December 27, 2009

வாக்கப்படும் மனிதர்கள்: வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள்


அரசு அலுவலகங்கள் மீதும், பொதுத்துறை அலுவலகங்களின் மீதும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும் தொடர்ந்து வைக்கப்படும் விமரிசனங்கள் சில உண்டு. முதன்மையான விமரிசனம் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவது இல்லை என்பது.

குற்றவுணர்வின் மகத்துவம்: பாவண்ணனின் துரோகம்

இந்திய அரசு தனியார் மயக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆன போதும் அரசாங்க வேலைகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. அதிலும் கடந்த வருடம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி அரசு உத்தியோகத்தின் வலிமையை இன்னும் கூடுதலாக்கி விட்டது. ‘கால் காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசு வாங்குபவர்’ என்ற பேச்சு தூக்கலாகவே ஒலிக்கின்றன.

இன்னும் சில நாசகாரக்கும்பல்கள் :இந்திரா பார்த்தசாரதியின் கதை


தினசரிச் செய்தித்தாள்களை வாசிக்கிறவர்களுக்கு நாசம் என்ற சொல்லை விளக்கிச் சொல்ல வேண்டி யதில்லை. ‘பயங்கரவாதிகளின் நாசவேலை’ என்ற சொற்றொடர் தினசரிகளின் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்றொடர்களில் ஒன்றாக மாறிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வாரம் பயங்கரவாதிகளின் இடத்தைப் புயல் மழை பிடித்துக் கொண்டு விட்டது. ‘புயல் மழையால் பயிர்கள் நாசம்; வீடுகள் சேதம்’ எனச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

November 20, 2009

வாழ்வின் நாடகம்: திலிப்குமாரின் ‘நிகழ மறுத்த அற்புதம்’

மரபையும் இந்தியப் பாரம்பரியத்தையும் பின்பற்றுகிறவர்களின் அடையாளம் என்ன? அவற்றிலிருந்து விலகிச் சென்றவர்களின் அடையாளங்கள் எவை? எனக்கேட்டால் நம்முன்னே இருப்பவர்களைச் சரியாக இனம் பிரித்துக் காட்டி விடுதல் ஒருவருக்கும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.

தலைமுறைகளின் யுத்தம் சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்


கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மேலாய்வு செய்வதற்கான நிதியினை வழங்குவது மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு. அதன் நிதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யும் பேராசிரியர்களின் திட்டவரைவுகளின் பட்டியலைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்பட்டியலில் இடம் பெற்றிருந்த பல தலைப்புகள் எனக்கு மன வேதனை அளித்ததை இங்கே பதிவு செய்ய வேண்டும்.

பாசமுள்ள இயந்திரங்கள்: ஆர்.சூடாமணியின் விலைகடந்த இருபது ஆண்டுகளில் ஊடகங்களின் கவனத்திற்கு வந்ததால் அதிகம் விவாதிக்கப் பட்ட சில சமூகப் பிரச்சினைகள் உண்டு. பெண் சிசுக்கொலைகள் என்பதும் அவற்றுள் ஒன்று. எனது சொந்தக் கிராமம் பெண் சிசுக்கொலைகள் அதிகம் நிகழும் பகுதியாகச் சொல்லப் பட்ட உசிலம்பட்டி பகுதியில் தான் உள்ளது.

October 25, 2009

தாம்பத்தியத்தின் முழுமை க.நா.சுப்பிரமணியத்தின் மனமாற்றம்


புதிதாக வந்துள்ள அரசு அறிவிக்கையின்படி ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடைகளைப் பெறுவதற்குத் தங்கள் புகைப் படங்களோடு வாரிசுகளின் புகைப்படத்தையும் அலுவலகத்தில் தர வேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தச் சுற்றறிக்கையைப் பார்த்தவுடன் அவர்கள் கொஞ்சம் கலங்கித் தான் போனார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தம்பதிகள்.

அதுவுமொரு பசிதான் ! - ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா

மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எவை எனக் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் எனப் பாடத்திட்ட அறிவைக் கொண்டு பதில் சொல்கிறோம். ஆனால் வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றுப் பசியைத் தாண்டி இன்னொரு பசி உடம்புக்குள் ஆறாத பெரு நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது எனக் கல்வியின் உயர்நிலையான உளவியல் கூறுகிறது. காமம் என்னும் அப்பெருநெருப்பு பற்றிக் கொள்ளும் நேரம், இடம், எதிர்கொள்ள வேண்டிய பின் விளைவுகள் பற்றியெல்லாம் எல்லா நேரமும் சிந்திந்துக் கொண்டிருப்பதில்லை என்பது உடல் இச்சைகளை விளக்கும் உளவியலின் பகுதிகள்.

October 10, 2009

சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட சாகசங்கள் :சுசி கணேசனின் கந்தசாமியை முன் வைத்து


இது கந்தசாமி படத்திற்கான விமரிசனம் அல்ல;விமரிசனம் எழுதும் அளவிற்குப் பொருட்படுத்த வேண்டிய படமும் அல்ல கந்தசாமி. திரைப் படத்தின் மொழியையும் ஆக்கத்தையும் அறிந்தவர்களாகவும், அதன் வழியே வெகுமக்களுக்குத் தீங்கிழைக்காத பொழுது போக்குப் படங்களைத் தருவார்கள் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்களின் தோல்வியும், திசைதவறிய பாதைகளும் கூடப் பொருட்படுத்திப் பேச வேண்டிய ஒன்று என்ற அளவில் கந்தசாமி படம் பற்றிப் பேச வேண்டியுள்ளது.

October 07, 2009

வேறுபாடுகளுடன் கூடிய நட்பின் இழப்பு – பாலாவுக்கு அஞ்சலிபாலச்சந்திரன் என்னும் நீண்ட பெயரைச் சுருக்கி நண்பர்கள் பாலா என அழைத்த போது அதைத் தனது கவிப்பெயராக ஆக்கி விடும் ஆசை அவருக்கு இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. இதை அவரிடமே கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் என நினைத்தாலும் இனி இயலாது. அந்தப் பெயருக்கும், அந்தப் பெயர் விட்டுவிட்டுப் போயிருக்கும் பதிவுகளுக்கும் சொந்தக்காரரான பாலச்சந்திரன் இப்போது நம்மோடு இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற போது இனி அவர் செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்தி அனுப்பி வைத்தோம். அதில் ஒன்றிரண்டைக் கூட முடிக்க விடாமல் காலம் தனது கணக்கை முடித்துக் கொண்டு விட்டது.

October 06, 2009

தேடும் பறவைகள்: மீரானின் இரைகள்

 இந்த வசதிகள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களுக்குக் கிடைக்காதவை. வளைவுகளற்ற நான்குவழி, ஆறுவழிச் சாலைகளில் வழுக்கிக் கொண்டு போகும் ஆம்னி பஸ்கள், விரைவுப் பேருந்துகள் உட்பட்ட போக்கு வரத்து வசதிகள், விதவிதமாய்க் கல்வியைக் கற்றுத் தரும் கல்விச் சாலைகள், தனித்தனி உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவம் தரும் பாலி கிளினிக்குகள், டிக்கெட் கிடைக்கவில்லையென்று தியேட்டருக்குப் போன பின்பு திரும்பி வரத் தேவையில்லாத அளவுக்கு ஒரே இடத்தில் பல தரப்பட்ட சினிமாக்களைச் சேர்த்து வைத்திருக்கும் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், சாப்பிடும் போதே பிள்ளைகள் விளையாடத் தனி அறைகள், குடும்பமாகச் சாப்பிடும் போது மற்றவர்களுக்குக் கேட்காதவாறு தடுக்கும் இசைக் கோலங்களை உமிழும் ரம்மியமான சூழல் கொண்ட உணவு விடுதிகள், அந்நிய நாடுகளில் மட்டுமே கிடைத்த வண்ண ஆடைகளைக் கட்டித் தொங்க விட்டு அசத்தும் துணிக்கடல்கள், காலனிக் காட்சிக் கூடங்கள், வீட்டுபயோகப் பொருட்காட்சி அரங்குகள் என வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது உலகமயப் பொருளாதாரம்.

ஒருவர் அலுவலகப் பொறுப்பாளர் என்றால், விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தாலும் வேலை நடப்பதைக் கண்காணிக்க கைபேசி போதும். ஆம் எல்லா வசதிகளையும் கொண்டு வந்து சேர்த்து விட்டது தாராளமயப் பொருளாதாரமும் அதன் பின் விளைவுகளும். உலகமயமாக்கலின் வெளிப் பாடுகள் சாதாரணமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அக்கறை கூட புது வசதிகளின் வழியாகச் சாத்தியமாவதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். மனித நேய முகத்துடன் கூடிய உலகமயப் பொருளாதாரம் பற்றி மதிப்பிற்குரிய பிரதமர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

September 29, 2009

கலையும் ஒப்பனைகள்


[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ]

காட்சி:1

[அவன் ஒரு புதுவகை ஈஸிசேரில் படுத்துக் கிடக்கிறான்.உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் ஓய்வு கொடுப்பது நோக்கம்.வெளிச்சம் நேரடியாக முகத்தில் இல்லை. முகம் கர்சீப்பால் மூடப் பட்டிருக்கிறது. நிழல் திசைமாறும் பொழுதெல்லாம் குரல் தொனி மாற்றி வந்து கொண்டிருக்கிறது].
'நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்..
காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ; ஒத்துக்க முடியாது
நான் ஒத்துக்க முடியாது.
எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம்
எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம்
எனது சமயம் ; எனது மக்கள்...
அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது.
உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை
எல்லாவற்றையும் மறந்துவிடு;
மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை'

[வசனப் பயிற்சிக்காகச் சொல்லப்படுவது போல் தூரத்திலிருந்தும் பக்கத்திலிருந்துமாக வருகிறது. ஆண்குரலிலும் பெண்குரலிலுமாக மாறிமாறி ஒலிப்பதற்கேற்ப அந்த உருவத்தின்மீது மாறி மாறி விழும் வண்ணம் விளக்கு வெளிச்சம் மெதுவாகவும் சடசடவென்றும் வந்து போகின்றன. நிழலும் நீள்வதும் குறுகுவதுமாக இருக்கிறது.விளக்கு,குரலின் ஓசை, நிழலின் அளவு என ஒவ்வொன்றும் ஒத்திசைவுடன் அமைய வேண்டும்
இந்த வசனப் பயிற்சியினூடாக தூரத்தில் ஒரு ஷூட்டிங்கின் பின்னணிக் காட்சிக்கான குரல்கள்-'லைட்ஸ் ஆன்' , சீன் தேற்ட்டி பைவ்; டேக் த்ரீ போன்ற குரல்கள் கேட்கின்றன. பின் திரையில் நிழல் உருவத்தில் இயக்குநர் காமிராக் கோணம்பார்ப்பது ,டிராலியில் காமிரா முன்னும் பின்னுமாக நகர்வது போன்றன இடம் பெருகின்றன. கடைசியில் இயக்குநர் குரல் ]

" ஷாட் ரெடி ... டேக்..ஆக்ஷன்.."

September 28, 2009

மேடு நோக்கிப் பாயும் ஆறு: கிராஜநாராயணின் தாவைப்பார்த்து

எனக்கு நேர்கிற அனுபவம் மட்டும் அல்ல; என்னைப் போல நகரவாசியாக மாறிய பிறகு அவ்வப்போது சொந்தக் கிராமத்திற்குப் போய்வரக் கூடிய ஒவ்வொருவருக்கும் நேர்கிற அனுபவம் தான் இது. இந்த முறை ஊருக்குப் போன போது எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.எந்தப் பாகுபாடும் இல்லாமல் வீட்டிற்கு ஒரு டி.வி.பெட்டி- கிடைத்ததில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கிடைத்ததில் இருந்த மகிழ்ச்சி அது.

September 27, 2009

தொடரும் துன்பக்கேணி : வண்ணநிலவனின் துன்பக்கேணி

திரும்பவும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும்; பனை மரங்களையும் தென்னை மரங்களையும் தங்கள் காடுகளிலும் தோட்டங்களிலும் வளர்த்திருக்கும் விவசாயி களுக்குப் பனை மரத்திலிருந்தும் தென்னை மரத் திலிருந்தும் கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் அடிப்படை யில் போதை ஊட்டும் மதுபானங்கள் அல்ல; அவை உடல் நலத்திற்கு உதவக் கூடிய மருந்துகள் என்ற வாதம் கள் ஆதரவாளர்களிடமிருந்து வருகின்றது.

நண்டு தின்னும் ஊரில் : பூமணியின் குடை

“வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளின் வீட்டில் லஞ்சப் பணம். லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி”
“லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையின் எதிரொலி. பத்திரவுப் பதிவுகள் முடக்கம்”
“பல்கலைக்கழகத்துணைவேந்தர் நீக்கம். லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளால் அரசு முடிவு”
இப்படிப் பட்ட செய்திகள் சமீபத்தில் அடிக்கடி செய்தித் தாள்களில் வருகின்றன.

தீர்க்கமான முடிவு: ஜெயகாந்தனின் யுகசந்தி

சன் தொலைக்காட்சியில் இரவு ஒளிபரப்பில் முக்கிய நேரத்தில் ஒளி பரப்பப் படும் கோலங்கள் தொடர் எப்போது முடியும்? இந்தக் கேள்வியைப் பத்திரிகைச் செய்தியாக, நடைபாதைப் பேச்சாக, ஒத்த கருத்துடையவர்களின் கலந்துரையாடலில் மையப் பொருளாகப் பல இடங்களில் நான் கேட்டிருக் கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம். பெரும்பான்மை மக்களால் விரும்பியோ விரும்பாமலோ பார்க்கப்படும்-படிக்கப்படும் கலை இலக்கியங்களைப் பொருட் படுத்திப் பேச வேண்டியது பண்பாட்டியல் துறை சார்ந்தவனின் ஒருவனின் கடமை என்ற நிலைபாட்டோடு தொலைக்காட்சித் தொடர்களை அவ்வப்போது கவனித்து வைப்பதும், விரும்பிப் பார்க்கும் பல தரப்பட்ட மக்களிடம் உரையாடிப் பார்ப்பதும் எனது விருப்பம்.

September 04, 2009

முழுமையைத் தவற விட்ட முன் முயற்சி

தேர்தல் அரசியலை ஏற்றுத் தமிழ் நாட்டில் இயங்கும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அதிகம் நம்புவது பேச்சு மேடைகளையும் அச்சு ஊடகங்களையும் தான். அச்சு ஊடகமான பத்திரிகை மற்றும் நூல்களை வெளியிட அதிகாரபூர்வமான கட்சி அமைப்புகளை நீண்டகாலமாகக் கொண்டுள்ளன அக்கட்சிகள். அவ்வதிகாரபூர்வமான அமைப்புகள் வழியாகச் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்யச் சில துணை அமைப்புகளை உருவாக்குவதும் உண்டு. அத்துணை அமைப்புகளைப் பொறுப்பேற்று நடத்தும் தனிநபரின் விருப்பம் மற்றும் தொடர்புகளின் அடிப்படையில் அத்துணை அமைப்புகளின் எல்லைகளும் செயல்பாடுகளும் விரிவடையும்.

பண்பாட்டு வரலாற்றுக்கொரு புது வரவு

ஒவ்வொரு சமூகத்தின் இருப்பையும் இயக்கத்தையும் அச்சமூகத்தில் நிலவும் கருத்தியல்களே தீர்மானிக்கின்றன. கருத்தியல்கள் உருவாகக் காரணமாக இருப்பவை அச்சமூகத்தில் நிலவும் பகை முரண்களின் வெளிப்பாடுகள். பகை முரண்களைத் தீர்மானிப்பவை அக்காலகட்டத்தின் பொருளாதார அடித்தளம் என்பது மார்க்சியம் சொல்லும் ஒரு சூத்திரம்.

August 27, 2009

சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்..?:சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள்


2009 தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது இலங்கைப் பிரச்சினை உறுதியாகத் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை மனம் சொல்லத் தொடங்கியது. தீவிரமாக நடந்த ஈழ யுத்தம் தேர்தலுக்கு முந்திய நாள் ஒரு முடிவுக்கு வந்து விட்டது போலச் சர்வதேச ஊடகங்கள் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தன.ஒரு வேளை இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மாறிப் புதிய ஆட்சி வந்தால் இலங்கைப் பிரச்சினை வேறு வடிவம் எடுக்கக் கூடும் எனக் கருதிய இலங்கை அரசு தீவிரமாகப் போரை நடத்தி முடித்து விட்டுத் தேர்தல் முடிவோடு சேர்த்து சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தது போல முல்லைத் தீவு வெற்றியைக் காங்கிரஸின் வெற்றியோடு சேர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தது.எனக்குக் கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப் பட்ட அந்தக் கதையைத் திரும்பவும் எடுத்து வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. எடுத்து வாசித்து விட்டு அடையாளத்திற்கு ஒரு தாளில், “சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்” என எழுதி மூடி வைத்திருக்கிறேன். கதையின் தலைப்பு: ஒரு லட்சம் புத்தகங்கள். எழுதியவர் சுஜாதா. எழுதப் பட்ட ஆண்டு 1982.

ஆணெழுதும் பெண்ணெழுத்து : ஜெயந்தனின் அவள்

ஜெயந்தனுக்கு அந்தக் கதைக்கு ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. கதையின் தலைப்பே அவள் என்பது தான். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு நிகழ்வாக மாறி விட்ட இலக்கியச் சிந்தனை, 1981 இல் வந்த சிறுகதைகளில் ஆகச் சிறந்த கதையாகத் தேர்வு செய்த கதை இது. தேர்வு செய்தவர் கிராமப் புற மனிதர்களை விதம் விதமாக எழுதிக் காட்டிய கி.ராஜநாராயணன்.

August 12, 2009

பயணத்தின் நினைவுகள் :அம்பையின் வாகனம்.

சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அடிக்கடி செல்லும் இக்கால மனிதர்கள் அம்பையின் இந்தக் கதையைக் காலப் பொருத்தமற்றது எனச் சொல்வார்கள். அல்லது பழைய கதை என்றாவது சொல்லக்கூடும். வாகனம் என்று தலைப்பிட்டு அம்பை எழுதிய அந்தக் கதை அவ்வளவு பழைய கதை அல்ல. பன்னிரண்டு வருடங்கள் தான் ஆகிறது.

குறியீட்டுக் கதைகள் தரும் சுதந்திரம்:சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகளும் மேல்பார்வையும்.


குறியீட்டுத் தன்மை கொண்டதாக நவீன நாடகப் பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த பின், தேர்வு செய்த கதை பல்லக்குத்தூக்கிகள். தமிழில் நவீன நாடகத்தைப் பிரதி வடிவில் ஆரம்பித்து வைத்தவர் ந.முத்துசாமி. அவரது தொடக்க நாடகங்களான நாற்காலிக்காரர், காலம் காலமாக,அப்பாவும் பிள்ளையும் ஆகிய மூன்று நாடகங்களும் அடங்கிய நாற்காலிக்காரர் தொகுப்பை வாசிக்கும் ஒருவர் நவீன நாடகம் என்பது கதைத் தன்மையைக் கைவிட்ட - குறியீட்டுத் தன்மை கொண்டதே நவீன நாடகம் என்று புரிந்து கொள்வார். பல்லக்குத்தூக்கிகள் சிறுகதையை நாடகமாக ஆக்கியதற்கு முன்பு ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தைப் பயிற்சியாகவும், இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களைப் பாடமாகவும் படித்திருந்தேன். ந.முத்துசாமியின் பாணியிலிருந்து மாறுபட்டது இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள். அவரது தொடக்ககால நாடகங்களான பசி, மழை, போர்வை போர்த்திய உடல்கள் போன்றவற்றில் ஒருவித கதைத் தன்மை உண்டு.

நல்ல மேய்ப்பர்கள் : பிரபஞ்சனின் மரி என்னும் ஆட்டுக்குட்டி


முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளி வந்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து சிறப்புத் தேர்வுகள் நடைபெறும். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறாமல் போன மாணவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்தச் சிறப்புத் தேர்வை எழுதித் தேர்வு பெற்று அடுத்த கல்வி ஆண்டுத் தொடக்கத்தில் கல்லூரிக்குள் நுழைவார்கள். பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத வர்களுக்கு அந்த ஓராண்டு ஒரு விதத்தில் தண்டனை தான். இந்தத் தண்டனைக் காலத்தில் பலர் திசை மாறிப் போகும் வாய்ப்புக்களே அதிகம்.

ஈழம்:மாற்றுவிவாதங்களை முன் வைக்கும் கருத்துரைகள்


1.ஈழம்:தேவை- ஒரு நேர்மறையான மீளாய்வு,
புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009
110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600 024
2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009
110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600024
3.இந்திய அரசே நியாயந்தானா?
முதல்பதிப்பு: ஏப்ரல், 2009,சி.மகேந்திரன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014
====================================================================================
ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்து அரசியல் விடுதலை அடைந்துள்ள பின்காலனிய நாடுகளில் இன்றளவும் தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகளின் மூலத்தைத் தேடிப் போனால் அவற்றின் தொடக்கப் புள்ளியாக, காலனிய ஆதிக்கவாதிகளின் தேச உருவாக்கமே காரணமாக இருப்பதை அறியலாம். காலனிய ஆதிக்கவாதிகள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்து ஏற்படுத்திய தேசம் என்னும் ஒற்றைக் கட்டுமானம் தொடர்ந்து தன்னைத் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் தவிப்பின் விளைவுகள் பலவிதமானவை.

July 27, 2009

முகம் அறியா முதலாளிகளும் முகம் தெரிந்த முதலாளியும்:கு.அழகிரிசாமியின் தியாகம்


உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தனம் அல்லது சரிவு இந்தியாவில் வெளிப்படை யாகத் தாக்கிய துறை தொழில் நுட்பக் கல்வித்துறை. வளாகத் தேர்வுக்கு ஒவ்வொரு கல்லூரி யையும் நாடிச் சென்று சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்த போக்கு கடந்த கல்வி யாண்டில் நடக்க வில்லை. அதன் விளைவாக இந்த ஆண்டுப் பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையில் பல பரிமாணங்களை ஏற்பட்டுள்ளன.

July 14, 2009

வீடு


[சிறுகதை மூலம்:ம.மதிவண்ணன் எழுதிய திருவாளர் எம்.மின் வீடு
என்னும் கதையும் மேற்படி வீட்டுடனான உரையாடலும்]
இந்நாடகத்தில் பயன்பட்டுள்ள கவிதைவரிகளை எழுதிய கவிகள்
சி.சுப்பிரமணிய பாரதி
ஞானக்கூத்தன்
சு.வில்வரத்தினம்
பழமலய்
பசுவய்யா
சேரன்
மனுஷ்யபுத்திரன்
கண்ணதாசன்
இன்னும் சில விளம்பரங்களின் வரிகள்


July 13, 2009

வளர்ச்சியின் அடையாளங்கள்: இமையத்தின் உயிர்நாடி


சொந்தக் கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்பிய எனக்குத் திரும்பத் திரும்ப இமையத்தின் அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. கதையின் தலைப்பு உயிர்நாடி.வாசந்தி பொறுப்பில் இந்தியா டுடே வெளியிட்ட இலக்கியச் சிறப்பு மலர்கள் போல டைம்ஸ் ஆப் இந்தியா வுக்காக டைம்ஸ் இன்று என்ற தலைப்பில் ஒரு சிறப்பு மலரை 2008 ஆம் ஆண்டில் - பொங்கல் சமயத்தில் சுஜாதா தொகுத்தார் என்பதாக ஞாபகம். அந்தத் தொகுப்பில் தான் இமையத்தின் உயிர்நாடி கதை அச்சாகி இருந்தது.

உலகமே வேறு; தர்மங்களும் வேறு: புதுமைப்பித்தனின் இரண்டு கதைகள்

நிகழ்காலத் தமிழ் வாழ்வில் கலை இலக்கியத்தின் இடம் என்ன?
பொதுவான இந்தக் கேள்வியைக் கூடத் தள்ளி வைத்து விடலாம்.
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணாக்கரிடம் கவிதையை நீங்கள் வாசித்தது உண்டா? அல்லது வாசிக்கக் கேட்டதுண்டா? என்று கேட்டுப் பாருங்கள். முதுகலை படிக்க வரும் மாணவிகளிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன்.(கலைப் பிரிவுகள் மாணவிகளுக்குரிய பாடங்களாகி விட்டன)

July 09, 2009

நிகழ மறுத்த அற்புதம்

சிறுகதை மூலம்: திலிப்குமார்
நாடகவடிவம்: அ.ராமசாமி


முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு ஹால்.
பின் இடது புறம் சமையலறையின் ஒரு பகுதி தெரிகிறது.
பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது. பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி, கணினி போன்றன தெரிகின்றன.ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால்
மூவர் அமரக் கூடிய ஒரு சோபா
அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள்.
வேலைப்பாடுகள் கொண்ட டீபாய்.
நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது.
அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம்.
இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம்.
தொலைக்காட்சிப் பெட்டி ஒரு மரத்தாலான வேலைப்பாடுகள் நிரம்பிய
ஸ்டேண்டில் வைக்கப் பட்டிருக்கிறது.
சமையலறையிலிருந்து வந்த திருமதி ஜேம்ஸ் ஒரு முறை நின்று
திரு ஜேம்ஸைப் பார்க் கிறாள்.
அவர் தினசரித்தாளை அகலவிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.
வந்தவள் படுக்கையறைக்குள்போய்விட்டு உடனடியாகத்திரும்புகிறாள்.
படுக்கையறைச் சுவரில் இயேசுவின் படம் ஒன்று மாட்டப்பட்டுள்ளது.
அதன் அருகில் சில நிழற்படங்கள். அவர்கள் இருவரும் இருக்கும் படங்கள்.
வெவ்வேறு வயதில்.
தயாராக இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தவள் வாசலில் நின்றபடி
திருமதி: நான் போகிறேன்

July 08, 2009

சுகமான சுமைகள்


படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோ என்று போவான்
-சி.சுப்பிரமணிய பாரதி.

