Sabado, Setyembre 27 2008

விலகிப் பாயும் அம்புகள்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாதகமான அம்சங்களில் மிக முக்கியமான ஒன்று பாதிக்கப் பட்டோருக்கு ஆதரவு என்பது தான். இந்தியாவின் குடிமைச் சட்டம் ஆயினும் சரி, குற்றவியல் சட்டமாயினும் சரி, நீதியியல் முறைகளானாலும் சரி அரசும், அரசு நிறுவனங்களும் எப்போதும் அதிகம் பாதிக்கப் படுவோரின் பக்கம் நிற்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன.
பாதிக்கப் பட்டோருக்கு ஆதரவு என்பது உலக வரலாற்றில் நடந்த ஜனநாயகப் புரட்சிகளின் விளைவுகள் என்பதை நாம் அறிவோம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷங்களால் ஈர்க்கப் பட்ட மனிதர்களின் வெற்றி அது. அங்கிருந்து தான் கலை இலக்கியவாதிகளும்,சமூகப் போராளிகளும் பாதிக்கப் பட்டோருக்காகக் குரல் கொடுப்பதை வாழ்தலின் அர்த்தமாக ஆக்கிக் கொண்டனர். பாதிக்கப் படுவோருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியச் சட்டவியல் பல சரத்துகளை உருவாக்கி வைத்துள்ளது. அச்சட்டங்களில் இரண்டு சமீபகாலத்தில் அதிகம் விமரிசனத்திற்குள்ளாகி வருகின்றன.
விமரிசனங்களுக்குள்ளாகி வரும் அவ்விரு சட்டங்களில் முதலாவது வரதட்சணை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறைச் சட்டம். இரண்டாவது தீண்டாமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட குடிமைப் பாதுகாப்புச் சட்டம். இவ்விரு சட்டங்களுக்கும் எதிராக ஆங்காங்கே எழுந்த முணுமுணுப்புகள் அறைக் கூட்டங்களின் பேச்சாக மாறி, ஊடகங்களின் கவனத்துக்கு வந்துள்ளன. சிலர் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவும் முயன்று வருகின்றனர். இவ்விரு சட்டங்களும் முதலாவதாக குற்றவியல் சட்டங்கள் என்ற பிரிவிலிருந்து எடுக்கப்பட்டு குடிமைச் சட்டப் பிரிவிற்குள் கொண்டு வரப் படவேண்டும் எனச் சொல்கின்றனர்.
குடும்பம் வன்முறைச் சட்டம், தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்ற இரண்டையும் மையப் படுத்தி கிளம்பி யிருக்கும் விமரிசனங்கள் அண்மைக் காலத்தில் ஊடகங்களின் கவனத்துக்கு வந்து விவாதப் பொருளாக ஆகியிருக்கின்றன. அவ்விமரிசனக்குரல்கள் ஆர்ப்பரிக்கும் ஒலியாக மாறி, ஆர்ப்பாட்டங்களாக ஆகி, அந்தச் சரத்துகளையும், அதன் மூலமான சட்டவிதிகளையும் நீக்க வேண்டும் என்று கோரும் வலிமையை நோக்கி நகர்ந்து விடும் அபாயம் தூரத்தில் இல்லை.
குடும்ப வன்முறைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் , இச்சட்டம் இந்தியப் பண்பாட்டின் அடிப்படைக் கூறான குடும்ப அமைப்பையே சிதைத்து விடும் ஆபத்துக் கொண்டது என வாதிடுகின்றனர். அதே போல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்பது பொய்யான தகவல்களின் மேல் பழி வாங்கும் நோக்கத்துக்கு மட்டுமே பயன்படும் விதமாக நடைமுறையில் இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் அரசு நிர்வாகங்கள் பாதிக்கப் படுகின்றன; வேலை செய்யாத ஒருவரைத் தட்டிக் கேட்கவோ, தண்டனை தரவோ தடையாக இருக்கிறது. அந்தச் சட்டம். தொடர்ந்து நீட்டிக்கப் படும் நிலையில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கே உலை வைத்து விடும் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என வாதிடுகின்றனர்.
அப்படி வாதிடுபவர்கள் குறிப்பான சில நிகழ்வுகளை எடுத்துக் காட்டி வாதிடுவதையும் தங்கள் பாணியாகக் கொண்டுள்ளனர். இதே பாணியைத் தான் இப்போது ஊடகங்களும் – குறிப்பாக அச்சு ஊடகங்களும் செய்கின்றன. ஊடகங்கள் எடுத்துக் காட்டும் நிகழ்வுகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்நிலை சார்ந்தவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் குடிமைச் சட்டங்கள் பெரும்பாலும் பொது நலம் சார்ந்த சமூக மாற்றத்திற்காகவும், பொது நன்மைக்காகவும் உருவாக்கப்பட்டவை. இந்தியாவில் இனியும் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி வேறுபாடுகளும், தீண்டாமைக் கொடுமையும் தொடரக் கூடாது என்ற பொது நோக்கே குடிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் பின்னணிக் காரணம். அதே போல் பாலின அடிப்படை காரணமாகப் பெண்கள் ஒடுக்கப் பட்ட பாலின மாகவோ கருதப் படக் கூடாது; அப்படியான கருத்து எங்கெல்லாம் நிலவுகிறதோ அதைக் களைவது பெண்கள் சார்ந்த குடும்ப வன்முறைச் சட்டத்தின் பின்னணியில் இருக்கும் பொதுநல நோக்கு.
இவ்விரு பொது நோக்கும் இனித் தேவையில்லை என்ற நிலை உருவாகி விட்டது என்ற யாராவது சொல்ல முடியுமா? இன்னும் கிராமங்களில் தீண்டாமைப் பேய்களும், சாதியடிப்படையில் ஒதுக்கி வைக்கும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அங்கெல்லாம் இந்தச் சட்டத்தின் உதவியை நாடும் மனிதர்கள் விழிப்புணர்வு பெறவில்லை. விழிப்புணர்வு அடைந்திருந்திருந்தாலும் அன்றாட வாழ்க்கைக்கு வேறு வழியில்லை என்ற இயலாமையின் பேராலும், ஆதிக்க சாதியினருக்கு இருக்கும் வலிமை, மற்றும் அமைப்புகளின் ஆதரவு ஆகியவற்றைக் கண்டு ஏற்பட்ட பயத்தின் பேராலும், ஒடுங்கிப் போகின்றனர் விளிம்புநிலை மக்கள்.
இதே நிலைமைதான் குடும்ப அமைப்புக்குள்ளும் தொடர்கின்றன. குடும்பத்தின் தேவைக்கான பொருளாதாரத்தை ஈட்டும் வேலையைப் பெண்ணுக்கும் உரியதாக ஆக்கிய பின்னும், அடுப்படியிலும், படுக்கையறையிலும் பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை. நமது குடும்ப அமைப்பு அன்பு வழிப்பட்ட உறவால் ஏற்பட்டது எனச் சொல்லும் மனிதர்கள், மருமகளை இன்னும் வெளியிலிருந்து வந்தவள்; நாம் விரும்பினால் வெளியே அனுப்பி விடலாம் என்ற மனநிலையில் தான் உள்ளனர். குடும்பத்தின் பகுதியாக அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை எந்தச் சடங்குகளும் உருவாக்கித் தரவில்லை என்ற நிலையில் சட்டங்கள் தான் அதைச் செய்ய வேண்டும்.
நடுத்தர வர்க்க நிகழ்வுகளை எடுத்துக் காட்டி கருத்தியல் போக்கை மாற்ற முயலும் ஊடகங்கள் பொது நிலைப் பார்வையைத் தங்களுக்குரியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்தியக் குடும்பங்களில் இருக்கும் உறவு, விட்டுக் கொடுத்தல் என்னும் பெயரில் அடிமையாக இருக்கச் சம்மதித்தல் என்பதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் சாதி வெறி தாண்ட வமாடும் கிராமப்புறங்களைக் கவனித்து இந்தச் சட்டங்களின் தேவையைக் கணிக்க வேண்டும். அதை விடுத்து நடுத்தர வர்க்க உதாரணங்களைப் பொதுத்தளத்திற்குரியதாக ஆக்கிக் காட்டுவது கூட்டுச் சதியின் விளைவாகவே இருக்கும்.
படித்து வேலை பார்க்கும் நடுத்தர வர்க்கப் பிரிவிற்குள் நுழையும் ஒரு நபர் எப்போதும் தனக்குச் சாதகமான விதிகளை மட்டுமே கவனப்படுத்துகிறார் என்பது பொதுவான நியதி. அதனைப் பயன்படுத்தித் தான், தனது என்ற சிந்திக்கும் இயல்பு உலக முழுக்க நடுத்தர வர்க்கத்தின் குணமாக இருக்கிறது. இதை மனதில் கொண்டு தான் பாரதி ‘ படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் , போவான், ஐயோ என்று போவான் ‘ என்று சொன்னானே என்று கூடத்தோன்றுகிறது. படித்தவர்களின் சூதுக்காக பொது நலனைப் பழி கொடுத்து விட முடியாது.
