December 31, 2008

சி.என். அண்ணாதுரைக்கு வயது நூறு: நாடகங்களை முன் வைத்து ஒரு மறுவாசிப்பு

இறப்புக்குப் பின்னும் எவ்வளவு காலம் நினைக்கப்படுகின்றனர் என்பதில் தான் மாமனிதர்களின் செயல்பாடுகள் அளக்கப்படுகின்றன. 1908,செப்டம்பர்,15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி தனது 61 ஆம் வயதில் மறைந்தார். மறைந்து 39 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது பிறந்த நாளை – நூற்றாண்டு விழாவாகத் தமிழகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவரை நினைப்பது என்பதன் மூலம் அவரது செயல்பாடுகளும் வழிகாட்டல்களும் நினைக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

வேறுவேறு உலகங்கள்


தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக் கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

கிராமஞ் சார்ந்த வாழ்க்கை என்பது குலத் தொழில் சார்ந்த வாழ்க்கையாகவே ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. குலத்தொழில் சார்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை உண்டான போது மனிதர்கள் இன்னொரு கிராமத்திற்குச் சென்று வாழ முயன்றிருக்கக் கூடும். ஆனால் அதை விடவும் நல்லபடியான வாழ்க்கை நகரத்தில் இருக்கிறது என நம்பும் போது பூர்வீகக் கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களில் வந்து ஏதாவது வேலை செய்து பிழைக்கத் தொடங்கியவர்கள் உண்டாக்கிய பழமொழியே கெட்டும் பட்டணம் சேர் என்பதாக இருக்கக் கூடும். அந்த வகையில் இந்தப் பழமொழியின் அதிக பட்ச வயது நூறைத் தாண்டாது என்பது என் கணக்கு. தமிழில் உள்ள பழமொழிகள் பலவற்றிற்கு நாம் காலத்தைக் கணக்கிட முடியாது. பழமொழி என்பதற்கே பழைமையான சொல் சேர்க்கை என்று தானே பொருள் .

மக்கள் திரளுக்கு எளிமையாக ஒரு கருத்தை எடுத்துச் சொல்ல விரும்பியவர்கள் உண்டாக்கிய அந்தச் சொல் சேர்க்கையின் பயன்பாடு சமூகத்திற்குத் தேவை என்றாகிற போது தொடர்ந்து வழக்கில் இருந்து கொண்டே இருக்கும். சமூக மாற்றத்தால் அது தரும் அர்த்தம் பயனின்றிப் போகும் போது அப்பழமொழிகள் காணாமல் போகும் வாய்ப்புகளும் உண்டு. சாதி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்ட காலத்தில் ஒவ்வொரு சாதிகளின் இயல்புகளாகக் கருதிப் பழமொழிகள் பல உருவாகியிருக்கின்றன. அவையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் பொருத்தமுடையன என்று சொல்வதற்கில்லை. அவற்றை எல்லாம் இன்று வெளிப்படையாகப் பயன்படுத்தவும் முடியாது. தமிழில் காணாமல் போன பழமொழிகள் ஏராளமாக உண்டு. கால மாற்றத்தால் காணாமல் போன பழமொழிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. விட்டு விடலாம். அதற்கு மாற்றாகப் புதிய பழமொழிகளை உருவாக்கிச் சமூகம் பயன்படுத்திக் கொள்ளவும் தொடங்கி விடும்.

கெட்டும் பட்டணம் சேர் என்னும் பழமொழியைத் தமிழர்கள் எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக் கொண்டு நகரத்தை நோக்கி நகர்ந்த காலமாகக் கடந்த ஐம்பது ஆண்டுகளைச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக 1950 களில் ஏற்பட்ட தொழிற்சாலைப் பெருக்கத்தின் காரணமாக உண்டான நகர்மயம் பெருமளவு வேளாண்மைத் தொழிலாளிகளை நகரங்களை நோக்கி நகர வைத்தது. தொழிற்சாலைகளின் பணியாளர்களாகவும், பெருந்தொழில்களின் துணைத் தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் நகரத்தை நோக்கி நகர்ந்தவர்கள் கூட்டம் என்றால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வேலைகளைச் செய்வதற்கும், சேவைப் பணிகளைச் செய்வதற்குமான உதிரித் தொழிலாளைகளாகவும் நகரங்கள் வீங்கிப் பெருத்துள்ளன.

இதே நேரத்தில் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மனிதர்களின் இடப் பெயர்வை இந்தப் பழமொழியால் குறிக்க முடியாது. அவர்கள் கெட்டுப் போனதால் நகரத்துக்கு வந்தவர்கள் இல்லை. நகரத்தின் தேவைக்காக- நகரவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நகரத்தின் ஒழுங்கு களையும் விதிகளையும் நாகரிகம் என்ற பெயரில் கற்றுக் கொடுத்து , தனிப்பட்ட திறமைகளை உருவாக்கித் தன் வயப்படுத்தியதால் நகர்ந்தவர்கள் அவர்கள். எனவே அவர்களுக்கு இந்தப் பழமொழி பொருந்தாது

நகரங்களின் மக்கள் பெருக்கத்தை வீங்கிப் பெருத்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்பெருக்கம் இயல்பான வளர்ச்சி அல்ல. இயல்பான வளர்ச்சி ஆபத்தில்லாதது. வீங்கிப் பெருப்பது ஒருவிதத்தில் நோய். அந்த நோயின் அளவு ஒவ்வொரு நகரத்துக்கும் வேறு வேறு விதமாக இருக்கின்றன. திருநெல்வேலி, மதுரை, தஞ்சை போன்ற பாரம்பரியமான நகரங்கள் அவ்வளவு வேகமாக வளர்ந்தன எனச் சொல்ல முடியாது. ஆனால் தொழில் நகரங்கள் என அறியப்படும் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, தூத்துக்குடி, போன்றனவற்றின் வளர்ச்சி ஆபத்தான வளர்ச்சி. இவை எல்லாவற்றையும் விட பெரும் ஆபத்தோடு தமிழகத்தின் தலைநகர் சென்னை வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நமது அரசு நிர்வாகத்தின் கண்ணிகளில் உள்ளவர்கள் எப்பொழுது உணரப்போகின்றார்களோ தெரியவில்லை. உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட வேண்டும் என வேண்டிக் கொள்ளலாம்.

