அழகிரி என்னும் அதிகார மையம்.

நவீன அரசியல் களம் மௌனமான அதிகார வேட்டை நடைபெறும் மைதானம் – இப்படிச் சொன்ன அறிஞன், அந்தக் கூற்றைப் பொதுவான ஒன்றாக - ஓர் உன்னத வாக்கியமாகக் கருதிச் சொல்லியிருக்க மாட்டான் என்றே நம்பலாம். குறைந்த பட்சம் தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்குப் பின்னும் என இரு வேறு காலகட்டத்தில் மௌனத்தின் இடத்தை உத்தேசிக்காமல் எப்படிச் சொல்ல முடியும். 
தேர்தல்களின் காலம் மௌனங்கள் கலைக்கப்படும் காலம்; வசனங்கள் பேசப்படும் காலம்;ஒத்திகைகள் இல்லாமலேயே நேரடிக் காட்சிகள் அரங் கேற்றப்படும் காலம்.அரங்கேற்றங்கள் மேடைகளில் மட்டுமல்ல; தெருக்களை நாடியும், வீடுகளைத் தேடியும் வரும் காலம். ஆர்ப்பாட்டங்கள் அரங்கேறும் தேர்தல் அரசியலில் மௌனத்திற்கு ஏது இடம் எனக் கேட்டால், தேர்தல் அரசியலில் மௌனம் என்பது அதிகார வேட்டையின் கண்ணி வெடி எனச் சிலர் சொல்லலாம்.
பதினைந்தாவது பாராளுமன்றத்தை உருவாக்க நடந்த தேர்தல் சமீபத்திய தேர்தல் மௌனத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் சமதூரத்தில் நிறுத்தி வைத்து வேடிக்கை காட்டிய ஒன்று எனச் சொல்லத் தோன்றுகிறது.தினசரி செய்தித் தாள்களைப் படிக்காதவர்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்க் காதவர்களும், தமிழ்நாட்டில் தேர்தல் நடந்ததா என்றே கேட்பார்கள். தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படி மாறி விட்டதா?அகில இந்தியாவிலும் இத்தகைய மாற்றம் நடந்ததா எனத் தெரியவில்லை.
பெரும் பெரும் எழுத்துக்களில் சுவர்கள் வண்ணம் பூசிக் கொள்ளவில்லை. காதைக் கிழிக்கும் ஒலிபெருக்கி ஓசையோடு அலறியபடி செல்லும் ஆட்டோ ரிக்சாக்கள் இந்தத் தேர்தலில் காணாமல் போய்விட்டன. காற்றைக் கிழித்துப் பறக்கும் வாகன வரிசைகளில் வந்து இறங்கும் வெள்ளை வேட்டி அரசியல் வாதிகள் கூட்டம் கூட்டமாக வீடுகளுக்குள் புகுந்து கோரிக்கைகள் வைக்கும் காட்சிகளும் இல்லை; தினசரி சம்பளத்தில் தெருத் தெருவாகக் கத்திக் கொண்டு போகும் சிறுவர் கூட்டங்களும் இந்தத்தேர்தலில் இல்லாமல் போய் விட்டன.
இதுவரையிலான தேர்தல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்ற போதிலும் மௌனமான காலம் என்று வரையறை செய்ய முடியாது.தேர்தல் வெற்றிக்குப் பின் விரியும் புன்சிரிப்புகளுக்குப் பின்னாலும், அதிகாரத்தின் ஓடுபாதையில் நடக்கத் தயாராகும் ஒருவரின் ஒவ்வொரு அடியின் போதும் ஓடும் எண்ண ஒட்டங்களுக்குப் பின்னாலும் மௌனத்தின் சாயல் படிந்த அமைதிக்கு உள்ள இடத்தை யாரும் மறுத்து விட முடியாது.
தேர்தல் கால ஆர்ப்பாட்டங்களின் இடத்தைக் காணாமல் செய்ததில் தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்புகளும் கண்காணிப்புகளும் முக்கிய இடம் பிடித்துக் கொண்டன என்றாலும் அவற்றைப் பயன்படுத்தித் தேர்தல் களனை ஊடகங்கள் தங்களின் விளையாட்டு மைதானமாக ஆக்கிக் கொண்டன என்பதும் உண்மையே.ஊடக விளையாட்டுகளில் விளையாட்டுகளில் பங்கேற்கும் விருப்பம் பலருக்கும் இல்லையென்றாலும் வேடிக்கை பார்க்கும் விருப்பம் உள்ளவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள். காரணம் பங்கேற்பு மனநிலைக்குள் இருக்கும் அச்ச உணர்வு, வேடிக்கை பார்ப்பவர்களுக்குத் தேவை இல்லை. வேடிக்கை பார்ப்பவர்களுக்குத் தேவை ஆர்வம் மட்டும் தான். மக்கள் தொடர்பு சாதனங்களின் வரலாற்றையும் வடிவ மாற்றத்தையும் கவனிப்பவர்கள் இன்றைய காலகட்டத்தின் வெகுமக்கள் தொடர்பு ஊடகம் தொலைக்காட்சி அலைவரிசைகள் தான் என்கின்றனர்.
