அமெரிக்கன் கல்லூரி: அலையும் நினைவுகள்


எங்கெங்கோ முட்டி மோதினாலும்
மீண்டும் மீண்டும்
நுழைவாயிலை நோட்டம்
விடத் தவறப் போவதில்லை.

இந்த வரிகள் 1980 ஆண்டின் கல்லூரி ஆண்டு மலரில் எழுதிய நீண்ட கவிதையின் சிலவரிகள். கவிதைக்கான தலைப்பு: உன்னைப் பிரிய முடியாமல். இன்று இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து போய்விட்டன. என்றாலும் ஆண்டிற்கு இரண்டு தடவைக்குக் குறையாமல் கல்லூரிக்குள் நுழைந்து ஒரு சுற்றுப் போட்டுவிட்டு வருவதை நிறுத்தி விடவில்லை. காரணம் எதுவும் இல்லையென்றாலும் - அந்தவழியாகப் போக நேர்ந்தால் உள்ளே போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கையில் இருக்கும் புத்தகத்தைத் திறந்து படித்து விட்டுத் தான் வருவேன்.

பேராசிரியராகி மாணவர்களுக்குப் பாடம் நடத்தி அலுத்துக்கூடப் போய் விட்டது. என்னிடம் படித்தவர்கள் டாக்டர் பட்டம் உள்பட எல்லாவகைப் பட்டங்களையும் பெற்றுப் பேராசிரியர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மஞ்சள் பூக்களை வாரி இறைக்கும் அந்த வளாகத்தில் நுழைந்தால் இன்னும் நான் மாணவன் தான்.

விருமாண்டி புகழ் சண்முகராஜாவின் இயக்கத்தில் மோலியரின் மனைவிகள் பள்ளி நாடகத்தைப் பார்க்க டிசம்பர் 2005-ல் போயிருந்த போது என்னருகில் நண்பர் ந,முத்துமோகன் [மார்க்சிய சித்தாந்தின் இந்திய மாதிரிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பவர்], கஸ்தூரி மான் சினிமாவில் நடித்ததின் வழியாகப் பரவலாக அறியப் பட்டிருந்த வி.எம்.சுபகுணராசன் [அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர் தான்] எனப் பலரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அங்கு வந்த கல்லூரி முதல்வரும் எனது ஆசிரிய மாதிரியாருமான பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா," என்னப்பா தமிழ் நாட்டோட முக்கியமான விமரிசகர்கர்கள் எல்லாம் வந்திருக்காங்க; அவங்களுக்குப் பிடிக்கிற மாதிரி நாடகம் இருக்குமா " என்று கேட்டுவிட்டுச் சிரித்தார். அந்தச் சிரிப்பு 'தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயின் சிரிப்பு' என்பதை நானறிவேன். உடனே நான் சொன்னேன். இந்த ஆடிட்டோரியத்தின் முன்னால் நாங்க எல்லாரும் மாணவர்கள் தான் என்று.

சிவாஜி - எம்ஜிஆர் என்ற இரட்டை பிம்பங்கள் தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய காலத்தில் நடிப்பை மட்டும் காரணமாகக் கொண்டு சிவாஜி கணேசனை அழைத்துத் தனது கலையரங்கத்தைத் திறந்து வைத்துக் கொண்ட கல்லூரி அது.உலகில் இன்று முக்கியத் துறைகளாக உள்ள அனைத்திலும் அதன் மாணவர்கள் தலைசிறந்த பிம்பங்களாக இயங்கியிருக்கிறார்கள்; இயங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவர் துறைசார்ந்து கல்லூரி வளாகத்தை நினைத்துக் கொள்ள நாட்களும் நிகழ்வுகளும் உள்ளன. மாணவனாக, ஆசிரியனாக, வழிப்போக்கனாக அந்த வளாகத்தோடு தொடர்புள்ள எனக்கும் நிறைய உண்டு.

