July 20, 2008

பயணிகள் கவனிக்கவும் . . . . . .

மனமும் கண்களும் ஒன்று படும் நேரங்கள் மிகக் குறைவு. நண்பரின் வருகைக்காக ரயில் நிலையத்தின் இருக்கையில் அமர்ந்து கைவசம் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். மனம் படிக்க விரும்பினாலும் கண்கள் காட்சிகளில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திருநெல் வேலி தொடர்வண்டிச் சந்திப்பு மாலை ஆறுமணி தொடங்கி ஒன்பது மணி வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

திருநெல்வேலி நகரம் மட்டும் அல்ல; தமிழ் நாட்டுப்¢ பெருநகரங்கள் பலவற்றின் ரயில் சந்திப்புகளில் மாலை நேரக் கூட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. வார நாட்களை விட வெள்ளி, சனி, ஞாயிறுகளில்¢ கூட்டம் சில மடங்கு கூடுதலாகவே இருக்கும். பயணத்தைத் தொடங்குகிற பயணிகளின் கூட்டத்தை விடப், பயணத்தைத் தொடங்கு கிறவர்களை வழி அனுப்பும் கூட்டம் தான் அதிகமாக இருக்கும். எப்போதும் ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கையைப் போல் இரண்டு மடங்கு எண்ணிக்கையில் வழி அனுப்புகிறவர்கள் இருப்பார்கள் என்பது எனது எண்ணம்.

நீண்ட தூரப் பயணங்களின் விருப்பம் இரவாகவே இருக்கின்றன. அதிலும் ரயில் பயணங்கள் இரவுப் பொழுதில் விரும்பத்தக்கனவாக இருக்கின்றன. மாலை தொடங்கி நீளும் முன்னிரவு நேரம் என்பது ரயில் பயணத்தைத் தொடங்கும் நேரமாக ஆக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போதே தூங்கும் வாய்ப்பும் கழிப்பறை வசதிகளும் கொண்ட ரயில் பயணங்கள் அவ்வாறு ஆனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

பயணிகளின் விருப்பம் காரணமாகப் பல ரயில்கள் - தலைநகர் சென்னையை நோக்கிச் செல்லும் ரயில்களும் சென்னையிலிருந்து தமிழக நகரங்களை நோக்கிக் கிளம்பும் ரயில்களும் மாலை தொடங்கி முன்னிரவில் தான் கிளம்புகின்றன. திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குக் கிளம்பும் நெல்லை -சென்னை விரைவு வண்டி, கன்னியாகுமரி- சென்னை விரைவுவண்டி, அனந்தபுரி விரைவு வண்டி என மூன்று ரயில்களுமே மாலை ஆறரை தொடங்கி எட்டு மணிக்குள் சென்று விடும். வாரம் ஒரு முறை செல்லும் நாகர்கோவில் சிறப்பு ரயிலும் ஒன்பது மணிக்குக் கிளம்பி விடும். நெல்லைக்கு வருகிறவர்களை வரவேற்கவும், சென்னைக்குச் செல்பவர்களை வழி அனுப்பவும் என இன்னொரு கூட்டம் ரயில் நிலையத்தின் கலகலப்பைக் குறைய விடாது.
நண்பர் வருவதாகச் சொன்ன ரயில் திருநெல்வேலிக்கு எட்டு மணிவாக்கில் வந்து சேரும். திருவனந்த புரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் அனந்தபுரி விரைவு வண்டியும் குருவாயூரை நோக்கிச் செல்லும் சென்னை- குருவாயூர் விரைவு வண்டியும் சந்தித்து விலகிக் கொள்ளும் சந்திப்பு நிலையம் திருநெல்வேலி.
