July 27, 2009

முகம் அறியா முதலாளிகளும் முகம் தெரிந்த முதலாளியும்:கு.அழகிரிசாமியின் தியாகம்


உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தனம் அல்லது சரிவு இந்தியாவில் வெளிப்படை யாகத் தாக்கிய துறை தொழில் நுட்பக் கல்வித்துறை. வளாகத் தேர்வுக்கு ஒவ்வொரு கல்லூரி யையும் நாடிச் சென்று சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்த போக்கு கடந்த கல்வி யாண்டில் நடக்க வில்லை. அதன் விளைவாக இந்த ஆண்டுப் பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையில் பல பரிமாணங்களை ஏற்பட்டுள்ளன.
தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கணினி அறிவியல்,மின் அணுவியல், தகவல் தொழில் நுட்பவியல் போன்ற பாடங்களின் பக்கம் அலை அலையாகக் குவிந்த மாணாக்கர்களும் பெற்றோர்களும் அடிப்படைப் பொறியியல் பாடங் களான கட்டடவியல் (சிவில்), எந்திரவியல் (மெக்கானிகல்), ஆகியவற்றைத் தேர்வு செய்து படிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். கலை அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம், கணிதம், இயல்பியல், வேதியியல் பாடங்களுக்கும் மாணாக்கர் கூட்டம் அதிகரித்துள்ளது.


கல்லூரி வாழ்வின் இறுதித் தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டில் வந்து இரண்டு மாதங்கூடத் தங்களோடு தங்கவில்லை என ஒரு பக்கம் வருத்தம் காட்டிய பெற்றோர் இருபத்திரண்டு வயதில் இருபதாயிரத்துக்குக் குறை யாமல் சம்பளம் தரும் கம்பெனியில் வேலைக்குப் போய்விட்டதில் பெருமையும் காட்டினார்கள். அந்த வருத்தமும் பெருமிதமும் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. கடந்த பத்தாண்டுகளில் உருவான அந்த இளையோர் கூட்டம் கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது என்ற கதகதப்பில் வேலைக்கான பாதுகாப்பைத் தரும் தொழிற்சங்கம் பற்றிய நினைப்பை யெல்லாம் தவிர்த்தவர்கள். இவ்வளவு சம்பளம் கொடுத்துத் தங்களிடம் வேலை வாங்கும் முதலாளி யார் என்ற கேள்வியைக் கூட எழுப்பாமல் இருந்தவர்கள். தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பணியாளர்களில் ஏராள மானோர் தங்கள் முதலாளிகளின் முகத்தை நேரடியாகத் தரிசனம் செய்தி ருக்கக் கூட மாட்டார்கள்.


அவர்களின் வேலைக்கான ஆணை கணினி வழியாகத் தான் வந்தது. சம்பளப் பணத்தைக் கூடக் கையில் வாங்கியவர்கள் அல்ல. வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பட்டதைக் குறித்து வைத்துக் கொள்ளாமல் செலவு செய்து பழகிப் போனார்கள். கைநிறையச் சம்பளம்; வசதியான வாழ்க்கை; வேலைக்குப் போன அடுத்த ஆண்டு சொந்த வீடு வாங்கக் கடன் வசதி, கையில் பணத்தைத் தொடாமல் மின்காந்தத் தகடுகள் வழிப் பணப் பரிமாற்றம் என நடந்த வாழ்க்கை முறை பல இளையோர்களின் வாழ்க்கைப் போக்கில் திசைக் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்தத் திசைக் குழப்பம் முடிந்து உறைநிலை ஏற்பட்டு விட்டதை இப்போது காண முடிகிறது.


வேலையே இல்லை என்ற போதிலும் கிடைக்கப் போகும் வேலையை உத்தேசித்துக் கொத்துக் கொத்தாகப் பணியாளர்களைத் தேர்வு செய்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதே வேகத்தில் கொத்துக்கொத்தாக வெளியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மூன்று மாத அடிப்படைச் சம்பளம் கணக்கில் போட்டாகி விட்டது; இனி நீங்கள் வேலைக்கு வர வேண்டிய தில்லை; வேறு எங்காவது வேலை தேடிக் கொள்ளலாம் எனக் கணினி வழியே நீக்கல் உத்தரவையும் அனுப்பி விடுகிறது. கடவுளைப் போலக் கண்ணுக்குப் புலப் படாமல் இருந்த முதலாளி தந்த எல்லா வரங்களும் இப்போது சாபங்களாகி விட்டன.