ஆறு மாதத்திற்கு முன்னாள், சென்னையில் சந்தித்த அந்த வாடகைக்கார் ஓட்டியைத் திருநெல்வேலியில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. இங்கேயும் வாடகைக் கார் ஓட்டியாகவே அவரைச் சந்திக்க நேர்ந்தது. சென்னையில் சந்தித்த போது அவரது சொந்த ஊர் திருநெல்வேலிக்குப் பக்கத்தில் உள்ள கிராமம் என்று மட்டுமே சொன்னார். திருநெல்வேலிக் காரனைச் சென்னையில் சந்தித்த மகிழ்ச்சியில் ஒரு காரோட்டி காட்டும் அக்கறையை விடவும் கூடுதலான அக்கறையை என்னிடம் காட்டினார். ஊர்க் கதை, பழைய நினைவுகள் என என்னோடு பகிர்ந்து கொண்ட செய்திகளில் அவரது குடும்ப வாழ்க்கை பற்றி அதிகம் சொல்லவில்லை. திருநெல்வேலியில் சந்தித்த போது எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என நினைத்தவர் போலத் தனது காரில் ஏற்றிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

சென்னையைக் காலி செய்து விட்டுத் திருநெல்வேலிக்கு வந்து விட்டதாகச் சொன்னார்.சென்னையில் காரோட்டியாக இருந்த போது கிடைத்த சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு தான் திருநெல்வேலியில் கிடைக்கிறது என்ற வருத்தம் அவரது பேச்சில் வெளிப்பட்டது. சென்னையில் ஒரு டாக்ஸி டிரைவருக்கு எட்டாயிரம் உறுதி; ஆனால் திருநெல்வேலியில் உறுதியாக இரண்டாயிரம் கிடைக்கும். அதற்குமேல் கிடைப்பதெல்லாம் அதிர்ஷ்டம் சார்ந்தது. அதிர்ஷ்டம் அதிகமாக இருந்தால் பத்தாயிரம் வரை கிடைக்கலாம். என்றாலும் பரவாயில்லை. இனித் திரும்பவும் சென்னைக்குப் போகப் போவதில்லை என்ற உறுதியாகவும் சொன்னார்.

கணவன் - மனைவி ஒரு குழந்தை என இருக்கும் தனது சின்னக் குடும்பத்தை நடத்துவதற்குச் சென்னையில் கிடைத்த எட்டாயிரம் ரூபாய் சம்பளம் போதவில்லை. அரை மாதத்தைக் கூடச் சமாளிக்க முடியவில்லை. ஆனால் இங்கு கிடைக்கும் இரண்டாயிரம் ரூபாயில் ஓரளவு சமாளிக்கலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. இனித் திரும்பவும் சென்னைக்குப் போகப் போவதில்லை என்று அவர் தீர்மானமாகச் சொன்னதற்கான காரணம் அவரது சொந்த வாழ்க்கை சார்ந்த தனிப்பட்ட காரணம் அல்ல. அது ஒரு பொதுக் காரணம். சென்னை நகரத்தின் பொதுப் பிரச்சினையாக இருக்கும் அந்தக் காரணம் எல்லாப் பெருநகரங்களின் காரணமாகவும் ஆகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

தான் சம்பாதித்த எட்டாயிரம் ரூபாயில் மூவாயிரம் ரூபாயை வீட்டு வாடகைக்குத் தர வேண்டியிருந்தது. மூவாயிரம் வாடகை கொடுத்து இருந்த அந்த இடத்தை நாங்கள் வீடு என்று சொல்லிக் கொண்டோம். உண்மையில் அது வீடு அல்ல; கார் நிறுத்துவதற்குக் கட்டும் அறையைப் போல ஓர் அறை தான். அதைப் போல வரிசையாக இருக்கும் ஐந்து வீடுகளுக்கு ஒரு பொதுக் கழிப்பறையும், குளியலறையும் உண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாள், ஐந்நூறு ரூபாய் வாடகை பேசி ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துப் போன வீடு அது. இப்போது அதன் வாடகை மூவாயிரம் ரூபாய். முன் பணம் பத்தாயிரம் ரூபாய். வாடகையை உயர்த்திக் கொண்டே போன போது செலவு களைக் குறைத்துக் கொண்டு தர முடிந்தது. ஆனால் முன்பணத்தை மொத்தாகக் கேட்டபோது தர முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஊர் திரும்புவது என முடிவு எடுத்தேன் என்றார்.

சொன்னவர் சென்னை நகரத்து மனிதர்களை அச்சுறுத்தும் வீட்டு வாடகைப் பிரச்சினையைப் பற்றிய நீண்ட விரிவுரையைத் தொடர்ந்து நடத்தினார். நான் பேராசிரியரிடம் பாடம் கேட்கும் மாணவனைப் போல கேட்டுக் கொண்டே பயணம் செய்தேன். பத்தாயிரம், இருபதினாயிரம் எனத் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகை கொடுத்து குடியேறும் மனிதர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துக் கொண்டிருப்பதின் விளைவுகள் அப்பாவிகளான டிரைவர்களை ஏன் பாதிக்க வேண்டும் என்பது அவருக்குப் புரியவில்லை. என்னிடம் அதற்கான விளக்கத்தை எதிர்பார்ப்பது போலப் பேச்சை நிறுத்திய போது எனக்கும் புரியவில்லை.

பேச்சை நிறுத்திய அவர் இன்னொருவரின் அனுபவத்தைச் சொன்னார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனம் ஒன்றின் தொழிலாளி. போதுமான சம்பளம் கிடைக்கிறது என்பதால் நடுத்தரவர்க்கத்தின் குறைந்த பட்ச ஆடம்பரப் பொருட்களை தவணைத் திட்டங்களில் நிரப்பியிருந்தாராம். இரண்டு குழந்தைகளையும் மாதம் ஆயிரம் வரை பணம் கட்டிப் படிக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சேர்ந்திருந்தாராம். வாடகை உயர்வு, வாழ்க்கைத் தேவைக்கான அடிப்படைப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் உண்டான நெருக்கடியின் விளைவாகக் கணவன் சென்னையில் வேலையைத் தொடர, மனைவியும் குழந்தைகளும் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க முடியாமல் தவிப்பதைச் சொல்லி அந்த நண்பர் தினசரி புலம்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கு அவருக்கான பதிலைச் சொல்லும் நபர்கள் இல்லை. இப்படியான மனிதர்களை வழி நடத்தவோ, அணி திரட்டவோ , குரல் கொடுக்கவோ யாரும் இல்லை என்பதுதான் சமூகத்தின் பெருந்துயரம். அவருக்கான விளக்கத்தைச் சொல்ல முடியாத போதும் அவரது அனுபவங்களும் அவரை ஒத்த பலரின் அனுபவங்களும் ஒன்றை உணர்த்தியது. நாம் வாழுங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது என்பதை மறுக்க முடியாது.

தமிழர்கள்/இந்தியர்கள் ஒரே நேரத்தில் வேறுவேறு உலகங்களில் – மூவுலகக் கோட்பாட்டைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் விளங்கிக் கொண்டேன். மூவுலகம் என்பது இந்தியப் புராணங்களும் இதிகாசங்களும் சொல்லும் பூலோகம், மேலோகம், பாதாள லோகம் என்ற மூன்று உலகங்கள் அல்ல. இந்த வேறுபாடுகள் கற்பனையானவை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிவுலகக் கோட்பாடாக இருந்த வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளராத நாடுகள் என்ற மூவுலகக் கோட்பாடுகளும் அல்ல. இந்த வேறுபாடுகள் தொழில் வளர்ச்சி என்னும் அடிப்படையிலான அரசியல் சொல்லாடல்கள்.