எனது நண்பர் இரவுப் பயணத்தைத் தவிர்த்து விட்டுப் பகல் பயணத்தைத் தேர்வு செய்திருந்தார். சென்னை- குருவாயூர் விரைவு வண்டியில் தான் நண்பரின் பயணம். நண்பர் இரவுப் பயணத்தைத் தவிர்த்து விட்டுப் பகல் பயணத்தைத் தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்களைக் கூறினார்.‘’ பேச வேண்டிய கூட்டம் சனிக்கிழமைக் காலை பத்து மணிக்குத் தொடங்கு கிறது. ரயில் தாமதம் என்று சொல்லிக் கூட்டத்திற்குத் தாமதமாகப் போவதை நான் விரும்பவில்லை’’ அவர் சொன்ன முதல் காரணம். இரவு முழுவதும் பயணம் செய்து காலையில் இறங்கிக் குளித்துப் பத்து மணிக்குள் தயாராகி விடலாம் என்றாலும் பயணக்களைப்பும் சோர்வும் பேச்சிலும் விவாதத்திலும் வெளிப்படுவதை எப்போதும் விரும்புவதில்லை என்றார்.
அவர் கலந்து கொள்ள வந்துள்ள கூட்டம் ஒரு தன்னார்வ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். நதிகளைக் காப்போம் என்னும் தலைப்பில் நடைபெற இருந்தது அந்தக் கூட்டம். நண்பர் திருநெல்வேலிக்கு- மதுரையைத் தாண்டித் தெற்கே தென் மாவட்டங்களின் எல்லைக்குள் இதுவரை நுழைந்ததில்லை , இதுதான் முதல் முறை என்று தொலைபேசியில் சொல்லியிருந்தார்.
அவருக்குத் தெரிந்த தென்மாவட்டங்கள் என்பது மடித்துக் கட்டப்பட்ட வேட்டி யும், கண்களில் ரத்தச் சிவப்போடு கையில் அரிவாளோடு திரியும் தமிழ் திரைப்படக் கதாபாத்திரங்கள் தான். இந்தத் தோற்றம் கொஞ்சம் அச்சமூட்டக் கூடியது என்றாலும், சொற்களை நீட்டிப் பேசும் இசைத் தன்மை கொண்ட வட்டார வழக்கு விருப்பமானது என்றும் சொன்னார். வந்து இறங்கிய வுடனேயே அல்வாக் கொடுத்து வரவேற்கலாம் என்று கருதி அல்வாப் பொட்டணத்துடன் மாலை ஆறுமணிக்கே நெல்லை சந்திப்புக்கு வந்துவிட்டேன்.
நெல்லையில் சென்னைக்குச் செல்லும் துறை சார்ந்த ஒருவரை வழியனுப்பி விட்டுக் குருவாயூர் வண்டி வரும் வரை காத்திருப்பதற்குத் தயாராகவே வந்திருந்தேன்.கையில் சமீபத்தில் வந்த நாவல் ஒன்று இருந்தது. காத்திருப்பது துயரமானது எனச் சொல்லப்பட்டாலும் எல்லா நேரமும் அப்படிப்பட்டதில்லை.
காத்திருப்பதைப் பயனுள்ளதாக ஆக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது. காத்திருக்கும் போது புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது மனிதர்களைப் படிக்கலாம்.நண்பரை வரவேற்பதற்காக நான் காத்திருந்த நாள் ஒரு வெள்ளிக் கிழமை. கூட்டத்திற்குக் குறைவில்லை. மனிதர்களின் வெவ்வேறு மனநிலை களைப் படிப்பதற்கும், உரையாடல்களைக் கேட்பதற்கும் பொருத்தமான இடம் ரயில் நிலையங்கள் என்றே சொல்வேன்.
மனித வாழ்வின் அத்தனை வகையான உணர்வுகளோடும், நோக்கங் களோடும் காத்திருந்து ரயிலேறும் பயணிகளும், வழியனும் சுற்றமும், நட்பும், வரவேற்கும் உறவுகளும், பணியாளர்களும் என மனித உணர்வுக்கலவையின் கொள்கலன் ரயில் என்பது எனது கணிப்பு.பகல் நேரத்துப் பயணத்திற்கு நண்பர் சொன்ன இரண்டாவது காரணம் எனக்கும் உடன்பாடானது . புதிய பயணங்களைப் பகல் நேரத்துப் பயணமாக அமைத்துக் கொள்வதையே நானும் செய்வேன்.
