Linggo, Nobyembre 16 2008

தலித் இலக்கியம் : 2000 க்கு முன்னும் பின்னும்
தொலைபேசியில் அழைத்த அவர் பல்கலைக்கழக இலக்கியத்துறையொன்றில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். தலித் இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்து நூல் ஒன்றை எழுதப் போவதாகக் கூறி யாரையெல்லாம் படிக்க வேண்டும் என்று கேட்டார். காலச்சுவடு பதிப்பக வெளியீடான தமிழினி 2000 பெருந் தொகுப்பில் இருக்கும் எனது தமிழ் தலித் இலக்கியம் என்ற கட்டுரையைப் படித்தீர்களா? என்று கேட்டேன். அக்கட்டுரையை வாசித்து விட்டேன்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளின் படைப்பு களைத் தொகுத்து வைத்துள்ளேன்; வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு - அதாவது 2000-க்குப் பிறகு வந்துள்ள படைப்பாளிகள் மற்றும் படைப்புகள் விவரம் வேண்டும் என்றார். கவி சுகிர்தராணியும் சிறுகதையில் அழகிய பெரியவனும் ஜே.பி.சாணக்யாவும் நினைவுக்கு வர அவர்களின் தொகுதிகளின் பெயரைச் சொன்ன போது திரும்பவும் இரண்டு நாள் கழித்துத் தொலைபேசியில் அழைப்பதாகக் கூறி வைத்து விட்டார்.
தனித்துவத்தை நிலைநாட்டிக் கொண்டு தொடர்ந்து படைப்புகளைச் செய்துவரும் தலித் படைப்பாளிகளின் பெயர்கள் நினைவுக்கு வருவது போலப் புதிய பெயர்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. 2000-க்கு முன் தமிழ்க் கருத்தியல் தளத்திலும் படைப்புத்தளத்திலும், விமரிசனத் தளத்திலும் தவிர்க்க முடியாத சொல்லாகவும், சொல்லாடலாகவும் இருந்த தலித், தலித்தியம், தலித் கலை இலக்கியம் ஆகியன அடைய நினைத்த இலக்குகளை அடைந்து விட்டதால் இனிச் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என அங்கேயே தங்கி விட்டதா? ஆரம்பித்த வேகத்தில் சில பத்து எழுத்தாளர்களை அடையாளப் படுத்திய தலித் இலக்கியப் போக்கு அடுத்த கட்ட நகர்வினை முன்னெடுக்கும் படைப்பாளிகளை உருவாக்காமல் நின்று போய்விட்டது என்றால் புனைகதையாசிரியர் சோ.தர்மன் சமீபத்தில் ‘தலித்தியம் பின் தங்கி விட்டது’ என்று சொன்னது சரியான கூற்று தானா? [தலித்தியம் பின் தங்கி விட்டது ! –சோ.தர்மனிடம் நேர்காணல் செய்த தீராநதி (ஜூன்,2008) அந்நேர்காணலுக்குத் தந்திருந்த தலைப்பு இது]. பின் தங்கி விட்டது உண்மை தான் என்றால் அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும் ?இடது சாரி இயக்கங்கள் சார்ந்து இயங்கும் படைப்பாளிகளின் தொடர்ச்சியில் இப்படியான அசைவின்மையும் வெற்றிடமும் ஏற்படாத போது தலித் இயக்கங்களுக்கு மட்டும் இத்தகைய நிலை ஏற்படுவதற்கான காரணங்களும் சாதியம் சார்ந்ததுதானா? என்றெல்லாம் யோசித்துப் பார்க்க வாய்ப்பாக அமைந்த அந்தப் பேராசிரியரின் தொலைபேசி அழைப்புக்கு நன்றி சொல்லி விட்டு அசைபோடத் தொடங்கினேன்.
தீண்டாமை காரணமாகத் நான் ஒதுக்கப்படுகிறன் என்பதைத் தன்னுணர்வோடு- அதனால் உண்டாகும் வலியோடும் கோபத்தோடும் சொல்வதைத் தனது தனித்துவமான அடையாளமாக முன் மொழிந்து எழுந்தது தமிழ் தலித் இலக்கியம். 2000-க்கு முன்பு பாமாவின் கருக்கும் சங்கதியும் தொடங்கி வைத்த அந்தத் தனித்துவம் தொடர்ந்து வளர்த்தெடுக்கப் படாமல் போனதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? தலித் இலக்கியப் பரப்பில் தன் வரலாறுகளுக்கு இடமில்லை என உறுதியாகக் கூற முடியுமா? என்று கேள்வியை எழுப்பி விமரிசன ரீதியாகத் தக்க காரண காரியங்களோடு அவ்வகை எழுத்துகளைக் கைவிட்டதாகச் சொல்ல முடியாது. வந்த வழி எதுவோ அந்த வழியிலேயே வெளியேறியும் விட்டன தன் வரலாறுகள். மாராட்டிய மொழியிலிருந்தும், கன்னடத்திலிருந்தும் தன் வரலாறுகளை மொழி பெயர்த்துப் பெற்ற உந்துதலிலிருந்து ஏராளமான தன் வரலாறுகள் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததுண்டு.ஆனால் வந்தனவோ மிகக் குறைவு. அவையும் முழுமையான தன் வரலாறுகள் அல்ல. பேராசிரியர் கே.ஏ.குணசேகரனின் தன் வரலாற்றுக் கதையான வடுவும், அழகிய பெரியவனின் தகப்பனின் கொடியும் தன் வரலாற்றுச் சாயல் கொண்ட நெடுங்கதைகள் என்பதை வாசித்தவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.
2000-க்கு முன் தீவிரமான தலித்திய விமரிசகராகவும் தலித்தியக் கருத்தியல்களை உருவாக்கித் தந்தவருமான ராஜ் கௌதமன், தலித்திய விமரிசனத்தைத் தள்ளி வைத்து விட்டு 2000-க்குப் பின் இரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டுத் தலித் சொல்லாடல் வெளியிலிருந்து ஒதுங்கி விட்டார். ராஜ்கௌதமனின் இரண்டு நாவல்களும் –– சிலுவை ராஜ் சரித்திரம், காலச்சுமை-ஒருவிதத்தில் தன் வரலாற்றுத் தன்மை கொண்ட நாவல்கள் தான். இவை தவிர 2000-க்குப் பின் வந்த பெரும்பாலான தலித் நாவல்கள் தன் வரலாற்று போக்கிலிருந்து விலகிச் சென்றனவாக அடையாளம் பெற்றன. பாமாவின் மூன்றாவது நாவலான வன்மம் தலித் சாதிகளாக - ஒடுக்கப் பட்ட சாதிகளாக அடையாளப் படுத்தப் பட்ட குழுக்களுக்கிடையே உருவாகி வரும் முரண்பாட்டை- வன்மத்தை- விவரித்தது. உருவாகும் வன்மத்தால் ஆதிக்க சாதிகள் அடையும் பலன்களை விரிவாகப் பேசாமல் உள்முரண்பாட்டை மட்டுமே பேசியதால் கூடுதல் கவனம் பெறாமல் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். 2000-க்கு முன் தனது உப்பு வயல் நாவலை வெளியிட்டிருந்த ஸ்ரீதர கணேசன் தொடர்ந்து நாவல்களை எழுதி வெளியிடுபவராக உள்ளார். ஆனால் அந்நாவல்கள் சாதிய அடையாளங்கள் கொண்டன என்றாலும் வர்க்க முரண்பாட்டை மையப்படுத்தியே வடிவமைக்கப் பட்ட கதை வடிவத்தைக் கொண்ட பிரதிகளே.