ஜனநாயகம் என்பது தான் அனைத்து மக்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஆகச்சிறந்த அமைப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் இதை விடக் குறைவான ஆபத்துக் கொண்ட ஆட்சி அமைப்பு ஒன்றை வரலாற்றில் கண்டதில்லை என பங்கேற்பு வாய்ப்புக் கொண்ட மக்களாட்சி முறையின் மீது நம்பிக்கை கொண்ட பலரும் சொல்வதுண்டு. ஜனநாயகத்தின் வெற்றி எல்லாருடைய குரலுக்கும் மதிப்பளிப்பதில் இருக்கிறது என்று கருத வேண்டியதில்லை; எல்லாருடைய குரலுக்கும் இடமளிப்பதாகப் பாவனை செய்வதில் தான் இருக்கிறது. பாதிக்கப் படுவோரின் பக்கம் நிற்கிறது என்பது அதன் தலையாய பாவனை. அதனையும் காலி செய்வது பெரும் ஆபத்துக்களில் போய் முடியும்.

இது நல்லது; நடந்தாக வேண்டும்

தமிழக அரசின் உயர்கல்வித்துறைக்குப் பொறுப்பான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் மாநாடுகள் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது. உயர்கல்வித்துறையின் அமைச்சர் டாக்டர் பொன்முடியே அம்மாநாடுகளைத் தொடங்கி வைத்து முன் மொழிவுகளையும், நடக்க வேண்டிய மாற்றங்களையும் வலியுறுத்தி வருகின்றார். மாற்றங்களை அவசரச் சட்டங்களாகக் கொண்டு வராமல், செயல்படுத்த வேண்டிய துணைவேந்தர்களை அழைத்துப் பேசி மாற்றங்கள் செய்யும் இந்தப் போக்கு வரவேற்கத்தக்க போக்கு என்றே சொல்ல வேண்டும்.
அண்மையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களைத் தேர்வு செய்யத் தனியான வாரியம் ஒன்றை அமைப்பது என்றும், அதன் வழியே ஆசிரியப் பணிகளுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்வது என்றும் விவாதம் நடந்துள்ளது. விவாதிக்கப் பட்டது என்பதாக மட்டுமே செய்தித்தாள்களில் வந்துள்ளது. விவாதத்துக்கான இந்த முன் மொழிவு நல்லதொரு கருத்து. அவ்விவாதத்தைத் தொடர்ந்து நடத்தி, விரைவில் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்; அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தேவையான ஆசிரியர்களை அவ்வாரியமே தேர்வு செய்து அளிக்க வேண்டும்.
நமது உயர்கல்விக்குப் பொறுப்பாக உள்ள நிறுவனங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறையில் ஒத்த தன்மை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அதிகப் படியான ஆசை அல்ல. உலக முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தரும் பட்டங்களோடு சமநிலைப் படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை முடிவு செய்து பயிற்று வித்துத் தேர்வுகள் நடத்திப் பட்டம் வழங்கும் வேலையைச் செய்யும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறையில் ஒத்த தன்மை இருக்க வேண்டும் என அரசு உத்தரவிடுவதை ஒவ்வொருவரும் வரவேற்கவே செய்வர்.
இந்தியா முழுக்க ஒத்த தன்மையும் ஒரே தகுதியும் இருக்க வேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழக மானியக்குழு அடிப்படைத் தகுதியை வகுத்துத் தந்துள்ளது. துறை சார்ந்த பட்ட மேற்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணும், அம்மானியக்குழு ஆண்டிற்கு இரு முறை நடத்தும் விரிவுரையாளர் பணிகளுக்கான தேசிய அளவுத் தேர்வில் தேர்ச்சி ( UGC – NET / LECTURERSHIP) என்பது அந்த அடிப்படைத் தகுதி. பல்கலைக்கழக மானியக்குழுவின் விதியை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மாநில அளவில் ஒரு தேர்வை நடத்துகிறது தமிழக அரசு. ஸ்லெட் (SLET ) என அழைக்கப்படும் அந்தத் தேர்வினை நெட் தேர்வுக்குச் சமமானது என ஏற்றுக் கொள்வது என முடிவு செய்யப் பட்டது. இதுவே ஒரு விதத்தில் தரத்தைக் கைவிடும் விலகல்தான். அதன் பிறகு தேசிய அளவு அல்லது மாநில அளவுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற முடியாதவர்களின் வற்புறுத்தலை ஏற்று 55 சதவீத மதிப்பெண்ணுடன் எம்.பில் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருந்தால் தேசிய அளவுத் தேர்வோ, மாநில அளவுத் தேர்வோ தேவையில்லை என ஆக்கி விட்டதை இன்னொரு விலகல் எனலாம். இதனால் தொலை நெறிக் கல்வி வழியாக எம். பில் பட்டம் பெற்ற பல ஆயிரம் பட்டதாரிகள் தாங்கள் ஆசிரியப் பணிக்குத் தகுதியானவர்கள் எனச் சொல்லிக் கொள்ளத் தொடங்கினர். ஆசிரியர் பணிக்குத் தகுதியான நபர்கள் வருவதைத் திசைமாற்றிய செயலாக இவைகளையே குறிப்பிட வேண்டும்.
தரத்தை உறுதி செய்யும் வழிமுறைகளிலிருந்து இருபெரும் விலகலைச் செய்த போதிலும் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசு கல்லூரி ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணியில் கறாரான வழி முறைகளைப் பின்பற்றியுள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அடிப்படைத் தகுதியோடு ஒருவருக்குள்ள சிறப்புத் தகுதிகளை மதிப்பிட முறையான விதிகளை உருவாக்கி அதன் படி நடந்து கொண்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். சிறப்புத் தகுதிகள் என எம்.பில், முனைவர் போன்ற கூடுதல் பட்டங்களையும், பயிற்றுவித்தலில் இருக்கும்முன் அனுபவம், துறைசார்ந்த வெளியீடுகள், நேர்காணல் மதிப்பெண்கள் என முறைப்படி வகுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் இவற்றில் பெற்றுள்ள மதிப்பெண்களை இணையம் வழியாக வெளியிடவும் செய்கிறது. வெளியீடுகள் எவை முன் அனுபவத்தை எவ்வாறு கணக்கிடுவது என்பதைக் கூடக் கறாராக வரையறை செய்து தந்துள்ளது. இந்த வெளிப்படைத் தன்மை வேறு எந்த முறையிலும் இல்லை என்றே சொல்லலாம்.
இதே மாதிரியான வெளிப்படைத் தன்மையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திப் பல்கலைக்கழக மானியக்குழு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பியிருந்த போதிலும் பல்கலைக் கழகங்கள் அதைப் பின்பற்றவில்லை என்பதுதான் நடைமுறை யதார்த்தம். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணி நியமன முறைகளில் அரசு கல்லூரிகளுக்கான நியமனங்கள் மட்டுமே முறைப்படியாகவும், வெளிப்படையாகவும் நடந்துள்ளன. அதற்குப் பொறுப்பாக இருந்தது ஆசிரியர் தேர்வு வாரியம் என்பதால் அதன் எல்லைகளை விரிவாக்கி அனைத்து வகையான உயர்கல்வித்துறைக்கும் அதன் பொறுப்பிலேயே ஆசிரியர்கள் தேர்வை நடத்தலாம் என அமைச்சர் முன் வைத்துள்ள இந்த முன்மொழிவு அவசியமானது; அவசரமானது.
அரசு முன் மொழிந்துள்ள இந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எல்லைக்குள் அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்துறைகள் என அனைத்தையும் கொண்டு வருவதோடு சுயநிதிக் கல்லூரிகளையும் உள்ளடக்க வேண்டும். மாநில முழுவதும் பொதுத்தன்மை கொண்ட விருப்பமுறைத் தெரிவு முறை எனப்படும் புதிய கல்வி முறைக்குள் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அடக்கப்பட்டு வரும் இக் காலகட்டத்தில், அவற்றில் பணி புரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறையிலும் ஒரு பொதுத் தன்மை இருப்பது அவசியமானது.
குறிப்பாக அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் நிலவும் கோளாறான பணித் தேர்வு முறையைக் கட்டுப் படுத்தாவிட்டால் உயர்கல்வியின் பயன் மாணவர்களுக்குப் போய்ச் சேராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஒவ்வொரு ஆசிரியர் பதவியும் அரசின் கல்வித் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் அடிப்படைத் தகுதியை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. பிற தகுதிகளைக் காற்றில் பறக்க விட்டு விடுகின்றன. முனைவர் பட்டம் பெற்றவர் என்பதற்காகவோ, நூல்கள் எழுதியவர் என்பதற்காகவே ஒருவ்ர் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்குள் கூட வராமல் போகும் நிலையெல்லாம் நடந்துள்ளது.
தனியார் நிர்வாகங்கள் தாங்கள் விரும்பும் நபர்களைக் கொண்டு வரும் நோக்கத்தோடு விதிகளை மாற்றிக் கொள்ளும் நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தாங்கள் விரும்பும் நபர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்து கொள்கின்றன. தமிழகத்திலும் சரி இந்திய அளவிலும் சரி, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் மத அமைப்புகளாலும், சாதி அமைப்புகளாலுமே நடத்தப் படுகின்றன. சில இடங்களில் தனியார்களின் அறக்கட்டளைகளின் பொறுப்பில் அவை நடத்தப் படுகின்றன.
