February 02, 2008

2008 / ஜனவரி மாதக்குறிப்புக்கள்

எட்டுத் திக்கும் மதயானை

சிவாஜிக்கு முன்னால் பல படங்களில் நாயகியாக நடித்திருந்த போதிலும் அவற்றின் வழியாகப் பெற்றிருந்த அறிமுகங்களைப் போல பல பத்து மடங்கு அறிமுகத்தை சிவாஜி படத்தின் நாயகியாக நடித்ததின் மூலம் பெற்றார்.

ஆனால் இனியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த - தமிழின் மெகா படங்களின் இயக்குநர் சங்கர் இயக்கிய - சிவாஜி படத்தின் நாயகி ஸ்ரேயா என அறிமுகம் செய்ய வேண்டிய தேவை இல்லை. சட்ட சபையில் சூடான விவாதத்தைக் கிளம்பிய குட்டைப் பாவாடை புகழ் நடிகை ஸ்ரேயா என்று சொன்னால் அநேகமாக எல்லாருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.

தமிழ்ப் பண்பாடு எது? எனவும், இந்துப் பண்பாட்டில் பெண்களின் உடையின் அளவு என்ன? என்பதை விரிவான தளத்தில் விவாதிக்கும் வகையில் அவரது அந்தக் குட்டைப் பாவாடை புழுதியைக் கிளம்பியிருக்கிறதல்லவா? ஆம்சிவாஜி படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்க வந்த போது அவர் அணிந்திருந்த குட்டைப் பாவாடை மூலம் பல நூறு மடங்கு அறிமுகத்தை அவர் பெற்று விட்டார் என்றே தோன்றுகிறது.

சிவாஜி படத்தின் வெற்றி விழாவிற்காக மேடையில் அமர்ந்திருந்தவர்களும் சரி, பார்வை யாளர்களாக வந்திருந்தவர்களும் சரி சிவாஜி படத்தை ஒரு தடவையாவது பார்த்திருப்பார்கள் என்றே நினைக்கலாம். படத்தில் தன்னைப் பார்த்து ரசித்த ரசிகர்களுக்குக் கூடுதல் இன்பத்தை அளிக்கலாம் எனக் கருதிக் குட்டைப் பாவாடை அணிந்து வந்த நடிகை ஸ்ரேயா அன்று எல்லாத் தரப்பிலிருந்தும் கண்டனத்தை எதிர் கொண்டார். அதனால் இனி இப்படி தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக நடந்து கொள்ள மாட்டேன் என்று அறிக்கை விட்டு விட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தப் போய்விட்டார். என்றாலும் நடிகை ஸ்ரேயாவிற்குப் பல சந்தேகங்கள் தோன்றியிருக்கும் என்பது நிச்சயம்.

படத்தின் ஆடல் காட்சிகளில் தனது உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமாக ஆடை அணிந்து ஆடிய போது பார்த்து ரசித்த ரசிகர்கள் நேரில் பார்க்கத் தயங்கியது ஏன் என்ற முதல் சந்தேகத்திற்கு இன்னும் விடை கிடைத்திருக்காது. ஒரு வேளை பரவசத்தில் விசில் அடித்து ஆரவாரமாக சந்தோசத்தை வெளிப்படுத்திய ரசிகர்களின் குரலைக் கண்டனம் என்று தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமோ என்று கூட நினைத்திருக்கலாம். ரசிகர்கள் மேல் ஏற்பட்ட சந்தேகத்தை விடவும் கூடுதல் சந்தேகங்கள் இயக்குநர் சங்கர் மீது எழுந்திருக்க வேண்டும். வாஜி படத்தில் நடிக்கும் போது கவர்ச்சியான ஆடைகளைத் தந்து ஆடச் சொன்ன இயக்குநர், தான் அணிந்து வந்த குட்டைப் பாவாடை ஆபாசம் என அறிவுறுத்திச் சொல்லும் போது சந்தேகம் மட்டும் அல்ல; ஆச்சரியம் கூட ஏற்பட்டிருக்கலாம்.

தொடர்ந்து தனது படங்களின் பாடல் காட்சிகளில் நாயகிகளின் உடல் அழகைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்குப் பல விதமான உத்திகளைப் பின்பற்றுபவர் இயக்குநர் சங்கர். குறிப்பாகப் பாடல் காட்சிகளில் நாயகியின் உடல் அழகை கவர்ச்சியாகக் காட்ட வேண்டும் என்பது அவரது முதன்மையான நோக்கமும் கூட. நடிகையின் தோலின் வண்ணத்திலேயே ஆடையின் நிறமும் இருக்கும் படி தெரிவு செய்து துணி மூடிய உடலைக் கூட ஆடையற்ற உடல் போலத் தனது படங்களில் காட்டி வசூல் வெற்றியைக் குறி வைப்பவர். நாயகிகளை மட்டும் காட்டினால் போதாது எனத் தனிப் பாடலுக்கென பிரபலமான நடிகைகளை ஒருபாட்டுக்கு ஆடும் போக்கைத் தொடங்கி வைத்தவரும் கூட அவர் தான்.

தொட்டுக் கொள்வதும் உரசிக் கொள்வதும் என மென்மையான தன்மைகளை கொண்டிருந்த தமிழ்ப் படங்களின் பாடற்காட்சிகளை மோதுதல், இறுகப் பற்றிப் புரளுதல், என்பதான வன்மையான காட்சிகள் கொண்டதாக மாற்றிய முன்னோடி இயக்குநர் சங்கர் தான். பெண் உடலின் மறைவுப் பகுதிகளான மார்பகங்கள், இடுப்பு, தொப்புள் போன்றவற்றை அண்மைக் காட்சிகளாகக் காட்டி ரசிக்கும் படி தூண்டும் விதமாக அவரது பல படங்களில் அமைத்துக் காட்டியவர் சங்கர்.

