May 31, 2008

தேர்வு முடிவுகள் - சில கேள்விகளும் சில புரிதல்களும்

பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளின் முற்பகல் வேலை. போட்டி போட்டிக் கொண்டு உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகள் தொலைபேசியில் தேர்வு முடிவுகளைச் சொல்லிக் கொண்டி ருந்தன. சந்தோசமான தருணங்களை வெளிப்படுத்தும் குரல்களின் ஊடே குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய வர்களின் குரல் பலமின்றி ஒதுங்கிப் போனதையும் கேட்க முடிந்தது.
இதே நேரத்தில் தேர்ச்சி அடையாதவர் களின் மனம் என்ன பாடுபடும் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். வெற்றி தரும் சந்தோசத் தருணங்களைப் போலத் தோல்வி தரும் வலியின் தருணங்களும் உணரப் பட வேண்டும்.தொலைக் காட்சியில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர்களைத் தொலைக்காட்சிக் காமிராக்கள் படம் பிடித்துக் காட்டும் போது அவர்களது பெற்றோர் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி அடைந்தார்கள். மகிழ்ச்சியின் தருணங்கள் முக்கியமானவை தான்.மகிழ்ச்சியின் ஊடாக இன்னொரு நிதர்சனமான உண்மை வினாவாக எழும்பி நின்றது.
மாநில அளவில் முதலிடம் என்பது என்ன? அதைத் தீர்மானிப்பது ஒட்டு மொத்தமான மதிப்பெண்களா? மொழிப்பாடத்தின் மதிப்பெண்ணா? தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த மாணாக்கர்களில் முதல் மூவர் என ஒரு பட்டியல் சொல்கிறது. இன்னொரு பட்டியல் தமிழ் அல்லாத மொழிகளை எடுத்துப் படித்தவர்களை வரிசைப் படுத்துகிறது. இந்த அபத்தம் எப்போதாவது சரி செய்யப்படுமா? ஆனால் சரி செய்யப்பட வேண்டிய ஒன்று.
அரசு தரும் சலுகைகளும் பரிசுகளும் தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு உறுதியாகக் கிடைக்கும். சமஸ்கிருதம், பிரெஞ்சு, போன்ற பிறமொழிகளைத் தேர்வு செய்தவர்களுக்கு அரசின் பரிசுகளும் சலுகைகளும் மறுக்கப்படும் . தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படிக்காததால் தங்களுக்குப் பல சலுகைகள் தவறிப்போகின்றன என்று நினைக்கும் அந்தக் கணத்தில் - மகிழ்ச்சியான அந்தத் தருணத்தில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அந்த மாணவர்கள் மனதில் தோன்றும் வெறுப்புணர்வு காலம் காலமாகத் தொடரக் கூடும்.
தமிழ்மொழி மேலும், தமிழை மொழிப் பாடமாகக் கற்ற மாணாக்கர்கள் மேலும் உண்டாகும் வெறுப்பு சுலபமாக மறந்து விடக்கூடியதல்ல. தேர்வு முடிவுகளைப் பற்றியச் செய்திகளின் போது அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எதிர்காலக் கனவுகளையும் திட்டங் களையும் தொலக்காட்சிக் காமிராக்கள் காட்டின. வழக்கமாகச் சொல்லும் பதில்கள் தான் என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பதில்களில் குறிப்பான மாற்றம் ஒன்றைக் கவனித்து வருகின்றேன்.
