1.மொழித்துறைகள் காப்பாற்றப்படும்.
அரசுக் கல்லூரிகளில் முறைப்படியான நடைமுறைகளப் பின்பற்றி ஆசிரியர் களை நியமனம் செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியம், தனியார் கல்லூரிகளில் அந்த முறைகளைப் பின்பற்றும்படி வலியுறுத்துவதில்லை என்ற குறைபாடு அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை மாற்றம் செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை என்ற போதிலும் வேறொன்றைப் பற்றிச் சிந்தித்துப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப் படுவரின் பட்டமேற்படிப்புக் கல்வியை மட்டும் இனிப் பார்த்தால் போதாது; அவரின் பட்டப் படிப்பையும் பார்க்க வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறியுள்ளது.பட்டப் படிப்பில் எந்தப் பாடத்தைப் படித்தாரோ அதே பாடத்தையே பட்டமேற்படிப்பு நிலையிலும் தொடர்ந்து கற்றுத் தேறி இருக்க வேண்டும் எனப் புதிய அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பு வரவேற்கத் தக்கத் தக்க ஒன்றாகும்.
மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலைப்பட்ட ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் போது பின்பற்றப் பட்டு வந்த இந்த நடைமுறை ஏறத்தாழப் பத்து ஆண்டு களுக்குப் பின் கல்லூரி ஆசிரியர்களுக்கும் உரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதுநாள் வரை அந்த அறிவிப்பைத் தடுத்து வந்த சக்திகளின் தடைகளை மீறி உரிய அறிவிப்பைச் செய்துள்ள உயர்கல்வித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பொன்முடி பாராட்டப் பட வேண்டியவர் என்றே சொல்ல வேண்டும்.
இந்த அறிவிப்பால் எல்லாத் துறை மாணவர்களும் பயன் அடைவார்கள் என்றாலும் அதிகம் பயன் அடையப்போவது மொழித் துறை தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஏனென்றால் இத்தகைய நடைமுறை இல்லாததால் சீர்கேடு அடைந்த துறைகள் மொழித்துறைகள் தான்.இன்று கல்லூரிகளில் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் கற்பிக்கும் ஆசிரியர்களில் பாதிப் பேர்,பட்டப் படிப்பில் வேறு ஒரு பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்தவர்கள் , இலக்கிய ஆர்வம் காரணமாகவும், மொழி மீது கொண்ட பற்றின் காரணமாகவும் முதுநிலைப் பட்டத்தில் தமிழை விரும்பி எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்கள் பட்ட வகுப்பில் எடுத்த பாடத்தில் தொடர்ச்சியாகப் படித்திட இடம் கிடைக்காத போது இலக்கியத்தின் பக்கம் வந்தவர்களே அதிகம். தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கல்விக்கு வந்தவர்கள் தான் இப்படிப் பட்டவர்கள் என்று கருத வேண்டியதில்லை; ஆங்கிலத்துறைக்கு வந்தவர்களும் இப்படி வந்தவர்கள் தான்.
இப்படி வந்தவர்களில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்களாவது முழு நேரப் படிப்பில் முதுகலைத் துறைகளில் சேர்ந்து, தேர்ந்த மொழி மற்றும் இலக்கிய ஆசிரியர்களிடம் பாடங்கற்று தங்களை வளப்படுத்திக் கொண்ட வர்களாக இருந்தார்கள். ஆனால் தமிழகப் பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழிக் கல்வி என்னும் வியாபாரம் தொடங்கப் பட்ட நிலையில் அதில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அஞ்சல் வழியில் அதிகம் பேர் சேர்ந்து படிக்கும் முதுகலைத் துறைகளாக தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகளே முதன்மை இடத்தைப் பிடித்தன. அஞ்சல் வழிக் கல்வி மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை முதுகலைப் படிப்பிற்கு முதன்மைப் பாடமாகத் தேர்வு செய்து படித்து விட்டு வரும் ஒருவர் அம்மொழிகளின் அடிப்படைப்பாடங்களை நடத்த முடியாமல் திணறுவதை ஒவ்வொரு கல்லூரியிலும் காண முடியும்.
குறிப்பாகத் தமிழ் முதன்மைப் பாடத்தில் அடிப்படைப் பாடங்களான நன்னூல், யாப்பருங்கலம் போன்றன பட்டப் படிப்பில் தான் முறையாகக் கற்றுத் தரப்படும் வாய்ப்பு உள்ளது.பட்டப்படிப்பில் அதைக் கற்காத ஒருவர் முது நிலைப் படிப்பில் அதன் தொடர்ச்சியான தொல்காப்பிய இலக்கணத்தையோ பண்டைய இலக்கியங்களான செவ்வியல் இலக்கியங்களையோ கற்றுக் கொண்டவராக இருப்பதில்லை. அதனால் அத்தகைய பாடங்களை நடத்தும் வாய்ப்பை விரும்பி ஏற்காமல் ஒதுங்கிக் கொள்ளவே முயலுகின்றார். வேறு வழியில்லாம் அப்பாடங்களை நடத்த நேர்ந்தாலும் பாடத்திற்குத் தொடர்பற்ற செய்திகளையும், சிரிப்பு மூட்டும் வேடிக்கைகளையும் நாட்டு நடப்புகளையும் பேசி வகுப்பைச் சுவாரசியப் படுத்தி விட்டு வந்து விடுகின்றனர்.