இந்த அம்சங்கள் அனைத்தும் அவரது முதல் படமான ஜெண்டில்மேனில் தொடங்கிக் கடைசியாக வந்த சிவாஜி வரை தொடர்ந்துள்ளது என்பதுதான் உண்மை. இவர் தான் குட்டைப் பாவாடை உடுத்தி வந்த ஸ்ரெயாவைக் கடிந்து கொண்டார் என்று பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. இவரது அறிவுரையின் பேரில் தான் தனது மன்னிப்பு அறிக்கையைக் கூட வெளியிட்டார் என்றும் தெரிவித்துள்ளன.

இயக்குநர் சங்கர் மட்டும் அல்ல; நடிகர் ரஜினிகாந்தும் கூட ஸ்ரேயா அணிந்து வந்த குட்டைப் பாவாடையில் நௌ¤ந்து கொண்டுதான் மேடையில் அமர்ந்திருந்தார் என்பதை அந்தக் காட்சிகளைத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பார்த்திருக்கலாம். குட்டைப் பாவாடை தந்த அதிர்ச்சியில் நௌ¤ந்த ரஜினி காந்தின் முகத்தைத் தொலைக் காட்சிக் காமிரா பல தடவை அண்மைக் காட்சியாகக் காட்டியது.பொது மேடைகளில் பக்தி வழிப்பட்ட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள் வதோடு,எப்படியாவது முதல்வர் கலைஞர் கருணாநிதி யையும் பக்தி வழிக்கு- கடவுள் நம்பிக்கையின் பக்கம் திருப்பி விடும் முயற்சியைத் தொடர்ந்து செய்யும் நடிகர் ரஜினிகாந்த் அதே ஸ்ரேயாவை படத்தின் காட்சிகளில் இதைவிடக் குறைவான ஆடையில் மிக அண்மையில் பார்த்தபடி ஆடிப் பாடியவர். அப்பொழுது அவருக்கு அந்த ஆடைகள் ஆபாசமாகத் தோன்றவில்லை.

ஒரு பொது இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய கூட்டத்தின் முன்னால் , அதுவும் தமிழக முதல்வர் அமர்ந்திருக்கும் மேடையில் குட்டைப் பாவாடையில் வருவது மட்டுமே ஆபாசமாகத் தோன்றுகிறது என்பது எவ்வளவு போலித்தனம். படத்தில் தந்த அனுபவத்தை நேரிலும் தரலாம் என்ற நினைப்பில் வந்த ஸ்ரேயா அன்று எதிர்கொண்டவை கண்டனங்கள் என்றாலும் அவரது மனத்தில் தமிழர்களின் போலித்தனம் பற்றிய எண்ணங்களும் அலையோடத்தான் செய்திருக்கும். நடிகர் ரஜினிகாந்துடன் தான் நடித்த பாடல்காட்சிகளில் தன்னைத் தினசரி பார்த்துக் கொண்டே இருக்கும் ஒரு ரசிகன் நேரில் அவ்வாறு பார்க்க விரும்பவில்லை என்பது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?

பெண்ணுடல், பெண் ஆடை, பெண்குரல், பெண் கூற்று , பெண் நடவடிக்கை எனப் பெண்களை மையப் படுத்திப் பண்பாட்டுக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் அமைப்புக்களும் தனிமனிதர் களும் கூட மரத்தை விட்டு விட்டு இலையைப் பிடித்து ஆட்டிப் பார்க்கும் வேலையைத்தான் செய்கிறார்கள். ஸ்ரேயா குட்டைப் பாவாடை உடுத்தி வந்ததைக் கண்டித்து நீதிமன்றம் செல்லும் பொது நல விரும்பிகள், அவரை இதைவிடக் குறைவான ஆடையில் காட்டிய திரைப்படத்திற்கெதிராக வழக்குத் தொடுக்காமல் தவிர்ப்பது எப்படிச் சரியாக இருக்கும் ?பொது மேடைகள் மட்டும் புனிதமானதாக இருந்தால் போதுமா? அதனால் மட்டுமே தனிமனிதனின் ஆன்ம வெளியின் புனிதம் காக்கப்படுதல் சாத்தியமா?

நமது குடும்ப வெளிக்குள் நுழையும் தொலைக் காட்சிகளில் இடம் பெறும் ஆட்டம் பாட்டங்கள், திரைப்படக்காட்சிகள், போட்டி நடனங்கள் என அனைத்திலும் பெண்கள் என்னவாகக் காட்டப்படுகின்றனர். கவர்ச்சி ததும்பும் பலூன்களாகத் தானே! அதையெல்லாம் எதிர்க்காமல் முதல்வர் முன்னால் வந்த ஒன்றை மட்டும் விவாதித்துக் கொண்டிருப்பதும் கூட நமது போலித்தனங்களின் வெளிப்பாடுதான்.