விரிவான வாசக கவனத்தையும் விமரிசனப் பார்வைகளையும் எதிர்கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற சோ.தர்மனின் கூகையையும், இமையத்தின் செடலையும் தலித் இலக்கியப் பட்டியலில் சேர்க்கலாம் என நினைக்கும் போது கொஞ்சம் தயக்கமும் இருக்கிறது. காத்திரமான படைப்புச் செயலில் ஈடுபடும் இவ்விருவரும் தங்களை- தங்கள் படைப்புகளை- தலித் என்னும் கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை என்று உரத்து முழங்கி வருகின்றனர். ஆனால் அந்தக் கூண்டு தரும் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வேண்டாமென விலக்குபவர்களாகவும் தெரியவில்லை. தலித் இலக்கியம் தனது வரையறைகளை உருவாக்கிக் கொள்ளத் தொடங்கி எல்லைகளை விரிவாக்கிய போது இவ்விருவரின் எழுத்துகளும்- குறிப்பாக அவ்விருவரது நாவல்களும் சிறுகதைகளும் அந்த வரையறைகளுக்கும் போக்கிற்கும் காத்திரமான பங்களிப்பைச் செய்தன என்பதை விமரிசனபூர்வமாக நிறுவ முடியும். இமையமும் சோ.தர்மனும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தலித் இலக்கியத்தின் அழகியலையும் கருத்தியலையும் இவ்விருவரது படைப்புகளும் உருவாக்கித் தந்துள்ளன என்ற நேர்மறைக் கூற்றைப் புறந்தள்ளி விட முடியாது. சூழல் உருவாக்கும் நெருக்கடி அல்லது சலுகைகளைத் தனி மனிதர்கள் மீறிச் சென்று விட முடியாது என்றே தோன்றுகிறது.
தலித்தியம், தலித் இலக்கியம், அதன் அழகியல் போன்றவற்றை உருவாக்குவதற்கான பங்களிப்பைச் செய்துள்ள படைப்பாளி சிவகாமியின் ஈடுபாடுகள் 2000-க்கு பின் பல தளங்களில் கிளை பிரிந்து நிற்கின்றன. புதிய கோடாங்கி என்னும் இதழின் வழி அறிய வரும் அவரது செயல்பாடுகள் பண்பாட்டுத் தளங்களிலிருந்து விலகிப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரும் போக்காக மாறி வருவதைக் காட்டுகின்றன. தலித்துகள்-அரவானிகள் கூட்டமைப்பு, பெண்கள் ஐக்கியப்பேரவை, தலித் நில உரிமை இயக்கம், எஸ்.சி. எஸ்.டி ஊழியர்கள் மாநாடு எனத் தாவித் தாவிச் செல்லும் நிலையில் அவரது படைப்பாளி அடையாளம் குறைந்து செயலாளி அடையாளம் மேம்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. செயலாளியாக மாறினாலும் தொடர்ந்து எழுதும் ஆற்றல் கொண்டவர் சிவகாமி. பழையன கழிதலும் ஆசிரியர் குறிப்புகள் (ப.க.ஆ.கு.) நாவலில் அவர் வைத்த தன் விமரிசன பாணியிலிருந்து விலகிச் சூழலை விமரிசிக்கும் பாணியைப் பின்பற்றி எழுதி வரும் ‘புதியவர்கள்’ நாவல் முழு வடிவம் பெறும்போது அதன் வீச்சும் இலக்கும் எதுவெனச் சொல்ல முடியும்.
அங்கீகரிக்கப் பட்ட சிறுகதை வடிவம், உத்தி, நுட்பங்கள் என்பனவற்றைப் பொருத்திப் பார்த்து விமரிசிக்கும் போது இவையெல்லாம் தேறாது என ஒதுக்கத் தக்கனவாக இருந்தன என்றாலும், தொண்ணூறுகளில் வெவ்வேறு வட்டாரப் பின்னணியின் சாதிய முரண்பாடுகளைக் கதைகளாக எழுதி வெளியிட்ட விழி பா. இதயவேந்தன், பாப்லோ அறிவுக்குயில், அறிவழகன், அபிமானி, பாமா, போன்றவர்கள் தங்களின் படைப்புலகத்தையும் கருத்துலகத்தையும் புதிய தளங்களுக்குள் நகர்த்தாமல் அங்கேயே தங்கி விட்டார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. அழகிய பெரியவன் தொடர்ந்து எழுதுபவராக இருக்க சுதாகர் கத்தக், வெ.வெங்கடாசலம், ஜே.பி.சாணக்யா போன்றவர்கள் தொடர்ந்து எழுதும் முயற்சியிலிருந்து விலகி நிற்கின்றனர் என்றே சொல்லத் தோன்றுகிறது. அப்படி விலகி நிற்கத் தனிநபர் சார்ந்த காரணங்கள் இருக்கக் கூடும் என்றாலும் இயக்கம் சார்ந்து உருவாகும் படைப்பாளிகள் இயக்கத்தின் திசைமாற்றத்தோடு ஒத்துப் போக முடியாமல் பின் தங்கி விட நேர்வதுமுண்டு என்பதையும் மறுத்து விட முடியாது.
இந்த நேரத்தில் முற்போக்கு இலக்கியம் என்ற எல்லைக்குள் செயல்படுவதாக நம்பும் ஆதவன் தீட்சண்யாவின் படைப்புச் செயல்பாடு அப்படி நின்று போகவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. தொடர்ந்து அவர் எழுதும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அனைத்தும் சாதீயத்தின் மீதான விமரிசனங்களாகவே இருக்கின்றன. காத்திரமான விமரிசனங்களை வைக்கத் தக்க இடங்களைக் கண்டு பிடித்து தீவிரமாக அதைத் தாக்குவதற்குரிய மொழியையும் புதிய புதிய படைப்பு முறையையும் கைக் கொள்வதைப் பிரக்ஞையோடு செய்கிறார் என்றே தோன்றுகிறது. இந்தப் பிரக்ஞை அவர் செயல் படும் முற்போக்கு இலக்கியப் போக்கில் இல்லாத ஒன்று. பொருளாதார விடுதலையை அல்லது சமத்துவத்திற்கான குரல்களை எழுப்புவர்கள் தங்களின் குரல்களை முற்போக்குக் குரல்கள் என்று முன் மொழிந்த போதும் பண்பாட்டுத் தளத்தில் அக்குரல்கள் என்ன மாற்றத்தைச் செய்யும் எனச் சொல்ல முடியாத தயக்கத்தைக் கொண்டவர்களாக இருந்தனர் ; இருக்கின்றனர். ஆனால் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்கள் அப்படிப் பட்டவை அல்ல. இந்திய சமுதாயத்தில் பொருளாதார சமத்துவம் இல்லாத காரணத்தால் பாரதூரமான வேறுபாடு நிலவுகிறது என்பதைத் தனது படைப்புகளில் மையப் படுத்தாமல், தீண்டாமை சார்ந்து- சாதி காரணமாக -ஒதுக்கப்படும் புள்ளிகளையே மையப் படுத்துகின்றார். சாதி வேறுபாடு சார்ந்த புள்ளியை அடையாளப் படுத்தித் தாக்குதல் தொடுக்கும் தீட்சண்யா, பிற முற்போக்கு அல்லது இடதுசாரிப் படைப்பாளிகளைப் போல இயக்கம் கற்றுத் தந்துள்ள முன் முடிவை நோக்கி நகர்த்தாமல் விட்டு விடுவதன் மூலம் அவர்களிடமிருந்து வேறுபட்டும் நிற்கிறார். இதுவே கூட இன்றைய நிலையில் ஒரு தலித் படைப்பாளி தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போதுமான பாதுகாப்பு அரண் என்று சொல்லலாம். அதன் மூலம் ஒரு தலித் வாசகரிடம் கோபத்தையும், தலித் அல்லாத வாசகரிடத்தில் குற்றவுணர்வையும் உண்டாக்கி சாதியத்தின் மீதான கவனத்தைக் குவித்தல் சாத்தியம் என்றே தோன்றுகிறது. சுகிர்தராணியின் பெண் மையக் கவிதைகளும் தலித் மையக் கவிதைகளும் இந்த எல்லை வரை வந்து நிற்பதன் மூலமே கவனிக்கத் தக்க கவிதைகளாக ஆகியுள்ளன என்று சேர்த்தே குறிப்பிடலாம்.
