June 24, 2008

அங்கீகாரத்தின் அளவுகோல்

கிணற்றிலிருந்து வாளியில் நீரிறைத்து பாத்திரத்தில் ஊற்றும் சலசலப்பு ஓசையுடன் தொடங்கி ,
அரிதாரத்தெ பூசிக்கொள்ள ஆசை.. நான்..
அடவு கட்டி ஆட்டம் போட ஆசை ..
என்ற வரிகளாக விரியும் அந்தத் திரைப்படப் பாடலை நான் திரும்பத் திரும்பக் கேட்பதுண்டு.
இசையமைப்பாளர் இளையராஜா மன விருப்பத்துடன் இசை அமைத்த படங்களுள் ஒன்றான அவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் செவி நுகர்கனிகளில் ஒன்று. இந்தப் பாடல் என்று இல்லை; அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே திரும்பத் திரும்பக் கேட்கத்தக்க பாடல்கள் என்பது எனது கணிப்பு. இசையின் கோலங்களைப் பல வண்ணங்களில் தீட்டிப் பார்த்த கலைஞனின் வெளிப்பாடு என்று கூடச் சொல்லலாம். ஏதாவது சிக்கலில் மனம் அலையும் போதெல்லாம் அந்தப் படத்தின் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது எனது வாடிக்கை.
பார்வையற்ற பெண்ணாக நடிகை ரேவதி அற்புதமாக நடித்திருந்த அந்த படத்தை இயக்கியவர் நடிகர் நாசர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அந்தப் படம் பார்வையாளர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப் படவில்லை. ஆனால் தீவிரமாகச் சினிமாவை நேசிக்கும் ரசிகர்களாலும் விமரிசகர்களாலும் குறிப்பிடப் படும் படமாக மட்டும் அந்தப் பெயர் இருந்துகொண்டிருக்கிறது. அங்கீகரிக்கப்படாத படங்களின் பட்டியலில் அவதாரம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்.
பாடலை நிறுத்தி திரைப்படங்களை அங்கீகரிக்கும் காட்சி ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்க்கத் தொடங்கினேன்.
விஜய் தொலைக்காட்சியில், அத்தொலைக்காட்சி நிறுவனம் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் திரைப்பட விழாவின் இரண்டாம் பாகம் ஓடிக் கொண்டிருந்தது. தமிழில் ஒளிபரப்புச் செய்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் தங்கள் நோக்கத்திற் கேற்பத் திட்டமிட்டு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி அலை வரிசை விஜய் தொலைக்காட்சி. எதையும் அவசரப்பட்டு ஒளிபரப்புவதில்லை என்பதற்கு இந்தப் பரிசளிப்பு விழாவின் ஒளிபரப்பே சாட்சி.
மே மாதம் முதல்வாரத்தில் நடந்த விழாவின் காட்சிகளை ஜூன் முதல் வாரத்தில் ஒரு நாளும் இரண்டாவது வாரத்தில் ஒரு நாளுமாக ஒளி பரப்பியது. அளிக்கப்பட்ட பரிசுகளுக்கும், நிகழ்த்தப் பட்ட விழாவிற்கும் ஆன செலவைத் திரும்ப எடுக்கும் வியாபார உத்தி தெரிந்தவர்கள் அந்தத் தொலைக்காட்சியின் பின்னணியில் பணியாற்றுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
விஜய் தொலைக்காட்சியை விட்டு விடலாம். அது வழங்கிய பரிசுகளுக்கு வருவோம்.