தொலைக்காட்சிப் பெட்டிகளின் அலைவரிசைகளில் வேண்டாததை மாற்றிக் கொள்ளும் சாதனங்கள் கைகளில் இருந்தாலும் நாம் திசை தெரியாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கும். மாற்றும் ஒவ்வொரு அலைவரிசையிலும் ஆட்டங்கள், பாட்டுக்கள், கண்ணீர்கள், பழிவாங்கல்கள் என்பனவே காட்டப்படும்போது தப்பிப்பது எப்படி?எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடனின் நாவல் தலைப்பு இது. இன்றைய ஊடகப் போட்டியையும் அவற்றில் வழியும் ஆபாசங்களையும் அபத்தங்களையும் கூட அதே தலைப்பால் சுட்டலாம் என்றே தோன்றுகிறது. ஜனவரி, 31ஜல்லிக்கட்டு : வட்டாரப் பண்பாட்டு அடையாளம்

படப்பிடிப்புக் கருவிகளுடன் தவிக்கும் செய்தி ஊடகக்காரர்களின் ஒருவார காலத் தவிப்பாக ஆகி விட்டது ஜல்லிக்கட்டு. காளைகளால் நிரம்பி வழியும் வாடிவாசலுக்கும், வழக்கறிஞர்களின் வாதங்களால் நிரம்பி வழியும் நீதிமன்ற வாசலுக்கும் இடையே அலையும் ஊடகங்களின் பரபரப்பு அடுத்த ஆண்டாவது இருக்காது என எதிர்பார்ப்போம். அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என நினைப்பவர்கள் சில செய்திகளை அறிந்து கொள்வது நல்லது.

மிருகவதைத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எந்த அளவு நியாயமானது.? மனிதர்களுக்காக இந்த உலகமும் இந்த உலகத்தில் உள்ள உயிர்களும் படைக்கப் பட்டிருப்பதாகக் கருதிக் கொண்டு மனிதர்கள் வதைக்கும் மிருகங்களும் பறவைகளும் தினந்தோறும் எத்தனை எத்தனை? அங்கீகரிக்கப் பட்ட கோழிக்கடைகளிலும் கறிக்கடைகளிலும் வெட்டப்படும் மிருகங்களை எந்த வதைச் சட்டத்தின் மீது தடை செய்ய முடியும். மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் வந்து விடும் என்பதற்காக லட்சக் கணக்கான கோழிகள் கடந்த பத்து நாட்களாகக் கொல்லப்படுகின்றனவே? அதையெல்லாம் சட்டத்தினைக் காரணம் காட்டித் தடுக்க முடியுமா? ஜல்லிக்கட்டில் மட்டும் தான் மிருகங்கள் வதை செய்யப்படுகின்றனவா?இப்படியெல்லாம் கேள்வி எழுப்புவது விதண்டாவாதம் தான். ஒரு விதண்டாவாதத்திற்கீடாக இன்னொரு விதண்டா வாதம் தானே பதிலாக இருக்க முடியும்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்தின் அடையாளம் அல்ல; அது பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்று. இன்னும் சொல்லப்போனால் ஒட்டு மொத்தத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று கூட அல்ல தான். அப்புறம் எதற்குத் தமிழ் நாட்டில் ஜல்லிக் கட்டு நடத்த வேண்டும் எனக் கேட்கலாம். ஜல்லிக் கட்¢டுதான் தமிழர்களின் அடையாளம் ; அதை அழிந்து விடாமல் காக்க வேண்டும்; அதனால் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும் என யாரும் கேட்கவில்லை; கோரிக்கையும் வைக்கவில்லை. அப்படி நடத்துவோம் என அரசும் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

ஜல்லிக்கட்டைத் தங்களின் அடையாளமாகக் கருதும் ஒரு சிறு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்திக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். ஜல்லிக்கட்டு பண்டைய தமிழகத்தின் பரப்பிலும் கூட மொத்தத் தமிழ் நாட்டிலும் இருந்த அடையாளம் அல்ல. வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்களின் அடையாளம் தான். சங்க காலத்தில் வேளாண்மைவளம் நிரம்பிய மருத நிலப் பின்னணியில் தான் காளைகளை அடக்கும் வீர விளையாட்டாக ஏறு தழுவதல் இருந்துள்ளது. ஏறு தழுவிய ஆண்மை மிக்கவன் மீது பெண் காதல் கொண்டாள் என்றுதான் இலக்கியங்கள் சொல்கின்றனவே ஒழிய காளையை அடக்கினால் தான் திருமணம் என்று முன் நிபந்தனை எதுவும் இல்லை.

ஜல்லிக்கட்டை மையப் படுத்தி இப்போது நடக்கும் விவாதங்கள் மறைமுகமாக வேறு சில உண்மைகளை உணர்த்துவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் வாழ்க்கை முறை, புதிய புதிய அடையாளங்களோடு நவீன வாழ்முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது; அதனைத் தடுக்கும் விதமாகச் சில பண்பாட்டுக் கூறுகள் முன் நிற்கின்றன. அவற்றை விட்டு விடுவதா ..? தொடர்ந்து பின்பற்றுவதா ..? என்று முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறது தனிமனித மனம். அந்தத் தவிப்பின் தொடர்ச்சியாக முடிவு எடுக்கும் வேலையை, மனம் என ஒன்றில்லாத அரசு நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட முனைகின்றனர் மனிதர்கள். அந்த நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள சட்டங்கள் என்ற அளவுகோலைப் பயன்படுத்தி முடிவுகளை எடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்கின்றன. ஆனால் பண்பாட்டுக் கூறுகள் அவ்வளவு சுலபமாகச் சட்ட விதிகளுக்குக் கட்டப்படக் கூடியவை அல்ல.