நான் விளங்கிக் கொண்ட மூன்று உலகங்கள் கற்பனையானவை அல்ல. அரசியல் சொல்லாடல்களும் அல்ல. தனிநபர் வாழ்க்கை சார்ந்து நெருக்கடி தந்து கொண்டே இருக்கும் இந்த வேறுபாடுகளின் பின்னணியில் இருப்பன முழுக்க முழுக்கப் பொருளாதாரப் பிரச்சினைகள். வாழும் வெளிசார்ந்த சிக்கல்கள். உலகமயத்தை ஏற்றுக் கொண்ட இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் அதன் துணைப் போக்குகளான தனியார் மயமும் தாராளமயமும் ஒன்றி ணைந்து இந்தியர்களை நெருக்கடி மிகுந்த மூன்றுலகக் கோட்பாட்டிற்குள் தள்ளி விட்டுள்ளன. டாலர்களிலும் அந்நியதேசத்துக் கரன்சிகளிலும் சம்பளம் வாங்கும் இந்தியர்கள்/தமிழர்கள் அமெரிக்க நகரங்களில் அந்நாட்டு நகரங்களில் வாழும் விதம் முதல் வகை உலகம் என்றால், இந்தியப் பெருநகரங்களில் வாழ நேர்வதை இரண்டாம் வகை உலகம் எனலாம். வேளாண்மை சார்ந்த தனது பழைய அடையாளங்களை இழந்த போதிலும், சமூகம் சார்ந்த –சாதி வேறுபாடுகள் சார்ந்த மதிப்பீடுகளை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருப்பது மூன்றாம் உலக வாழ்க்கை எனச் சொல்லலாம்.

இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் கீழ் நடுத்தர- உதிரிவர்க்க வாழ்க்கையை எப்படிப் பகுத்துச் சொல்வது? தாராளமயப் பொருளாதாரம் உண்டாக்கும் இந்த வேறுபாடுகள் பாரதூரமான வேறுபாடுகளாக மாறுகிற போது ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி அர்த்தமிழக்கத்தான் செய்யும் .

கரையைக் கடக்கும் புயல்கள்.


காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் இறக்க வேண்டும் என்பது அறிந்து கொள்ள முடியாத திசையிலிருந்து வருகின்ற உத்தரவு. அந்த உத்தரவின் ரூபம் என்ன?

உள்ளங்கால் தொட்டு உச்சந் தலைவரை வருடிச் செல்லும் அதிகாலைப் பனிக்காற்றா? உரலிலிட்டு இடித்துக் காய்ச்சிய கம்மங்கூழுக்குக் கடித்துக் கொண்ட பச்சை மிளகாயின் உறைப்புச் சுவையா? வெண் பஞ்சுக் கூட்டத்தில் பொன்பரப்பாய்ச் சிதறும் அந்தி நேரத்து மலைமுகட்டுச் சித்திரமா? கைவளையோசையாகவும் கால் கொலுசின் சிணுங்கலாகவும் காதில் நுழைந்து கண் பொத்திக் கட்டி அணைத்துப் பின் கழுத்தில் முத்தமிட்டுக் கலவி செய்துக் காணாமல் போன கனவுப் பிம்பமா? கருக்கிருட்டில் காராம்பசுவின் மடிபிதுக்கிக் கறந்த பாலின் இளஞ்சூடா?

மரணங்கள் ஒருவிதத்தில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தின் பதிவும் கூட. வாழும் காலத்தில் அவர் செய்த செயல்களின் பதிவுகளை மரணத்திற்குப் பின்னும் வாசிக்க முடியும் என்றாலும் அந்த மரணம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதும் கூட. வாழ்ந்த காலத்து இருப்பைச் சொல்லும் உடனடி வெளிப்பாடு என்பதை நாம் மறுக்க முடியாது. இருந்த காலத்தின் பதிவுகள் அவருக்கு அழியாத அடையாளங்களைப் பரப்பிக் காட்டுகின்றன. அந்தப் பரப்பு சார்ந்து குடும்ப மனிதனாகச் சுருங்கிச் சொல்லலாம். இங்கே பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் அப்படிச் சுருங்கிப் போனவர்கள் தான். ஆனால் எல்லா மனிதர்களும் சுருங்கிப் போவதை விரும்புபவர்களும் அல்ல.

தங்கள் வெளியைக் கிழித்து வெளியேறும் போது தான் தத்துவ, அரசியல், சமூக, கலை, அறிவியல்.பண்பாட்டு மனித அடையாளங்கள் உருவாகின்றன. அந்த உருவாக்கத்திற்கு முயலாத மனிதர்கள் இல்லை என்றாலும், எல்லாருக்கும் அந்த அடையாளம் கிடைத்து விடுவதும் இல்லை. வந்த சுவடு தெரியாமல் போவதைப் பற்றிச் சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. வந்தது போலவே சென்று விட வேண்டும் என நினைப்பதும் கூட ஒருவிதத்தில் ஆசை தான். வந்த சுவடு தெரியாது; ஆனால் இருக்கும் போது நான் உண்டாக்கிய சுவடுகள் ஏராளம்; நான் போனாலும் நான் உண்டாக்கிய சுவடுகளை அழிக்கக் கூடாது என நினைப்பது பேராசை. ஆசைகள் விரும்பத்தக்கவை. பேராசைகள் ஆபத்தானவை.

கண் முன்னே விரியும் இந்த உலகம் எனக்கானது; இதனை அனுபவிக்கவும் அடக்கிக் காட்டவும் பிறந்தவன் என நம்பும் ஒருவனிடம் மரணத்தைப் பற்றிக் கேட்டால் அவனுக்கு உண்டாகக் கூடியது கோபம். நான் வாழப்பிறந்தவன்; ஆளப்பிறந்தவன். என்னிடம் ஏன் மரணத்தைப் பற்றிக் கேட்கிறாய்? எனக்கெப்படித் தெரியும்? செத்தவனைத் தான் கேட்க வேண்டும். என வீறாப்பாகச் சொல்லி விட்டுப் போன ஒருவனின் மரணச் செய்தியை தந்தி சுமந்து வந்த போது அதிர்ந்து போன கணங்களை நீங்கள் சந்தித்திருக்கக் கூடும்.

மரணத்தை எதிர்கொள்ளுதலில் மனிதமனங்களுக்கு ஒரே மனநிலை தான் இருக்கிறது எனவும் சொல்ல முடியாது.மரணம் குறித்து வரும் அந்த உத்தரவை மீற முடியாது என்று தெரிந்த போதும், அதைத் தள்ளிப் போட முடியும் என நம்பாதவர்கள் ஒருவரும் இல்லை. மரணம் எப்படிப் பட்டது எனக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம் என முயன்றால் அதை அனுபவித்துப் பார்த்துச் சொல்ல ஒருவரும் இங்கே இல்லை. வாழ்ந்து கொண்டே மரணத்தைப் பற்றிச் சொல்பவர்களின் கூற்று அனுபவக் கூற்று அல்லவே. மரணத்தின் வண்ணங்களை, ஒலிநயத்தை, சுவைப் பெருக்கத்தை, உரசுதலை, நாற்றக் கடப்பை விளக்கிச் சொல்லுதல் யாருக்கு முடியும்.? மரணம் விநோதமானது; வேடிக்கையானது எனச் சிலர் சொல்லக் கூடும். எது வேடிக்கை? எது விநோதம்? என விளக்க முடியாதவன் தான் மரணத்தையும் விநோதமானது! வேடிக்கையானது எனச் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறான்.

