புனல் வாதம் அனல் வாதம்

ஆந்திர அரசு பெண்ணையாற்றில் 100 தடுப்பணைகளைக் கட்டும் பணிகளைத் தொடங்கி விட்டது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளைப் பலரும் எழுப்பி வருகின்றனர்.ஆந்திரத்து ஸ்ரீசைலம் மலையில் உற்பத்தியாகும் பொன்னையாறு வேலூர் மாவட்ட திருவலம் அருகே பாலாற்றில் கலக்கிறது. அதிலிருந்து வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்கிறது. எனவே மத்திய அரசில் தனக் கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழக முதல்வர், இந்தப் பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
பேசித் தீர்க்கப்பட வேண்டிய புனல் வாதங்கள் ஆந்திரத்துப் பாலாற்றுப் பிரச்சினை மட்டும் அல்ல. கேரளத் தோடு முல்லைப் பெரியாற்றுப் புனல் பற்றியும்,கர்நாடகத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் குடிநீர்ப் புனல் திட்டமும் தான்.முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தீர்த்திருக்க வேண்டிய காவிரிப் புனல்வாதம் இன்னும் தொடர்கிறது. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை என எல்லா நதிகளிலும் ஓட வேண்டிய புனலைப் பெறுவதற்குத் தமிழகம் என்ன வாதங்களைச் செய்யப் போகிறது.?
பொன்னையாற்றில் கட்டப்படும் தடுப்பணைகள் மட்டும் அல்ல; பாலாற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள பெரிய அணையும் கூடத் தடுத்து நிறுத்தப் பட வேண்டியன எனத் தமிழக மக்களும், தமிழக அரசியல் கட்சிகளும் சொல்கின்றன.காவிரியில் அணைகளைக் கட்டித் தடுத்து நிறுத்திய கர்நாடக அரசு கண்டிக்கப்பட வேண்டியது என்று தமிழர்களாகிய நாம் நம்புகிறோம். முல்லைப்பெரியாற்றின் உயரத்தைக் கூட்டுவதைத் தடுப்பது கேரளத்தின் நியாயமற்ற போக்கு எனக் கோபம் கொள்கிறோம்.நதிகளின் புனலை மையப்படுத்தித் தமிழகம் எழுப்பும் வாதங்கள் நியாயமற்றவை என அந்தந்த மாநிலத்து அரசியல்வாதிகளும் மக்களும் கருதுகிறார்கள்.
எங்கள் மாநிலத்து நதியில் அணைகள் கட்டுவதைத் தடுக்கத் தமிழகத்துக்கு ஏது உரிமை? என ஆந்திர மக்களும், ஆந்திர அரசியல் கட்சிகளும் நினைக்கக் கூடும். கன்னடியர்களும் கால் நூற்றாண்டாக வெளிப்படையாக அதைச் சொல்லி வருகிறார்கள். கேரளக் கிராமங் களுக்குப் பாதிப்பு உண்டாகும்படியான காரியத்தைச் செய்யும்படி கோருவது எப்படிச் சரியாகும் ? என மலையாளிகள் கேட்கிறார்கள். பிரச்சினைகளில் தொடர்பில்லாத பஞ்சாபைச் சேர்ந்த ஒருவ ருக்குத் தமிழகத்தின் புனல்வாதமும் தலையீடுகளும் நியாயமற்றதாகக் கூடத்தோன்றலாம். நிகழ்காலத்துப் புனல் வாதத்தை இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வோம்.
