பண்பாட்டின் பெயரால்.. ..


ராமாயணம் என்னும் பேரிலக்கியம் எப்போதாவது அரசாங்கத்தின் ஆதரவு இலக்கியமாக இருந்ததா? என்று கேட்டால் இலக்கிய வரலாறு சரியாகத் தெரிந்தவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். வால்மீகி எழுதிய ராமனின் கதையை வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதினார் கம்பர் என இலக்கிய வரலாறு கூறினாலும், கவி கம்பனின் இலக்கிய ஆளுமையால் புதுக் காப்பியமாக-பேரிலக்கியமாகக் கம்பனின் இராமாயணம் திகழ்கிறது என்பதை அதை வாசிப்பவர்களும் வாசிக்கக் கேட்பவர்களும் உணரக் கூடும். தமிழில் மட்டுமல்ல; ராமனின் கதையை மலையாளத்தில் எழுத்தச்சனாக இருந்தாலும் சரி, ராமசரித மானஸை எழுதிய துளசி தாசனும் சரி அதை ஒரு மூல இலக்கியமாகவே ஆக்கியிருக்கிறார்கள். எழுத்தில் வந்த ராமனின் கதைகள் மட்டுமல்ல; வாய்மொழி வழக்காறுகளில், அரங்கியல் பிரதிகளில் என எதிலுமே ராமனின் கதை தழுவலாக இல்லாமல் மூலப் பிரதியாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ராமனை எதிர்க் கதாநாயகனாக்கி ராவணனை நாயகனாக ஆக்கிக் காட்ட முயன்ற புலவர் குழந்தையின் இராவண காவியமே ஒரு வாசகனுக்குக் காவியத்தின் சுவையைத் தரவல்ல தாகவே இருக்கிறது.
 
ஒட்டு மொத்த இந்தியாவிலும் ராமாயணம் எப்போதும் அரசாங்க இலக்கியமாக இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. அது எழுதப் பட்ட காலம் தொடங்கியே தமிழ் நாட்டை ஆள்பவர்களின் ஆதரவைப் பெற்றதாக இல்லை. சைவ ஆதரவு அரசாங்கமாக இருந்த சோழப் பேரரசு காலத்தில்– குலோத்துங்க சோழனின் காலத்தில் வாழ்ந்த கவி கம்பனை ஆதரித்தவர் வள்ளல் சடையப்பர். அவரது ஆதரவில் எழுதப்பட்ட ராமாயணம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்கள் மனதில் பதிந்த இலக்கியமாக ஆகி விட்டது. ஆனால் குலோத்துங்கனின் ஆதரவு பெற்ற ஒட்டக்கூத்தரின் படைப்பு களோ இலக்கிய வரலாற்றில் வாசிக்கப் படாத இலக்கியப் பிரதிகளாக நின்று போய்விட்டன.

ராமாயணக் காப்பியத்தின் பாட்டுடைத்தலைவனான இராமனின் பாத்திர வார்ப்பும், அப்பாத்திரம் திருமாலின் அவதாரம் எனக் கவி கட்டி எழுப்பியுள்ள திறனும், அவ்வாறு கட்டி எழுப்புதற்குப் பயன்படுத்தியுள்ள கிளைக் கதைகளும், காப்பிய போக்கில் இருக்கும் திருப்பங்களும், அதன் வழியாக உருவாக்கப்படும் உணர்ச்சிகளும், உணர்ச்சி மோதல்களும் என ராமாயணம் அதன் இலக்கிய நயத்திற்காகவும், நுதலும் பொருளுக்காகவும் எப்போதும் பெருங்கூட்டத்தினரைக் கவரும் இலக்கியமாக இருந்துள்ளது. ராமனின் பால் ஈர்ப்பும் பக்தியும் கொண்டவர்கள் இராமாயணத்தை வாசித்தார்கள் என்பதைத் தாண்டி ராமன் மீது பக்தி அற்றவர்களும் காப்பிய நயத்திற்காக வாசித்தார்கள் என்றே சொல்லலாம்.