சாத்தியமே இல்லை என்ற போதும் கடவுளை விளக்கி விட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் மனிதர்கள் தானே மரணத்தையும் விளக்கிக் காட்ட முயல்கிறார்கள். விளக்கிச் சொல்ல முடியாத ஒன்றைத் திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டிருப்பதில் மனிதர்களுக்கு அலுப்பே தோன்றுவதில்லை போலும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கொள்ளும் உறவைச் சொல்ல நட்பு, பாசம், அன்பு, நேயம், பகை, வன்மம் எனப் பல சொற்களைப் பயன் படுத்தி விளக்கி விட முடியும் என நம்பும் நமது மனம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் உறவை விளக்கப் பயன்படுத்தும் உச்சபட்ச வார்த்தை காதல்.

காதல் என்ற வார்த்தையின் எதிர்ப்பதமாகச் சொல்ல தமிழில் ஒரு வார்த்தை இல்லை என்றே தோன்றுகிறது. காதல் என்னும் சொல்லுக்கு எந்த மொழியும் எதிர்ப்பதம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள விரும்பாது என்றே தோன்றுகிறது. காதல், அனுபவித்துப் பார்த்து விளக்கிக் காட்ட முயலும் ஒரு வினை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தோன்றும் வினை. எத்தனை மனிதர்கள் தோன்றினார்களோ, எத்தனை பேர் காதலிப்பதாக நினைத்தார்களோ அத்தனை பேருக்கும் அது ஒரு புதுவித அனுபவம் தான்.

மரணமும் காதலைப் போன்றது தான் என்றாலும் நேர் எதிரானது. மரணம் விளக்கிச் சொல்லும் தர்க்கம் அல்ல என்பதை விட அனுபவித்துப் பார்த்துச் சொல்லும் கரணமும் அல்ல என்பதுதான் அதன் சிறப்பு. காதலின் அனுபவித்தைச் சொல்ல ஏராளமானவர்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள். காதலில் வென்றவர்களும், தோற்றவர்களும் எழுதி வைத்த கவிதைகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம். ஆனால் மரண அனுபவித்தைச் சொல்ல ஒருவரும் இல்லை என்றாலும் அதனை எதிர் கொள்ளத் தயாரானவர்கள் இருக்கக் கூடும். தென்றலில் மிதந்து வந்து வருடிச் செல்லும் மெல்லிய மயிலிறகைப் போல என்னைப் பிரியட்டும் அந்த உயிர் எனக் காத்திருப்பவர்கள் மரணத்தை ரசிப்பதற்குரியதாகக் கருதக் கூடும். பிரியமானவர்கள் தரும் முத்தத்தை ஏற்றுக் கொள்ளும் ஆதர்சத்துடன் உள் வாங்கிக் கொள்ளக் கூடும். ஆனால் விபத்தும் நிகழ்வும் ஏற்படுத்தும் மரணத்தை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் மனித சமூகத்தின் தவிப்பாக இருக்கிறது.

2008, நவம்பர் 26 இல் மும்பையில் வெடிகுண்டுகளை வெடித்துக் காட்ட அரபிக் கடலில் பயணம் செய்த படகின் பயணத்தைப் போலவே வங்கக் கடலிலிருந்து ஒரு பெரும்பயணம் தொடங்கியது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகத் தொடங்கிப் புயலாக மாறி வந்த அந்தப் பயணம் கரையைக் கடந்த போது வலுவிழந்து போனதென்னவோ உண்மை தான். ஆனாலும் இரண்டு புயலுக்கும் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு நூறைத்தாண்டி விட்டது.

இயற்கையின் சீற்றம் எனப் பதிவாகி விட்ட கரை கடந்த அந்தப் புயல், தமிழகம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இழக்கக் காரணமாகி விட்டது. வீடுகளை, சாலைகளை, பயிர்களைப் பறி கொடுத்து நிற்கிற அந்தக் காட்சிகளையும் குரல்களையும் தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டும் விலகிச் செல்லும் நமது மனம் சில நாட்களில் அவற்றை மறந்து போகக் கூடும். நேரடியாக அதனை அனுபவிக்காதவர்கள் புயலின் சீற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் சுனாமி எனப் பெயர் தாங்கி இதே வங்கக் கடல் கரையைக் கடந்ததை இன்னும் நாம் மறந்து விட வில்லை. காரணம் அது தாக்குதல். இயற்கையின் தாக்குதல். இயற்கையின் தாக்குதலைத் தாங்காது அரற்றும் நாம் செயற்கையாக மனிதர்கள் தொடுக்கும் தாக்குதலை எப்படித் தாங்க முடியும்?

வங்கக் கடல் தோன்றி கரையை நோக்கி வந்த புயல் பற்றிய எச்சரிக்கைக் குறிப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்த தொலைக்காட்சித் திரையில் மின்னலாய் வந்து மறைந்தது இன்னொரு புயல் செய்தி. இந்தப் புயல் அரபிக் கடலின் அலைகளைக் கிழித்துக் கொண்டுப் படகேறி வந்த புயல். கிழக்குக் கரையைக் கடந்த அந்த புயல் மறந்து விடக் கூடியது என ஒதுக்கித் தள்ளும் நமது மனம் மேற்குக் கரையில், கரை கடந்த புயலை அப்படி ஒதுக்கி விடாது. நவம்பர் 26 மும்பை நகரில் நள்ளிரவில் தொடங்கிய மரணத்தின் ஓலம், அது விபத்தல்ல; நிகழ்வு. மரணத்தின் இன்னொரு பரிமாணம். புயல் காரணமாகக் கொட்டிய மழையைப் போல அல்லாமல், மனிதர்களின் நினைவுச் சாத்தியத்தைத் தகர்த்து விட்டு ரூபமற்ற ரூபத்தில் வந்த மரணங்கள் அவை. நினைத்துப் பார்க்காத ரூபத்தில் வந்து, எதிரே நின்று வாங்கிக் கொள் என்று சொல்லித் தந்த அந்த நிகழ்வை விளக்க உலகம் உண்டாக்கி வைத்துள்ள வார்த்தை பயங்கரவாதம். வார்த்தையை கண்டுபிடித்துப் பயன்படுத்தும் எல்லா மொழியும் மொழியைப் பேசும் மொழிக்கூட்டங்களும் தனது மொழிக் கிடங்கிலிருந்து கிடைக்கும் அனுபவத்திலிருந்து விளங்கிக் கொள்ளவும் விலக்கி வைக்கவும் முயன்று தோற்றுக் கொண்டிருக்கின்றன.