முன்னுரையாக சில கேள்விகள்

இந்திய/ தமிழகக் கல்விமுறை மேற்கத்திய மயமாகி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. மேற்கத்தியமாகி விட்டது என்பதற்காகப் பெரிதாக வருத்தப்பட வேண்டிய தில்லை. மேற்கத்தியக் கல்விமுறை வெறும் கணக்குப்போடுகிறவர்களையும் கங்காணி களையும் மட்டும்தான் உருவாக்கியது என்று சொல்லப்படும் வாதங்கள் எல்லாம் உள்நோக்கங்கள் கொண்டன.மேற்கத்தியக் கல்விதான் எல்லோரும் கற்கலாம் எனச் சொன்னது; ஒருசாதிக்குள்ளேயே ஆசானையும் சீடனையும் வைத்திருந்த குருகுலக் கல்விமுறையை ஒழித்தது.ஒவ்வொரு மனிதனும் மதிக்கத்தக்கவன் என்ற சுயமரியாதை யுணர்வு உண்டாகக் காரணமாக இருந்தது. எதனையும் பகுத்து ஆராய்ந்து கேள்விகள் எழுப்பும் அறிதல் முறையை நமக்கு அளித்ததும் அந்த மேற்கத்தியக் கல்விமுறைதான். இந்திய சுதந்திரத்திற்குமுன்பே மேற்கத்தியக் கல்விமுறை இவற்றைச் சாத்தியமாக்கியிருந்தது.ஆனால் சுதந்திர இந்தியாவில் நமக்குத் தேவையென வரித்துக்கொண்ட சில பாடங்களின் நோக்கம் இந்திய மனிதனின்/ சமூகத்தின் தேவை கருதியது தானா..? சமூகவியலின் பகுதிகளான மொழியியில், மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் போன்றன இந்திய சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் முறையியலோடு உள்வாங்கப்பட்டிருக்கின்றவா...? அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முந்திய இந்திய வாழ்க்கைமுறைக்குத்திரும்பிப் போகும் நோக்கங் களோடு வந்து சேர்ந்திருக்கின்றவா...? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட வேண்டி யுள்ளன. கேள்விகள் கேட்கவேண்டியுள்ளன.
ஒரு நிழல் படத்தை வைத்துச் சில குறிப்புக்கள்
1999-ம் ஆண்டில் எங்கள் பல்கலைக்கழகத் தொடர்பியல் துறையில் படித்துக் கொண்டிருந்தாள் ஒரு மாணவி. அவள் எடுத்த ஒரு நிழல்படம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை நிழற்படத்துறை சார்ந்த உலகவரைபடத்திற்குள் இடம் பிடிக்கச் செய்தது. யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருந்த ஒரு போட்டியில் ஆகச் சிறந்த படமாக அவள் எடுத்த படம் தேர்வு பெற்று பெருந்தொகை அவளுக்குக் கிடைக்கக் காரணமாயிற்று.(அந்தப் படம் யுனெஸ்கோ சார்பு வெளியீடுகளிலும், சில தேசிய ஆங்கில இதழ்களிலும், நிழல் படக்கலை சார்ந்த சர்வதேச இதழ்களிலும் இடம் பெற்றது.) அந்தப் படத்தில் ஒரு சிறுமியும் ஒருசிறுவனும் அழுக்கடைந்த சட்டை களுடன் கையில் வைத்திருக்கும் சிலேட்டில் எழுதிக் கொண்டிருப்பார்கள். பக்கத்தில் சில புத்தகங்கள், கொஞ்சம் தள்ளி ஓர் ஆட்டுக்குட்டி மதிலின் நிழலில் படுத்திருக்கும். இந்தப் படம் எடுக்கப்பட்ட கிராமம் திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டுக்கருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்.ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் நிழல் படத்தில் இருந்த அந்தச் சிறுமியைச் சந்திக்கும் வாய்ப்பு இன்னொரு மாணவருக்குக் கிடைத்தது. கண்ணன் என்னும் பெயருடைய அவர் அதே தொடர்பியல் துறையில் இந்த ஆண்டு -2004 இல்- பயிலும் மாணவர். அவருக்குக் கிடைத்த இந்த வாய்ப்புத் தற்செயலான வாய்ப்புத்தான். திட்டமிட்டுக்கொண்டு போய்ப் பார்த்தாக வேண்டும் என்றெல்லாம் போனவர் இல்லை.
அவருடைய பயணத்தின் பின்னால் ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது. உண்மையான பாரததேசத்தின் நாகரிகமும் பண்பாடும் கிராமங்களில் படிந்து கிடக்கின்றன; அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் பதிவு செய்து விடவேண்டும் என்கிற நம்பிக்கைதான் அது. அந்தப் பயணத்தின் முடிவில் அவருடைய நம்பிக்கை ஈடேறியிருக்கலாம்; அவரும் இந்தியப் பண்பாட்டின் அல்லது தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களைப் பதிவு செய்து கொண்டுவந்து நகரவாசிகளுக்குக் காட்டலாம்;பரிசுகள் வாங்கலாம். அல்லது அவளுக்குக் கிடைத்தது போல அச்சு ஊடகத்திலும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையிலும் பணிகள் தேடி வந்தது போல தேடிவரலாம். அப்புறம் அவர் அந்தக் கிராமத்தையும் அதன் மனிதர்களையும் அவர்களின் வாசனையையும் -பண்பாட்டின் வாசனையை-மறந்து போகலாம் ஆனால் முதலில் படம் எடுத்துவிட்டு வந்த அந்தப்பெண்ணுக்காக இவர் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் நேர்ந்தது என்பதை மறுத்து விடமுடியாது.
"இப்பிடித்தே ஒரு அக்கா வந்து படம் புடிச்சிட்டுப் போச்சு; பரிசெல்லாம் வாங்குச்சாம் ; உடனிக்கெ ஒருக்காவந்துச்சி; அப்பொறம் எங்கிருக்கின்னு தெரியல; மவராசி நல்லா இருக்கணும்."


இந்தச்சொற்கள் கேள்விகள் இல்லை. கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியவர் கண்ணனும் இல்லை. அந்தச் சொற்களுக்குப் பின்னால் இருப்பது வேறொன்று. அதுதான் கிராமத்து அப்பாவிகளின் வாழ்க்கை.
ஏழு வயசுச் சிறுமியாகத் தன்னுடைய குடிசையின் நிழலில் ஆட்டுக் குட்டியோடு சேர்ந்து பாடம் படித்த அந்தப் பெண்ணுக்கு இப்பொழுது வயது பதினாலு. உடம்பு நோஞ்சானாக இருந்தாலும் குமரியாகி விட்டாள். அவளுடன் சேர்ந்து பாடம் படித்த ஆட்டுக்குட்டி மட்டும் இப்பொழுது அவளுடன் இல்லை என்று நினைத்து விடவேண்டாம்; அவளது கைகளில் இருந்த சிலேட்டும் புத்தகங்களும் காணாமல் போய் சில ஆண்டுகள்கிவிட்டன. அவற்றை அவள் கைவிட நேர்ந்த அந்தவருடத்தில் யுனெஸ்கோ எடுத்த "இடையில் படிப்பை நிறுத்தியோர் (drop outs) எண்ணிக்கைப் பட்டியலில் " அவளும் ஒருத்தியாகக் கணக்கிடப் பட்டிருக்கக்கூடும். அந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு, 'மூன்றாம் உலகநாடுகளில் கல்வி' என்ற தலைப்பில் ஒரு கல்வியியல் துறை அறிஞர் சர்வதேசக் கருத்தரங்கில் கட்டுரையொன்றை வாசித்திருக்கக் கூடும். அதே தகவல் 'வளரும் நாடுகளில் பெண் கல்வி 'என்ற ஆய்வேட்டிலோ, 'தமிழகக் கிராமங்களில் மகளிரின் குடும்பப் பொறுப்புகள்' என்ற தலைப்பிலான ஆய்வுத் திட்டத்திலோ கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட முதன்மை ஆதாரமாகக் காட்டப் பட்டிருக்கலாம். இந்த முதன்மை ஆதாரம் பின் வரும் ஆய்வுகளுக்குத் துணைமை ஆதாரமாக ஆகவும் கூடும். ஆம், அவளின் முகமும் வாழ்க்கையும் நிழல்படத்தில் பதிவு செய்யப்பட்ட கணத்திலிருந்து -மின்னணுச் சாதனங்களுக்குள் அடக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து - கலைப் பொருளாகவும் ஆதாரங்களாகவும் ஆகிக் கொண்டுவிட்டன; புகைப்படக்கலை சார்ந்த கலைஞனுக்கு கலைப்பொருளாக இருக்கும் அதே படம் சமூக வியலாளனுக்கும் நாட்டார் வழக்காற்றியலாளனுக்கும் தரவுகள். ஆனால் அந்தப் படத்தில் இருந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் தங்கள் முகங்களைத் தாங்களே பார்த்துக்கொண்ட சந்தோசமான தருணங்கள்.அவ்வளவுதான்.
தகவல்கள்-நுகர்பொருட்கள்-பணமதிப்பு.
மனிதவாழ்க்கையும்,பண்பாடும் அதன் கூறுகளும் களஆய்வுச்சேகரங்களாக ஆகின்றபொழுது தகவல்களாக ஆக்கப்படுகின்றன என்பதைச் சமுதாய வியலின் பகுதிகளான மொழியியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர்களில் பலரும் மறுத்துவிட மாட்டார்கள். அதுவும் இன்று மின்னணுத் தொழில் நுட்பக் கருவிகளின் வழியே சேகரிக்கப்படும் பொழுது அவை நம்பகமான தகவல்கள். இந்தத் தகவல்கள், இன்றைய தகவல் வலைப் பின்னலில் மிகச் சுலபமாக இடம்பெயரத்தக்கன. இடப்பெயர்ச்சி என்பதை வெறும் ஊர் விட்டு ஊர் பெயர்வதாகக் கருதிவிட வேண்டிய தில்லை. தேசம்விட்டுத்தேசமும் கண்டம் விட்டுக் கண்டமும் கடந்து போகும் வாய்ப்புக்கள் கணம் தோறும் உள்ளன.தொடர்ந்து இடம்பெயரும் இந்தத் தகவல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஆக்கப்பட்டுக் கச்சாப் பொருளின் கூறுகளாக ஆகிவிடுகின்றன என்று சொன்னால், கல்வித்துறைசார் ஆய்வாளர்கள் பலரும் ஒத்துக்கொள்ளத்தயக்கம் காட்டக்கூடும். ஆனால் இவர்கள் தயங்குகிறார்கள் என்பதற்காக தகவல்கள் கச்சாப்பொருட்களாக ஆக்கப்படுவதோ அதன் தொடர்ச்சியாக பண்டமாக மாற்றப்படுவதோ நிறுத்தப் படுவதில்லை. தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆய்வாளர் களில் பலரும் நேரடியாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒலி, ஒளிநாடாக்களிலும் கச்சாப்பொருள்களாகவே விற்றுக்கொண்டு இருப்பது கண்கூடு. 'மன்மத ராசா.. மன்மதராசா...' என்பதாகவோ,' சின்ன வீடா வரட்டுமா..? பெரியவீடா வரட்டுமா..?' என்று கேட்பதாக விற்பது வேறொரு வகை வியாபாரம்.
நாட்டார் தெய்வங்களின் ஆக்ரோசமும் கோபமும்தான் தமிழ்நாட்டுக் கிராமமக்களின் உடைகளின் வண்ணங்களாக உறுதிசெய்யப்படுகின்றன என்பதைக் கூட்டல் வாய்ப்பாட்டில் 'இரண்டும் இரண்டும் நாலு
என விடைகாட்டுவதுபோல் காட்டிவிடமுடியாது. பெருந்தொழில் நிறுவனங் களில் செயல்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவுகளின் விஞ்ஞானிகள் இத்தகைய வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள் என்பது தேசபக்தி நிரம்பிய இந்தியனுக்குச்சொல்லப்பட்ட செய்திகள் அல்ல. ஆனால் தற்போதைய உலகின் பொருளாதார உறவுகள், அதற்குள் உள்ளிழுக்கப்படும் பண்பாட்டுக் கூறுகள், பண்பாட்டு அமைப்புகளைக் கையகப் படுத்தியிருக்கிற ஊடகவலைப்பின்னல்களின் சாத்தியங்கள், அதன் வழிக் கட்டமைக்கப்படும் தனிமனிதத் தன்னிலையும் கூட்டுத்தன்னிலையும் செயல்படும்விதம் என அடுக்கடுக்காக யோசித்தால் இந்த உறவுகள், தகவல்கள்>> நுகர்பண்டம்>> பணமதிப்பு என்கின்ற உறவு புரியாமல் போகாது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளுக்கான ஆதாரங்களைச் சேகரித்தல் என்ற பெயரில் அவற்றைக் குறுந்தகடுகளில் பதிவு செய்து பாதுகாத்தல் என்பது பன்னாட்டு மூலதனக் குழுமங்களின் வியாபாரத்தயாரிப்புகளுக்கும் அவர்களின் முகவர்களான தேசிய முதலாளிகளின் விளம்பர உத்திகளுக்கும் தொடர்ந்து பயன்படுவது என்பது தான்.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் :இதுவரை நடந்தவைகளின் பின்னணிகள்.
இலக்கியத் துறைகளின் ஒரு பகுதியாகவும் சமுதாயவியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாகவும் கடந்த கால் நூற்றாண்டுக்கால ஆய்வுலகில் நாட்டார் வழக்காறுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு ஆய்வு செய்யப் பட்டுள்ளன. நாட்டார் இலக்கியங்கள் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவற்றைத் தொகுக்கும்போதும் ஆய்வுக்குட்படுத்த முயன்ற போதும் சொல்லப்பட்ட/ நம்பப்படும் காரணங்களைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். எழுத்துமரபு நகர்ப்புற, உயர்,உயர் நடுத்தர மக்களின் விருப்பங்களையும் வாழ்க்கையையும் அறிவையும் மட்டுமே காட்டுவனவாக உள்ளன; கிராமப் புற அப்பாவிகளின் ஆசைகளையும் வாழ்க்கை யையும் அறிவாற்றலையும் காட்டுவனவாக இல்லை. அவர்களின் உணர்வுகளும் கோபங்களும் அறியப்பட வேண்டும்; அவர்களின் வாழ்க்கை மாற்றப்பட வேண்டும் எனவாதிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டன. காற்றில் கரைந்து கொண்டிருந்த ஏட்டில் எழுதா இலக்கியங்கள் அச்சுக்கு வந்ததால் கிராமப்புற அப்பாவிகளின் இருப்பும் வாழ்க்கையும் திசைமாறி விடவில்லை. கிராமப்புறத்தை பிரதிநிதித்துவப் படுத்தச் சில அறிவாளிகள் உருவானார்கள் என்பதைத் தவிர. சில பதிப்பகங்களின் வணிகலாபத்திற்கும் அவை காரணமாக இருந்தன என்பது கூடுதல் பலன். நாட்டார் இலக்கியங் களின் உரிமையாளர்களுக்குக் கிடைத்தன என்ன? என்று பார்த்தால் எதுவுமில்லை.
அறுபதுகளில் தொடங்கி எண்பதுகள் வரை தொடர்ந்த நாட்டார் ஆய்வுகளின் கதைக்குப் பின்னிருந்த அடியோட்டம் இதுவென்றால் எண்பதுகளின் கதை வேறானது. வாய்மொழி இலக்கியங்களை அடுத்து நாட்டார் கலைகளை நோக்கி ஆய்வாளர்களின் கவனம் திசை திருப்பப்பட்டது. ஆட்டங்கள், கூத்துக்கள், நாடகங்கள், கச்சேரிகள் என நிகழ்த்துக்கலைவடிவங்கள் கவனம் பெற்றன. செவ்வியல் கலைளுக்கெதிரான யுத்தமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அவை தேடிச்சேகரிக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாட்டார் கலைகளின் எடுத்துரைப்பு முறை (narrative method ), உடை, ஒப்பனை, பயன் படுத்தப்படும் பொருட்கள், அடவுகள்,அளவுகள்,அவற்றிற்கான இசைப் பின்னணிகள், அவற்றை எழுப்பும் இசைக்கருவிகள் என நாட்டார் அழகியல் வெளிப்பாடுகள் முன்னிறுத்தப்பட்டன. முன்னிறுத்தலின்போது , செவ்வியல் வடிவங்களை விடவும் சிறப்புற்று விளங்கும் அம்சங்கள் என ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியதை மறந்து விடக்கூடாது. அப்படி ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டதன் பலன் என்ன ?நாட்டார் நிகழ்த்துக்கலைகளுக்கு மேடைகள் கிடைத்திருக்கின்றன; ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருக் கின்றன.திரைப்படங்களின் கச்சாப் பொருளாகவும் ஆகியிருக் கின்றன .தேசிய அரங்கக்கலையை (National theatre ) உருவாக்குவதில் நாட்டார் கலைக்களுக்கும் பங்கு தர வேண்டும் என்பது கூட ஒத்துக்கொள்ளப்பட்ட சங்கதியாக ஆகி யிருக்கிறது. இந்தப் பின்னணியில் - அப்படி ஆனதால் பயன் பெற்றொர்-அதிகப் பயன்பெற்றோர் யாரெனக் கணக்கிட்டால் நாட்டார் கலைகளின் உரிமை யாளர்கள்-கலைஞர்கள் அடைந்த பலன்களைவிட அதனை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள் அடைந்த பலன்கள் தான் அதிகம். தெருக்கூத்தை ஆய்வு செய்தவர் பல்கலைக்கழகப் பேராசிரியானதால் தெருக்கூத்துக் கலைஞர் களுக்கு ஆனதென்ன ? நாட்டார் அரங்கவடிவங்களான தேவராட்டம் , கணியான் ஆட்டம், கும்மியாட்டம், பறைமேளம் என எல்லாம் ஆய்வுக் குரியனவாக ஆகி-கருத்தரங்க விவாதப் பொருள்களாக ஆகிச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்தக்கலைகளின் இருப்பும் நிலையும் மாற வில்லை; இன்னுஞ்சொல்வதானால் முன்னர் இருந்ததைவிடக் கூடுத லான அழிவை நோக்கியே சென்றுள்ளன.
இந்தக் கூற்றுக்களைத் தனிநபர்களின் மீதான விமர்சனமாகக் கொள்ளத் தேவையில்லை. விற்கத்தக்க பண்டமாக மாறும் எதுவும் உற்பத்தி செய்தவனி டமிருந்து அந்நியமாகிவிடும் சாத்தியங்கள் கொண்டது என்பதையும் அதன் மூலம் முதலீடு செய்தவனும் இடையிலிருக்கும் தரகர்களும் அதிகப் பலன் அடைவார்கள் என்பதையும் விளங்கிக் கொண்டாலே போதுமானது; அப்புறம் இதற்கு உடந்தையாக இருப்பதா ? எதிர் நிலைப்பாடு எடுப்பதா? என்பதை அவரவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

வாய்மொழி இலக்கியங்கள், நாட்டார்இசை, நாட்டார் நிகழ்த்துக்கலைகள் என்பதான ஆய்வுகள் ஏற்படுத்திய விளைவுகளைவிட மோசமான ஆபத்தான விளைவுகளைச் சடங்குகள் குறித்த ஆய்வுகள் ஏற்ப்படுத்தியுள்ளன. குலச் சடங்குகள், வாழ்க்கைவட்டச்சடங்குகள், வழிபாட்டுச்சடங்குகள், என எல்லாம் தொகுக்கப்பட்டு ஆவணமாகியுள்ளன.இந்த ஆவணங்கள் தொகுக்கப்பட்டதன் மேல்விளைவாக இந்திய/தமிழகச் சமூகம் மதச்சார்பற்றச் சமூகமாக மாறியிருக்கிறதா? அல்லது மதநம்பிக்கைகள் இறுக்கமும் பிடிப்பும் பெற்ற சமூகமாக மாறியிருக்கிறதா? என்று யோசித்தால் இரண்டாவதே நடந்திருக் கிறது என உறுதியாகச் சொல்லலாம். சாதிஒழிப்புப் பற்றிக்கூட வேண்டாம்; சாதிகளிடையே முரண்கள் குறைந்து இணக்கமும் அங்கீகாரமும் தனிமனிதனை மனிதனாக மதிப்பதும் என்பதையாவது ஏற்படுத்தியிருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். எல்லாவற்றையும் அதிகமாக்கி யிருக்கிறது என்பது மேலும் உணர வேண்டிய ஒன்று. இன்று இடைநிலைச் சாதிகள் ஒவ்வொன்றும் தங்கள் சாதிப்பெருமைகளைப்பட்டியல் இடுவதற்கும் வைதீகச்சமய நம்பிக்கைகளுடன் உறவுகொண்டாடுவதற்கும் சடங்குகளைக் கடைப்பிடிப்பவர்களாக ஆகியிருப்பதற்கும் இந்த ஆய்வுகள் மறைமுகப் பங்காற்றி யிருக் கின்றன என்பதை எந்த ஆய்வாளரும் மறுத்துவிட முடியாது. அதன் தொடர்ச்சியாக மத அடிப்படை வாதங்களும் சாதிப் பெருமை களும் தூண்டியும் விட்டிருக்கிறது என்பதுங்கூட உண்மைதான்.
தமிழ் அடையாளம், நாட்டார்மரபும் செவ்வியல் மரபும் இணைதலின் புள்ளிகள், வைதீக மதத்திற்கு எதிரான போராட்டவடிவம், விளிம்புநிலை மனிதர்களின் பண்பாட்டு வரலாற்று ஆவணங்கள், நகரங்களுக்கெதிரான முரண்களைக் குவித்தல் என அவ்வப்போது காரணங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் நடப்பதென்னவோ;பெரிதும் மாறிவிட வில்லை. தொடர்ந்து ஆய்வாளர்கள் தரவுகளைச் சேகரித்த வண்ணமே தான் உள்ளனர்.சேகரித்த தகவல்களின் மேல் பகுப்பாய்வுகளோ , அணுகுமுறை களைப் பயன்படுத்தித் திறமான-இந்தியச்சூழலுக்குகந்த முடிவுகளை நோக்கிய ஆய்வுகள் எதுவும் நடந்ததாகத்தெரியவில்லை.
முடிவுரையாகச் சில நம்பிக்கைகள்
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் குறித்து இப்படிச் சொல்வதைப் பொறுப்பற்ற அவதூறான அரசியல் சொல்லாடல் என நினைத்துப் பலரும் சுலபமாக ஒதுக்கிவிடமுடியும். அப்படி ஒதுக்கிவிடுபவர்களையோ ஒதுங்கி விடுபவர் களையோ யாரும் எதுவும்செய்து விடமுடியாது. அவர்களின் பணி அதேபாணியில் தொடரட்டும் ; பயன்படட்டும்; பயன்பெறட்டும்.ஆனால் இதனை நியாயமான குற்றச்சாட்டு எனக்கருது பவர்கள், உடனடியாகத் தங்களின் நாட்டார் வழக்காறுகள் சார்ந்த ஆய்வுப் பணிகளை மூட்டைகட்டி விடவேண்டும் என்பதுமில்லை. நாட்டார் வழக்காறுகள் பண்பாட்டின் தாரங்களாக இருக்கின்ற அதேநேரத்தில் ,அழுத்திவைக்கும் சுமைகளாகவும் இருக்கின்றன என்ற தன்னுணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்தத் தன்னுணர்வு நமது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களிடம் அதிகம் இல்லாத ஒன்று. ஆனால் உடனடியாக கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அத்தகைய தன்னுணர்வு இருக்கும் நிலையில் செயல்படும் ஆய்வாளர்களுக்கென்று தனியான கடமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அரிய பொக்கிசங்கள் என நம்பப்படும் அந்த வழக்காறுகள்¢லிருந்து பிரித்து எறிய முடியாமல் தவிக்கும் கடந்தகாலத்தின் சுமைகள் எவையெனக் கண்டறிந்து சொன்னாலே பெரிய கடமையாற்றியதாக அமையும்.
நாட்டார் வழக்காறுகள் நிறுவனமதத்திற்கு உள்ளே இருப்பதாகநம்பினாலும்சரி வெளியேயிருப்பதாக நிறுவப்பட்டாலும்சரி அவை இந்திய மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் கூறுகட்டிப் பார்க்கும் சாதியடுக்கைக் காப்பாற்று வனவாக இருக்கின்றன; தக்கவைக்க முயல்கின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அந்தச்சுமையை வழக்காறுகளிலிருந்து பிரித்துக் காட்டித் தெளிவுபடுத்தி விட்டு அவற்றின் முற்போக்குப் பாத்திரத்தைப் பேசும் ஒரு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளனுக்காக எத்தனை ஆண்டு காலம் வேண்டுமானாலும் நாம் காத்திருக்கலாம்.
################# ################ ################