இந்த அமைப்புகள் தங்கள் அமைப்பு சார்ந்த நபர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காகவே விதிகளிலும் நடைமுறைகளிலும் அம்மாற்றங்களைச் செய்கின்றன. அல்லது நிறுவனத்திற்கு நன்கொடை வாங்குதல் என்ற பெயரில் பெருந்தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகச் செய்கின்றன. இவையெல்லாம் அரசுக்கும் அரசின் கண்காணிப்பைத் தன் வசம் வைத்திருக்கும் பல்கலைக் கழகங்களும் அறியாதவை அல்ல.
அறியாமல் நடக்கின்ற தவறுகளை விட்டு விடலாம். தவறுகள் நடக்கின்றன என்பதை அறிந்தபின் அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதுதான் சரியான அரசின் கடமை. முன் மொழியப் பட்டுள்ள உயர்கல்விக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் கடமையுணர்ந்த அரசின் நல்ல முயற்சி. நல்லது உடனே நிறைவேற்றப் படவேண்டும்.

Miyerkules, Setyembre 17 2008

கிராமங்களுக்குத் திரும்புதல் -ஒரு பரிசீலனை

சுற்றம் சூழ வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அந்த அழைப்பிதழை மிக்க மகிழ்ச்சியோடு கொடுத்தார் அந்த நண்பர். அவரது சொந்தக் கிராமத்தில் நடக்கப் போகும் வைபவத்தில் உறவினர்களையும் நண்பர்களையும் பங்கேற்கச் செய்ய எடுத்துக் கொள்ளும் முயற்சி அலாதியானதாக இருந்தது. என்னைக் கட்டாயம் வரவேண்டும் என்று அழைத்தார்.
அழைப்பிதழ் கொடுக்க வந்த போது பலவற்றைப் பேசினோ£ம். அவரது பேச்சு. கிராமத்தின் சிதைவு, விவசாயம் அழிந்து கொண்டிருப்பது பற்றியெல்லாம் இருந்தது. வெளிச்சம் வேண்டி மின்சாரத்தைக் கிராமத்திற்குக் கொண்டு போனதின் விளைவு நிலத்தடி நீரும் பாரம்பரியமான விவசாயமும் காணாமல் போய் விட்டது என்று அக்கறைப் பட்டார்; போடப்பட்ட உரங்களும் அடித்த பூச்சிக் கொல்லிகளும் மனித வாழ்வுக்கே எதிராகிப் போனது இந்தியக் கிராமங்களின் சோகவரலாறு. குளங்களும் கண்மாய்களும் தூர்ந்துவிட்டன. நானும் அவரைப் போலவே ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்தவன் . இந்த வருத்தங்கள் எல்லாம் எனக்கும் உண்டு; பகிர்ந்து கொண்டோம்.
நமது வாழ்க்கை கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும் என்று விரும்பு வதாகவும்,அதன் அடையாள மாகவே தனது மகன் திருமணத்தைக் கிராமத்தில் நடத்துவதாகவும் சொன்னார்அவரது ஆதங்கமும் செயல் பாடுகளும் இயந்திரமய வாழ்க்கைக்கு எதிராக மண்சார்ந்த வாழ்க்கையை நாடும்-வேர்களைத் தேடும் - ஒன்றின் அடையாளமாக எனக்குப் பட்டது. பொதுவாகத் திருமண விழாக்களில் பங்கேற்பதில் விருப்பம் இல்லை என்றாலும் வருவதாகச் சொன்னேன். கலந்து கொண்டேன்.
தெரு அடைக்கப் பந்தல் போட்டு விமரிசையாக நடந்தது. கிராமத்துக்காரன் என்பதால் எனக்கு ஒன்றும் புதிதாகத் தெரியவில்லை. சில நகரவாசிகள் திருமண மண்டபங்களில் உள்ள வசதிகள் இல்லையென்று வருத்தப் பட்டார்கள். என்றாலும் கிராமம் தரும் சுதந்திர வெளியில் கட்டுப்பாடுகளற்ற மனிதர்களாகக் குடித்து மகிழ்வதும் அதுவே நமது பண்பாட்டின் பகுதிதான் எனக் கருதிக் கொள்வதும் அவர்களுக்கு விரும்பத்தக்கதாகவே இருந்திருக்க வேண்டும்.
இந்த மனநிலைக்காகவே கூட நகரத்தில் குடியேறி விட்ட கிராமவாசிகளுக்கு கிராமியப் பண்பாடு பிடிக்கக் கூடும்.ஆனால் கிராமம் என்பது வந்து போகும் ஒருநாள் வாழ்க்கையும் நினைவுகளும் மட்டும் அல்ல என்பது அந்தக் கிராமத்திலேயே இருப்பவர்களுக்குத் தான் தெரியும்.
திருமணம் முடிந்து பந்தி தொடங்கியது. பந்தலுக்கு உள்ளே ஒரு பந்தியும், பந்தலுக்கு வெளியே ஒரு பந்தியும் என இரண்டு விதமான பந்திகள். உள்ளே உறவினர்களும் நண்பர்களும். வெளியே நடந்த பந்தியில் பணியாளர்கள். நண்பரின் குடும்பத்திற்குரிய வயல்வேலை, வீட்டுவேலை, எனப் பலவிதப் பணிகளைச் செய்யும் பணியாளர்களும் அந்தக் கிராமத்தின் தெருச்சுத்தம்( அருந்ததியர்), ஆடைச் சுத்தம் (வண்ணார்), முகச்சுத்தம் ( நாவிதர்) மயான வேலை (பறையர்) எனப் பல பணிகளைச் செய்த சேவைக் குழுக்களின் குடும்பங்களும் மகிழ்ச்சியாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர். நண்பர் உள்பந்தியைக் கவனித்துக் கொண்ட அதே அக்கறைகளுடன் வெளிப்பந்தியையும் கவனித்துக் கொண்டார். உறவினர்கள் மொய் எழுதிவிட்டுப் போனார்கள்; நண்பர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். தாம்பூலப்பைகளைக் கொடுத்து அனுப்பினார் நண்பர்.
பெருமையும் குற்றவுணர்வும்
வெளிப்பந்தியில் சாப்பிட்டவர்களும் வரிசையாக வந்தார்கள். மொய் எழுத வில்லை; பரிசுப் பொருட்களும் கொடுக்கவில்லை. அது வழக்கம் இல்லை என்றாலும் நண்பர் கூடுதல் சந்தோசத்துடன் அவர்களுக்கும் தாம்பூலப் பையையும் சிலருக்கு வேட்டி சேலைகளையும் கொடுத்து அனுப்பினார். வாயாரவும் மனதாரவும் அவர்கள் வாழ்த்தினார்கள். என்னிடம் நண்பர் சொன்னார். இவர்களின் இந்த வாழ்த்திற் காகத் தான் எனது மகனின் திருமணத்தை இங்கே வைத்தேன் என்றார். அவரிடம் வெளிப்பட்ட உணர்வு பெருமிதம். அந்தப் பெருமிதம் எனக்கு ஏற்புடையதாக இல்லை; அதிர்ச்சியாக இருந்தது.
தன்னையொத்த மனிதர்களை வெளியில் உட்காரவைத்துத் தனிப் பந்தியில் உணவு வழங்குவது எந்தவிதக் குற்றவுணர்வையும் உண்டாக்கவில்லை என்பதுதான் எனது அதிர்ச்சிக்குக் காரணம்.கிராமத்திலேயே வாழ்ந்து இப்பழக்க மெல்லாம் இயல்பானது எனவும், இத்தகைய நடைமுறைகளை நிறைவேற்று வதற்கே நாங்கள் இருக்கிறோம் என நம்பும் எனது உறவினர்களின் வீடுகளில் இத்தகைய நடைமுறைகளைப் பார்த்தவன் தான் நான். அவர் களிடம் இதையெல்லாம் மாற்றவேண்டும் என விவாதித்த பொழுது அதை யெல்லாம் நீயிருக்கும் நகரத்தில் வைத்துக் கொள்; இங்கெல்லாம் அவர்களே அதற்குத் தயாராக இல்லை எனச்¢ சொன்ன போது அரைமனதாக ஒத்துக் கொண்டு திரும்பி நகரவாசியாக ஆகிவிட்டவன் நான்.
அப்பொழுதெல்லாம் தோன்றாத அதிர்ச்சி எனக்கு இப்பொழுது உண்டானது. அதற்குக் காரணம் நண்பரிடம் வெளிப்பட்ட சிந்தனைத் தெளிவு தான். சமூக மாற்றத்தில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார் என்பதை அவரது பேச்சு எப்போதும் உறுதி செய்யக் கூடியது. வேர்களைத் தேடும் கருத்தியலில் அவருக்கிருந்த பிடிமானம் பலரையும் ஈர்க்கக் கூடிய ஒன்று.திருமண நிகழ்ச்சியில் அந்தணர்களையும் அக்னிசாட்சி யையும் ஒதுக்கிவிட வேண்டும் எனக் கருதிய அவரது பகுத்தறிவுச் சிந்தனை எளிதில் புரியக் கூடிய ஒன்று. உடல் உழைப்பைக் கீழானதாகக் கருதும் அந்தணர்கள் தங்கள் நலனை உறுதிசெய்யக் கண்டு பிடித்த தந்திரங்களே இந்தச் சடங்குகள் என்று அவர் நம்பியது தவறான கருத்து எனச் சொல்ல முடியாது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தணர்களை விலக்கி விட வேண்டும் என்று முடிவு எடுத்த அவருக்கு இரட்டைப் பந்தி முறை தொடர்வது தவறு எனத் தோன்றவில்லை.
நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மொய்ப்பணமும் பரிசுப் பொருட் களையும் பெற்றுக் கொண்ட நண்பருக்கு வெளியில் உட்கார்ந்து சாப்பிட்டவர் களிடம் எதையும் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்¢லை. அதற்குப் பதிலாக அவர்களுக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.
இவர் கொடுப்பதும், பெற்றுக் கொண்ட அவர்கள் அவரை- அவரது மகனை-குடும்பத்தை வாழ்த்துவதும் பரஸ்பர அன்பின் வெளிப்பாடு என்று அவர் கருதியிருக்கக் கூடும். இதில் அவர் சிலாகித்துப் போற்றும் மண்சார் -கிராமியப் பண்பாட்டின் உன்னத அடையாளங்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் கிராமிய மனித உறவுகளும் வெளிப்படுவதாக அவர் நம்பியது தூக்கலாகவே தெரிந்தது. உள்பந்தியையும் வெளிப் பந்தியையும் ஒன்று போல் பாவித்த தனது நிலைபாட்டைச் சிறந்த மனிதநேய வெளிப்பாடாகக் அவர் கருதிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதை அப்படி மட்டுமே புரிந்து கொள்ள முடியுமா..? என்று எனக்குள் தொடர்ந்து கேள்வி எழும்பிக் கொண்டே இருக்கிறது. அவர் காட்டிய அன்பும் அவர்களின் வாழ்த்தும் பரஸ்பர மனிதநேயம் சார்ந்த மனநிலையின் வெளிப்பாடு களாகத் தோன்றவில்லை. ‘தான் மேலே இருப்பவன்’ என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக அவர் இருக்க, ‘ஆம், அவர் உயர்வானவர்; அவரிடமிருந்து பெற்றுக் கொள்வது எனது இருப்பின் வெளிப்பாடு’ எனப் பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையுமே அதில் இருப்பதாக எனக்குத் தோன்றியது.
அந்த உறவு சமநிலை சார்ந்த அன்பின் வெளிப்பாடுகள் அல்ல; கருணை சார்ந்த ஆதிக்கத்தின் வெளிப்பாடு. மேல் -கீழ் என்று அடுக்கி வைக்கப் பட்டிருப்பதாக நம்பச் செய்து விட்ட இந்தியச் சாதியக் கருத்தியலின் அடையாளம். இந்த மனோபாவத்தைப் பிராமணீய மனோபாவம் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் பிராமணீய மனநிலை எப்பொழுதும் ஒதுக்கும் அல்லது ஒதுங்கிக் கொள்ளும். ஆனால் இங்கே ஒதுக்குதலும் இல்லை; ஒதுங்குதலும் இல்லை. தனது ஆதிக்கத்தையும் கருணையையும் வெளிப் படுத்தத் தனக்குக் கீழே ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்ள விரும்புகிறது இந்த மனநிலை. தனக்குக் கைகட்டிச் சேவகம் பண்ணும் கூட்டத்திற்குக் கருணையின் வெளிப்பாடாகப் பொருட்களைத் தர விரும்புகிறது. தனக்கு ஆலோசனை சொன்ன புரோகிதர்களுக்கும், சோதிடம், சாஸ்திரம், கலை எனச் செயல்பட்ட பிராமணர்கள், வள்ளுவர்கள், தேவதாசிகள் போன்றவர்களுக்கும் பொருட்களைக் கொடுத்து ஆதரித்துத் தங்கள் பெருமைகளைக் காத்துக் நிலமானிய மரபின் நீட்சி இதில் இருப்பதாகப் பட்டதுதங்களுக்கு ஆலோசனை சொன்ன பிராமணர்கள் சதிகாரர்கள்; சுயநலவாதிகள்; ஆதிக்கக் கருத்தியல் கொண்டவர்கள் எனத் தூற்றி அவர்களை மட்டும் கிராமவாழ்விலிருந்து ஒதுக்கிவிட்டுப் பழைய படி தங்களின் ஆதிக்கம் தொடர வேண்டும் என விரும்பும் எண்ணங்களின் வெளிப்பாடாகவும் தோன்றியது அந்தத் திருமணக்காட்சி. இந்தக் காட்சிகள் தொடரும் கிராமத்திற்குத் திரும்புதல் எனக்குச் சாத்தியமில்லை என்றே நகரத்திற்குத் திரும்பினேன்.

மதிப்பிழக்கும் உயர் ஆய்வுகள்


தமிழர்களாகிய நமது தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிப் பதில் முன்னிலை வகிப்பவை எவை எனப் புள்ளி விவரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. அப்படிப் பட்ட புள்ளி விவரங்கள் தேவை என்ற எண்ணம் கூடப் பெரும்பாலான தனிநபர்களிடம் இருப்பதில்லை. தனிநபர்களுக்கு இருப்பதில்லை என்பது பெரிய குறையாகக் கருத வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் உத்தரவாதத்தைத் தருவதாக நம்பும் அரசு நிறுவனங்களுக்கு அப்படியான புள்ளி விவரங்கள் இன்றியமை யாதவை.
நமது அதிகார மையங்கள் அத்தகைய புள்ளி விவரங்களைத் தரும் நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ள வில்லை என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் நிரூபித்து விட முடியும். தமிழகத்தில 15 - க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் நான்கு பல்கலைக் கழகங்களில் தான் புள்ளியியல் துறைகள் உள்ளன. அதே போல் இந்திய சமூகத்தின் அல்லது தமிழ்ச் சமூகத்தின் போக்கையும் ஆய்வு செய்து அரசுக்குத் தர வேண்டிய பொறுப்புடைய சமூகவியல் துறைகளும் கூடத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் ஒன்றிரண்டில் தான் செயல்படுகின்றன.
செயல்படும் பல்கலைக் கழகங்களிலும் கூட தமிழ் வாழ்வு சார்ந்த ஆய்வுகளோ, தமிழர்களின் எண்ண ஓட்டம் சார்ந்த புள்ளி விவரங்கள் குறித்த படிப்புகளோ இருக்கின்றன என்றும் சொல்ல முடியாது. மேற்கத்திய அறிதல் முறை தரும் மாதிரிகளை வைத்துக் கொண்டு இந்தியாவைப் பற்றிச் சில தகவல்களைத் தரும் ஆய்வுகளே இங்கு நடைபெறுகின்றன. இந்தியாவின் அல்லது தமிழகத்தின் சமூகவியலைக் குறித்த காத்திரமான ஆய்வு முடிவுகள் எதனையும் தமிழகத்தின் சமூகவியல் துறைகள் எவையும் வெளியிட்டு விடவில்லை. அதே போல் இந்தியாவின் அல்லது தமிழகத்தின் புள்ளி விவரங்களைத் தரும் புள்ளியியல் துறைகளும் இங்கு இல்லை.
சமூகவியல் அல்லது புள்ளியியல் துறைகள் மட்டுமே இவ்வாறு இயங்குகின்றன என்று கருத வேண்டியதில்லை. சமூக அறிவியல் மற்றும் மொழிகள் சார்ந்த உயர்கல்வித துறைகள் அனைத்துமே இவ்வாறு தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் செயல்படும் ஆங்கிலத் துறை களின் ஆசிரியர்களுக்கு இந்திய மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களின் போக்கு எத்தகையன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் எதுவும் இருப்பதில்லை.
தமிழ் மொழியில் எழுதப் பெறும் சிறந்த படைப்புகளை விமரிசனத்தோடு உலக இலக்கியத்திற்கு அறிமுகம் செய்யும் பொறுப்பை இங்கு இருக்கும் ஆங்கிலப் பேராசிரியர்கள் செய்யவில்லை என்றால் அதற்கான அங்கீகாரம் எப்போதும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்ப்பேராசிரியர்களும், தமிழ் எழுத்தாளர்களும் மட்டும் முயன்று தமிழ் இலக்கியத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று விட முடியாது. தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகம் மட்டும் அல்ல; சரியான மொழி பெயர்ப்பையும் ஆங்கிலப் பேராசிரியர்கள் தான் செய்ய முடியும்.
தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் காட்டும் ஒரு சில ஆங்கில ஆசிரியர்களும் தங்களின் சொந்த விருப்பு வெறுப்போடு தேர்வு செய்து சில வகையான படைப்புகளைக் குறித்து மட்டுமே ஆங்கிலத்தில் அறிமுகம் செய்கின்றனர். அதனால் தமிழின் எல்லாவகை இலக்கியப் படைப்புகளும் உலக இலக்கியத்திற்குள் இடம் பெறாமல் போய்விடுகின்றன. உலக அளவில் செய்யப்படும் எந்த அறிமுகமும் இந்திய மொழிகளில் அல்லது இந்திய இலக்கியத்தில் அதன் இடம் இத்தகையது என்பதாக அமைய வேண்டும். அப்படியான தேவையை நிறைவேற்றும் கடமை அல்லது சமூகப் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக ஆங்கிலப் பேராசிரியர்கள் கருத வேண்டும்.