முன்பெல்லாம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்கள், மருத்துவக் கல்வியைத் தேர்வு செய்யப் போவதாகச் சொல்வார்கள். இப்போது அனைவரும் அப்படிச் சொல்வதில்லை. தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்து மாநிலத்தில் முதலிடம் பெறும் மாணாக்கர்கள் பெரும் பாலும் சென்னையைத் தவிர்த்துப் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அடுத்த இலக்கு மருத்துவப் படிப்பு எனவும், மக்களுக்குச் சேவை ஆற்றுவது எனவும் அவர்கள் சொல்கின்றனர். மருத்துவர்கள் ஆகிச் சேவை செய்யாமல் கூடப் போகலாம். ஆனால் அப்படிச் சொல்லும் படியாக தமிழ்ப் பாடம் வலியுறுத்துகிறது என்பது இன்னொரு மகிழ்ச்சியின் தருணமாக இருந்தது.
இதே நேரத்தில் தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படிக்காது முதலிடப் பட்டியலில் இடம் பெற்ற மாணாக்கர் களின் விருப்பம் பொறியியல் துறையாக இருக்கிறது. தமிழ் நாட்டின் தாய்மொழியான தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்கக் கூட வேண்டாம் என முடிவு செய்யும் போதே அந்த மாணாக்கர்களின் எதிர்காலம், முன்னேற்றம், என்பதை அவர்களின் பெற்றோர்கள் திட்டமிட்டுத் தந்து விடுகிறார்கள் என்ற உண்மை புரியக்கூடிய ஒன்று தான். இந்தத் திட்டமிடலைச் சரியான வழிகாட்டல் எனச் சொல்வதா? சுயநலத்தை வளர்க்கும் சிந்தனைத் திணிப்பு எனச் சொல்வதா? என்ற குழப்பம் எனக்கு இப்போதும் இருக்கிறது.
இன்று எம்பிபிஎஸ் என்ற அடிப்படை மருத்துவப் படிப்பு மட்டும் படித்தவரை மருத்துவராக அங்கீகரிக்கும் மனப்போக்கு கொஞ்சங் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகிறது. எம்பிபிஎஸ் படிப்புக்கு மேல் எம்.டி., எம்.எஸ்., எப்.ஆர்.சி.எஸ்.,என மேல் படிப்பு ஒன்றை படித்தவர்கள் மட்டுமே மருத்துவர்களாகக் கருதப்படும் நிலையில் 12 அடி அகலம் 15 அடி நீளம் கொண்ட தனியறையில் அமர்ந்து வைத்தியம் பார்க்கும் மருத்துவரை நாடி நோயாளிகள் வருகை குறைந்து போய்விட்டது. பல்வேறு மருத்துவர்களும் வந்து செல்லும் பாலி கிளினிக்குகளோ நகரங்களில் மருத்துவ மனைகளாகக் கருதப்படுகின்றன.
நான்கு ஆண்டு எம்பிபிஎஸ், அதன்பின் இரண்டு ஆண்டு பயிற்சி மருத்துவர், அதன்பின் மேல்படிப்பு என முடித்து, பாலி கிளினிக்கில் வேலைக்குச் சேர்ந்து அல்லது அதை உருவாக்கிச் சம்பாதிக்கத் தொடங்கு வதற்கு முன்பு பொறியியல் கல்வியைத் தேர்வு செய்தவன் மாதம் அரை லட்சம் சம்பளம் வாங்கும் நிலையில் இருக்கிறான் என்ற உண்மை உரைக்கத் தொடங்கி விட்டது.
நடுத்தர வர்க்கப் புத்திசாலிப் பெற்றோர் மருத்துவ மோகத்தைக் குறைத்துக் கொண்டதின் பின்னணியில் இப்படிச் சில காரணங்கள் இருக்கக் கூடும். நோயாளிகளிடமும், பெற்றோர் களிடமும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஏதோ தானாக உண்டான மாற்றம் என்று நினைக்க வேண்டியதில்லை. மருத்துவத்துறை சேவைத் துறையாக இல்லாமல்,குழும வணிக நிறுவனம் (கார்ப்பரேட் செக்டார்) என நவீனப் பொருளாதாரச் சொல்லாக மாறிவிட்டது. இதன் பின்னணி யிலும் நமது தனியார்மய, தாராளமயப் பொருளாதாரத்தின் பங்கு உண்டு. திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுக் காட்சிப் படுத்துவது எல்லாம் ஏற்கத்தக்கதாக மாறும் என்ற ஊடக உளவியலின் பாடங்கள் தீவிரமாக வேலை செய்கின்றன.
