March 25, 2008

யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் அவள் தொழிலாம்.

தமிழ் சினிமா தொழில் நுட்ப அளவிலும் வணிக நிலையிலும் உலக அளவில் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துள்ளன எனத் தமிழ் சினிமாவின் சூத்திரதாரிகள் தங்களைத் தாங்களே மார்தட்டிக் கொள்வதைப் பத்திரிகைகளில் படித்திருக்கக் கூடும். ஆனால் அந்த வளர்ச்சி நியாயமான வளர்ச்சியா? தேவையான வளர்ச்சியா? என்ற கேள்விகளைத் திரைப்படத்துறையினரும் கேட்டுக் கொள்வதில்லை; நமது பத்திரிகைகளும் எழுப்புவதில்லை. ஆனால் பெருமிதங்கள் மட்டுமே எப்போதும் கொப்பளித்துக் கொண்டு தானிருக்கின்றன. அதே நேரத்தில் தமிழ்த் திரைப்பட உலகம் திரைப்படக் கலை சார்ந்த பெருமிதங்களை உருவாக்கவே இல்லை என்றும் சொல்லி விட முடியாது.
இரண்டு வருடத்திற்கு முன்னால் வந்த வெயில் திரைப்படமும் பருத்தி வீரன் திரைப்படமும் முக்கியமான திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டன என்பதும், உலக சினிமாக்களின் பட்டியலில் இடம் பிடித்தன என்பதும் பெருமை பட்டுக் கொள்ளும் செய்திகள் தான். அதிலும் குறிப்பாக அமீர் இயக்கிய பருத்தி வீரன் ஜெர்மன் தேசத்தில் நடந்த திரைப்பட விழாவில் கவனிக்கப்பட்ட படமாக இருந்தது என்பது தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று. தமிழ் நிலப் பரப்பில் , தமிழ்¢ மாந்தர்களின் அச்சில் உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் கோபமும் அன்பும் கலந்த மன உணர்வைப் பேசிய இவ்விரு சினிமாக்களின் கலையாக்கம், வாழ்க்கை நோக்கு, நிகழ்காலத் தேவை குறித்து ஆயிரம் விமரிசனங்கள் இருந்தாலும் இத்தகைய படங்கள் தமிழ் மொழியில் எடுக்கப் பட்டுள்ளன என்பதற்காகத் தமிழர்கள் பெருமை அடைவது தவறாகாது.
புனைவுச் சினிமா சார்ந்த இத்தகைய பெருமிதங்களைப் போல ஆவணப் படம் சார்ந்த பெருமை ஒன்றும் தமிழுக்குக் கிடைத்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மும்பையில் நடந்த 10 ஆவது ஆவணப் படவிழாவில் இந்திய அளவில் சிறந்த ஆவணப் படமாகத் தமிழ்ப் படம் ஒன்று தேர்வு செய்யப்பட்டு தங்கச் சிப்பி விருதினைப் பெற்றுள்ளது. தேவதைகள் என்ற அந்த ஆவணப் படத்தை இயக்கியவர் லீனா மணிமேகலை . கவியாக அறிமுகமான லீனா , தொடர்ந்து குறும் படங்கள், ஆவணப் படங்கள் எனத் தனது வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து வருபவர் லீனா மணிமேகலை பொறுப்பேற்றுச் செயல் படுத்தும் கனவுப் பட்டறையின் ஆவணப் படங்கள் தனியார்மயம்,உலகமயம் போன்ற பேரரசியல் நிலைபாடுகளுக்கு எதிரான மனநிலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன.
