August 12, 2009

நல்ல மேய்ப்பர்கள் : பிரபஞ்சனின் மரி என்னும் ஆட்டுக்குட்டி


முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளி வந்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து சிறப்புத் தேர்வுகள் நடைபெறும். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறாமல் போன மாணவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்தச் சிறப்புத் தேர்வை எழுதித் தேர்வு பெற்று அடுத்த கல்வி ஆண்டுத் தொடக்கத்தில் கல்லூரிக்குள் நுழைவார்கள். பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத வர்களுக்கு அந்த ஓராண்டு ஒரு விதத்தில் தண்டனை தான். இந்தத் தண்டனைக் காலத்தில் பலர் திசை மாறிப் போகும் வாய்ப்புக்களே அதிகம்.
இப்போது நிலைமை மாறி விட்டது. ஒன்றிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக உடனடியாகச் சிறப்புத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் பள்ளிக் கல்வியை முடித்துக் கல்லூரிக் கல்வியைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககம் தொடங்கி வைத்த சிறப்புத் தேர்வு நடைமுறைகளை இப்போது எல்லாப் பல்கலைக் கழகமும் ஏற்றுக் கொண்டு உடனடிச் சிறப்புத் தேர்வுகளை நடத்துகின்றன.
இப்படி நடத்துவதைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கும் ஒரு நடைமுறை எனக் கணித்துக் குற்றம் சொல்பவர்கள் உண்டு. அவர்கள் எதிலும் சிறப்பானவர்கள் மட்டுமே மேலே வர வேண்டும்; மற்றவர்கள் அடித்தட்டு மக்களாக ஏவல் செய்யப் பிறந்தவர்கள் என்ற கருத்தியலில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். அல்லது அரசும், அரசுத்துறை நிறுவனங்களும் எதைச் செய்தாலும் எதிர்மறை மனோபாவத்தில் கணித்து விமரிசனங்களை முன் வைப்பவர்களாக இருக்கலாம். ஆனால் சமூகநீதியின் மீது அக்கறை கொண்ட ஜனநாயகப் பற்றாளர்கள் இதனை விமரிசனம் செய்ய மாட்டார்கள் என்பது எனது கணிப்பு. இச்சிறப்புத் தேர்வு நடைமுறை யாருக்குப் பலனைத் தருகிறது எனக் கண்கூடாகக் காணும் இடத்தில் நான் இருக்கிறேன்.
சென்ற ஆண்டில் மாணாக்கர் சேர்க்கை நடந்த போது சிறப்புத் தேர்வு முடிவு வரும்வரை தனது விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது எனக் கோரிக்கை வைத்து விட்டு சோகம் கப்பிய முகத்துடன் வெளியேறிய அந்த மாணவி இப்போது முதுகலை இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பட்டப் படிப்பில் எல்லா பாடங்களிலும்-குறிப்பாகப் பட்டப் படிப்பில் அவள் முதன்மைப் பாடமாக எடுத்திருந்த தமிழ் இலக்கியத்தாள்கள் அனைத்திலும்-நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள்.
முதல் நான்கு பருவத்தில் படிக்க வேண்டிய ஆங்கிலப் பாடங்களிலும் மூன்றில் தேவையான மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றிருந்தாள். ஆனால் நான்கிலும் தேர்விலும் வெற்றி பெற்றால் தான், பட்டப் படிப்பை முடித்ததாகக் கணக்கிட்டுச் சான்றளிக்கப்படும். அந்தச் சான்றிதழ் கிடைத்தால் தான் பட்டமேற்படிப்பைத் தொடங்க முடியும். சிறப்புத் தேர்வு வாய்ப்பு வழங்கப் பட்டதால் ரூ.500/- கட்டி, அதை மட்டும் தனியாகப் படித்துத் தேர்வு எழுதி வெற்றி பெற்றாள். சிறப்புத் தேர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவள் ஒரு தடுக்கி விழுந்தவளாக - டிராப் அவுட்டாக மாறி- கல்விப் பயணத்தைத் தொடர முடியாமல் போய்க் காணாமல் போயிருப்பாள்.