இந்த முடிவை அடைய ஊடக ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி யிருக்கக் கூடும். ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இந்த முடிவுக்கு வந்து சில பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த வகையில் தான் தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளை முன்னோடிச் சிந்தனையுள்ள கட்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். தங்களிடம் உள்ள அதிகார பலத்திற்கேற்ப ஊடக பலத்தைத் தூக்கி நிறுத்தி அதன் வழியே அதிகார வேட்டைக் காடாகத் தமிழ் நாட்டை ஆக்கிக் கொண்டு விட்ட சாதுரியம் மற்ற மாநிலங்களில் செயல் படும் கட்சிகளுக்கு இல்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது தொடங்கி, காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் ஆற்றிய தேர்தல் பணிகள் ஆச்சரியமூட்டுபவையாக இருந்தன. காட்சி ஊடகங்களின் வினைகள் தேர்தல் நெருங்கிய நேரத்தில் வேகம் கொண்டிருந்தன என்றால் அச்சு ஊடகங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்பே தங்கள் பணிகளை முடுக்கி விட்டன என்பது தான் உண்மை. கடந்த நான்கு மாத காலத் துணுக்குகளையும், செய்திக் கட்டுரை களையும் திரும்பப் பார்க்கும் ஒருவருக்கு இப்படிச் சொல்வது ஆச்சரியம் அளிக்காது. குறிப்பாகத் தமிழ் நாட்டில் அச்சு ஊடகங்களே தேர்தல் கூட்டணி களை உருவாக்கின; அவையே கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டுக் கணக்கைப் போட்டுக் கொடுத்தன; எந்தத் தொகுதியில் எந்த வேட்பாளரை கட்சிகள் நிறுத்த வேண்டும் என்பதை முன் மொழிந்தன; வேட்பாளர் தேர்வில் குழப்பங்கள் நிலவிய போது மாற்று வேட்பாளரை நிறுத்தியதிலும் கூட ஊடகங்கள் பங்கு நிச்சயமாக உண்டு. ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பின் மௌனம் ஆயுதமாக ஆகிப் போய் விட்ட நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் மந்திரப் புன்னகைகளைப் படம் பிடித்துப் போட்டதோடு அவற்றின் பணிகள் முடிந்து விட்டதாகக் கருதி ஒதுங்கிக் கொண்டன.
தமிழ் நாட்டின் 38 தொகுதி வேட்பாளர்களிடமும் ஊடகங்கள் இத்தகைய அணுகுமுறை களையே கடைப்பிடித்தன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் மதுரைத் தொகுதி உறுப்பினர் திருவாளர் மு.க. அழகிரியிடம் நமது ஊடகங்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறை முற்றிலும் வேறானவை. மூன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மதுரையில் வெற்றி பெறுவேன் எனச் சொன்ன மு.க. அழகிரி ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தான் வென்றார்.அந்தத் தேர்தல் முடிவைத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு தொலைக்காட்சியில் –இசட் தமிழ் என்று ஞாபகம்- அழகிரியின் வெற்றியை அவரது நெருங்கிய சகாவான மதுரை மன்னன் தொலைபேசியில் சொன்னார். சொல்லி விட்டு,இந்த வெற்றியை மதுரையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறோம் என்றார். அவரோடு தொலைபேசியில் பேசிய பத்திரிகையாளர் சுதாங்கன், மதுரையில் திரு மு.க. அழகிரிக்குக் கிடைத்துள்ள இந்த வாக்குகள் எதனால் கிடைத்தது? அவர் மேல் கொண்ட அச்சத்தினாலா? அல்லது அவர் மேல் வைத்திருக்கும் அன்பினாலா? என்று கேட்டார். இப்படிப் பட்ட கேள்விகள் தான் மு.க. அழகிரி பற்றிய நமது ஊடகங்களின் அணுகுமுறையைத் தீர்மானித்துள்ளன.அந்த அணுகுமுறை தான் இன்று தமிழகத்தின் அசைக்க முடியாத இரும்பு மனிதராக – டெல்லி அரசியலின் அதிகார மையமாக ஆக்கி இருக்கிறது. திரு. மு.க. அழகிரி தமிழ் புலனாய்வு இதழ்களின் புனைவுகளாலும் செய்திகளாலும் உருவாக்கப் பட்ட பிம்பம் என்று சொன்னால் மிகையான ஒன்றல்ல.
முரசொலி பத்திரிகையைக் கவனித்துக் கொள்வதற்காக அனுப்பப்பட்ட திரு. மு.க. அழகிரி, தனது வெளியை அரசியல் வெளியாக மாற்றத் தொடங்கிய பின் அவரைப் பற்றிய பிம்பங்கள் எவ்வாறு கட்டமைக்கப் பட்டன என்பதை ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். அதற்குக் கடந்த பத்தாண்டுகளில் நமது புலனாய்வு இதழ்களான ஜுனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளையும், பொது நிலைப்பட்ட வாராந்திரப் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுக்கள், துணுக்குகள் போன்றவற்றை நிரல் படுத்தி ஆய்வு செய்தாலே போதும். அப்படியான ஆய்வின் போது சுதாங்கன் முன் வைத்த அந்த இரட்டை எதிர்வின் முக்கியத்துவம் புரியக் கூடும்.

