட்டையோ, ஒரே பாத்திரத்திற்குள் அமுங்கிக் குமையும் தன் முரண்நிலையையோ ஏற்றதாகக் கருதுவதில்லை. படர்க்கை நிலையில் விலகி நின்று நிகழ்வுகளை அல்லது மனிதர்களை வேடிக்கை பார்க்கும் கதை சொல்லியைக் கொண்ட கதைகளே நவீன நாடகமாக ஆவதற்கு ஏற்றது என்ற எனது வாதம் ஏற்கப்பட்டுப் பல கதைகளை நண்பர்கள் வாசித்தார்கள்; முன் மொழிந்தார்கள்.
நான் அப்போது முன் மொழிந்த கதைகள் இப்போது நினைவில் இல்லை. ஆனால் புதுமைப் பித்தன், பிரபஞ்சன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், கோணங்கி,முதலானவர்களின் சில கதைகளை முன் மொழிந்துவிட்டுக் கடைசியாகச் சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகள் இந்த நேரத்து சமூக, அரசியல் போக்குகள் சிலவற்றைக் குறியீடாக்கிக் காட்டுகிறது என வாசித்துக் காட்டினேன். நண்பர்கள் அந்த முன் மொழிதலை ஏற்றார்கள். ஏற்புக்குப் பின் நான் பல்லக்குத் தூக்கிகள் என்ற சிறுகதையிலிருந்து ‘பல்லக்குத்தூக்கிகள்’ என்ற நாடகப் பிரதி உருவாக்கப் பட்டது .
தனது கதைகளில் குறிப்பான காலம், குறிப்பான வெளி என்பதைக் காட்டிக் கொள்ளத் தயங்காத சுந்தரராமசாமி, பாத்திரங்களை உருவாக்கும் போது பெரும்பாலும் குறியீட்டுத் தன்மையையே அதிகம் கையாண்டிருக்கிறார். நாடார் சார், ரத்னாபாயின் ஆங்கிலம், செங்கமலமும் ஒரு சோப்பும், ஆத்மாராம் சோயித்ராம், பக்கத்தில் வந்த அப்பா எனக் குறிப்பான பாத்திரங்களைத் தலைப்பாக்கிய கதைகளே கூட முதல் வாசிப்பில் யதார்த்தச் சித்திரிப்பு போலத் தோன்றினாலும் மறுவாசிப்பில் குறியீட்டுத் தன்மையின் பரிமாணத்தை வீரியத்துடன் காட்டக் கூடியன.
கதைகளின் வெளியாகக் கன்யாகுமரி மாவட்டத் தலைநகரமான நாகர்கோவில் மற்றும் சுற்றுப் புறக் கிராமங்களின் அடையாளங்களும், பாத்திரங்களின் உரையாடலுக்கு அவ்வட்டார பேச்சு மொழியின் தொனியும் தரப்பட்டிருந்தாலும் அக்கதைகள் தமிழகத்தையும் தமிழக எல்லை களையும் தாண்டி வாழும் தமிழ் வாழ்வின் அடையாளங்கள் கொண்டன என்பதை நுட்பமாக வாசிக்கிற போது உணர முடியும். இந்தக் காரணங்களால் தான் அவரது கதைகளை வட்டார இலக்கியம் என்கிற வரையறைக்குள் அடக்கிக் காட்ட இயலாது.
வழி நடத்துவதாக நம்பும் நிறுவனங்களுக்குள் விரும்பியும் விரும்பாமலும் நுழைந்து விடும் மனிதர்கள், அவற்றின் இழுப்புக்கும் சுழிப்புக்கும் இசைய வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கி விடுவதைத் தூர நின்று பார்த்து, நகைக்கும் ஒரு மனிதனாகத் தன்னை- அல்லது கதை சொல்லியை நிறுத்தி விடும் லாவகம் கைவரப் பெற்றவர் சுந்தரராமசாமி. இப்படி விலகி நின்று கதை சொல்கிறார் என்பதால் அவரது விருப்பு வெறுப்புகள் கதைக்குள் வெளிப்படாது என்பதல்ல. தன்மைக் கூற்று, முன்னிலைக் கூற்று கதை சொல்லலில் வெளிப்படும் சார்பு நிலைப் படர்க்கைக் கூற்று கதைகளில் சட்டென்று வெளிப்படாது என்பது மட்டும் தான் உண்மையே தவிர, சார்புநிலையே கிடையாது என்பதல்ல. ஜனநாயக அரசியலுக்குச் சார்பு நிலை இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை படர்க்கைக் கூற்றுக் கதைக்கும் சார்பு நிலை உண்டு என்பது.