எனது பள்ளிப் படிப்பு இன்றுள்ளது போல் பன்னிரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டியது அல்ல.பதினொரு வருடம் படித்தபின் பொதுத்தேர்வு. எஸ்.எஸ்.எல்.சி., சான்றிதழ் கிடைக்கும். எஸ்.எஸ்.எல்.சி. அறுநூறுக்கு நானூறு வாங்கினால் அமெரிக்கன் கல்லூரிக்கு மனுச்செய்யலாம் என்பது பொதுவான கருத்து. அதற்குக் குறைந்த மதிப்பெண் உடைய ஒருவன் அந்தக் கல்லூரியை நினைத்துப் பார்க்கவேண்டியதில்லை. பள்ளியிறுதித் தேர்வில் 76 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்த நான் முதலில் வாங்கிய மனு அமெரிக்கன் கல்லூரியில் தான். அதுவும் கணக்கில் புலி வேறு. சிறு கல்தடுக்கியதில் இரண்டு மார்க்கைத் தவறவிட்ட புலி. 98 மதிப்பெண்களுடன் கணக்கு, இயல்பியல், வேதியியல் பாடங்களை எடுத்து நான் புகுமுக வகுப்பில் படித்த வருடம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்திய ஆண்டு.

அன்றைய மாலைச் செய்தித்தாளை வாங்கிக் கொண்டு வந்து வாலஸ் ஹாலில் நண்பனின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இரவு 11 மணிக்கு மேலும் பேச்சு. விளக்கை அணைத்துவிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். பேசிக் கொண்டிருந்த நாலுபேரும் அடுத்த ஆண்டில் பொறியியல் கல்லூரியில் சேர வேண்டும் என்ற ஆசையில் படித்துக் கொண்டிருந்தவர்கள். எங்களை அமெரிக்கன் கல்லூரிக்கு அனுப்பி விட்டு எங்கள் பெற்றோரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அன்றிரவு நாங்கள் போட்ட திட்டம் மட்டும் செயல் படுத்தப்பட்டிருந்தால் நாங்கள் நாலுபேரும் இப்பொழுது என்னவாகி இருப்போம் என்பதை நினைப்பதே சுவாரசியமானதுதான். சிறைக் கொட்டடியில் மிதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தியாகியாக ஆகியிருக்கலாம்; மிசா ராமசாமி என்ற பெயருடன் அரசியல் கட்சி ஒன்றில் அமைச்சராகி இப்பொழுது டாடா சுமோவில் வலம் வருகிறவனாக ஆகியிருக்கலாம். இல்லையென்றால் அரசியல் பேச்சு எழுதித் தரும் தோழராகத் தலைமறைவு வாழ்க்கைக்குள் முகம் தெரியாமல் இருந்து கொண்டிருக்கலாம்.

நாங்கள் போட்ட திட்டம் இதுதான்: நாலு பேரும் இன்று தேவர் சிலை உள்ள இடத்தில் அவசரநிலைக் கெதிராக நாங்கள் சேர்ந்து தயாரித்த கவிதைப் பிரசுரங்களைச் சத்தமாக வாசிப்பது என்றும், தடுக்கப்பட்டால் இந்திரா காந்தியின் படத்தை எரிப்பது என்றும் முடிவு செய்தோம். ஆனால் அது எதுவுமே நடக்கவில்லை. அடுத்த நாள் பாத்ரூமில் குளிக்கத் தண்ணீர் வருவதில் ஏற்பட்ட சிக்கலில் எங்களுடைய கவனம் திசைமாறி வார்டனிடம் முறையிடுவது, இல்லையென்றால் கல்லூரி முதல்வரைப் பார்ப்பது என்ற திட்டமாக மாறிப் போய்விட்டது. ஒரு சர்வதேச அரசியல்வாதியாக உருவாக விடாமல் தடுத்த அந்த வாலஸ் ஆஸ்டல் குளியலறையைக் கோவித்துக் கொள்வதா? நன்றி சொல்வதா? என்பது இன்று வரைக்கும் தெரியவில்லை. இன்றும் கோபத்தோடும் வாஞ்சையோடும் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொள்வேன்.