தலித் கலை இலக்கியம் சார்ந்த புதிய படைப்புகளும் படைப்பாளிகளும் கவனம் பெறத்தக்க வகையில் வெளிப்படவில்லை என்ற போதிலும் சமூக நிகழ்வுகள் சார்ந்த கவன ஈர்ப்பும் வெளிப்படுத்துதலும் 2000-க்குப் பிந்திய ஆண்டுகளில் கூடுதலாகியுள்ளன. ஊடகங்களின் கவனத்துக்கே வராமல் போயிருக்கக் கூடிய பல நிகழ்வுகள் தலித் இயக்கங்களின் செயல்பாடுகளால் அரசு எந்திரங்களின் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளன. மேலவளவு வன்முறை தொடங்கி, பாப்பா பட்டி,கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் நக்கலமுத்தன் பட்டி, செடப்பாளையம்,காக்கி வாடன் பட்டி வரை ஜனநாயக எல்லைக்குள் நின்று கிடைக்க வேண்டிய குடிமை உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்தும் தைரியமும் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கக் காரணம் புதிய தலித் எழுச்சியின் பின் விளைவுகள் தான். கிறிஸ்தவ மதத்திற்குள் செயல்படும் ஒதுக்கல்கள் இன்று வெளிப்படையாகப் பேசப்படுவதன் பின்னணியில் தலித் இயக்கங்கள் இருக்கின்றன. சாதி வேறுபாட்டின் ஆறாத ரணமாக இருந்துவரும் உத்தப்புரம் கலவரங்களின் வரலாறு அரை நூற்றாண்டைத் தாண்டியது என்றாலும் இந்த முறை தான் ஊடகங்களாலும் அரசாலும் கவனம் பெறும் நிகழ்வாக ஆகியுள்ளது. அதன் பின்னணியிலும் தலித் அரசியலும் தலித் இயக்கங்களின் பருண்மையான வெளிப்பாடுகளும் தான் என்ற போதிலும் தீண்டாமை ஒழிப்பு என்ற பண்பாட்டு நடவடிக்கைகளை மையப்படுத்திய இயக்கங்கள் இங்கு எடுக்கப்படாமலேயே நின்று போய்விட்டன. அதற்கான அமைப்புகளும் பண்பாட்டுத்தளச் செயலாளிகளும் தளர்ச்சி அடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
அந்தத்தோற்றம் ஓரளவு உண்மை தான் என எடுத்துக் கொண்டு அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும் என யோசிக்கலாம். நிலவுடமை சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து பணம் சார்ந்த வாழ்க்கை முறைக்குத் தமிழர்களை/ இந்தியர்களை மாறச் சொன்ன காலனிய ஆட்சிக் காலம் தான் இந்திய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியது. காலனியப் பொருளியல் நடைமுறைகளாலும் கருத்தியலாலும் உருவாக்கப் பட்ட இந்திய நடுத்தர வர்க்க மனிதர்கள் அசலான இந்தியர்களாக இருக்க முடியாமல் தவித்ததன் விளைவுகளே நவீன இந்தியச் சிந்தனைப் போக்குகளும், இலக்கியப் போக்குகளும் என்பதைத் திரும்பவும் விரித்துச் சொல்ல வேண்டியதில்லை. அசலான இந்தியர்களாக இருப்பது என்பது வேறொன்றுமில்லை. ஒரு மனித உயிரியின் வாழ்நிலைக்கும் இருப்பிற்கும் அதன் கர்மம், முன் வினைப் பயன் ஆகியனதான் காரணம்; அதிலிருந்து விடுபடுதல் மனித சாத்தியங்கள் அல்ல. எல்லாவகை வேறுபாடுகளையும் ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் இந்தப் பிறவியின் சாத்தியங்கள். இதிலிருந்து விடுபடுதல் என்பது ஆன்மாவின் விடுதலையாக மட்டுமே இருக்க முடியும் என்பதுதான்.
அரூபமான ஆன்ம விடுதலையைப் பேசிய மரபிலிருந்து விலகி பருண்மையான மனிதர்களின் விடுதலையைப் பேசும் நவீனச் சிந்தனைகள் –அவற்றின் தொடர்ச்சியான நவீன இலக்கியப் போக்குகளும் இலக்காகக் கொண்டதும் விடுதலை என்ற சொல்லைத் தான். ஆனால் இரண்டு விடுதலைகளும் ஒன்றல்ல. தனிமனிதனின் ஆன்ம விடுதலைக்குப் பதிலாக மனிதர்களின் விடுதலையை- கூட்டத்தின் விடுதலையை முன் மொழிந்தன என்பதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தோற்றம் கொண்ட இயக்கங்கள் மற்றும் இயக்கங்கள் சார்ந்த இலக்கியப் போக்குகளின் வேறுபாடுகள்.தேச விடுதலை என்னும் பருண்மையான ஒன்றிற்காக- பறையர் தொடங்கிப் பார்ப்பணர் வரையிலான - அனைத்து மனிதக் கூட்டத்தை உள்ளடக்கிய தேசத்தின் விடுதலையை முன் மொழிந்த பாரதியைத் தமிழின் முதல் நவீனக் கவி என்று சொல்வது இந்தப் பின்னணியில் தான்.
பருண்மையான தேச விடுதலைக்குப் பின்னர் ஒட்டுமொத்த தேச மக்களுக்குமான விடுதலை என்ற குரல் பின்னுக்குத் தள்ளப்பட அதற்குள் இருக்கும் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட குழுக்களுக்கான விடுதலைக் குரல்கள் இந்தியாவில் எழுப்பப்பட்டன. அப்படி எழுப்பப் பட்டதற்கான சூழலும் வரலாறும் பின்னணிக் காரணங்களும் வெளிப்படையானவை. முதலில் அரசியல் இயக்கமாகத் தொடங்கி திரள் மக்களிடம் அறிமுகம் பெற்ற பின்னர் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கங்களை வளர்த்தெடுத்த போக்காகத் தேசிய இயக்கத்தைச் சொல்ல முடியும் என்றால் திராவிட இயக்கத்தை இதன் மறுதலையாகத் தான் சொல்ல வேண்டும். முதலில் பண்பாட்டுத் வெளியில் வெளிப்பாடுகளைக் காட்டி விட்டு அரசியல் இயக்கமாக மாற்றம் பெற்றது அது. வெகுமக்களைச் சென்றடைய விரும்பும் எந்த ஒரு இயக்கத்திற்கும் அரசியல் பொருளாதாரக் கோஷங்கள் அல்லது ஆயுதங்கள் உதவுவதைக் காட்டிலும் பண்பாட்டுக் கோஷங்களே அதிகம் பயன்படும் என்பது தமிழக வரலாறு உணர்த்தியுள்ள பாடம்.
துணைக் கண்டத்தை ஒத்த தேசம் என்னும் பெருவெளியில் மொழி சார்ந்த தேசிய இனக்குரல்கள் காணாமல் போய்விடும் என்று கருதியவர்கள் அதற்கான குரல்களை முதலில் கலை இலக்கியத்துறையில் பதிவு செய்ததன் தொடர்ச்சியாகவே திராவிட இயக்க அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கங்களின் முன்னோடியான நீதிக் கட்சியின் ஆயுதம் பிற்பட்டோருக்கான இடது ஒதுக்கீடு என்றாலும் திராவிடர் கழகமாகவும், திராவிட முன்னேற்றக் கழகமாகவும் மாறித் தமிழகத்தில் வெகுமக்கள் அரசியல் தளத்தைக் கைப்பற்றியதும் ஆட்சி அதிகாரத்தைச் சுவைத்துக் கொண்டிருப்பதும் அவ்வியக்கத் தினர் கையிலெடுத்த பண்பாட்டு ஆயுதங்களின் தெரிவுகளால் தான். சமஸ்கிருத எதிர்ப்பு, சமஸ் கிருதத்தைப் புனித மொழியாக முன்னிறுத்திய பார்ப்பணர் எதிர்ப்பு, பார்ப்பண மேலாண்மைக்கு வழி வகுத்த இந்துக் கடவுள் பிம்பங்கள் மீதான வெறுப்பு என்பதில் தொடங்கி இந்தி எதிர்ப்பையும் கையிலெடுத்த போது தான் திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலை நெருங்க முடிந்தது.