இப்போது தொடரும் பயணத்தில் ஒருவேளை அவள் முதுகலை வகுப்பில் சிறப்பான தகுதியுடன் வெற்றி பெற்று ஆய்வுப் பட்டங்களையெல்லாம் கூடப் பெறலாம். சிறந்த கல்வியாளராக அல்லது ஒரு திறனாய்வாளராக அல்லது படைப்பாளியாக வரலாம். தமிழ் இலக்கியம் படிப்பவர்களுக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சினை என்று நினைக்க வேண்டியதில்லை. எல்லாப் பாடங்களிலும் ஒன்று அல்லது இரண்டு தாள்களில் வெற்றி பெறாமல் போவதற்குப் பலவிதமான காரணங்கள் இருக்கக் கூடும். திடீரென்று ஏற்படக்கூடிய சுகவீனம், ஊரில் ஏற்படும் மோதல், குடும்பத்தில் ஏற்படும் உறவுச் சிக்கல்கள்,எனக் காரணங்கள் பலவாறாக விரியலாம். கல்விப் பயணத்திற்கான தடைக் கல்லை விலக்கிப் போடுவது தானே ஒரு நல்ல கல்வி நிறுவனத்தின் - ஆசிரியரின் வேலையாக இருக்க முடியும். இப்படிப் பட்ட ஆசிரியர்களை மனதில் வைத்தே வேதாகமத்தின் நல்ல மேய்ப்பன் என்ற சொற்றொடரை நினைத்துக் கொள்வதுண்டு.
தூரத்துப் பச்சையைப் பார்த்துத் தனியாகப் போய் மேயும் ஆடு கணக்கில் வராமல் போனால் மேய்ப்பன் மனம் படும் பாடு வார்த்தையில் சொல்ல முடியாதது. அந்தப் பச்சையின் சொந்தக்காரன் கல்லெறிந்து காலொடித்துப் போட்டிருக்கலாம். மேய்ப்பிடத்தில் வந்து காத்திருக்கும் வலிய மிருகங்கள் அடித்து இழுத்துக் கொண்டு போயிருக்கலாம். இறைச்சிக்காக யாராவது திருடிக் கொண்டு போயிருக்கலாம் எனப் பலவிதமாக நினைத்துப் புலம்புவான். அப்படியான புலம்பலை வெளிப்படுத்தும் ஒரு நல்ல மேய்ப்பனை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு கதையப் பிரபஞ்சன் எழுதியுள்ளார். மரி என்னும் ஆட்டுக்குட்டி என்னும் அந்தச் சிறுகதை இந்தக் காரணத்திற்காக மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் எனக்குப் பிடிக்கும்.
ஒரு கதை உண்டாக்கும் நம்பகத்தன்மையே அதன் வாசகத் தளத்தை விரிவுபடுத்துகிறது. ஒரு சிறுகதையோ நாவலோ வாசகர்களைத் தன் பக்கம் இழுக்கவும், அவர்களுக்கு நெருக்கமானதாகத் தோன்றுவதற்கும் புனைவெழுத்தின் மூன்று அடிப்படைகளில் ஏதாவது ஒன்று அவனது சொந்த வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால் போதும். அந்தப் புனைவெழுத்தை - கதையை- வாசகர்கள் நடந்திருக்கக் கூடிய கதையாக அல்லது நடக்கக் கூடிய கதையாக நம்பி வாசிப்பர். காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றில் எதாவது ஒன்று தொடர்பு பட்டதாக இருந்தால் போதும். நம்பகத்தன்மை உண்டாகி விடும்.
