கிராமங்களுக்குத் திரும்புதல் -ஒரு பரிசீலனை


சுற்றம் சூழ வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அந்த அழைப்பிதழை மிக்க மகிழ்ச்சியோடு கொடுத்தார் அந்த நண்பர். அவரது சொந்தக் கிராமத்தில் நடக்கப் போகும் வைபவத்தில் உறவினர்களையும் நண்பர்களையும் பங்கேற்கச் செய்ய எடுத்துக் கொள்ளும் முயற்சி அலாதியானதாக இருந்தது. என்னைக் கட்டாயம் வரவேண்டும் என்று அழைத்தார்.

அழைப்பிதழ் கொடுக்க வந்த போது பலவற்றைப் பேசினோம். அவரது பேச்சு. கிராமத்தின் சிதைவு, விவசாயம் அழிந்து கொண்டிருப்பது பற்றியெல்லாம் இருந்தது. வெளிச்சம் வேண்டி மின்சாரத்தைக் கிராமத்திற்குக் கொண்டு போனதின் விளைவு நிலத்தடி நீரும் பாரம்பரியமான விவசாயமும் காணாமல் போய் விட்டது என்று அக்கறைப் பட்டார்; போடப்பட்ட உரங்களும் அடித்த பூச்சிக் கொல்லிகளும் மனித வாழ்வுக்கே எதிராகிப் போனது இந்தியக் கிராமங்களின் சோகவரலாறு. குளங்களும் கண்மாய்களும் தூர்ந்துவிட்டன. நானும் அவரைப் போலவே ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்தவன் . இந்த வருத்தங்கள் எல்லாம் எனக்கும் உண்டு; பகிர்ந்து கொண்டோம்.

நமது வாழ்க்கை கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும் என்று விரும்பு வதாகவும்,அதன் அடையாள மாகவே தனது மகன் திருமணத்தைக் கிராமத்தில் நடத்துவதாகவும் சொன்னார்அவரது ஆதங்கமும் செயல்பாடுகளும் இயந்திரமய வாழ்க்கைக்கு எதிராக மண்சார்ந்த வாழ்க்கையை நாடும்-வேர்களைத் தேடும் - ஒன்றின் அடையாளமாக எனக்குப் பட்டது. பொதுவாகத் திருமண விழாக்களில் பங்கேற்பதில் விருப்பம் இல்லை என்றாலும் வருவதாகச் சொன்னேன். கலந்து கொண்டேன்.

தெரு அடைக்கப்பந்தல் போட்டு விமரிசையாக நடந்தது. கிராமத்துக்காரன் என்பதால் எனக்கு ஒன்றும் புதிதாகத் தெரியவில்லை. சில நகரவாசிகள் திருமண மண்டபங்களில் உள்ள வசதிகள் இல்லையென்று வருத்தப் பட்டார்கள். என்றாலும் கிராமம் தரும் சுதந்திர வெளியில் கட்டுப்பாடுகளற்ற மனிதர்களாகக் குடித்து மகிழ்வதும் அதுவே நமது பண்பாட்டின் பகுதிதான் எனக் கருதிக் கொள்வதும் அவர்களுக்கு விரும்பத்தக்கதாகவே இருந்திருக்க வேண்டும்.

இந்த மனநிலைக்காகவே கூட நகரத்தில் குடியேறி விட்ட கிராமவாசிகளுக்கு கிராமியப் பண்பாடு பிடிக்கக் கூடும்.ஆனால் கிராமம் என்பது வந்து போகும் ஒருநாள் வாழ்க்கையும் நினைவுகளும் மட்டும் அல்ல என்பது அந்தக் கிராமத்திலேயே இருப்பவர்களுக்குத் தான் தெரியும்.