ஆட்சி அதிகாரத்தை நெருங்கியபின், ஆயுதமாகப் பயன்பட்ட எல்லாவகையான எதிர்ப்புகளையும் கைவிட்டதோடு அதன் மறுதலையாகச் செய்திருக்க வேண்டிய தமிழ் வளர்ச்சி, தமிழர் முன்னேற்றம், தமிழ்ப் பண்பாட்டைக் கட்டி எழுப்புதல் முதலான தமிழ் அடையாளங்கள் எதனையும் பற்றிய அக்கறைகளுக்குள் திராவிட இயக்கங்கள் செல்லவில்லை என்பதும் திரும்பவும் சொல்ல வேண்டிய செய்திகள் அல்ல. தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை இலக்கியங்கள் ஆகியவற்றை நவீனப் படுத்தி, உலகக் கலை இலக்கிய வளர்ச்சியோடும், சொல்லாடல்களோடும் உறவு கொள்ளத்தக்க மொழியாகத் தமிழை மாற்றுவதைப் பற்றிய அக்கறைகள் இங்கு முன் மொழியப்படவில்லை. அதற்கு மாறாகப் பின் நோக்கிச் செல்வதைப் பற்றிய பேச்சுகளே இலக்கிய வளர்ச்சியாகவும் பண்பாட்டு வளர்ச்சியாகவும் காட்டப்படும் சூழலில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. தாங்கள் முன் வைத்த பண்பாட்டு அடையாளங்களின் இலக்குகள் எவை என்பதிலும், அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் இத்தகையன என்பதிலும் தெளிவின்மை ஏற்படும்போது நகர முடியாத அசைவின்மை தவிர்க்க இயலாத ஒன்று. பண்பாட்டுத் தளத்தில் இலக்குகள் இல்லாதது போலவே அரசியல், பொருளாதாரத் தளத்திலும் தனித்துவமான அடையாளங்களையோ இலக்குகளையோ கூட திராவிட இயக்கங்கள் முன் வைத்ததில்லை. அதனால் தான் தமிழகத்தின் நிலவியல் சுழலைக் கவனத்தில் கொண்டதாகத் திட்டங்களை முன் வைக்காமல் திரள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றிக் கட்டமைக்கும் அரசியல் முன்மொழிவுகளையே முன் வைக்க நேர்கிறது. இந்த அவலம் ஐந்தாண்டுக்கொரு முறை மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து வாக்குகளைக் கவர்வதற்கான இலவசங்கள் சார்ந்த நலத்திட்டங்களின் பெருக்கத்தை இந்த விதமாகத் தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் எழுந்த தலித் எழுச்சியைப் பேச வேண்டும் எனத் தொடங்கி விட்டு அந்த நூற்றாண்டின் முன்பாதியில் தோன்றிய திராவிட இயக்க எழுச்சியைப் பற்றிப் பேசுவது ஏன் எனத் தோன்றலாம். இரண்டுக்கும் ஒற்றுமைக் கூறுகள் அதிகமாகவும் வேறுபாடுகள் குறைவாகவும் இருக்கின்றன என்பதனால் திராவிட இயக்கங்களைக் குறித்துப் பேச நேர்ந்தது.
இயக்கத்திற்கான கட்டமைப்பு, அதன் தலைமை குறித்த பிம்ப உருவாக்கம், அரசியலற்ற திரளை தலைமையின் பேச்சின் மூலம் மட்டுமே வழி நடத்துதல், வெகுமக்கள் ஊடகங்களை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் தீர்மானமற்ற ஈடுபாடு, குறுகிய கால லாபத்தை மையப்படுத்தி அணி மாறுதல் எனப் பல ஒற்றுமைகள் தலித் இயக்கங்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் காணப்படுகின்றன என்றாலும் அதன் தோற்றக் காலத்தில் குறிப்பான வேறுபாட்டோடு கிளர்ந்து எழுந்தது தலித் இயக்கம் என்பதை மறக்க முடியாது. ஒட்டு மொத்தத் தமிழர்களின் வாழ்வுரிமை பற்றிய அக்கறைகளை வெளிப்படுத்துவதாகப் பாவனை செய்ததில்லை தலித் இயக்கங்கள். இந்து சமயத்தின் சமூகக் கட்டமைப்பான சாதியத்தின் மீது கறாரான விமரிசனத்தையும் அதனைப் புரட்டிப் போடும் நோக்கங்களையும் முன் மொழிந்த தலித் இயக்கங்கள் - அதற்கு முந்திய இட ஒதுக்கீட்டு அரசியலிலிருந்து குறிப்பான விலகலை முதன்மைப் படுத்தின என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியொரு நெருக்கடியைத் தமிழ்நாட்டின் தென் மாவட்டக் கலவரங்களும், அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் அறிவார்ந்த சூழலும் உருவாக்கித் தந்தன.
‘கற்பி; ஒன்றுசேர்;போராடு’ என்ற அம்பேத்கரின் வாசகங்களைச் சொன்னதோடு ‘அடங்க மறு ; அத்து மீறு; கலகம் செய்’ என்ற கோஷங்களையும் தீவிரமாக முன் வைத்து வெளிப்பட்ட போது, அதற்கு முன்பிருந்த சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுப் போராட்டங்கள் பின் தங்கி நின்றன. தலித் இயக்கங்கள் ஏற்பாடு செய்த மாநாடுகள், கருத்தரங்குகள், கலை விழாக்கள் போன்ற பருண்மையான வெளிப்பாடுகளும், எழுத்து வடிவில் வந்த படைப்புகளும் தீண்டாமை ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு நிலவியல் வெளியிலும், பண்பாட்டு வெளியிலும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட இடங்களைக் கைப்பற்றுவதை நோக்கி நகர்ந்ததை பாரதூரமாகவே காண முடிந்தது.
குறிப்பாகக் கலை இலக்கிய வெளியில் மற்ற எல்லாப் போக்குகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டு தவிர்க்க முடியாத ஒன்றாகத் தலித் கலை இலக்கியங்கள் வரிசை கட்டின. தலித் கவிதை, தலித் நாடகம், தலித் புனைகதைகள், தலித் விமரிசனம் என அதன் வீச்சை இரண்டாயிரத்தின் கடைசிப் பத்து ஆண்டுகளின் சிறுபத்திரிகைத் தொகுப்புகளை வாசிப்பவர்கள் உணர முடியும். தலித்துகள் எழுதுவது தலித் இலக்கியம் என்ற நிலையிலிருந்து மாறி தலித் எழுத்துக்களை தலித்துகளே எழுத வேண்டும் என்ற கோஷமாக ஆக்கப் பட்டதின் எதிர்மறை விளைவுகளை இந்த நேரத்தில் விவாதிக்க வேண்டியுள்ளது. இந்திய சாதியத்தின் கருத்தியல் பரிமாணமான ஒதுக்கி வைத்தலும் ஒதுங்கி நிற்றலும் தீவிரமாகச் செயல்பட அந்தக் கோஷம் காரணமாகி விட்டதோ என்ற ஐயம் தோன்றுகிறது. எல்லாவற்றையும் சந்தேகப்படுதல் தேவை என்ற போதிலும் நம்பிக்கையின்மையின் தொடர்ச்சியால் ஆதரவு சக்திகளும் ஜனநாயகக்குரல்களும் தலித்தியச் செயல்பாடுகளிலிருந்து விலகிச் சென்றன என்பதைக் கவனத்தில் கொண்டு மறுபரிசீலனைகள் செய்யப்படும் திறப்புகள் நடைபெற்றிருக்க வேண்டும். அத்திறப்பைச் செய்ய வேண்டிய அமைப்புகளே உள்முரண்பாடுகளைச் சரி செய்ய முடியாமல் தவிக்கும் பிளவுண்ட கூறுகளாகவும், மைய நீரோட்ட அரசியலில் கலக்கும் வேகத்தோடும் இருந்ததால் அத்தகைய மறுபரிசீலனைகள் சாத்தியமாகாமல் போய்விட்டது.