July 06, 2009

தி.ஜானகிராமனின் நாடகங்கள்

தமிழின் புனைகதைப் பரப்பிற்குத் தனது கதை நிகழ்வுப் பரப்பாலும், அப்பரப்பில் உலவிய விதம் விதமான கதாபாத்திரங்களாலும்-குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களின் புறவெளியின் நிலைபாட்டையும் மனத்தின் சுழற்சி யையும் எழுதிக்காட்டியதின் மூலம்-புதிய வீச்சையும் அலையையும் உருவாக்கித் தந்தவர் தி.ஜானகிராமன். நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தனது சிறுகதைகளாலும் நாவல்களாலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள தி.ஜானகிராமன் நாடகங்களையும் எழுதியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருந்த போதிலும் அவை அதிகம் கவனம் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

அரங்கியல் பேராசிரியர்கள் இருவர்:நாடகக் கல்வி: கிழக்கும் மேற்கும்


இன்று, நாடகக் கலை ஒரு கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம்,இசை, ஓவியம்,சிற்பம்,திரைப்படம் எனக் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்துக்கலைகளும், நுண்கலை களும், நிலைக் கலைகளும் கூடக் கல்வித்துறைசார் படிப்புகளாகி இருக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பட்டப்படிப்பாகவும் பட்டமேற்படிப்புகளாகவும் இவை யெல்லாம் கற்றுத் தரப்பட்டு பட்டங்கள் தரப்படுகின்றன. இப்படிச் சொல்லுவதால் இவையெல்லாம் இப்பொழுதுதான் கற்றுத் தரப்படுகின்றன என்றோ, அதற்கு முன்பு அத்தகைய கல்வி இல்லை என்றோ அர்த்தமில்லை. சுதந்திரத்திற்கு முன்னும்கூட இக்கலைகளைக் கற்றுத்தருபவர்களும் கற்றுக் கொள்பவர்களும் இருந்தார்கள். கல்வி நிறுவனங்களும் இருந்தன ; ஆனால் வேறுவிதமாக இருந்தன. குரு-சிஷ்யப்பாரம்பரியத்தில் ஒருசில குழுக்களுக் குள்ளேயே / சாதிகளுக்குள்ளேயே கற்றுக் கொள்ளப்பட்டன.
சுதந்திர இந்தியாவில் கலைகள் பட்டங்கள் தரும் கல்வித்துறைசார் படிப்பாக ஆனதற்குத் தெளிவான நோக்கங்களும் இலக்குகளும் உண்டு. எதிர்கால இந்தியாவைப் பற்றித் தனக்கெனத் தனித்துவமான பார்வைகளையும் இலக்கு களையும் கொண்டிருந்த பண்டித ஜவகர்லால் நேருவின் பண்பாட்டுக் கொள்கை இதன் பின்னணியில் இருந்தது. எல்லாவகையான படிப்புகளும் ஜனநாயகப் படுத்தப்படவேண்டும் என்ற வகையில், அவர்காலத்தில் கலை களைப் பற்றிய படிப்புக்குள்ளும் மேற்கத்தியக் கற்பித்தல் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. அதன்வழிப் பட்டம் பெற்ற பலரும் அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் தங்கள் கலைசார்ந்த பணிகளை விருப்பத்தோடும் விருப்பமின்றியும் செய்து வருகின்றனர்.சிலர் தனித்துவமான கலைஞர்களாக உலா வருகின்றனர். இன்னும் சிலர் வெகுமக்கள் ஊடகங்களின் தேவைக்கான சரக்குகளை உற்பத்தி செய்யும் பணியாளர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர் களாகவும் வெளிப்பட்டுள்ளனர். கலைகளைப் பல்கலைக் கழகப் பட்டங்களாக ஆக்குவதில் இவ்வாறு பல்வேறு நன்மைகளும் உண்டு;தீமைகளும் உண்டு. என்றாலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் ஒரு துறையாக கலை ஆகின்ற பொழுது அது அனைவரும் கற்கக் கூடிய ஒன்றாக ஆகிவிடுகின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ராமானுஜமும் மௌனகுருவும்
பேராசிரியர் ராமானுஜம், பேராசிரியர் மௌனகுரு- இந்த இரண்டு பெயர்களும் தமிழில் நாடகக்கலை சார்ந்த செயல்பாட்டாளர்களின் மனதில் தங்கிவிட்ட பெயர்கள்.கல்விப்புலங்களுள் ஒன்றாக நாடகக்கலை ஆனபின்பு, தன்விருப்பத் தோடு இப்புலத்திற்குள் நுழைந்த தமிழ் நாடகக் கலை மாணவன் இவ்விரு பெயர்களையும் பலமுறை உச்சரித்திருக்ககூடும். நாடகக்கலை சார்ந்து ஓய்வினை அறியாத பேரா.சே.ராமானுஜம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பேரா.மௌனகுரு இலங்கையின் கல்விச்சூழல் காரணமாகத் தனது அறுபதாவது வயதிற்குப் பின்னரும் தான் பணியாற்றிய மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தின் நுண்கலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இவ்விரு பேராசிரியர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர ஒரு காரணமும் உள்ளது.அவர்களது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு நூல்களாகக் கிடைக்கின்றன என்பதுதான் அந்தக்காரணம்.தனது எழுத்தின் படிகளைச் சேர்த்து வைப்பதில் அதிக அக்கறை காட்டிக் கொள்ளாதவர் பேராசிரியர் ராமானுஜம். நாடகக் கலையின் மாணவன், அதில் பெறும் செய்முறைப் பயிற்சி சார்ந்த கல்வியின் மூலமே வல்லுநனாக ஆக முடியும் என்பது அவரது நம்பிக்கை; அந்த நம்பிக்கை முழுமையான உண்மையும்கூட. செய்முறைப்பயிற்சி பெற்றுக் கொள்ளாத நாடகக்காரன். நாடகக்காரனாகச் சாதனைகள் எதுவும் செய்துவிட முடியாது. தொடர்ந்த பயிற்சிகள் என்பதும், பயிற்சிகளைப் பயன்படுத்தி தயாரிப்புப் பணிகளைச் செய்வது என்பதும்தான் நாடகக்கலையின் கற்றல் முறையும்கூட.
டெல்லி, தேசிய நாடகப்பள்ளியின் தலைசிறந்த இயக்குநரும் நாடகத் துறையில் சர்வதேச அளவில் அறியப் பட்டவருமான இப்ராகீம் அல்ஹாசியின் மாணவர் சே.ராமானுஜம். அவரது படிப்பையும் பயிற்சியையும் தொடக்கத்தில் தமிழகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை.அவர்கற்றுத் திரும்பிய வுடனே அவரைப் பயன்படுத்திக் கொள்ளும்படியான கல்விச்சூழல் தமிழ் நாட்டில் இல்லாமல் இருந்தது என்று கூடச் சொல்லலாம். கேரளாவின் திருச்சூர் நாடகப்பள்ளியில் பயிற்றுநராக இருந்த ராமானுஜத்தை அழைத்து வந்து தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையின் தலைவராக்கியவர் அதன் முதல் மற்றும் முதன்மையான துணைவேந்தர் பேராசிரியர் வ.அய்.சுப்பிர மணியம்.
பேரா.சே. ராமானுஜம் நாடகத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றினாலும் அவரது விருப்பங்கள் அதிகமும் எழுத்து சார்ந்தன அல்ல. பயிற்சிகள், நாடகத் தயாரிப்புகள் சார்ந்தனவே. தனியான பட்டறைகளாகவும் நாடகத் தயாரிப்புக் கான பட்டறைகளாகவும் அவர் முன்னின்று நடத்திய பட்டறைகள் பல. அவற்றிலிருந்து உருவான நாடக நடிகர்களும் நாடகக்கலைசார்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களும் பலருண்டு. அப்பட்டறைகளில் அவர் பயிற்று விக்கும் முறைகள் அனைத்தும் எழுத்துப் பதிவுகளாகவும் ஒளிநாடாக் களாகவும் ஆக்கப்பட வேண்டியவை. பின்வரும் சந்ததியினருக்கு பேரா. சே. ராமானுஜத்தின் பங்களிப்புக் களை அப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும். அதை யார் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. பேராசிரியர் ராமானு ஜத்தின் எழுத்துசார்ந்த பங்களிப்பைத்தொகுத்து தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தும் பணியை நாடகக்காரரும் பத்திரிகையாளருமான சி.அண்ணாமலை செம்மையாகவே செய்துள்ளார். ராமானுஜத்தின் நாடகங்கள் தனியாகவும், அவரது கட்டுரைகள் தனியாகவும் தொகுக்கப்பட்டு இரண்டு நூல்களாக காவ்யா பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. அதற்காக சி.அண்ணாமலையும் காவ்யா பதிப்பகத்தாரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.
ராமானுஜத்தின் எழுத்துக்கள் எழுதவேண்டும் என்ற வேட்கையுடன் எழுதப் பட்டன அல்ல. தனது செய்முறைப் பயிற்சி சார்ந்த கற்பித்தல் முறையின் போக்கில் சில தேவைகளுக்காக எழுதப்பட்டவைகளே அவரது நாடகப்பிரதிகள். அவை வாசிப்பில் தருகின்ற அனுபவங்களையும் அர்த்தங் களையும்விட மேடையேற்றத்தில் தருகின்ற அர்த்தங்களும் அனுபவங்களும் கூடுதலானவை. அவரது கட்டுரைகளும்கூட தனித்த ஓர்மையோடு விவாதங் களையும் விமரிசனங்களையும் முன்வைக்கும் தன்மையன அல்ல. அவ்வப் போது நாடகத்துறைசார்ந்த நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளும், சில நாடக நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளும் தான்.இவை நாடகத்துறைக்கு வெளியேயிருந்து அதனை அறிந்து கொள்ள முயலும் ஒரு வாசகனுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று சொல்ல முடியாது.ஆனால் நாடகத் துறைசார்ந்த கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இவற்றின் பயன் திறமானவை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
#########################################################
பேராசிரியர் மௌனகுருவின் கட்டுரைகள் அரங்கியல் என்னும் தலைப்பில் ஒரு நூலாகவும் அவரது மணிவிழா மலராக-அவரது எழுத்துக்களும் அவரைப் பற்றிய எழுத்துக்களுமாக- ஒரு நூலும் வெளிவந்துள்ளது. மணிவிழா மலரில் இலங்கையைச்சேர்ந்த கல்வியாளர்கள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அக்கட்டுரைகள் தமிழகக் கல்வியாளர்களுக்கு புலம்சார்ந்த கட்டுரை களின் நுண்மான் நுழைபுலம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் காட்டக்கூடியன.அத்துடன் பேராசிரியர் மௌனகுருவின் கல்விப்பணிகளையும் அரங்கியல் பணிகளையும் விரிவாகக் கூறுகின்றன.
தமிழ் அரங்கியல் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுகிறவர்களுக்கும் அவற்றைப் பயிற்சி செய்து பார்க்கத் துடிக்கும் இளம் மாணவர்களுக்கும் பேரா.மௌன குருவின் அரங்கியல் என்னும் நூல் மிகமிக உதவிகரமாக விளங்கக் கூடியது. மூன்று பகுதிகளையுடைய அந்நூலில் முதல் இரண்டு பகுதிகள் தமிழக அரங்கியல் மாணவர்களும் கற்றுக் கொள்ளவேண்டிய பகுதிகள்.சர்வதேச அளவில் அரங்கவியலில் காணப்படும் சொல்லாடல்களை மிகத்தெளிவாகவும் சுருக்க மாகவும் விளக்கும் கட்டுரைகள் முதல் பகுதியில் இடம் பெற்றுள்ளன. நாடகக் கலையின் பயன்கள், நடிப்பு முறைகள் பற்றிய எண்ணக்கருக்கள், முழுமை அரங்கு, ஐரோப்பிய நவீன நாடக அரங்கும் ஆசிய நாடக அரங்கும், சிறுவர் களுக்கான நாடகங்களும் ஆசிரியர்களும் என்ற ஐந்து கட்டுரைகளும் அரங்கியல் அடிப்படைகளைத் தமிழில் சொல்லும் கட்டுரைகள். இத்தகைய கட்டுரைகள் தமிழில் இதுவரை எழுதப்படவில்லை என்பதுதான் உண்மை. இரண்டாவது பகுதியில் தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைப் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பும் பின் நவீனத்துவப் பின்னணியில் தமிழ்ப் பாரம்பரியக் கூத்தைப் புரிந்து கொள்ளவேண்டிய முறையியலும் பேசப்படுகின்றன. இக்கட்டுரைகளில் காணப்படும் முறையியலும் தெளிவும் தமிழக அரங்கியலாளர்களிடம் காணப்படாத ஒன்று.
வரலாற்றைச் சமகாலத்தேவைகளின் பின்னணியில் புரிந்து கொள்ள இலங்கையைச்சேர்ந்த பேராசிரியர்களிடம் தான் தமிழகம் பாடம் கேட்க வேண்டியுள்ளது.இலக்கியத்தளத்தில் இத்தகைய பாடங்களைப் பேராசிரியர்கள் க. கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் ஏற்கனவே நடத்தியுள்ளனர் என்பதைத் தமிழ்க் கல்வியுலகம் நன்கு அறியும். இத்தகைய பாடங்கள் நான் முன்பே சொன்னபடி மேற்கையும் கிழக்கையும் சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.தமிழகக் கல்வியாளர்கள் பலருக்கு மேற்கின் விமரிசன முறையும் கைவரப்பெறவில்லை. மரபின் சமகாலத் தேவையையும் சொல்ல இயலவில்லை. மரபு என்பதற்காக போற்றுவது மட்டுமே சாத்தியமாகிறது.
மூன்றாவது பகுதி இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களின் மரபுக்கலைகளின் நிகழ்கால நிலைமைகள் குறித்து எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்.ஈழம், மட்டக்களப்பு, பாண்டிருப்பு என அதற்குள்ளும் இருக்கும் பிரதேச வேறுபாடு களை அடையாளப்படுத்தி அரங்கியல் நிகழ்வுகளை ஆய்வு செய்துள்ளார் மௌனகுரு. மொத்தத்தில் இந்த நூல் தமிழ் அரங்கியல்/ நாடகக் கல்விக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கக் கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. #######################################################
பேரா.ராமானுஜமும் பேரா.மௌனகுருவும் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நாடகக் காரர்கள். ஏனென்றால் தமிழர்கள் அனைவரும் நாடகக் கலையின் பார்வையாளர்களாக ஆக்கப்படவேண்டும் என்பது அல்ல அவர்கள் விருப்பம். நாடகக் கலையின் மூலம் தமிழர்கள் இந்த உலகத்தினை- சமகால வாழ்வைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது அவர்கள் இருவரது விருப்பங்கள். அதற்காகத் தமிழர்கள் அனைவருக்கும் நாடகக்கலையைக் கற்பிக்கும் விருப்பம் கொண்ட பேராசிரியர்கள். அதிலும் மேற்கையும் கிழக்கையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்ட பேராசிரியர்கள். தங்கள் கற்பித்தல் முறையில் இந்திய /கீழ்த்திசைப் பாரம்பரியத்தின் எல்லைகளை எங்கே நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கும் மேற்கின் விமரிசன அறிவை எங்கெல்லாம் நமதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கும் அவர்களிடம் தெளிவான பார்வைகள் உண்டு.
வார்த்தை சார்ந்த மொழியும் உடல் மொழியும் அரங்கியலின் பிறகூறுகளுடன் இணைந்து உருவாக்கும் மொழியே மேடை மொழி. அரங்கியல் செயல்பாடுகளின் அடிப்படையான இதில் தெளிவு இல்லாத நிலையில் எந்த இயக்குநரும் நல்ல படைப்புகளைத் தந்து விடமுடியாது.இந்தத் தெளிவுகள் கைவரப்பெறாத சிலபேர் தங்களின் நாடகங்கள் என்ன நோக்கத்தொடு மேடையேறுகின்றன என்பதைக் கோடி காட்டக் கூட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களது மேடையேற்றங்கள் பார்வையாளர்களிடம் தொடர்பு கொள்ளத் தேவையான தொடர்பு மொழி எவையென்பதையே உறுதிசெய்து கொள்ளாமல் தவிக்கின்றன. வார்த்தை சார்ந்த மொழியின்வழி பார்வையாளனுடன் உறவு கொள்வதா..? உடல்மொழியால் தொடர்பு கொள்வதா என்ற தெளிவுகள் இல்லாத நிலையில்.. தொடர்புநிலை தொடர்ந்து அறுபட்டுக்கொண்டே இருப்பதே இத்தகைய அரங்கியல் செயல்பாடுகளின் பாணியாக இருக்கிறது. இதுதான் இன்று தமிழில் நாடகம் செய்ய-நவீன நாடகங்கள் செய்ய விரும்பும் பலரது பிரச்சினையாக இருக்கிறது. அது பற்றிப் பின்னொரு முறை பேசலாம். இப்போதைக்கு பேராசிரியர்கள் ராமானுஜம், மௌனகுரு ஆகியோரது எழுத்துக்களிலிருந்து பாடங்கற்றுக் கொள்ளலாம்.
##################################################### #############