வழக்கமான பாதைகளில் செல்லும் பயணங்கள் என்றால் இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். ஒய்வை முதன்மையாகக் கருதுவதால் இரவுப் பயணமே அதற்கு ஏற்றது. புதிய இடங்களுக்கு, புதிய பாதைகளில், செல்லும் பயணங்கள் என்றால் பகல் நேரத்தில் பாசஞ்சர் வண்டிகளையே நான் விரும்புவேன். சென்னையிலிருந்து கிளம்பிய நண்பர் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு காலிப் பாட்டில்களைப் பாத்திரமாகக் கொண்டு வந்திருந்தார்.
அடுத்த நாள் பேச்சின் போது அந்தக் காலி பாட்டில்களை வரிசையாக வைத்து விட்டுப் பேச்சைத் தொடங்கினார். வரும் வழியில் தான் பார்த்த எல்லா நதிகளும் நீரின்றி வற்றிப் போய்க் கிடக்கிறது என்பதைப் பார்வை யாளர்களிடம் சித்திரமாகத் தீட்டிக் காட்டினார். ஓடைகளாக மாறிய ஆறுகளின் மணல் லாரிகளில் அள்ளப்பட்டுச் சாலைகளில் வரிசையாகச் செல்வதை நீங்கள் பார்த்ததில்லையா? என்று கேட்டுவிட்டு நிறுத்தினார்.
நதிகளைக் காப்பது என்பது லாரிகளில் செல்லும் மணல் பயணங்களைத் தடுப்பதில் முதன்மையாக இருக்கிறது என்று சொன்ன போது கூட்டம் மெதுவாக கைதட்டியது. சிறிய அமைதிக்குப் பின் வரிசையாக அடுக்கப் பட்டிருந்த பாட்டில்களின் வியாபாரப் பெயரை வாசித்து காட்டினார். பெண்ணை, அமராவதி, பாலாறு, காவிரி, வைகை, சிறுவாணி, சிற்றாறு, பரணி என நதிகளின் பெயரும் ஐந்தருவி, சுருளி அருவி என அருவிகளின் பெயரும் வியாபாரப் பெயராக மாறியிருந்தன.
தமிழ் நாட்டு நதிகளும் அருவிகளும் பாட்டிலில் அடைக்கப்பட்டு பாலின் விலையைக் காட்டிலும் கூடுதலாக விற்கப்படுகின்றன. உடல் நலம் பேணுவ தாகக் கருதி நடுத்தர வர்க்க மனிதர்கள் அரை லிட்டர் தண்ணீரை எட்டு ரூபாய் கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். அச்சமூட்டி வாங்கச் செய்து பழக்கப்படுத்தும் நுகர்வுக் கலாசாரத்திலிருந்து மனிதர்களை விடுவிக்காமல் எதனையும் காக்க முடியாது என்று பேசி முடித்த போது கையொலி பேரொலியாக மாறியது.
பயணிகள் வண்டி எண், புறப்படும் நேரம், இருக்கை எண் என்பனவற்றை மட்டும் கவனிப்பவர்களாக இருக்க வேண்டியதில்லை. உடன் வரும் பயணி யையும், விலகிச் செல்லும் கிராமங்களையும் சூடு கிளம்பும் புஞ்செய்க் காடு களையும்கானல் நீர் தகிக்கும் கரிசல் பூமிகளையும் கவனித்துக் கொள்ளலாம். அப்படிக் கவனிக்க ஏற்ற பயணம் பகல் நேரத்துப் பயணங்களே.
பகல் நேரத்துப் பாசஞ்சர் வண்டிப் பயணம் என்பது அறிதலின் திறவுகோல்.

சுதந்திரம் என்னும் பெருநெருப்பு

‘’ எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே ‘’என்று கவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளு தேசத்திற்கான விடுதலையை மையப்படுத்தியது என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை.
பாரதி இப்படிப் பாடிய போது இந்திய சுதந்திரம் உறுதியாகி இருக்கவில்லை. அவன் பாடிய அந்த ஆண்டிலோ அல்லது அதற்கடுத்த ஆண்டிலோ கூட இந்தியாவிற்கு விடுதலை கிடைத்து விட வில்லை. பாரதி மறைந்து (கவி பாரதி மறைந்தது 1921, செப்டம்பர் 21.) இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின்பு - 1947 ஆகஸ்டு 15. இல் தான் இந்திய தேசத்திற்கு ஆங்கிலேயர் களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின் சாத்தியமான ஒன்றை உறுதியாகி விட்டது என்று பாரதியார் சொன்னார்.