இன்று பிரபலமாக ஜல்லிக்கட்டை நடத்தும் பாலமேடும் அலங்காநல்லூரும் வைகைப் பாசன வயல்வெளிகளைக் கொண்ட கிராமங்கள். பொறுப்பேற்று நடத்தும் அம்பலகாரர்கள் அந்தக் கிராமங்களில் நிலவுடைமையாளர்கள். ஜல்லிக் கட்டுக் காளைகளின் உரிமையாளர்களும் நிலவுடைமையின் காரணமாகப் பெருந்தனக்காரர்களாக அறியப்படுபவர்கள். ஆனால் காளை களை அடக்குபவர்கள் அத்தகைய பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்கள் அல்ல. அதனால் ஜல்லிக்கட்டில் ஏற்படும் உயிரிழப்புகளும் படுகாயங்களும் அப்பாவிக் குடும்பங்களைத் தான் பாதிக்கிறது என்ற வாதமும் இங்கே முன் வைக்கப்படுகிறது. இந்த வாதத்தோடு பண்டைய கிரேக்க சமுதாயங்களில் நிலவிய அடிமைகளின் மோதலைக் கண்டு களிக்கும் பிரபுத்துவ மனநிலை யோடு தொடர்புபடுத்தியும் கூட வாதிடுகின்றனர். ஆனால் இத்தகைய வாதங்கள் அடிப்படைகளற்ற வாதங்கள் எனச் சுலபமாகச் சொல்லி விடலாம்.

அடிமைகளை மோதவிட்டு வேடிக்கை பார்த்த பிரபுக்களைப் போலக் குரூர இன்பம் இங்கே கிடையாது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி வாடி வாசலுக்குள் அனுப்புவதில்லை. தான் வீரன் எனக் கருதும் ஒருவன் , அதை வெளிப்படுத்த விரும்பித் தானே கோதாவில் இறங்கிக் காளையை அணைகிறான். இத்தகைய வெளிப்பாடு ஒரு காலகட்டத்திய- வட்டாரம் சார்ந்த வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் சமய நம்பிக்கை சார்ந்த நேர்த்திக் கடனில் இருக்கும் கேள்விகளற்ற நம்பிக்கையும் நேர்த்திக் கடனைச் செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் கூட இதில் கிடையாது.

கடந்த நூறு ஆண்டுகளில் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நின்று போயுள்ளன. வேளாண்மை சார்ந்த பண்பாட்டிலிருந்து விலகும் போது அதன் கொண்டாட்டங்களையும் களியாட்டங்களையும் மதிப்பீடுகளையும் மனிதர்கள் விட்டு விடுவார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. தெருக்கூத்து மட்டும் அல்ல. வட்டாரம் சார்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த நாட்டார்கலைகள் பலவும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. சென்னை சங்கமம போன்ற வருடாந்திர நிகழ்வுகளால் அவற்றைக் காட்சிப் பொருளாக ஆக்க முடியும். ஆனால் அதன் மொத்த உயிர்ப்புடன் வாழ வைக்க முடியாது. அப்படி வாழ வேண்டுமானால் நிகழ்கால மனிதனின் ஓய்வுப் பொழுதைத் தனதாக்கும் கூறுகளைக் கொண்டதாக அவை மாற வேண்டும்.

நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் நுழையும் ஆவேச வேகத்துடன் இருக்கும் தமிழர்களுக்கான கலைவடிவமாகத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் நிகழ்வுகள் ஆகிக் கொண்டிருக்கின்றன. அவற்றோடு நாட்டார் கலைகள் போட்டியிட்டு உயிர் வாழ்வது சாத்தியம் என்று சொல்ல முடியாது. மக்களின் பண்பாட்டு அடையாளங்களான சடங்குகள், விழாக்கள் ஆகியவற்றில் நுழைய அரசுக்கும் அதன் துணை அமைப்புக்களான காவல்துறை, நீதிமன்றம் போன்றவற்றிற்கு எந்த அளவு இடம் தரலாம் என்ற முக்கியமான கேள்வியை ஜல்லிக்கட்டு எழுப்பியுள்ளது.

இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு பிறப்பித்த கோயில்களில் உயிர்ப் பலித் தடைச் சட்டம் கூட அத்தகைய கேள்வியை எழுப்பி விட்டுப் பின் வாங்கிய ஒன்றுதான். படித்தவர்களும் , அதனால் நடுத்தர வர்க்கமாக மாறிவிட்ட மனிதர்களும் உயிர்ப்பலி தடை, ஜல்லிக் கட்டுக்குத் தடை போன்றவற்றிற்கு நேரிடையாக இல்லையென்றாலும் மனத்தளவில் ஆதரவு தெரிவிக்கத் தான் செய்வர். ஆனால் அதனை ரத்தமும் சதையுமாகக் கருதி, வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி வைத்திருக்கும் மனிதர்கள் அப்படிக் கருது வதில்லை. அதற்குப் பதிலாகச் சிறுபான்மைப் பண்பாட்டின் மீது பெரும்பான்மைப் பண்பாடு ஆதிக்கம் செலுத்த நினைப்பதாகத் தான் கருதுவார்கள். அப்படிக் கருதும் போது எழும் உணர்வெழுச்சிகள் வன்முறைக்கு இட்டுச் செல்லும். தனது வீரத்தைக் காட்ட வாய்ப்பளிக்கும் ஜல்லிக்கட்டில் உயிரைத் துச்சமாக மதித்து, காளைகளை அடக்கத் துடிக்கும் இளைஞர்களைப் போலப் பண்பாட்டுக் கூறுகளைக் காப்பாற்ற விரும்புவது நனவிலி மனத்தின் கூட்டுச் செயல்பாடு என்பது உளவியல்.