அச்சம் x அன்பு என்ற எதிர்வை மையப்படுத்தியே மு.க. அழகிரியின் தன்னிலையை நமது பத்திரிகைகள் உருவாக்கித் தந்துள்ளன. திரு.மு.க. அழகிரி தி.மு.க. கட்சிக்குள் –குறிப்பாக மதுரையில் நேரடி அரசியலில் ஈடுபடாமல் மறைமுக அரசியலில் ஈடுபடுபவராகக் காட்டிய ஊடகங்கள் தொடர்ந்து அவரை திரைப்படத்தில் வரும் தாதாக்களின் தலைவன் என்ற புனைவின் வழியே தான் முன் நிறுத்தி வந்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தில் அனுபவ ரீதியாகக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து வரும் இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியாளராகப் புனையப் பட்ட கட்டுரைகளிலும் சரி, மாறன் குடும்பத்தினருடன் வெளிப் படையாக நடந்த மோதல் காட்சிகளிலும் சரி அவரை நமது பத்திரிகைகள் எப்படி முன் நிறுத்தின என்பதைத் திரும்பவும் நினைவில் கொண்டு வாருங்கள்.

தென் மாவட்டங்களில் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியின் மையமாக அவரை நிறுத்தி, அவரை நம்புகிறவர்களுக்காக வன்முறை வழியையும் பின் பற்றத் தயங்காதவர் என்ற பிம்பத்தை உருவாக்கித் தந்தன.கட்சிப் பிரமுகர் களின் கொலைகள்,வன்முறையான அடிதடிகள், வியாபாரிகளையும் தொழில் அதிபர்களையும் மிரட்டும் காரியங்கள் போன்றவற்றின் பின்னணியில் அவர் இருப்பதாகப் புனைவுகளையே நமது பத்திரிகை ஊடகங்கள் முன் வைத்தன. ஆனால் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களும் வீட்டு விசேடங்களும் எப்போதும் புனைவுகளாகச் சொல்லப் படவில்லை. வைக்கப்பட்ட கட் அவுட்டு களின் எண்ணிக்கை, போடப்பட்ட மேடையின் அளவு, பாராட்டு மொழிகள் என அனைத்தும் புனைவு களற்ற செய்திகளாகத் தரப்பட்டன. திருமங்கலம் இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பின் மு.க. அழகிரியின் நடவடிக்கைகள் புனைவாகத் தரப்பட்டன என்றால், அதற்குப் பின் அவருக்குத் தரப்பட்ட தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி செய்தியாக- வினையாக- சாதனை யாகக் காட்டப்பட்டன. அச்சாதனையின் உச்சம் தான் தென் மாவட்டங்களில் இருந்த பத்து நாடாளு மன்றத் தொகுதிகளில் ஒன்பதை வெல்லக் காரண மானவர் என்பது. அந்தப் புனைவே நேரடியாக காபினெட் அமைச்சராக ஆக்கி இருக்கிறது.