திருமணம் முடிந்து பந்தி தொடங்கியது. பந்தலுக்கு உள்ளே ஒரு பந்தியும், பந்தலுக்கு வெளியே ஒரு பந்தியும் என இரண்டு விதமான பந்திகள். உள்ளே உறவினர்களும் நண்பர்களும். வெளியே நடந்த பந்தியில் பணியாளர்கள். நண்பரின் குடும்பத்திற்குரிய வயல்வேலை, வீட்டுவேலை, எனப் பலவிதப் பணிகளைச் செய்யும் பணியாளர்களும் அந்தக் கிராமத்தின் தெருச்சுத்தம்( அருந்ததியர்), ஆடைச் சுத்தம் (வண்ணார்), முகச்சுத்தம் ( நாவிதர்) மயான வேலை (பறையர்) எனப் பல பணிகளைச் செய்த சேவைக் குழுக்களின் குடும்பங்களும் மகிழ்ச்சியாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர். நண்பர் உள்பந்தியைக் கவனித்துக் கொண்ட அதே அக்கறைகளுடன் வெளிப்பந்தியையும் கவனித்துக் கொண்டார். உறவினர்கள் மொய் எழுதிவிட்டுப் போனார்கள்; நண்பர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். தாம்பூலப்பைகளைக் கொடுத்து அனுப்பினார் நண்பர். 
 
பெருமையும் குற்றவுணர்வும்

வெளிப்பந்தியில் சாப்பிட்டவர்களும் வரிசையாக வந்தார்கள். மொய் எழுத வில்லை; பரிசுப் பொருட்களும் கொடுக்கவில்லை. அது வழக்கம் இல்லை என்றாலும் நண்பர் கூடுதல் சந்தோசத்துடன் அவர்களுக்கும் தாம்பூலப் பையையும் சிலருக்கு வேட்டி சேலைகளையும் கொடுத்து அனுப்பினார். வாயாரவும் மனதாரவும் அவர்கள் வாழ்த்தினார்கள். என்னிடம் நண்பர் சொன்னார். இவர்களின் இந்த வாழ்த்திற் காகத் தான் எனது மகனின் திருமணத்தை இங்கே வைத்தேன் என்றார். அவரிடம் வெளிப்பட்ட உணர்வு பெருமிதம். அந்தப் பெருமிதம் எனக்கு ஏற்புடையதாக இல்லை; அதிர்ச்சியாக இருந்தது.

தன்னையொத்த மனிதர்களை வெளியில் உட்காரவைத்துத் தனிப் பந்தியில் உணவு வழங்குவது எந்தவிதக் குற்றவுணர்வையும் உண்டாக்கவில்லை என்பதுதான் எனது அதிர்ச்சிக்குக் காரணம்.கிராமத்திலேயே வாழ்ந்து இப்பழக்க மெல்லாம் இயல்பானது எனவும், இத்தகைய நடைமுறைகளை நிறைவேற்று வதற்கே நாங்கள் இருக்கிறோம் என நம்பும் எனது உறவினர்களின் வீடுகளில் இத்தகைய நடைமுறைகளைப் பார்த்தவன் தான் நான். அவர் களிடம் இதையெல்லாம் மாற்றவேண்டும் என விவாதித்த பொழுது அதை யெல்லாம் நீயிருக்கும் நகரத்தில் வைத்துக் கொள்; இங்கெல்லாம் அவர்களே அதற்குத் தயாராக இல்லை எனச் சொன்ன போது அரைமனதாக ஒத்துக் கொண்டு திரும்பி நகரவாசியாக ஆகிவிட்டவன் நான். 

அப்பொழுதெல்லாம் தோன்றாத அதிர்ச்சி எனக்கு இப்பொழுது உண்டானது. அதற்குக் காரணம் நண்பரிடம் வெளிப்பட்ட சிந்தனைத் தெளிவு தான். சமூக மாற்றத்தில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார் என்பதை அவரது பேச்சு எப்போதும் உறுதி செய்யக் கூடியது. வேர்களைத் தேடும் கருத்தியலில் அவருக்கிருந்த பிடிமானம் பலரையும் ஈர்க்கக் கூடிய ஒன்று.திருமண நிகழ்ச்சியில் அந்தணர்களையும் அக்னிசாட்சி யையும் ஒதுக்கிவிட வேண்டும் எனக் கருதிய அவரது பகுத்தறிவுச் சிந்தனை எளிதில் புரியக் கூடிய ஒன்று. உடல் உழைப்பைக் கீழானதாகக் கருதும் அந்தணர்கள் தங்கள் நலனை உறுதிசெய்யக் கண்டு பிடித்த தந்திரங்களே இந்தச் சடங்குகள் என்று அவர் நம்பியது தவறான கருத்து எனச் சொல்ல முடியாது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தணர்களை விலக்கி விட வேண்டும் என்று முடிவு எடுத்த அவருக்கு இரட்டைப் பந்தி முறை தொடர்வது தவறு எனத் தோன்றவில்லை.

நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மொய்ப்பணமும் பரிசுப் பொருட் களையும் பெற்றுக் கொண்ட நண்பருக்கு வெளியில் உட்கார்ந்து சாப்பிட்டவர் களிடம் எதையும் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்¢லை. அதற்குப் பதிலாக அவர்களுக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.

இவர் கொடுப்பதும், பெற்றுக் கொண்ட அவர்கள் அவரை- அவரது மகனை-குடும்பத்தை வாழ்த்துவதும் பரஸ்பர அன்பின் வெளிப்பாடு என்று அவர் கருதியிருக்கக் கூடும். இதில் அவர் சிலாகித்துப் போற்றும் மண்சார் -கிராமியப் பண்பாட்டின் உன்னத அடையாளங்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் கிராமிய மனித உறவுகளும் வெளிப்படுவதாக அவர் நம்பியது தூக்கலாகவே தெரிந்தது. உள்பந்தியையும் வெளிப் பந்தியையும் ஒன்று போல் பாவித்த தனது நிலைபாட்டைச் சிறந்த மனிதநேய வெளிப்பாடாகக் அவர் கருதிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இதை அப்படி மட்டுமே புரிந்து கொள்ள முடியுமா..? என்று எனக்குள் தொடர்ந்து கேள்வி எழும்பிக் கொண்டே இருக்கிறது. அவர் காட்டிய அன்பும் அவர்களின் வாழ்த்தும் பரஸ்பர மனிதநேயம் சார்ந்த மனநிலையின் வெளிப்பாடு களாகத் தோன்றவில்லை. ‘தான் மேலே இருப்பவன்’ என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக அவர் இருக்க, ‘ஆம், அவர் உயர்வானவர்; அவரிடமிருந்து பெற்றுக் கொள்வது எனது இருப்பின் வெளிப்பாடு’ எனப் பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையுமே அதில் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

அந்த உறவு சமநிலை சார்ந்த அன்பின் வெளிப்பாடுகள் அல்ல; கருணை சார்ந்த ஆதிக்கத்தின் வெளிப்பாடு. மேல் -கீழ் என்று அடுக்கி வைக்கப் பட்டிருப்பதாக நம்பச் செய்து விட்ட இந்தியச் சாதியக் கருத்தியலின் அடையாளம். இந்த மனோபாவத்தைப் பிராமணீய மனோபாவம் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் பிராமணீய மனநிலை எப்பொழுதும் ஒதுக்கும் அல்லது ஒதுங்கிக் கொள்ளும். ஆனால் இங்கே ஒதுக்குதலும் இல்லை; ஒதுங்குதலும் இல்லை. தனது ஆதிக்கத்தையும் கருணையையும் வெளிப் படுத்தத் தனக்குக் கீழே ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்ள விரும்புகிறது இந்த மனநிலை. தனக்குக் கைகட்டிச் சேவகம் பண்ணும் கூட்டத்திற்குக் கருணையின் வெளிப்பாடாகப் பொருட்களைத் தர விரும்புகிறது. தனக்கு ஆலோசனை சொன்ன புரோகிதர்களுக்கும், சோதிடம், சாஸ்திரம், கலை எனச் செயல்பட்ட பிராமணர்கள், வள்ளுவர்கள், தேவதாசிகள் போன்றவர்களுக்கும் பொருட்களைக் கொடுத்து ஆதரித்துத் தங்கள் பெருமைகளைக் காத்துக் நிலமானிய மரபின் நீட்சி இதில் இருப்பதாகப் பட்டது.
தங்களுக்கு ஆலோசனை சொன்ன பிராமணர்கள் சதிகாரர்கள்; சுயநலவாதிகள்; ஆதிக்கக் கருத்தியல் கொண்டவர்கள் எனத் தூற்றி அவர்களை மட்டும் கிராமவாழ்விலிருந்து ஒதுக்கிவிட்டுப் பழைய படி தங்களின் ஆதிக்கம் தொடர வேண்டும் என விரும்பும் எண்ணங்களின் வெளிப்பாடாகவும் தோன்றியது அந்தத் திருமணக்காட்சி. இந்தக் காட்சிகள் தொடரும் கிராமத்திற்குத் திரும்புதல் எனக்குச் சாத்தியமில்லை என்றே நகரத்திற்குத் திரும்பினேன்.