இதே போல் தலித் இயக்கங்களும் இலக்கியவாதிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய புள்ளிகள் பலவும் உள்ளன.வரலாற்றைப் பயன்படுத்துவது பற்றியும், மத அடையாளத்தைக் கைவிடுவது அல்லது உருவாக்கிக் கொள்வது பற்றியும் கூட விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். மாறி வரும் உலகமயச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்துவது பற்றியும், அதற்கேற்ற மனிதவளமாக மாறுவது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. கிடைக்கின்ற கல்வி தேவையான கல்வியா என்ற கேள்வியைக் கேட்டு நிராகரிக்கத் தக்க கல்வி என்றால் கைவிடவும் தயாராக வேண்டியுள்ளது. இட ஒதுக்கீடு என்பது அளிக்கப்பட வேண்டிய உரிமை என்பதாகப் பார்க்கப் படாமல் பெற வேண்டிய சலுகை என்பதாக நம்ப வைக்கப் பட்ட வரலாற்றை உரத்துச் சொல்ல வேண்டியுள்ளது. அரசியல் சுதந்திரம் அடைந்த காலத்திற்கும் முன்பிருந்தே நடைமுறையில் இருந்துவரும் இடஒதுக்கீடு இலக்கியப் படைப்பின் மையமாக ஆகாமல் ஒதுங்கிப் போன கருப்பொருள்களுள் முதன்மையானது என்பதைத் தமிழ் இலக்கியப் பரப்பை வாசிப்பவர்கள் உணரக் கூடும். இப்படிச் சொல்வதன் நோக்கம் தலித் இயக்கங்கள் இட ஒதுக்கீட்டைக் கைவிட வேண்டும் என்பதல்ல; அது ஒன்றே சர்வரோக நிவாரணி என்ற கருத்தினைக் கைவிட வேண்டும் என்பதுதான்.
இத்தகைய விவாதங்களை எல்லாம் நடத்தித் தனியான அடையாளங்களை உருவாக்கிக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அறிவுஜீவிகளையும் படைப்பாளிகளையும் கொண்டிருந்த இயக்கமாகத் தோற்றம் தந்த தலித் எழுச்சி 2000-க்குப் பின் திருவிழாக் கூட்டத்தில் திசை தப்பிய குழந்தையாக நிற்கிறது என்பதை முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் அரசியல் என்னும் திருவிழாவிற்குள் திராவிட இயக்கம் திசை மாறியது போலத் தலித் இயக்கங்களும் திசை குழம்பி நிற்கின்றன. அந்தத் திசைக் குழப்பம் திரும்பவும் இட ஒதுக்கீடு என்னும் மாயமானை மட்டும் விரட்டும் கவனத்தை உண்டாக்கி விடும் சாத்தியங்கள் நிறைய உள்ளன.
விசித்திரமான இந்தியா
காலைத் தினசரியைக் கூட வாசிக்கத் தொடங்கியிருக்கவில்லை. தொலைக்காட்சி- தொழில் நுட்பம்- பண்பாடு பற்றித் தீவிரமான ஆய்வுகள் செய்து கட்டுரைகள் எழுதியுள்ள ரேமாண்ட் வில்லியம்ஸின் கட்டுரை கையில் இருந்தது. தொலைக்காட்சிகள் உருவாக்கும் பண்பாட்டுயைப் பற்றி எழுதிய அந்தக் கட்டுரையை மொழி பெயர்த்து விட வேண்டும் என நினைத்து இரண்டாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தேன். அகராதியில் அர்த்தம் பார்க்க வேண்டிய வார்த்தைகளைக் குறித்துக் கொண்டிருந்த போது அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொன்னார். பொதுவாக எங்கள் வீட்டில் காலையில் தொலைக்காட்சியை திறந்து விடுவதில்லை.
தொலைக்காட்சியின் விசையை முடுக்கியவுடன் பொதிகைத் தொலைக்காட்சியில் தொடங்குவது வழக்கம். பொதிகையில் பார்த்தாக வேண்டியதாக ஒன்றும் இல்லை. அலைவரிசைகளைத் தாண்டிக் கொண்டே போன போது கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசையையில் அந்த முக்கியச் செய்தி நகர்ந்து கொண்டிருந்தது. தொடர்மழை காரணமாகத் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதான அரசின் அறிவிப்பைப் பார்த்தவுடன் மதியச் சமையலை நிறுத்தி விடும் நோக்கத்தில் மனைவியிடம் சொன்னேன்.
அரசுச் செய்தியை அரசின் தொலைக்காட்சியான பொதிகை அலைவரிசையில் சொல்லாமல் ஆளுங் கட்சியின் ஆதரவு அலைவரிசியில் சொல்வது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. இதற்கு முன்பு சன் அலைவரிசை சொன்னது; அதற்கும் முன்பு ஜெயா அலைவரிசை தான் சொன்னது. ஆளுங்கட்சியின் ஆதரவுத் தொலைக்காட்சியை அரசின் தொலைக்காட்சியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுச் சில பத்தாண்டுகள் ஆகி விட்டன. கட்டுரையைப் படித்து முடித்த போது மணி பத்தரை ஆகி இருந்தது.
21-10-2008 அன்று விடுமுறை என்று அறிவிப்புச் செய்த கலைஞர் தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையே மொகாலியில் நடக்கும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டின் கடைசி நாள். ஆஸ்திரேலியாவை உறுதியாக வெல்லும் வாய்ப்புண்டு.ஆங்கிலச் செய்தி அலைவரிசைகள் பக்கம் தாவினேன். இந்திய அணி வெற்றியின் வாசனையை நெருங்கிக் கொண்டிருப்பதாக ஆங்கில எழுத்துக்கள் வந்த போய்க் கொண்டிருந்தன. ஒவ்வொரு விக்கெட்டின் வீழ்ச்சியையும் இந்திய அணியினர் வெளிப்படுத்தும் உற்சாகத்தோடு பார்வையாளர்களுக்குச் சொல்லி விட வேண்டும்; காட்டி விட வேண்டும் என அந்த அலைவரிசைகள் ஆர்வம் காட்டுவதில் போட்டி போடுவதை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை அபாரமாக வென்றது என்ற தகவலைச் சொல்லுவதற்கு முன்பு இன்கிரிடபிள் இண்டியா (Incredible India) ஆங்கிலச் சொற்கோவையைப் பயன்படுத்தியது ஒரு தொலைக்காட்சி.அந்த வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் நம்ப முடியாத ஒன்று. இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது நம்ப முடியாத ஒன்று தான். கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலியாவின் இடம் அனைவருக்கும் தெரிந்தது. தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அந்த அணியை 320 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது நம்ப முடியாத ஒன்று தான். குதூகலத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இன்னொரு மின்னல் செய்தியும் இடையே வந்து விட்டுப் போனது.
மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர நவ நிர்மான் அமைப்பின் ராஜ் தாக்ரே நீதிமன்றத்தில் நிறுத்தப் பட உள்ளார் என்பது அந்த மின்னல் செய்தி. உடனேயே ஏராளமான போலீஸ் நீதிமன்ற வாசலில் பதற்றத்துடன் நிற்கும் காட்சி காண்பிக்கப் பட்டது. தமிழ் நாட்டில் பெருமழைக்காகப் பள்ளிகளும் கல்லூரிகளும் அடைக்கப் பட்ட செய்தியைத் தமிழ் அலைவரிசைகள் சொன்னது போல மும்பையில் கலவரத்திற்குப் பயந்து கல்வி நிறுவனங்கள் அடைக்கப்படுவதாக ஆங்கில அலைவரிசைகள் காட்சிகளைக் காட்டத் தொடங்கிஅன.