இதுவும் புனல்வாதம் தான்; ஆனால் 1000 வருடத்திற்கு முந்தியதொரு புனல்வாதம். திருவேடகம் -மதுரையிலிருந்து சோழவந்தானுக்குச் செல்லும் சாலையில் வைகையாற்றின் வடகரையில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர். திரு+ஏடு+ அகம் எனப் பிரித்து அந்தப் பெயருக்குக் காரணம் சொல்லும் போது அந்தத் தொன்மைக் கதை கூறப்படுவதுண்டு. தமிழகத்தில் பல்லவர்கள் காலத்திற்குப் பின் பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் ஆட்சி செய்தார்கள் என்று வரலாற்று நூல்களில் படித்திருக்கிறோம். பல்லவர்களின் காலம் வரை அரசு ஆதரவு பெற்ற மதங்களாக சமணமும் பௌத்தமும் இருந்துள்ளன.
பின்னர் அந்த இடத்தைப் பிடிக்க சைவமும் வைணவமும் போட்டி போட்டுள்ளன. வைணவத்தை விடவும் சைவ சமயப் பணியாளர்கள் கூடுதல் முயற்சி எடுத்து கோயில்களிலும் ஊர்களிலும் உழவாரப் பணிகளைச் செய்ததோடு அரசர்களை மதம் மாறச் செய்த செய்திகளையும் வாசித்திருக்கிறோம். சமண சமயக் கருத்துக்கள் அடங்கிய ஏடுகளும், சைவ சமயக் கருத்துக்கள் அடங்கிய ஏடுகளும் மதுரையில் வைத்து வைகையாற்றுப் புனலில் ஒன்றாக போடப்பட்டனவாம். ஆற்று நீரோட்டத்தின் போது அந்த ஏடுகளில் சமண சமய ஏடுகள் ஆற்றின் நீரோட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டு மூழ்கி விட , சைவ சமயக் கருத்துக்கள் கொண்ட ஏடுகள் ஆற்றின் போக்கை எதிர்த்துப் பயணம் செய்து ஓரிடத்தில் கரை ஒதுங்கினவாம். சைவ சமய ஏடுகள் கரை ஒதுங்கிய இடம் தான் திருவேடகம் என்பது நம்பிக்கை.
இந்தப் புனல் வாதத்தோடு தொடர்புடைய அனல் வாதம் ஒன்றும் உள்ளது. புனல் வாத வெற்றிக்குப் பின்பு அனல் வாத்தில் ஈடுபடும்பொருட்டு, தங்கள் தங்கள் சமயக் கருத்துக்களை எழுதிய ஏடுகளை எரியும் பெரும் அனலில் (நெருப்பில) போட்ட போது சமண சமயக் கருத்துக்கள் எழுதப்பட்ட ஏடுகள் பொசுங்கிச் சாம்பலாகி விட்டனவாம். சைவ சமயக் கருத்துக்கள் எழுதப்பட்ட ஏடுகள் அனலில் பொசுங்காமல் பச்சைப் பசேல் என்று இருந்தனவாம். இப்படித்தான் பாண்டிய நாட்டில் சைவ ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட்டது என்பது கருத்து.
சைவ-சமணப் பணியாளர்களுக்கு இடையே பல்வேறு விதமான மோதல்களும் வன்முறைகளும் நடந்துள்ளன. சமண X சைவப் போராட்டத்தில், சமணசமயத்தவர்கள் ஊர்களிலிருந்து விரட்டப் பட்டுக்¢ குகைகளில் வாழும்படி செய்ததற்கும்¢, ஆயிரக்கணக்கில் கழுவில் ஏற்றிக் கொல்லப் பட்டதற்கும் கூடக் கதைகளும் சடங்குகளும் உள்ளன. அதே நேரத்தில் கருத்தியல் ரீதியாகவும் வாதம் செய்தனர் என்பதைத் தான் இந்த அனல்வாதம் புனல்வாதம் என்ற சொல்லாட்சி உணர்த்துகிறது.
