May 31, 2008

மனச்சுவர்கள் உடைய வேண்டும்

திடீரென்று சில ஊர்களும் நபர்களும் மாநில எல்லைகளைத் தாண்டி தேசத்தின் பரப்புக்குள்ளும் சர்வதேச எல்லைக்குள்ளும் கவனம் பெற்று விடுவதுண்டு. மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமம் திடீர் பரபரப்பில் தேசிய அலைவரிசைகளின் கவனத்துக்குரியதாக ஆகி விட்டது. இருபத்தைந்து வருடங்களாக இருந்த தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டதன் மூலம் உத்தப்புரம் கிராமத்தில் தீண்டாமையும் சாதி வேறுபாடும் ஒழிந்து விடும் என்று நினைத்துக் கொண்டால் நாம் கண்களை இறுக மூடிக் கொண்டு ஆகாயத்தில் பரப்பதாகக் கனவு காண்கிறோம் என்று தான் அர்த்தம்.
இந்திய சுதந்திரத்திற்குப் பின் தமிழ் நாட்டில் நடந்த சாதிக்கலவரப் பூமிகளில் நடுநிலையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் ஓர் உண்மை தெரிய வரக்கூடும். கொடியங்குளத்தின் பின்னணியில் இருந்தது ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்ற பொருளாதாரத் தற்சார்பு என்பதைப் பல ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. உத்தப்புரம் கலவரம் அறுபதுகளின் இறுதியாண்டுகளில் தொடங்கிய ஒன்று. முழுமையான விவசாயப் பின்னணி கொண்ட அக்கிராமத்தில் ஏற்பட்ட நிலவுரிமை மாற்றங்களே கலவரத்தின் திரிகள் என்பதை நேரடியாக அறிந்தவன் நான்.ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாடும் அதனால் அவர்கள் செய்ய மறுத்த அடிமைத் தொழிலின் பின் விளைவுகளுமே சாதி மோதல்களின் முதன்மைக் காரணங்களாக இருந்துள்ளன உத்தப்புரம் கிராமத்தில் மட்டும் அல்ல.
தமிழ்நாட்டில் சில ஆயிரம் கிராமங்களிலாவது அது போன்ற தடுப்புச் சுவர்கள் இருக்கத்தான் செய்கின்றன. கண்ணுக்குத் தெரியும் சுவர்கள், கம்பிகள் போன்றன சேரிகளைப் பிரிக்கும் கோடுகளாக இருக்கின்றன.மனிதர்கள் ஏற்படுத்திய சுவர்களும் தடுப்புக்களும் இல்லை யென்றால் ஓடைகள், கண்மாய்கள், ஆறுகள் அல்லது சாக்கடைகள் என இயற்கை ஏற்படுத்திய தடுப்புக்கள் இருக்கவே செய்கின்றன.
சாதி வேறுபாடு காட்டுவதும், தீண்டாமையைக் கடைப்பிடிப்பதும் குற்றம் என்ற பயத்தை நமது அரசாங்கமும் அதன் சட்டங்களும் உண்டாக்கியிருக்க வேண்டும்.ஓட்டு வங்கி அரசியலால் தீர்மானிக்கப்படும் நமது ஜனநாயகத்தில் அதற்கான தீர்வுகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. சட்டத்தின் இடத்தைக் கல்வி நிறுவனங்கள் எடுத்துக் கொண்டு, தன்னையொத்த மனிதனைத் தீண்டத் தகாதவன் எனக் கருதும் ஒருவன் மனிதனே அல்ல என்ற குற்ற உணர்வையாவது ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் கல்விச் சாலைகளும் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. உத்தப்புரம் மாநில எல்லைகளைத் தாண்டி பரபரப்பான போல இந்த நிகழ்வு பரபரப்பானதல்ல.
உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த அந்த நிகழ்வு ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி: “ஹைதராபாத் மையப்பல்கலைக்கழகம் தனது துறையொன்றில் படித்துக் கொண்டிருந்த செந்தில் குமார் என்ற மாணவனின் மரணத்துக்குப் பொறுப்பேற்று அவரின் அப்பாவிப் பெற்றோருக்கு ஐந்து லட்சம் ரூபாயை (ரூ.5,00,000) நஷ்ட ஈடாகத் தர உள்ளது” இது தான் எனக்கு வந்த செய்தி. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இயல்பியல் துறையில் டாக்டர் பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருந்த செந்தில்குமார் பற்றிய செய்தியை நான் நமது பத்திரிகைகளிலும் வாசிக்கவில்லை. 24 மணி நேரமும் கிரிக்கெட் தகவல்களை மின்வெட்டுச் செய்தியாகச் சொல்லிக் காட்டும் ஆங்கிலச் செய்தி அலைவரிசை களிலும் பார்க்கவில்லை. இணையதளத்தின் வழியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் நண்பர் களின் வழியாகத் தான் இந்தச் செய்தி என்னிடம் வந்து சேர்ந்தது.
செந்தில் குமாரின் மரணத்துக்குப் பின்பு அவரது பெற்றோருக்கு ஐந்து லட்சம் நஷ்ட ஈடு தரப்போகும் தகவலை அனுப்பி வைத்த நண்பர் தான் அவரது மரணம் குறித்த தகவலையும் இணையம் வழியாக அனுப்பி யிருந்தார்.அவர் அனுப்பியிருந்த இணைப்புகள் செந்தில்குமாரின் சோகக் கதையைச் சொல்லி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. நானும் மறந்து போயிருந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பு இணையத் தகவல்கள் சொன்ன செந்தில்குமாரின் கதை இது தான்.
தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டபுரம் என்ற கிராமத்தில் பன்றிகளை மேய்க்கும் பன்னி யாண்டி என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அந்தச் சாதியிலிருந்து அரசாங்கம் வழங்கிய இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பயன்படுத்தி பிஎச்.டி . பட்டம் வரை படிக்க வந்த முதல் மாணவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.எஸ்ஸி படிப்பையும், புதுவை மையப் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டத்தையும் படித்து விட்டு பிஎச்.டி.பட்டம் பெற விரும்பியிருக்கிறார். அவருக்கு பல்கலைக்கழக மானியக் குழு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் வழங்கும் உதவித் தொகை கிடைக்கவே, ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மனுச்செய்து இடத்தையும் பெற்றுச் சேர்ந்து விட்டார். 2007, ஜுலையில்¢ சேர்ந்த அவருக்கு எட்டு மாதங்கள் வரை ஆய்வு செய்வதற்கான நெறியாளர் நியமனம் நடக்கவில்லை. 2008 பிப்ரவரியில் அவரது மரணம் நடந்து விட்டது.நோய்வாய்ப்பட்டதால் செந்தில்குமாரின் மரணம் ஏற்பட்டது என்பது பல்கலைக்கழக நிர்வாகத்தின் வாதம். சாதி வேறுபாடு காட்டியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டார் என மாணவர் தரப்பு போராட்டங்களைத் தொடங்கியது.
பட்டியல் இன மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தவறு எதுவும் நடக்கவில்லை; சாதி ஏற்றத் தாழ்வுகள் எதுவும் பல்கலைக்கழக நடைமுறைகளில் இல்லை என அறிக்கை அளித்துள்ளது.அதே நேரத்தில் செந்தில்குமாருடன் ஒரே நேரத்தில் படிப்பில் சேர்ந்த இரண்டு பேருக்கு ஆய்வு நெறியாளர்கள் நியமனம் நடந்துள்ளது. செந்தில்குமாருக்கும் இன்னொரு பட்டியல் இன மாணவருக்கும் நெறியாளர் நியமனம் நடைபெறவில்லை என்ற உண்மையையும் சுட்டிக் காட்டியுள்ளது.அதன் பின்னணியில் இருந்தது சாதி வேறுபாட்டுப் பிரச்சினை அல்ல;கல்வி சார்ந்த பிரச்சினைகளே என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.இவ்வாறு அறிக்கை சமர்பித்த அதே குழுவினர் இது போன்ற நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தில் நடக்காமல் இருக்க வேண்டும் ; அதற்காக மாணவரின் பெற்றோருக்குக் கருணைத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் வழங்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.குழுவின் அறிக்கையை ஏற்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சையத் இ.ஹைசன் இப்போது ஐந்து லட்ச ரூபாயைக் கருணைத்தொகையாக அளிக்க முன் வந்துள்ளார்.
முதல் தலைமுறைப் பட்டதாரியான செந்தில்குமாரின் எதிர்காலக் கனவை நம்பிக் கடன் வாங்கி வாழ்ந்திருக்கும் அவரது பெற்றோருக்கு இந்தக் கருணைத் தொகை சிறிய ஆறுதலாக இருக்கக் கூடும்.அவர்களும் அதைப் பெற்றுக் கொண்டு ஒதுங்கிப் போய்விடவும் கூடும்.ஆனால் செந்தில்குமாரின் மரணம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதுதானா?நிச்சயமாக இருக்க முடியாது. மரணத்தைத் தேடிக் கொள்ளும்படி அவர் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார். சந்தேகத்துக்குரிய அந்த மரணத்துக்குப் பின்னால் இருப்பது சாதி ஏற்றத் தாழ்வு என்னும் கொடிய மனநோய் என்பதை உணர்த்தும் வழி எது? இன்னொரு செந்தில் குமார் சந்தேகத்துக்குரிய மரணத்தை சந்திக்க மாட்டார் என்பதற்கு இங்கே உத்தரவாதம் ஏதாவது இருக்கிறதா..?தெரியவில்லை.
ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்து கிடக்கும் தமிழ்நாட்டின் கிராமங்களில் ஆதிக்கசாதியினர் வாழும் பகுதிகள் மேட்டுத்தெருக்களாகவும், அடித்தள மக்கள் வாழும் பகுதிகள் பள்ளத் தெருக்களாகவும் இருப்பதற்கு நிலவியல் காரணங்கள் எதுவாவது இருக்க முடியுமா.? சாதி அமைப்புத் தங்களுக்கு வழங்கியிருப்பதாக நம்பும் ஆதிக்க உணர்வைத் தவிர.தினசரிக் கூலியைப் பெற்று மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிட முடியாத நிலையிலும் சாதி ஆதிக்கத்தை விட்டுவிடக் கூடாது எனப் பிடிவாதம் பிடிக்கும் அந்த உளவியலை உண்டாக்கிய சாதி அமைப்பை மாற்ற மண் சுவர்களும், மதிற்கோட்டைகளும் தகர்க்கப்படுவது போதாது ;மனச்சுவர்கள் தகர்க்கப் பட வேண்டும் . மே.11

1 comment :

BALAJI said...

இருட்டறையில் உள்ளதடா உலகம் !