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன் நூலகத்தில் கூட்டம் அலை மோதும். பதினைந்து நாட்கள் படிக்க வேண்டிய நூல்களை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குப் போகத் தயாராகும் வேலை. நானும் அந்த எத்தணிப்பில் எனக்களித்த மூன்று டோக்கனுக்கும் மூன்று புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து புத்தகத்தைப் பெற நின்றிருந்த வரிசையில் நின்றேன். ஐந்து நிமிடத்திற்குப் பின் முதல்வர் டாக்டர் எம்.ஏ. தங்கராஜ் நூலக வாசலில் வந்து நின்றார். வெளியேறும் மாணவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகங்களை வாங்கிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.சிலருடன் பேசினார்; சிலரை முதுகில் தட்டிக் கொடுத்தார். எனக்குப் பயம் கூடிக் கொண்டே இருந்தது. என் கையில் இருக்கும் மூன்று புத்தகங்களும் தமிழ் புத்தகங்கள். ஜெயகாந்தன் நாவல் ஒன்று.புதுமைப் பித்தன் கதைகள் இன்னொன்று. மூன்றாவது அண்ணா துரையின் ஓரிரவு.

முதல்வரை இயற்பியல் துறையில்  பார்த்திருக்கிறேன். வாரம் ஒருநாள் முதுநிலை அறிவியல் மாணவர்களுக்குப் பாடம் நடத்த வருவார்.  அவருக்கும் என்னைத் தெரியும் என்ற நினைப்பு. கணக்கு, இயல்பியல், வேதியியல் படிக்கிறவன் தமிழ் புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகிறாயே என்று கேட்டால் என்ன சொல்வது என்பதுதான் எனது பயத்துக்குக் காரணம். என்னிடம் இருந்த புத்தகங்களை வாங்கினார்.

'என்ன குருப் ?' என்றார்.

'பர்ஸ்ட் குருப் சார்.' என்று சொன்ன போது பயத்தில் வாய் குழறியது.

'டியர் ப்ரண்ட்ஸ். இங்கே பாருங்க..' எல்லோருடைய பார்வையும் என்மேல். திட்டுக் கிடைக்கும் என்று மனம் சொன்னது. ஆனால் ஆச்சரியம். கிடைத்ததோ பாராட்டு. வெகேஷன்லயும் பாடப்புத்தகத்தைப் படிக்கணும்னு அவசியம் இல்ல; இவரெ மாதிரி லிட்டரேச்சர் வாசிக்கிறதுக்கு விடுமுறையைப் பயன்படுத்தலாம் என்று சொல்லிவிட்டுக் கைகொடுத்து அனுப்பினார். பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் இந்தப் புதுமைப் புத்தனையும் ஜெயகாந்தனையும் பெயர்களாகப் புதுமுக வகுப்பு மாணவர்களிடமே சொல்லி விட்டுப் போகும் ஆசிரியர் ஒருவர் அப்பொழுது இருந்தார். இளம் வயதில் மாணவப் பருவத்தைக் கடக்காதவராக அப்பொழுது வந்து பாடம் நடத்துவார். அவர் இப்போதைய முதல்வர் சாமுவேல் சுதானந்தா.