June 22, 2009

தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

கற்பித்தலின் பரிணாமம்
கற்றல் என்பதற்குள் தகவல் திரட்டல், சேமித்தல், பயன்படுத்துதல் ஆகிய மூன்று பரிமாணங்கள் உண்டு . பள்ளிக் கல்வி தொடங்கி ஆய்வுக் கல்வி வரையிலான எல்லாவற்றிலும் இம்மூன்று நிலைகளும் வெவ்வேறு விதமாக நடை பெறுகின்றன. பாடத் திட்டம் சார்ந்து ஆசிரியர் தரும் தகவல்களை மனதில் சேமித்துத் தேர்வுத் தாளில் எழுதிப் பயன்படுத்தும் வேலையைப் பள்ளிக் கல்வியின் மாணாக்கர்கள் செய்கிறார்கள். பள்ளிக் கல்வியில் அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும், அதைச் சரியாகச் செய்பவர்களைச் சிறந்தவர்கள் எனப் பாராட்டுவதும் ஓரளவுக்குப் பொருத்தமானது. இந்நிலையைப் பள்ளிக் கல்வியோடு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அந்த அடிப்படையில் தான் உயர்கல்வியான கல்லூரிக் கல்வியின் தொடக்க நிலையிலேயே துறை சார்ந்த சிறப்புக் கல்விக்குள் மாணாக்கர்கள் நுழைக்கப் படுகின்றனர். சிறப்புக் கல்விக்கான பாடத் திட்டத்தில் படிக்க வேண்டிய பனுவல்கள் எனக் குறிப்பிடுவ தோடு பார்வை நூல்களையும் பாடத்திட்டக் குழுக்கள் தருவதற்கு அப்படியொரு நோக்கம் இருப்பதே காரணம்.
இளங்கலைப் பாடத்திட்டத்திலிருந்து விலகி முதுகலைப் பாடத் திட்டத்திற்குப் பல நோக்கங்கள் இருக்க வேண்டும். பாட நூல்களோடு (Text books) பார்வை நூல்களும் (References), மேலும் படிக்க வேண்டிய நூல்களும் (Further Readings) என்பனவும் பாடத்திட்டக் குழுக்களால் குறிப்பிடப் பட வேண்டும். முனைவர் பட்டத்திற்கு முந்திய பட்டமான இள நிலை ஆய்வுப் பட்டம் சிறப்புப் பாடங்கள் என்ற நிலை யிலிருந்து திரும்பவும் பொதுநிலைக்கு நகர வேண்டும். இப்பொதுநிலை பள்ளிக்கல்வியில் இருக்கும் பொதுக் கல்வி யிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பரந்த பரப்புக்குள் திறனாய்வுப் போக்கில் நுழையும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
நமது பாடத்திட்டங்கள் இத்தகைய வேறுபாடுகளைக் கொண்டனவாக இருக் கின்றனவா என்று கேட்டு விடை சொல்லும் வேலையை இங்கே நான் செய்யப் போவதில்லை. சில பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக் குழுக் களிலும், பல தன்னாட்சிக் குழுக்களின் பாடத்திட்டக் குழுக்களிலும் இருந் துள்ள அனுபவத்தைக் கொண்டு அதற்கான விடைகளை விவாதிக்க முடியும். புதிய வகைப் பாடத்திட்டங்களை உலகப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு உருவாக்கியுள்ளன என்பதை வலைத்தளங்கள் வழியாகப் பார்த்துள்ளேன். அந்த அடிப்படையில் சில முன் மொழிதல்களை நான் உறுப்பினராக உள்ள குழுக்களில் பரிந்துரை செய்துள்ளேன். பெரும்பான்மை காரணமாக எனது முயற்சிகள் விவாதிக்கப்படும் பொருளாகக் கூட இருந்ததில்லை என்பதைக் குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன். இந்தக் கட்டுரையின் மைய நோக்கத்திற்குப் புறம்பானதும் கூட. இனி கட்டுரையின் மையத்தை நோக்கி நகரலாம் .
பொதுக் கல்வியும் கலை இலக்கியக் கல்வியும்
சிறப்புப் பாடங்களுக்குள் நுழையும் கல்லூரிக் கல்வி திரட்டுதல், சேமித்தல்,பயன்படுத்துதல் என்பனவற்றை மனம் சார்ந்த ஒன்றாகப் பார்ப்பதிலிருந்து விலக்கி, தேடலை முதன்மைப் படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். தேடல் என்பது வகுப்பறைக்கு வெளியே நூலகங்களில், இதழ்களில், ஆய்வுக் கூடங்களில், அறைக் கூட்டங்களில் என விரியலாம். தேடித் திரட்டுதலில் ஏற்படும் மாற்றம் அதன் தொடர்ச்சியாகச் சேமித்தல், பயன்படுத்துதல் என்ற நிலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது தவிர்க்க முடியாதது.
திரட்டப் படும் தகவல்கள், மனதில் சேமித்தல் என்பதாக இல்லாமல் குறிப் பேடுகளில் சேமித்தல், சொந்த நூலகங்களை உருவாக்கிக் கொள்ளுதல், அவற்றைப் பயன்படுத்தித் தனது தனித்தன்மைகளை வெளிப் படுத்துதல், படைப்பாக்கம் செய்தல், புலமையாளனாகக் காட்டுதல் என்பதாக முதுகலை கல்வியில் விரிய வேண்டும். இந்த விரிவும் ஆழமும் முதுகலைக் கல்வியில் சேரும் எல்லா மாணாக்கர்களுக்கும் சாத்தியப் படாமல் போனதற்குப் பல காரணங்கள் இருந்த போதிலும் முக்கியமான காரணமாக இருப்பது இப்போதுள்ள தேர்வு முறை தான்.
கேட்கப்படும் வினாக்களுக்கு மூன்று மணி நேரத்தில் எழுதப்படும் விடை களில் அதிகம் வெளிப்படக் கூடியன தகவல்கள் மட்டுமே. தகவல்களை வகைப்படுத்துதல், விளக்குதல், புத்தாக்க நிலையில் பயன்படுத்துதல் என்பன வெல்லாம் சாத்தியம் இல்லை. அதிலும் அனைத்து வகையான பாடங் களுக்கும் ஒரே வகையான வினா அமைப்புகளும் விடைகளுக்கான அளவு வரையறைகளும் கொண்ட தேர்வு முறைகளோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் இன்றைய கல்வி முறை எல்லாச் சோதனை முயற்சி களையும் மலினப் படுத்தும் முடிவுக்கே கொண்டுபோய்ச் சேர்த்து விடுகின்றது. இன்றுள்ள நிலையிலேயே கூட ஆய்வாளர்கள் முழுமையாக மனதில் சேமித்தல் என்பதாக இல்லாமல் குறிப்பட்டைகளில் சேமித்தல், வகைப்பாடு செய்தல், விளக்குதல், புத்தாக்க நிலையை வெளிப்படுத்துதல் என்பதைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவிற்¢குக் கொண்டு வந்தால் தேர்வுகள் சார்ந்த கல்வியின் குறைபாடுகள் புரிய வரலாம்.
கற்றலின் தொடக்க நிலையில் மாணாக்கர் ஒருவருக்குக் கற்பிப்பவன் தருவது தகவல்கள் மட்டுமே முதன்மையானது. இத்தொடக்கம் இடைநிலைக் கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி என நீளும் பள்ளிக் கல்வி வரை தகவல்களைத் தொகுத்துத் தருவனவாகவே இருக்கின்றன. ஆனால் திரட்டும் தகவல்களை வகைப் படுத்துவது, ரகசியப் படுத்துவது, விளக்குவது, ரகசியங்களை உடைத்துக் காட்டுவது என்பதன் மூலம் பயன் படுத்துவதே உயர்கல்வியின் இயங்குநிலையாக இருக்க வேண்டும். இவ்வியங்கு நிலைக்குப் பாடத்திட்டங்கள் தயாரிப்பதில் தொடங்கி, கற்பித்தல்,மதிப்பீடு செய்தல் வரையிலான ஆசிரியர்களின் பணியில் மாற்றங்கள் வரவேண்டும். அதேபோல் கற்றல், கற்றனவற்றைப் பயன்படுத்தித் தன்னை வெளிப்படுத்து தல் என்பதில் மாணாக்கர்கள் தீவிரமாக முயல வேண்டும். தங்களின் தேவைக்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டும். அத்தகைய கோரிக்கை யின் முன் நிபந்தனையாகத் தேடுவதற்கான வாய்ப்புக்களையும் , தேடுவதை விவாதிப்பதற்கான சாத்தியங்களையும் , விவாதித்தலின் விளைவு களை முன் வைப்பதற்கான பரப்பையும் கல்வி முறை முன் வைக்க வேண்டும். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டதான கல்வியாக இலக்கியக் கல்வி மாற்ற வேண்டும். இதற்கு இன்றுள்ள வகுப்பறைக் கல்வியின் போதாமையைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதாமையின் புரிதலைச் சரிசெய்ய இன்றுள்ள ஒரே வழி, புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள நவீனத் தொழில் நுட்ப சாதனங்களை இலக்கியக் கல்வியின் கருவிகளாக ஆக்குவது தான் என்று உறுதியாகக் கூறுவேன்.
இப்படிச் சொல்லும்போது இதற்கெதிரான மாற்றுக் குரல் ஒன்று இருக்கிறது என்பதை அறிந்தே சொல்கிறேன். கற்றலின் பகுதிகளாகச் சுட்டப்படும் திரட்டுதல், சேமித்தல், பயன்படுத்துதல் என்பன அறிவியல் கல்வி, தொழில் நுட்பக்கல்வி போன்ற பயன்படு துறை சார்ந்த கல்விக்கு மட்டுமே முழுமை யும் பொருந்தக் கூடியன. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவு என்பது பெற்றுச் சேமித்துக் கொள்ளும் தகவல்களின் பெருக்கம் என்பதன் மேல் விரியும் தன்மையுடையது என அந்த மாற்றுக்குரல் வாதங்களை முன் வைக்கும் என்பதையும் நானறிவேன். இதே காரணங்களும், கூறுகளும் வரலாறு, சமூகவியல், நிலவியல் போன்றனவற்றிற்கும் பொருந்தக் கூடியன என்பதால், சமுதாய அறிவியலின் பிரிவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதித்து விட்டு, கலை இலக்கியக் கல்விக்கு இவையெல்லாம் பொருந்தாது என ஒதுக்கித் தள்ளும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு.
கலை இலக்கியக் கல்வி வெறும் தகவல் அடிப்படைகளின் மேல் கட்டப்படும் உண்மை அல்ல என்று படைப்பிலக்கியவாதிகள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர்.உண்மைக்குப் பின்னால் இருக்கும் இன்மையையும், இன்மையை உண்டாக்கும் உண்மையையும் உருவாக்கும் தன்மை கொண்டன கலை இலக்கியங்கள்.எனவே கலை இலக்கியக்கல்வியின் முறைகளும் நுட்பங் களும் முற்ற முழுதாக வேறு பட்டவை என வாதம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால் இந்த வாதங்கள் எல்லாம் மொழி என்பதை அறிவியலின் ஒரு பகுதியாக விளக்கிக் காட்டிய நவீன மொழியியலின் வருகைக்குப் பின் அர்த்தமிழந்து விட்டன . கலை இலக்கியங்கள் என்பதை நவீன மொழியியல் மொழியின் தகவல் தொகுதி எனவும், மொழிக் கிடங்கில் சேமித்து வைக்கப்படும் அமைப்புகளின் வெளிப்பாட்டுக்கேற்பவே புரிந்து கொள்ளப் படுகின்றன எனவும் விளக்கிக் காட்டியுள்ளது. மொழியைப் பயன்படுத்தும் நபரின் /கூட்டத்தின் சேமிப்புக் கிடங்குப் படிமங் களுக்கேற்பவே வகைப்பாடும் வடிவமும் கூட வேறுபடுகின்றன என்பது அதன் தொடர்ச்சியான கண்டுபிடிப்பு.
மொழியை அறிவியலின் பகுதியாகப் புரிந்து கொள்ளத் தொடங்கிய பின் மொழியின் தொகுதியான கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் அறிவியலின் பகுதிகளால் விளங்கிக் கொள்வதில் சிக்கல் இல்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில் அறிவியலின் பகுதிகளை விளக்கப் பயன்படும் தொழில் நுட்பக் கருவிகளை மொழிக் கல்விக்கும், அதன் விளைவுகளான கலை இலக்கியக் கல்விக்கும் பயன்படுத்துதல் தவிர்க்க முடியாதது என்றே நினைக்கிறேன். அத்துடன் இப்போதுள்ள அறிதல் முறையை விட- எண்ணிக்கை சார்ந்தும் தரம் சார்ந்தும் கூடுதல் பலன் அளிக்கும் புதிய வரவுகள் நமது துறைக்குள் நுழையும்போது அவற்றை ஏற்றுப் பயன்படுத்திக் கொள்வதே வளர்ச்சியை விரும்பும் மனிதக் கூட்டத்தின் இயல்பு.
தமிழர்கள் அண்மைக்காலத்தில் வாழ்வாதாரங்கள் சார்ந்து விரைவான வளர்ச்சிக்காக எதனையும் ஏற்றுக் கொள்ளும் வேகத்தில் நான்கு கால் பாய்ச்சலைக் காட்டி வருகின்றனர். அறிவியல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் என அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு உலகச் சந்தையின் உற்பத்தியாளர் களாகவும், நுகர்வோர்களாகவும் விரைந்து மாறிக் கொண்டிருக்கின்றனர். அதனை நோக்க, தமிழ் மொழிக் கல்வியும், இலக்கியக் கல்வியும் அதனோடு சேர்ந்து பயணம் செய்ய வேண்டியது கட்டாயம். கட்டாயம் என்பதை விட நெருக்கடி என்றே குறிப்பிடலாம். இதை கற்பவர்களைவிடக் கற்பிப்பவர்களே முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியான புரிந்து கொள்ளலின் முதல் படியே இக்கட்டுரையின் முன் வைப்பு என்று கூடச் சொல்லலாம்.
கற்பித்தலும் கருவிகளும்
கற்றல்-கற்பித்தல் என்பதைப் பற்றி விரிவாகப் பேசும் பவணந்தியின் நன்னூல்
‘’ காலமும் இடனும் வாலிதின் நோக்கி / கொள்வோன் கொள்வகை அறிந்து’’-36
பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி / சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி -40
ஒரு குறிகேட்போன் இருகால் கேட்பின் / பெருக நூலில் பிழைபாடு இலனே’’ -42
முக்கால் கேட்பின் முறை அறிந்து /உரைக்கும் -43
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் / காற்கூறு அல்லது பற்றலன் ஆகும் -44
அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் / செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மைஅறு புலமை மாண்புடைத்து ஆகும். -45
எனச் சூத்திரங்களை எழுதி வைத்துள்ளது. இச்சூத்திரங்கள் கற்பிப்பவனும் கற்பவனும் எவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்தும் நோக்கம் கொண்டன. இச்சூத்திரங்களில் வலியுறுத்தப் படும் நிலைக்கேற்ப அமையும் பள்ளிகள் ஆசிரியனை அண்டிக் கற்கும் குருகுலக் கல்விமுறையாகத் தான் இருக்க முடியும். நிகழ்காலக் கல்வி உலகம் ஆசிரியரை மையமிட்ட கல்வி முறையிலிருந்து மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு நகரும் போது கற்பித்தலில் முக்கியப்பங்கு வகித்த ஆசிரியரின் இடம் கேள்விக்குறியாக ஆக்கப்படுவதும்,இடத்தைக் கருவிகள் பிடித்துக் கொள்வதும் இயங்கியல் நிலை என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இங்கே கருவிகள் என்று பன்மையில் சொன்னாலும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கருவியாக இருப்பது கணினி மட்டும் தான் .
மரபான வகுப்பறைக் கல்வியில் நீண்ட காலமாகப் பயன் பாட்டில் இருந்து வரும் கருவிகள் கரும்பலகை களும் வெண்கட்டிகளும். ஆசிரியனின் குரலால் மட்டுமே தகவல்களையும், சூத்திரங்களையும், கருத்துக் களையும், விளக்கங்களையும், வழிமுறைகளையும் சொல்லி, மாணவர்களின் மனதில் பதிய வைத்து நிலை நிறுத்த முடியாது என்ற காரணத்தால் எழுதிப் போட்டுக் குறித்துக் கொள்ளும்படி ஆசிரியர்கள் வலியுறுத்தும் பொருட்டே கரும் பல¢ சுண்ணாம்பினால் உருவாக்கப்பட்ட வெண்கட்டிகளும் பயன்பாட்டில் இருந்தன; இப்போதும் இருக்கிறது. எழுதிப் போடும் ஆசிரியரின் உடல் நலம் கருதி வண்ணப் பலகைகளும் எழுதுகோல்களும் பின்னர் பயன்பாட்டுக்கு வந்தன.பலகைகளில் எழுதிப் போட்டதற்கு முன்பு எண்ணும் எழுத்தும் மணல் பரப்பில் எழுதிப் பயிற்சி செய்யப்பட்டது.
கரும்பலகைகள் வெண்கட்டிகளின் இடத்தை அட்டைகளால் தயாரிக்கப் பட்ட அட்டவணைகளும் சுவரொட்டிகளும் நிரப்பியது கருவிசார் கல்வி நோக்கில் அடுத்த கட்ட வளர்ச்சி. நிலைத்த தன்மையிலான அட்டவணைகள், சுவ ரொட்டிகள் போன்றவைகளுக்கு மாற்றாக - மின்சாரத்தைப் பயன்படுத்திய தொழில் நுட்ப மாற்றமாக - குறிப்புப் பலகை விரிப்புக் கருவி வந்தது. பிளாஸ்டிக் தாள்களில் எழுதி விரித்து காட்டிய விரிப்புக் கருவி கரும்பலகையின் எழுதிப் போடுதல் என்பதற்கு மாறாக முன்னரே தயாரித்த பாடங்களையும் உட்குறிப்புக்களையும் நிரந்தரமாக வைத்துக் கொள்ளப் பயன்பட்டன . இவையெல்லாமே கற்பித்தல் என்னும் வினையைச் செய்யும் ஆசிரியர்களுக்கு உதவும் கருவிகள் தான்.
கருவிகள் சார்ந்த கல்வியின் வரலாற்றில் தொடர்ந்து கற்கின்ற மாணாக் கருக்கு உதவும் கருவிகள் எதுவும் வரவில்லை. அவர்கள் தங்கள் குறிப்பு களைத் தாள்களில் எழுதி வைத்தும், பிரதி எடுத்தும் மட்டுமே படித்து வந்தனர். வகுப்பறையில் கிடைக்காத தகவல்களையும் விளக்கங்களையும் தேடி நூலகத்திற்குச் செல்லவும் வேண்டியிருந்தது.
கற்பித்தல் -கற்றல் என்ற வினையில் இருசாராருக்கும் சம அளவில் பயன்படும் தொழில் நுட்பக்கருவியாக கணினி வந்துள்ளது என்பது ஒருவிதத்தில் கல்வியில் ஏற்பட்டுள்ள புரட்சி தான். புரட்சி என்பது அடித் தளத்திலிருந்து ஏற்படும் பெரும் மாற்றத்தைக் குறிக்கும் சொல். கணினி மரபான வளாகக் கல்வியின் வெளியான வகுப்பறைகளிலும்,புதிய முறை களான திறந்த நிலைக் கல்வியிலும் புதிய புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கணினி கற்பிக்கும் ஆசிரியர்களின் வேலைப் பளுவையும் கற்பித்தல் உத்தியையும் மட்டுமே மாற்றி விட்ட கருவி அல்ல. மாணாக்கர்களின் கற்றல் முறையையும் வெளிப்படுத்தும் முறையையும் மாற்றி விடும் கருவியாக ஆகிக் கொண்டிருக்கிறது.
கணினி என்னும் மந்திரப் பெட்டி
கணினி உருவாக்கும் சாத்தியப்பாடுகளையும் வெளியையும் பற்றிப் பேசும் இந்த நேரத்தில் சமகாலத் தமிழின் மிக முக்கியக் கவியான சேரன் பயன்படுத்திய அந்தச் சொற்றொடர் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.ஆறாம்திணையும் ஏழாம்திணையும் என்ற அவரது பத்தித் தலைப்பு ஆழமான உள் அர்த்தங்கள் கொண்ட ஒன்று. வாழும் நிலப் பரப்பையும் அதன் சார்புப் பகுதிகளையும் இணைத்துக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்து திணைகளாகப் பிரித்துப் பேசியவர்கள் தமிழர்கள். தமிழ் அடையாளத்தை இழந்து விடக்கூடாது என்பதில் பற்றுறுதி கொண்ட இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டுப் புலம் பெயர வேண்டிய நெருக்கடிக்கு உள்ளான போது புலம் பெயர் தேயங்களை ஆறாம் திணையாகக் கருதிக் கொண்டார்கள். அப்புலம் பெயர் தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் உசாவிக் கொள்ளவும் விவாதிக்கவும் கூடிய வெளியாக இன்று கணினியின் வெளியையே கருதுகின்றனர். அவ்வெளியையே சேரன் ஏழாம் திணை எனக் குறிப்பிட்டார்.
புலம் பெயர் தேயங்களின் நிலத்தையும் பொழுதையும் முதல் பொருளாக ஏற்றுக் கொண்டு எல்லாவகைத் தொழிலையும் செய்பவர்களாக மாறிக் கருப்பொருள் அடையாளங்களை இழந்து விட்ட அவர்களின் தாய் மண் ஏக்கமும், ஏக்கத்தின் நிமித்தமும் ஆறாம் திணையின் உரிப்பொருளாக மாறி விட்டன. அதிலிருந்து விலகிய புலம்பலும், புலம்பல் நிமித்தமும் ஏழாம் திணையின் உரிப்பொருள் எனக் கூறத்தக்க வகையில் கண்புலனாக ஏழாம் திணையின் வெளி விரிந்து விட்டது. கணினி உருவாக்கித் தந்துள்ள ஏழாம் திணைக்குள் வாழவும் பழகிக் கொண்டு வருகிறது ஈழத்துத் தமிழ் மனம். இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போர் என்னும் நெருக்கடியைச் சந்திக்காமலேயே இந்தியத் தமிழர்களும் ஏழாம் திணைக்குள் வாழ வேண்டியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். தாராளமயத்தின் தொடர்ச்சியான உலகமயம் என்னும் நெருக்கடி அதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கட்புலனாக வெளிப்பரப்பைத் தன்னகத்தே கொண்ட கணினியின் பகுதிகளை முதலில் காணலாம்.
கணினியின் பகுதிகள்
ஒருவரின் இருக்கைக்கு முன்னால் இருக்கும் மேசையில் வைத்துக் கொள்ளப்படும் தனியாள் கணினியில் மூன்று பகுதிகள் உண்டு. முதலாவது மையப்படுத்தப்பட்ட வினைபுரி அலகுப் பகுதி . ஆங்கிலத்தில் சி.பி.யூ (CPU) எனக் குறிக்கப்படும் கொள்கலன் பகுதி ஆகும். இரண்டாவது பகுதி விரித்துகாட்டும் திரவப்படிகத் திரைப் பகுதி (Monitar)யாகும். மூன்றாவது பகுதி இவ்விரண்டையும் இணைத்து இயக்கப் பயன்படும் விசைப் பலகை (Keyboard). இம்மூன்றைத் தவிர அச்சிடும் கருவி (Printer) யையும் தடையற்ற மின்சார விநியோகத்திற்கான மின்மாற்றியையும் இணைத்து வைத்துக் கொள்ளும் போது எளிமையான கணினி அலகு முழுமையாகி விடுகிறது. அச்சிடும் கருவியைத் தவிர்த்த முதன்மையான மூன்றையும் இணைத்து ஒரே கருவியாக வந்து விட்டது மடிக்கணினி. ஓர் ஆசிரியரின் பயணப் பெட்டிக்குள் மடித்து வைத்துக் கொள்ளும் மடிக் கணினியோடு மின்சாரச் சேமிப்புக் கலனையும் இணைத்துக் கொள்ள வேண்டும். மின் வசதி உள்ள இடத்தில் நேரடி மின்சாரம் மூலமும், மின்சார வசதி இல்லாத இடத்தில் மின்சேமிப்புக் கலன் மூலம் அதை இயக்கலாம்.
மடிக் கணினியோ அல்லது தனியாள் கணினியையோ சொந்தமாக்கிக் கொள்ளும் ஒர் ஆசிரியர் தனது பயன் பாட்டிற்கெனக் குரல் பதிவானையும் (Voice Recorder), பிரபஞ்சத் தொடர் பேருந்து (USB) என அழைக்கப்ப்படும் எழுதுகோல் சேமிப்பானையும் (Pen Drive) வாங்கி வைத்துக் கொண்டால் நூலகம், வகுப்பறை, தேர்வுக் கூடம் என அனைத்திலும் நவீனத்தொழில் நுட்பத்தின் உதவியோடு கற்பிக்கும் தொழிலைச் செய்து விட முடியும். ஆசிரியரின் நேரடி வருகை இல்லாமலேயே கூட இக்கருவிகள் அவரது இடத்தை நிரப்பி விடும் தன்மை கொண்டவை. கணினியின் திரவப் படிகத் திரை வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையின் மாற்று வடிவமாக விளங்கத் தக்கது. அதனை இணையத்தின் மூலம் இணைத்து விடும் நிலையில் அதுவே ஒரு நூலகம். சாதாரண நூலகம் அல்ல உலக நூலகங்கள் அனைத்தோடும் இணைத்துக் கொள்ளும் மாபெரும் நூலகம். அந்நூலகத்தில் அச்சிட்ட நூல்கள் மட்டுமே கிடைக்கும் என்பதில்லை. குரல் வடிவ நூல்களும் காட்சி வடிவ நூல்களும் கூடக் கிடைக்கின்றன.
அ.ராமசாமி, திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மாணாக்கர் களுக்கு ஒருமுலை இழந்த திருமாவுண்ணியின் கதை இளங்கோவடிகள் தொடங்கி இந்திரா பார்த்த சாரதியின் கொங்கைத் தீ, ஜெயமோகனின் கொற்றவை வரை அடைந்துள்ள மாற்றத்தைச் சொல்வதற்காகத் தயாரித்த பாடக் குறிப்புகளை எந்தப் பல்கலைக்கழகத்திலும் கல்லூரியிலும் பயன் படுத்தலாம். இப்போதுள்ள கற்பித்தல் முறையில் வல்லுநர்களை வரவழைத்து அவரிடம் பாடம் கேட்கும் முறைக்கு மாறாக, இணையவழி வகுப்பறைகளில் வல்லுநரும் மாணாக்கரும் இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்து கொள்ளலாம். பாடம் நடத்தலாம்; பங்கேற்கலாம். தேர்வு எழுதலாம்; மதிப்பீடு செய்யலாம்.
தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களாகவும் வல்லுநர்களாகவும் விளங்குபவர்களின் குறிப்புகளைக் குரல் பாட மாகவும், நகரும் காட்சிப் படிமங்களாகவும் மாற்றி விட்டால், அவரது இன்மைக்குப் பின் வரும் அடுத்த தலைமுறை மாணவனும் அவரிடம் பாடங்கேட்க முடியும். இத்தகைய சாத்தியங்களை வழங்கும் நவீனத் தொழில் நுட்பத்தை வேண்டாம் என்று மறுப்பதன் மூலம் இலக்கியக் கல்வியையும் இலக்கிய மாணாக்கர் களையும் பின் நோக்கிய பயணத்திற்குத் தூண்டும் வேலையை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமா..? என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பின்னோக்கி நடப்பதில் சாதனைகள் நடத்தி உலக சாதனைகளைப் பதிவு செய்யும் நூல்களில் தங்கள் பெயர்களைத் தனி நபர்கள் பதிவு செய்து கொள்ளட்டும். ஒரு சமூகம், மொழி சார்ந்த பண்பாட்டுக் குழுமம் அப்படிப் பட்ட சாதனைகளைச் செய்ய வேண்டியதற்கான அவசியங்கள் எவையும் இல்லை.
கற்க வேண்டிய கணினிப் பாடங்கள்
நவீனத் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலக்கியக் கல்வியைக் கற்பிக்க விரும்பும் ஆசிரியருக்குத் தெரிய வேண்டிய கணினிப் பாடங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலானவை தான். பாடங்கள் அல்லது மென் பொருட்கள் என அவற்றைக் குறிப்பிடுகிறார்கள். மைக்ரோசாப்ட் என்னும் மென் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரால் அழைக்கப்படும் அலுவலப் பணிசார் வார்த்தை (Microsoft office word) என்னும் மென்பொருள் அவற்றுள் முதன்மையானது. அம்மென் பொருள் காலத்தின் தேவைக் கேற்ப அவ்வப்போது புதுப்பிக்கப் பட்ட பதிப்புகளாக விற்பனையில் உள்ளன. ஒருவரின் தேவையை யொட்டி எந்தப் பதிப்பு தேவையோ அதனை வாங்கித் தனது சொந்த உபயோகக் கணினியில் பதிவு செய்து கொள்ளலாம்.முதலில் விண்டோஸ் என அழைக்கப்பட்ட அந்த மென்பொருள் தற்போது விண்டோஸ் எக்ஸ்பி என்ற மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பாகக் கிடைக்கிறது.முதல் தலைமுறைக் கணினி என்பதில் தொடங்கி வரிசையாகக் கற்க வேண்டும் என்ற தேவை இல்லை. நேரடியாக சமீபத்திய தலைமுறைப் பதிப்புக்கே போய் விடலாம். கணினிக் கல்வியில் எப்போதும் வரிசைக் கிரமம் பின் பற்றப்படுவதில்லை. அண்மைக்காலப் பதிப்பே அதற்கு முக்கியம்.
கற்பித்தலில் தொடக்க நிலைக் கூறாக இருப்பது எண்ணும் எழுத்தும் என்பதை நாமறிவோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது பழைய வாக்கியம். இவ்வடிப்படைக் கூறுகள் இரண்டும்¢ அலுவலப் பணிசார் வார்த்தை என்ற மென் பொருளில் இருக்கின்றன. பல கூறுகள் கொண்ட அம்மென் பொருளில் ஒரு சில கூறுகளை மட்டும் ஒரு மொழி ஆசிரியன் கற்றுக் கொண்டால் போதும். கணினிக் கல்வியில் மைக்ரோசாப்ட் வேர்ட் என அழைக்கப்படும் கூறு அடிப்படையானது. அலுவலகப் பயன்பாட்டில் உள்ள கடிதங்கள், வரைவுகள், தயாரிப்பதற்கான இந்தக் கூறு ஆசிரியனின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்வதாக இருக்கிறது. குறிப்புகள், பாடங்கள். கட்டுரைகள், என எழுதித் தனித்தனிக் கோப்புகளில் சேமித்து வைத்துக் கொள்ள இந்த மென் பொருள் பயன்படும். இதன் தொடர்ச்சியாக உள்ள மைக்ரோசாப்ட் எக்ஸல் என்னும் கூறு எண்சார் கணித ஆசிரியர்களுக்கும், கணக்குப் போடுபவர்களும் பயன்படும் பகுதியாக உள்ளது. அதையும் கற்று வைத்துக் கொண்டால் ஆசிரியப் பணியோடு நிர்வாகப் பணியையும் சேர்த்துச் செய்யலாம்.
மைக்ரோசாப்ட் அலுவலக வார்த்தை என்னும் மென்பொருளில் இருக்கும் இன்னொரு கூறு சக்தி மையம் - பவர் பாயிண்ட் - என அழைக்கப்படுகிறது. இந்த கூறும் கறபித்தல் -கற்றல் வினையில் முக்கியப் பங்காற்றும் தன்மை கொண்டது. கரும்பலகையில் எழுதிப் போட்டுப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக வண்ண வண்ண எழுத்துக்களோடும் படங்களோடும் கூடிய பாடங்களை வெண் திரையில் வழங்கலாம். தேவையான கால அளவில் நிறுத்தித் தங்கள் விருப்பம் போலப் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பாடம் நடத்தலாம். அல்லது ஒவ்வொரு பக்கமும் இத்தனைக் கால அளவிற்குத் தெரிய வேண்டும் என முடிவு செய்து நகர்த்தும் வாய்ப்புகளும் உண்டு. நகரும் குறிப்புகளுக்கேற்ற விளக்கங்களை ஆசிரியர் நேரடியாக இருந்து விளக்கவும் செய்யலாம். அல்லது அவற்றைக் குரலாகப் பதிவு செய்துவிட்டு இயக்கவும் செய்யலாம்.
மைக்ரோசாப்ட் அலுவலக வார்த்தைகள் என்ற அடிப்படை மென்பொருளைக் கற்கும் போதே அதன் முதல் கூறான மைக்ரோசாப்ட் அலுவலகக் கருவிகள் (Microsoft office Tools) என்பதையும் கற்றுக் கொள்ள முடியும். ஒரு புத்தகத்தைப் படிப்பவன் அல்லது குறிப்பேட்டில் எழுதுபவன் செய்யும் வேலைகளான ஆரம்பிப்பது, முடிப்பது, விரிப்பது, பக்கங்களைப் புரட்டுவது, அடிக்கோடிட்டுக் கொள்வது, அடித்துத் திருத்துவது, போன்ற பணிகளையெல்லாம் கணினியில் செய்வதற்கான வழிகளைச் சொல்லித் தருவதுதான் மைக்ரோசாப்ட் கருவிகள் என்னும் பகுதியின் பாடங்கள். கோப்பு, வெட்டு, பார்வை, நுழைப்பு, அமைப்பாக்கம், உள்கருவிகள், கட்டங்கள், அட்டவணைகள், திறப்பு, உதவி என்ற தலைப்புகளில் விரியும் அதன் பாடங்கள் கணினி இயக்கத்தின் அடிப்படைகள். அவ்வடிப்படைகளின் பகுதியாகவே ஒட்டு, நகர்த்து, கட்டமிடு, பெருக்கு, சுருக்கு,எண்ணிடு, வரிகளிடை வெளியை விரி, சேமித்து வை என்ற ஆணைக¬ளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படைகளையெல்லாம் தனியாகக் கற்றுக் கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டும் என்பதும் இல்லை. கடிதம் எழுதுதல், கட்டுரை எழுதுதல் என்ற நிலையில் தொடங்கி, அதன் பகுதியாகவே இவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.ஒரு கட்டுரையில் தலைப்பிடுதல், வண்ணமிட்டுக் காட்டுதல், சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்துதல், தவறுகளைத் திருத்துதல், அடிக் குறிப்பிடுதல் என வடிவம் சார்ந்த பணிகளின் போதும், அச்சிட்டுப் பிரதியைப் பெறுதல் என்ற பணி நிறைவின் போதும் இந்தக் கருவிகள் சார் பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.
மைக்ரோசாப்ட் அலுவலக எழுத்து என்ற அடிப்படைப் பாடத்தைக் கற்பதோடு தகவல் பதிவுகளைச் செய்ய உதவும் இன்னொரு மென்பொருளாக உள்ள பக்கவடிவமைப்பு (Page Maker) என்ற மென் பொருளைக் கற்றுக் கொள்வதும் கூடுதல் பலன் அளிக்கும். மைக்ரோசாப்ட் என்பதைப் போல அடோப் என்ற மென்பொருள் நிறுவனம் தயாரித்துள்ள (Adobe Page Maker) இதில் அதிகம் புழக்கத்தில் உள்ளது. நூல்களின் பக்க அமைப்பு, வடிவ அமைப்பு,இதழ் உருவாக்கம் போன்றவற்றில் இந்த மென் பொருள் அதிகம் பயன்படுகிறது. இதனோடு வரைகலை பற்றிய மென்பொருளையும் ஆசிரியர்களும் மாணாக்கர் களும் கற்றுக் கொள்வது கூடுதல் சாத்தியங்களைத் தரும்.
இப்போதைய கணினிச் சந்தையில் குறுந்தகடுகளில் பதிவு செய்யப் பட்ட தமிழ் இலக்கியப் பகுதிகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உங்கள் கணினியில் பதிவு செய்து நூலகமாக மாற்றிக் கொள்ளலாம். திரைப்படக் குறுந்தகடுகளைப் போலவே இலக்கியக் குறுந்தகடுகள் அதிகம் விற்பனை ஆவதில்லை என்பதால் அதனை உற்பத்தி செய்பவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. பாரதியார் கவிதைகள், பக்தி இலக்கியங்கள், போன்றன குரல் பாடங்களாகக் கிடைக்கின்றன.
தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் அடிப்படை நூல்கள் அனைத்தும் குறுந்தகடுகளாக ஆக்கப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால் இவை அனைத்தும் இப்போது வலைத்தள நூலகங்களில் சேமிக்கப்பட்டு விட்டன. அச்சேமிப்பதிவிலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால், தனியாகக் குறுந்தகடுகளை வாங்கிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. கனேடிய இலக்கியத்தோட்டம் வழங்கும் சுந்தரராமசாமி விருதைத் தனது தமிழ் தகவல் தொழில்நுட்பச் சேவைக்காகப் பெற்றுள்ள முனைவர் கல்யாணசுந்தரத்தின் மதுரைத்திட்டம் கணினிக்குள் தமிழ் இலக்கியப் பகுதிகளை உள்ளிடும் வேலையைப் பாஷா இண்டியா என்ற அமைப்பிற்காகச் செய்துவருகிறார். தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் தொடங்கிச் செவ்வியல் இலக்கியங்களும், பக்திக் கவிதைகளும், காப்பியங்களும், வலைத்தள நூலகங்களில் கிடைக்கின்றன. இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ச்சியாக உள்ளீடு செய்யப்பட்டு வாசிக்கக் கிடைக்கின்றன. தற்கால இலக்கியவாதிகளிடம் உரிமம் பெறும் சிக்கலால் உள்ளீடு செய்வதில் தடங்கல் ஏற்படுவதாகத் தெரிகிறது.
இணையத்தளம் என்னும் ஏழாம் திணை
இவைகளையெல்லாம் பயன் படுத்த வேண்டும் என்றால் அலுவலகப் பயன்பாடு அல்லது பக்க அமைப்பு என்ற அடிப்படை மென்பொருளோடு அவசியமாக இன்னொரு மென் பொருளையும் கற்றுக் கொள்ள வேண்டும். இணையதள இயக்கத்திற்கான மென் பொருளே அது. இப்போது அதிகம் புழக்கத்தில் உள்ள இண்டெர்னெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) வழியாக இணையத்திற்குள் நுழைவது எளிமையானது. இதன் பயன்பாட்டைக் கற்றுக் கொள்ளும் போது , உலகத்தின் எந்த மூளையில் உள்ளவர்களோடும் உடனடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அதைவிடவும் இணைய வலைத் தளங்களில் கொட்டிக் கிடைக்கும் நூலகங்களைப் பயன்படுத்தவும், நமது பாடங்களையும் கட்டுரை களையும் அவற்றில் ஏற்றிப் பொதுத்தளத்திற்கு அனுப்பவும் முடியும்.
இணைய வசதி கொண்ட கணினி உங்களிடம் இருந்தால் நீங்கள் விரும்பும் தினசரியை வாசிக்கலாம். வார இதழையும் படிக்ககலாம்.இசைக்கச்சேரிகளைக் கேட்கலாம். திரைப் படங்களைப் பார்க்கலாம். தமிழில் வரும் இடைநிலைப் பத்திரிகைகளையும் இலக்கியச் சிறுபத்திரிகைகளையும் சில வலைத்தளங்கள் தொகுத்து அளிக்கின்றன. கீற்று, பதிவுகள், திண்ணை, தமிழ்நாதம் போன்ற தமிழ் வலைத்தளங்களின் இணைப்பாகப் பல தினசரிகளும் வார, மாத இதழ்களும், இணைய இதழ்களும் இருக்கின்றன.துறை சார் ஆய்வு இதழ்களின் இணைப்புகளும் கூடக் கிடைக்கின்றன. இவையெல்லாமல் இன்று பலரும் தங்களுக்கென வைத்திருக்கும் தனி இணைய இதழ்கள், வலைப்பூக்கள் தமிழின் இடத்தை இணையத்தில் விரிவு படுத்தி விட்டன. தனி நபர்கள் தினசரி எழுதும் கட்டுரைகளை வாசிக்கும் வாசகன் உடனடியாகத் தனது விருப்பமான எழுத்தாளனோடு கடிதம் மூலமும், குரல் மூலமும் தொடர்பு கொள்ளும் வசதிகள் இணைய வழியில் உள்ளன. பின்னூட்டங்கள் வழியாக விவாதங்களைத் தொடரலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுத்துருக்கள் சார்ந்த சிக்கலைச் சந்தித்து வந்த தமிழ்மொழி இப்போது அந்தப் பிரச்சினையிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுனிகோட் என்னும் தமிழ் விசைப்பலகைப் பரவலாக உள்ள தமிழ் எழுத்துருக்களை மாற்றித் தரும் வல்லமை உடையதாக இருக்கிறது. ஏறத்தாழ பதினைந்து எழுத்துருக்களை மாற்றித் தருகிறது யுனிகோட். பாமினி, அமுதம், இளங்கோ,இண்டோடைப், கெய்மேன், டாம், டாப், அஞ்சல், முரசு, விகடன், தினமணி, தினபூமி, தினகரன், குமுதம்,வெப்உலகம்,பல்லவர்,லிபி, டிஎஸ்சி, ¢டிசிஐஐ- இணைமதி, அருள்மதி, முதலான எழுத்துருக்களை யுனிகோட் அதன் வழியாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்காலக் கணினியில் யுனிகோட் விசைப்பலகை பொருத்தப்பட்டால் எல்லாத் தமிழர்களும் அது ஒன்றையே பயன்படுத்தும் நிலை உருவாகும். அப்படியான நிலையை உருவாக்குவதில் அரசுகளின் பங்கு கட்டாயம் இருக்க வேண்டும். தமிழர்கள் வாழும் தேசங்களான மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள் இணைந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.
இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் கூகுள் (Coogle) என்ற இணைய தளம் உலக அறிவு அனைத்தையும் கணினிக்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது. ஆங்கிலத்தில் அதன் பக்கங்கள் லட்சக்கணக்கிலா, கோடிகளின் எண்ணிக்கையிலா என யாரும் கணக்கிட்டு விட முடியாது. கணந்தோறும் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கின்றன. எண்ணிக்கையிலடங்கா பக்கங்களில் விரிந்து கிடக்கின்றது கணினியின் உலகம். ஒவ்வொரு தமிழனும் தனக்கான வெளியையும் கோப்புகளையும், பக்கங்களையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். தாங்கள் விரும்பினால் அவ்வளவு விசயங்களை உருவாக்கிப் பதிவு செய்யலாம். தடையற்ற அந்த வெளியைத் தான் கண்ணுக்குப் புலப்படா ஏழாம் திணை எனக் குறிப்பிட வேண்டியுள்ளது.
மழலையர் பள்ளிக்கல்வியை முடித்த சிறார்கள் தங்களுக்கான விளையாட்டுக் களைத் தேடி இணையத்தளங்களுக்குள் பயணம் செய்கிறார்கள். பிடித்துப் போன விளையாட்டைப் பதிவிறக்கம் செய்து தனிக் கோப்பில் வைத்து அலுத்துப் போகும் வரை விளையாண்டு முடிக்கிறார்கள்.அறிவை மட்டும் அல்ல; மனிதனின் நினைப்பையும் விருப்பத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் பணியைத் தலையாய வேலையாகச் செய்து வரும் கூகுள் தமிழ்ப் பதிவுகளைத் தமிழிலேயே தேடும் வாய்ப்பை உண்டாக்கித் தந்துள்ளது. இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்தபடியாகத் தமிழுக்குத்தான் அந்த முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
இன்று தமிழை முதன்மைப் பாடங்களாக எடுத்துக் கற்கும் மாணாக்கரின் இலக்கு ஆசிரியராக ஆவது என்பதாக மட்டுமே இருக்கிறது. தமிழ்க் கல்வியின் பகுதிகளாக மொழிப் பயன்பாட்டில் தேர்ச்சி, இலக்கியப் படைப்பாக்கத்தில் ஈடுபாடு, பண்பாட்டுப் போக்கின் மீதான புரிதல் , தமிழக வரலாற்றின் இயங்குநிலையைக் கணிப்பதில் தெளிவு ஆகியனவற்றைப் பெற்றுக் கொள்ளும் தமிழ்க் கல்வியாளன் ஆசிரியத் தொழிலை மட்டுமே இலக்காகக் கொள்ள வேண்டியதில்லை என்று உறுதியாகக் கூறலாம். கணினிப் பயன்பாட்டின் அடிப்படைகளோடு இவற்றைக் கற்றுத் தரும் பாடத்திட்டம், அவர்களுக்கு தமிழ் பயன்படு புலமாக இருக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஏராளமான வேலைகளைத் திறந்து விடும் என்பதை அனைவரும் அறிவர். ஊடகத்துறைகளில் மட்டும் அல்ல. பதிப்புத்துறை, விளம்பரத்துறை, பதிவுகள் துறை, படியெடுத்தல் துறை, தகவல்களை உள்ளீடு செய்யும் வேலைகள் எனப் பலவும் தமிழ்க் கல்வியாளர்களை முதன்மையாக வேண்டுவன தான்.தமிழ்க் கல்வியைக் கற்பவர்கள் இவைகளை யெல்லாம் அறியாமல் அல்லது ஈடுபாடு காட்டாமல் கற்றுச் சொல்லிகளாக இருக்கும் ஆசிரியத் தொழிலையே முதன்மை இலக்காகக் கொள்கின்றனர்.
மொழி பெயர்ப்பின் அடிப்படைகள் தெரிந்திருந்த போதிலும் பிற மொழி அறிவின் அடிப்படைகளைக் கூடக் கற்க வேண்டாம் என நாம் தவிர்த்து விட்ட நிலையில் மொழி பெயர்ப்புப் பணிகள் அனைத்தும் பிறதுறைப் படிப்பாளிகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. துறைசார் மொழிபெயர்ப்பு களுக்கு அவ்வத்துறைப் புலமையாளர்களோடு சேர்ந்து பணியாற்றும் அளவுக்காவது மொழிக் கல்வியாளர்கள் பிறமொழிகளின் அறிவை - குறிப்பாக ஆங்கில மொழியறிவைப் பெற்றாக வேண்டும்.
இலக்கியக் கல்வியின் எதிர்காலமும், இலக்கிய மாணவனின் எதிர்காலமும் முறையான நோக்கங்களைக் கொண்ட பாடத் திட்டங்களோடு தொடர்பு டையவை என்பதை நாம் நம்ப வேண்டும். அப்பாடத் திட்டங்களை முறையாகக் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஈடுபாடு குறைந்தால் பாடத்திட்டம் எதனையும் சாதித்து விடாது. ஈடுபாடு கொண்ட ஆசிரியர்கள் தங்களின் பணிகளுக்கென அடிப்படையான தொழில் நுட்ப அறிவையும் இணைத்துக் கொள்ளும் போது அதன் சாத்தியங்கள் விரிவான எல்லைகளுக்குள் பயணம் செய்யும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.
இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கலைச்சொல் அகரவரிசை
அச்சிடும் கருவி -Printer
அட்டவணைகள் -Table
அமைப்பாக்கம்- Format
அலுவலப் பணிசார் வார்த்தை - Microsoft office word
அறி- Know
அறிவு - Knowledge
அறிவியல் -Science
இணையம் -Internet
இணைய நூலகம் -E -Library
இணைய பாடம் E-Lesson உதவி-Help
இண்டெர்னெட் எக்ஸ்புளோரர் -Internet Explorer
உள்கருவிகள்-Tools
கட்புலனாகா வெளி -Virtual Space
கரும்பலகை வெண்கட்டி- Black board and chalk piece
குரல் பதிவான் -Voice Recorder
குறிப்புப் பலகை விரிப்புக் கருவி-Slide projector
குறுந்தகடு-Compact Disc
கூகுள் - Coogle
கோப்பு -File
சமூக அறிவியில்- Social Sciece
சாளரம் - Window
தடையற்ற மின்சார விநியோகம் (UPS) -Un interrepted Power Supply
தனியாள் கணினி- Personal Computor
திரைப் பகுதி -Monitar
திறப்பு -Start
நுழைப்பு -Insert
பக்கவடிவமைப்பு -Page Maker
பதிவிறக்கம்- Download
படிகத்திரை விரிப்பு- liquid crystal display projector
பார்வை-View
பாடத்திட்டம் -Syllabus
பாட நூல்கள்-Text books
பார்வை நூல்கள்-References
படிக்க வேண்டிய நூல்கள்- Further Readings
பிரபஞ்சத் தொடர் பேருந்து (USB) -Universal Serial Bus
பின்னூட்டங்கள் - Comments and Addisions
எழுதுகோல் சேமிப்பான் - Pen drive
மடிக் கணினி- Desk Top Computor
மையப்படுத்தப்பட்ட வினைபுரி அலகு -(CPU) - Central Processing Unit
வகுப்பறைக்கல்வி -Class room teaching
வலைத்தள இணைப்புகள் -Links
விசைப்பலகை- Keyboard
வெட்டு- Cut
வெளி வளாகக் கல்வி -Off Campus Education
யுனிகோட் –Unicode