ஒருவேளை பாரதி தனது காலத்தில் இருந்த விடுதலைக்கான வேட்கையையும், போராட்டங்களின் வேகத்தையும் கண்டதால் அடிமை நிலை நீண்டகாலம் இருக்காது; சுதந்திரம் அடைவது வெகு சீக்கிரத்தில் நடக்கப் போகிறது எனக் கருதியதால் அப்படிப் பாடி இருக்கலாம். ஒரு படைப்பாளியை வாசகர்களுக்கு அல்லது பின் சந்ததியினருக்கு அறிமுகப் படுத்த விரும்பும் அவனது வாரிசுகள் அல்லது அபிமானிகள் அந்தப் படைப்பாளியின் சாராம்சமான குணம் எது எனக் கண்டு பிடித்து அதன் பொருட்டு அவனைக் கற்க வேண்டும் என வலியுறுத்துவதுண்டு. கவி பாரதியை எதன் பொருட்டுத் தமிழர்கள் கற்க வேண்டும் என வலியுறுத்தும் அவனது அபிமானிகள் முதன்மையாகச் சொல்வது தேசியக் கவி என்னும் சாராம்சத்தைத்தான் .
இந்திய விடுதலைப் போராட்டதையும் அதன் விளைவான நாட்டு விடுதலையையும் தான் பாரதியும் முதன்மையாகக் கருதினான் எனச் சொல்லுவதற்கு, ‘எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்ற அவனது வரிகளே சான்றுகள் தான். என்னைக் கேட்டால் பாரதிக்குத் தேசியக் கவி என்னும் அடையாளத்தை விடவும் சுதந்திரக் கவி என்னும் அடையாளமே முழுமையாகப் பொருந்தும் சாராம்சம் எனச் சொல்லுவேன். தேசியக் கவி என்னும் அடையாளமும் சுதந்திரக் கவி என்னும் அடையாளமும் வேறல்ல; இரண்டும் ஒன்று தான் ஒருவர் வாதிடலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. பாரதி நினைத்தது நாட்டின் விடுதலையை மட்டும் அல்ல. நாட்டின் விடுதலையோடு சேர்ந்து அவன் வேண்டிய விடுதலை பல.
ஆண்டான் என்றும் அடிமை என்றும் மக்களைப் பிரித்து வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சாதித்தளையிலிருந்து இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்பது பாரதியின் முதல் கனவு. பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை வேண்டும் என ஆசைப் பட்டதோடு ‘ விடுதலைக்கு மகளிரெல் லோரும் வேட்கை கொண்டனம்’ எனப் பெண்களின் பகுதியாக மாறிக் குரல் கொடுத்தவன் பாரதி.
மகளிர்விடுதலையையும் சுதந்திரத்தையும் முன் நிபந்தனையாக்கிய பாரதி ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்’ என்று சொன்னான். அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை எனப் பாரதி பேசிய அனைத்து விடுதலைகளும் தனி மனித விடுதலையை நோக்கியதே என்பதைப் பாரதியைச் சரியாகப் படிப்பவர்கள் உணரக்கூடும். சுதந்திரத்தின் குறியீடாகப் பாரதி சொன்னது சிட்டுக் குருவி.
விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போலத் திரியும் வாழ்க்கையை அவாவிய பாரதியின் மனம் தனிமனித சுதந்திரத்தையே உச்ச பட்ச விடுதலையாகக் கருதியது. இந்திய ஆன்மீகத்திலும், வேதாந்தக் கல்வியிலும் ஆழ்ந்த புலமை பெற்ற பாரதி கண்ணனைக் காதலனாகவும், அரசனாகவும், சேவகனாகவும், காதலியாகவும், குருவாகவும் சீடனாகவும் பாடியவன். எல்லாப் பொருளிலும், எல்லாப் பாத்திரத்திலும் அவனே இருக்கிறான் என்னும் அத்வைத வேதாந்தத்தின் மாற்று வடிவம் தான் கண்ணன் பாட்டு.