பிரபஞ்சனின் கதைகள் உண்டாக்கும் நம்பகத்தன்மை என்பது அவர் வெளிகளை- இடங்களைச் சித்திரிக்கும் எழுத்துமுறையில் இருக்கிறது என்பது எனது கணிப்பு. குறிப்பான இடங்களில் கதை நிகழ்வதாக எழுதுவது மூலம் அக்கதையின் காலத்தையும், இடம் பெற்றுள்ள பாத்திரங்களையும் நம்பத் தக்கவர்களாக மாற்றி விடுவார்.வட்டாரம் சார்ந்த கதைகள் என்ற வகைபாடுகளின் பின்னணியில் அந்தந்தப் பிரதேசத்தின் வட்டாரமொழிப் பிரயோகம் இருக்கிறது என்றாலும், இடங்களைச் சித்திரித்துக் காட்டும் படைப்பாளியின் திறமையினால் தான் நம்பகத்தன்மை கூடுகிறது.
எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் அவரது கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார் எனச் சொல்ல முடியும். இந்தக் கதையிலும் அந்த மாயத்தைச் செய்துள்ளார். அந்தக் கதை ஒரு பள்ளித் தலைமையாசிரியரும் தமிழாசிரியரும் நடத்தும் உரையாடலாகத் தொடங்குகிறது:

“தமிழ் சார் அந்த அற்புத மரிக்கு டி.சி. கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கிறேன்”என்றார் எச்.எம்.
“ எந்த அற்புத மரி” என்றேன் நான். கதாபாத்திரம் ஒன்றே கதைசொல்லியாக இருக்கும் முன்னிலைக் கதைசொல்லல் உத்தியில் எழுதப் பட்டுள்ள அந்தக் கதையில் வரும் அற்புத மரி, 18 வயதில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டி ருப்பவள். பள்ளிக் கூடத்தில் எழுதப் படாத சட்டங்களாக இருக்கும் உடை ஒழுங்கு, நேர ஒழுங்கு, ஆசிரியர்களிடம் காட்ட வேண்டிய பவ்யம் என எதையும் பின்பற்றாமல் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த வகுப்புகளுக்குப் போகாமல் உடம்பை மட்டும் வளர்த்துக் கொண்டிருக்கும் தடிமாட்டுக் கழுதை என்பது தலைமையாசிரியரின் கருத்து.
அவளின் ஒழுங்கீனங்களைக் காட்ட பல நிகழ்வுகளை- ஆசிரியர்களை மட்டம் தட்டியது, கிண்டல் செய்தது,தன்னையே எடுத்தெறிஞ்சு பேசியது எனப் பலவற்றைக் கூறி அதற்கான தண்டனையாக அவளுக்கு டி.சி.யைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வேண்டும் என்பது அவரது நிலைபாடு. நிறுவன ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு கொண்ட பெரியவர் அவர். ஆனால் அவளது வகுப்பாசிரியரான தமிழாசிரியரோ இருபத்தொன்பது வயது இளைஞர், “ இப்போ போய் டி.சி.யைக் கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போய் அவள் வாழ்க்கையே வீணாய்ப் போய்விடும் “ எனக் கருதுவதோடு மரிக்கு வழி நடத்துதலும் ஆலோசனைகளும் தேவை என நினைப்பவர். அதைச் செய்யவும் துணிந்தவராக கதையை அமைத்துள்ளார் பிரபஞ்சன்.
தனது வீட்டுக்குப் பக்கத்தில் தான் மரியின் வீடு இருக்கிறது என்பதால், தனது மனைவியை அழைத்துக் கொண்டு மரியின் வீட்டிற்குப் போய் அவளது பிரச்சினைகள் என்னவாக இருக்கும் எனப் புரிந்து கொண்டால் அவளை வழிக்குக் கொண்டு வரலாம் என நினைத்துச் சொன்னபோது ’நமக்கேன் வம்பு’ என அவரது மனைவி சுமதி சொல்கிறாள். ஆனாலும் அவளைச் சம்மதிக்கச் செய்து மரியின் வீட்டுக்குப் போய் பேசிய போதுதான் மரியின் எதிர்மறை மனோபாவங் களுக்கான காரியத்தை அறிகிறார்.