கைது செய்யப்பட்ட ராஜ்தாக்ரே ஒப்பனை குலையாமல் நிதானமாக நீதிமன்றத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார். அவரது நிதானத்தின் மறுதலையாகச் சாலைகளில் கலவரக்காரர்கள் அட்டகாசங் களும் ஆரம்பித்தன. அடித்து நொறுக்கப்படும் கடைகள், பற்றி எரியும் வாகனங்கள், பஸ்நிறுத்தங்கள், மிரண்டோடும் அப்பாவிகள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையோ இறுக்கத்துடன் ஆங்காங்கே கலவரக்காரர்களை விரட்டிக் கொண்டிருந்தது. அன்றைய பொழுது முழுவதும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளுக்கு மொகாலியில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றியும், மும்பையில் ராஜ் தாக்ரேயின் ஆர்ப்பாட்ட அரசியலும் நேரடிக் காட்சிகளாகக் காண்பிப்பதற்குப் போதுமானதாக இருந்தன.
ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின் நடுநிலைமையும் பாரபட்சமின்மையையும் பாராட்ட வேண்டும். ஆஸ்திரேலியாவை இந்திய அணி வென்றதைப் பார்வையாளர்களுக்குத் தருவதில் எவ்வளவு ஆர்வம் காட்டினார்களோ அதே அளவு ஆர்வத்துடன் ராஜ் தாக்ரேயின் முகத்தையும் காட்டினார்கள், அவரது ஆதரவாளர்களின் குதூகலத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் கூட அதே கவனத்துடன் காட்டத் தவற வில்லை. இவ்விரண்டு காட்சிகளும் ஏதோ ஓரிரு முறை காட்டப்பட்டன என்று நினைத்து விட வேண்டும். அன்று காலை தொடங்கி மாலை வரை கிரிக்கெட் வெற்றியும், ராஜ் தாக்ரேயின் குண்டர் ராஜ்ஜியமும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துக் காண்பிக்கப் பட்டுக் கொண்டே இருந்தன.
வெவ்வேறு மாநிலத்திலிருந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்து உண்டாக்கிய விளையாட்டு அணியின் வெற்றியைக் காட்டும் தொலைக்காட்சி அலைவரிசை, தேசத்தைத் துண்டாடுவதற்குரிய அரசியலை முன்னெடுக்கும் ஒருவரின் போக்கையும், ஆதரவாளர்கள் செய்யும் அழிம்பு வேலைகளையும் அதே கரிசனத்தோடு காட்டும் நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி யாருக்கும் எழப்போவதில்லை.
மொகாலியில் கிரிக்கெட் நடந்தது; இந்திய அணி வென்றது; அதனைக் காட்டுகின்றார்கள். மும்பையில் ராஜ் தாக்ரேயின் கைதும், அதனைத்தொடர்ந்து அங்கு கலவரமும் நடந்தன. அதனையும் காட்டு கிறார்கள். நடப்பனவற்றைக் காட்ட வேண்டியதும், செய்திகளைப் பாரபட்சமின்றிச் சொல்ல வேண்டியதும் ஊடகங்களின் வேலை என்றும் நாம் நினைக்கலாம். ஆனால் ஊடகங்கள் உருவாக்கும் மனித மனத்தின் போக்கைத் தொடர்ந்து கவனித்து ஆய்வு செய்யும் ஊடக ஆய்வாளர்கள் அப்படி நினைப்பதில்லை.
தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காட்டப்படும் பிம்பங்களுக்குப் பார்வையாளர்களின் கண்களும் மனமும் பழகிப் போவதை ஒருவரும் தடுத்து நிறுத்தி விட முடியாது. மென்மையான காட்சிகளுக்கும் தகவல் களுக்குப் பழக்கப்படுவது போல வன்மையான காட்சிகளுக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கும் கூட மனித மனம் பழக்கப்பட்டு விடும். தொடர்ந்து அத்தகைய காட்சிகளே காணக் கிடைத்தால் அதை ரசிக்கத் தொடங்கி விடும். பின்னர் அத்தகைய காட்சிகளையும் தகவல்களையும் பற்றிய கேள்வி களைக் கூட எழுப்பாமல் அதன் வசமாகும் இயல்புக்குள் சென்றுவிடும். இந்த ஆபத்தான பணியைத் தான் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகள் தொடர்ந்து செய்கின்றன.
உலகமயப் பொருளாதாரத்தின் விளைவாகக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் ஒருபுறம் இந்திய நகரங்களை வீங்கச் செய்து கொண்டே இருக்கின்றன. தகவல் தொழில் நுட்பம் மற்றும் மென் பொருள் குழுமங்கள் இந்திய இளைஞர்களின் திறமையின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து ஒன்றாகத் திரட்டிப் பெங்களூர், ஹைடிராபாத், சென்னை, நொய்டா, பூனா போன்ற நகரங்களில் குடியேற வைத்துக் கொண்டிருக்கின்றன. கூடுதல் பயிற்சிக்காக அயல் நாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன. அப்படிப் போகிறவர்களில் பலர் அங்கேயே தங்கித் தங்கள் வருமானத்தை இந்தியாவிற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மாநிலம், மொழி, மதம், சாதி போன்ற வேறுபாடுகள் முன்னிருந்த நிலைமையில் தொடராத நேர்மறைக் கூறுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் தான் ராஜ் தாக்ரே போன்ற பிரிவினைவாதச் சக்திகளும் தீவிரமாகத் தலை எடுக்கின்றன. மகாராஷ்டிரம் மகாராஷ்டிரர்களுக்கே என்ற கோஷம் அங்கு மட்டும் தான் இருக்கின்றன என்று நினைத்து விட வேண்டாம். கர்நாடகாவிலும், ஆந்திரா விலும் கூட மண்ணின் மைந்தர்கள் என்ற பெயரில் இந்தப் பிரிவினைவாதிகள் சுயநலத்திற்காக அப்பாவி இளைஞர்களைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கூடச் சில சுவர் விளம்பரங்களை நீங்கள் பார்க்கலாம். தமிழ்நாடு தமிழர்களின்நாடா? வந்தேறிகளின் காடா?
எல்லாவற்றையும் காட்சிக்கு வைத்து இன்பமூட்டும் தொலைக்காட்சி பயன்படுத்திய அந்த ஆங்கில வார்த்தைக்கான -Incredible India- அர்த்தத்தை அகராதியில் தேடிப்பாருங்கள். நம்பமுடியாத என்ற அர்த்தத்தோடு இன்னொரு சொல்லும் இருக்கும். அந்தச் சொல்– விசித்திரமான என்பது. ஆம் நமது இந்தியா விசித்திரமான இந்தியா தான்.

இலக்கு ஒன்று: பாதைகள் மூன்று
பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் வியூகங்கள்
1967-இல் தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்பதாகப் பதிவு செய்வதா? பெரியவர் பக்தவச்சலத்தின் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் இயக்கமின்மைக்கும் பிடிவாதத்துக்கும் கிடைத்த தோல்வி என்பதாகப் பதிவு செய்வதா? என்று கேட்டால் நடுநிலையான வரலாற்று ஆய்வாளர்கள் இரண்டாவதைத் தேர்வு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
விலைவாசியைக் கட்டுப் படுத்தி, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியாமல் தவித்த பக்தவச்சலத்தின் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தி.மு.க. முன் வைத்த, ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒருபடி நிச்சயம்’ என்ற கோஷத்தை நேர்மறைக் கோஷமா? எதிர்மறைக் கோஷமா?என்று இன்றும் கூட உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இந்தியின் ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் அக்கறை காட்டாமல், அதன் பரவலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது காங்கிரஸ் என்பதை உணர்த்தும் விதமாக முன் வைக்கப்பட்ட ‘இந்தி ஒழிக’ , ‘ தமிழ் வாழ்க’ என்ற முழக்கம் எதிர்மறை முழக்கம் என்று உறுதியாகச் சொல்லலாம். தாய்மொழிக்கு வரும் ஆபத்தைக் காக்காத அரசு இருக்க வேண்டுமா? என்ற கேள்வியின் மேல் எழுந்த வெறுப்புணர்வின் விளைவுகள் தான் அறுபத்தேழில் ஆட்சியைக் கைமாற்றித் தந்தன.