வட்டாரம் சார்ந்த அடையாளங்கள் மதம், மொழி, இனம் என்ற பெரிய கதையாடல் சார்ந்த அடையாளங்கள் போன்றன அல்ல. மதம், மொழி, இனம் சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள் பல நேரங்களில் தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முற்போக்கான பார்வையை வளர்த்தெடுப்பதற்கும் தடைகளாக இருக்கின்றன. ஆனால் வட்டாரம் சார்ந்த பண்பாட்டு அடையாளம் அப்படியொரு தடையாக இருப்பதில்லை என்பதையும் அரசும் நீதிமன்றமும் கவனம் கொள்ள வேண்டும்.                                                                                                                                                                                                                    ஜனவரி, 22
புதிய புத்தாண்டே வருக.

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டின் ஆட்சியைப் பிடித்து நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் சி.என். அண்ணாதுரை முதல்வராக ஆனவுடன் முதன்மை அளித்துச் செய்தவைகள் இரண்டு. ஒன்று சென்னை மாகாணம் என அழைக்கப் பட்ட பெயரைத் தமிழ் நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது படியரிசித் திட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டில் ஒன்று லட்சியம் சார்ந்தது; இன்னொன்று வாக்குறுதிகள் சார்ந்தது.

கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய கலைஞர் இதுவரை நிறைவேற்றியவைகளில் பெரும் பாலானவை வாக்குறுதிகள் சார்ந்தவைகள் தான். இலவச வண்ணத் தொலைக் காட்சித் திட்டம் , இரண்டு ரூபாய்க்கு ஒரு படி அரிசி; அரசு ஊழியர்களின் நிறுத்தி வைக்கப் பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியது;நிலமற்றோருக்கு நிலப்பட்டா வழங்குதல் என்பவையெல்லாம் தேர்தல் அறிக்கை யில் வாக்குறுதிகளாகத் தரப்பட்டவை.

ஓர் அரசியல் இயக்கத்திற்கு வாக்குறுதிகளின் நிறைவேற்றம் என்பது உடனடி விளைவுகளைத் தரவல்லவை. எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றாலும், மக்கள் நல அரசாங்கத்தை நடத்துவதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஜனநாயக அரசியலில் இருக்கிறது. அப்படி நிறைவேற்றப்படும் வாக்குறுதிகள் பெரும் பாலும் ஒட்டுமொத்தப் பரப்பையும் கணக்கில் கொண்டு அளிக்கப்படுவன அல்ல. சமூகத்தின் சில தரப்பினரை அல்லது ஒரு சில குழுக்களைத் திருப்திப் படுத்தும் நோக்கம் கொண்டவை . ஆட்சிக்கு வரும் கட்சி இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் தொடர்ந்து வாக்கு வங்கியைத் தக்க வைக்க இயலும். தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வந்த தமிழக முதல்வர் கலைஞர் வாக்குறுதிகளைத் தாண்டி இலட்சியங்களை நினைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளார் என்பதைச் சமீபத்திய அறிவிப்பு ஒன்று உறுதி செய்துள்ளது.

கடந்த வாரம் நடந்த சென்னை சங்கமம் என்னும் பெருந்திருவிழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்பின் சாரம் இதுதான் : இனிவரும் ஆண்டுகளில் தைமாதம் முதல் தேதி , தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகக் கொள்ளப்படும்; அதற்கான அறிவிப்பை அரசாங்கம் செய்யும் என்பது தான் அந்தப் பேச்சின் சுருக்கம். மனிதர்கள் கூட்டமாகப் புத்தாண்டின் பிறப்பை வரவேற்றுக் கொண்டாடும் நிகழ்வுகள் உலகெங்கும் உள்ள பல்வேறு சமூகங்களில் பல்வேறு விதமாக நிகழ்கின்றன. அந்நிகழ்வுகளில் எல்லாம் ஒருவித ஒற்றுமை காணப்படுவதாக சமூக மானிடவியல் ஆய்வுகள் சொல்கின்றன. வாழிடம் உருவாக்கும் வாழ்க்கை முறையின் மகிழ்ச்சியான கால கட்டத்தைக் கொண்டாட்ட காலமாகக் கொள்வது பழஞ்சமூகங்களின் பொது இயல்பு.

கொண்டாட்டக் காலத்தின் தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்வதும் அப்பொது இயல்பினுள் அடங்கும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் எனத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனர் தமிழர்களின் வாழிட எல்லைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். வாழிட எல்லையான தமிழ் நிலப்பரப்பிற்குள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலப்பகுதிகள் இருந்தன எனச் சொல்லும் தொல்காப்பியம் ,அப்பிரதேசத்தின் தட்ப வெப்ப நிலையை முன்பனிக் காலம்,பின்பனிக் காலம்,கார் காலம், கூதிர்காலம், இளவேனிற்காலம், முதுவேனில் காலம் எனப் பிரித்தும் காட்டியுள்ளது. இந்நிலப் பகுதிகளில் நிலவிய தட்பவெப்ப நிலைக்கேற்ப முக்கிய பயிர்களாக இருந்தவை நெல்லும் திணையும் ஆகும். குறிஞ்சியிலும் முல்லையிலும் திணை பயிரிட, மருதநில வேளாண் மக்கள் நெல்லைப் பயிரிட்டு வளமாக வாழ்ந்த காட்சிகளைச் செவ்வியல் இலக்கியங்களான அகப்பாடல்களிலும், புறப்பாடல் களிலும் காண்கிறோம்.மருதநில அரிசிக்காக நெய்தல் நில உமணர்கள் உப்பையும் மீனையும் பண்ட மாற்றுச் செய்த காட்சிகளை அவ்விலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