தான் கற்பிக்கும் பாடத்தின் மீது புலமையும் மரியாதையும் இல்லாத ஓர் ஆசிரியர் மாணவனைக் கட்டுக்குள் வைக்க வேறு வழிகளை நாடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.மொழிக்கல்வியும் மொழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களும் கல்லூரிகளில் மரியாதைக்குரிய ஒன்றாகவும், மதிக்கப்படும் நபர்களாகவும் இல்லாமல் போனதின் பின்னணியில் இத்தகைய நெருடலான உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.ஆனால் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இருந்த தமிழ் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர்களின் முன் மாதிரிகளாகவும் வாழ்க்கை வழிகாட்டிகளாகவும் இருந்தார்கள் என்பதும் மறந்து போகக் கூடிய வரலாறு அல்ல.இந்த நிலை திரும்பவும் வருவதற்கு இந்த அறிவிப்பு உதவும் என்று சொல்ல முடியாவிட்டாலும், சீரழிவின் வேகம் தடை செய்யப்படும் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இந்த அறிவிப்பு ஒருவர் இலக்கியக் கல்வியைத் தனது தாகம் தணிக்கும் ஒன்றாகக் கற்கும் வாய்ப்பைத் தடுத்துவிடும் ஆபத்து இதில் இருக்கிறது எனச் சிலர் வாதிடக்கூடும். அந்த ஆபத்து நிச்சயமாக இல்லை. படிப்பில் சேர்வதற்கான அடிப்படைத்தகுதியில் எந்த மாற்றமும் இல்லை. தடைகளும் கிடையாது. கணிதத்தையோ விலங்கியலையோ இளநிலைப்பட்டமாகப் படித்த ஒருவர் தான் முதுநிலையிலும் அப்பாடங்களைப் படிக்கும் தகுதி உடையவர் என்ற வரையறைகள் அடிப்படைத் தகுதிகளாக இன்றளவிலும் பல்கலைக் கழகங்களில் இருந்து வருகின்றன. அறிவியல் துறைகளில் உள்ள இத்தகைய தடைகள் ,சமுதாய அறிவியல் துறைகளான வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், நிலவியல், அரசியல் அறிவியல்,மானிடவியல், தத்துவம், போன்ற துறைகளில் இல்லை. பட்டப் படிப்பில் ஏதாவதொரு பட்டம் பெற்றிருந்தால் போதும். அவர்களை பட்டமேற்படிப்புக் கல்வியில் சேர்த்துக் கொள்ளத் தயாராகவே உள்ளன கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும்.
மொழித்துறைகளான இந்திய மொழிகள் மற்றும் அயல் தேசத்து மொழிகள் துறைகளிலோ சிறிய அளவிலான மாற்றங்களோடு அதே நடைமுறை தான் பின் பற்றப்படுகின்றன. பட்டப் படிப்பில் பகுதி ஒன்று பாடமாக ஒரு மொழியைக் கற்றிருந்தால் போதும். அவர்களுக்கு முதுகலை படிக்கும் வாய்ப்பு வழங்கப் படத் தடையில்லை. இந்த அறிவிப்பால், கல்லூரி ஆசிரியராகவோ, பள்ளியின் முதுநிலை ஆசிரியராகவோ ஆகும் வாய்ப்பு மட்டும் தான் தடுக்கப்பட்டுள்ளது. வேறு பணிகளுக்காக, அவற்றில் பணி உயர்வு பெறுவதற்காக ஒருவர் முதன்மைப் பாடத்தை மாற்றிப் படிக்கும் வாய்ப்பை இந்த அறிவிப்பு தடை செய்யவில்லை.கல்லூரிகளில் ஆசிரியர் களாகத் தேர்வு செய்பவர்களுக்கான அடிப்படைத் தகுதிகளில் முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளதற்காக மட்டுமின்றி, தமிழகப் பல்கலைக்கழகங்களின் அஞ்சல் வழி மற்றும் தொலைநெறிக் கல்வி இயக்ககங்கள் இனிமேல் எம்.பில். மற்றும் பி.எச்டி. பட்டங்களை வழங்கக் கூடாது என்று அறிவித்த தற்காகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பாராட்டப் பட வேண்டியவர்.
வியாபாரமாக்கப் பட்ட கல்விப் பட்டத்தின் மூலம் பிற துறைகளுக்கு ஏற்படும் பாதிப்பை விடக் கல்வித் துறைக்கு ஏற்படும் பாதிப்பு எதிர்காலச் சந்ததியையே அழித்து விடும் என்பதை உணர்ந்து அவர் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கள் வரவேற்கத்தக்கவை.
2.பண்டங்களாக்கப்படும் பண்டிகைகள்
2.பண்டங்களாக்கப்படும் பண்டிகைகள்
தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் தேதியில் கொண்டாடுவதைக் கைவிட்டு விட வேண்டும். அதற்குப் பதிலாக தை முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடலாம் என்று பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம் அறிவித்தது. அதனை அறிவிப்புச் செய்த போது சட்டசபையில் எந்தவித எதிர்ப்பையும் மக்கள் பிரதிநிதிகள் ஒருவரும் எழுப்பவில்லை.சட்டசபைக்கு வெளியே சில தனிநபர்களும், சட்டசபையில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் வல்லமை அற்ற சில அரசியல் கட்சிகளும் அதற்கு மாற்றுக் கருத்தைக் கூறின. அவர்களும் கூட முழுமையாக எதிர்க்கவில்லை.
மரபான சிந்தனையோட்டத்தைத் திசை திருப்பும் அறிவிப்பு தேவையில்லை என்று தான் கருத்துத் தெரிவித்தார்கள். மரபுகளும் நம்பிக்கைகளும் மதிக்கப் பட வேண்டும் ; பொதுப்புத்தியைக் குலைக்கும் போக்கை அரசாங்கம் மேற் கொள்ளக் கூடாது என முணுமுணுத்தனர்.தங்கள் முணுமுணுப்புக்கு மக்கள் பிரதிகள் அடங்கிய சட்டசபையில் அங்கீகாரம் பெறும் வாய்ப்பு இல்லை என்பதால் நீதிமன்றம் மூலம் அந்த அங்கீகாரத்தைப் பெறலாம் என்று முயன்றார்கள். இந்த விசயத்தில் நீதிமன்றமும் கையை விரித்து ஒதுங்கிக் கொண்டது.அதனால் முணுமுணுப்பைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு உறுமீன் வருமளவு காத்திருக்கும் கொக்கு போல மரபின் ஆதரவாளர்கள் காத்திருந்தார்கள் என்பதை இந்தச் சித்திரை முதல் தேதி காட்டியிருக்கிறது.
சித்திரை முதல் தேதிக்குப் பதிலாக தை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என நினைப்பதை மரபை மாற்றும் முயற்சி என்று வாதிடுபவர்கள் அடையாள அரசியலின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள வில்லை என்றே தோன்றுகிறது. அடையாள அரசியல் என்பது காலனிய ஆதிக்கத்தில் இருந்த நாடுகளின் மக்கள் கூட்டத்தின் வெளிப்பாடு. ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடும் மக்கள் கூட்டத்தைக் கண்டு இந்திய பண்பாட்டை மீட்க வேண்டும் என வாதிடுபவர்கள் எரிச்சல் அடைவதில் சில நியாயங்கள் உண்டு. அவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால் ஆங்கிலப் புத்தாண்டைக் கைவிடுங்கள்; இதுதான் நமது புத்தாண்டு என ஒரு நாளை முன் வைக்கத்தான் செய்வார்கள்.