பயங்கரவாதத்தை விளங்கிக் கொள்ள முயன்றது வன்முறையை விளங்கிக் கொள்ள முயன்றதின் தொடர்ச்சி தான். அதிகாரத்தைக் கைப்பற்ற வன்முறையைப் பயன்படுத்தலாம் என்பது கேள்விக்கப்பாற்பட்ட உரிமையாக உலகத்தில் நம்பப்படுகிறது என்றாலும் வன்முறை எப்போதும் விருப்பத்திற்குரியதாக இல்லை என்பதும் சுவாரசியமான முரண்பாடு. வன்முறைக்கு முன் எல்லா உயிர்களும் நடுங்குகின்றன்; எல்லா உயிர்களும் இறப்புக்குப் பயப்படுகின்றன; எல்லா உயிர்களும் வாழ்வை நேசிக்கின்றன என்ற தம்மபதத்தின் கூற்றை நிராகரிக்க ஒருவரும் இல்லை.

தான் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் தொடங்கும் ஒருவனின் மனநிலையை நீ மட்டும் அல்ல; நீ சார்ந்த குழுவே அங்கீகரிக்கப்படவில்லை என விரிப்பதின் மூலம் அவனது அறிவைத் தூர விலக்கி வைக்க முடியும் என நம்புகிறது வன்முறை சார் நம்பிக்கை. அங்கீகரிக்கப்படாத வெளியில் உனது அடையாளத்தை உருவாக்கிக் காட்டும் பணியைத் தொடங்கும் மனநிலை, அப்பணியை அநீதிக்கெதிரான போராட்டமாக மாற்றுவதும், அப்போராட்டத்தின் வெற்றிக்கு வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாதது என்று அந்த நம்பி விடும் நிலையில் பயங்கரவாதக் கருத்தியல் உருவாகி விடுகிறது.

பயங்கரவாதம் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய ஒன்று எனச் சொல்லப்பட்டாலும், அதன் மறுபக்கத்தில் லட்சியவாதமும் புனிதப்போர்களும் இருந்தன ; இருக்கின்றன என்பதும் உண்மை தான். உருவாக்கப்படும் அரசுகள் தொடர்ந்து வன்முறை வடிவத்தைப் பயன்படுத்திக் கொண்டே பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் கூட்டமும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் கைவிட்டு விடும் என நினைப்பதும் கூட அபத்தம் தான். முள்ளால் முள்ளால் எடுக்க வேண்டும் எனச் சொல்லும் பழமொழிகள் மாற்று முறைகளை மறைக்கப் பார்க்கும் எண்ணங்களின் வெளிப்பாடு.

காதலை அனுபவித்துப் பார்த்துச் சொன்னவர்களைப் போலப் பயங்கரவாதத்தை அனுபவித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது உலகம். காதலின் இன்பமோ துயரமோ அது தனிமனிதர்கள் சார்ந்த ஒரு விளைவு. ஆனால் பயங்கரவாதம் தனிமனிதர்களை அல்ல; மனித சமுதாயத்தை அலைக்கழிக்கும் ஆபத்து. விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை; ஆபத்துக்கள் தவிர்க்க வேண்டியவை.

பயங்கரவாதம் பற்றித் தமிழில் அண்மையில் வந்துள்ள அந்த நூலை [ பயங்கரவாதம்: ஓர் உளவியல் பார்வை, க.செல்லப்பாண்டியன், கார்முகில் பதிப்பகம்,129-ஏ, பாலம் ஸ்டேசன் ரோடு, மதுரை -625002] , வாசித்து முடித்த ஒரு வாரத்திற்குள் அதற்கான விளக்கக் காட்சிகளாக விரிந்தன மும்பை நிகழ்வுகள்.