தமிழியல் துறைகளோ எப்போதும் மாதிரிகளை வைத்துக் கொண்டு இன்னொரு நகலை உருவாக்கும் சிறு தொழிற்கூடங்களாக இருக்கின்றன. பிள்ளையார் சதுர்த்திக்கு அச்சில் பிள்ளையார் செய்யும் ரோட்டோரத்துக் கலைஞனைப் போல ஆய்வேடுகள் உருவாக்கப்படுகின்றன. அவை சொல்லும் முடிவுகள் எதுவும் தமிழின் புலங்களான மொழித்துறைக்கோ, இலக்கியத் துறைக்கோ, பண்பாட்டுத் துறைக்கோ எள் முனையளவும் உதவும் நோக்கம் கொண்டனவாக இல்லை. அச்சுப்பிள்ளையார்கள் சதுர்த்திக்குப் பின்னால் ஆற்றிலோ குளத்திலோ கரைக்கப் படுவது போல தமிழ் ஆய்வுப் பட்டங்கள் எண்ணிக்கைக் குளத்தில் கரைந்ததுதான் பலன்.
இப்படி எல்லாம் சொல்வது பலருக்குக் கோபத்தை வரவழைக்கலாம். இருபதாண்டுக் காலம் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஆய்வுகளைப் படித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் அதுதான் உண்மை. இப்படிச் சொல்வதற்கு எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை.
உயராய்வு நிறுவனங்களில் -குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் சமூக அறிவியல் துறைகளும் மொழிகளின் புலங்களும் அவற்றின் வெளிகள் எவை என்பதைத் திட்டமிட்டுக் கொள்ளாமல் அந்நியப்பட்ட ஆய்வுகளையே செய்து கொண்டிருக்கின்றன இந்தியாவில் செய்யப்படும் ஆய்வுகள் இந்தியாவை அல்லது தமிழகத்தை மறந்த ஆய்வுகளாக இருக்க முடியுமா என்ற அடிப்படையான கேள்வியைக் கேட்டுக் கொண்டு விடை தேட முனைந்தாலே அந்நியப்படும் ஆய்வுகளுக்குள் நுழையாமல் தப்பி விடலாம்.
குறிப்பாகப் புள்ளியியல், சமூகவியல், வரலாறு, பொருளாதாரம், மேலாண்மையியல், குற்றவியல், உளவியல், மானிடவியல், பண்பாட்டியல், மொழியியல், தத்துவம் போன்ற துறைகளின் ஆய்வுகள் நமது காலத்தையும் நமது வெளியையும் விட்டு விலகிச் செல்லாமல் இருந்தாலே காத்திரமான ஆய்வாக ஆகி விடும் வாய்ப்புகளைப் பெற்று விடும். இவையெல்லாம் தனித்தனியாக ஆய்வுகளில் ஈடுபடுவதை விடவும் ஒருங்கிணைந்து செயல்படும் போது அந்த ஆய்வுகள் கூடுதலான சமூகப் பொறுப்பைக் கொண்டதாக ஆகிவிடும்.
இன்றைய நிலையில் தமிழக வாழ்வில் ஏற்பட்டுள்ள பேரியல் மாற்றங்களையும் நுண்ணியல் மாற்றங் களையும் வெளிக்கொண்டு வரும் ஆய்வுத் திட்டங்கள் எந்தப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப் பட வில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இத்தகைய ஆய்வுகள் தேவையில்லை என்று யாரும் சொல்லி விட முடியாது. வருவாய் தரும் முதல¦ட்டுத்திட்டங்கள் சார்ந்தும், மக்கள் நலனை மையப் படுத்தும் செலவினங்கள் சார்ந்தும் இத்தகைய புள்ளி விவரங்கள் தேவை என்பதைக் கூட நமது அதிகார மையங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
சமூகப் பொறுப்புள்ள ஆய்வுகளை மேற்கொள்ளாதவரை பல்கலைக் கழக ஆய்வுகள் அந்நியப் பட்ட ஆய்வுகள் என்ற அவப்பெயரைத் தாங்குவதை நிறுத்தி விட முடியாது. ஆய்வு செய்ய வரும் ஆய்வாளருக்கு ஆய்வுப் பட்டம், வேலைக்கான கூடுதல் தகுதியாகக் கருதுவதைக் கூட ஓரளவு சகித்துக் கொள்ள முடியும். தமிழ் ஆய்வுக்கு வழிகாட்டும் நெறியாளர்களும் கூடத் தங்கள் பதவி உயர்வுக்கான மதிப்புப் புள்ளிகளைப் பெற்றுத் தரும் ஒன்றாக ஆய்வைக் கருதுவதை எப்படிப் புரிந்து கொள்ளுவது? இப்படியான புரிதலோடு செயல் படும் போது தான் பதவி உயர்வுக்காக அடுத்தவர்களின் ஆய்வுகளைத் திருடித் தனது ஆய்வாகச் சொல்லும் ஆபத்துக்கள் நிகழ்கின்றன.
நியாயமான ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் பதவி உயர்வுக்கு மாறாக அதிகார மையங்களை நெருங்கிச் சென்று, தவறான தகவல்களைத் தந்து பெறும் பதவி உயர்வுகள் தலைக்கு மேல் கட்டித் தொங்கும் நெருப்புக் குண்டம் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். கண்டு பிடிக்கப் பட்டால் தான் தண்டனை என நினைப்பது தனிமனிதத் தன்னிலை யின் சாவு. தனிமனிதத் தன்னிலையின் மரணத்தை சமயங்கள் தலைவிதி எனச் சொல்லி விலகிச் செல்லலாம். தர்க்கம் சார்ந்த அறிவோ அப்படிச் சொல்லாது. அது மதிப்பீடுகளின் வீழ்ச்சி என்று தான் வருணிக்கும்.
இந்தியாவில் அதிகாரத்தை நாடிச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னிலைக்கு இயல்பான மரணத்திற்குப் பதிலாகத் தற்கொலையைப் பரிசாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அறிவுஜீவிப் பிரதமர் தொடங்கித் தனது ஓவியத்தை ஆதிமூலத்தின் ஓவியம் எனச் சொல்லி விற்கும் கலைத்திருடர்கள் வரை இதுதான் நிலைமை.

இயல்பு தொலைக்கும் தமிழர்கள்


நான் நின்றிருந்த அந்த அங்காடி வளாகத்தில் மூன்று வங்கிகள் செயல்படுகின்றன . இரண்டு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள். இந்த வங்கி பன்னாட்டு வங்கி. தேசிய மயமாக்கப் பட்ட வங்கியைப் போல மாநில மொழிக்கோ அல்லது தேசியமொழி என நம்பப்படும் இந்திக்கோ இங்கு வேலை இல்லை. எல்லாமே ஆங்கிலத்தில். அங்கே வேலை பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் பரிமாறிக் கொள்ளும் மொழி கூட ஆங்கிலமாகத் தான் இருக்கிறது.பேச்சு மொழி ஆங்கிலமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அவர்களின் உடல் மொழியே ஆங்கில நளினத்துக்குரியதாக ஆகி இருப்பதை நீங்கள் நேரில் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
அந்த வங்கியில் கணக்குத் தொடங்கும் நோக்கத்தோடு மனுவை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்த அந்த நடுத்தர வயதுப் பெண் நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தார். கையில் விலை உயர்ந்த பேனா இருந்தது. ஆங்கிலத்தில் இருந்த அந்த மனுவைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு உதவலாம் என்று கருதி அவரருகில் சென்றேன். தயங்கித் தயங்கி என்னிடம் மனுவைக் கொடுத்த அவருக்கு ஆங்கிலம் தெரிந்து தான் இருந்தது. இடது புறம் சாய்த்து சாய்த்து எழுதிய எழுத்து வாசிப்பதற்கேற்ற வகையில் தெளிவாக இருந்தது. அழகாகவும் இருந்தது. எல்லாக் கட்டங்களுக்கும் உரிய தகவல்களை நிரப்பியவர் ’பெயர்’ என்று இருக்கும் முதல் கட்டத்தை மட்டும் நிரப்பாமல் இருந்தார். கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில் கூடக் கையெழுத்தைப் போட்டு முடித்து விட்டார். வாசித்து விட முடியாத தன்மையில் எழுத்தின் மேல் எழுத்தாகக் கையெழுத்தைப் போட்டிருந்தார்.
கையெழுத்தைக் கொண்டு அவர் பெயரை வாசித்து எழுதி விடலாம் என்று நினைத்த எனக்கு அவர் பெயரை வாசிக்க முடியவில்லை. தனது பெயரை எழுதுவதில் அவருக்கு என்ன தயக்கம் என்னும் என்பது முதலில் எனக்குப் புரியவில்லை. பிரச்சினை அவரது பெயரை எழுதுவதில் இல்லை. பெயர் என்பதற்கு நேராக மூன்று கட்டங்கள் இருந்தது தான் அவரது குழப்பத்திற்குக் காரணம் என்பது பிறகு புரிந்தது. அவருக்கு இருந்தது ஒரே ஒரு பெயர் தான். ஆனால் மனுவில் கேட்கப் பட்டிருந்ததோ முதல் பெயர், இரண்டாம் பெயர், மூன்றாம் பெயர் என மூன்று பெயர்கள்.