புனைவுகள் மு.க.அழகிரியை அச்சமூட்டுபவராகக் காட்டின என்றால், செய்திகள் அவரை அன்பானவராகக் காட்டின. கட்சிக்காரர்களிடம் அன்பும், பொதுமக்களுக்கு அச்சமும் என்பதான அவரது தன்னிலை தி.மு.க.வின் பலரது பிம்பத்தோடு பொருந்திப்போகும் பிம்பம் அல்ல. கட்சியின் பிம்பங் களோடு என்று கூடப் பார்க்க வேண்டாம்.அவரது குடும்பத்து உறுப்பினர் களோடு கூட ஒத்துப் போகாத தன்னிலையாகவே இருக்கிறது. புத்திசாலித் தனமும், சாணக்கியத் தனமும் கொண்டதாக திரு. மு. கருணாநிதியின் தன்னிலை கடந்த ஐம்பதாண்டு அரசியல் வாழ்க்கையின் வழி உருவாக்கப் பட்டிருக்கிறது. அதனோடு எந்த விதத்திலும் ஒத்துப் போகும் தன்னிலை அல்ல அழகிரியின் தன்னிலை.கல்லூரிக் காலத்திலிருந்தே கட்சியின் போராட் டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று மீண்ட மு.க.ஸ்டாலினின் தன்னிலையிலிருந்து வேறுபட்டது திரு.மு.க. அழகிரியின் தன்னிலை.

ஆனால் இந்தத் தன்னிலை ஒருவிதத்தில் அ இ அதிமுகவின் முன்னாள் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரனோடும், இப்போதைய பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவோடும் பொருந்திப் போகும் தன்னிலையாகும். ஆனால் சில வேறுபாடுகளும் உண்டு.எம்ஜிஆர் பற்றிய பிம்பம் ஏழைகளிடத்திலும் அப்பாவி களிடத்திலும் அன்பு கொண்டது என்றாலும், ஏமாற்றும் கட்சிக்காரர்களிடத்தில் கோபம் கொள்ளும் சுபாவம் கொண்டது என்பதான புனைவுகள் பல உண்டு. அந்தப் புனைவைத் தன்னுடையதாகச் சுவீகரித்து வைத்திருந்த ஜெ.ஜெய லலிதாவைப் பற்றிய புனைவுகளைத் தரும் ஊடகங்கள் அவரிடம் வெளிப் படும் தன்னகங்காரம், வெளிப்படை அற்ற தன்மை, தீர்க்கமான முடிவு களின்மை, புன்னகை அற்ற இறுக்கமான முகம் ஆகியவற்றை மட்டுமே காட்டி அச்சமூட்டும் அவரது பிம்பத்தை அதிகமாக்கி அன்பின் பகுதிகளைக் குறைத்து விட்டன.

தமிழக வாக்காளர்களிடம் எப்போதும் அச்சம் x அன்பு என்ற எதிர்வுகளுக்கு நிரந்தரமான இடம் உண்டு. அதனை அழகிரிக்கு உருவாக்கித் தந்த ஊடகங்கள் இனி உருவாக்கும் தன்னிலை தேர்ந்த நிர்வாகி என்ற பிம்பமா? சிறுபிள்ளைத்தனமான கோமாளி என்ற புனைவையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 29-05-2009

கருத்துகள்

Ramez 1yr இவ்வாறு கூறியுள்ளார்…
Iyaa, thankalathu intha arsiyal saadal velipadai anathum, silarai welicham pottu kaatuwathaaka ullathu, iniyaawathu wilipparhalaa thamilarkal?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்