பின் இணைப்புகள்
பாஷா இண்டியா என்னும் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவை

___________________________________________________________________________

ஆபீஸ் 2003 சிறப்புகளும் பயன்களும் விண்டோஸை வெளியிட்டு வெற்றிபெற்ற மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் அதைத் தொடர்ந்து எம்எஸ்ஆபிஸ் தொகுப்பையும் வெளியிட்டது. எளிதான பயன்பாடு, மற்றும் சுலபமான ஆப்ஷன்கள் என்று பலவற்றை உள்ளடக்கிய எம்எஸ் ஆபிஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று எம்எஸ் ஆபிஸ் தொகுப்பை பயன்படுத்தாத வர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த எம்எஸ் ஆபிஸின் பயன்பாடுகள் அனைத்தும் தற்போது ஆபிஸ் 2003 என வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆபிஸ் 2003 மற்றும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை தற்போது முழுக்க முழுக்க தமிழிலேயே இயக்கிக்கொள்ளலாம். இதன் கட்டளைகள், மெனுக்கள் மற்றும் பயன்பாட்டு முறைகள் அனைத்தையும் மைக்ரோ சாஃப்ட் தற்போது தமிழிலேயே அமைத்துள்ளது. தமிழில் ஆபிஸ்2003-யில் டைப் செய்ய லதா எழுத்துருவை நாம் தேர்வு செய்திருந்தாலே போதும். மேற்கூறிய அனைத்து அப்ளிகேஷன் களிலும் தமிழில் டைப் செய்துகொள்ளலாம். எம்எஸ் ஆபிஸ் தொகுப்பில் ஐந்து சாஃப்ட் வேர்கள் உள்ளடங்கியுள்ளது. அவை 1. எம்எஸ் வேர்டு 2. பவர்பாயின்ட் 3. எம்எஸ் எக்சல் 4. எம்எஸ் ஆக்சஸ் 5. ஃபிரன்ட்பேஜ் எடிட்டர்
எம்எஸ் வேர்டு எம்எஸ் வேர்டில் டாக்குமென்டை டைப் செய்ய, அதை எடிட் செய்ய, புகைப்படங்களை உள்ளீடு செய்ய, ப்ளோசார்ட், பேனர்ஸ், டேபிள், ஃபான்ட்களுக்கு விதவிமான வண்ணங்கள் கொடுக்க , ஏரோக்கள், கால்அவுட்ஸ் போன்றவற்றை வரைய என்று பலவித ஆப்ஷன்களை இது உள்ளடக்கியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு தேவையான ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை அழகாக டைப், லேஅவுட் செய்து கொடுப்பதற்கும் எம்எஸ் வேர்டு ஒரு வலிமையான சாஃப்ட்வேர் ஆகும். மேலும் இதைக் கொண்டு ஒரு புத்தகம் அச்சிடும் அளவுக்கு இதில் நாம் லேஅவுட் செய்து கொள்ள முடியும்.
கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பு டைப்ரைட்டர் மிஷினைக் கொண்டே ப்ராஜெக்ட் ரிப்போர்ட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இதில் நேரம் அதிகம் செலவாகும். அதே போல் அழகாகவும் நாம் நினைத்தவாறும் செய்ய முடியாது. எம்எஸ் வேர்டில் நாம் நினைத்தவாறு பக்க வடிவமைப்பை கொண்டு வர முடியும். மேலும் நாம் டைப் செய்து சேமித்து வைத்த ப்ராஜெக்ட்டை நினைத்தபோது மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
டைப் செய்த ஆங்கில வார்த்தைகளின் ஏதேனும் இலக்கணப் பிழையோ அல்லது சொற்பிழையோ நம்மை அறியாமல் ஏற்பட்டால் உடனே அந்த வார்த்தைகளை அடிக்கோடிட்டு காட்டும். அடிக்கோடிட்ட இடத்தை மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்தால் அந்த இடத்திற்குரிய பலவகையான வார்த்தை அமைப்புகளை காட்டும். அதில் நமக்கு தேவையானதை செலக்ட் செய்து கொள்ளலாம். மற்ற எந்த சாஃப்ட்வேரிலும் இந்த பயன்பாடு கிடையாது.
ஏற்கனவே டைப் செய்த டாக்குமென்ட்டில் உள்ள சொற்பிழைகள் மற்றும் இலக்கணப்பிழைகளை கண்டுபிடித்து நீக்குவதற்கு கிராமர் (spelling & grammer) ஆப்ஷனை செலக்ட் செய்யலாம். அல்லது F7 கீயை பயன்படுத்தி விரைவாக இயக்கலாம். வேர்டில் நாம் சேமிக்கும் ஃபைல்கள் .doc என்ற ஃபார்மெட்டில் சேமிக்கப்படும்.
பவர் பாயிண்ட் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பில் அனிமேஷன் எபெக்ட்ஸ்கள், ஒலி அமைப்புகள் மற்றும் கண்ணைக் கவரும் கிராபிக்ஸ் காட்சிகளை உள்ளடக்கிய சாஃப்ட்வேராக பவர் பாயிண்ட் விளங்குகிறது. இதில் ப்ரசன்டேஷன் பணிகளை மிக எளிமையாக செய்ய முடியும்.
ஒரு நிறுவனம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, அதன் படிப்படியான வளர்ச்சி, அதில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள், அதன் தற்போதைய நிலவரம் போன்ற அனைத்து விபரங்களையும் பவர்பாயிண்டில் மிக எளிமையாகவும், கண்ணைக்கவரும் ஒலி, ஒளி அமைப்புடன் அழகாக செய்யலாம். வேர்டு டாக்குமென்டில் இந்த வசதி கிடையாது.
அனிமேஷன் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட டெக்ஸ்டின் மேல் மவுஸ் சென்றால் அதற்கு ஒலி அமைப்புகளை கொடுத்துக் கொள்ள முடியும். பவர் பாயிண்ட் உள்ளேயே நிறைய சவுண்டு ஃபைல்கள் உள்ளது. புதிதாக ஏதேனும் சவுண்டு ஃபைலை சேர்க்க வேண்டுமென்றால் இம்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி சவுண்டு ஃபைலை சேர்த்துக் கொள்ள முடியும்.
பவர் பாயிண்ட்டின் உள்ளேயே பல வகைகளில் கிளிப் ஆர்ட்கள் உள்ளது. டெக்ஸ்டிற்கு ஏற்றவாறு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக கிளிப் ஆர்ட்களை பயன்படுத்த வேண்டுமென்றால் இம்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் உள்ள ஸ்லைடு ஷோ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் உள்ள வியூ ஷோ என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் ஃபுல் ஸ்கிரின் மோடுக்கு நாம் செய்த பணிகள் வந்து விடும். ஒவ்வொரு முறை மவுஸின் மூலம் கிளிக் செய்து அடுத்தடுத்த பக்கத்திற்கு போகலாம். ஸ்லைடு ஷோவை F5 கீயை அழுத்தியும் விரைவாக இயக்க முடியும். பவர் பாயிண்டில் சேமிக்கப்படும் ஃபைல்கள் ppt என்ற ஃபார்மெட்டில் சேமிக்கப்படும்.
எக்சல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பெயர், முகவரி, அவர் வாங்கும் சம்பளம் போன்ற அனைத்து விபரங்களையும் மைக்ரோசாஃப்ட் எக்சலில் பதித்து உரிய நேரத்தில் குறிப்பிட்ட தொழிலாளர்களின் தேவைப்படும் விபரங்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பெயர், முகவரி, அவர் வாங்கும் சம்பளம் போன்ற அனைத்து விபரங்களையும் மைக்ரோசாஃப்ட் எக்சலில் பதித்து உரிய நேரத்தில் குறிப்பிட்ட தொழிலாளர்களின் தேவைப்படும் விபரங்களை எடுத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலும் கணக்கு சம்பந்தமான பணிகளை எளிமையாக செய்ய எக்சல் பெரிதும் பயன்படுகிறது. ஒரு நிறுவனத்தில் மாதம் மொத்தம் எவ்வளவு தொகை செலவாகியிருக்கிறது. மீதம் எவ்வளவு இருக்கிறது. செலவிடப்பட்ட தொகைக்கான சதவீதம் போன்ற அனைத்து விபரங்களையும் சில நொடிப்பொழுதில் கொண்டு வந்து விடலாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்து கணக்கு சம்பந்தமான பணிகளை மிக எளிமையாக குறைந்த நேரத்தில் முடித்து விடலாம். கால்குலேட்டரை வைத்து பயன்படுத்துவதை விட இதில் விரைவாக பயன்படுத்த முடியும்.