கல்லூரியில் படித்தது வரை தனது ஒரே பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த அந்த மங்கை திருமணம் ஆன பின்பு தனது பெயருக்குப் பின்னால் கணவன் பெயரையும் சேர்த்து எழுதத் தொடங்கி யிருக்கிறார். இப்படி எழுதும் போது அவரது முதல் பெயர் அவரது பெயரா? அல்லது கணவன் பெயரா? என்ற குழப்பத்திற்கு விடை தேட வேண்டிய தேவை இதற்கு முன்பு எழவில்லை. இப்போது அந்தக் கேள்வி எழுந்ததோடு நிற்கவில்லை. இந்த மனுவில் மூன்றாவது பெயர் என்று வேறு கேட்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் எந்தப் பெயரை எழுதுவது என்ற புதுக் குழப்பமும் ஏற்பட்டு விட்டது. எல்லாக் கட்டங்களையும் நிரப்பி விட்டு கடைசியாகத் தன் பெயரை எப்படி எழுதுவது என விசாரித்து எழுதிக் கொள்ளலாம் என்று விட்டு வைத்திருக்கிறார்.
மனுவில் இருக்கும் மூன்று கட்டத்தில் தனது ஒரே பெயரை, எந்தக் கட்டத்தில் எழுதுவது எனக் குழம்பி நின்ற அந்தப் பெண்ணுக்கும் அப்படியானதொரு நிர்ப்பந்தம் இருந்தது. டெல்லிக்கருகில் இருக்கும் நொய்டாவில் வேலை பார்க்கும் மகளின் சம்பளம் அந்த வங்கியின் இணைய வழிக் கணக்கில் இவளது கைக்கு வந்து சேர அவளுக்கும் ஒரு கணக்கு தொடங்கப் பட வேண்டும். கணக்கு தொடங்க வந்திருக்கிறாள். பன்னாட்டு வங்கிக் கணக்குக்குப் பழக்கப் படுத்துதலின் தொடர்ச்சியாக அவை தரும் அட்டைகளைச் செருகிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தயாராக வேண்டும். அடுத்ததாகக் கடன் அட்டையைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். கடன்அட்டை என்பது ஒருவரை நுகர்வோராக மாற்றுவதன் மிகப் பெரிய நகர்வு என்பதை விரிவாக விளக்க வேண்டியதில்லை.ஒருவன் விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும் உலகமயத்தின் கண்ணிக்குள் அவனைக் கொண்டு வரும் வித்தைகள் அதன் சித்தாந்திகளுக்குச் சரியாகவே தெரிந்து இருக்கிறது.
கையில் இருக்கும் மனுவில் தனது பெயரை எழுத முடியாமல் தவிக்கும் அந்தப் பெண்ணுக்கு ஆங்கில மொழி பிரச்சினை அல்ல; ஆங்கில மரபு தான் பிரச்சினை. ஐரோப்பியர்கள் தங்கள் பெயரை எழுதும் போது மூன்று அலகுகள் இருக்கும் விதமாக எழுதுகிறார்கள். மூன்று அலகுகளில் கடைசியாக இருப்பது அந்த நபரின் பெயராக இருக்கும். முதலில் இருப்பது குடும்பப் பெயராகவும், நடுவில் இருப்பது தந்தையின் பெயராகவும் இருக்கும். குடும்பப் பெயர், தகப்பன் பெயர், இயற்பெயர் என்பது ஐரோப்பிய மரபு. தமிழ் மரபு அப்படிப் பட்டதில்லை. இங்கே வம்சப் பெயர்களின் இடத்தைச் சாதிகளின் பெயர்கள் பிடித்துக் கொண்டுள்ளன. சாதிப் பெயர்களையும் கூட பெயர்களுக்கு முன்னால் போடும் பழக்கம் இல்லை. இயற்பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடும் பழக்கம் எப்போது வந்தது என்பதை ஆய்வு செய்து கண்டறிய வேண்டும்.
தொல்தமிழகத்தில் இன்றைய அர்த்தத்தில் சாதிகள் இருந்ததா? சாதிகளைப் பெயரோடு சேர்த்து எழுதினார்களாஎன்றால் சங்க இலக்கியத்தில் ஆதாரங்கள் இல்லை. அதிலும் பெண்களுக்குச் சாதிப் பெயர்களும் கிடையாது. அதற்குப் பதிலாக ஊர்ப் பெயரையும் தொழிலையும் இணைத்துச் சொந்தப் பெயரைச் சொல்லும் வழக்கம் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் என்பது மணிமேகலையை எழுதிய கவிஞனின் பெயர். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரன் என்பது இன்னொரு கவிஞனின் பெயர். கூலவாணிகம், கணக்காய்தல் என்பன தொழில் பெயர்கள். ஊர்ப்பெயர், தொழிற்பெயர், இயற்பெயர் என்ற மூன்று அலகுகள் இருந்துள்ளன. பெண்கவிகள் அள்ளூர் நன்முல்லை; மாறோக்கத்து நப்பசலை என ஊர்ப் பெயரோடு சேர்த்துக் குறிப்பிடப் படுகின்றனர். பெண்களுக்குக் குறிப்பான தொழில் அந்தக் காலத்தில் இல்லை போலும்.
ஒரு மனிதன் தனது பெயரை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்கான விதியை எழுதும் போது தொல்காப்பியம் சிறப்பினால் வரும் பெயர்களை முதலில் சொல்லலாம்; அதனைத் தொடர்ந்து இயற் பெயரை எழுத வேண்டும் எனக் கூறுகிறது. சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் என்பது தொல்காப்பியரது இலக்கண விதி. சங்ககாலத்து உதாரணங்களை விட்டு விடுவோம். நிகழ்காலத்துக்கு வருவோம்.
கலைஞர் மு. கருணாநிதி என்ற பெயர் எல்லோருக்கும் தெரிந்த பெயர். கருணாநிதி இயற்பெயர். முத்துவேல் கருணாநிதி என்பது பழம் மரபு. கலைஞர் என்ற சேர்க்கை சிறப்புப் பெயர்ச் சேர்க்கை. மூன்று அலகு கொண்ட இந்த வரிசை கூடத் தமிழ் மரபு சார்ந்த மரபு தான். இப்படியான தமிழ் மரபை உருவாக்க நமது அரசியல்வாதிகளும் பண்பாட்டு ஆளுமைகளும் படும் பாட்டை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. உருவாக்கிய மரபை அவர்களே அழித்துக் காட்டும் அற்புதத்தையும் கூடச் செய்து விடுகிறார்கள் என்பது வருத்தமானதல்ல;ஆச்சரியமானது.
இயற்பெயர் தொலைத்து கலைஞராக மட்டுமே அவரது இருப்பு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் கலைஞராகவே வாழும்படியான நிர்ப்பந்தம் சுகமானதா? சுமையானதா? என்பதை மற்றவர்கள் சொல்ல முடியாது. அவர்தான் சொல்ல வேண்டும். கலைஞர் என்பது மட்டும் அல்ல. தங்கள் தொண்டர் கூட்டம் மொத்தத்திற்கும் அம்மாவாக இருப்பதும், தளபதியாக வாழ்வதும், கேப்டனாக வசனம் பேசுவதும், அய்யாவாகவும், சின்ன அய்யாவாகவும் வாழ நேர்வதும் கூட சுமையா? சுகமா? என்று ஒவ்வொரு வரையும் தான் கேட்க வேண்டும். எழுச்சிக்கலைஞர், இளைய தளபதி, கனவுக்கன்னி, சூப்பர் ஸ்டார், வைகைப்புயல், மக்கள் கலைஞன், கவிப்பேரரசு, எனச் சிறப்புப் பெயராகவே அலைய நேர்வதில் தனிமனித இருப்பும் சுதந்திரமும் காணாமல் போகிறது என்று நானும் நீங்களும் சொல்லலாம்.
இயல்பு தொலைத்தல் எல்லோருக்கும் சாத்தியமில்லை. இயல்பு தொலைத்துப் பாரம் சுமைக்கிற வர்களுக்கு அது தரும் சுகம் ஆனந்தமானதாக இருக்கக் கூடும். அந்த ஆனந்த ரகசியம் அவர்களுக்கு மட்டும் தெரியும் ரகசியம். ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்

கலைக்கப்படும் மௌனங்கள்


ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் எதற்கும் போகாமல் வீட்டில் இருந்தால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. செய்து கொண்டிருக்கும் வேலை முக்கியமானது என்ற போதும் அதை நிறுத்தி விட்டுப் பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது நீயா? நானா? வெளியூர் போனதால் பார்க்கத் தவறியிருந்தால் மறு ஒளிபரப்பின் போதாவது பார்த்து விட வேண்டும் என்றே விரும்புகிறேன்.
நான் தான் அப்படிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன் என்று சொல்ல முடியாது. பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் சிறுநகரங்களில் வசிக்கும் நடுத்தரவர்க்க ஆண்களும் பெண்களும் அந்த நிகழ்ச்சியின் தொடர் பார்வையாளர்களாக ஆகி வருகின்றனர். அலுவலகங்களிலும் பயணங்களிலும் அந்த நிகழ்ச்சி குறித்த விவாதங்களின் நீட்சியைக் கேட்க முடிகிறது. அங்கங்கே பேசும் பேச்சுகள் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டியிருக்கிறது என்பதன் அடையாளம்..