வேதியியல் பாடம் கொடுத்த அடியில் என்சினியரிங் ஆசையை எல்லாம் தொலைத்துவிட்டு ஓராண்டு இடை வெளிக்குப் பின் திரும்பவும் மனம் விரும்பிய இலக்கியமாணவனாகக் கல்லூரியில் நுழைந்து வாசிக்கத் தொடங்கிய புத்தகங்கள் கணக்கற்றவை. வாசிப்பு.. வாசிப்பு.. நாயாப் பேயான வாசிப்பு ஒரு பக்கம். கவிதைகள் எழுதத் தொடங்கியாச்சு. ஆனந்தவிகடனின் பொன்விழாவில் ஒதுக்கப்பட்ட மாணவப் பக்கங்களில் இரண்டு தடவை கவிதைகள் அச்சானதில தலையும் புரியல; காலும் புரியல. கொஞ்சநாள் கழித்துக் கணையாழியில இரண்டு கவிதைகள் அச்சானது. அந்தக் கவிதைகள் வந்த கணையாழி இதழைக் கையில் எடுத்துக் கொண்டு போய் தான் போகும் வகுப்புகளில் வாசித்து காட்டியிருக்கிறார் பேராசிரியர் சுதானந்தா. அவர் வாசித்த கவிதைகளை வாசிக்க விரும்பி விடுதியில் நண்பர்களும், நண்பர்கள் அல்லாதவர்களும் கூடினார்கள். இலக்கியவாதியாகிக் கொண்டிருக்கிறோம் என்ற மிதப்பு சின்னதாக உண்டானது.

மாணவர்களின் இலக்கிய மற்றும் பத்திரிகை ஆர்வத்திற்குத் தீனி போடும் வேலையாகக் குரல் எனத் தமிழில் பாதியும் voice என ஆங்கிலத்தில் பாதியுமாக ஓரிதழ் அப்பொழுது வெளியிடப்பட்டது. ஆண்டிற்கு மூன்று இதழ்கள் கொண்டு வரப்படும். அதன் மொத்த செலவுக்கான பணத்தையும் கல்லூரி நிர்வாகம் தான் தரும். இரண்டாமாண்டு படிக்கும் போது ஒவ்வொரு இதழிலும் கவிதை எழுதி வந்த எனக்கு மூன்றாமாண்டு படிக்கும் போது அதன் தமிழ்ப் பகுதி ஆசிரியராக ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் போட்டி கடுமையாக இருந்தது. என்னோடு போட்டியிட்டுக் கோபத்துடன் வெளியேறிய மாணவர் சந்திரசேகர்; வணிகவியல் மாணவர். இன்று தமிழின் முக்கியக் கவிஞராகவும் புனைகதை எழுத்தாளராகவும் விளங்கும் யுவன் சந்திரசேகரைச் சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் அன்று தவறு நடந்தது என்றே மனம் சொல்லும். அப்புறம் படைப்பாளி தான் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கத் தகுதியுடையவனா..? ஒரு விமரிசகனுக்கு அந்தத் தகுதி கிடையாதா என்று இப்போது தேற்றிக் கொள்வேன். ஆனால் அன்று சந்திரசேகரும் நானும் மோதியது ஒரே கோதாவில் என்பதுதான் சுவையான செய்தி.

கதைகள் எழுத முயன்று நோட்டுகள் தீர்ந்தன. ஓவியர் ஜெயராஜ் இந்தக் கல்லூரியில தான் படித்தார் என்ற தகவலுக்குப் பின்னால் நீண்ட சடை தொங்கும் பெண்களின் பின்புறத்தை வரைந்து தள்ளினேன். பின்புறம் வரைவதில் சிக்கலே இல்லை. மெதுவாக அலுங்காமல் குலுங்காமல் நடந்து போகும் பெண்களைத் தினசரி துறைக்கருகில் உள்ள மரத்தடி நிழலில் உட்கார்ந்து பார்த்துப்பார்த்துப் பதிந்து இருந்தது. ஆஸ்டலில் இருந்து கிளம்பி வரும் அனைவரும் மணிக்கூண்டு வழியாகப் போவதைப் பார்ப்பது அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருந்த காலம் அது. முன்புறத்தை வரைவதில் முகம் தான் தகராறு செய்தது. எந்தப் பெண்ணின் முகமும் அதில் ஒட்டவில்லை என்று தெரிந்த பின் ஓவிய ஆசை முடிந்து போனது. கல்லூரியின் விழாக்களுக்கான கலை நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் சாமுவேல் சுதானந்தா தனது பட்டாலியன்களிடம் பொறுப்பைப் பிரித்துக் கொடுத்துவிடுவார். பட்டாலியனில் நானும் ஒருவன்.