ð¤ù¢ Þ¬í𢹠2. ஆபீஸ் 2003யை முழுமையாக தமிழிலேயே பார்வையிட
உலக அரங்கில் அலுவலக பயன்பாட்டில் ஆபீஸ் எக்ஸ்பி மென்பொருள் இல்லையேல் எதுவுமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இம்மென்பொருள் அலுவல் பணிக்கு நூறு சதவீத தேவை என்ற மாற்றம் உருவாகியுள்ளது. எம்எஸ் வேர்ட், பவர்பாயிண்ட், எக்ஸல் ஆகிய மூன்று பிரதான மென்பொருட்களை உள்ளடக்கியதே ஆபீஸ் எக்ஸ்பி ஆகும். இதன் புதிய வெளியீடான ஆபீஸ் 2003யின் மெனுக்கள், கட்டளைகள், கேள்விகள் மற்றும் உதவிகளையும் தமிழிலேயே கணினியில் இயக்கலாம்.
ஆபீஸ் 2003 மென்பொருளை நம் கம்ப்யூட்டரில் பொருத்தினால் அதன் அனைத்து பகுதிகளும் ஆங்கிலத்திலேயே தோற்றமளிக்கும். ஆங்கிலத்தில் தோற்றமளிக்கும் ஆபீஸ் 2003-யை அப்படியே தமிழில் மாற்றிக் கொள்ளலாம். அதன் மெனுக்களையும், கட்டளைகளையும் தமிழில் மாற்றுவது எப்படியென பார்ப்போமா?
ஆபீஸ் 2003 நம் கணினியில் பொருத்தியவுடன் தமிழில் மாற்றிட www.bhashaindia.com இணையத்தளத்திலுள்ள “தமிழ்” பகுதியை தொடர்பு கொள்ள வேண்டும். தமிழ் பகுதியில் “Download Office LIP” என்ற மெனுவை கிளிக் செய்தால் பல இந்திய மொழிகளின் பட்டியல் தோற்றமளிக்கும். இதில் நமக்கு வேண்டிய தமிழ் மொழியை Get it now என்ற கட்டளையை கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும். இதன் அடுத்த பகுதியாக நம்முடைய சொந்த குறிப்புகளை கேட்டு கேள்வியெழுப்பும். இதனை பூர்த்தி செய்வதால் நமக்கு bhashaindia தளத்தின் புதிய தகவல்களும், மைக்ரோ சாஃப்ட்டின் புதிய தயாரிப்பு தகவல்களும் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
இதன் அடுத்த கட்டத்தில் நமக்கு இலவச டவுன்லோடாக “லேங்குவேஜ் இன்டர்பேஸ் பேக்” அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள LIP.EXE & TAMIL-GS.EXE ஆகிய இரு பைல்கயையும் டவுண்லோட் செய்ய வேண்டும். நாம் ஆபீஸ் 2003 பொருத்திய கணினியில் இந்த “ஆபீஸ் லேங்குவேஜ் இன்டர்பேஸ் பேக்” -இன் இரு பைல்களையும் முதல்கட்டமாக இயக்கவேன்டும், இதன்பின் விண்டோஸின் ஸ்டார்ட் (start) மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் (All Programs) பகுதியில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பொருத்திருக்கும் தொகுப்பு பட்டியலை பார்க்கவேண்டும். தொகுப்பு பட்டியலில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் டூல்ஸ் என்ற பகுதியில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்2003 லேங்குவேஜ் செட்டிங்ஸ் மெனுவை இயக்கிவுடன் புதிய மெனு தோற்றமளிக்கும். இம்மெனுவில் யூசர் இன்டர்பேஸ் அண்டு ஹெல்ப் தேர்வு செய்யப்பட்டவுடன் டிஸ்ப்ளே ஆபீஸ் 2003 இன் தமிழ் என்ற பகுதியில் தமிழ் என்பது தழிலேயே தோற்றமளிப்பதை கிளிக் செய்து தேர்வு செய்யவேண்டும். இத்துடன் தமிழில் ஆபீஸ்2003 யை தமிழில் இயக்குவதற்கான பணி முடிந்தது.
.

ð¤ù¢ Þ¬í𢹠3

“?????????? ??????? ????????????? ???????” இது ஒரு உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.
எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகலாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.
மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிழ்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்.
மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்திருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான என இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகிறோம்.
தமிழ் இலக்கியக்களின் சரித்திம் மிக பழமையானது. முதற் சங்க கால நூல்கள்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்ட சங்க கால நூல்கள்முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்களுக்கான காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது. காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். காப்புரிமை உள்ள கடந்த நூற்றாண்டு, தற்கால நூல்களுக்கு காப்புரிமை கொண்டோரின் அனுமதி தேவை.
ð¤ù¢ Þ¬í𢹠4. திரு. கு. கல்யாணசுந்தரம்
தமிழ் டிஜிட்டல் நூலக துறைக்கு பிள்ளையார் சுழி போட்டவர். இணையத்தில் புகழ் பெற்ற மதுரைத்திட்டத்தின் முன்னோடி. சென்னை மாநகரில் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்புவரை பயின்றவர். சென்னை லயோலா கல்லூரியில் இரசாயனத் துறையில் பி.எஸ்ஸி மற்றும் எம்.எஸ்ஸி பட்டப் படிப்பு முடித்த பிறகு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் இரசாயனத் துறையில் ஆராய்ச்சி மேற்க்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் மேல்நிலை ஆராய்ச்சியில் பங்கு பெற்ற பின், 1979ல் தற்போது வசித்து வரும் ஸிவிஸ் நாட்டுக்குச் சென்றார். அங்குள்ள லுசான் நகர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் முதுநிலை விரிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் தற்போது பணிபுரிந்து வருகிறார். பாஷா இணையத்தளத்திற்காக முனைவர் கு. கல்யாணசுந்தரத்தின் வெற்றி உரைகளை தொகுத்த போது...
இணையத்தில் நூல்களை தொகுக்கும் ஆர்வம் தங்களுக்கு எப்படி உருவானது?
பத்து ஆண்டுகளுக்கு முன் மக்கின்டாஷ், வின்டோஸ் கணினிகளில் தமிழிலேயே நேரிடையாக உள்ளிட மயிலை என்னும் தமிழ் எழுத்துரு தயாரித்து அதை பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை காண்பிக்க திருக்குறள் 1330 குறள்களை உள்ளிட்டு மின்அஞ்சல் மூலம் உலகில் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கு அனுப்பினேன். அதை தொடர்ந்து பாரதியார் பாடல்கள், அவ்வையார் பாடல்கள் போன்றவற்றை உள்ளிட்டு அனுப்பினேன். 1997 ம் ஆண்டு பாலா பிள்ளை ஆரம்பித்து நடத்தும் தமிழ்.நெட் என்னும் மின்னஞ்சல் குழுவில் இணைந்தேன். இக்குழு முறையில் தழிழ் இலக்கியங்களை உலகில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தயாரித்து பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரு கேள்வி எழுந்தது. அதை தொடர்ந்து 1998ம ஆண்டு பொங்கல் திருநாளன்று மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்பு தொகுப்புத் திட்டம் என்ற ஒரு தன்னார்வு திட்டத்தை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தோம்.
நூல்கள் காகிதப்பதிப்பு, இணையப்பதிப்பு வெற்றி தோல்விகள் என்ன?
காகிகப் பதிப்புக்கு தேவையான அச்சுயந்திரங்கள் 19-ம் நூற்றாண்டிலேயே இருந்த போதிலும், பாரதியார் போன்றவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற ஒரு அச்சத்தினால் தமிழ் அச்சுயந்திரங்கள் 20-ம் நூற்றாண்டின் பின்பாதி வரை அதிகமாக பயன்படுத்தப் படவில்லை. தமிழ் நூல்கள் சங்ககால நூல்கள் முதல் ஆயிரக் கணக்கி்ல் இருந்தபோதிலும் பெரும்பாலானவை புத்தக வடிவில் அதிக அளவில் அச்சிடப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல், 20ம் நூற்றாண்டின் பின் பகுதியில் புதினங்கள் பெருமளவில் வந்து பொதுமக்களை கவர்ந்தது. இதனால் தமிழ் இலக்கிய நூல்கள் காகிதப்பதிப்பாக வருவது தற்காலத்தில் பெருமளவு குறைந்துவிட்டது. இணையத்தில் இந்திய மொழிகளில் தமிழ் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இணையத்தில் மின்னஞ்சல் மடலாடற்குழு மூலம் தகவல் தொடர்பு, கருத்துப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் முன்னோடியாக உள்ளது. அதேபோல் இணைய தளங்கள் எண்ணிக்கைகளிலும் , பிளாக் தளங்கள் மூலம் கருத்தைப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் மொழி இந்திய மொழிகளிலே முதலிடம் பெற்றுள்ளது. இணையம் வழியே விநியோகிக்கப்படும் தமிழ் நூல்களின் மின்பதிப்புகள் எண்ணிக்கை மிகக் குறைவானதே. தமிழ்நாட்டில் உள்ள பல தமிழ்நூல் பதிப்பாளர்கள் மின்பதிப்புகள் காகிதப் பதிப்புகள் விற்பனையை ெபருமளவில் பாதிக்கும் என்ற ஒரு தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். மின்பதிப்புகள் இணையம் வழியாக உலகில் பல நாட்டில் உள்ள தமிழர்கள் தமிழ் நூல்களைப் பற்றி முதன்முறையாக தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. மதுரைத் திட்டம் போன்றவை காப்புரிமை காரணமாக பழங்கால தமிழ்நூல்களின் மூல செய்யுள்கள்/ பாடல்களை மட்டுமே மின்பதிப்பாக வெளியிடுகின்றன. இந்நூல்களின் உரைகளை காகிதப்பதிப்பு மூலமே முழுமையாக படித்து தெரிந்து கொள்ளமுடியும்.
தங்களுடைய மதுரை திட்டத்தின் பணிகள், இலக்கு ஆகியவற்றை விவரிக்கவும்.
மதுரைத் திட்டம் என்பது தமிழர்களும் தமிழ்மொழிமேல் பற்றுள்ள மேலைநாட்டவரும் அவரவர் தங்களது கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களை உள்ளிட்டு, பிழைதிருத்தி பிறகு இம்மின்பதிப்புகளை இணையம் வழியாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் இலவசமாக இறக்கிக்கொள்ள வசதி செய்வதே. www.projectmadurai.org , இத்திட்டத்தில் இன்றுவரை 300க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை இலவச மின்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது குறைவான விற்பனை காரணமாக பெரும்பான தமிழ்நூல்கள் காகிதப் பதிப்பாக வெளிவராமல் இன்றும் ஓலை வடிவிலேயே இருக்கின்றன. யாழ்ப்பாண நூல் நிலையம் தீயில் எரிந்து போன பொழுது ஈழத் தமிழர் படைத்த தமிழ் நூல்கள் அனைத்தும அழிந்துவிட்டன. பெரும்பாலான ஈழத் தமிழர்கள் நாடு புலர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதால் ஈழத் தமிழர் இலக்கியம் சிதைந்த போகக்கூடிய நிலையில் உள்ளது. பணவசதி குறைவு காரணமாக தமிழ்நாட்டு நூலகங்களில் நூல்களும் ஒலைச்சுவடிகளும மோசமான நிலையில் காக்கப்பட்டு வருகின்றது. இன்னும் 50 ஆண்டுகள் அவை அனைத்தும் செல்லரித்து பாழடையும் நிலையில் உள்ளது. மதுரைத்திட்டத்தின் இலக்கு காலம், நாடு, மதம்/சமயம் போன்ற எந்தஒரு வேறுபாடின்றி, பல்விதமான தமிழ இலக்கியங்களை மின்வடிவத்தில் உள்ளிட்டு, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் தமிழ்மொழிமேல் பற்றுளர்களுக்கும் அடையச் செய்வதே ஆகும்.
தமிழ் தகவல் தொழிற்நுட்பம் எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது? நீங்கள் இதில் எதிர்பார்க்கும் வளர்ச்சிகள் என்னென்ன?
உலகில் பல லட்சக்கணக்கான தமிழர்கள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கணினியில் பல விதமான தொகுப்புகளை தயாரித்து இணையம் வழி பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். ஆனால் ஆங்கில மொழியில் உள்ளதுபோல் அனைவரும் ஒரு தகுதரம் கொண்டு தயாரிக்கப்பட்ட எழுத்துருக்களையோ அல்லது மென்பொருள்களையோ பயன்படுத்தும் நிலையில் இல்லை. முன்பு கூறியது போல் இணையத்தில் தமிழ் மொழி தகவல் தொடர்பு. கருத்துப் பறிமாற்றம், இணைய தளங்கள எண்€ணிக்கை போன்றவற்றில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் அவை அனைத்தும் தகுதரங்களை பயன்படுத்தாததால் இவற்றின் பயன் பெருமளவில் பாமர மக்களை அடையாமல் இருக்கிறது. இன்றும் பலர் பாமினி போன்ற ஒருமொழி 8-பிட் எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர். பன்மொழி முறையில் அமைக்கப்பட்ட யூனிகோடு தமிழர்களிடையே இன்றும் முழுமையாக ஏற்கப்படவில்லை. இந்நிலை மாறவேண்டும். மாறினால் தான் கணினியில் தமிழ் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்களை உள்ளிட்ட வாய்ப்புகளை அதிகரிக்கும்.
உத்தமம் அமைப்பு பற்றியும் அதில் தங்களது பங்கு என்ன என்பது பற்றியும் கூறமுடியுமா?
உத்தமம் என்று அைழக்கப்படும் “உலகத் தகவல் தொழில்நுட்ப மன்ற” அமைப்பு www.infitt.org ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகின்றன. உத்தமத்தின் குறிக்கோள்கள் உலகெங்கிலும் உள்ள தமிழ் ெமன்பொறி தயாரிப்பாளர்களும் கணினியில் தமிழைப் பயன்படுத்துவர்களுக்கும் இன்றியமையாத தகுதரங்கள் வளர்ப்புக்கு வசதி செய்து தருவதே. இதற்காக மின்னஞ்சல் குழு வசதி செய்துகொடுப்பதோடு ஆண்டுதோறும் இவர்கள் ஒன்றுகூடி நேரிடையாக கருத்துப்பறிமாற்றம் செய்ய வசதியாக தமிழ் இணைய மாநாடுகளை உலகில் வேறுவேறு மாநகர்களில் நடத்திவருகிறது. சென்னை, சிங்கப்பூர், கோலாலம்பூர் (மலேசியா), சான் பிரான்சிஸ்கோ (கலிபோர்னியா, அமெரிக்கா) போன்ற நகர்களில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளில் தமிழர்கள் கலந்துகொண்டு பயனடைந்துளளார்கள். ஆரம்ப காலத்திலிருந்து உத்தமத்தின் நிர்வாகக் குழுவில் பங்குகொண்டு வருகிறேன். தமிழ் இணைய மாநாடுகளுக்கு கருத்தரங்கு அமைப்புக்குழு தலைவராகப் பணியாற்றியுள்ளேன். தற்போது உத்தமத்தின் நிர்வாகக்குழு தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன்.
தமிழ் அறிவியல் உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? தங்கள் சொந்த இலக்கு என்ன?
ஆரம்பத்தில் கூறியதுபோல இரசாயனத் துறையில் பல்கலைக்கழக அளவில் கல்வி கற்பிப்பதும் இரசாயனத் துறையில் ஆராய்ச்சியில் பங்குபெறுவதுமே எனது முழுநேர முயற்சிகள். இருப்பினும் கடந்த பத்து ஆண்டுகளுக்குமேல் என்னால் முடிந்தளவு கணினி, இணைய வழியில் தமிழ் மொழி வளர, உலகெங்கிலும் உள்ள தமிழர்களை சென்றுடைய என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். மதுரைத் திட்டத்தில் பங்குபெறுவது மனதிற்கு பெருமளவில் திருப்தியை கொடுத்துவருகிறது. தமிழ் இலக்கிய நூல்களின் மொத்த எண்ணிக்கைப் பார்த்தால் இதுவரை 300 முக்கிய நூல்களுக்கு மின்பதிப்பு தயாரிப்பது ஒரு சிறு துளியே. பாதுகாக்கப்பட வேண்டிய நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. குறிப்பபாக காகிதவடிவ புத்தகமாக வராமலேயே மடிந்துகொண்டிருக்கும் நூல்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளன. கணினியில் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் தமிழ் மொழியில் விரைவில் பெற உத்தமம் போன்ற அமைப்புகள் இன்றியமையாதவை என்பது எனது தாழ்மையான கருத்து. அதனால் உத்தமம் மேலும் விரிவடைந்து உலகளவில் ஒரு பெருமைப்படக் கூடிய அமைப்பாக ஆவேண்டும் என்பது எனது அவா. அதற்கு என்னால் முடிந்த அளவு பணி செய்வேன். தமிழ் மரபு அறக்கட்டளை www.tamilheritage.org முனைவர் கண்ணன் தலைமையில் தமிழரது கலாசாரம் சம்பந்தப்பட்டவைகளை பல்லூடக மின்வடிவில் பாதுகாக்க முயன்றுவருகிறது. இதிலும் இயக்கத்தின் துணைதலைவராக என்னால் முடிந்த உதவிகளை ெசய்துவருகிறேன். பாஷா இந்தியா வாசகர்களூக்கு வாழ்த்துகள்.