திணை அரிசியையும் வரகரிசியையும் நெல்லரிசியையும் அடிப்படை உணவாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் அதனை உற்பத்தி செய்ய உதவிய வான்மழையை வணங்கிப்போற்றிய சமூகம். நீரின்றி அமையாது உலகு என உணர்ந்த தமிழர்களின் குரல் மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!! எனக் கொண்டாட்ட காலத்தில் வெளிப் பட்டதைச் சிலப்பதிகார வரிகளால் உணர்கிறோம். மழைநீரின் உதவியால் உற்பத்தி செய்த அரிசி வகைகளை உற்பத்தி செய்த தமிழர்கள் அதற்குக் காரணமான நிலத்தையும் நீரையும், ஆட்டையும் மாட்டையும், கன்று காலிகளையும் வணங்குவதற்கான கொண்டாட்ட நாளாகக் கொண்டிருப்பது பொங்கல் பண்டிகை. ஒட்டு மொத்தத் தமிழ் பரப்பிலும் கொண்டாட்டப்படும் பொங்கலில் படைக்கப்படும் படையல் பொருட்கள் அவர்களின் வேளாண்மை உற்பத்திப் பொருட்களே.

புதுமணத் தம்பதிகளுக்கு வழங்கும் பொங்கல் படியில் ஒரு புதுக் குடும்பத்தைத் தொடங்குவதற்கான அடிப் படைப் பொருட்களைத் தருகிறார்கள் தமிழர்கள். அண்டா,பானை, சட்டி, சருவம், அகப்பை,கரண்டி, உப்புப் பாத்திரம் எனப் பாத்திரங்களோடு அரிவாள் மனை போன்ற துணைக் கருவிகளோடு அரிசி, பருப்பு, எனச் சமையல் பொருட்களையும் அளித்துப் புதுக்குடித்தனம் தொடங்கும் நாளாகவும் பொங்கல் தினம் இருந்திருக்கும் என நினைக்கும்படியான அடையாளங்கள் அச்சீர்களில் காணப் படுகின்றன.

மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களைக் கழித்து விட்டுக் குடியிருக்கும் இல்லத்தைப் பூசி மெழுகிப் புதுக்கிப் பொங்கலுக்குத் தயாராகும் தமிழர்கள் அதைக் கொண்டாடும் போது எல்லாம் புதியனவாக இருக்க வேண்டும் எனக் கருதியதைக் காண்கிறோம். புதுநெல்லிருந்து எடுக்கப்பட்ட அரிசியைப் புதுப்பானையில் இட்டு, புதுமஞ்சள், புதுக்கரும்பு, புத்தாடை என எல்லாவற்றிலும் புதியனவற்றை விரும்பி யிருக்கிறார்கள்.

தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகச் சித்திரை மாதம் தமிழ் வாழ்வோடு இத்தகைய நெருக்கம் கொண்டதல்ல என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி சார்ந்து வாழும் தமிழர்கள், அந்த மாதத்தில் மணவிழாக்களை நடத்துவதை அதிகம் விரும்புகிறார்கள். அதிக பட்ச வெப்பத்தை உமிழும் கோடை காலமான சித்திரை மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளைத் தமிழர்கள் நடத்துவதில்லை.

சித்திரை மாதத்தைத் தொடக்கமாகக் கொண்ட அறுபதாண்டுச் சுழற்சிக் கணக்கில் தமிழின் எந்த அடையாளமும் வெளிப்படவில்லை என்பதை அந்தப் பெயர்களை வாசிக்கும் போதே நாம் உணர முடியும். பிரபவ,விபவ எனத் தொடங்கி குரோதன,அக்ஷ¤ய என முடியும் அறுபது பெயர்களில் ஏதொன்றும் தமிழ்ப் பெயர்களாக இல்லை. ஒரு குறிப்பிட்ட வாழிடம் உருவாக்கும் அடையாளங்களே ஒரு சமூகத்தின் தனி அடையாளங்களாக இருக்கின்றன.

வாழிடத்தின் அடையாளம் என்பது அப்பகுதிக்கான தட்பவெப்ப நிலை, அதனால் விளையும் பயிர்கள், அதனால் ஏற்படும் உணவுப் பழக்க வழக்கங்கள், ஆடைகள், ஓய்வுப் பொழுதுகள் எனத் தொடர்ச்சியின் கண்ணிகள். இவையே ஒரு சமூகத்தின் பண்பாடு என அடையாளப் படுத்தப் படுகிறது. தமிழ் வாழ்வின் அடையாளங்களை முழுமையாகத் தன்னகத்தே கொண்டுள்ள பொங்கலை விடவும் வேறெந்தப் பண்டிகையும் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக இருக்க முடியாது.

ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற வேண்டியனவற்றுள் வாக்குறுதியில் ஒன்றும் இலட்சியங்களில் ஒன்றும் இருக்க வேண்டும் என நினைத்தவர் அண்ணா. அவரே நிறைவேற்றியிருக்க வேண்டிய இலட்சியங்களில் ஒன்று தைமாதத்தை முதலாகக் கொண்ட தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு. அவரது இலட்சியங்களில் ஒன்று நாற்பதாண்டுகளுக்குப் பிறகாவது நிறைவேறப் போகிறது. அடுத்து ஆண்டு தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டாக வரப்போகிறது என்ற அறிவிப்பு வந்துள்ளது. புதிய புத்தாண்டிற்கு முன் கூட்டியே வரவேற்பைச் சொல்வோம். புத்தாண்டு போற்றுதும்! புத்தாண்டு போற்றுதும்!! ஜனவரி, 14

பரபரப்பின் விளைவுகள்
வாழ்க்கையின் திருப்புமுனை ஒவ்வொருவருக்கும் எப்படி வந்து சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தற்செயலாக நடந்த ஒரு வினையோ அல்லது சொன்ன ஒரு வாக்கியமோ கூட ஒருவரைப் பிரபலமாக்கி விடும். அதன் மூலம் அவரது வாழ்க்கை ஓட்டம் பெரிய திருப்பத்தில் பயணமாகி விடும். ஏற்படும் திருப்பம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும் என்பதை அதற்குப் பிந்திய வாழ்க்கை தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். இதற்குப் பல உதாரணங்களை உலக அளவிலும் காட்ட முடியும்; தமிழக அளவிலும் சொல்ல முடியும்.

நடிகை குஷ்பு தமிழ்நாட்டில் பிரபலமாக இருப்பதற்கான காரணங்கள் தற்செயலானவை அல்ல. தனது தாய்மொழியான இந்தியில் குழந்தைப் பருவத்திலிருந்து நடித்து அனுபவங்கள் பெற்றவர். பதினாறாவது வயதில் வருஷம் 16 என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர். முதல் படத்தில் பெற்ற நடிப்புத்திறமையைத் தக்கவைத்துக் கொண்டு பலவகையான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் நடிகை என்ற பெயரைப் பெற்றவர். தமிழ் சினிமாவிலிருந்து சொந்த வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் முன் மாதிரிகளைத் தேர்வு செய்யும் ரசிகனின் பொதுப்புத்தி நாயக நடிகனை நாட்டை வழி நடத்தும் தலைவனாக ஆக்கிப் பார்க்கிறது. நடிகையைத் தனது கனவுக்கன்னியாக நினைத்து அந்தரங்க வெளிக்குள் குடும்பம் நடத்துகிறான்.

தமிழ்ப் பொதுபுத்தி குஷ்புவையும் விட்டு விடவில்லை. அவரது உடல் அழகுக்காக உணவுப் பண்டங்களுக்கு அவர் பெயரை வைத்துச் சொல்லிப் பார்த்தார்¢கள், அவருக்குக் கோயில் கட்டி விழா எடுக்கும் அபத்தத்தைக் கூடச் செய்தார்கள். இவை எதற்கும் அவர் பொறுப்பு அல்ல என்பதால் ஊடகத்தின் கவனம் தகவல் தருவது என்ற அளவோடு ஒதுங்கிக் கொண்டது. அதே போல் குஷ்புவை மையப்படுத்தி உருவாக்கப்படும் சர்ச்சைகள் எதற்கும் அவர் பொறுப்பல்ல. அதனால் அவர் ஒளிவெளிச்சம் உண்டாக்க விரும்பி இவ்வாறு நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர் மீது சுமத்த விட முடியாது என்பதுதான் நடுநிலையான பார்வையாக இருக்க முடியும்.

திருமணத்திற்கு முன் ஆண்-பெண் உடலுறவு பற்றி குஷ்பு சொன்ன கருத்து தற்செயலானதா? ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடா? என்று தீர்மானிக்காத தமிழ் பொதுப்புத்தியும் அப்பொதுப் புத்தியை உருவாக்கும் ஊடகங்களும் தொடர்ந்து அவரை விளம்பரத்திற்காகச் சர்ச்சைகளை உருவாக்குபவராகக் காட்டிக் கொண்டிருக்கின்றன.பள்ளிக் கல்வியிலேயே பாலியல் கல்வியின் அவசியம் பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். இந்திய சமூகத்தில் நிலவும் சில கட்டுப் பெட்டித்தனத்திற்கும், உடல் சார்ந்த நோய்களுக்கும், குறைபாடுகள் கொண்ட குழந்தைப் பிறப்பிற்கும் பாலியல் சார்ந்த அறிவும் புரிதலும் இல்லாததே காரணங்கள் என மருத்துவ அறிவியல் கூறுவதன் பின்னணியில் பாலியல் கல்விக்கான பரிந்துரைகளைச் செய்வதற்கு ஆணையமே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை அது பற்றிக் கருத்துக் கூறுவது எப்படித் தவறாகும்?படப்பிடிப்பின் போது உருவாக்கப்படும் தற்காலிக வழிபாட்டிடத்தில் காலணியுடன் செல்வதும், காலணியுடன் அமர்வதும் சினிமாக்காரர்கள் அனைவரும் செய்யும் ஒன்று என்றாலும், குஷ்புவின் செயல்பாடு மட்டும் குறி வைத்துத் தாக்கப்படுகிறது.எப்போதும் ஒளிவெளிச்சத்தை விரும்புகிறவர்கள் தினசரி எதையாவது சொல்வதன் மூலமும் செய்வதன் மூலமும் சர்ச்சைகளை உருவாக்கி அதன் மையத்தில் சிரித்துக் கொண்டு நிற்பார்கள். அவர்கள் சொல்வதற்கு அவர்களே உதாரணமாக இருக்கிறார்களா என்ற கேள்வியைக் கூட கேட்டுப் பார்த்துக் கொள்வதில்லை. தனது வேலை அறிவுரைகளை வழங்குவதும், வெளிச்சப் பெருக்கில் இருப்பது மட்டுமே என நினைக்கிறவர்கள் தான் தமிழ் அரசியலையும் பண்பாட்டையும் தீர்மானிக்கிற சக்திகளாக வலம் வருகிறார்கள்.