பல வகையான அடிப்படை வாதிகள் வன்முறையைப் போராட்ட வடிவமாகக் கொண்டாலும் வெற்றிக்குப் பின்பு அதை மறைக்கவே முயலுகின்றனர். மனித மனம் வன்முறை வெற்றியை விடவும் கருத்தியல் வெற்றியையே விரும்புகிறது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
வரலாற்றை விலக்கி வைத்துவிட்டு நிகழ்காலத்திற்கு வருவோம்.தமிழகத்திற்குப் புனலைத் தர மறுக்கும் அண்டை மாநிலங்களுக்குத் தமிழகம் அனலை(மின்சாரம்)த் தரக்கூடாது என ஆங்காங்கே குரல்கள் எழும்பியுள்ளன. இன்றைய நிலையில் அதிக சக்தி வாய்ந்த எரிபொருள் மின்சாரம் தான். தமிழகத்தில் உற்பத்தியாகும் நீர்மின்சாரமும்¢ முழுவதும் அப்படியே தமிழகப் பயன்பாட்டிற்குரியதாக இருக்கிறது. காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் கூட தமிழகத்திற்குத் தான் பயன்படுகிறது. ஆனால் அணு மற்றும் அனல் மின்சார உற்பத்தி தமிழ் நாட்டிக்கு மட்டும் பயன் படவில்லை. அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம்,பாண்டிச்சேரி ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது தமிழகத்தின் கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களின் நிலத்திலிருந்து தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி யிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை அண்டை மாநிலங்களோடு ஏன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் கேட்பது ஒரு விதத்தில் நியாயமானதாகத் தோன்றலாம்.
தமிழகத்தின் கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும் உற்பத்தி செய்யப்படும் அணுமின்சாரமும் தமிழகத்திற்கு மட்டுமே உரிமையுடையது என அடுத்துக் கோரிக்கை வைக்கப்படலாம். எடுத்த எடுப்பிலேயே இந்தக் கோரிக்கைகள் நியாயமற்றவை எனச் சிலர் சொல்லக்கூடும். கல்பாக்கம், கூடங்குளம், நெய்வேலி ஆகிய தேசிய முதலீட்டில் உண்டான தேசியச் சொத்துகள். அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் தேசம் முழுமைக்கும் பயன்படுவதே சரியானது என வாதிடலாம். அனலை (மின்சாரத்தை) மையப்படுத்தி வாதிக்கும் போது பின்புலமாக இருக்கும் தேசம் என்னும் கருத்தியல் புனலை ( நீர்) மையப்படுத்தி வாதம் செய்யும் போது பொருந்தாமல் போய்விடுமா? என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.
தமிழகம் முன் வைக்கும் புனல்வாதத்தின் பின்புலமாக இருப்பதும் இந்தியா என்பது ஒரு தேசம் என்னும் கருத்தியல் தான். ஒரு தேசத்தின் இயற்கை வளம் தேசத்து மக்கள் அனைவருக்கும் சொந்தம். நதிகளின் புனல் இயற்கை வளம் என்னும் வகைக்குள் இருப்பது . எனவே ஒரு மாநிலம் தன்னுடையது எனச் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதை உணர வேண்டும். நதிகளின் நீர் நாடுகளின் எல்லையைத் தாண்டி உலகத்துக்கே சொந்தம் என்னும் கருத்தியலின் அடிப்படையில் தான் நாடுகளுக்கிடையே உள்ள நதிநீர்த்தாவாக்கள் தீர்க்கப் படுகின்றன. இந்தியா பிரம்மபுத்திராவின் நீரை வங்காள தேசத்தோடு பகிர்ந்து கொள்வது அந்த அடிப்படையில் தான்.
தேசம் என்னும் கருத்தியலை மாநிலக் கட்சிகளுக்கும் மக்களுக்கும் உணர்த்த வேண்டிய பொறுப்பு மைய அரசின் தலையாய பொறுப்பு. அதைத் தவறு விட்டால், தேசிய இனப் பிரச்சினை என்ற பெயரில் குறுகிய நலன்களும் அதன் தொடர்ச்சியாக அடிப்படை வாதமும் தலை தூக்குவதைத் தடுத்து நிறுத்த முடியாது. மே.25

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்