2007 ஆம் ஆண்டின் சிறந்த நடிகராக சத்யராஜைத் தேர்ந்தெடுத்தது. வழக்கமான தனது நடிப்புப்பாணியை மாற்றிக் கொண்டு, தங்கர் பச்சானின் நாவலில் வரும் மாதவப் படையாச்சியின் திரைக் கதாபாத்திரமாக மாறுவதில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தார் சத்யராஜ். அதே போல் சிறந்த நடிகையாகப் பிரியாமணியைத் தேர்ந்தெடுத்திருந்தது விஜய் தொலைக்காட்சி. பருத்தி வீரன் படத்தில் அசல் கிராமத்துப் பெண்ணாக மாறிப் பிரியாமணி என்ற பெயரை மறந்து முத்தழகு என்ற பாத்திரப் பெயராலேயே அழைக்கப்படும் அளவுக்குத் தமிழர்களின் மனதில் இடம் பிடித்த அவரைச் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்ததையும் யாரும் குறை சொல்லி விட முடியாது.
இன்னும் பல ஏற்கத் தக்க தேர்வுகளைச் செய்திருந்தது ஆச்சரியமூட்டும் ஒன்று.தமிழக நகரங்களில் விஜய் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ரசிகர்களின் வாக்குகளைப் பெற்றுத் தேர்வு செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் ஏற்கத் தக்கதாகப் பெரும்பாலான தேர்வுகள் இருந்தன. கற்றது தமிழ் படத்தின்நாயகியாக நடித்த அஞ்சலி சிறந்த புதுமுக நடிகையாகவும், பருத்தி வீரனில் நடித்த கார்த்தி சிறந்த புதுமுக நடிகராகவும் அறிவிக்கப் பட்டபோது மனம் கேள்விகளற்று ஏற்றுக் கொண்டது.
சிறந்த பொழுதுபோக்குப் படங்களின் வழியாகத் தமிழர்களுக்கு உற்சாகமூட்டிய நடிகராக நடிகர் விஜய்யை அறிவித்துப் பரிசை வழங்கிய போது மனம் ஆச்சரியத்தில் மூழ்கியது.சரியான தேர்வு தான் என்று மனம் குதூகலம் கொண்டது. தமிழக ரசிகர்கள் இவ்வளவு தௌ¤வாக முடிவு செய்கிறார்கள் என்றால் ஆச்சரியம் குதூகலமும் அடையாமல் என்ன செய்வது.? எனது ஆச்சரியங்களையெல்லாம் அடுத்து வந்த அறிவிப்பு தவிடு பொடியாக்கியது. ஆம் சிறந்த இயக்குநராக பிரபுதேவாவும், விரும்பத்தக்க படமாக அவர் இயக்கிய போக்கிரியும் அறிவிக்கப்பட்ட போது மனம் அதிர்ந்து போய்விட்டது.
சிறந்த படம் என்று சொல்லாமல் விரும்பத்தக்க படம் என்று அறிவிக்கப் பட்டாலும் போக்கிரிக்கு விருது என்பதையும், அதனை இயக்கிய பிரபுதேவா விற்கு இயக்குநருக்கான விருது என்பதை என் மனம் ஒப்பவில்லை. நான் ஒப்பவில்லை என்பதை விட கொடுத்த விருதைப் பெற்றுக் கொண்ட பிரபுதேவாவே ஒப்புக் கொள்ளவில்லை என்பதைத் தான் அவரது பேச்சு காட்டியது.
பல விதமான விமரிசனங்களை எதிர் கொண்டாலும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான் அப்படத்தை இயக்குநரின் படம் என்று நிறுவிக்காட்டியவர். சிறந்த நடிகர் பரிசைப் பெற்று கொண்ட சத்யராஜ் சுட்டிக் காட்டி அந்த விருதைத் தங்கர் பச்சானுக்குச் சமர்பித்த போது எழுந்த கைதட்டல் உறுதி செய்தது. பருத்தி வீரன் படத்தை இயக்கிய அமீருக்கு விருது அளிக்கப் படவில்லை. ஆனால் அப்படத்தில் பங்கேற்ற பிரியாமணியும், கார்த்தியும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு இயக்குநர் அமீருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகின்றார்கள்.
2007 இல் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய மொழி படமும் அதன் இயக்குநரான ராதா மோகனும் போட்டியில் இருக்கும் போது பிரபு தேவா நல்ல இயக்குநர் என்றால் அதை அவராலேயே நம்ப முடியவில்லை என்பது தான் அவரது பேச்சில் வெளிப்பட்டது. கொஞ்சம் குற்ற உணர்வுடன் விருதை வாங்கிக் கொண்ட பிரபுதேவாவைப் பாராட்டலாம்.