ஒரு புத்தக வெளியீட்டில் தனது கருத்துச் சுதந்திரத்தையும் அடையாளத்தையும் உறுதியாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்த விரும்பிய குஷ்புவின் வெளிப்பாடு நிச்சயம் ஒளிவெளிச்சம் விரும்பிய செயல் அல்ல. அதை மிகுந்த பொறுப்புணர்வோடு எதிர்கொண்ட விடுதலைச்சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பேச்சும் செயல்பாடுகளும் கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதியின் நாகரிகமான வெளிப்பாடு. ஆனால் அவரது கட்சியினரை உணர்ச்சி வசப்படச் செய்து கொடும்பாவி எரிப்புக்கும் கண்டன அறிக்கைக்கும் தூண்டிய ஊடகங்களின் வேலை பொறுப்பானவைகள் அல்ல. பரபரப்பை உருவாக்கும் இதழியல் போக்கின் வெளிப்பாடு என்ற வகைப்படுத்தத் தக்க செயல்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வை நமது தினசரிப் பத்திரிகைகள் சித்திரித்ததன் பின்னணியில் தான் கடலூர் மாவட்டத்திற்குள் குஷ்புவை நுழைய விட மாட்டோம் என அறிக்கை வெளியிட்ட விடுதலைச்சிறுத்தைகள், நாகர்கோவிலில் குஷ்புவின் கொடும்பாவியைக் கொளுத்தினார்கள்.

உண்மைக்கு மாறான செய்தியின் பேரில் வினையாற்றும் போது இயக்கத்திற்கு ஏற்படும் இழப்பைத் திருப்பிக் கொண்டு வருவது இயலாது என்பதை அறியாமலேயே இவையெல்லாம் நடந்து விடுகிறது.ஆண் - பெண் உறவு பற்றிய தனது கருத்து சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை; புரிந்து கொள்ளப்படாமலேயே எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் தலைவர் தொல்.திருமாவளவன். அவரை நேரில் சந்திக்கும் இந்த வாய்ப்பைத் தனது கருத்தைப் புரிய வைக்கப் பயன் படுத்த வேண்டும் என நினைத்த குஷ்புவின் நோக்கத்தில் பெரிய தவறு இருப்பதாகத் தோன்றவில்லை.

புத்தக வெளியீட்டு மேடையில் தனது கருத்தையும் நிலைபாட்டையும் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட தொல். திருமாவளவனும் அந்தக் கருத்திற்கு நாங்கள் எதிரி அல்ல; அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்- போகிற போக்கில் ‘தமிழ் நாட்டுப் பெண்கள் அனைவரும் திருமணத்திற்கு முன்பு உடல் உறவு வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்’ என்ற அர்த்தத்தில் சொன்னதைத் தான் நாங்கள் எதிர்த்தோம்; போராட்டங்கள் நடத்தினோம் எனத்தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். அத்தோடு உங்கள் மீது வழக்குகள் போட்டவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அல்லர் என்ற உண்மையையும் புரிய வைத்துள்ளார்.

குஷ்பு தனது நிலைபாட்டைப் புரியவைக்க முயன்ற அதே மேடையைப் பயன்படுத்தித் தொல்.திருமாவளவனும் தங்கள் கட்சியின் நிலைபாட்டையும் செயல்பாடுகளையும் குஷ்புவிற்கும் புரிய வைத்துள்ளார். பரஸ்பரம் புரிதலை உண்டாக்கும் விதத்தில் நடந்த அந்த மேடை நிகழ்வில் கவிஞர் அறிவுமதியின் தூண்டுதலான பேச்சுக்கள் மட்டுமே சர்ச்சைகளை உண்டாக்கும் விதமாக இருந்துள்ளது. ஆனால் ஊடகங்கள் அவரை விட்டு விட்டு குஷ்புவை சர்ச்சையின் நாயகி என்பதாகச் சித்திரிப்பது ஏன்? அவர் பிரபலமான நடிகை என்பதாலா? நிகழ்காலத்துச் சமூகம் யோசிக்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட பெண் என்பதாலா?

தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதார அடித்தளத்தில் இயங்கும் இன்றைய வாழ்க்கை ஓட்டம், எந்த ஒரு துறையிலும் போட்டிகளை அனுமதிப்பதை வரவேற்கவே செய்கிறது. போட்டிகளை அனுமதிக்காத மனிதர்களை, அமைப்புக்களை, இயக்கங்களைப் பழைமைவாதிகள் அல்லது வளர்ச்சிக்குத் தடையானவர்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைக்கலாம் என்ற முடிவுக்கும் கூடப் போய்விடுகிறது. ஊடகங்கள் இப்படி மட்டுமே செயல்பட முடியாது . பொறுப்பற்ற சர்ச்சைகளை உருவாக்குவதற்குப் பதிலாக முன் மாதிரிகளை உருவாக்குவதிலும் முன் மொழிவதிலும் ஊடகங்கள் போட்டி போடலாம். நிகழ்காலச் சமூகத்திற்கு அது தான் தேவை.

ஜனவரி, 9