எல்லாப் பாத்திரங்களையும் தானே செய்யும் ஆசை கொண்ட நடிகரின் வெளிப்பாடு தசாவதாரம். கடவுளைக் காண விரும்பும் கவிஞனும், கடவுளாக ஆகவிரும்பும் நடிகனும் சந்திக்கும் புள்ளியாக இருப்பது நவீனத்துவம். நவீனத்துவம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் குழந்தை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முத்திற முன்மொழிதலைச் செய்த பிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகளைக் கவிதைகள் வழியாகவும், புதுச்சேரியின் நகரத்தெருக்களில் அலைந்த போது பிரெஞ்சுக்காரர்களின் நேரடித் தரிசனத்தின் மூலமும் தனிமனித சுதந்திரத்தை அறிந்து ரசித்தவன் பாரதி.சுதந்திரம் என்பதும், சுதந்திர உணர்வு என்பதும் ரசித்து மகிழும் உணர்வு என்பது இன்று பலருக்கும் புரியாமல் இருக்கிறது.
தங்களுக்கு வழங்கப் பட்ட சுதந்திரத்தை எப்படி அனுபவிப்பது என்று தெரியாமல் தனக்கு மேல் ஒரு அதிகாரம் வேண்டும் என்றே பலரும் நினைக்கின்றனர். தனது சுதந்திரம் என்பது தனது கடமையைச் சரியாகச் செய்வதில் இருக்கிறது என்பதை முதலில் மனிதர்கள் உணர வேண்டும்.சிறிய நிறுவனம் ஆனாலும், பெரிய நிர்வாகமானாலும் ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகளைச் சரியாகப் பங்கிட்டுக் கொள்வதிலும், அதை உரிய காலத்தில் நிறைவேற்று வதிலுமே சுதந்திரச் செயல்பாடு அடங்கி இருக்கிறது.
சுதந்திரம் என்ற சொல்லோடு தொடர்புடைய சுயாட்சி, தன்னாட்சி போன்ற சொற்கள் இந்திய விடுதலைக்குப் பின்பு அதிகமாகப் புழங்கிக் கொண்டிருக்கின்றன. மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்பது புகழ் பெற்ற வாசகம். தன்னாட்சிப் பொறுப்புடைய பொதுத்துறை நிறுவனங்கள், துறைத் தலைவர்கள், தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்வி நிறுவனங்கள் என்பன வெல்லாம் இங்கே சோதனை முயற்சிகளாகப் பரிசீலனை செய்யப் பட்டன என்றாலும், அவற்றின் பலன் முழுமையாக இல்லை என்பதே விடையாக இருக்கின்றன.
ஒரு கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டு தன்னாட்சி பெற்றதாக மாறுகிறது என்றால்,. நிர்வாகத்திற்குத் தரப்பட்ட சுதந்திரத்தை , அந்நிர்வாகம் தனது உறுப்பினர்களான ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், ஊழியர்கள் வரை நீட்டிக்கும் போது தான் தன்னாட்சியின் முழுப் பலன் கிடைக்கும்.
இங்கு நடப்பதோ நேர்மாறானதாக இருக்கிறது.அதிகாரம் கைமாறியதாக நினைத்துக் கொண்டு ஆசிரியர்களையும் மாணாக்கர்களையும் அச்சுறுத்து வதற்கும், கூடுதல் பணிகளைச் செய்வதற்கு வலியுறுத்துவதற்கும் தன்னாட்சிப் பொறுப்பைப் பயன்படுத்துகிறார்கள். அல்லது நிர்வாகத்தின் மதம் அல்லது சாதி அடையாளத்தை வலுப்படுத்தும் குறுகிய நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். பணிகளை ஒதுக்குவது தொடங்கிப் பாடத் திட்டங்களை உருவாக்குவதை வரை தன்னாட்சி முறை பாதுகாப்புக் கருவியாகி விடுகிறது.