தமிழின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அதிகமான ஆபத்துகளை உண்டாக்கி வந்த ‘ஆங்கிலத்தை ஒழிக’ என்று சொல்லாமல் ‘இந்தி ஒழிக’ என்று சொன்னது அரசியல் கோஷம் என்பது இப்போது புரிகிறது. திராவிட இயக்கங்களின் ஆட்சி நாற்பது ஆண்டுகளை முடிந்த பின்பு இந்தி இனி நுழையாது என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் தமிழும் பெரும்பான்மையான தமிழர்களும் வாழ்வார்கள்; மேம்பாடுகள் உண்டாகும் என்பதற்குப் பெரிதாக உத்தரவாதம் எதுவும் இல்லை.
நாங்கள் உருவாக்க நினைக்கும் தமிழக அரசியல் இப்படிப் பட்டதாக இருக்கும். அதற்காக எங்கள் கட்சி பின்பற்ற உள்ள பொருளாதாரக் கொள்கை இது. அதை நடை முறைப்படுத்த நிறுவன ரீதியான அமைப்பு முறைகளில் பின்வரும் மாற்றங்களைச் செய்ய உள்ளோம் என்பதான கொள்கை வழி அரசியலை தமிழகக் கட்சிகள் எப்போதும் மக்களிடம் முன் வைப்பதில்லை. அப்படி ஒன்று இருந்தால் கூட அவற்றைத் தள்ளி வைத்து விட்டு, ஆட்சியில் இருப்பவர்கள் மேல் உண்டாகும் வெறுப்புணர்வை அதிகபட்சமாக வளர்த்தெடுக்கும் எதிர்மறைக் கோஷங்களைக் கண்டறிவதிலும், அவற்றைப் பயன்படுத்தித் தேர்தல் வெற்றியை அறுவடை செய்வதிலுமே குறியாய் இருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை நேர்மறை முழங்கங்களை விட எதிர்மறை முழக்கங்களே எப்போதும் தமிழகத் தேர்தலின் பெரும் முழக்கங்களாக இருந்து வந்துள்ளன.
இந்திய விடுதலைக்குப் பிந்திய தமிழக அரசியலைச் சாதாரணமாகக் கவனித்து வந்தவர்களுக்குக் கூட இந்த உண்மை புரியக் கூடும். 1967 தொடங்கித் தமிழக அரசியலில் திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆட்சியை இழந்ததற்கும்/பெற்றதற்கும் பின்னணியில் ஒவ்வொரு முறையும் எழுப்பப்பட்ட எதிர்மறைக் கோஷங்களே முக்கியக் காரணங்களாக இருந்தன .
‘ஊழல் ஆட்சி, இது ஒழிக்கப் பட வேண்டும்’
‘திறமையற்ற நிர்வாகம், இறக்கப்பட வேண்டும்’
‘தேச விரோத அரசு, அகற்றப் பட வேண்டும்’
‘அராஜக ஆட்சி, வீட்டிற்கு அனுப்பப் பட வேண்டும்’
என்பதான எதிர்மறைக் கோஷங்களே இங்கு பெரும்பாலும் வெற்றிக் கனியைப் பறித்துத் தந்துள்ளன. இனி வரும் தேர்தலிலும் இப்படியான எதிர்மறைக் கோஷம் ஒன்று எழுப்பப்படலாம்; அக்கோஷம் வெற்றியைப் பெற்றும் தரலாம்.
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அ இ அதிமுகவுக்கு அத்தகைய கோஷம் ஒன்றை இப்போதே உண்டாக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை; காரணம் சட்டமன்ற தேர்தலுக்குக் கால அவகாசம் உள்ளது. அடுத்து வரப் போவது பாராளுமன்றத் தேர்தல் தான் ; அதனால் அதற்கேற்ற முழக்கத்தைக் கூட்டணி வியூகத்திற்குப் பின்னர் உருவாக்கக் கொண்டால் போதும் என்று தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் 2011 இல் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி அப்படிப் பொறுமையாக இருக்க முடியாது.
வட மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என்ற அடையாளத்தைத் துடைத்தெறிய தென் மாவட்டங்களிலும் கட்சி அமைப்புகளைத் தொடங்கிப் போராட்டங்கள் நடத்தினால் மட்டும் போதாது. ஒட்டு மொத்தத் தமிழர்களின் மனத்தையும் தட்டிப் பார்க்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும்; குறிப்பாகப் பண்பாட்டு நடவடிக்கைகளையும் நலவாழ்வு சார்ந்த முன் மொழிவுகளையும் கண்டுபிடித்தாக வேண்டும். அவையே ஓர் இயக்கத்தின் எல்லைகளை விரிவு படுத்திப் புதிய அடையாளங்களுக்குள் இட்டுச் செல்லும். இதைச் சரியாக உணர்ந்துள்ளதாகப் பா.ம.க.வின் சமீப்த்திய அணுகுமுறைகள் காட்டுகின்றன. பொங்குதமிழ்ப் பேரவை, தமிழ்ப் படைப்பாளர் பேரியக்கம், என்பதான அடையாளங்களோடு மக்கள் தொலைக்காட்சியின் தனித்துவமான ஒளிபரப்புகள் அதன் பண்பாட்டு வெளியையும் அடையாள முன்னிறுத்துதலையும் காட்டுகின்றன என்றால் அக்கட்சி கண்டு பிடித்துள்ள மூன்று முழக்கங்களும் தேர்தலுக்கான நகர்வை அடையாளப்படுத்துகின்றன என்று சொல்லலாம்.
திரைப்பட மோகமும் பண்பாட்டுச் சீரழிவும் தடுக்கப் பட வேண்டும்
மதுக்கடைகள் ஒழிக்கப் பட வேண்டும்;
புகைபிடித்தல் நிறுத்தப் பட வேண்டும்.
இம்மூன்று முழக்கங்களும் நேர்மறை முழக்கங்களா? எதிர்மறை முழக்கங்களா? என்று கேட்டால் தீர்மானமான பதில் எதையும் சொல்ல முடியாது தான். ஆனால் இந்தி ஒழிக என்ற முழக்கத்தைப் போல இவை அரூபமான முழக்கங்கள் அல்ல என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மக்கள் வாழ்வின் மீது கொண்ட அக்கறையின் பருண்மையான வெளிப்பாடுகள் இவை.
இம்மூன்று முழக்கங்களில் முதல் இரண்டை–திரைப்படம், மதுக்கடைகள் ஆகியவற்றிற்கெதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தீவிரமாக முழக்கமிட, கடைசி முழக்கத்தை – புகைப் பிடித்தலுக்கெதிரான யுத்தத்தை- அவரது மகனும் இளம் தலைவருமான அன்புமணி ராமதாஸ் சட்டத்தின் எல்லைக்குள் இருந்தே நடத்தி வருகிறார். இம்மூன்றும் தமிழர்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியன என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழர்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கே எதிரான அம்சங்கள் கொண்டனவும் கூட. தனிமனிதனின் உடல் நலத்தைக் கெடுத்து நோய்களின் இருப்பிடமாக மனித உடலை மாற்றி விடும் ஆபத்துக் கொண்டது புகைப் பிடித்தல் பழக்கம் என்றால், குடும்பத்தின் வருமானத்தைப் போதைக்காகச் செலவழிப்பதன் மூலம் ஏராளமான குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையும் எதிர்கால வாழ்க்கையும் சீரழியக் காரணமாக இருப்பது மதுப் பழக்கம். இவை இரண்டும் ஒழிக்கப் படும் நிலையில் மனித வாழ்க்கை – குறிப்பாக ஏழை மக்களின் வாழ்க்கை பெருமளவு மேம்பட வாய்ப்புண்டு. சமூகத்தின் அடித்தள மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கான குரலை- முழக்கத்தைத் தனது கட்சியின் முழக்கமாக வைப்பதை எதிர்மறை முழக்கம் என்று சொல்ல முடியாது. ஆனால் நடைமுறைப் படுத்தும் வழி முறைகளைப் பற்றி யோசிக்கும் போது இவையெல்லாம் இந்தி ஒழிக என்று முழங்கப் பட்ட அரசியல் கோஷம் போல ஆகி விடுமோ என்ற அச்சம் உண்டாகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.