இப்படிச் சொல்வதன் இன்னொரு வடிவம் தான் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் தை முதல் தேதி என்பது.இந்தியத் துணைக் கண்டத்திற்குள் தமிழர்கள் தனி அடையாளத்தோடு- தனிச் சிந்தனை மரபோடு- தனிக் காலக் கணக்கோடு- ஒட்டு மொத்தமாகச் சில தனித்த பண்பாட்டு அடையாளத்தோடு வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அந்தப் பண்பாட்டு அடையாளம் தொடர்ந்து வந்த ஆட்சி அதிகார மாற்றங்களாலும் அவர்களின் கருத்தியல் திணிப்புக்களாலும் கைவிடப்பட்டுத் தடை பட்டுள்ளது. எனவே நாம் அதை மீட்டுக் கொள்ள வேண்டும் எனச் சொல்வதும் இன்னொரு விதத்தில் மரபை ஆராதிக்கும் செயல் தான்.
ஐரோப்பியர்கள் தங்கள் உச்சரிப்பு வசதிக்கேற்ப மெற்ராஸ், கல்கத்தா, பம்பாய், பெங்களூர்,பாண்டிச்சேரி என நகரங்களின் பெயர்களை மாற்றி அழைத்ததை இப்போது முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புதுச்சேரி என மாற்றிக் கொண்டது ஒருவித காலனிய விடுபடலின் அடையாளங்கள். அந்த அடையாளத் தேடலுக்குப் பின்னே இருப்பது மொழி சார்ந்த அடையாளத் தேடலின் அரசியல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காலனியத்திற்குப் பிந்திய அடையாளத்தேடலில் ஒற்றைப் போக்குதான் இருக்க வேண்டும் என்று சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும். மரபை உருவாக்குவதல் சமய நம்பிக்கைகளுக்கு இடம் இருப்பது போல, இனம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும், மொழி சார்ந்த நம்பிக்கைகளுக்கும் கூட இடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மதம் சார்ந்த அடையாள மீட்புக்கு முயலும் மரபின் இன்னொரு வடிவம் தான் மொழி சார்ந்த அடையாளத்தேடலும் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளலே ஜனநாயக அரசியலின் அடிப்படையாக இருக்க முடியும். எல்லாவிதத் தேடலுக்கும், சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்கும் வாய்ப்பை அளிப்பது இந்தியாவின் பன்முகப் பரிமாணத்தைத் தேடுபவர்களின் வெளிப்பாடு. அதில்லாமல் மரபின் பெயராலும், அதிகாரத்தின் பெயராலும் மாற்றங்களை மறுப்பது பாசிசத்தின் வெளிப்பாடு.
சித்திரை முதல் தேதியை ஆதரிப்பவர்கள் பாசிஸ்டுகளா? தை முதல் தேதியின் ஆதரவாளர்கள் பாசிஸ்டுகளா? என்ற விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். இவ்விரண்டையும் ஆபத்தான இன்னொன்றை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.சித்திரை ஒன்று, தைப் பொங்கல், தீபாவளி, என எல்லாப் பண்டிகை நாட்களையும் இந்தியர்கள் முன்பு எப்படிக் கொண்டாடி னார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.இப்போது இந்தியாவின் பெருநகரங்களிலும் நகரங்களிலும் சிறுநகரங்களிலும் இருப்பவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
வழக்கமாகச் செய்த புனித நீராடலும் ஆலயத் தரிசனமும், உறவினரைச் சந்தித்தலும் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டன. தங்கள் வீட்டுத் தின் பண்டங்களைப் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுத்து அயல் வீட்டுப் பண்டத்தைத் தாங்கள் ருசித்த பண்டிகை நிகழ்வுகள் மறைந்து விட்டன. நடுத்தர வர்க்க வாழ்க்கையில் தின்பண்டங்கள் செய்வதும் பரிமாறிக் கொள்வதும் நாகரிகமா? அநாகரிகமா? எனப் பட்டிமன்றம் நடத்தினால் அதற்கும் நடுவர்களாக வரப் பாப்பையாவும், ஞானசம்பந்தனும் தயாராகவே இருப்பார்கள். நமது வீட்டில் வாங்கிய இனிப்புகளும் பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய இனிப்புக்களும் ஒரே கடையில் செய்யப்பட்டன என்கிற போது பண்டங்களை மாற்றிக் கொள்வதில் என்ன இருக்கிறது என்பதால் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டு ஆண்டுகள் பலவாகி விட்டன.
அண்மையில் வந்து வெற்றி பெற்ற திரைப்படத்தின் நாயகி ஆங்கிலத்தில் சொல்லும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பன்னாட்டு கைபேசி வியாபார நிறுவனமோ, சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனமோ வழங்கிக் கொண்டிருப்பதைக் காலை எட்டு மணி முதல் கேட்பதற்காக மொத்தக் குடும்பமும் தயாராகத் தொலைக்காட்சி முன்னால் அமைதி காக்கிறோம். ஏழு மணிக்கு வழங்கிய சமயச் சான்றோரின் உரையை வழங்கியவர்கள் தங்க ஆபரணங்களை மீன்கடை வியாபாரம் போல் பரப்பி விற்கும் நிறுவனமாக இருக்கிறது.
நமது பண்டிகைகள் நமது வாழ்வின் சில மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன;சில துன்பங்கள் தொலைந்ததின் நினைவுகளாக இருந்தன. சிலவற்றை வரவேற்கும் ஆரவாரமாக இருந்தன. ஆனால் இன்று ஒவ்வொரு அரைமணி நேரத்தையும் வணிக நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொண்டு பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும் பார்வையாளர்களோ அவற்றின் விளம்பரத்தைப் பார்த்து பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஏக்கத்தின் நாட்களாக பண்டிகை நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடுத்தர வர்க்கம் பண்டிகை நாட்களை வியாபாரப் பண்டங்களின் நினைவு நாட்களாக ஆக்கி ஆண்டுகள் சில பத்துகள் ஆகிவிட்டன.இப்போது கிராமத்துக் குடிகளிடம் இலவசத் தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. காலத்தைக் கடைச்சரக்காக்கும் வித்தையைச் செய்யும் வியாபாரிகளிடமும் அவர்களை அண்டிப் பிழைக்கும் ஊடகங்களிடமும் மனிதர்கள் எச்சரிக்கையோடு இருப்பார்களாக; இல்லையென்றால் எல்லா அடையாளங்களும் இல்லாமல் போய்விடும்.