தன்னாட்சிக் கல்லூரி என்பது ஒரு உதாரணம் மட்டும் தான். தன்னாட்சி நிர்வாக அமைப்புகளை கொண்ட அரசுக் கழகங்கள், வாரியங்கள், கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்தின் செயல்பாடுகளிலும் இந்தப் பிரச்சினைகள் கண்கூடாகத் தெரிகின்றன. இவைகளின் செயல்பாடுகள் எல்லாம் சேர்ந்து இந்திய ஜனநாயகத்தின் சாத்தியப் பாடுகளைக் கேள்விக் குறியாக்கி விடுகின்றன என்பதை மறுக்க முடியாது.
ஜனநாயகக் கடமை என்பது பொறுப்பை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல; நிறைவேற்றாத நபர்களைத் தட்டிக் கேட்பதிலும் தங்கி இருக்கிறது. கடமையைச் செய்யாத ஒருவர் சுதந்திரத்தை மட்டும் வேண்டும் போது பிரச்சினைகள் எழுவது தவிர்க்க இயலாதது. இருபுறமும் கூர்மைப் படுத்தப் பட்ட கத்தியை விடவும் ஆபத்தானது சுதந்திரம். சுதந்திரம் என்பது அக்கினிக் குஞ்சு. புரிந்து கொள்ளாதவர் கையில் அதுவே பெருநெருப்பாகி விடும்.

இவை நாடகங்கள். .. .. ..

‘உலகம் ஒரு நாடகமேடை; அதில் நாம் அனைவரும் நடிகர்கள்’ என்ற புகழ் பெற்ற வாசகத்தை ஒவ்வொருவரின் செவிகளும் பல தடவை கேட்டிருக்கிறது. நாடக மேதை ஷேக்ஸ்பியரின் நாடக மொன்றில் வரும் இந்த வாசகம் சொல்கிறவர்களின் கோணத்தில் பொருள் தரக் கூடிய வாசகம்.‘இறைவனால் இந்த உலகம் இயக்கம் கொள்கிறது’ என்று நம்ப வைக்க விரும்பும் சமயச் சொற்பொழிவாளர் கூட அந்த வாசகங்களை தனது சொற்பொழிவில் மேற்கோள் காட்டிப் பேசலாம் . அப்படிப் பேசும் போது ‘’ இறைவன் தான் அந்த நாடகத்தின் இயக்குநர்’’ என்ற துணை வாக்கியத்தையும் சேர்த்துக் கொள்வார் என்பது கூடுதலாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்வது மட்டுமல்ல; வாக்கியத்திலிருந்து ஒற்றைச் சொல்லை உருவி எடுத்துக் கூடத் தங்கள் போக்கில் மனிதர்கள் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். அதிலும் ‘நாடகம‘ என்ற சொல்லை நமது அரசியல் வாதிகள் பயன்படுத்தும் நிலையைப் பார்த்தால் நாடகக்கலையை நேசிக்கும் ஒரு கலைஞன் வருத்தப் படாமல் இருக்க முடியாது.‘’ அமெரிக்காவுடன் அணு உலை ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டினால் எங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வோம்’’ இடதுசாரிக் கட்சிகள் விடுக்கும் எச்சரிக்கை வாசகம் இது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைத் தொடங்கிய காலத்திலிருந்து நமது செய்தித்தாள்களில் தொடர்ந்து இடம் பெறும் வாசகமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த வாசகம் உண்மையில் அரசியல் வாசகமா? அல்லது அபத்த நாடகத்தின் உணர்ச்சியற்ற வசனமா ? இடதுசாரிகள் நாடகம் போடுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் சொல்லும் அளவிற்கு அந்த வாசகத்தைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியதின் விளைவு அது. அரசை வெளியிலிருந்து ஆதரிப்பதாகச் சொல்லும் இடதுசாரிகள், உண்மையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களா? அல்லது நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றுகிறார்களா? என்று சந்தேகம் வரும் அளவிற்கு அந்த வாசகத்தைப் பயன்படுத்தி விட்டார்கள்.அதனால் அவர்களது நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக மாறி விடும் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.