பீடி, சிகரெட் தயாரிக்கும் ஒன்றாக மட்டும் இல்லாமல் மருத்துவப் பயன் கொண்டதாக விளங்கும் புகையிலை பயிரிடுதலை நாட்டில் தடுக்க முடியாது. ஆனால் பீடி, சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையை மூடாமல், உற்பத்தி செய்த பொருட்களை உரிய வரிகளையைப் பெற்றுக் கொண்டு சந்தைப் படுத்துதலை அனுமதித்து விட்டுப் புகை பிடித்தல் சட்ட விரோதமானது எனச் சொல்லும் அரசின் செயல் பாட்டையும், அதனைத் தங்கள் கட்சியின் ஆதார முழக்கங்களில் ஒன்றாக வைக்கும் அரசியல் கட்சியையும் மக்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணியும் அவரது தந்தையும் பாமகவின் தலைவருமான ராமதாஸும் விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
புகையிலை சார்ந்த புகைபிடித்தலும் சரி, மதுபானம் சார்ந்த குடிப் பழக்கமும் சரி நாட்டின் வருமானத்தின் ஒரு பகுதியை ஈட்டித்தரும் தொழில்களோடும் அதன் முதலாளிகளோடும் மற்றும் தொடர்பு கொண்டன அல்ல; அத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள், போன்றோரின் அன்றாட வாழ்க்கையோடும் தொடர்பு கொண்டனவாக உள்ளன. இந்தப் பின்னணியில் தான் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கெதிரான பிரசாரத்தை உலக நாடுகள் பலவும் தீவிரமான பிரசாரம் மற்றும் ஆலோசனை என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. கடுமையான சட்டம் இருக்கிறது என்பது கூட ஒருவகைப் பிரசாரம் தான். எனவே சட்டத்தின் வழியாகவும் , சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆலோசனை களாகவும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றிற்கு எதிரான பிரசாரத்தைத் தொடரலாம். அதற்கான சாத்தியங்கள் மட்டுமே இங்கே இருக்கின்றன. அப்படித் தொடரும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு.எந்தவொரு பிரச்சாரத்தையும் கொள்கையையும் தன்னிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதுதான் .
ஒரு தனிமனிதனோ அல்லது இயக்கமோ ஒரு கொள்கை அல்லது கருத்தைப் பிறருக்குச் சொல்வதற்கு முன்னால், தானே பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். தானோ அல்லது தன்னுடைய இயக்கமோ பின்பற்றுவதற்குச் சாத்தியப் படாத ஒன்றைப் பிறருக்கு அல்லது பொது மனிதனுக்கு உரியதாகப் பிரசாரம் செய்வதும், பின் பற்ற வேண்டியதாகப் பரிந்துரை செய்வதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகக் கருதப் படாமல் போவது மட்டுமல்ல; சொன்னவரின் செயல்பாடுகளின் மேல் நம்பிக்கையின்மையையும் உண்டாக்கி விடும் ஆபத்தையும் கொண்டது. இதனால் தான் காந்தி தனது கொள்கைகளைத் தானே பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டார். அவரது சத்திய சோதனையின் பல பக்கங்களில் அவர் தன்னையே சோதித்துக் கொண்டதை ஆச்சரியத்தோடு நாம் வாசிக்க மட்டுமே முடிகிறது. புகை பிடித்தலையும் மதுப் பழக்கத்தையும் ஒழித்து விட வேண்டும் எனத் தீவிரமாகப் பிரசாரம் செய்யும் பாட்டாளி மக்கள் கட்சி அந்தச் சோதனையைத் தங்கள் கட்சியினரிடம் முதலில் தொடங்கிட வேண்டும். மதுப் பழக்கம் இல்லாத தொண்டர்களால் நிரம்பி வழியும் கட்சியாக அது தன்னை உருமாற்றிக் கொள்வதோடு, புகைபிடிக்காத கூட்டத்தினரைக் கொண்டு மாநாடுகளை நடத்திக் காட்ட வேண்டும். அப்படிச் செய்யாமல் தீவிரமான கோபத்தையும் ஆவேசத்தையும் மட்டும் புகைக்கு எதிராகவும் மதுவுக்கு எதிராகவும் காட்டும் போது நம்பகத்தன்மை ஏற்படாமல் போய்விடும்.
புகைபிடித்தல், மதுப் பழக்கம் போலத் திரைப்படத்தை முழுமையாக ஒதுக்கத் தக்க ஒன்று என்று சொல்ல முடியாது. தமிழக மக்களின் வாழ்வில்- குறிப்பாகப் பண்பாட்டுத் தளத்தில் திரைப்படங்களும், திரைப் படங்களின் நகல்களையும் கூறுகளையும் சரக்காக வைத்து உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உண்டாக்கும் பண்பாட்டுப் பிறழ்வுகளும் அடையாள அழிப்புகளும் பருண்மையானவை தான். அத்துடன் அங்கிருந்து கிளம்பும் நடிக அரசியல்வாதிகளால் தமிழகம் திசைமாறிக் கெட்டுக் கிடக்கிறது என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் வாதமும் கூடச் சரியானது தான். ரசிகர்களை வைத்து அரசியல் களத்தில் வெற்றி பெற்று விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை உணர்த்திய முன்னோடி மாநிலம் தமிழகம் என்பதும் கூட உண்மை தான். அந்த மாதிரியை இன்று பல மாநில நடிகர்களும் பின்பற்றத் தொடங்கி விட்டதால் ஒட்டு மொத்த இந்திய அரசியலும் சீரழிவுக்குள் நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூடக் கருத்துத் தெரிவிக்கலாம். ஆனால் இவை எல்லாம் திரைப் படம் என்ற கலைச்சாதனத்தின் நேரடி விளைவுகள் அல்ல என்பதை மறுத்து விட முடியாது. சரியான திசையில் மக்களை அரசியல் படுத்த வேண்டிய இயக்கங்கள் அதைத் தவற விட்டதனால் உண்டான எதிர்மறை விளைவுகள் என்பதை மறந்து விடக்கூடாது. அரசியல் இயக்கங்கள் கொள்கைகளைச் சொல்வதைத் தவிர்த்து விட்டுப் புனைவுகளையும் பொய்களையும் ஏற்கத்தக்க வகையில் சொல்லும் பிம்பங்களாக நடிகர்களை மாற்றிப் பயன்படுத்தியதின் எதிர்மறை விளைவுகளை வெகுமக்கள் கலையாகவும் பொழுது போக்குச் சாதனமாகவும் விளங்கும் திரைப்படத்தின் மீது ஏற்றி வெறுப்பை உமிழ்வது சரியாக இருக்குமா என்பதைப் பாட்டாளி மக்கள் கட்சி திரும்பவும் யோசித்தாக வேண்டும். அத்துடன் திரைப்படம் போன்ற ஊடகங்களைத் தடை செய்வது; வெளியிடுவதைத் தடுப்பது போன்ற செயல்களில் அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் இறங்குவது பாசிசத்தின் வெளிப்பாடாக மாறி விடும் ஆபத்துக் கொண்டவை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
2011 –இல் ஆட்சியைப் பிடிப்பது என்ற ஒற்றை இலக்கை நோக்கி மூன்று பாதைகளில் பயணம் தொடங்கியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. பருண்மையான முழக்கங்களை முன்வைத்து நகரும் அது திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டதாக எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. இப்போது அவை பின்பற்றிய உத்திகளையே தனது தேர்தல் உத்தியாகவும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் சுவையான நகை முரண்.