தமிழ் நாட்டில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கும் விருத ளிப்பில் தான் இந்த மாதிரியான முடிவுகள் வருகின்றன என்றால் விட்டு விடலாம்.
தேசிய அளவில் சிறந்த படங்களைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவே இப்படித்தான் தேர்வு செய்கின்றது என்றால் சிக்கல் எங்கே இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.பருத்தி வீரன் பிரியாமணிக்கு அரசின் தேர்வுக்குழுவும் இந்திய அளவில் சிறந்த நடிகை என்று தேசிய விருதுக்கு தெரிவு செய்துள்ளது.சிறந்த நடிகராக வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜியைத் தேர்வு செய்துள்ளது.
தமிழில் சிறந்த படமாக வசந்த பாலன் இயக்கிய வெயில் படத்தைத் தேர்வு செய்த இதே தேர்வுக் குழு தான் ஒட்டு மொத்த இந்தியாவின் சிறந்த படமாக லகே ராஹ¨ முன்னாபாய் படத்தைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. இந்த முன்னாபாய் படத்தின் முதல் பாகம் தான் தமிழில் கமல்ஹாசன் நடித்து வந்த வசூல் ராஜா எம்பிபிஎஸ். லகே ராஹ¨வும் அதே பாணியிலான வசூல் நோக்கம் கொண்ட படம் தான்.
நடிக, நடிகரைத் தேர்வு செய்ய ஒரு விதமான அளவுகோல்களும், இயக்குநரைத் தேர்வு செய்ய வேறுவிதமான அளவுகோல்களும் இருக்க முடியுமா? என்பது இந்த இடத்தில் எழும் முக்கியமான கேள்வியாக இருக் கிறது.
நடிகர், நடிகை, படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கலை இயக்குநர் எனப் படத்தின் கூறுகளில் சிறந்தவர்களைத் தேர்வுசெய்யும் போது கலையின் விதிகளைப் பார்க்கும் தேர்வுக்குழுக்களும், பார்வையாளர் மனங்களும் சிறந்த படம் என்றும் , சிறந்த இயக்குநர் என்றும் வரும்போது கலையின் விதிகளைப் புறம் தள்ளி விட்டு வியாபாரத்தின் விதிகளைப் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை.
வியாபாரத்தின் விதிகள் தான் முன்னாபாயையும், போக்கிரியையும் அங்கீகரிக்கும். திரைப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநருக்கான அங்கீ காரமே சிறந்த படங்கள் வர வகை செய்யும். அமீரையும், தங்கர் பச்சானையும், வசந்த பாலனையும், ராதா மோகனையும் நல்ல இயக்குநர்கள் இல்லை என்று ஒதுக்கி விட்டுப் போக்கிரி படத்தையும் அதன் இயக்குநரையும் அங்கீகரிப்பது ஆரோக்கியத்தின் வெளிப்பாடல்ல; நோய்க்கூறின் வெளிப்பாடு.
திரும்பவும் தொலைக்காட்சியிலிருந்து பாடலுக்குத் திரும்பிய போது அந்தப் பாடலின் பின் வரும் வரிகள் அர்த்தம் பொதிந்த வரிகளாகப் பட்டன.
ராக்கூத்தில வரும் சாமியெல்லாம் நிஜசாமியின்னு
பாக்காது ஊர்ஜனமே.. காசு தான்
பேரு தான்ஆசை நான் பட்டது
வேறே எதும் நான் சொல்ல வரல.

1 comment :

Hari said...

The line from the song has been misquoted. The actual line in the song conveys the aspiring artist's passion for folk drama is for something that is beyond just money and fame.

Here's the line, transilterated-
"kaasukkaa paerukkaa aasai naan pattadhu? vera edho... solla varalai."

Thanks
Hari