மைய நீரோட்டத்தின் கவனத்தைப் பெறாத மனிதர்களையும் நிகழ்வு களையும் தனது ஆவணப் படங்களுக்கான தளமாகக் கருதும் லீனா, தொடர்ந்து அத்தகைய விளிம்புகளை நோக்கியே தனது காமிராவுடன் பயணத்தை மேற்கொண்டு வருபவர். அவரது மாத்தம்மா, பறை, பலிபீடம், அலைகளைக் கடந்து போன்ற படங்கள் தமிழ்ப் பரப்பின் நுண் அலகுகளுக்குள்¢ கவனத்தைத் திருப்பிய படங்கள். எடுக்கப் பட்டுள்ள வடிவத்தில் முதன்மை நோக்கத்திலிருந்து விலகிய தன்மைகள் இப்படங்களில் உண்டு என்று விமரிசனத்தைச் சந்தித்த இந்த ஆவணப் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக அவரது சமீபத்திய படம் தேவதைகள் அமைந்துள்ளது. அந்த வேறுபாட்டிற்கும் தொடர்ந்து அவர் காட்டி வரும் சமூக அக்கறைக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே தங்கச் சிப்பி விருதைக் குறிப்பிட வேண்டும் .
படம் தொடங்கும் போது காலில் மணிக்கொச்சம் என்று சொல்லப்படும் சலங்கையைக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் உச்சநிலைக் குரலில் வார்த்தைகள் தௌ¤வற்ற பேச்சுக்கள் கேட்கின்றன. ஒரு சிறு குடிசையின் வாசல் படியில் அமர்ந்து பேசும் அந்தப் பெண் லட்சுமி. அவளது வாழ்தலுக்கான தொழில் ஒப்பாரி வைப்பது. ஒப்பாரி வைத்து அழும் தொழிலைத் தொழில் முறையில் செய்து வரும் லட்சுமி அதற்காக எந்தக் குழுவிலும் இணைந்து வேலை செய்பவள் அல்ல. தன்னந்தனியாக அந்த வட்டாரத்தின் இழவு வீடுகளுக்குச் சென்று செத்துப் போனவரின் தகவல்களைப் பெற்றுக் கொண்டு அவற்றை உள்ளடக்கிய பாடல்களைக் கட்டி அவள் எழுப்பும் ஒப்பாரிப் பாடல் இழவு வீட்டின் கவனத்தை ஈர்க்கிறதைச் சரியாகவே படம் பிடித்துள்ளார். லட்சுமியின் ஒப்பாரிப் பாடல் நிகழும் நிலையில் சாவு என்ற நிகழ்வைத் துயரத்தின் ஆழத்தில் செலுத்துவதையும். அதிலிருந்து விலகி களிப்பு மனநிலைக்குள் சூழலைக் கட்டமைப்பதையும் படமாக்கியதின் மூலம் இந்திய/ தமிழ் வாழ்வில் மனித இறப்பு பெற்றுள்ள இடத்தின் தத்துவ விசாரணையையும் முன் நிறுத்தியுள்ளது.
லட்சுமியின் வேலைகளைக் காட்டிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு தேவதையான சீதராக்கை அவளது படகில் காட்டுகிறது படம். அவளது அவளோடு சேர்ந்து இன்னும் இரண்டு பெண்களும் கட்டுமரத்தில் ஏறிக் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்கின்றனர். அலைகளின் வலிமையால் அலைக்கழிக்கும் கடலுக்குள் படகைச் செலுத்திச் செல்லும் இவர்களது பணி சாதனைகளுக்காகச் செய்யும் அடையாளப் பணி அல்ல. அதுதான் வாழ்க்கை. நாட்டுப் படகைக் கடலின் அலைப்பரப்பில் செலுத்தி வலையை வீசிப் பிடித்துக் கொண்டு வரும் மீன் தொழிலில் ஏற்பட்டுள்ள போட்டியையும் இயந்திரப் படகுகளால் ஏற்பட்ட நிலையையும் சேதராக்கும் அவரது சகப் பணியாளர்களும் விவரிக்கின்ற வாழ்க்கை மெல்ல மெல்ல அவர்களது கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. படகு, கடல் எனப் பயணம் செய்யும் காமிரா திடீரென்று பிணவண்டியை இழுத்துச் செல்லும் கிருஷ்ணவேணியை அவளது பணி இடத்தில் காட்டுகிறது படம்.