3. பழக்கவழக்கம்¢ என்று சொல்லி
‘இருபது வயதில் எழுதிப் பழகு ; நாற்பது வயதில் நடந்து பழகு’ ஒளவையாரின் ஆத்திச்சூடி அல்ல இது. கொன்றை வேந்தனிலும் கூட இப்படிச் சொல்லப்படவில்லை. நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறையைப் புலவர் ஒருவர் சொல்லித்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமா என்ன..? நம் முன்னோர் சொன்ன வழிகளையும் விதிகளையும் மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்பதில்லை.
அதுபோல் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டார்கள் என்பதற்காகப் பின்பற்றியே ஆகவேண்டும் என்பதும் இல்லை. ‘’ நான் என் வாழ்க்கையில் பின்பற்றுவதற்காக இதை முன் மொழிந்து கொண்டிருக்கிறேன்; எனது உடலுக்கும் மனதிற்கும் உவப்பானதாக இது இருக்கிறது; உங்களுக்க்கும் இது பொருந்துமா என்று யோசித்துப் பாருங்கள்; பொருந்தினால் பின்பற்றுங்கள்; பொருந்தவில்லையா தூக்கித் தூரப் போட்டுவிடுங்கள்’ இப்படி யோசிப்பதும் நடந்து கொள்வதும் ஜனநாயக நடைமுறைகள். இப்படித்தான் நான் நடந்து கொண்டிருக்கிறேன்.
கடந்த ஆறுமாதமாக நடக்கும் பாதை முழுவதும் வெட்ட வெளியாக இல்லை.புதிதுபுதிதாக வீடுகள் கட்டி மனிதர்கள் குடியேறிக் கொண்டிருக்கும் துணைநகரப்பகுதி அது. எல்லாமே நடுத்தரவர்க்கத்தின் கனவு இல்லங்கள். வங்கிக் கடனில் உருவாகும் கனவு இல்லங்களில் அதிக பட்ச வசதி என்னவாக இருந்துவிடப் போகிறது. இரண்டு குளியலறைகளுடன் கூடிய படுக்கையறைகளும் வாங்கி விடுவோம் என்ற நம்பிக்கையில் கார்நிறுத்தும் போர்டிகோவும்; மண்தொட்டிகளில் ரோஜாச் செடிகளும் வண்ண வண்ண இலைகளுடன் கூடிய குரோட்டன்களும் கூடச் சிரிக்கலாம்.
மாதத் தவணைக்குப் போக மீதியில் குடும்பம் நடத்தத் தயாராகும் நடுத்தர வர்க்கத்திற்கு நடைப்பழக்கம் மருத்துவச் செலவைக் குறைக்கும் ஒருவழி என்று புரியத் தொடங்கிவிட்டது.அவர் என்னைவிட இருபது வயது மூத்தவர் என்றாலும் என்னிலும் சுறுசுறுப்பானவர் என்றுதான் சொல்ல வேண்டும். அரசுத் துறை ஒன்றில் திருப்தி தரும் பதவிவரை ஏறி அதிகாரம் செலுத்தி விட்டு, பதவியில் இருக்கும் போது சொந்தவீடு கட்டிக்கொள்ளாமல் ஓய்வு பெற்றபின் கட்டியவீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்.
காலை ஐந்தரை மணிக்கெல்லாம் நடக்கத்தொடங்கி விடும் அவரைப் பெரும்பாலும் சந்திப்பது அந்த மண்சாலையில் தான்.நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ளும்பொழுது புன்முறுவல் செய்வார்; செய்வேன். இதுவரை என்னோடு பேசவேண்டும் என்று நினைக்காத அவரை என்னோடு பேச வேண்டும் எனத் தூண்டியது நான் பணியாற்றும் இடம் தான் என்பது பின்னர் தெரிந்தது.எது என யோசித்துப் பார்த்தேன். என்னோடு பேசுவதற்காகவே காத்திருந்தவர் போல நின்றிருந்தார். எனக்கு முன்பாக நடக்கத் தொடங்கி என்னுடன் சேர்ந்து கொண்டார்.
‘சார்.. நீங்க பல்கலைக்கழகத்தில ‘‘ப்ரொபசரா இருக்கேன்..’
‘அப்ப ரிசல்ட்டெல்லாம் போடுறது நீங்க தானே’‘ அதுவேற பிரிவு.. நான் வந்து.. ஆசிரியர்.
‘ அப்போ காலேஜ்ல இருக்கிறவங்க’‘அவங்களும் ஆசிரியர்கள் தான்..’
‘என்ன பாடம் நடத்துவீங்க..’‘தமிழ் இலக்கியம்.. மொழி ‘
‘இல்ல பி.ஏ. , பி.எஸ்சி.யின்னு சொல்றாங்களே.. அந்த மாதிரியா..’‘ யுனிவர்சிற்றியில பி.ஏ., பி.எஸ்சி யெல்லாம் கிடையாதுங்க.. எம்.ஏ. எம்.எஸ்சி தான் உண்டு அப்புறம் எம்பில், பிஎச்.டி. இந்தமாதிரி ஆய்வு பண்றவங்களும் படிப்பாங்க’
‘ அப்போ ..பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர்ன்னு சொல்லுங்க.. ’‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க.. ,பேராசிரியர் அவ்வளவு தான் ..’
கொஞ்சம் வேகமாக நடக்கத்தொடங்கியபோது அவர் நின்றுவிட்டார். நான் வழக்கமாக நடக்கும் தூரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய போது ஆச்சரியம். அவர் அந்த இடத்திலிருந்து விலகி ஓரத்தில் இருந்த சிமெண்ட் மேடையில் உட்கார்ந்திருந்தார். நான் வருவது தெரிந்து எழுவது தெரிந்தது. அவருக்கு என்னிடம் பேச இன்னும் விசயம் உள்ளது என்பது தெரிந்தது. நானும் அவரருகில் வந்ததும் தயங்கி நின்றேன்.
‘சார்.. நீங்க பல்கலைக்கழகத்தில ‘‘ப்ரொபசரா இருக்கேன்..’
‘அப்ப ரிசல்ட்டெல்லாம் போடுறது நீங்க தானே’‘ அதுவேற பிரிவு.. நான் வந்து.. ஆசிரியர்.
‘ அப்போ காலேஜ்ல இருக்கிறவங்க’‘அவங்களும் ஆசிரியர்கள் தான்..’