சினிமா சார்ந்த முகங்களையும் காட்சிகளையும் அலுக்காமல் ஒளிபரப்பும் சன் குழுமத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும், கலைஞர் குழும அலை வரிசைகளுக்கும் மாற்றாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும் மக்கள் தொலைக் காட்சியும் இரு வேறு திசைகளில் தங்கள் இலக்குகளைத் தீர்மானித்துக் கொண்டு பயணம் செய்கின்றன என்பது எனது கணக்கு.
கிராமம் சார்ந்த பாமர மனிதர்களின் இருப்பு, செயல்பாடுகள், ஆசைகள், தேவைகள், அவற்றிற்கான நியாயங்கள் எனத் திட்டமிட்டுக் கொண்டு அவற்றைக் காட்சிப் படுத்துவதும், சொல்வதுமாகத் தனது இலக்கை மக்கள் தொலைக்காட்சி தீர்மானித்திருப்பது போலப் படுகிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியின் இலக்கு அதன் எதிர்த் திசையில் இருக்கிறது. மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு நுகர்வுக் கலாசாரத்திற்குள் நுழையும் ஆவலும் ஆசையும் கொண்ட நடுத்தர வர்க்கத்தை ஈர்க்கும் நோக்கம் தான் ஸ்டார் விஜயின் இலக்கு.
இலக்கு என்ற தமிழ்ச் சொல் டார்கெட் என்ற ஆங்கிலச் சொல்லின் மொழி பெயர்ப்பு. பொருளாதாரத் துறை சார்ந்த கலைச் சொற்களில் ஒன்று. ஒரு வியாபாரத்தில் அடைய வேண்டிய லாபம் எவ்வளவு என்று முன்பே ஊகிக்கும் ஒன்றைக் குறிப்பிடும் சொல்லாக டார்கெட் என்ற சொல் இருக்கிறதுஇலக்கைத் தீர்மானிக்காமல் இறங்கும் வியாபாரத்தில் லாபத்திற்கு உத்தரவாதம் இல்லை. லாபம் இல்லை என்றால் வளர்ச்சியும் இல்லை என்பது சந்தையின் விதி.
ஒரு துறை உருவாக்கும் கலைச்சொல் அந்தத் துறையோடு மட்டுமே நின்று விடுவதில்லை. பொருளாதாரக் கலைச் சொல்லான இலக்கு, வியாபார நோக்கம் கொண்ட எல்லாத்துறைக்கும் உரியதாக மாறி விட்டது. அதிலும் இன்று ஊடகத் துறையினர் அதிகம் உச்சரிக்கும் சொல் இலக்கு. இலக்குப் பார்வையாளர்களை நோக்கியே தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றனகுறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வை யாளர்களின் கூட்டு மனநிலை, வாங்கும் நோக்கம், சக்தி ஆகியவற்றிற் கேற்பவே நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்கள் அமைகின்றனர். சன் தொலைக் காட்சியில் வருடக் கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆனந்தத்தின் முக்கிய விளம்பர நிறுவனம் ப்ரூ காபி என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
பத்திரிகை விற்பனைக் கூடக் கூட அச்சு ஊடகத்தில் லாபம் கூடும். பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் போது காட்சி ஊடகத்திற்குக் கிடைக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விளம்பரங்களின் எண்ணிக்கையும் கால அளவும் கூடும் போது அந்தத் தொலைக்காட்சி அலை வரிசைக்கான வருமானம் பெருகும். ஊடகங்களின் வியாபாரக் கணக்குகள் பற்றி ஊடக முதலாளிகள் கவலைப்படட்டும். ஊடக ஆய்வா ளனாக எனது அக்கறைகளும், பார்வையாளர்களாக உங்கள் கவனமும் அதிலிருந்து வேறுபட்டவைகளாக இருக்க வேண்டும் ஊடகங்கள் உண்டாக்கும் கருத்தியல் பரப்பு குறித்தும், பார்வையாளனிடம் அது உண்டாக்கும் சிந்தனை மாற்றங்கள் குறித்தும் ஓர் ஊடக ஆய்வாளன் மட்டும் அல்ல; ஒரு சமூக மனிதன் என்ற நிலையிலேயே கூட நாம் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது.
காதல் யாருக்குச் சாத்தியம்? அழகானவர்களுக்கா? அணுகுபவர்களுக்கா? என்ற வினாவை எழுப்பிச் சமீபத்தில் நடத்திய விவாதத்தில் அந்நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் முடிவு எதுவும் சொல்ல வில்லை. அழகானவர்கள் மட்டுமே காதலிக்கப்படுகின்றார்கள் என்றோ, அப்ரோச் பண்ணும் ஒருவருக்குத் தான் காதல் கை கூடுகிறது என்றோ அந்த நிகழ்ச்சியின் முடிவில் தீர்மானம் எதுவும் இல்லை; தீர்ப்பும் சொல்லவில்லை. இதுதான் விவாதம் என்னும் பேச்சு வடிவத்தின் சிறப்பம்சம்ம்.
இந்த விவாதத்தில் மட்டும் அல்ல. இதுவரை நடந்த நீயா? நானா? வின் பெரும் பாலான விவாதங்களில் முடிவை நோக்கி நகர்த்திச் செல்லும் வேலையை அதன் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் செய்த தில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அப்படி நகர்த்துவது எனத் தீர்மானித்தால் அவர் பட்டிமன்ற நடுவரின் இடத்தை அடைந்து விடுவார். அந்த இடத்தை அடையக் கூடாது என்ற தீர்மானத்தோடு செயல் படுவதில் தான் இந்த நிகழ்ச்சியின் பலம் இருக்கிறது என்பதைக் கோபிநாத்தும்அதன் பின்னணியில் இருந்து இயக்கும் தயாரிப்பாளர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஸ்டார் விஜயின் நீயா? நானா?வில் விவாதிக்கப்படும் பல தலைப்புகள் ஒவ்வொருவரின் பொதுப்புத்தியிலும் கேள்வியாக மட்டுமே இருப்பவை. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்களா? இல்லையா? என்ற கேள்வியைக் கேட்ட உடனேயே நமது பதிலைச் சொல்லிப் பார்ப்போம். ஆனால், ஆண்களும், பெண்களுமாக அணி பிரிந்து விவாதித்து முடிக்கும் போது நமது மனத்திற்குள் இருந்த பதில் மாறிப் போகும் வாய்ப்புகள் இந்த விவாத மேடையில் இருக்கிறது.
ஜூனியர் X சீனியர் என்ற எதிர்வை முன் நிறுத்தி விவாதிக்கும் போது நமது தன்னிலை ஏதாவது ஒரு பக்கம் சேர்வதற்குப் பதிலாக இருபக்க நியாயங்களையும் அசைபோடும் தன்னிலையாக ஆக்கப்படும் வாய்ப்புகள் தான் அதிகம். படிக்காதவர்கள் X படித்தவர்கள்; ஒல்லியானவர்கள் X குண்டானவர்கள்; மாமியார்கள் X மருமகள்கள் ; தனியார் X அரசு ; ஆண் X பெண் இளையோர் X முதியோர் என எதாவது ஒரு இரட்டை எதிர்வை முன் வைத்து உருவாக்கப்படும் இந்த விவாத மேடை அடிப்படையில் இத்தகைய இரட்டை எதிர்வுகளின் அபத்தத்தைக் கலைத்துப் போடும் வேலையைச் செய்கிறது.
தனிமனிதர்களின் அந்தரங்க வெளியிலும் அவர்கள் பிறரோடு சேர்ந்து இயங்க வேண்டிய சமூக வெளியிலும் எல்லாவற்றையும் கறுப்பு X வெள்ளை எனப் பகுத்துப் புரிந்து கொள்வது போலத் தோன்றினாலும், நிதானமான முடிவு களில் அப்படி இருப்பது இல்லை என்பதுதான் உண்மை. எதையும் கறுப்பு வெள்ளையாகக் கணித்து விடும் மனிதர்கள் பல நேரங்களில் தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள்.
எல்லாவற்றையும் பேச்சாக மாற்றிவிடுவதில் விருப்பம் உடையவர்கள் தமிழர்கள்.தமிழர்களின் பொதுக் குணம் என்று கூடச் சொல்லலாம். தனிப் பேச்சு என்பதுவும்நடுவர் ஒருவரைக் கொண்டு அணி பிரிந்து விவாதிப்பதாகப் பாவனை செய்யும் பட்டிமன்றமும் பார்வையாளனின் சிந்தனைக்கு இடம் தராத நிகழ்ச்சிகள்.அரட்டை அரங்கம் பாணியில் நடக்கும் பேச்சுக் கச்சேரிகளும் கூடப் பார்வையாளர்களுக்குச் சிந்தனையைத் தூண்டாமல்-யோசிப்பதற்கான வாய்ப்பைத் தராமல், நிகழ்ச்சியை நடத்தும் பிரபலங்களின் கருத்தை ஏற்கச் செய்யும் நோக்கம் கொண்டவை தான்..
அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதான வடிவத்தோடும் பிரக்ஞையோடும் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப் பெறும் நீயா நானாவிற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. கட்டுப் பெட்டியான அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டு பேசா மடந்தைகளாக இருக்கும் இந்தியர்களை- தமிழர்களைப் பேசுபவர்களாக- பேசுபவர்களோடு சேர்ந்து சிந்திப்பவர்களாக ஆக்குவதுதான் அதன் நோக்கம். அந்த நோக்கம் நமது மரபான நம்பிக்கைகள் மீதும், பண்பாடு எனக் கருதிய ஒழுக்க விதிகள் மீதும் கூட மூர்க்கமான தாக்குதலைக் கொடுக்கக் கூடும்.