கிருஷ்ணவேணியின் பணி சடலங்களைப் புதைப்பது. அவளது பணி சாதாரணப் பிணங்களைப் புதைப்பதல்ல. காவல்துறையின் கவனத்துக் கொண்டு வரப்பட்ட தற்கொலை, கொலை, விபத்து போன்ற நிகழ்வுகளால் உயிரிழந்தவர்களின் பிணங்களைப் புதைப்பது தான் அவளது வேலை. இத்தகைய சாவுகளைத் தழுவியவர்கள் சொர்க்கத்திற்கும் போகாமல் நரகத்திற்கும் போகாமல் ஆவிகளாக அலைவார்கள் என்ற நம்பிக்கை இந்திய சமூகத்தில் மேலோங்கி இருக்கிறது என்பதை நினைத்துக் கொள்ளும் நாம் கிருஷ்ணவேணியின் பணிகளையும் அதோடு சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் ஒப்பாரியைத் தொழிலாகக் கொண்ட லட்சுமி, ராமேஸ்வரத்தில் மீன் பிடித்து வாழும் சீதராக்கு, புதுச்சேரியில் பிணங்களைப் புதைக்கும் கிருஷ்ணவேணி ஆகியோரின் ஒருநாள் நிகழ்வுகளை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு வந்து பார்க்கும் படி தூண்டியுள்ள லீனா இந்தப் படத்திற்குத் தேவதைகள் எனப் பெயர் சூட்டியதன் மூலம்¢ பெண்ணிய அரசியல் சார்ந்த விவாதத்திற்குள் தனது படத்தை நகர்த்தி விடுகிறார்.
தாங்கள் செய்ய நேர்ந்துள்ள வேலை சார்ந்து எந்த விதக் கேள்விகளுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று பெண்களின் வாழ்க்கையில் பெண்களுக்கு நமது அறநூல்களும் இலக்கணிகளும் உரிமையாக்கிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பன தூரப் படுத்தப் பட்டுள்ளன என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.
ஒரு ஆவணப் படம் அந்த நிகழ்வின் போது எடுக்கப்படும் உண்மைக் காட்சி என்பதை நாம் நினைத்துக் கொண்டால் இத்தகைய காட்சிகளைப் படமாக்குவதில் இருக்கும் சிரமங்கள் புரியக் கூடும். எடுக்கப்பட்ட உண்மைக் காட்சிகளை அடுக்கிக் காட்டுவதின் மூலம் ஒரு இயக்குநர் தனது பார்வைக் கோணத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஆவணப் படம் வழங்கவே செய்கிறது என்ற நிலையில் லீனாவின் பார்வையில் தான் இந்த மூன்று பெண்களின் வாழ்க்கையையும் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்க்கும் பார்வையாளர்களின் மனத்தில் இன்னும் கூடுதலான விசாரணைகளைத் தோற்றுவிக்கும் விதமாகக் காட்சிகள் அடுக்கப் பட்டிருக்கலாம். அப்படி அடுக்கும் போது அவற்றிற்கான பின்னணி இசைச் சேர்ப்பின் வழியாகவும் கூடுதல் விவாதங்களை எழுப்ப முடியும். லட்சுமி வெறியேறி வீழும் படிமக் காட்சியில் முடியும் படம் தொடங்கும் போது இதனோடு தொடர்புடைய இன்னொரு படிமத்தை உருவாக்கியிருந்தாலே மொத்தப் படத்தின் கலைத்தளமும் விவாதத்தளமும் விரிந்திருக்கக் கூடும். இவையெல்லாம் கலைசார்ந்த பிரச்சினைகள். அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு இந்த மூன்று பெண்களின் வாழ்க்கையைக் காட்டிய தேவதைகள் படத்தைப் பார்த்த எனக்கு பாரதியின் கவிதை வரி ஒன்று நினைவுக்கு வந்தது. அந்த வரி :யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் அவள் தொழிலாம். மார்ச்- 9

No comments :