எல்லாவற்றையும் மறந்து விட முடியாது
(சட்டக்கல்லூரிக் கல்வரம்: சாதிவெறியின் சரித்திர நிழல்)
உருட்டுக் கட்டை, இரும்புத் தடி, வெட்டுக் கத்தி எனச் சகல ஆயுதங்களோடும் தன்னைத் துரத்தி வந்த கும்பலிடமிருந்து இனித் தப்பிக்க முடியாது என்ற முடிவுடன் வாசல் கதவில் சாய்ந்து மொத்த அடியையும் வாங்கிச் சரிந்த சட்டக்கல்லூரி மாணவரின் முகம் நினைவில் இல்லை. அந்த மாணவரின் முகம் மட்டும் அல்ல; உடைக்கப் பட்ட காலோடு நடந்து சென்று மரக்கிளையில் தொங்கிய பின்னும் அடிக்கப்பட்டு விழுந்த இன்னொரு மாணவரின் முகமும் கூட மனதில் இல்லை. அந்த உடல்கள் நினைவில் இருக்கின்றன.
பல திரைப்படங்களில் நாயகக் கதாபாத்திரத்தின் வீரம் சார்ந்த பிம்பத்தை உண்டாக்குவதற்காக இடம் பெறும் சண்டைக் காட்சியின் பகுதியாக போலி அடி; போலியாகத் தூக்கி அடிக்கப் படுதல், போலியான ஒலிச் சேர்க்கை, போலியான ரத்தக் கொப்பளிப்பு, போலிக்காயங்கள் எனப் பார்த்து ரசிக்கப் பட்ட வன்முறையின் நிஜத்தை-அந்தக் காட்சியை செய்தியின் பகுதியாகப் பார்க்க நேரிடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் . எதிர்பார்க்காத ஒன்றைப் பார்க்க நேரும் போது உண்டாகும் அதிர்ச்சியை ஒவ்வொருவரும் அடைந்திருக்கக் கூடும். எல்லோருக்கும் அத்தகைய அதிர்ச்சி உண்டாகி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் காமிரா கொஞ்சம் நகர்ந்து அடிக்கப்படுவதிலிருந்து விலகிக் காவலர்களையும், பொதுமக்களையும் பத்திரிகையாளர்களையும் காட்டிய போது ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. கண் முன்னே நடக்கும் கொலை வெறித்தாக்குதலை திரைப்படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பது போல வேடிக்கை பார்க்க முடியுமா? அதுவும் சட்டம்,ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல் துறை அப்படி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியுமா? தங்கள் பணி மூலம் சமூகப் பதற்றத்தைத் தணித்து தேசத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட முடியும் என நம்பும் பத்திரிகையாளர்களின் தார்மீகப் பொறுப்பு அதை வேடிக்கை பார்ப்பது மட்டும் தானா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்த போது அதிர்ச்சி ஆயாசமாக மாறித் தூக்கம் கெட்டுப் போனது தான் மிச்சம்.
சட்டக்கல்லூரி வாசலில் வைத்து ஒரு மாணவரைப் பலர் தாக்கிய அந்தக் காட்சி எனக்குப் பேரதிர்ச்சியாக இருக்கவில்லை. இப்படிப் பட்ட நிகழ்வுகள் தமிழ் நாட்டில் நடக்காத நிகழ்வுகள் அல்ல. தமிழ் நாட்டுக் கிராமங்களின் தினசரி நிகழ்வுகள் தான். திருநெல்வேலியில் வசிக்கும் எனக்கு இத்தகைய செய்திகள் புதியனவும் அல்ல. சாதி ஆதிக்கத்தையே உண்டு, சாதி ஆணவத்தோடு உறங்கி, சாதிக் காற்றையே மூச்சாக உள்வாங்கி வெளி விடும் மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்கும் ஏராளமான தருணங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. வெட்டு – கொலை எனச் செய்தி எழுதாத நாட்களை திருநெல்வேலியின் நாளிதழ்கள் கணக்கில் வைத்துக் கொள்ளாமல் விட்டு விடும் என்றே நினைக்கிறேன். திருநெல்வேலியின் நகரப் பகுதியில் வசிப்பதால் தினசரிகளில் வாசிக்கும் அந்தக் காட்சிகளை நேர்க்காட்சிகளாகப் பார்க்கும் வாய்ப்புகள் இப்போது இல்லை. ஆனால் நான் பிறந்த உசிலம்பட்டி வட்டாரம் பல காட்சிகளை நேர்க் காட்சிகளாக காட்டித் தந்திருக்கிறது. பல காட்சிகள் எனது நினைவடுக்குகளில் பதிந்தும் உள்ளன.
அப்படியான காட்சிகளைப் பசுமையான நினைவுகள் என்று சொல்லக் கூடாது. சிவந்து கொப்பளிக்கும் நினைவுகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரியும் தனது குடலை வயிற்றோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் வெட்டி எடுக்கப் பட்ட பெண்ணின் தலையோடு போலீஸ் ஸ்டேசன் வாசலில் நின்றிருந்த மனிதனை நான் பார்த்தது எனது பத்தாவது வயதில். உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பார்த்த அந்தக் காட்சிக்குச் சற்றும் குறையாத காட்சிகள் பல அடுத்தடுத்த பக்கங்களில் பதிந்துள்ளன. சொத்துத் தகராறு ஒன்றைத் தீர்த்து வைக்க வந்த பக்கத்து ஊர் நாட்டாமையைக் கூட்டத்தில் ஒருவர் கை நீட்டிப் பேசி விட்டார் என்பதற்காக ஒருவாரத்திற்குள் நீட்டிய கையின் மணிக்கட்டு வெட்டி எடுக்கப் பட்டது. வெட்டி எடுத்த கும்பல் நடுத்தெருவின் வழியாக நிதானமாகத் தான் நடந்து போனது. வேடிக்கை பார்த்த தெருக் கூட்டத்தில் ஒருவனாக நானும் நின்றிருக்கிறேன்.எனது பள்ளிப் படிப்பின் காலங்களில் எங்கள் ஊர்ப் பக்கம் கட்டைப் பஞ்சாயத்துகளில் நாட்டாமையாக இருந்த அந்த நபர் எனது கல்லூரி நாட்களில் மதுரையின் முக்கியமான தாதாவாக மிரட்டிக் கொண்டிருந்தார்.
பத்து ஆண்டுகள் கழித்து அந்தக் காட்சியை மறக்கும்படி செய்தது ஓடும் பஸ்ஸில் நடந்த அந்த நிகழ்வு. திரைப்படத்தின் முன்னிரவுக் காட்சி முடிந்து எழுமலையிலிருந்து திரும்பும் போது இரண்டு வாசலிலும் ஆயுதங்களோடு ஏறிய கும்பல் அந்தப் பஸ்ஸின் மத்திய இருக்கைகளில் இருந்த மூன்று பயணிகளை மொத்தப் பயணிகள் சாட்சியாக வெட்டி விட்டு இறங்கிப் போனது. உத்தப்புரம் கிராமத்தின் மையத்தில் இருந்த அந்தப் பஸ் நிறுத்தம் அன்று முதல் இல்லாமல் போய் விட்டது. ஒரு நிறுத்தத்திற்குப் பதிலாக இரண்டு பஸ் நிறுத்தங்கள். பஸ் நிறுத்தங்கள் மட்டும் அல்ல எல்லாமே இரண்டு பட்டன. பள்ளிக் கூடம் இரண்டு; ரேசன் கடைகள் இரண்டு; தபால் ஆபிசுகள் இரண்டு; குடிதண்ணீர் டேங்குகள் இரண்டு. அந்தத் தண்ணீரை உற்பத்தி செய்யும் கிணறுகள் இரண்டு; அதனைக் கிராமத்திற்குக் கொண்டு வரும் குழாய்கள் இரண்டு; நடக்கும் பாதைகள் இரண்டு; பயணங்களோ பலப்பல.
எனது பூர்வீகக் கிராமத்தை அடுத்துள்ள உத்தப்புரம் இரண்டுபட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. கடுமையான உழைப்பின் மூலமும், அரசு தந்த சலுகைகளின் பலனாகவும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தொடங்கியிருந்த உத்தப்புரம் கிராமத்து தாழ்த்தப்பட்டோரின் உரிமை கோரல்கள் எப்போதும் பொது வெளிகளைப் பயன்படுத்துவதில் தங்களுக்குள்ள உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் தான் இருந்தன. தனிநபர்களின் சொந்த வெளிக்கான போராட்டங்களைச் சட்டத்தின் வழியாகத் தீர்த்துவிட முடியும். அனுபவப் பாத்தியதைகள் மூலம் சொந்தம் கொண்டாடப்படும் பொது வெளிகளின் மீதுள்ள உரிமைகளைச் சட்டத்தின் வழியாகத் தீர்த்து வைப்பது அவ்வளவு சுலபமல்ல.