கருத்துகள்

தென்றல் இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயா,

உங்கள் நண்பர் எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.

தங்கள் "நண்பரின் மனநிலை" இங்குள்ள பெரும்பாலனவர்களின் எண்ணங்களையே பிரதிபலிக்கிறது.
ஒரு வேளை.. திருமண வைபவம் என்பதால்கூட உங்கள் நண்பர் அவ்வாறு திட்டமிட்டு இருந்திருக்கலாம்.

/இந்தக் காட்சிகள் தொடரும் கிராமத்திற்குத் திரும்புதல் எனக்குச் சாத்தியமில்லை என்றே நகரத்திற்குத் திரும்பினேன்./

கிராமத்திலாவது அப்படி ஒரு முயற்சி சாத்தியம். நகரங்களில் .....?!!
அரவிந்தன் நீலகண்டன் இவ்வாறு கூறியுள்ளார்…
//திருமண நிகழ்ச்சியில் அந்தணர்களையும் அக்னிசாட்சி யையும் ஒதுக்கிவிட வேண்டும் எனக்
கருதிய அவரது பகுத்தறிவுச் சிந்தனை எளிதில் புரியக் கூடிய ஒன்று. உடல் உழைப்பைக்
கீழானதாகக் கருதும் அந்தணர்கள் தங்கள் நலனை உறுதிசெய்யக் கண்டு பிடித்த தந்திரங்களே இந்தச் சடங்குகள் என்று அவர் நம்பியது தவறான கருத்து எனச் சொல்ல முடியாது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தணர்களை விலக்கி விட வேண்டும் என்று முடிவு எடுத்த அவருக்கு இரட்டைப் பந்தி முறை தொடர்வது தவறு எனத் தோன்றவில்லை.//

அய்யா, அந்தணர்களையும் அக்கினி சாட்சியையும் ஒதுக்குவது என்பதும் தன்னுடைய மரபில் ஒரு பகுதியை இழப்பதுதான். சமுதாய தளங்கள் உருவானதென்பது பொதுவாக சமுதாய-பொருளாதார-அரசியல் காரணிகளால் சமயக் கோட்பாட்டினால் அல்ல. சமயக்கோட்பாட்டினை சமுதாய அடுக்குகளுக்கு காரணமாக சொல்லும் essentialist பார்வை மிஷினரிகளால் வைக்கப்பட்டது. திராவிட இயக்கத்தினரால் பகுத்தறிவின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உங்கள் நண்பரிடம் கேட்டுப்பாருங்கள் அந்தணர்கள் ஆரியர்கள் என்பார். இனவாதக்கோட்பாடு சமூகவியலால் தூக்கி எறியப்பட்டு குப்பைக்கூடையை போய் சேர்ந்த essentialist கோட்பாடு போன்றவற்றால் உருவான ஒரு காலவதி கதையாடலைக் கொண்டு வேர்களைத் தேடுகிறேன் பேர்வழி என்றால் இப்படித்தான். சாதியத்தை ஒழிக்க இத்தகைய வேர்தேடல்களால் முடியாது. இரண்டாவதாக நீங்கள் கூறுவது போல கிராமங்கள் அப்படி ஒன்றும் மாற்றமுடியாத அடக்குமுறையின் இருண்ட வெளிகள் அல்ல. உங்களைப் போன்றவர்கள் அல்லது உங்கள் நண்பர்களைப் போன்றவர்கள் முழுமையான பார்வையுடனும் புரிதலுடனும் முயன்றால் நம் மரபிலிருந்தே தரவுகளைக் கொண்டு சாதியக்கொடுமைகளும் சாதியமும் அற்ற சமுதாயத்தை கிராமங்களில் உருவாக்கலாம். ஆனால் எல்லா பழியையும் "பார்ப்பனியத்தின்" மீது போடும் வெறுப்பியல் வேர் தேடலால் அது இயலாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்