June 21, 2009

தமிழில் நவீன நாடகங்கள்


தமிழை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பேசி வருவது ஒரு மரபாக இருக்கிறது. இயல் தமிழ் என்பது என்ன..? என்பதை விளக்க நமக்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் தொடங்கிப் பழைமையான இலக்கணநூல்கள் இருக்கின்றன. ஆனால் இசைத்தமிழ் இதுதான் என்று விளக்குவதற்கும் நாடகத் தமிழின் இலக்கணம் இவையெனச் சொல்வதற்கும் முறையான இலக்கணநூல்கள் தமிழில் இல்லை. இருக்கின்ற இலக்கண நூல்கள் காலத்தால் மிகப் பிற்பட்டவை. குறிப்பாகப் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவையும் தமிழ் மொழி வழங்கும் நிலப் பரப்பிற்குள் பிறமொழியாளர்களின் வருகையோடு இசையும் நாடகமும் அறிமுகமாகி அவற்றின் இலக்கணங்களை விளக்கத் தொடங்கிய பின்பு எழுதப்பட்டவை. பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் அறிமுகமே பரிதிமால் கலைஞர் எனத் தன்னை அழைத்துக் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியாரை நாடகவியலை எழுதத் தூண்டியது. விபுலானந்த அடிகள், ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்களின் முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக இருந்தவை கர்நாடக சங்கீதத்தின் வரைமுறைப் பட்ட இசையியல் என்பதை இன்று மறுப்பது எளிமையல்ல. ஆனால் அரங்க நிகழ்வுகள் மற்றும் நாடகங்களின் மேடை யேற்றம் என்பன மிகத் தொன்மையானவை என்பதற்கான ஆதாரங்கள் நமக்கு உள்ளன.
உலக மொழிகளில் தமிழைப் போலவே மூத்த மொழிகளாகக் கருதப்படும் சமஸ்கிருதத்திலும் கீரீக் மொழியிலும் தோன்றிய இலக்கண நூல்கள் நாடக இலக்கணத்தைச் சொல்வதிலேயே முனைப்புக் காட்டியுள்ளன. கிரேக்க நாட்டில் தோன்றிய சிந்தனையாளன் அரிஸ்டாடில் எழுதிய கவிதையியலில் - (Poetics), நாடகத்தின் கட்டமைப்பு, நாடகங்களின் வகைகள், நாடகக் கதாபாத்திரங்களின் இயல்புகள், நாடகங்கள் எழுப்ப வேண்டிய உணர்வுகள் என எல்லா வற்றையும் விரிவாகப் பேசியுள்ளார். இதே போல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள நாட்ய சாஸ்திரத்திலும் நாடகம் பற்றிய அனைத்து விவரங்களும் கிடைக்கின்றன.பரத முனியால் எழுதப் பட்ட அந்நூல் நடனத்தின் இலக்கணத்தைச் சொல்வதின் தொடர்ச்சியாக நாடக இலக்கணத்தையும் சேர்த்தே சொல்கிறது. தமிழில் நாட்ய சாஸ்திரம் போன்ற தொரு நூலோ, கவிதையியல் போன்றதொரு நூலோ இல்லை என்பதை நாம் அறிந்தே இருக்கிறோம்.இவ்விரு நூல்களும் நடனம் தான் நாடகத்தின் தொடக்கம் என்கின்றன. அதன் தொடர்ச்சியாக நிகழ்த்திய ஆய்வுகள் குறிப்பாகச் சடங்கு சார்ந்த நடனங்கிலிருந்தே நாடகம் தோற்றம் கொண்டுள்ளது என உறுதி செய்துள்ளன.
தமிழின் தொல் இலக்கியங்களான அகக் கவிதைகளும் புறக்கவிதைகளும் சிலப்பதிகாரம் போன்ற தொடர்நிலைச் செய்யுள்களிலும் சடங்கு சார்ந்த நடனங்கள் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன.வேலன் வெறியாட்டு, துணங்கைக் கூத்து , பின் தேர்க்குரவை, முன் தேர்க்குரவை போன்றனவும் குரவைக்கூத்து, சாக்கைக் கூத்து , விநோதக் கூத்து, சாந்திக்கூத்து , ஆய்ச்சியர் குரவை போன்றனவும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் பதினோராடல்களும் பண்டைத் தமிழகத்தில் வழக்கில் இருந்த நடனமுறைகள் எனலாம். இவை தவிர கும்மி, கோல், கரகம், கழியல், சதிர் போன்ற ஆட்ட முறைகளும் தமிழகத்தில் பாரம்பரியமாக நிகழ்ந்து வந்த குறிப்புக்கள் கிடைக்கின்றன. ஆனால் கதை தழுவிய காட்சி வரிசைகளாக நாடகம் நிகழ்ந்த குறிப்புக்களோ பிரதிகளோ கிடைக்கவில்லை. அப்படியானால் முத்தமிழில் ஒன்றான நாடகம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழக்கூடும்.
ஐரோப்பியர்களின் வருகையால் இங்கு அறிமுகமான சிறுகதை, நாவல் போல நாடகமும் அவர்களோடு வந்தது என்ற ஐயம்கூட வரலாம். இந்த ஐயம் முழுமையும் உண்மையல்ல. ஆனால் இன்று நாடகம் என்று நிகழ்த்தப்படுகின்ற கலைவடிவத்தில் ஐரோப்பியர்களின் பங்கு சரிபாதியாக இருக்கிறது என்பதும் உண்மை. ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு தெருக்கூத்து என்ற பெயரில் கதை தழுவிய நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளனர். தஞ்சைப் பகுதியில் இன்னொரு நாடகவடிவமாக பாகவத மேளா நிகழ்ந்து வந்துள்ளது. அதன் மொழி வடிவம் தெலுங்காகவும் இசைவடிவம் கர்நாடக இசை வடிவமாகவும் இருக்கிறது.
மற்றொரு நாடகவடிவமாக மராத்தியச் சாயல் கொண்ட மோடி நாடகங்களும் இருந்துள்ளன. அதே போல் இன்றும் இசைப்பாடல்களும் வசனங்களும் கலந்த சங்கரதாஸ் சுவாமிகளின் பாணி நாடகங்கள் நடத்தக் குழுக்கள் இருக்கின்றன.ஆனால் இவற்றின் தோற்றம் சில நூறாண்டுகளுக்கு முன் என்பதில் ஐயமில்லை.இவ்வகை நாடகங்கள் எல்லாம் இன்றுள்ள அரங்குகள் போல் அல்லாமல் நிகழுமிடத்தை மட்டுமே உறுதி செய்து கொண்டு நிகழ்ந்துள்ளன எனலாம். நிகழிடத்தின் மூன்று புறங்களிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கக் கதை, எடுத்துரைப்பதற்கென ஒரு கதாபாத்திரம் வந்து ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல நிகழ்வுகள் நடந்து முடிவதாக அவை அமைந்தன. கட்டியங்காரன் அல்லது விதூஷகன் என்ற கதாபாத்திரம் அமைந்திருக்கும் இந்த வடிவத்தை இந்திய நாடகவடிவம் எனலாம்.
இந்த வடிவம் தனக்குள் நடன அசைவுகளையும் இசைப்பாடல்களையும் தர்க்கம் சார்ந்த உரையாடல் வடிவத் தையும் முழு இரவுக்குமான நிகழ்வையும் வைத்திருந்தது. வேளாண்மை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுக் களைத்து வரும் மக்களுக்கான ஓய்வுப் பொழுதுக்கலையாகவும் வாழ்க்கைக்கான வழி நடத்தல் கருத்துக்களைத் தரும் கலையாகவும் தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் 19 ஆம் நூற்றாண்டின் மையக் காலம் வரை இருந்து வந்தவை இந்த நாடகங்கள் தான்.நவீனத்துவத்தின் நுழைவு பொதுவாக நவீன கலை இலக்கியம் பற்றிய பேச்சுக்கள் அல்லது சொல்லாடல்கள் பலதளங்களில் விரியக்கூடியன.நவீனக் கலை இலக்கியம் பற்றிய சொல்லாடல் மட்டுமல்ல. நவீன மனிதன் பற்றிய ஒரு சிறு குறிப்பும் விரிவான உரைக்கோவையுமே கூட ஒற்றைப் பரிமாணத்துடன் நிற்பன அல்ல. இங்கே மிகுந்த தன்னுணர்வுடன் உள்வாங்கப்பட்ட நவீன நாடகங்கள் பற்றிய பேச்சும் அதற்கு விலக்கல்ல.
பாரம்பரியத்தின் கடுமையான இறுக்கத்தின் மீதும் தடைகளின் மீதும் விமரிசனங்களைப் பரவவிட்ட நவீனத்துவம், நிகழ்கால மனிதனின் இருப்பு, வெளிப்பாடு, மாறவேண்டிய அல்லது மாற்ற வேண்டிய நிலை என ஒவ்வொன்றிலும் தன்னுணர்வுடன் செயல்படுவதை வலியுறுத்தும் நோக்கம் கொண்டது.நவீனத்துவத்திற்கு எனத் தனித்த அடையாளம் கொண்ட தத்துவம், அரசியல், வடிவம், அவற்றைத் தேடும் முறை எனச் சில அக்கறைகள் உண்டு. ஐரோப்பிய நவீனத்துவம் 16,17 ஆம் நூற்றாணடு அறிவியல் மற்றும் தொழில்புரட்சிகளின் விளைவு. இறையியல். தத்துவம், அறிவுத்தோற்றவியல் அல்லது மெய்காண்முறை என எல்லா வற்றிலும் ஐரோப்பிய மனிதனுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள்,குழப்பங்கள், அதற்கு அவன் உருவாக்கிக் கொணட விளக்கங்கள் எனப் பலவும் அதன் பின்னணியில் உண்டு.
இவையனைத்தும் இந்திய நவீனத்துவத்திற்கு உண்டு எனச் சொல்ல முடியாது.ஏனெனில் இந்திய மனிதன், அவன் படைப்பாளியாக இருந்தாலும்சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி நவீனத்துவத்தை அடைந்தது வாழ்வின் ஊடாக அல்ல. கற்ற கல்வியினூடாக மட்டுமே. ஐரோப்பியர்களின் வருகையோடு கூடிய ஆங்கிலக்கல்வியின் ஊடாகவே நவீனத்துவம் அவனுள் நுழைகிறது.ஐரோப்பியர்களின் வருகை, மேற்கத்தியக்கல்வி, அதன்வழியான சிந்தனை மரபு உண்டாக்கிய தாக்கம், அவர்களாகவே -ஐரோப்பியர்களாகவே -மாறிவிடுவதில் இருந்த ஆர்வம் போன்றவை தமிழர்களுக்கு நவீனம் (Modern) என்ற வார்த்தைக்கான கருத்தியல் மற்றும் செயல்பாட்டுத் தளங்களை அர்த்தப் படுத்த முயன்றன. மேற்கத்திய நவீனத்துவம் சிலவகைப் பட்ட புரட்சிகளின் பின்விளைவுகள் என்பதை நாமறிவோம். நெருக்கடிகள் நிரம்பிய போர்க்காலப் பின்னணியும் அதற்கு உண்டு. அதன் காரணமாக தனிமனித விடுதலையை மையமாகக் கொண்டு இறுகிப் போன நிறுவனங்களையும், அவை பாதுகாக்க முயன்ற சமூகப் படித்தரங்களையும், மதிப்பீடுகளையும், கேள்விக்குள்ளாக்குதல் மற்றும் விடை தேடி அலைதல் என்பதை அடையாளமாகக் கொண்டிருந்தது மேற்கத்திய நவீனத்துவம். அத்துடன் நலிவுற்றவர்களுக்கும் பாதிக்கப் பட்டவர்களுக்கும் ஆதரவு என்கிற மனிதாபிமான முகமும் அதற்கு உண்டு.
மேற்கத்திய படைப்பாளர்களும் சிந்தனையாளர்களும் நவீனம் என்ற வார்த்தையை உள்வாங்கியதும் உபயோகித்ததும் இத்தகைய கருத்தியல் செயல்பாட்டுத் தளங்களோடுதான். அவர்களின் காலப்பின்னணியும், நெருக்கடிகளும் புதிய புதிய கேள்விகளை முன் வைத்தன; விடைகள் தெரிந்தவை; விடைகள் தெரியாதவை; விடைகளைத் தேட வேண்டியவை; தேடவே முடியாதவை எனப் பல்வேறு கேள்விகள். அவைகள் வெளிப்படுத்திய பல்வேறு விதமான உள்ளடக்கங்கள். அவைகளை வெளிப்படுத்த முடியாமல் திணறிய பழைய வ்டிவங்களுக்குப் பதிலாகப் புதிய வடிவங்கள்; வெளிப்பாட்டு முறைகள் என ஐரோப்பிய நவீனத்துவ நாடக அரங்கம் பரந்த பரப்பினைக் கொண்டதுபுதிய கேள்விகளையும் புதிய பதில்களையும் வெளிக்கொணர யதார்த்த பாணி அரங்கு போதாது என்று உணர்ந்தவர்கள், காவிய பாணி அரங்கு (Epic theatre) , அபத்த நாடகங்கள் ( Absurd Drama), குரூர அரங்கு (Theatre of Cruelty), குறியீட்டியல் (Symbolic) நாடகங்கள, மிகை யதார்த்த நாடகங்கள் ¢(Surrealistic plays), வெளிப்பாட்டியல் (Expressionistic) நாடகங்கள் எனப் புதிய மரபொன்றை உருவாக்கினார்கள். நாடகப் பிரதிகளில் மட்டுமல்லாமல் நிகழ்த்தும் முறையிலும், நடிப்புப் பாணியிலும் கூட இத்தகைய மரபொன்றை மேற்கத்திய மரபில் நாம் காண முடியும். காவிய் பாணி அரங்கு தொடங்கி , கண்ணுக்குப்புலப்படா அரங்கு ( Invisible theatre) வரையிலான நிகழ்த்து முறைகள், ஒன்றின் இடத்தில் இன்னொன்று என நடப்பட்ட பயிர்கள் அல்ல; அவ்வக் காலத் தேவைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தவை. ஆனால் தமிழர்களாகிய நாம் நவீனம் என்பதைப் புதியது எனக் கருத்தியல் ரீதியாகவும் செயல் பாட்டுத் தளத்தில் மனிதாபிமானம் என்பதாகவும் மட்டுமே புரிந்து கொண்டுள்ளோம்.
மேற்கத்திய நவீனத்துவ மரபில் உள்ளவைகளை ஏற்றுக்கொள்வதிலும் கூடப் புதுமைநாட்டம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது எனச் சொல்லலாம். வெளிப்பாடுகள்சென்ற நூற்றாண்டின் - 1970 களின் இறுதிவாக்கில் சிறுபத்திரிகை சார்ந்த அறிவாளிகளால் முன்மொழியப் பட்டு, நாடகப் பிரதிகள், பயிற்சி முகாம்கள், நாடக மேடையேற்றங்கள், நாடகவிழாக்கள், அரசு அகாடமிகளின் ஆதரவு, அந்நிய நிதி நிறுவனங்கள்- பண்பாட்டுத் தூதரகங்களின் உதவி, பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டம் என நவீன நாடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றின் வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பையும் பரிசீலனை செய்தாலே அதன் பரிமாணங்களும் போதாமையும் புரியக் கூடும்.நவீனத்தமிழ் நாடகத்தின் முக்கிய பரிமாணங்கள் ஏற்கனவே அடையாளப் படுத்தப்பட்டு , அவற்றின் இயல்பு களும் நோக்கங்களும் பலராலும் பேசப்பட்டுள்ளன. மக்களை நாடிச் செல்லுதலையும், செலவுகளைக் குறைத்து எளிய வடிவில் நிகழ்த்து முறையைக் கொண்ட தெரு நாடகங்கள் அதன் முழுவீச்சில் இன்று இல்லை. அதன் நீர்த்துப் போன வடிவமாக அறிவொளி நாடகங்கள் நடத்தப்பட்டன.நோக்கங்களைக் கோஷங்களாக மாற்றிப் பார்வையாளர்களிடம் நேரடியாகச் செய்திகளைச் சொல்லிவிடத்துடிக்கும் நோக்கம் கொண்டவை அவை.தெரு நாடகங்கள் அல்லது எளிய அரங்கு என்பனவற்றின் மீது இத்தகைய விமரிசனங்களை வைக்கும் இன்னொரு நாடகத்தயாரிப்புகளும் உள்ளன . பல பத்தாயிரங்களையோ லட்சங்களையோ தயாரிப்புச் செலவுகளாகக் கொண்டவை. அவை சங்கீத நாடக அகாடமி, தேசிய நாடகப்பள்ளி போன்ற அரசு நிறுவனங்களி டமிருந்தும், ஃபோர்டு நிதி நிறுவனம் , ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன், ப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளின் பண்பாட்டுத் தூதரகங்களிடமிருந்தும் நிதியுதவியைப் பெற்றவை. சோதனை , பரிசோதனை-மேலும் சோதனை என்பதையே நோக்கமாகக் கொண்ட நாடகத் தயாரிப்புகளில் ஈடுபட்ட கூத்துப் பட்டறையின் நாடகங்கள் இப்போக்கிற்குச் சரியான உதாரணங்கள்.
பின்னரங்கச் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து மேடையில் காட்சி ரூபங்களில் திளைக்கச் செய்யும் இத்தகைய நாடகங்களில் வடிவத்தேடல்கள் அதிகம் உண்டு. மேற்கத்தியப் புதுமைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தல், இந்திய அரங்கை- பாரம்பரிய அரங்கை உருவாக்குதல்- தமிழ்த் தேசிய இன அடையாளங் களை வெளிப்படுத்தும் அரங்கத்தை அடையாளப்படுத்துதல் என்று சில நுட்பமான வேறுபாடுகள் அவற்றிற் கிடையே உண்டு. ஆனால் இவையனைத்தும் பார்வையாளர்களோடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய உறவில் ஒன்றுபடுகின்றன. மிகக் குறைவான -தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களிடம் மட்டுமே இந்நாடகங்களின் உறவு உள்ளது. அவ்வுறவும் கூடப் பார்வையாளன் -மேடைப்படைப்பு என்பதான உறவாக இல்லை. பார்வை யாளப் படைப்பாளிகளின்- அறிவார்ந்த விமரிசனத்திற்கு இடமளிக்கக் கூடிய படைப்பாக இருக்க அவை முனைகின்றன.
பார்வையாளர்களின் வருகையை விடவும் பத்திரிகைகளின் விமரிசனங்களே போதும் என்ற திருப்தி இத்தகைய நாடகத்தயாரிப்புகளில் ஈடுபடுகிறவர்களுக்கு உண்டுநவீனத்தமிழ் நாடகங்கள் என்பதற்குள் செயல்படும் இத்தகைய போக்குகள் நாடகம் என்ற சக்தி வாய்ந்த கலை ஊடகத்தின் செயல்பாடுகளையே கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் மாற்றியுள்ளன. ரசனை நிலையிலோ, காத்திரமான சமூகநிகழ்விலோ கூட இந்நாடகங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது உண்டாக்கிய பாதிப்புக்கள் மிகமிகக் குறைவு; எதுவும் இல்லை என்று கூடச் சொல்லலாம். இதனை நாடகச் செயல்பாடுகளின் பரப்பிற்கு வெளியே இருந்து சொல்கின்ற ஒரு குற்றச்சாட்டாக நினைக்க வேண்டியதில்லை. தெரு நாடகங்களின் சமூகச் செயல்பாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு, அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்ட குழுக்களோடு இணைந்து வேலை செய்தும், சங்கீத நாடக அகாடமியின் நிதி உதவியோடும், பல்கலைக்கழக நாடகத் தயாரிப்பாகவும் செய்யப்பட்ட சோதனை முயற்சிகளிலும் முழு மனத்தோடு ஈடுபட்டவன் என்ற நிலையிலும் இப்படிச் சொல்லத் தோன்றுகிறது.சரியான அர்த்தத்தில் நவீன நாடகம் தமிழுக்கு அறிமுகம் ஆகியிருந்தால்,அதன் முதன்மையான மையம சாதி அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் ஒன்றாகவே இருந்திருக்கும்.
மராத்தியிலும் கன்னடத்திலும் , ஆந்திரத்திலும் முக்கியமான நாடக ஆசிரியர்களாகக் கருதப்படுகிறவர்களின் நாடகங்கள் சாதியமைப்பிற்கு எதிராகவே இருந்தன. விஜய் டெண்டுல்கரின் காசிராம் ஹோட்வால், கன்யாதான் (மராத்தி) கிரிஷ் கர்னாடின் பலிபீடம், சந்திரசேகர கம்பாரின் ஜோ.குமாரசாமி (கன்னடம்) அட்லி கிருஷ்ணாராவின் தூர்புரேகலு (தெலுங்கு) போன்ற நாடகங்கள் சாதிப் பிரச்சினையைப் பேசியுள்ள நாடகங்கள். ஆனால் தமிழில் அத்தகைய நவீன நாடகப் பிரதிகளை எண்ணுவதற்கு ஒரு விரலைக் கூட மடக்க வேண்டியதில்லை. பிராமண அழகியல்xபறைச்சேரி அழகியல் எனச் சாதிப் பிரச்சினையின் முகத்தைக் காட்டிய இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதையைத் தாண்டி வந்தால் கே.ஏ.குணசேகரனின் பலி ஆடுகள் தான் சாதிப் பிரச்சினையின் குரூர வடிவங்களை முன்வைத்த நாடகம்.
பெரும்பான்மை மக்களின் பண்பாடு என்ற போர்வையில் தனது கருத்தியல் வன்முறையைத் தக்க வைப்பதற்கேற்ற வடிவத்தைப் பெற்றுள்ள வைதீக இந்துமதமும் அதன் கருத்துக்களும் இங்கு விமரிசிக்கப்படவே இல்லை. இந்து மத அடிப்படைவாதம் என்றில்லை. எந்த மத அடிப்படை வாதத்தையும் சாதி அடிப்படை வாதத்தையும் தமிழ்ன் நவீன நாடகங்கள் விமரிசனத்திற்குரிய ஒன்றாக நினைத்ததே இல்லை. கூர்ந்து கவனித்தால் அவற்றைக் கேள்விக் குள்ளாக்குவதை விடவும் அதனோடு சமரசம் செய்து கொண்டவை களும்,அதன் தாத்ப்ரியங்களில் பிரியம் கொண்டு மூழ்கித் திளைத் தவைகளும் தான் நவீன நாடகங்களாக- நவீனப் படைப்புகளாக முன்வைக்கப்படுகின்றன. அவைகளுக்கே பத்திரிகை களின் அங்கீகாரம் கிடைக்கின்றன. தேசிய, சர்வதேசிய அறிமுகங்கள் கிடைக்கின்றன. அங்கீகாரத்துக்கும் , ஆதரவிற்கும் ஏங்கும் தனிமனித மனம் சமரசப் பட்டு அதிகாரத்துவ வலைக்குள் விழுந்து விடுகிறது. தமிழ் நாடகவரலாற்றில் பல்வேறு உதாரணங்களைச் சொல்ல முடியும்.நாடகங்கள்- நாடகக் குழுக்கள் எப்பொழுதெலலாம் தீவிரப்பட்டு வெகுமக்கள் வடிவமாக மாறுகின்றனவோ அப்பொழுதெல்லாம் திசை திருப்புதலின் பின்னணியில் ஆதிக்கக் கருத்தியல் செயல் பட்டுள்ளது. இந்தியாவில்/ தமிழ்நாட்டில் ஆதிக்கக் கருத்தியல் என்பது படிநிலை அமைப்பில் தனது அதிகாரத்தைத் தக்கவைக்கும் பிராமணியம் என்பதைத் தான் குறிக்கும்.திராவிட முன்னேற்றக்கழகத்தவரின் நாடகங்கள் கோயில், கோயில் சார்ந்த பிராமணர்கள், பிராமணிய மதிப்பீடுகள் ஆகியவற்றின் மீது காத்திரமான விமரிசனங்களை முன் வைத்தவை. ஆனால் அவற்றை அங்கீகரிக்க மறுத்த குரல்கள் சிறுபத்திரிகைகளின் நவீனத்துவம் (?) சார்ந்த பிராமணீயக் குரல்கள் தான்.
ஐரோப்பிய யதார்த்தபாணி நாடகங்களின் வடிவச் செழுமையோடு திருப்பங்களும் கொண்டதாக சி. என். அண்ணாதுரை, மு,கருணாநிதி, எம். ஆர். ராதா போன்றவர்களின் நாடகப்பிரதிகள் உள்ளன. சமூக விமரிசனத்தை நவீனமாகக் கருதாமல் ஐரோப்பிய இந்திய மாதிரிகளை முன்வைத்து எழுதப்பட்ட ந.முத்து சாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் நாடகங்களே நவீன நாடகங்கள் என முன் மொழியப் பட்டதில் - முன்மொழியும்படி செய்யப்பட்டதில் செயல் பட்டதும் பிராமணிய மதிப்பீடுகள்தான். உரையாடல்களின் பலத்தில் வெகுமக்களிடம் எளிமையான புரிதல்களை உண்டாக்கிய திராவிட இயக்க நாடகமரபு தடை பட்டுப் போனதில் ஆதிக்கக் கருத்தியலாளர்களும் அதன் சார்பு நிறுவனங்களும் திருப்தியடைந்தன. அதே நேரத்தில் அத்தகைய நாடகங்களை எழுதி மேடையேற்றிய திராவிட இயக்கத்தினரும் அதன் படைப்பாளி களும் செயலாளிகளும் அதிகார மையத்திற்குள் நுழைந்தவுடன் அதன் சுழிப்பிற் கேற்பத் தங்களைத் தகவ மைத்துக் கொண்டு தங்களின் பயண ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார்கள் என்பதும் தான் உண்மை.
திராவிட இயக்க நாடகமரபையொத்த காத்திரமான தாக்கத்தை உண்டு பண்ணும் இயல்போடு உருவானவை தெரு நாடக முயற்சிகள். பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்க அறிமுகத்தோடு எழுபதுகளின் இறுதியாண்டு களிலும் எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளிலும் நகரங்கள், சிறு நகரங்கள் எனப்பல இடங்களில் நாடகக் குழுக்கள் தோன்றின. அவற்றின் செயல்பாடுகளில் தேக்கத்தை உண்டு பண்ணவும் போக்கைத்திசை திருப்பவும் வந்தது போல அறிமுகமானது இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் இளம் இயக்குநர்கள் ஊக்குவிப்புத் திட்டம். சுயேச்சையான நாடகக்குழுக்களாக - சமூக விமரிசனம் சார்ந்த நாடகங்கள் செய்பவர் களாக - ஆதிக்கக் கருத்தியலோடு உடன்பட மறுக்கிறவர்களாக உருவானவர்களை- உருவாக வேண்டிய வர்களை, வேர்களைத் தேடும் நாடகக் குழுக்களாக - பாரம்பரியத்தில் பெருமிதங் கொள்ளும் நாடகக் கலைஞர் களாக, தேசிய அடையாளம் கொண்ட நாடக உருவாக்கத்திற்குப் பங்களிப்புச் செய்பவர்¢களாக மாற்றிக் கட்டமைத்தது அந்த ஊக்குவிப்புத் திட்டம்.