பல்லக்குத் தூக்கிகள் கதையை நாடகமாக ஆக்கி எட்டாண்டுகளுக்கு பின் அவர் எழுதிய கதை மேல்பார்வை. 1994-95 இந்தியா டுடே இலக்கிய ஆண்டுமலரில் அச்சான மேல்பார்வை கதையை வாசித்த உடனே அதை நாடகமாக ஆக்க வேண்டும் என நினைத்தேன். நவீன நாடகம் சார்ந்தவர்களிடையே விவாதப் பொருளாக ஆகி இருந்த அகஸ்டோ போவலின் கண்ணுக்குப் புலப்படா அரங்கு, விவாத அரங்கு போன்றவற்றின் பின்னணியில் நல்லதொரு நாடகப் பிரதியாக ஆவதற்குரிய கூறுகள் கொண்டதாக அந்தக் கதை எனக்குப் பட்டது. பல்லக்குத்தூக்கிகளில் செய்த அதே வேலையை மேல்பார்வையிலும் செய்தால் போதும் நல்லதொரு விவாத அரங்கிற்கான நாடகப் பிரதி கிடைத்து விடும்.
பல்லக்குத் தூக்கிகளில் செய்த வேலை என்பது அதன் கதை சொல்லியைக் கழற்றி விட்டது தான். பல்லக்குத் தூக்கிகள் உடல், நிறம், இருப்பு போன்றவற்றைப் பார்த்து அசூயையுடன் முகஞ் சுளிக்கும் கதை சொல்லியைக் கதை வெளிக்குள்ளிருந்து வெளியேற்றிய போது பல்லக்குத் தூக்கிகள் ,தங்களின் உரையாடல் வழியாக அவரவர் அடையாளங்களை உருவாக்கிக் கொண்டு தாங்கள் நால்வரும் ஒரே மாதிரியான வார்ப்பு அல்ல என்பதைக் காட்டிக் கொண்டார்கள். காட்டிக் கொண்டதோடு பல்லக்கு என்னும் நிறுவனத்தோடு பிணைக்கப் பட்டிருப்பதும், பல்லக்கில் அமரப் போகும் பெரியவர் மீது தங்களுக்குள்ள ஈடுபாடும் தாங்களே விரும்பி உருவாக்கிக் கொண்டதல்ல; கண்ணுக்குப் புலப்படாத கருத்தியல் வழியாக அவை நிகழ்ந்திருக்கின்றன என உணர்த்தினார்கள்.
மேல்பார்வையின் கதை சொல்லியை- அதன் மையக் கதாபாத்திரமான பொற்கொடியின் நிறம், திறம், உடல் வாகு, விளையாட்டு வீரர்களைக் கையாளும் லாவகம், விதிகளைக் கறாராகப் பின்பற்றும் நேர்மை, எடுத்த முடிவில் காட்டும் உறுதி ஆகியவற்றைப் பாராட்டிப் புளகாங்கிதம் அடைந்து கதை சொல்லும் கதை சொல்லியின் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவனைக் கதைக்குள் இருந்து கழற்றி விட்டால் நேரடியாகக் கதை நடக்கும் இடமான கூடைப் பந்தாட்ட மைதானத்திற்கு நாடக நிகழ்வைக் கொண்டு போய்ச் சேர்த்து விடலாம். உண்மையான ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் கதையைத் தமிழ் நாட்டின் எந்த இடத்திலும் இருக்கும் கூடைப் பந்தாட்ட மைதானமாக ஆக்கிக் கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக அம்மைதான் நாடகத்தின் நிகழ்வு வெளியாகவும் ஆகிக் கொள்ளும்.