‘என்ன பாடம் நடத்துவீங்க..’‘தமிழ் இலக்கியம்.. மொழி ‘
‘இல்ல பி.ஏ. , பி.எஸ்சி.யின்னு சொல்றாங்களே.. அந்த மாதிரியா..’‘ யுனிவர்சிற்றியில பி.ஏ., பி.எஸ்சி யெல்லாம் கிடையாதுங்க.. எம்.ஏ. எம்.எஸ்சி தான் உண்டு அப்புறம் எம்பில், பிஎச்.டி. இந்தமாதிரி ஆய்வு பண்றவங்களும் படிப்பாங்க’
‘ அப்போ ..பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர்ன்னு சொல்லுங்க.. ’‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க.. ,பேராசிரியர் அவ்வளவு தான் ..’
கொஞ்சம் வேகமாக நடக்கத்தொடங்கியபோது அவர் நின்றுவிட்டார். நான் வழக்கமாக நடக்கும் தூரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய போது ஆச்சரியம். அவர் அந்த இடத்திலிருந்து விலகி ஓரத்தில் இருந்த சிமெண்ட் மேடையில் உட்கார்ந்திருந்தார். நான் வருவது தெரிந்து எழுவது தெரிந்தது. அவருக்கு என்னிடம் பேச இன்னும் விசயம் உள்ளது என்பது தெரிந்தது. நானும் அவரருகில் வந்ததும் தயங்கி நின்றேன்.
பேச்சு திரும்பவும் தொடர்ந்தது;மெதுநடையுடன்.‘ஐயாவுக்குச் சொந்த ஊர் ?’ -சொன்னேன்.
‘பசங்க என்ன செய்றாங்க.? - சொன்னோன்‘
சொந்த வீடு கட்டிக்கிறதுக்கு முன்னே எங்கே இருந்தீங்க..? -சொன்னேன்.
‘நீங்களா நின்னு கட்டுனீங்களா..? காண்டராக்ட்காரங்க கிட்ட விட்டீங்களா..?-சொன்னேன். ‘ஐயா ..நம்மெ வர்ணம்..?-‘சொல்லவில்லை; வர்ணமின்னா..? -கேட்டேன்.
‘வர்ணமுன்னா தெரியாதுங்களா.. என்ன சாதின்னு கேட்டேன்’‘
‘வர்ணமுன்னா தெரியாதுங்களா.. என்ன சாதின்னு கேட்டேன்’‘
அதெத் தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க..’
‘சும்மா தெரிஞ்சுக்கிடலாம்னுதான்.’‘அதான் கேட்கிறென்;
‘சும்மா தெரிஞ்சுக்கிடலாம்னுதான்.’‘அதான் கேட்கிறென்;
தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க’
‘தெரிஞ்சுக்கிட்டா .. நாமெ.. நல்லா பழகலாம் இல்லையா..’
‘தெரிஞ்சுக்கிட்டா .. நாமெ.. நல்லா பழகலாம் இல்லையா..’
‘தெரிஞ்சுக்கிட்டெ பிறகுதான் நல்லா பழகுவீங்கன்னா.. உங்க பழக்கம் எனக்கு வேணாமே..?’
‘ எதையும் தெரிஞ்சுக் கிட்டுப் பழகுறது வழக்கம் தானுங்களே..’
‘ எதையும் தெரிஞ்சுக் கிட்டுப் பழகுறது வழக்கம் தானுங்களே..’
‘தெரிஞ்சப் பிறகு நீங்க பழக மாட்டீங்க என்பது தானே உண்மை.’
‘இல்லை.. அது வந்து.. ‘ இழுத்தார்.
‘இல்லை.. அது வந்து.. ‘ இழுத்தார்.
‘ஐயா.., ஒங்க பழக்கம் ஒங்க கிட்டேயே இருக்கட்டும்; எனது வழக்கம் எங்கிட்டேயே இருக்கட்டும்’
பலமுறை என் எதிரில் நடந்து போகிறார். புன்முறுவல்கூட இல்லை; பழக்கமும் வழக்கமும் எதுவெனச் சொல்ல.பழக்கமும் வழக்கமும் மண்மூடிப் போவதாக.
பலமுறை என் எதிரில் நடந்து போகிறார். புன்முறுவல்கூட இல்லை; பழக்கமும் வழக்கமும் எதுவெனச் சொல்ல.பழக்கமும் வழக்கமும் மண்மூடிப் போவதாக.
4.தண்ணீர் யுத்தம் அல்ல; அதிகாரத்திற்கான யுத்தம்.
வருந்தத் தகாதவர்களைப் பற்றி நீ வருந்துகிறாய்.மற்றொருபுறம், எல்லாமறிந்த அறிவாளி களைப் போல் பேசுகிறாய். அறிவாளிகள், இறந்தவர்களைப் பற்றியோ பிழைத்தி ருப்பவர்களைப் பற்றியோ வருந்த மாட்டார்கள்.
[பகவத் கீதையில் கிருஷ்ணன் அர்ஜூனனிடம் சொன்னது]
பெருங்காற்று சுழன்று அடித்து வீட்டிற்கு வெளியே கிடந்த தேக்கு மர இலை களையும் பிளாஸ்டிக் குப்பைகளையும் திரட்டி எடுத்து வீட்டிற்குள் வீசியது. ஜன்னலின் கதவுகளை அடைக்க நான் சென்றாலும் எனது கண்கள் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து விலகவில்லை. காற்றின் சுழற்சி நின்ற போது மழைக்கான அறிகுறியாகச் சில தடதடப்புக்களும் கேட்டன. தூரத்தில் இடியோசைகள் பெருஞ்சத்தத்துடன் கேட்டன. கொஞ்ச நேரத்தில் கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று சாளரத்தின் வழியே நுழைந்து விட்டுப் போனது. வழக்கமாகப் பெய்யும் கோடை மழையின் அறிகுறி அல்ல இது. வழக்கமல்லாத வழக்கமாக இப்போதெல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இது மாதிரியான நேரத்தில் எங்கள் வீட்டில் உடனடியாக தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி விடுவோம். நிறுத்தினால் மட்டும் போதாது; தொலைக் காட்சிப் பெட்டிக்கு மின்சாரத்தையும் ஒளியலைகளையும் கொண்டு வரும் கேபிள்களின் இணைப்பையும் துண்டித்துவிட வேண்டும் என்பது எனது மனைவியின் ஆலோசனை. அதுதான் தொலைக்காட்சிப் பெட்டியைக் காக்கும். இல்லையென்றால் தொலைக்காட்சிப் பெட்டியைப் பழுது பார்க்க வேண்டியதிருக்கும் என்பது எங்கள் அனுபவம்.