என். எஸ். எஸ். சின் பொறுப்பு ஆசிரியராக இருந்த சாமுவேல் சுதானந்தாவை நாடிப் பலதுறை மாணவர்களும் வருவார்கள். ஒவ்வொருவரின் திறமையையும் முழுமையாக அறியாவிட்டாலும் அவர்களுக்கான மேடை களை உருவாக்கித் தரவேண்டும் என்பதில் குறியாய் இருப்பார். இப்பொழுது பாண்டிச்சேரியில் இருக்கும் டாக்டர் பரசுராமனும் [பள்ளிப் பாடத்திட்டம் சார்ந்த மொழியியல் அறிஞர்] நானும் அவருக்கு உதவியாக நிற்போம். மாணவர்களின் திறமை பற்றிய விமரிசனங்களை அவர் பொருட்படுத்த மாட்டார். வாய்ப்புத் தராமல் ஒதுக்கி விடக்கூடாது என்பது அவர் கடைப்பிடித்த எளிய கோட்பாடு. அந்த எளிய கோட்பாட்டின் மிகப் பெரிய விளைவு தான் நகைச்சுவை நடிகர் விவேக். விவேகானந்தன் அப்பொழுது காமர்ஸ் படித்துக் கொண்டிருந்தார்.

முழு நேர மிமிக்ரி ஆர்டிஸ்ட். கல்லூரியில் எதாவது ஒரு இடத்தில் மைக் முன்னால் மிமிக்ரி ஓசை கேட்டது என்றால் அது விவேக் தான். விவேகானந்தனை அடித்துக் கோபப்படுத்துவது அப்பொழுது எங்களுக்கு விருப்பமான வேலை. அவரது குரல் அலுப்பூட்டும் ஓசைக் கூச்சல் என்பது என்னுடைய விமரிசனம். அதேபோல் இன்னொரு புறம் ஹுசைனியின் கராத்தே ஓசை கேட்டுக் கொண்டிருக்கும். கராத்தே மட்டும் அல்ல. மேற்கத்திய இசைக்கருவிகளை வாசிப்பதும் மேற்கத்திய நடனங்களில் ஆர்வம் காட்டியதும் ஹூசைனியின் பரிமாணங்கள் தான்.கிராமப்புற நடனங்களைக் கொண்டுவந்து மேடையேற்றுவது ஒருபுறம் நடக்கும். கர்டன் கிளப்பின் ஆங்கில நாடகம் நடைபெறும்.

பிலிம் சொஷைடிகளின் படங்கள் திரையிடப்படும். ஓவியர்கள் ஒரு சாலையில் கேன்வாஷ்களை நிறுத்தி வரைந்து கொண்டிருப்பார்கள். சனி, ஞாயிறுகளில் ஒழுங்கான ஓசையுடன் என்.சி.சி.யின் நடை தூரத்தில் கேட்டுக் கொண்டே இருக்கும். அமெரிக்கன் கல்லூரியில் எல்லாம் கிடைக்கும். யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டியது அவரவருடைய வேலை.