சிவப்புச் சட்டை அணியினர், நீலச்சட்டை அணியினர் என முரண்பட்ட வண்ணங்களோடு விளையாடத் தொடங்கும்- நடிக்கத் தொடங்கும் நடிகர்கள் நாடகத்திற்கான முரணைத் தோற்றுவிக்க, விளையாட்டின் நடுவராக இருக்கும் பொற்கொடியின் செயல்பாடுகளும், முடிவுகளும் மெல்ல மெல்ல நகர்ந்து விவாதப் பொருளாகி நாடக வளர்ச்சியையும் உச்சத்தையும் உண்டாக்கி விடுவதை கதைமுடிவு தருகிறது என்றால், அதன் தொடர்ச்சியாகப் பார்வை யாளர்களிடம் நடத்த வேண்டிய விவாதங்களுக்கான குறிப்புகளை எழுதிச் சேர்ப்பதன் மூலம் விவாத அரங்கின் - போரம் தியேட்டரின் - முழுப்பரிமாணம் கிடைத்து விடும்.
1995 வாக்கில் அந்த நாடகத்தை மேடையேற்றி இருந்தால் அக்கதையில் வரும் பொற்கொடி அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவோடு கனகச்சிதமாகப் பொருந்துவதைப் பார்வை யாளர்கள் சுலபமாகப் பார்த்திருப்பார்கள். ஜெ.ஜெயலலிதாவை மத்தியதர வர்க்கமும், பத்திரிகை களும் தொடர்ந்து விமரிசனம் செய்யலாம்; ஆனால் அவருக்கு கூடைக்காரிகள், மீன்காரிகள், உடனடி நிகழ்வுகளையும் செயல்பாடுகளையும் பார்த்துப் பாராட்டி விடும் அப்பாவிக் கிராமத்து மனிதர்களிடமும் உள்ள செல்வாக்கு நிரந்தரமானது எனச் சொல்லும் சார்பு நிலையையும் புரிந்து கொள்ள முடியும். அந்தக் கதையை நாடகமாக எழுதுவதை முதலில் செய்யாமல் அதற்கான விமரிசனமாக ஒரு குடலாப்ரேசன் விமரிசனத்தை அப்போது களம் புதிதின் எழுதினேன். அவ்விமரிசனம் அக்கதையை நேர்மறை நோக்கில் அணுகிய விமரிசனம் எனக் கவனிக்காமல் சு.ரா.வின் நண்பர்கள் பலரும் என்னிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பல்லக்குத் தூக்கிகள் நாடகத்தை முதலில் பார்த்த சுரேஷ்குமார் இந்திரஜித் போன்ற நண்பர்கள் எதிர்மறையாகவே புரிந்து கொண்டார்கள் என்பதோடு சேர்த்துச் சிரித்துக் கொள்ள முடிந்தது.
குறியீட்டுக் கதைகள் எப்போதும் வாசகர்களின் வாசிப்புக்குச் சுதந்திரம் அளிப்பவை என்பதை உணர்த்தத் தமிழின் பிற ஆசிரியர்களின் கதைகளை உதாரணங்களாகச் சொல்வதை விடச் சுந்தரராமசாமியின் கதைகளை எடுத்துக் காட்டுவதே சரியாக இருக்கும். அந்த வாசிப்பின் சுதந்திரம் தான் அவரது கடைசிக் கதையான பிள்ளை கெடுத்தாள் விளையைப் பலரும் பலவிதமாக வாசிக்கும் படி செய்தது. ஆகச் சிறந்த குறியீட்டுக் கதைகள் எழுதியவர்களின் பட்டியலில் எப்போதும் சுந்தரராமசாமிக்குத் தனி இடம் அளிக்க வேண்டும் என்பது எனது வாதம்.

No comments :