மனைவியின் எச்சரிக்கையையும் மீறி என்னைத் தொலைக் காட்சியைப் பார்க்கச் செய்தவை அந்த இரட்டைச் சொல் வாசகம் தான். வாட்டர் வார் [தண்ணீர் யுத்தம்] என்ற அந்த ஆங்கில இரட்டைச் சொல் திரும்பத் திரும்ப வந்து போய்க் கொண்டிருந்தது.
உருளும் அந்த இரட்டைச் சொல் வாக்கியத்தையும் அதன் கீழே வந்து போகும் வாக்கியங்களையும் வாசித்துக் கொண்டிருந்தேன்¢.கடந்த முப்பதாண்டுக் காலமாக தமிழகத்திற்கும் கர்நாடகத் திற்குமிடையே நடக்கும் காவிரிப் பிரச்சினையை யுத்தம் எனக் குறிப்பது சரியல்ல என மனம் சொன்னது.
நான் மட்டும் அல்ல. யார் யாரெல்லாம் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதை ஆள்வதற்கு மைய அரசாங்கமும், அதன் கட்டுப்பாட்டுக்குள் மாநிலங்களில் செயல்படும் அரசாங்கங்களும் இருக்கின்றன. இந்த அமைப்பு மதம், மொழி, இனம், நிலவியல் என வேறுபட்ட பின்னணிகளைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை ஒன்றாக வைத்திருக்கப் பொருத்தமான அமைப்பு என நம்பும் பலரும் அப்படித்தான் நினைப் பார்கள். அத்துடன் யுத்தம் என்பது தேசங்களிடையே நடக்கும் ஒரு வினை. அதை மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் குறிக்கப் பயன்படுத்துவது பொருத்தமல்ல என்றும் விளக்கக் கூடும்.
பொருத்தமல்லாத வார்த்தைகளைப் போட்டு வாக்கியங்களை எழுதுவது தவறு எனச் சொல்வது இலக்கண ஆசிரியர்களின் வேலை .ஆனால் நமது நமது அரசியல்வாதிகள் பொருத்தமற்ற வேலைகளையே செய்கிறார்கள். அவர்களின் பிம்பங்களை ஊதிப் பெருக்கும் ஊடகங்கள் பொருத்தமற்ற வார்த்தைகளாலேயே அவற்றை வர்ணிக்கின்றன.
1924 ஆம் ஆண்டு போடப் பட்ட காவிரி ஒப்பந்தத்தை ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் 1974 இல் திரும்பவும் முறைப்படி தமிழக அரசு புதுப்பித்துக் கொள் ளாததன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் போராட்டங் களை-மனுக் கொடுத்தல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல்,பந்த்,உண்ணாவிரதம்- போன்றன விலகிப் போய் விட்டன. காவிரி டெல்டா விவசாயம் காரணமாகத் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் வழக்கமாக நடப்பது ஜூன், ஜூலை மாதத்தில் தான்.
இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தொடங்கும் வழக்கமான கோரிக்கை களும் அதை நிறைவேற்றப் பின்பற்றும் போராட்ட முறைகளும் கைவிடப் பட்டுவிட்டன. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்று கர்நாடகத்தில் நடக்கும் கலவரங்களுக்குக் காரணமும் தண்ணீர் தான். விவசாயத்திற்கான நீரைத் தருவதும் பெறுவதும் என்று தொடர்ந்து நடக்கும் நீர்த்தாவா அல்ல. இது குடிக்கத் தண்ணீரின்றித் தவிக்கும் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் பிரச்சினை.
நீண்ட காலமாகக் குடிநீருக்காக ஏங்கித் தவிக்கும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, போன்ற தமிழ் நாட்டின் வடமாவட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்காகத் தயாரிக்கப் பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்ட மான ஒகேனக்கல் திட்டத்தைக் குறி வைத்துக் களம் இறங்கியுள்ளவர்களும் பழையவர்கள் அல்ல; புதியவர்கள்.
இதுவரை கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டின் விவசாயத்திற்கெதிராகவும் தொடர்ந்து சிக்கல்களை எழுப்பி வந்த வட்டாள் நாகராஜ் போன்றவர்களைக் கன்னட மொழிவெறியர்கள் எனவும்,வட்டார வாதம் பேசும் குறுகிய மனம் படைத்தவர்கள் எனவும் குறிப்பிட்ட ஊடகங்கள் இப்போது களத்தில் குதித்துள்ளவர்களை அப்படிக் குறிப்பிட முடியாமல் தயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் புதியவர்கள் வழக்கமான போராட்ட முறைகளைக் கைவிட்டு விட்டு நேரடியாகக் களத்தில் குதித்து அழிப்பு வேலைகளைத் தொடங்கியுள்ளனர். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்ப் பிரச்சினையைக் காரணமாக்கித் தண்ணீர் யுத்தத்தைத் தொடங்கியவர் வட்டாள் நாகராஜோ,அவரது கன்னட வேதிக சமிதியோ அல்ல. நதியின் கரையைக் கடக்க மரப்பாலம் ஏறி, பரிசலில் பயணம் செய்து ஒகேனக்கல் வந்து வெறுப்பு விதையைத் தூவி விட்டுப் போனவர் எத்தியூரப்பா.
கர்நாடகத்துப் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எத்தியூரப்பா தொடங்கி வைத்த அந்தச் சிறு பொறி பெருந்தீயாக மாறி கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் பெரிய அழிப்புகளைச் செய்யத் தொடங்கி விட்டது. அழித்தொழிப்பு வேலை என்பது யுத்தத்தின் ஒரு பகுதி என்பதை மன்னர்கள் காலத்து போர் வரலாறுகள் சொல்லியிருக்கின்றன.
அந்தத் தொலைக்காட்சி உருட்டிய தண்ணீர் யுத்தம் என்ற சொற்றொடர் இப்போது சரியெனவே படுகிறது. அகண்ட பாரதம்.கலாசார தேசியம் என்றெல்லாம் பேசும் ஒரு கட்சியின் தலைவர்களில் ஒருவர் குறுகிய வட்டார உணர்வைக் கிளப்புவதும், தன் தேசத்து மக்களில் ஒரு பகுதி யினருக்குத் தாகம் தீர்க்கும் குடிநீரைத் தரக்கூடாது என்று சொல்வதும் ஏன் என்று கேட்டுப் பார்த்தால் கிடைக்கிற பதில் இது தான்.