தமிழ்த் துறையிலும் தனித்திறன் ஆசிரியர்கள் எனக்குப் பாடம் நடத்தினார்கள். நன்னூலின் எழுத்து, சொல் இலக்கணத்தை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி நூல் எழுதிய மோசஸ் பொன்னையா அன்பைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்தத் தெரியாத மனிதர். பக்தி இலக்கியத்தை கற்றுத்தந்த பேராசிரியர் பிரணார்த்தி ஹரன், வடமொழி அறிஞர் பி.எஸ். சாஸ்திரியாரின் பேரன். ஒருவிதப் பிடிப்பு இல்லாமலேயே புலமையைக் கொட்டிக் கொண்டிருப்பார். ஆயிரம் பேரைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா, 20 மாணவர்களைச் சிரிக்க வைப்பதா? சிந்திக்க வைப்பதா? என்று தெரியாமல் தவிப்பார். தனித்தமிழும் இசைத்தமிழும் பொங்க வேண்டும் என்பதற்காகத் தனது சிற்றுந்தில் வந்திறங்கி தரையைத் தழுவும் வேட்டி ஜிப்பாவிற்கு மேல் ஒரு துண்டுடன் படியேறி மீசையைத் தடவியபடியே சின்னக் கண்களால் சிரிக்கும் பொன்.தினகரன். கழகக் கண்மணி; கரகரக் குரலோன். என்னைப் பொருத்தவரை நிரந்தரத் தலைவர் கி.இளங்கோவன் தான்.மதிப்புமிக்க கார்மேகக் கோனாரின் பேரன். மிகுந்த பவ்வியத்துடன் ஆசிரியர்கள் சொன்ன வேலைகளைச் செய்து கொடுக்கும் குருசாமி எனக் கல்லூரியைப் பற்றி நினைத்துக் கொள்ள மனிதர்களும் உண்டு. தமிழ்த் துறையில் மட்டும் அல்ல பிற துறைகளிலும் கூட வித்தியாசமான அடையாளங்கள் கொண்ட பேராசிரியர்கள். ஓவியரும் நாடக இயக்குநருமான பேராசிரியர் ஜே.வசந்தன், தமிழையும் ஆங்கிலத்தையும் அதன் கறாரான உச்சரிப்பில் பேசும் நெடுமாறன், பெரியாரின் தீவிர பக்தரான ஜே.சி.பி. ஆப்ரஹாம், நவீன சிந்தனைத் தளத்தையும் செயல்தளத்தையும் ஒன்றாக்கி விட வேண்டும் எனத் துடிப்புடன் இருந்த சின்னராஜ் ஜோசப், என நினைவில் வருகிற பிம்பங்கள் பலர்.

பி.ஏ. முடித்துவிட்டு, எம்.ஏ. படிக்க மதுரைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த போது வித்தியாசம் புரிந்தது. மற்ற கல்லூரியிலிருந்து வந்தவர்கள் நவீன இலக்கியத்தின் வாடை இல்லாதவர்களாக இருந்தார்கள். ல.சா.ரா.வின் கதைகளை அவர்களால் வாசிக்கவே முடியவில்லை. நவீன நாடகங்கள் பற்றிக் கேள்வியே படவில்லை. புதுக்கவிதையின் அறிமுகம் வேறாக இருந்தது. எனக்கு எல்லாமே பழையதாக இருந்தது. எம்.ஏ.க்கான பாடங்களைப் பட்ட வகுப்புகளிலே படித்து விட்டதாக உணர்ந்தேன். அது ஓரளவு உண்மைதான்.

பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தாலும் கல்லூரியின் நிகழ்வுகளில் பங்கேற்பதிலிருந்து விலகியதில்லை. ஜெயகாந்தன் வாரம் என்றொரு வாரம் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவருடைய படைப்புகளைப் பற்றிய கருத்தரங்குகளும், மாலையில் அவரது சினிமாக்களும் என நிகழ்ந்த நிகழ்வு அது. இன்று நூற்றுக்கு மேற்பட்ட கருத்தரங்குகளில், தமிழ்நாட்டின் எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் கருத்தரங்கில் கட்டுரை வாசித்தாகி விட்டது. என்றாலும் நடிகை நாடகம் பார்க்கிறாள் பற்றி அன்று நான் வாசித்த கட்டுரையும் கேள்விகள் கேட்டபோது நான் திணறியதும் பேராசிரியர் கு.பரமசிவன் பதில்கள் சொல்லிச் சமாளித்ததும் இன்றும் நினைவில் இருக்கிறது.