பள்ளி இறுதித் தேர்வில் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தேர்ச்சி விகிதம் கூடிக் கொண்டே வருவதும், தேர்ச்சி விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருவதும் கூட மகிழ்ச்சியான தகவல்கள் தான். பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் தயாராவதைத் தானே கவி பாரதி கனவு கண்டான். அவனே, ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்’ என்றும் எழுதியுள்ளான். இந்த வரிகள் அவனது கனவு அல்ல என்ற போதும், இந்த நேரத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
பள்ளிக் கல்வியின் தேர்ச்சி விகிதத்திற்கேற்பக் கல்லூரிக்குள் அடி எடுத்து வைக்கும் பெண் களின் எண்ணிக்கை இருக்கிறதா? என்றால் இல்லை என்றே புள்ளி விவரங்கள் சொல்கின்றன. பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, அவர்களின் கல்லூரிக் கனவைப் பெற்றோர் கலைத்து விடுகின்றனர் என்றும், அதன் தொடர்ச்சியாகக் கல்யாணக் கனவை விதைத்துத் தங்கள் கடமையை முடித்து விடத் திட்டமிடுகின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வுகள் சில சொல்கின்றன.
ஆண் தான் குடும்பத்தின் ஆதாரம்; அவனே சம்பாதிக்க வேண்டும்; அவனே பரம்பரைச் சொத்தை ஆள வேண்டும் என்ற மரபான ஆண் மையச் சிந்தனைகள் இன்னும் கூட இருக்கத் தான் செய்கின்றன. அதன் மறுதலையாகப் பெண் புகுந்த வீட்டுக்குப் போகப் பிறந்தவள்; அவளுக்குப் பெற்றோர் செய்ய வேண்டிய கடமைகளில் தலையாயது ஓர் ஆணைப் பார்த்துத் திருமணம் நடத்தி வைப்பது தான் என்ற நம்பிக்கையும் தொடர்கிறது.
மகளிர் மட்டுமே பயிலும் கல்லூரிகள் இல்லாவிட்டால் என்ன? நமது அரசுகளும் உயர்கல்வி அமைப்புக்களும் எல்லாக் கல்லூரிகளையும் இருபாலார் கற்கும் கல்லூரிகளாக மாற்றி அனுமதிக்கும் வேலையைத் தொடங்கிப் ஐந்தாண்டுகளுக்கு மேலாகி விட்டன. ஆண்களுக்கு மட்டுமாக இருந்த கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்தும்இன்று இருபாலார் கற்கும் கல்விச்சாலைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
இந்த வேகத்தையும் நியாயத்தையும் பெற்றோரும் மாணவிகளும் புரிந்து கொண்டால் பெண்களின் உயர்கல்விக் கனவுகள் கானல் நீராவதைத் தடுத்து விடலாம். பெண்கள் பட்டங்களைப் பெற்று வீட்டில் முடங்கிப் போவதைக் கைவிட்டு, நாட்டு நீதியும், வீட்டு நீதியும் செய்ய வெளியே வரவேண்டும். அதற்குத் தேவை கல்வி மட்டுமல்ல என்று சொல்ல வந்த பாரதி, ‘ நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும்’ என்று சொல்லிச் சென்றான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மே.18

2 comments :

Karthika said...

Dear Sir,
I agree with the points u've told. But I think poverty also one of the factor that some of the poor parents can't able to send their children for higher studies.
Humble regards.

Karthika. www.neyamukil.blogspot.com

Ramez 1yr said...

Iyaa, thamathu ik katturai kalwi wanikamaathalaiyum, tamilin thalarwinayum eduthu kaatum wthamaaka ullathu, suya nala waathikaluku ithu oru sawukadi.