சங்கீத நாடக அகாடமியின் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் , அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய அரங்கின் அரங்க மொழியைக் கண்டறிந்து, அதனூடாக நாடகப் பிரதியை மேடை
யேற்றிட வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தது. இந்த நிர்ப்பந்தத்தினை ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளடக்கத்தில் செயல்பட வேண்டிய நவீனத்தின் செயல்தளம் பின் தங்கியது. இந்திய அதிகாரத்துவக் கருத்தியலின் வாகனமான புராண இதிகாசங்களின் கதைக் கூறுகள் புதிய அரங்க மொழியில் மறுவிளக்கம் செய்யப்பட்டன. அக்கருத்தியலோடு மோதி உள்வாங்கப் பட்டு அதன் சாயலோடு விளங்கிய நாட்டார் கதைகள் புதுவகைப் பிரதிகளாக்கப்பட்டன. சமகால மனிதர்களின் உடைகளோ , ஒப்பனைகளோ நாடகமேடைக்கு அந்நியமான வைகள் என ஒதுக்கப்பட்டன். ஆனால் அதன் பார்வையாளர்களோ கிராமங்களிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்து நகர வாசிகளாக மாறியிருந்த தமிழர்கள் அல்லது இந்தியர்கள். அவர்களிலிருந்து ஒரு சிறு கூட்டம் புதுமையை விரும்பும் - ஆதரித்துவிடும்- மனநிலையோடு பார்வையாளர்களாக ஆனார்கள்.
1984 முதல் 1994 வரை பத்தாண்டுகாலம் செயல்பட்ட சங்கீத நாடக அகாடமியின் இளம் இயக்குநர்கள் திட்டம் நாடகக் கலைஞர்களை- நாடகத்துறை சார்ந்து சமூக அக்கறையை வெளிப்படுத்த நினைத்தவர்களை, அங்கீகாரத்திற்கு அலைபவர்களாகவும் தேசிய அளவில் அறிமுகம் தேடுபவர்களாகவும் , மிகுதியான பணச்செலவில் மேடைப் பிருமாண்டம் ஒன்றைச் செய்துவிடும் கனவுகள் நிரம்பியவர்களாகவும் மாற்றிவிட்டு நின்று போனது. 1994-க்குப் பின் அகாடமியின் நிதியுதவியும் நாடகவிழாக்களும் நின்றுபோன நிலையில் நவீன நாடகக் குழுக்கள் செயல்பாடற்றனவாகச் சிதறுண்டு நின்றன.அதுவே அதிகார மையத்தின் நோக்கமாகக் கூட இருக்கலாம்.[ பட்டியல் இணைப்பில் தரப்பட்டுள்ளது]
இளம் இயக்குநர் திட்டத்தினைக் கைவிட்ட மைய சங்கீத நாடக அகாடமி 1995 -இல் வேறு ஒரு திட்டத்துடன் களமிறங்கியது. இளம் நாடகாசிரியர்களின் உருவாக்கம் என்னும் திட்டம் முதன் முதலில் தமிழில் தான் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் மலைச்சாமி எழுதிய முனி என்ற நாடகமும் தேவி பாரதி எழுதிய மூன்றாவது விலாஎலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும் என்ற இரு நாடகங்களும் தேர்வு பெற்றன. அவ்விரு நாடகங்களையும் இயக்கும் இயக்குநர்களாக மு.இராமசுவாமியும் ரா.ராசுவும் நியமிக்கப்பட ,ஒரு மாத காலம் ஒத்திகைகளும் நடந்தன.ஆனால் இயக்குநர்Xநாடகாசிரியன் என்ற முரண்பாட்டின் வெளிப் பாடாக அவ்விரு பட்டறைகளும் அமைந்து போக அத்திட்டத்தை அகாடமி கைவிட்டது.மைய சங்கீத நாடக அகாடமியின் இளம் இயக்குநர் திட்டமும் , அதன் தொடர்ச்சியான இந்தியத்தனம் நிரம்பிய நாடகப் பிரதிகளுக்கான தேடலும் உண்டாக்கிய மாற்றத்தைக் குறிக்க ,’ ஓரடி முன்னால் ஈரடி பின்னால் ‘ என்ற புகழ்பெற்ற வாக்கியத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன். கதாபாத்திரங்களை முன்னிறுத்தி ,அவர்களின் செயல்பாடுகளின் மூலம் முரண்களை அடையாளப் படுத்திய இந்நாடகப் பிர்திகள் , நவீனத்துவத்தின் மீதான அபரிதமிதான விருப்பத்தைக் கைவிட்டன. அத்தோடு மேடையேற்றத்தின் போது நிரப்பப்பட வேண்டிய இடைவெளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. பாரம்பரியக் கலைகளின் அசைவுக் கூறுகளையும் சடங்குகள் சார்ந்த வினைகளையும் கொண்டு அந்த இடைவெளிகள் நிரப்பப்பட்டு மேடையேற்றத்திலேயே அப்பிரதிகள் முழுமையடைந்தன.
இந்தப் பிரதிகளின் வரவோடு தமிழ் அறிவுலகச் சொல்லாடல்களாக அமைப்பியல், குறியியல் , நேர்கோடற்ற கதையாடல், பின் நவீனத்துவம் போன்றனவும் வந்திருந்தன என்ப தையும் நினைவில் கொண்டு வர வேண்டும்.குறியீட்டு அம்சங்கள் கொண்ட அரஙக அமைப்பு , உடை, ஒப்பனை, ஒளியமைப்பு போன்றவற்றைத் தவிர்க்கவியலாத அம்சங்களாகத் தவிர்க்கவியலாத அம்சங் களாக்கின இந்நாடகங்கள்.மொத்தத்தில் பார்வையாளர்களைத்தேடிச் சென்ற அரங்கை நிகழ்வைத் திரும்பவும் ப்ரொஷீனிய அரங்கின் வெளிச்ச ஜோடனைகளுக்குள்ளும் சமயச் சடங்குகளின் அசைவுகள் என்னும் அழகியலுக்குள்ளும் கொண்டுபோய்ச் சேர்த்தன
நவீனத்தின் பரவலும் விமரிசன மனோநிலையில் தாக்கமும் தடுத்து நிறுத்தப்பட்ட நிலை-சிதறுண்ட நிலை நாடகத்தில் மட்டுமே நடந்துவிட்டது என்பதாக தோன்றவில்லை, எல்லா விதமான நவீன படைப்புகளிலும்¢ சிந்தனைகளிலும் இச்சிதறடிப்பைக் காட்ட முடியும் என்றே தோன்றுகிறது. சாதியமைப்பைக் கேள்விக்குள்ளாக்கு வனவாக தொடக்கம் கொண்டிருக்க வேண்டிய நவீனத்துவத்தின் கீற்றுக்களைப் பாரம்பரியத் தேடல்களுக்குள் நுழையச் செய்ததில் முதன்மையான தடைக்கல் சாதி அமைப்புதான் என்பது உணரப்படாமல் போனதில் உள்ள அரசியல் இன்னும் உணரப் பட்டதாகத் தெரியவில்லை.
1990- களின் மத்தியில் பேச்சுக்களாக மாறியுள்ள தலித் என்னும் தனித்துவம் அரங்கவியலுக்குள்ளும் புகுந்துள்ளது. இத்தனித்துவம் சாராம்சத்தில் படைப்பின் -எழுத்தின் - மையத்தை பார்வையாளர்களிடம் நகர்த்தும் நோக்கம் கொண்டது.இந்நோக்கத்தோடு அத்தனித்துவம் நாடகப்பிரதியில் புதிய சுவடுகள் எதையும் பதிக்கவில்லை. இடைவெளிகள் கொண்ட எழுத்து, கதைசொல்லும் மரபு , நடப்பியல் பாணி என்று ஏற்கனவே உள்ள ஏதாவதொரு வடிவத்தின் நீட்சியாகவே உள்ளன. கே.ஏ. குணசேகரனின் தலித் நாடகங்கள் கதை சொல்லும் பாணியிலானவை. ரவிக்குமாரின் வார்த்தை மிருகம், பிரேமின் பாறையைப் பிளந்து கொண்டு ஆகியன இயக்குநருக்கு அதிகாரமளிக்கும் இடைவெளிகள் கொண்ட பிரதிகள். ஜீவாவின் பிரதிகள் பார்வை யாளர்களிடம் முறையிடும் தொடக்கம், திருப்பம், உச்சம் என்ற நடப்பியல் வடிவங்கள். இவைகள் வெவ்வேறு ரூபத்தில் இருந்தாலும் தலித் பார்வையாளர்களை மட்டும் நோக்கி நீள்வன என்பதில் மாறுபாடுகள் இல்லை.
தமிழ் நவீன நாடகப்பிரதிகளில் அடையாளப்படும் கதைசொல்லல் வடிவம், வடிவச்சீர்மை வடிவம் என்றை இரண்டிலிருந்தும் வேறுபட்ட நாடகப் பிரதிகள் சிலவும் தமிழில் அச்சாகியுள்ளன.ஒருவித நேர்கோடற்ற தன்மையிலும்,நிகழ்வுகளின் போது தொடர்ச்சியற்ற பாங்கும்,மொழியில் இருண்மையின் தூக்கலும் கொண்ட பிரதிகள் அவை.இவ்வம்சங்கள் காரணமாகவே இப்பிரதிகள் மேடையேற்ற வாய்ப்புக்கள் இன்றி அச்சில் மட்டும் உள்ளன. எம்.டி. முத்துக்குமாரசாமியின் சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப்போவதில்லை, குதிரைக் காரன் கதை, பிரேமின் ஆதியிலே மாம்சம் இருந்தது, அமீபாக்களின் காதல், எஸ்.ராம கிருஷ்ணனின் இருநாடகங்கள் முதலியன அத்தகையன நாடகங்கள்.நாடக அரங்கேறத்த்தில் தொடர்ந்து செயல்படும் வேலு சரவணனின் குழந்தைகள் நாடகங்கள், முருகபூபதியின் சோதனை முயற்சிகள் போன்றவற்றிலும் இந்த தொடர்ச்சியற்ற தன்மைகள் உண்டு.
முடிவுரை:
தமிழ் நவீன நாடகங்கள் பற்றிய பேச்சு அல்லது சொல்லாடல் என்பது ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல.அப்பேச்சு ஒரு விதத்தில் தம்கால கலை, இலக்கிய முயற்சிகள் மீதும், சமூக இயக்கப் போக்குகள் மீதும் அதிருப்திகளை வெளிப்படுத்திய இளைஞர்களைப் பற்றிய பேச்சு. இன்னொரு விதத்தில் தமிழ் நாடகக்கலைக்கு இந்திய அடையாளத்தினையும் தமிழ் அடையாளத்தினையும் கொடுக்க மேற்குலகச் சிந்தனைகளை உள்வாங்க முயன்ற சோதனைகளின் வெளிப்பாடுகளைப் பற்றிய பேச்சு. இப்படிச் சொல்வதற்குப் பதிலாக வேறுவிதமாகச் சொல்லிப் பார்க்கலாம். நாடக எழுத்துக்களில் நவீன மனிதனையும் அவனது சிக்கல்களையும் அடையாளப்படுத்திட முயன்ற எழுத்தாளர்களைப் பற்றிய பேச்சாகவும் விதம்விதமாக மேடைக்காட்சிகளை அமைத்துப் பார்க்க முயன்ற அரங்கியல் செயல்பாட்டாளர்களின் வெளிப்பாட்டைப் பற்றிய பேச்சாகவும் இருக்கக் கூடியது. இதே நேரத்தில் அதனைத் தனிமனிதர்களாகவும் நிறுவனங்களின் உதவியோடும் நாடகக் கலையின் பரிசோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்ட ஒரு சிறு கூட்டத்தைப் பற்றிய பேச்சாகவும் இருந்தது என்றும் சொல்லலாம்.தமிழின் நவீன நாடகங்கள் என்பன ஒட்டுமொத்த தமிழ் நிலப்பரப்பில் வாழும் மனிதக் கூட்டத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகச்சிறிய ஒன்றுதான். ஆனால் அவை தனது மொழிக்கும் அதன் வெளிப்பாட்டிற்கும் அதன்வழி உலகத்தோடு தொடர்பு கொள்பவர்களுக்கும் புதியனவற்றைக் கொண்டு வரவேண்டும் என்ற தீராத வேட்கையின் வெளிப்பாடு. அந்த வேட்கையின் பின்னால் தமிழர்களின் நிகழ்கால இருப்பில் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்கள் கிட்டும் என்ற இலட்சியப் பயணங்களும் கூட இருந்தது; இருக்கிறது.
[தமிழ் நவீன நாடகத்தோடு தொடர்புடைய நாடக குழுக்கள், நாடக ஆசிரியர்கள், நாடகவிழாக்கள், நிதிநல்கை நிறுவனங்கள் போன்றனவற்றின் பட்டியல் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன]
அ].நாடகங்களும்நாடக ஆசிரியர்களும்
ஆசிரியர நூலின் பெயர் - பதிப்பு இடம் பெற்றுள்ள நாடகங்கள்
1]ஆறுமுகம்.வ. கருஞ்சுழி /2000 ¢தலைக்கோல்,புதுவை14 1.கருஞ்சுழி 2.ஊசி
2]இந்திரா பார்த்தசாரதி¢ இந்திரா பார்த்தசாரதி இராமாநுஜர /1997 இந்திராபார்த்தசாரதி நாடகங்கள் /2000 தமிழ்ப்புத்தகாலயம், சென்னை-17 ராஜராஜன் பதிப்பகம் 19,கண்ணதாசன் சாலை தியாகராயநகர், சென்னை இராமாநுஜர் 1.இறுதி ஆட்டம் 2.கொங்கைத்தீ 3.ஔரங்கசீப் 4.நந்தன் கதை 5.பசி 6. மழை 7. காலயந்திரங்கள் 8. புரனபி ஜனனம் புனரபி மரணம் 9.தர்மம் 1.போர்வை போர்த்திய உடல்கள்
3]இராமானுஜம்,சே. இராமானுஜம் நாடகங்கள் காவ்யா, 14,முதல் குறுக்குத்தெரு ற்ரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை-24 1.புறஞ்சேரி 2.பிணம் தின்னும் சாத்திரங்கள் 3.சுமை 4.முகப்போலிகள் 5.சஞ்சயன் காட்சி தருகிறான் 6.அரவை இயந்திரங்கள் 7.அக்கினிக்குஞ்சு 8.கேகயன் மடந்தை 9.வெறியாட்டம் 10.செம்பவளக்காளி 11.மௌனக்குறம்
4.இராமசுவாமி.மு செண்பகம் இராமசுவாமி துர்க்கிர அவலம் 1986 சாபம்! விமோசனம்.? /2000 மதுரை ருத்ராபதிப்பகம், தஞ்சை-7 துர்க்கிர அவலம் 1.சாபம் விமோசனம் 2.புரட்சிக்கவி 3.ஆபுத்திரன்
5பிரபஞ்சன் முட்டை அன்னம், சிவ்கங்கை 1.முட்டை 2. அகல்யா
6.முருகபூபதி கூந்தல் நகரம்-2000 அனன்யா, தஞ்சாவூர்-5 1.சரித்திரத்தின் அதீத ம்யூசியம் 2.கண்ணாடியுள் அலைவுறும் பிம்பங்கள் 3.வனத்தாதி 4.தேகவயல் 5.ரகசிய நிழல்கள் 6.தனித்திருக்கப்பட்டவர்கள் 7.கூந்தல் நகரம் 1.செம்மூதாய்
7பிரேமிள்¢ நக்ஷி¢த்திரவாஸி-1993 முன்றில்,சென்னை 1.நக்ஷித்திரவாஸி 2.கூட்டியக்கம்
8இன்குலாப் ஔவை-1998 அகரம் , கும்பகோணம் 1ஔவை 2. மணிமேகலை
9]ராம்.எஸ். எம்,ஏ எப்போ வருவாரோ/1994 ராம்.எஸ். எம்,ஏ 1.சுயதர்மம் 2.மூடிய அறை 3.மணிமேகலையின் கண்ணீர் 4.எப்போ வருவாரோ
10கே.ஏ.குணசேகரன் பலிஆடுகள 1999 சத்தியசோதனை- 1998 பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு-2001 நவஜோதி பதிப்பகம் என்சிபிஎச்,சென்னை அடையாளம் வெளியீடு, கருப்பூர் 1.ப்லி ஆடுகள் 2.அறிகுறி 3.பாறையைப் பிளந்துகொண்டு 4.கனவுலகவாசி 5. தொட்டில் தொடங்கி 1.சத்தியசோதனை 1.பவளக்கொடி
11]இளையபத்மநாதன் அலைகள் ஒரு பயணத்தின் கதை தீனிப்போர்
காந்தி மேரி.எம்.எஸ் காட்டுக்குள்ளே திருவிழா-1999 சிறுவர் நாடகங்கள்
ஞாநி பலூன்-1981 1983 ¢ஞானபானு வெளியீடு சென்னை பலூன்
ரமேஷ;¢பிரேம் அமீபாக்களின் காதல் அமீபா,புதுவை 1.ஆதியிலே மாம்சம் இருந்தது 2.அமீபாக்களின் காதல்
ஞான ராஜசேகரன் வயிறு-1980 அன்னம் ,சிவகங்கை 1.வயிறு 2.மரபு 3.பாடலிபுத்திரம்
எம்.டி.முத்து குமாரசாமி காலச்சுவடு வெளி நாகர்கோயில் சென்னை 1.சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப் போவதில்லை 2.குதிரைக்காரன் கதை
எஸ். ராமகிருஷ்ணன் வெளி சென்னை 1.உருளும் பாறைகள் 2.தனித்திருக்கப்பட்டவர்கள் 3.சூரியனின் அறுபட்ட சிறகுகள் 4.அரவான்
இரவி நிலாக்கூட்ட விருந்து 2004 விற்பனை உரிமை சுதர்சன் புக்ஸ் 1.நிலாக்கூட்டவிருந்து 2.சின்ன சின்ன எலிகள் 3.டாரோவும் பாட்டியும் 4.பாண்டோரா வின் பெட்டி 5.நிலவைத் தேடி 6.ஓரு கழுதையின் கதை 7.கானக ரத்தினம். 8.மழைக் காளான்,9. மந்திர ஆப்பிள் 10 .நீலக்குதிரை நிஜந்தன் அழிதல் காணும் காலம் -1992 அரூபம் ,சென்னை 1.மிச்சம் 2.மீட்பின் முயற்சியில் 3.நிலைப்பு 4.ஓய்தல் பொழுது 5.இசைபட இழத்தல் 6.அழிதல் காணும் காலம்
ஈ] மைய சங்கீத நாடக அகாடமி நடத்திய இளம் இயக்குநர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டம்
நாடகம் குழு இயக்குநர் விழா ஆண்டு
துர்க்கிர அவலம் நிஜநாடக இயக்கம் மு.ராமசுவாமி மண்டல்ம்-பெங்களூர் தேசியம்- புதுடெல்லி 1984
கட்டியங்காரன் கூத்துப்ப்ட்டறை கே.எஸ்.ராஜேந்திரன் எர்ணாகுளம்- மண்டலம் 1985
நந்தன் கதை ¢தளிர் அரங்கு ரா.ராசு மைசூர் டெல்லி தேசியம்-புதுடெல்லி 1986
சாபம்!விமோசனம்? நிஜநாடக இயக்கம் மு.ராமசுவாமி சென்னை 1987
கடவுள் எது.? மு.நடேஷ் திருவனந்தபுரம் 1988 கொங்கைத்தீ அரங்கம், தஞ்சை ரா.ராசு பாண்டிச்சேரி 1989
கருஞ்சுழி தலைக்கோல்¢ ஆறுமுகம.வ.
நாயைப்பறிகொடுத்தோம் தளிர் அரங்கு குருவம்மாள் விஜயவாடா (தேசியம்) ‘’ 1990
“ தீனிப்போர் பல்கலை அரங்கம் மங்கை மைசூர் 1991
உருளும் பாறைகள் சுதேசிகள், மதுரை
ஊசிதலைக்கோல் ஆறுமுகம்.வ ஹைதராபாத் ‘’ 1992
‘’ பனிவாள் ஆழி, புதுவை வேலு சரவணன் மதுரை 1993
நவீன நாடகங்களின் பின்னணியில் மொழி பெயர்க்கப்பட்ட நாடக ஆசிரியர்கள்
1.மோகன் ராகேஷ்-இந்தி- சரஸ்வதி ராம்நாத்
2.பாதல் சர்க்கார்- வங்காளம்- கோ.ராஜாராம், பானுமதி,திசு சதாசிவம்
3.கிரிஷ் கர்னாட்- கன்னடம்- விஜயலட்சுமி/ பாவண்ணன்
4.விஜய் டெண்டுல்கர்-
5.சந்திரசேகர கம்பார் -கன்னடம்- திசு சதாசிவம்/
6.சாமுவேல் பெக்கட்-ஐரிஷ்-
7.பெர்ட்டோல்ட் பிரக்ட்-ஜெர்மன் -திசு சதாசிவம்
8. யூழேன் இயொனஸ்கோ-பிரெஞ்ச்-டி.எஸ்.தட்சணாமூர்த்தி/பென்னேஸ்வரன்
9.ஸீக்பிரிட் லென்ஸ்-நிரபராதிகளின் காலம்- தனுஸ்கோடி
10.ஜி.சங்கரப்பிள்ளை-மலையாளம்-ராமானுஜம்
ஆ] நாடகக் குழுக்கள்1.பரீக்ஷா,சென்னை-19782.வீதி,சென்னை-19783.கூத்துப்பட்டறை, சென்னை-19774.நிஜநாடக இயக்கம், மதுரை-19785 முத்ரா, சென்னை-19826.எது..? சென்னை -19887. சுதேசிகள்,மதுரை-19888.ஒத்திகை, மதுரை-19919.தியேட்டர் லெப்ட், மதுரை-199110.தளிர் அரங்கு, காந்திகிராமம்- 198611.துளிர், தஞ்சை-198712.அரங்கம்,தஞ்சாவூர்-198813.ஜ்வாலா,மதுரை-198814.ஐக்யா,சென்னை-198915.யவனிகா,சென்னை-199116,Audio Visual People, Chennai- 199117.திருச்சி நாடக சங்கம்-199018.சென்னைப் பல்கலை அரங்கம்-198919.களம், சென்னை-199320.கூட்டுக்குரல், புதுவை- 199221.ஆப்டிஸ்ட், புதுவை 199422.ஆழி, புதுவை 199423. தன்னானே கலைக்குழு,புதுவை 1994
இ] நாடகவிழாக்கள்1.சங்கீத நாடக அகாடமியின் மண்டல மற்றும் தேசிய நாடகவிழாக்கள்-1984-19932.மதுரையில் நிஜநாடக இயக்கம் நடத்திய நாடகவிழாக்கள்-1988,1990.19923.கூத்துப்பட்டறையுடன் இணைந்து புரிசைத் துரைசாமித் தம்பிரான் குழுவினர் நடத்திய நாடகவிழாக்கள்-1989,19904.திருச்சியில் நடந்த பாதல் சர்க்கார் நாடகவிழா-19895. சுபமங்களா ஆசிரியராக இருந்த கோமலின் முயற்சியில் நடந்த ஸ்ரீராம் குருப்பின் நிதியுதவிடன் நடந்த நாடகவிழாக்கள்- 1989,1992,1993,19946.புதுச்சேரியில் தலைக்கோல் குழுவினர், களம் அமைப்பினர், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளியின் தேர்வுக்கான தயாரிப்புகள் எனச்சில7.1990களில் மதுரை, புதுவை, நெய்வேலி, கடலூர் , தஞ்சை எனப் பல இடங்களில் நடந்த தலித் கலைவிழாக்கள்8. பிற மாநிலங்களில் நடைபெறும் மண்டல நாடகவிழாக்கள்9.ஜெர்மன் தூதராலயத்துடன் இணைந்த மாக்ஸ்முல்லர் பவன், சென்னை, அல்லியான்ஸ் பிரான்சே, சென்னை, புதுவை ஆகியவற்றின் ஆதரவுடன் நடந்த நாடகவிழாக்கள்
1.பரிக்ஷா மேடையேற்றியுள்ள நாடகங்கள் (1978 நவம்பர் தொடங்கி 1. இந்திராபார்த்தசாரதி -போர்வை போர்த்திய உடல்கள் 2.அம்பை - பயங்கள்3.ந.முத்துசாமி - நாற்காலிக்காரர் ,கட்டியக்காரன்4 அறந்தை நாராயணன் - மூர் மார்க்கெட5¢ ஞாநி - ஏன்,பலூன,ஸ்ரீமான் பொதுஜனம்6.பிரபஞ்சன் - முட்டை7 ஜெயந்தன் - மனுஷா மனுஷா8.கே.வி. ராமசாமி - ஹிரண்யன்9 வெங்கட்சாமி - ஸ்ரீமான் பொதுஜனம்10. கே.எஸ் .ராஜேந்திரன் - வரிசை11.கங்கை கொண்டான் - ஊர்வலம் 12 பாதல் சர்க்கார் - தேடுங்கள்,முனியன், பிறகொரு இந்திரஜித்,13.ரஞ்சித் ராய் சௌத்ரி - பாரத தர்மம்14.அ.ராமசாமி - பல்லக்குத் தூக்கிகள்15 சி.என். அண்ணாதுரை - சந்திரமோகன்பூமிகா ( ஞாநியின் துணைவி பத்மாவின்வழிநடத்துதலில் இயங்கிய நாடகக் குழு)1.சுஜாதா - சரளா, இரு கடிதங்கள் 2.அம்பை - பயங்கள் 2.கூத்துப்பட்டறை ( 1980 தொடங்கி….1.ந. முத்துசாமி/ கிருஷ்ணமூர்த்தி - சுவரொட்டிகள் -19802. ந.முத்துசாமி/ மானவேந்திரநாத், கிருஷ்ணமூர்த்தி - உந்திச்சுழி-19813. ந.முத்துசாமி/ கோபாலகிருஷ்ணன் - விறகுவெட்டி-19834.கே.எஸ்.ராஜேந்திரன் - பண்டிதர் மூவரும் மாண்டதொரு சிங்கமும்-19855 -அவரே- -அமைதி கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது-19856.வ.ஆறுமுகம் - இடதுசாரிக்காகக் காத்திருத்தல்-19857. -அவரே- - முற்றுகை, சுவரொட்டிகள்-19878.தனுஷ்கோடி -நிரபராதிகளின் காலம்-19899.ந.முத்துசாமி - இங்கிலாந்து, தூதகடோத்கஜம்-198910.சே.ராமானுஜம் - நாற்காலிக்காரர்,-1989, அண்டோரா-199211.பிரசன்னா ராமசாமி, பாகீரதி, ஜான் மார்ட்டின் - கோணிக்காரன்- 199012.அன்மோல் வெலானி - இங்கிலாந்து - 199013.பிரவீன் - காம்யூவின் காலிகுலா-1994,14. ந. முத்துச்சாமியின் தலை
3.நிஜநாடக இயக்கம் 1978 தொடங்கி… 1.பண்டிதர் மூவரும் மாண்டதொரு சிங்கமும்-1978 2.நல்வாழ்வை நோக்கிப் பீ டு நடைபோடுகிறது நாடு 3.ஆஸ்தான மூடர்கள் -1978 4.வெத்துவேட்டு -19795. கபாடி மேட்ச் -1979 6. என் பிரயத்திற்குரிய-19807. பிணந்தூக்கிகள-1981¢ 8.நியாயங்கள்-1981 9. துண்டு- 1981 10. பாதுகாவலன் -198211. பலூன் -1982 12.நவீன குசேலர்-198313. அர்த்தநாரீஸ்வரர்-1983 14.இந்தியா டுடே-198315. துர்¢கிர அவலம்-1984 16. சாபம்.! விமோசனம்..?-198717.ஸ்பார்ட்டகஸ்-1989 18.இரைச்சல் -198919.புரட்சிக்கவி-1990 20. பட்டணம் போகும் பாகவதர்கள் -1921. இருள் யுகம்-1994 22.முனி-1995 23. கலிலியோ-1998 24.சாம்பான்25.கலகக்காரர் தோழர் பெரியார்-2004
துணை நின்ற நூல்கள்
அண்ணாமலை,சி., (2003) ; நாடகம் பதிவும் பார்வையும்,காவ்யா, சென்னை-24 (2004) கலை வெளி மீதில்,காவ்யா, சென்னை-24(2004) தமிழில் நாடகப் பதிவுகள், ¢,காவ்யா, சென்னை-24
இராமசுவாமி,மு., (1998) ; தமிழ் நாடகம் நேற்று இன்று நாளை,ருத்ரா தஞ்சாவூர்,-7 இராமசுவாமி,மு., முருகேசன், கு. கோவிந்தசாமி,பெ.(பதி) (1999) ; இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகங்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை,113
குணசேகரன்,கே.ஏ.,(1999) ; இன்றைய தமிழ் நாடகச் சூழல்,தன்னானே, பாண்டிச்சேரி,-8 பகவதி.கு.,(பதி) (2000) ; தமிழ் நாடகம் ; நேற்றும் இன்றும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை,113
மங்கை.அ. (2001) ; பெண்-அரங்கம்- தமிழ்ச்சூழல்,ஸ்நேகா,சென்னை
ராமசாமி,அ.,(1992) ; நாடகங்கள் விவாதங்கள்,ஒப்பனை, புதுவை (1999) ; ஒத்திகை,விடியல், கோவை