அமெரிக்கன் கல்லூரியின் நிழல் தரும் மரங்களுக்கடியில் அமர்ந்து துறை நூலகத்திலும் டேனியல் பூர் நூலகத்திலும் எடுத்துப் படித்த புத்தகங்கள் தான் பல்கலைக்கழகத்தில் பாடங்களாக இருந்தன. இலக்கியப் பத்திரிகைகள் எல்லாம் ஏற்கெனவே அறிமுகம். ஆக பயணம் இன்னும் வேகம் பிடித்தது. காலத்துக்கு முந்திப் பயணம் செய்யும் வாய்ப்பு அந்த வாய்ப்பை உருவாக்கியதென்னவோ அமெரிக்கன் கல்லூரியின் வளாகம் தான். அந்த வளாகத்திற்குத் திரும்பவும் தற்காலிக ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றேன். இரண்டு ஆண்டுகள். 1987-89 சாமுவேல் சுதானந்தா அமெரிக்காவிற்குப் படிக்கப் போன காலத்தில் அவரின் இடத்தில் அந்தப்பணி.

அந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த வாய்ப்புகள் நினைவில் கொள்ளத்தக்க வாய்ப்புகள். புதிதாக வந்த என்னை ஒரு பாடத்திட்டத்தைத் தயாரிக்கச் சொல்லி வாய்ப்புக் கொடுத்தார் பேராசிரியர் சாலமன் பாப்பையா. அப்பொழுது அவர் துறையின் தலைவர். நான் தயாரித்த பாடத்திட்டத்தை எந்தவித மாற்றங்களும் செய்யாமல் ஏற்றுக் கொண்டதோடு பாராட்டவும் செய்தார். நான் கல்லூரியை விட்டுப் பாண்டிச்சேரிக்குப் போன பின்பும் அந்தத்தாள் பாடமாக இருந்தது. இத்தனைக்கும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் இலக்கியம் பற்றிய பார்வையோடு முற்றிலும் வேறுபடுபவன் என்பதை அறிந்தவர் அவர். "தம்பி நீ இருக்க வேண்டிய இடம் கல்லூரி இல்ல; பல்கலைக் கழகம்" என்று அடிக்கடி சொல்லுவார். அதுதான் நடந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது. இதே சம்பளத்தில் அமெரிக்கன் கல்லூரியில் ஓராசிரியாக வேலை தந்தால் போய் விடலாம் என்று.பல்கலைக் கழகங்களில் வேலை செய்வதில் என்ன பெரிய பெருமை இருக்கிறது என்று தெரியவில்லை.

இரண்டு ஆண்டுகள் நான் பணியாற்றிய காலத்தில் நவீன நாடகக்காரன் என்ற ஒளிவட்டத்தோடு உள்ளே வந்திருந்தேன். அதனால் ராமானுஜம், மு.ராமசாமி போன்றவர்கள் வந்தார்கள்.நாடகப்பட்டறைகள் நடத்தினோம். ஞான ராஜசேகரனின் வயிறு நாடகம் மேடையேற்றப்பட்டது.பிரபஞ்சனின் நாடகங்கள் ஒத்திகை வாசிப்புகளாக வாசிக்கப்பட்டன.பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறை ஆசிரியனாகப் போன பின்பும் அந்தத் தொடர்புகள் தொடர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் பட்டறைகள் நடத்துவதற்காக அழைக்கப்பட்டேன். அப்பட்டறைகளில் பங்கேற்ற பலர் இன்று கோடம் பாக்கத்தில் அலைகிறார்கள். ஒரு முறை நான் எழுதி இயக்கிய நாடகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வளாகத்திற்கு வந்தேன். மேடையேற்றினேன். அதன் பிறகு நான் எழுதிய நாடகத்தை நண்பர்கள் சுந்தர், பிரபாகர், மாணவர்கள் சண்முகராஜா, அனீஸ் போன்ற வர்கள் மேடையேற்றுகிறார்கள். நான் எழுதுகிற கட்டுரைகளை எனது ஆசிரியர்கள் வாசிக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் பல இடங்களுக்குப் போகும்போது எனது விமரிசனக் கட்டுரைகளைப் பற்றி, அக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசும்போது இல்லாத சந்தோசம் அமெரிக்கன் கல்லூரியின் வளாகத்தில் ஓர் ஆசிரியர் அல்லது ஒரு மாணவி அல்லது மாணவன் சொல்லும் போது அதிகமாகவே இருக்கிறது. வாழையடி வாழையாகத் தொடரும் அறிவுப் பாரம்பரியம், கலைப்பாரம்பரியம் அந்த மண்ணின் துகளெங்கும் சிதறிக் கிடக்கிறது.