முன்பு சில விவாதங்களில் அத்தகைய தாக்குதல் நடந்திருக்கிறது. எல்லாவற்றையும் பேசிப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் அந்தத் தாக்குதலும் கூட இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. விவாதிப்பதும் ஏற்றுக் கொள்வதும் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. அந்த ஆரோக்கியத்தின் தொடர்ச்சியாக நமது சமூகத்தின் மௌனங்கள் கலைக்கப் படும் என்றால் அதைத் தெரிந்தே தொடரலாம்.

புதிய பல்கலைக்கழகங்களின் தேவை

பல்கலைக்கழகங்கள் அவற்றின் பணிகளை போதுமான அளவில் செவ்வனே செய்யும் போது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது.
மக்கள் நலன் கருதி பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய பண்பட்ட அரசியல் உதவும்.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களை ஈர்க்கும் பணியைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்
இந்தியாவில் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப் படும் செப்டம்பர்,5 அன்று இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆவது பட்டமளிப்பு விழாவில் நமது நாட்டின் அரசுத் தலைவர் டாக்டர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் இடம் பெற்ற வாசகங்கள் இவை.
பல்கலைக்கழகக் கல்வியின் பொறுப்பையும், பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டிய விதத்தையும் சரியாக உணர்ந்துள்ள பிரதமரின் உரை வெகுமக்கள் அரசியலுக்கும் உயர்கல்விக்கும் இருக்க வேண்டிய உறவுகளையும் கூடச் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தப் பொறுப்புணர்வோடு தான் மைய அரசாங்கம் நியமித்த உயர்கல்விக்கான கல்வியாளர் குழுவும் கடந்த ஆண்டு ஒரு முக்கியமான பரிந்துரையை அரசுக்கு அளித்தது.தேசிய அறிவுக் குழுவின் ( National knowledge commission) அந்த அறிக்கையில், ’இந்திய தேசத்திற்கு இப்போதுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை போதாது; இதைப் போல இன்னும் மூன்று மடங்கு எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப் பட வேண்டும் ’ என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது.
மைய அரசு உயர்கல்விக்குப் பொறுப்பான பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு இந்தக் குறிப்பை நடைமுறைப் படுத்தும்படி கேட்டுக் கொண்டபின் எல்லா மாநிலங்களிலும் புதிய பல்கலைக் கழகங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மையப் பல்கலைக் கழகங்கள் இல்லாத மாநிலங்களில் மைய அரசாங்கமே முழுச் செலவில் மையப் பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் வேலையையும் ஆரம்பித்துள்ளது.
நீண்ட காலத்துக்குப் பின் தமிழ் நாட்டில் இரண்டு மையப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப் பட உள்ளன.தொழில் நகரமான கோயம் புத்தூரில் ஒன்றும், திருவாரூரில் ஒன்றுமாக இரண்டு மையப் பல்கலைக் கழகங்களுக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கியுள்ளன. இதே நோக்கத் தோடு மாநில அரசும் தனது பங்குக்குப் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் பணியை ஆரம்பித்திருக்க வேண்டும். புதிய பல்கலைக் கழகங் களைத் தொடங்காமல், தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை உயர்த்தி விடலாம் என மாநில அரசு யோசித்துள்ளது. அந்த யோசனையின் விளைவே கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தும் திட்டம்.
புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் பணியில் ஏராளமான நிதித் தேவை இருக்கும் என்பது வெளிப்படையான உண்மை. எந்த நகரத்தில் தொடங்குவது எனத் திட்டமிடுவதில் தொடங்கி, நிலத்தேவை, உள்கட்டுமான உருவாக்கம், பணியிடங்களை உருவாக்கி உரிய நபர்களைத் தேர்வு செய்தல், ஆசிரியர், அலுவலர் எண்ணிக்கை உயர்வு, இவை அனைத்துக்குமான பணத்தேவை எனப் பலகோடிகள் செலவாகும். அப்படிச் செலவு செய்த போதிலும் உடனடியாகப் பல்கலைக்கழகம் முழுமையாகச் செயல்பட முடியாது.
இந்தக் காரணங்களால் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்காமல், அதற்குப் பதிலாக ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படும் பெரிய கல்லூரிகளை - சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி போன்றவற்றை- பல்கலைக் கழகங்களாக மாற்றிவிட முடிவு செய்தது தமிழக அரசு.அந்த முடிவு உடனடியாக செயல்படுத்தப் படாமல் தள்ளிப் போடப் பட்டுள்ளது. காரணம் ஆங்காங்கே தோன்றிய எதிர்ப்புணர்வு தான்.
இம்மாற்றத்தை எதிர்ப்பவர்கள் பலகாரணங்களை முன் வைக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு அரசு தரும் சலுகைகள் இப்போது போல் கிடைக்காது என்பது சொல்லப்படும் இன்னொரு காரணம். பல்கலைக் கழகமாக மாறினால் மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் கூடும் என்பதும் அதோடு சேர்த்துச் சொல்லும் கூடுதல் காரணம். அரசு உதவி பெறும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறினால் தனியார் நிறுவனங்களாக மாறி விடும் என்ற வாதமும் சிலரால் முன் வைக்கப்பட்டதன் விளைவாகக் கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்தும் திட்டம் தள்ளிப் போடப்பட்டாகி விட்டது.
எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்களில் கட்டணம் கூடும் என்பது சரியான காரணமே. அரசுக் கல்லூரியின் பாடமாகவும், அரசு உதவி பெறும் பாடமாகவும் இருக்கும் ஒன்றிற்கு ஒரு மாணவன் செலுத்தும் படிப்புக் கட்டணம் பல்கலைக்கழகமாக மாறிய பின் கூடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் அவன் செலுத்தும் கட்டணத்திற்கேற்ற கல்வியைக் கேட்டுப் பெறும் வாய்ப்பும் பல்கலைக்கழகத்தில் உள்ளது என்பதையும் மறந்து விடக் கூடாது.
இது தவிர மற்ற காரணங்கள் ஏற்புடைய காரணங்களாக இல்லை. ஆசிரியர், அலுவலர் பணிப் பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாறும் போது இல்லாமல் போய்விடும் என்பது எப்படி என்று தெரிய வில்லை. கல்லூரி ஆசிரியரின் பணிக்காலத்தை விட இரண்டு ஆண்டுகள் கூடுதலாகப் பணியாற்றும் வாய்ப்பு பல்கலைக் கழகத்தில் உண்டு. அதல்லாமல் ஒவ்வொரு ஆசிரியரும் கல்வித் திட்டங்கள், ஆய்வுத் திட்டங்கள், குழுக்களில் பங்கு பெறுதல் எனப் பல பொறுப்புகளை ஏற்க முடியும். இவற்றை யெல்லாம் செய்வதற்காக ஆசிரியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும். இதற்குத் தயாராக இருக்கும் எந்த ஆசிரியரும் தங்கள் கல்லூரி பல்கலைக்கழகமாக மாறுவதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு கல்லூரி பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப் பட்டால் மைய அரசின் நேரடி உதவியைப் பெற முடியும்; அதன் மூலம் அந்த நிறுவனம் வளர்ச்சி அடைய முடியும் என்பது தமிழக அரசின் வாதமாக இருக்கிறது. அந்த வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லைஒவ்வொரு ஆண்டும் மாணாக்கர்கள் கட்டும் தொகையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி விட முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் கல்வி நிறுவனம் என்பது முழுமையாகப் பணம் செலுத்திப் படிக்கிற ஒன்றாக இல்லை என்பது இன்றளவும் உண்மை.
அரசுக்கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக்கல்லூரி என எவ்வகைக் கல்லூரியாக இருந்தாலும் அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களின் மானியங்கள், உதவிகள் போன்றவற்றைப் பெற்றுத்தான் நடக்கின்றன. ஆனால் பல்கலைக்கழகம் என்பது ஒரு கல்லூரியைப் போல அந்த நிறுவனத்தை நடத்தும் தனியார் அல்லது மாநில அரசின் நிதியை மூலதனமாகக் கொண்டு மட்டும் நடப்பதில்லை. சிறந்த ஆசிரியர்களின் ஆய்வுத் திட்டங்களின் ஒரு பல்கலைக்கழகம் மூலதனத்தைத் திரட்ட முடியும். திட்டமிட்டுப் பணியாற்றும் துறைகளின் மூலம் அதில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்.
இந்த வாய்ப்புகள் எல்லாம் இப்போதுள்ள அமைப்பில் இயங்கும் ஒரு கல்லூரியில் மிகக்குறைவே . எல்லாவகையான மாற்றங்களிலும் சில சந்தேகங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அந்தச் சந்தேகங்களுக்காக மாற்றத்தையே தள்ளிப் போடுவது புத்திசாலித்தனமாக இருக்காது. இந்திய சமூகம் அறிவுசார் சமூகமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதும், இருக்கும் நிறுவனங்களை – கல்லூரிகளைப் பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்துவதும் ஏற்கப் படவேண்டிய ஒன்றே.