இந்த நிலையைச் சந்தித்த பல நண்பர்களின் பிள்ளைகள் படும் வேதனையை நினைத்துக் கொண்டிருந்த போது கு.அழகிரிசாமி எழுதிய தியாகம் என்ற கதை எனக்கு நினைவுக்கு வந்தது. தொகுப்பை எடுத்து அந்தக் கதையை வாசிக்கத் தோன்றியது.கோவில்பட்டியில் மளிகைக்கடை நடத்தும் கதிரேசன் செட்டியாரைப் பற்றிய கதை அது.


காலையில் சரியாகப் பத்துமணிக்குப் பலகாரம் சாப்பிட்டு விட்டுப் பத்து நிமிட ஓய்வுக்குப் பின் சரியாகப் 10.25-க்குக் கடைக்கு வரும் செட்டியாரின் முக்கியமான வேலையே கடையில் வேலை பார்க்கும் சிப்பந்திகளான நாலு பேரையும் திட்டுவதுதான்.திட்டுவது என்றால் சாதாரண திட்டு அல்ல. எல்லா விதமான வசைகளும் தாராளமாக வெளி வரும். திட்டுவதற்கு அவருக்குக் காரணமே தேவை இல்லை.கடைக்கு வந்தது முதல் கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொள்ள அவர் படும் பாடுகளே பெரும் அவஸ்தையானது. செட்டியார் திட்டுவதை உணர்த்தும் விதமாகக் கு. அழகிரிசாமி பல காட்சி களை எழுதிக் காட்டினாலும் இந்தக் காட்சி ரொம்பவும் சுவாரசியமானது:


“டேய்… ஒன்னத்தாண்டா! அந்த முத்தையாபிள்ளை பாக்கியைப் போய்க் கேட்டியா? அதையும் சொன்னாத்தான் செய்வியா?”
”கேட்டேன், முதலாளி.”
”கேட்டியாக்கும்? கெட்டிக்காரன் தான்! கேட்டு வாங்கணும்னு தோணலியோ?”
”பாக்கியைக் கொடுத்திட்டாரு” என்று பெருமிதத்தோடு சொன்னான் பையன்.
”அட ! என்னமோ இவன் சம்பாத்தியத்திலே வாங்கின மாதிரியில்லே பேசறான்! கடன் வாங்கினவர் கொடுக்காமலா இருப்பாரு? முத்தையாப் பிள்ளை யோக்கியன். இவனைப் போல முடிச்சு மாறிப் பயலா இருப்பாருன்னு நெனச்சான் போல இருக்கு. அதனாலே தான் ‘குடுத்திட்டாரு’ ன்னு ரொம்பச் சவடாலாச் சொல்றான். ஏய் நீ எப்படிடா போய்க் கேட்டே? கண்டிப்பாகக் கேட்டியா!”
“கண்டிப்பாத்தான் கேட்டேன், முதலாளி..”
”கண்டிப்பாக் கேட்டியா? உன்னை யாருடா அப்படிக் கேக்கச் சொன்னது? எதம்பதமாப் பேசனும்னு ஒனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்? கண்டிப்பாப் பேசினா நாளைக்கு எவண்டா கடைக்கு வருவான்
?..
கதிரேசன் செட்டியார் கடைப் பையன்களைத் திட்டும் பல காட்சிகளைத் தரும் கு.அழகிரிசாமி அவரைப் பற்றிக் குறிப்பிடும் வேறு சில பகுதிகள் தான் அவரது இன்னொரு முகத்தை நமக்குக் காட்டுகின்றன.


”அவர்கள் அங்கே இருந்து பழகியவர்கள்.செட்டியாரின் வார்த்தைகளுக்குப் பொருள் கிடையாது என்று மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு; ஒன்று, வேறு எந்தக் கடையிலும் கடைச் சிப்பந்திகளுக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட இங்கே அதிகச் சம்பளம். தீபாவளிக்குப் புது வேஷ்டி சட்டைகளுடன் ஆளூக்குப் பத்து ரூபாய் ரொக்கமும் கொடுப்பார் செட்டியார். கடை வேலையைத் தவிர தம்மை மறந்து கூட வீட்டு வேலை செய்யச் சொல்ல மாட்டார். அவருடைய வீட்டுக்குக் கடைப் பையன்கள் போனால், முகத்தில் கடுகடுப் பில்லாமல், ’ ஐயா, ராசா’ என்று அன்போடு பேசுவார். ஏகதேசமாகச் சொல்வதும் உண்டு. எல்லா வற்றையும் விட முக்கியமாக, யார் என்ன புகார் சொன்னாலும், எந்தப் பையன்கள் வாலிபர்களாகிக் கல்யாணம் செய்து கொள்ளும்போது, கல்யாணச் செலவுக்கு ஒரு கணிசமான தொகையும் கொடுப்பது வழக்கம். அவர்கடையில் வேலை பார்த்த பையன் பெரியவனாகித் தனிக்கடை தொடங்க நினைத்தால் அதற்கும் உதவி செய்வார்.