அரசியல் களத்தில் நம்பகத்தன்மையை இழப்பதும்,இழந்த நம்பகத் தன்மையை மீட்டெடுக்க வேறு ஒரு உத்தியைப் பயன்படுத்துவதும் தவிர்க்க முடியாதது. இங்கே நாடகம் என்ற சொல் நம்பகத்தன்மை இல்லாத ஒன்றாக நிற்கிறது.கர்நாடகத்தின் முதல்வராக இருக்கும் எத்தியூரப்பா முதலில் ஒருமுறை 14 நாட்கள் முதல்வராக இருந்து பதவியை இழந்தார். அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அவசரமாக எடுத்த முடிவின் விளைவு அது. பதவி இழந்த அடுத்த கணம் கர்நாடக மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஒகேனக்கல் பிரச்சினைக் கையிலெடுத்துப் போராட்டக் களத்தில் குதித்தார். அப்போதும் பத்திரிகைகளும் அவரை எதிர்ப்பவர்களும் இவை எல்லாம் நாடகம் என்றே குறிப்பிட்டன.
அங்கே நாடகம் என்ற சொல் திசை திருப்பும் ஒன்றைக் குறிக்கிறது.ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு விமரிசனங்களை முன் வைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் பாடுகள் பல நேரங்களில் திடீர் திருப்பங்கள் கொண்ட நாடகங்கள் என்றே வருணிக்கப்பட்டன.அக்கட்சி கூட்டணியி லிருந்து வெளியேற்றப் பட்ட போது துன்பியல் நாடகத்தின் சோக முடிவாகவே பத்திரிகைகளால் வருணிக்கப் பட்டது. அரசியல் தளத்தில் இயங்கும் கட்சிகள் என்றில்லை.
பொது வாழ்க்கையில் இயங்கும் பெரிய பெரிய அமைப்புகள் தனது உறுப்பினர்களைத் திசை திருப்புவதற்காகப் புதிய புதிய உத்திகளைக் கையாள்வதும் உண்டு. தனது தலைமையின் மீது அதிருப்திகள் தோன்றும் போது மாநாடுகளை நடத்துவதும், பாதயாத்திரைகளை மேற்கோள்வதும், உண்ணாவிரதம், மறியல் , போராட்டம் என இறங்குவதும் அரசியல் தலைவர்கள் மட்டுமே செய்வன அல்ல.
தொழிற்சங்கத் தலைவர்களும் சாதிச் சங்கத்தலைவர்களும் கூட இந்த உத்தியைப் பின்பற்றத்தான் செய்கிறார்கள்.பொது வெளியில் மட்டும் அல்ல குடும்ப வாழ்க்கையிலும் கூடக் கணவனும் மனைவியும் அப்படியான உத்திகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
பெற்றோர்களின் கவனத்தைத் திசை திருப்பிவிடப் பிள்ளைகளும், பிள்ளைகளை ஏமாற்றப் பெற்றோரும் பின் பற்றும் உத்திகள் சுவாரசியமானவை. அவை பல நேரங்களில் நேர்மறை விளைவுகளை உண்டாக்கக் கூடும். சில நேரங்களில் எதிர்மறை விளைவுகளைத் தரவும் கூடும். தனிநபர்களோ, அமைப்புக்களோ சரியான அர்த்தத்தில் முன் வைக்கும் நிகழ்வுகள் கேள்விக்கு உட்படுத்தப் படுவதில்லை.