ராம பக்தி, காப்பிய ஈடுபாடு என்பதைத் தாண்டி ராமாயணம் இருபதாம் நூற்றாண்டில் தீவிரமாக வாசிக்கப்பட்ட இலக்கியம் என்பதும் உண்மை. ராமன் என்னும் கடவுள் தன்மையை, பிம்ப உருவாக்கத்தை எதிர்க்க வேண்டும்; அதன் வழியாக உண்டாக்கப்படும் மூட நம்பிக்கைகளிலிருந்து படித்தவர்களையும் பாமர மக்களையும் மீட்க வேண்டும் என நம்பிய திராவிட இயக்கத்தவர்களும் பகுத்தறிவாளர்களும் அதிகமாக வாசித்த காப்பியம் ராமாயணம் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான சி.என். அண்ணாதுரையின் எழுத்துக்களை வாசிப்பவர்கள் உணரக்கூடும். கம்பரசம்,தீப்பரவட்டும் போன்ற நூல்களை எழுதிய அண்ணா இராமாயணத்திற்கு எதிர்நிலைப் பாட்டை எடுத்தவர். ஆனால் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தை வாசிக்கும் போது ஒரு கருத்தியலை எதிர்ப்பதற்காக அதனைப் பேசும்- அந்தக் கருத்தியலை முன் வைக்கும் ஒரு நூலை எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை உணரலாம். அதனை ஒரு நாடகம் என்பதை விடவும் மிகச் சிறந்த திறனாய்வு நூல் என்று சொல்லுமளவுக்கு ராமாயணத்தை மீளாய்வு செய்துள்ளது அந்த நூல்.

ராமாயணத்தை எதிர்நிலைப்பாட்டோடு விமரிசனம் செய்த திராவிட இயக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக அன்றைய காலகட்டத்து அறிஞர்களான நாவலர் சோமசுந்தரபாரதியார், அ.ச.ஞானசம்பந்தன், மக்கள் தலைவர் ப.ஜீவானந்தம், எஸ்.ஆர்.கே. என அழைக்கப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதிய ராமாயண நூல்களும், மேடைப்பேச்சுக்களும் இராமனை மையப்படுத்தி எழுதப்பட்ட/பேசப்பட்ட கொடை கள். அறிவின் பாற்பட்ட ராமாயண ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துக்கள் கொண்ட இருவகை நூல்களுமே எப்போதும் வாசிக்கத் தக்கன; விவாதிக்கத் தக்கன. ஆனால் இன்று இராமனின் பேரால் நடத்தப் படும் செயல்கள் எத்தைகையன என்று யோசித்தால் மிகுந்த வருத்தம் தரக்கூடியனவாக உள்ளன.

ஒரு மனிதனின் தன்னுடைய செயல்பாட்டிற்காகப் பெருமை கொள்ளவும் முடியும். செய்து முடித்த பின்பு இப்படிச் செய்து விட்டோமே என்று குற்ற வுணர்வுடன் சிறுமைக்குள்ளாகவும் முடியும். உங்கள் செயல்பாடு பெருமைக்குரியதா? சிறுமைக்குரியதா? என்பதை மற்றவர்கள் உணர்த்துவதை விட நாம் உணர்வதில் தான் தன்னிலையின் அடுத்த கட்டப் பயணம் இருக்கிறது. ராமாயணத்தை மையப்படுத்தி எனக்கு ஒரே நேரத்தில் பெருமிதமும் குற்றவுணர்வும் உண்டான நிகழ்வு ஒன்று உண்டு. பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்னாள் அந்த நாடகத்தை அரங்கேற்றினேன். தமிழின் மிக முக்கியமான புனைகதை ஆசிரியரும் மனித நேயமும் முற்போக்குப் பார்வைகளையும் கொண்ட பாத்திரங்களையும் படைப்பவராக வலம் வரும் பிரபஞ்சன் எழுதிய மிகச்சிறிய நாடகம் அது. அவரது ஒரே நாடகத் தொகுப்பான முட்டை தொகுப்பில் இரண்டாவதாக உள்ள நாடகம். ராமாயணத்தின் கிளைக்கதை களுள் இடம் பெறும் அகலிகையை மையப் பாத்திரமாக்கி, இப்போதைய பெண்ணின் பிரதிநிதியாக அவளை மேடையில் கொண்டு வந்து நிறுத்தும் நாடகம். நாடகத்தின் உச்ச நிலையில் அல்லது நிறைவுக் காட்சியில் ராமனின் கால் பட்டு கல்லாக இருந்து உயிர் பெறும் அகல்யாவை ராமனுடன் வரும் விசுவாமித்திரர் ‘தீர்க்க சுமங்கலி பவ’ என வாழ்த்துவார். அப்படி வாழ்த்தியவுடன் அகல்யா கேட்கும் வசனமாக பிரபஞ்சன் எழுதிய வரி இது:

 ‘யாரோடு?இந்திரனோடா? கௌதமனோடா?’ அகல்யாவின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் விசுவாமித்திரன் திகைத்து நிற்க, அவனோட வந்த ராம லக்குவர்களும் திகைத்து நிற்பார்கள். தனது கேள்விக்கு மூவரிடமிருந்தும் பதில் இல்லை என்ற நிலையில் திரும்பவும் அகல்யா நகைப்புத் தோன்றும் புன்முறுவலுடன் கல்லான நிலையைக் காட்டி நாடகத்தை முடித்து இருந்தோம்.

 நாடகம் முடிந்த போது பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் நிரம்பி யிருந்த இரண்டாயிரம் பேரும் கரவொலி எழுப்பிப் பாராட்டினார்கள். ஆனால் என்னிடம் நாடகம் போட வேண்டும் எனக் கேட்டு முன் பணம் தந்த கம்பன் விழா ஏற்பாட்டாளருக்கு அந்த நாடக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கம்பன் கழகம் புதுமைக்கும் வழி வகுக்கும் எனப் பேசிச் சால்வையை அணிவித்து விட்டுப் பின்னர் தனியாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். நாங்கள் காண்பிக்க விரும்பும் ராமன் கடவுள்; எல்லாக் கேள்விகளுக்கும் அவனிடம் பதில் உண்டு; ஆனால் உங்கள் நாடகம் அவனைத் திகைத்து நிற்கும் ஒரு மனிதனாகக் காட்டி விட்டது எனச் சொன்னார். பார்வையாளர்கள் ரசித்தார்களே எனக் கேட்ட போது கும்பல் எல்லாவற்றையும் ரசிக்கத்தான் செய்யும். ஆனால் அந்தக் கும்பலுக்கு எதனைத் தருவது என்பதை இதுவரை நாங்களே முடிவு செய்தோம். ஆனால் இந்த நாடகத்தின் மூலம் அதை மாற்றி விட்டீர்கள். வருத்தத்தான்; ஆனால் வாழ்த்துகிறேன் என்றார்.

ஒரு பெண்ணிய நாடகத்தை- அதற்கு எதிரான மனநிலை கொண்ட பார்வை யாளர்களின் முன்னால் நடத்திக் கைதட்டல் வாங்கிய பெருமிதம் அந்தப் பெரியவர் – கம்பன் கழகச் செயலர் புலவர் அருணகிரியின் பெருந்தன்மைக்கு முன்னால், எதிராளியின் கருத்தை- கலைப் பார்வையை- முன் வைக்கும் திறனை மதிக்கும் நேர்மைக்கு முன்னால் நான் கொஞ்சம் சிறுத்துத் தான் போனேன். எனது செயலில் நான் நேர்மையோடு இருக்கிறேன் எனப் பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில் புலவர் அருணகிரியும் அவ்வாறே இருந்தார் என்பதை அறிவார்த்தமாக யோசித்த போது எனது பெருமிதம் குற்றவுணர்வுக்குள்ளானதை இப்போதும் மறுக்க முடியாது. வென்றிலன் என்ற போதும் என்ற கம்பனது வரிக்கு உதாரணமாக அருணகிரி நின்றார் என்பது புரிந்தது.