கதிரேசன் செட்டியாரின் மனிதநேய முதலாளி முகத்தைக் காட்டும் கு.அழகிரிசாமி, செட்டியார் ஏன் திட்டுகிறார் என்பதற்கான காரணத்தைச் செட்டியாரின் நண்பரும் கடையின் வாடிக்கை யாளருமான ஷண்முகம் பிள்ளையுடன் உரையாடும் உரையாடல் வழிகாட்டுகிறார்:

“என்ன செட்டியாரையா, நம்ம சிநேகத்தைப் பொறுத்துக் கேட்கிறேன், கோவிச்சுக்கிட மாட்டீங்களே?”
“ என்ன அண்ணாச்சி, ஒங்களை எப்போ நான் கோவிச்சிருக்கேன்? என்ன இப்பிடிக் கேக்கிறீங்க? நமக்குள்ள என்ன வேத்துமை?”
“ இல்லே, நீங்க ரொம்ப தயாள குணத்தோட இருக்கிறீங்க; ஊரிலேயும் ஒங்களைப் பத்திப் பெருமையாப் பேசிக்கிறாங்க. கடைப்பையன்களுக்கு உங்களைப் போலச் சம்பளம் குடுக்கிறவங்க இல்லேன்னும் எனக்குத் தெரியும். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, இப்படி இருபத்து நாலு மணி நேரமும் கடைப்பையன்களைத் திட்டிக்கிட்டே இருக்கிறீங்க? எப்போ வந்து பார்த்தாலும் எவனையாவது நிப்பாட்டி வைச்சிக்கிட்டுப் பொரியிறீங்களே, எதுக்கு? கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்லே?”
”அண்ணாச்சி, அன்பாதரவா இல்லேன்னா நான் திட்டுவனா? அதைக் கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்க. பயகள நெசமா எனக்குப் பிடிக்கலேன்னா, ஒரே சொல்லிலே கடையை விட்டு வெளியேத்திப் பிட்டு மறுசோலி பாக்கமாட்டனா? சொல்லுங்க.இந்த முப்பது வருஷத்திலே , ஒருத்தனை நான் வேலையை விட்டுப் போகச் சொல்லியிருக்கிறனா? பயக விருத்திக்கு வரணும் தானே தொண்டைத் தண்ணியை வத்த வச்சுக்கிட்டிருக்கேன்? கத்திக் கத்தி என் உசுரும் போகுது.”
தனது உடல் நலத்துக்குக்கேடு என்று தெரிந்தபின்பும் சிப்பந்திகளின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு அவர்களைத் திட்டும் கதிரேசன் செட்டியார் செயல்பாடுகளைக் குறிக்கவே கு.அழகிரிசாமி அந்தக் கதைக்குத் தியாகம் எனத் தலைப்பிட்டுள்ளார்.

தனது வியாபார வெற்றி; தனக்குக் கிடைக்கும் லாபத்தின் அளவு என்பதை விடவும் தன்னை நம்பி வேலையில் சேர்ந்த சிப்பந்திகளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட முகம் தெரிந்த – மனிதாபி மான முகம் கொண்ட முதலாளியத்தை- முதலாளி கதிரேசன் செட்டியார் போன்ற சிறு முதலாளி களைக் காணாமல் போகச் செய்து விட்டு அதன் இடத்தில் ரிலையன்ஸ் ஷாப்பிங், ஸ்பென்சர்கள், மால்கள், பிளாசாக்கள் எனப் பெருங்கடைகள் வந்து விட்டன. பன்னாட்டு மூலதனமும், பெரு முதலாளியமும் கண்ணுக்குப் புலப்படா கடவுளைப் போல மாயத் தோற்றம் காட்டிப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய கு.அழகிரிசாமியின் தியாகம் இன்றைய நிதரிசனத்தை எதிர் மறையாக விளக்கிக் காட்டுகிறது. கதைவெளி மனிதரான கதிரேசன் செட்டியாரைத் திரும்பவும் நமது சமூகம் தேடக் கூடும்; கடந்த காலம் திரும்பும் என்ற நம்பிக்கை பொய் என்பதும் புரிகிறது.

No comments :