ஒரு கிராமத்தின் கோயில், கண்மாய், குடிதண்ணீர்க் கிணறுகள், பாதைகள், மேய்ச்சலுக்கான புறம்போக்கு நிலம் எனப் பொது வெளிகளைப் பயன்படுத்துவதில் ஆதிக்க சாதியினர் எப்போதும் ஏகபோக உரிமைகளை நிலை நாட்டி வந்தனர். அந்த ஏகபோக உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப் படுவது தான் ஜனநாயகத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படைகள் சமூக வாழ்க்கையின் வழிமுறையாக மாறும் போது ஆதிக்கம் செலுத்தியவர்கள் தங்களின் போக்கைக் கைவிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுவரை உரிமைகளும் சலுகைகளும் பெறாத சமூகக் குழுக்கள் அவற்றைப் பெறுவதன் மூலம் தங்களின் இருப்பை உணரத் தொடங்குவார்கள். இந்த இயக்கப்போக்கைப் புரிந்து கொள்ளாத நிலையில் – இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஏற்படும் முரண்பாடுகளே சாதிக்கலவரங்களாக உருப்பெறுகின்றன. இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற அரசுகள் பல வழிகளைப் பின்பற்ற வேண்டும். போதித்துப் புரிய வைப்பதில் தொடங்கி அச்சமூட்டிப் பணிய வைப்பதுவரை அத்தனை வழிகளையும் பின்பற்றினால் தான் ஜனநாயகத்தின் பரிமாணத்தை – சட்டத்தின் ஆட்சியைப் புரிய வைக்க முடியும். சொல்லிப் புரிய வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவே இல்லை என்பதுதான் மிகப் பெரிய துயரம். சொல்லிப் புரிய வைக்க வேண்டிய பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களே சாதீயத் தீயை மூட்டும் வேலையைச் செய்யும் பல தருணங்களை நேரில் கண்டிருக்கிறேன். அச்சமூட்டி அடக்க வேண்டிய காவல்துறையும் கூடச் சாதீயப் பிளவுகளால் கனன்று கொண்டிருப்பதும் நிதர்சனமான உண்மை.
கல்வி அறிவின் வழியாக இந்திய ஜனநாயகத்தைப் புரிந்து கொண்டு மாறியிருக்க வேண்டிய கல்வி நிறுவனங்களே கலவர பூமிகளாக ஆகி வருகின்றன. குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் கலவரத்தின் – சாதி மோதலின் உச்சக் கட்டத்தைப் பல ஆண்டுகளில் பல முறை சந்தித்துள்ளன. ஆம். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் கும்பல் கும்பலாக வன்முறையில் ஈடுபடுவது இது முதன் முறையல்ல. இந்த முறை ஏற்பட்ட அடிதடிகள், காயங்களை விடப் பலமடங்குக் கூடுதலான காயங்களும் அடிதடிகளும் இதற்கு முன்பும் பல முறை ஏற்பட்டுள்ளன. சென்னை சட்டக் கல்லூரி என்றில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல சட்டக் கல்லூரிகளிலும் இதுதான் நிலைமை. பல ஊர்களில் செயல்படும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளும் கூட இதற்கு விலக்கல்ல. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும். இதன் காரணங்களைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும், சட்டக் கல்லூரிகளுக்கும் படிப்பதற்காக வரும் மாணாக்கர்களின் சாதிப் பின்புலம் சார்ந்த புள்ளி விவரங்களுக்குள் செல்ல வேண்டும்.
பல தலைமுறைகளாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் முன்னேறிய சாதியினர் தங்களின் உயர்கல்வியைத் தரமான தனியார் கல்லூரிகளில்– குறிப்பாகத் தொழில் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கிப் பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டன. இன்று தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களின் மொழி மற்றும் சமூக அறிவியல் துறைகளின் பட்ட மேற்படிப்பில் சேர முற்பட்ட வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிப்பதே இல்லை. சென்னைப் பல்கலைக்கழகம் விதிவிலக்காக இருக்கலாம். பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களும் , மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் அட்டவணைச் சாதியினரும் மட்டும் தான் விண்ணப்பிக்கின்றனர். அரசுக் கல்லூரிகளில் பட்டப் படிப்பில் சேர வருபவர்களின் புள்ளிவிவரங்களும் இதைத் தான் காட்டுகின்றன. தமிழ் நாட்டின் சட்டக்கல்லூரிகள் அனைத்துமே அரசுக் கல்லூரிகளாக உள்ளன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
வழக்குரைஞர்களாக ஆவதற்குச் சட்டக்கல்வி அவசியம் என்பதைவிட அரசியல்வாதிகளாவதற்குச் சட்டக் கல்லூரியின் நுழைவு தேவை என்பதான நம்பிக்கை 1970-கள் தொடங்கி இருந்து வரும் ஒன்று. சட்டம் படித்தவர்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்குப் பதிலாகச் சட்டத்தை வளைப்பதற்குப் பழகிக் கொள்வதன் மூலம் தேர்தல் அரசியலில் அதிகாரத்தை நெருங்கி விட முடியும் என நம்பினார்கள். இன்று அந்த நம்பிக்கையும் கூடப் பொய்த்து விட்டது. அரசு தரும் உதவியைப் பெறும் நோக்கத்தோடு அரசுக் கலைக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேர்கிறார்கள். அப்படிச் சேர்கிறவர்களின் எண்ணிக்கையைக் கவனித்தால் பெரும் பாலும் மிகப் பிற்பட்ட சாதி மற்றும் பட்டியல் இன மாணாக்கர்களே அதிகம் என்பது புரிய வரலாம். இன்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இரண்டு பெரிய குழுக்கள் எதிரும் புதிருமாகத் தங்களை நிறுத்திக் கொண்டு யுத்தங்களை நடத்திக் கொண்டே வருகின்றனர். ஆதி திராவிடர்கள், பட்டியல் இனத்தவர் என தலித் சாதிகள் அடையாளப் படுத்தப் பட்டு ஒற்றைக் குழுவாக ஆக்கி ஒதுக்கப்படுவதற்கு எதிராகத் தேவர்கள் அல்லது முக்குலத்தோர் என்ற அடையாளத்துடன் ஒற்றைக்குழுவாகக் கள்ளர், மறவர், அகம்படியர் ஆகியோர் ஒன்றிணைந்து ஒரே குழுவாக அடையாளம் காட்டுகின்றனர்.
பட்டியல் இனத்தவர்களும் , மிகப் பிற்பட்டவர்கள் என்ற பிரிவினரும் கிராமஞ்சார்ந்த பொருளாதார நிலையில் அடுத்தடுத்த அடுக்கில் இருப்பவர்கள். ஆனால் சமூக வெளியில் அடக்குபவர்களாக மிகப் பிற்படுத்தப் பட்ட சாதியினரும், அடங்கிப் போக வேண்டியவர்களாக பட்டியல் இனத்தவரும் இருப்பதாக இன்னும் நம்புகின்றனர். கிராம வெளியில் இந்த நம்பிக்கை கேள்விக்குள்ளாவதற்குக் கல்விச் சாலைகளில் தரப்படும் கல்வி உதவித்தொகைகள் மற்றும் சலுகைகள் தான் காரணம் என நம்பப்படுகிறது. தாங்களும் அத்தகைய சலுகைகள் கிடைத்ததால் தான் உயர்கல்வியைப் பெற முடிகிறது என்பதை மறந்து விட்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைப்பதாக நம்பும் அவர்கள் அதைக் குறி வைத்துத் தாக்கும் வாதங்கள் இன்று கல்லூரி வளாகங்களில் தொடர்ச்சியாகக் கேட்கும் ஒன்றாக இருக்கிறது.
நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட மனிதர்கள் தங்களின் விடுதலையை முன் வைத்துப் புதிய அடையாளங்களையும் குறியீடுகளையும் உண்டாக்குவது புரிந்து கொள்ளப் பட வேண்டிய ஒன்று. கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வியின் உச்சபட்சங்களைத் தொட்டதோடு, சுதந்திர இந்தியாவிற்கே அரசியல் சட்டத்தை எழுதித் தந்த டாக்டர் அம்பேத்கர் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடாக ஆகி இருக்கிறார்.அவரது சிலைகள் சேரிகள் தோறும் நிறுவப்படுகின்றன. சேரிகள் தோறும் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டதின் எதிரொலியாகப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைகள் தென்மாவட்டக் கிராமங்களில் நிறுவப்பட்டன என்பது அண்மைக்கால நிகழ்வு. அதன் தொடர்ச்சியாக வ.உ.சி. சிலையைப் பிள்ளைமார்களும், திருமலை நாயக்கர் சிலையை நாயுடுகளும், வீரன் அழகு முத்துக்கோன் சிலையை யாதவர்களும், நேசமணியின் சிலையை நாடார்களும், தங்களின் சாதிகளுக்கான குறியீடுகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் கூட அண்மைக்கால நிகழ்வுகள் தான். குறியீடுகள் நிறுவப்படுவதும், அவை சிதைக்கப்படுவதும் கூட வன்முறைக்கான பின்புலங்களாக மாறியதும் அந்த வரலாற்றின் தொடர்ச்சி தான். தென் மாவட்டக்கிராமங்களில் இன்று தேவர் சிலைகளும் அம்பேத்கர் சிலைகளும் கூண்டு கட்டிப் பாதுகாக்கப்படுகின்றன.
ஆதிக்க சாதிகளின் அடையாளங்களை – குறியீடுகளை- பொது அடையாளங்களாகத் தாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது போலத் தங்களின் குறியீடுகளையும் பொது அடையாளமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பது எப்படித் தவறாக இருக்க முடியும்.? ஆனால் அவர்களது அடையாளங்களும் குறியீடுகளும் எப்போதும் கேள்விக்குறியாகி வருகின்றன. ராணி மங்கம்மாள், காயிதே மில்லத், பசும்பொன் தேவர் முதலான பெயர்கள் மாவட்டங்களுக்குப் பெயரான போது எதிர்ப்புகள் எழவில்லை; கட்டபொம்மன், நேசமணி, தீரன் சின்னமலை எனப் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் குறியீடுகள் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பெயரான போதும் எதிர்ப்புகள் எழுந்ததில்லை. ஆனால் வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் ஒரு போக்குவரத்துக் கழகத்தின் பெயரான போது ஏற்பட்ட எதிர்ப்புகளின் விளைவே சென்ற நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் ஏற்பட்ட தென்மாவட்டக் கலவரங்கள் என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. சுந்தரலிங்கத்தின் பெயர் சூட்டிய பேருந்தில் ஏற மறுத்ததன் இன்னொரு வடிவம் தான் கல்லூரியின் பெயரான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்ற பெயரை அச்சிட மறுப்பதும் கூட.
தமிழ்நாட்டுக் கிராமங்களில் நீறுபூத்த நெருப்புக்களாக –நள்ளிரவு வெக்கையாகத் தொடரும் சாதீய மோதல்கள் கல்லூரி வளாகங்களுக்குள்ளும் நீள்கின்றன என்பதைச் சட்டக் கல்லூரிகள் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகின்றன. கிராமங்களில் பொது வெளியின் மீது ஆதிக்க சாதிகள் கோரும் உரிமையின் நீட்சியே கல்வி வளாகங்களிலும் தொடர்கிறது. இவற்றைத் தடுத்து நிறுத்தும் சாத்தியங்கள் ஏதேனும் உண்டா? என்று சிந்தித்தாக வேண்டும். அச்சிந்தனையின் விளைவாகப் பெரும் மாற்றங்களை உருவாக்கி ஆக வேண்டும். வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் சமூக அடுக்குகளில் நிலவும் ஆதிக்க உணர்வும், அதிகாரப் படிநிலைகளும் புரிந்து கொள்ளப் படும் வாய்ப்புகள் உண்டு. அத்தகைய புரிதலின் வழியாகவே எல்லாம் மாறி விடும்; சரியாகி விடும் என்றெல்லாம் விட்டு விட முடியாது. அத்தகைய கருத்தோட்டத்தோடு அரசுத்துறை நிறுவனங்கள் வாளா இருந்ததின் காரணமாகவே இந்திய சமூகம் கோரமான எதிர்விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்த எதிர் விளைவுகள் ஏற்படக் காரணம் என்ன ? என்ற கேள்விக்குப் பலரும் சொல்லும் காரணங்கள் கல்விக் கூடங்கள் அரசியல் மயமாகி விட்டன என்பதாக இருக்கிறது. அப்படிச் சொல்பவர்கள் அரசியல் என்பதை ஓட்டு வாங்கி வெற்றி பெற்று சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகி தங்கள் சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் நபர்களின் செயல்பாடுகளை அரசியல் செயல்பாடாகக் கருதுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரு முறை வெற்றி பெற்ற அரசியல் கட்சி அல்லது உறுப்பினர் தொடர்ந்து வெற்றி பெறத் தேவையான பணம் அல்லது உணர்ச்சியூட்டப்பட்ட கும்பலைத் தக்க வைத்துக் கொள்வதில் ஈடுபடுவது சரியான அரசியலாக ஆகாது.
என்னைக் கேட்டால் நமது கல்வி வளாகங்கள் அரசியல் மயமாக ஆகவில்லை என்பதுதான் உண்மை. இங்கே நடந்து முடிந்துள்ள அரசியலாக்கம் என்பது திசை திருப்பப் பட்ட அரசியலாக்கம் மட்டுமே. கல்வி நிறுவனங்களில் செயல்பாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று விவாதித்து முடிவு எடுக்கும் நடைமுறைகள் எப்போதும் பின் பற்றப்படுவதில்லை. இருக்கின்ற அமைப்புகளிலும் கூட அதிகார மையத்தை அனுசரித்துப் போகும் நபர்களை அமர வைத்துக் காரியம் சாதிக்கும் போக்கே நிலவுகிறது. அதற்குப் பதிலாக அதிகம் பாதிக்கப்பட்டோருக்கு அதிக வாய்ப்பு என்பதான ஜனநாயகத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு ஓர் அமைப்பில் இருக்கும் படிநிலை வேறுபாடுகளுக்கேற்ப பிரதிநிதித்துவத்தை வழங்குதல், நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்தல், முறைப்படியான பங்கேற்புகள், அறிவு பூர்வமான விவாதங்கள் நடைபெறச் செய்தல், பொதுநன்மைக்குக் குந்தகம் ஏற்படாமல் பாதுகாத்தல் போன்றனவற்றை உள்ளடக்கிய அரசியல் இங்கு அறிமுகப் படுத்தப்பட வேண்டும். அப்படியான அரசியலுக்குரியவர்களாக ஆக்குகிற வேலையைக் கல்வி நிறுவனப் பொறுப்பாளர்கள் செய்யாத போது மாணாக்கர்கள் திசை திருப்பப்படும் வாய்ப்புக்கள் நேரத்தான் செய்யும். நமது கல்லூரிகளில் நடந்துள்ள அரசியலாக்கங்களும் மோதல்களும் அதைத் தான் உறுதி செய்கின்றன.
மனித உயிர்களைத் துச்சமென மதிக்கும் ஆணவத்தைத் தனக்குள் கொண்ட சாதி மனிதர்களின் கூடாரங்களாக நமது கிராமங்கள் மட்டும் அல்ல கல்விக் கூடங்களும் அசைந்து கொண்டிருக்கின்றன. இதை நமது அரசுகளும் அறிவுஜீவிகளும், தன்னலம் தவிர பிறர்நிலையைச் சிறிதும் பார்க்க விரும்பாத நடுத்தர வர்க்கமும் எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை. இந்த தேசத்திற்கு ஆபத்தைத் தரும் பிரச்சினைகள் அவ்வப்போது தோன்றும் சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, மின்சாரப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, தேர்தல் கொண்டாட்டங்கள் போன்றன மட்டும் தான் என அவை கருதிக் கொண்டிருக்கின்றன. நிச்சயம் இவை எல்லாவற்றையும் விட ஆபத்தான பிரச்சினை தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சாதி வேறுபாடுகள் என்பதை உணர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா.

உயிர்மை