அதிகாரத்தை அடைய வேண்டும் என்று ஒற்றை நோக்கத்தை முன் நிறுத்தி விட்டால் நேற்றுப் பேசியது கூட நமது அரசியல் வாதிகளுக்கு மறந்து போய் விடுகிறது .கர்நாடகத்திற்கான சட்ட மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அவருக்குப் பற்றிக் கொள்ள ஒரு கொழு கொம்பு தேவை
கலாசாரத்தால் ஒன்றுபடுதல், தூய்மையான ஆட்சி, புனிதமான தேசியம், என்றெல்லாம் பேசிக் கைப்பிடித்து ஏறி வந்த உயரத்தை ஆறு மாதத்திற்கு முன்பு வலியச் சென்று தொலைத்தவர் எத்தியூரப்பா.தேவகௌடா சூழ்ச்சி வலையில் சிக்கி ஒன்பது நாள் முதல்வர் என்ற அவமானத்தைத் தேடியதோடு, அதிகாரத்திற்கு அலையும் கட்சி பாரதீய ஜனதா கட்சி என்ற அவப் பெயரையும் கட்சிக்குத் தேடித் தந்தவர். தான் உண்டாக்கிய களங்கத்தைத் தானே கழுவுவது என நினைத்து மேலும் தனது கட்சிக்கு அழியாத கறைகளையே படியச் செய்து கொண்டிருக்கிறார்.
தேச ஒற்றுமைக்கு எதிரான கட்சி பாரதீய ஜனதா என்பது அவப் பெயர் அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்.கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்களும் தமிழகத்தில் இருக்கும் கன்னடியர்களும் இந்தியர்களே என்ப தையும், இவ்விரு மாநிலங்களும் இந்தியாவின் மாநிலங்களே என்பதையும் மறந்து விட்டு ஒரு தேசியக் கட்சியின் தலைவர் தண்ணீரின் பெயரால் ஒரு யுத்தத்தைத் தொடங்கினால் அவரை எந்தச் சொல்லால் குறிப்பிடுவது.
தமிழர்களை வருத்தப் பட வேண்டாதவர்கள் என நினைத்து விட்ட எத்தியூரப்பாவின் அழித்தொழிப்பு அரசியலையும் அதிகார வெறியையும் தேசம் நீண்ட காலத்திற்கு மறக்காது என்பதை அவர் மறந்து விட்டது தான் ஆச்சரியம்.
5. வளைந்து கொடுக்கும் விநோத விளையாட்டு
சார்லஸ் டார்வின் உயிரினங்களுக்குச் சொன்ன பரிணாமக் கோட்பாடு மனித இனத்திற்கு மட்டும் அல்லாமல் மனிதர்கள் தொடர்புடைய சமூக நிறுவனங் களுக்கும்,பொருந்தக் கூடியது போலும். ஐந்து நாள் நின்று நிதானமாக ஆடிக் கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டு, ஒரே நாளில் ஐந்து இன்னிங்ஸ் ஆடும் விதமாக மாறிவிட்டதை சூழலுக்கு மாறுவதே வாழும் (சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்) என்ற டார்வினின் கோட் பாட்டைக் கொண்டு தான் விளக்க வேண்டும்.
ஒரு நாள் ஒய்வுடன் கூடிய ஐந்து நாள் கிரிக்கெட்டின் இன்னிங்ஸில் தொண்ணூறு ஓவர்கள் விளையாட வேண்டும். ஒவ்வொரு அணியும் இரண்டு இன்னிங்ஸ் விளையாண்ட பின்பும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவாகும் வாய்ப்புக்களே டெஸ்ட் விளையாட்டில் அதிகம் உண்டு. சர்வதேச அளவில் முக்கியமான அணிகளாக இருக்கும் நியுசிலாந்து அல்லது இந்திய அணிகளின் டெஸ்ட் விளையாட்டு வரலாற்றுப் புள்ளி விவரங்களை எடுத்துப் பாருங்கள். வெற்றி அல்லது தோல்வி என்பதை விட டிராவான டெஸ்டுகள் தான் அதிகம் உண்டு.
விளையாட்டுப் போட்டி என்று சொன்னவுடன் உலக அளவில் நினைவுக்கு வருவது உலக நாடுகள் அதிகம் இடம் பெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தான். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் விளையாட்டு ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப் படவில்லை என்பதை நினைத்துப் பாருங்கள். காரணம் வெற்றி அல்லது தோல்வி என்ற வடிவத்திற்கு மாறான வடிவத்தில் இருந்ததே காரணம் என்பது புரியும்.
ஐம்பது ஓவர் கொண்ட இன்னிங்ஸ் என்ற வடிவத்திற்கு மாறி, ஒரே நாளில் இரண்டு அணிகளும் ஆடி முடித்து வெற்றி தோல்வியை உறுதி செய்யும் வடிவத்திற்கு மாறியதைக் காலத்திற்கேற்ற- சூழலுக்கேற்ற மாற்றம் என்று விளங்கிக் கொள்ளவதைத் தவிர வேறு வழியில்லை. இன்று ஐம்பது ஓவர்கள் விளையாட்டு, இருபதுக்கு 20 என்ற வடிவத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துடிப்பை வேகப்படுத்தி விட்டது.
இந்த மாற்றம் இதுவரை கிரிக்கெட்டின் மீது வைக்கப்பட்ட சில குற்றச் சாட்டுகளைக் கூடப் போக்கியுள்ளது. மேல் தட்டு மக்களின் விளையாட் டாகவும், சோம்பேறிகளின் விளையாட்டாகவும் கருதப்பட்ட கிரிக்கெட்டை இன்று எல்லாத் தரப்பு மனிதர்களும் ஆடத் தொடங்கி விட்டனர். இருபதுக்கு /20 என்ற வடிவம் நேரங் கொல்லும் விளையாட்டு என்ற குறை யையும் போக்கத் தொடங்கியுள்ளது.தன்னை- தனது வடிவத்தை மாற்றிக் கொண்டு நிலைத்து நிற்கத் தொடங்கி இருக்கும் கிரிக்கெட் விளையாட்டு இன்று வேறொரு குற்றச்சாட்டிற்குள்ளும் சர்ச்சைக்குள்ளும் நுழைத்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக இந்தியக் கிரிக்கெட் பரப்பே இந்தச் சர்ச்சைகளின் களனாக இருக்கிறது என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பன்னாட்டுக் கம்பெனிகள் ஏலம் எடுக்கப்படும் பொருட்களாக இந்திய அணியின் அதிரடி வீரர் தோனியும் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ§ம் ஆக்கப் பட்ட போது கிரிக்கெட்¢டின் ரசிகர்களும் அதன் ஆதரவாளர்களும் கொஞ்சம் கலங்கித் தான் போனார்கள்.