பணக்கார வீட்டுப் பெண்ணான மரியுடன் அந்த ஆசிரியரும் அவரது மனைவியும் நடத்திய பக்குவமான உரையாடல்களாகவே பிரபஞ்சன் கதையை நகர்த்தி சென்று முடிக்கிறார். கதையை புரிந்து கொள்ளும் விதமாகச் சில பகுதிகள் இதோ:
“ வீட்டிலே யாரும் இல்லையா?” “ வீடா சார் இது? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டாரு. போயிட்டாருன்னா செத்துப் போயிடலெ. எங்களை விட்டுப் போயிட்டாரு. அம்மா என்னைச் சுத்தமா விட்டு விடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயங்களிலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக் கொண்டால் அது அதிகம்.” ....
“ சாப்பாடெல்லாம் எப்படிம்மா?”
“பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லே தான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க, அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.
சுமதி என்னை முந்திக் கொண்டு கேட்டாள் : “ உன் அம்மாதானே அவங்க?” “ ஆமாங்க, இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை.என்னையும் அவருக்குப் பிடிக்கல. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.” .... ... ...
“ மரி.. ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலா இருக்குமில்லே?”
” நான் யாருக்காக சார் படிக்கணும்” “ உனக்காக” “ பச் !” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று தோன்றவே,
“பீச்சுக்குப் போகலாம். வாயேன்” “ வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
வா என்று அழைத்துப் போனத் தமிழாசிரியரும் அவரது மனைவியும் அவளைத் தங்களின் சிநேகிதியாக- குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்துப் பழக அவளும் தினசரி காலையும் மாலையும் அவர்கள் வீட்டிற்கு வந்து அவர்கள் வீட்டுச் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டாள். சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தந்தாள். சில நாள் கழித்து அந்த மரிக்குட்டி ஆசிரியரிடம் பேசினாள்.
” சார் ஒண்ணு சொல்லட்டுமா?” “ ஊகூம் , ரெண்டு மூணு சொல்லு”
“சீரியஸாகக் கேட்கிறேன். சார். இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?” “ சத்தியமாக் கிடையாது” கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு அவள் சொன்னாள்.
“ ஏன் சார் .. கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?”
“ பைத்தியமே! உலகத்திலே யார்தான் கெட்டுப் போனவங்க? யாராலும் கெட முடியாது. தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும். அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை. உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.”
அவள் சொன்னாள். “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னு தான் அப்படியெல்லாம் நடந்துக்கிறேன் சார்” “ எனக்கும் தெரியும் ” இதற்குப் பிறகு பத்து நாள் கழித்து ஒருநாள்,
“ சார்.. ஏன் நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க கேட்கவில்லை?” அவர் பேசாமல் இருந்த போது, “ நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கிறதுனால தானே இப்படி விட்டேத்தியா இருக்கேன்... கண்களில் நீர்த்திவலைகளுடன் பேசியவளிடம் , “ உனக்கே அது தோணனும்னு தானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப் புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத் தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தேன்னு வச்சுக்கோ, நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்” என்று சொல்ல, அவள் முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.
என்னுடைய வேலை வகுப்பறையில் பாடம் நடத்துவதோடு முடிந்து விட்டது என நினைக்கும் ஆசிரியர்கள் கூட்டத்தில் இந்தத் தமிழாசிரியர் மரி என்னும் ஆட்டுக்குட்டியை வழி நடத்திய நல்ல மேய்ப்பர் தானே. அந்த ஆசிரியரைப் போல நான் மாற வேண்டும் எனத் தூண்டிய இந்தக் கதையைப் படித்த நான் பிரபஞ்சன் விவரித்த அந்த ரயில் நிலையத் தெருவில் நடக்கும் போது எதிர்படும் பெண்களில் மரிக்குட்டி இருப்பாளோ என்று தேடியது கூட உண்டு.

No comments :