திரும்பத் திரும்ப வருவேன். முகம் தெரியா ஆசிரியர்களும், மாணவர்களும் உலாவரும் காலம் இனி வரப்போகிறது. என்றாலும் நான் வருவேன். சாதி, மதம், மொழி என்னும் குறுகல் வாதங்களின் நெடிகள் அதற்குள் பரவி விடாமல் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது.

நேர்மையான தாராளவாதத்தின் பரிமாணத்தையும்
ஜனநாயகத்தின் தத்துவப்பரப்பையும்
கற்றுத்தந்த அந்த வளாகக் காற்றைச் சுவாசித்துக் கொள்ளத்
திரும்பத் திரும்ப நான் வருவேன்.
அந்த உலைக்களத்தில் பிரவேசிப்பேன்; தீக்குளிப்புக்காக அல்ல.
புடம்போட்டுக் கொள்வதற்காக.

             [ நான் பயின்ற வேலை பார்த்த அமெரிக்கன் கல்லூரி அதன் தாராளவாதப்     
       பாரம்பரியத்தைக் கைவிட்டு விட்டு இறுக்கமான மதவாதிகளின் பிடியில் சிக்கிக்    
       கொள்ளும் அபாயத்தில் இருக்கிறது என்ற தவிப்பில் எனது நினைவுகளை- அதன் 
        125 ஆம்   ஆண்டு மலரில் எழுதிய கட்டுரையைத் திரும்பவும் வாசித்தேன்]


கருத்துகள்

அரிஅரவேலன் இவ்வாறு கூறியுள்ளார்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சக்திவேல் கவுண்டர், ஓய்வுபெற்ற பொதுநூலக இயக்குநர் வே.தில்லைநாயகம், விடுதலைப் போராட்ட வீர்ரும் முன்னாள் அரசுச் செயலருமான இலட்சுமிகாந்தன் பாரதி, சமூகச் செயல்பாட்டாளர் கிருட்டிணம்மாள், மக்கள் மருத்துவர் தாஜ், இசைக்கலைஞர் கண்ணாடி வளையல் இராசசேகரன், சுந்தர் காளி உள்ளிட்ட இக்கல்லூரியில் பல்வேறு காலகட்டங்களில் பயின்ற மாணவர்களிடம் உரையாடியபொழுது அவர்களின் கூற்றில் தம்முடைய கல்லூரியைப் பற்றிய பெருமிதம் வெளிப்படும். சுந்தர் காளி ஒருமுறை,"இந்த கல்லூரிக்குள்ள ஒருமுறை வந்துட்டுப்போற நாய்கூட திரும்பி வரமா இருக்காது" என நகைச்சுவையோடு அக்கல்லூரியின் ஈர்ப்பாற்றலைப் பற்றிக் குறிப்பிட்டார். அத்தகு பெருமித உணர்வைத் தந்த கல்லூரி இன்றைக்கு மதத்தின் இறுகிய பிடிக்குள் மாட்டிக்கொண்டிதுப்பது வேதனைத் தருகிறது. அது உங்களின் கட்டுரையில் நன்கு வெளிப்பட்டிருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்