வியாபார உத்திகளில் ஒன்றான ஏலம் விளையாட்டின் கூறாக மாறுகிற போது விளையாட்டும் வியாபாரமாக மாறிப்போகும் என்பது ரசிகர்களின் கவலையாகி விட்டது. கிரிக்கெட்டில் நடந்த மாற்றங்களையும், மற்ற விளை யாட்டுக்களிலிருந்து அது தன்னை விலக்கி நிறுத்திக் கொண்டு ஆடம்பரமான அடையாளத்துடன் நிலை நிறுத்திக் கொண்டு வரும் கிரிக்கெட்டைத் தொடர்ந்து கவனித்து வரும் பலருக்கு இந்தக் கவலை அர்த்தமற்றது என்பது புரியக் கூடும். ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் எல்லா நேரத்திலும் வியாபாரத்தோடும் வியாபார உத்திகளோடும் நெருங்கிய தொடர்புடையதாகவே இருந்து வந்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டைக் கட்டுப்படுத்தும் பிசிசிஐ எனப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பது கூட அரசின் வாரியம் அல்ல. தன்னிச்சையான அதிகாரம் கொண்ட வாரியம் தான். அதன் கிளை களுக்கும் மைய அமைப்புக்கும் நடக்கும் தேர்தல்களும் கூட தன்னிச்சை யானவை. அவற்றை அவ்வமைப்பு உருவாக்கிய விதிகளும் நெறிமுறைகளும் தான் கட்டுப்படுத்துமே ஒழிய இந்திய அரசின் விளையாட்டு அமைச்சகமோ, அவற்றின் பொதுவான நடைமுறைகளோ கட்டுப்படுத்துவதில்லை. அதன் காரணமாகத்தான் மற்ற விளையாட்டுக்களை விடக் கிரிக்கெட் பரவலான கவனிப்பையும் மாற்றங்களையும் அடைந்து வந்துள்ளது என்று கூடச் சொல்லுவதுண்டு.
தன்னாட்சி அமைப்பான கிரிக்கெட் வாரியம் நடத்தி வந்த போட்டிகளையே இந்தியாவின் விளையாட்டுப் போட்டியாகவும், அதற்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர்களையே இந்தியாவின் கிரிக்கெட் அணியாகவும் நமது அச்சு ஊடகங் களுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் முன்னிறுத்தி வந்தன. இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களும் அவற்றை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வந்தனர். இப்போது இந்த ரகசியங்களும் புனைவுகளும் களையப் போகின்றன.
கிரிக்கெட்டின் உள் ரகசியங்களையும் புனைவுகளையும் இதுவரைக் கட்டிக் காத்து வந்த இந்தியக் கிரிக்கெட் வாரியமே இப்போது களைத்துப் போடுகிறது. பன்னாட்டு வீரர்களையும் தேச அடையாளங்களை நீக்கி வெவ்வேறு அணிகளில் இடம் பெறச் செய்கிற வேலையை வாரியம் தான் செய்துள்ளது.
இண்டியன் கிரிக்கெட் லீக் என்னும் பெயரில் நடக்கும் இருபதுக்கு 20 போட்டியில் ஒரு அணிக்குள் இந்திய வீரரோடு, ஆஸ்திரேலியா, இலங்கை, நியுசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் எனப் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்களும் இடம் பெறப் போகிறார்கள்.
இந்தியப் பெரு நகரங்களான சென்னை, கல்கத்தா, மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சண்டிகர், ஆகியவற்றின் பெயரோடு சில ஒட்டுக்களைச் சேர்த்துக் கொண்டு பெயரிடப்படும் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் புரவலர்களாக இந்தியாவில் பன்னாட்டு மூலதனத்துடன் தொழில் செய்யும் பெருமுதலாளிகள் இருக்கப் போகிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு வீரர் அந்தக் கம்பெனியின் ஒப்பந்தத்தில் இருந்து அந்த முதலாளிக்காக விளையாடப் போகிறார்.
அடுத்த வருடம் இன்னொரு முதலாளியிடம் வேறொரு அணிக்கு விளையாடக் கூடும். இத்தகைய மாற்றத்தை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தானே முன் வந்துசெய்து விட்டது என்றும் கருத வேண்டியதில்லை.
தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்துடன் முரண்பட்டு வந்த முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் தொடங்கிய போட்டி நிறுவனமும் அது முன் வைத்த இண்டியன் பிரிமியர் லீக் போட்டிகள் என்ற கருத்துருவமும் தான் இந்த நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
போட்டிகள் வந்தால் மாற்றம் தவிர்க்க இயலாதது என்பது விளையாட்டு விதி அல்ல ; வியாபாரத்தின் விதி. இந்த மாற்றத்தைப் பாரம்பரியமான கிரிக்கெட் ரசிக மனம் ஏற்கத் தயங்கும் என்பது புரிகிறது. எல்லா விளையாட்டையும் தேசத்தின் விளையாட்டாகவும், அந்த அணியின் வெற்றியைத் தேசத்தின் வெற்றியாகவும், அந்த அணியில் இருக்கும் ஒரு வீரருக்கு நேர்ந்த அவப் பெயரைத் தேசத்திற்குக் கிடைக்கும் அவமானமாகவும் கருதி வந்த மனம் திடீரென்று அதிலிருந்து விலகி நிற்பது சிரமமான ஒன்றுதான்.
தேசம், தேசநலன், தேசப்பற்று என்ற புனிதமான ஒன்றுடன் இணைக்கப் பெற்ற ஒன்றை அதிலிருந்து பிரித்து முதலாளிகளின் பெயரோடு இணைத்துக் கோர்ப்பது ஏற்க முடியாத ஒன்று தவித்தாலும் நடக்கப் போகிறது அதுதான். இந்திய அரசாங்கம், இந்திய மக்களின் வரிப்பணத்தில் பல கோடிகளை முதலீடாக்கி உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை ஏலப் பொருளாக்கித் தனியாருக்கு விற்பதற்குத் தனி அமைச்சகத்தையே உருவாக்கிய போது கவலைப்படாத ஊடகங்களும், திரள் மக்கள் மன நிலையும் கிரிக்கெட் வீரர்கள் ஏலப் பொருளாக ஆக்கப்படும் போது கலங்கித் தவிப்பது விநோதமான முரண் தான்.
கிரிக்கெட் ஒரு விளையாட்டு; அது தேசத்தின் அடையாளமோ புனிதமோ அல்ல என்பதை உணர்த்தும் மாற்றம் வரவேற்கப்பட மாற்றமே. வரவேற்போம். கிரிக்கெட்டைக் கண்டு களிப்போம்.