ஒருவரை இன்னொருவர் ஏமாற்றுவதற்காக ஒரு காரியத்தைச் செய்யும் போது ‘நாடகம் போடுகிறான்’ என்ற சொல்லால் குறிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு கூட்டத்தை மொத்தமாகத் திசை திருப்புவது என்ற நோக்கத்திற்காகச் செய்யப்படும் ஒரு நிகழ்வைக் குறிக்கவும் நாடகம் என்று சொல்லையே விமரிசனச் சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள்.மோசமானது; திசை திருப்புவது; ஏமாற்றுவது; அற்பத்தனமானது என்பதான அர்த்தங்களில் நாடகம் என்ற சொல்லைப் பயன்படுத்தும் விமரிசனங்களின் சாரம், மொத்தத்தில் நம்பகத்தன்மை அற்றது என்பதாக இருக்கிறது. ஆனால் நாடகக் கலையின் நம்பகத்தன்மை அப்படிப் பட்டதல்ல என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
வாழ்க்கையின் உண்மையான பகுதிகளை- சிக்கல்களை- மனப் போக்கை- தவிப்பை மேடையின் சிறிய வெளியில், குறைந்த கால கட்டத்தில் நிகழ்த்திக் காட்டும் கலை நாடகக் கலை . அரங்கத்தில் நிகழும் அக்கலை எல்லாக் கலைகளையும் போல புனைவுகளைக் கொண்டது என்றாலும் மோசடியின் வடிவம் அல்ல. புனைவு வெளி, புனைவுக் காலம், புனைவுக் கதாபாத்திரங்கள் என்ற மூவொருமைகளைக் கொண்டு நாடகம் தான் வாழ்க்கையின் கண்ணாடி என்று நாடகக் கலையின் இலக்கணங்கள் கூறுகின்றன.
இங்கே நாடகம் பற்றிய புரிதல் நேர் எதிரானதாக இருக்கிறது. நாடகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அதன் உண்மையான அர்த்தத்திற்கு எதிராகப் பயன்படுத்துவது வருத்தமான ஒன்று. நாடகக் கலையின் உன்னதப் பெயர் களான சேக்ஸ்பியர், இப்சன், செகாவ், பிராண்டெல்லோ, பெர்னாட்சா , பெர்ட்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்டர், சாமுவேல் பெக்கட் போன்ற உலக நாடக ஆசிரியர்களைக் கூட விட்டு விடுங்கள்.
மிகச் சிறந்த நவீன இந்திய நாடகங்களை எழுதிய கிரிஷ் கர்னாட், விஜய் டெண்டுல்கர், சுரேந்திர வர்மா, இந்திரா பார்த்தசாரதி, பாதல் சர்க்கார், மோகன் ராகேஷ் போன்றோரின் நாடகங்களை மேடை ஏற்றி பார்த்தால் தெரியும். நாடகங்களில் வெளிப்படுவது முழுக்க நம்பகத்தன்மையுடையது; உண்மை யானது என்பதை மேடை ஏற்றத்தின் மூலமாகத்தான் உணர முடியும். கிரிஷ் கர்னாடின் துக்ளக்கும் இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப்பும் வரலாற்றுப் பின்புலத்தில் சமகால இந்திய அரசியலைப் பேசும் நாடகங்கள்.
பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மன அலைச்சல்; உளைவுகள்.பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து இந்திய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உச்சத்தை வேறெந்த நகரமும் உணராத அளவிற்குச் சென்னை மாநகரம் கடந்த வாரம் உணர்ந்தது. உணர்ந்தது என்று சொல்வதை விட தவித்துப் போனது; பதறிப் போனது என்று தான் சொல்ல வேண்டும்.
சாதாரண பெட்ரோல் கிடைக்கவில்லை என்ற முணுமுணுப்பு கோபமாக மாறி எதிர்ப்பு வடிவம் எடுத்த போது பற்றாக்குறை என்ற எதிர் நிகழ்வு முன் நிறுத்தப்பட்டது. பற்றாக்குறையின் விளைவாக ஏற்பட்டது பதற்றம். பதற்றம் கோபத்தைக் குறைத்து விட்டுத் தேடுதலை மேற்கொண்டது; தேடுதலின் தொடர்ச்சியாகப் பற்றாக்குறை சரி செய்யப்பட்டது. பற்றாக்குறை சரியாகும் போது மனம் கோபத்தையும் குறைத்துக் கொள்ளும் முணுமுணுப்பையும் விட்டு விடும் என்பது உளவியல்.
இது தனிமனித உளவியல் மட்டுமல்ல; சமூக உளவியலும் கூட.சாதாரணப் பெட்ரோல் அல்ல; பிரிமியம் அல்லது பவர் பெட்ரோலாவது கிடைத்தால் போதும். விலை ஒரு பொருட்டல்ல என்று மனத்தைத் தகவமைக்கும் உத்தி சரியாக செயல்பட்டுள்ளது. இதுவும் திட்டமிட்ட நாடகம் தானோ?