அகல்யா நாடகத்தை- நாடகத்தின் அந்த முடிவைப் பார்வையாளர்கள் முன்னால் வெறும் வசனங்களாகச் சொல்லியிருந்தால் அந்தக் கரவொலி கிடைத்திருக்காது என்பதை நான் அறிவேன். அகலிகையும் இந்திரனும் முன்பிருந்தே காதலர்கள்; கௌதமன் தான் இடையில் புருஷன் என்ற அதிகாரத்துவப் பதவியில் வந்து அவளை வதைத்தவன் என்பதாகப் பிரபஞ்சன் உருவாக்கியிருந்த நாடக நிகழ்வின் வசனங்கள் பெண்ணின் மன உணர்வை மட்டும் உடலின் மொழியையும் பேசவல்லனவாகவே எழுதப்பட்ட பிரதி. காதலும் காமமும் எனப் பிரிக்க முடியாத கவிதை வரிகளை எனது நடிகர்களான மனு ஜோஷும் உஷா ரகுராமனும் தங்கள் உடல் மொழியால் பலவிதமான காட்சித் தளங்களுக்குள் கொண்டு போனார்கள்; பார்த்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்தைக் கட்டிப் போட்ட அந்த நடன அசைவுகளும், உடலின் கோடுகளும், வீணை இசையின் ஆலாபனைகளும் சேர்ந்து அகலிகையின் நிலையை-கண்டு கொள்ளாத கணவனால் புறக்கணிக்கப் படும் பெண்ணின் - நிகழ்காலப் பெண்ணின் ஏக்கமாக மாற்றிக் கட்டமைத்துக் காட்டிய போது பார்வையாளர்களின் மனம் திளைத்துப் போய் கைதட்டி நின்றது. ஆனால் அந்த நாடகம் இப்போது ஒரு பல்கலைக்கழகத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய நாடகமாக இல்லை என மாணவர்களாலும், நடத்தக் கூடிய நாடகமாக இல்லை என ஆசிரியர்களாலும் எதிர்க்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த எதிர்ப்பை முன்னெடுப்பவர்கள் இடதுசாரிக் கட்சி ஒன்றின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் பெருமன்றம் என்பதை அறிந்த பின் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

 அந்தக் கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. அகில இந்திய மாணவர் பெருமன்றத்திற்கும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தையும் வேறுபடுத்தும் அடையாளங்கள் என்ன என்பதை அவர்கள் விரைவாகக் கண்டு கொள்ள வேண்டும் என்பதை மட்டும் கூறத் தோன்றுகிறது. பண்பாட்டு அக்கறைகள் எப்போதும் பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போவதாகப் பேசி பெண்களின் உரிமைகளோடு விளையாடுவதையே வாடிக்கையாக்கி கொள்கின்றன.
கர்நாடக மாநிலம் மங்களூரில் பைப் கலாசாரத்திலிருந்து பெண்களைக் காப்பாற்றத் துணிந்து நடவடிக்கையில் இறங்கிய ஸ்ரீராம் சேனாவின் செயல்பாடுகள் பண்பாட்டுக் காவலா? பயமுறுத்தும் வேலையா? என்று பட்டிமன்றம் போட்டு முடிவு காண வேண்டிய ஒன்று அல்ல. அவர்களின் செயல்பாடு வன்முறையின் உச்சம் என்றால் அவர்களை உடனடியாக ஜாமீனில் வெளியில் விட்ட பாரதீய ஜனதா அரசாங்கத்தின் போக்கு சட்டத்தின் ஆட்சியையையும் நாகரிக சமுதாயத்தில் ஆண் பெண் உரிமைகள் பற்றிய விவாதத்தையும் முடக்கிப் போட்டு பாசிசத்தை அதிகாரத்தின் உச்சியில் நிறுத்தும் செயல் என்று விரித்துச் சொல்ல வேண்டியதில்லை.

விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட அத்தனை பேருக்கும் பெயில் கிடைத்து விட்டது. காரணம் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது. கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களில் தண்டனை ஏதுமின்றி விடுவிக்கப் பட்டனர். வெளியே வரும் அவர்கள் ஒவ்வொருவரும் மாலையிட்டு வரவேற்கப்படும் காட்சியைத் தொலைக்காட்சிகளில் நாம் பார்த்திருக்கலாம். அவர்கள் வெளியே வரும்போது மாலை போட்டு வரவேற்க வாசலில் கூட்டம் காத்திருக்கிறது எனக் காட்டுவதன் மூலம் இது போன்று நிகழ்வுகள் இன்னும் தொடர இருக்கின்றன; தன்னை விடுதலை அடைந்த மனுசியாகக் கருதும் ஒவ்வொருத்திக்கும் அடிகள் விழக் காத்திருக்கின்றன என்பதை மறைமுகமாகச் சொல்லுவதுதான்.
பாரதீய ஜனதாவும் அதன் துணை அமைப்புக்களும் இந்தியாவில் கட்டவிழ்த்து விட உள்ள பிரச்சினைகள் எப்படிப் பட்டதாக இருக்கப்போகின்றன என்பதை உணர ஒரேயொரு உதாரணத்தைச் சொன்னால் போதும் என்று நினைக் கிறேன். 

உலகப் புகழ் பெற்ற திரைப்படக் கலைஞன் சார்லி சாப்ளின் சிலையை இந்தியாவில் வைக்கக் கூடாது என்று சொல்லும் அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? சாப்ளின் ஒரு கிறித்தவராம். சார்லி சாப்ளின் ஒரு கிறித்தவர் என்று சொல்லி அவரது சிலைத்திறப்பை மறுக்கும் முட்டாள் கூட்டத்தைக் கட்டி எழுப்பி ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுபவர்கள் தான் இன்னொரு புறம் தகவல் தொழில் நுட்பத்தின் மையமாக இந்தியாவை ஆக்குவோம் என தொலை நோக்குப் பார்வையையும் முன் வைக்கிறார்கள். எதை நம்புவது?
கைவிடப் பட்ட அயோத்தி பிரச்சினையைத் திரும்பவும் எடுப்பதன் மூலம் -அங்கு ராமனுக்குக் கோயில் கட்டுவோம் எனச் சொல்வதன் மூலம் - மாபெரும் இலக்கியத்தை- மனித குணங்களை அசை போட்டுப் பார்க்கத் தோதான செவ்வியல் பாத்திரம் ஒன்றைக் கொச்சைப் படுத்துகிறோம் என்பதைக் கூட உணராதிருக்கும் இவர்களுக்கு அந்த ராமன் கடவுளாக வந்தாலும் கதி மோட்சம் கிடைக்காது.

கருத்துகள்

baskaran இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுடைய புரட்சிகரமான கருத்துகளுக்கு வாழ்த்துகள்.கம்பனில் அகலிகை தெரிந்தே தவறு(?)செய்கிறாள்.உங்களுடைய இன்றைய அளவுகோல்களை அங்கு கொண்டு செல்லாதீர்கள்!மங்களூரில் பதின்ம வயதுப் பெண்கள் பெற்றோரின் அனுமதியின்றி,சட்டத்துக்குப் புறம்பான விடுதிகளுக்குச் சென்று கஞ்சா அடித்துக் கொண்டு ஆண்களுடன் கூத்தடிப்பதை வரவேற்கிறீர்களா?எது பெண்ணுரிமை ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்