சிதைக்கப்படும் அமைப்புகள்

பத்திரிகைகளின் செய்திக் கிடங்குகளில் நீதிமன்றங்களும் ஒன்று என்பது இதழியல் மாணவர்களின் பாலபாடம். இதழியல் கல்வி, ஊடகக் கல்வியாக மாறிவிட்ட சூழ்நிலையிலும் நீதிமன்றங்கள் அந்த நிலையை விட்டுக் கொடுத்து விடவில்லை. அச்சு ஊடகங்களுக்கும் காட்சி ஊடகங்களுக்கும் நீதிமன்றங்கள் செய்திகளை வழங்கும் கிடங்குகளாகவே இருக்கின்றன ; சில மாற்றங்களுடன்.நீதிமன்றங்களைச் செய்திக் கிடங்காக வைத்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுபவை பெரும்பாலும் செய்திக் கட்டுரைகளாக இருந்தன.
அதற்கேற்ப நிதானமும் சட்டத்தின் நுட்பங்களும் வாசகர்களுக்கு வந்து சேரும் நிலைமையும் இருந்தது. அந்த நிலைமை இப்பொழுது முடிவுக்கு விட்டது. இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்கள், பரப்பூட்டும் தலைப்புச் செய்திகளை வழங்கும் அமைப்புகளாக மாறி வருகின்றன.தொலைக்காட்சிகளின் செய்தித் தொகுப்பில் தினசரி உயர் நீதிமன்றங்கள் அல்லது உச்சநீதிமன்றக் கட்டிடங்கள் காட்சி ரூபத்தில் வந்து போகின்றன. பல நேரங்களில் நீதிமன்றக் கட்டிடத்தின் பின்புலத்தில் வழக்குரைஞர்கள் தொலைக்காட்சிக் காமிராக்களுக்குப் பேட்டி ளிக்கின்றனர்.

அண்மைக்காலத்தில் சில வழக்குகளில் நீதிமன்றங்கள் தரும் தடைகளும் விடைகளும் ஊடகங்களில் இடம் பெறும் தொடர்கதைகள் மற்றும் தொடர்களின் இடத்தையும் பிடித்துக் கொள்ளும் அளவுக்குத் திடீர் திருப்பம் கொண்டனவாகவும் சுவாரசியம் நிறைந்தனவாகவும் மாறி வருகின்றன. இப்படிச் சொன்னவுடன் வந்தனா- ஸ்ரீகாந்த் , பிரசாந்த்-கிரகலெட்சுமி போன்ற திரைப்படப் பிரபலங்களின் குடும்ப வழக்குகள் நினைவுக்கு வந்தால் அதற்குப் பொறுப்பு நீதிமன்றங்கள் மட்டுமல்ல; ஊடகங்களும் தான். இவ்விரு வழக்குகளை ஒத்த நூற்றுக்கணக்கான வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு வகையான நீதிமன்றங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வாதி- பிரதிவாதிகளின் பணவசதிக்கேற்ப முறையீடுகள், மேல் முறையீடுகள் என அவை தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன. அத்தகைய வழக்குகளில் இடம் பெறும் வாதிகளும் பிரதிவாதிகளும் அவர்களைச் சார்ந்த உறவினர்களும் பொதுச் சமூகத்தின் வெளிச்சத்தில் அறியப்படாத பாத்திரங்கள். அதனால், அந்த வழக்குகள் ஒரு நாள் செய்திக் கட்டுரைகளாகச் சில செய்தித்தாள்களில் இடம் பெறுவதோடு முடிந்து போய்விடுகின்றன. கணவனால் கைவிடப்பட்ட மனைவி, இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபன் என்னும் பொதுச் சொற்களால் எழுதப்படும் அந்தச் செய்திக் கட்டுரைகள் பல நேரங்களில் சமூகவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களின் தரவுகளாக அமைவதைத் தாண்டி வேறு வகையான முக்கியத்துவம் எதையும் பெறுவதில்லை. ஆனால் பிரபலங்களின் வழக்குகளை அப்படி முடிப்பதை நீதிமன்றங்களும் விரும்புவதாகத் தெரியவில்லை; அவை குறித்துச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் விட்டுவிடுவதாக இல்லை.

தனிமனிதர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை நீதிமன்றங்களின் கையில் ஒப்படைத்து விட்டு ஒவ்வொரு நாளும் எழுதப்படும் திருப்பங்கள் நிறைந்த அத்தியாயங்களின் பாத்திரங்களாக ஆகிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பொதுச் சமூகம் கவலைப்பட வேண்டியதில்லை.அப்படி மாறுவது தவிர்க்கவே முடியாத ஒன்று என்னும் நிலையில் தான் குடும்ப வழக்குகள் நீதிமன்றங்களின் விசாரணைக் கூண்டுகளில் ஏறுகின்றன.அத்தகைய வழக்குகளால் பாதிக்கப் படுகிறவர்கள் தனிமனிதர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே என்பதால் பொதுச் சமூகத்திற்கு அத்தகைய வழக்குகள் சுவாரசியமான தொடர்கதை வாசிப்பாக இருப்பதைத் தவிர வேறு பரிமாணங்களைத் தரப்போவதுமில்லை. இதற்கு மாறாகப் பொதுச் சமூகத்தை- குடிமைச் சமூகத்தின் பெரும்பாலான மனிதர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வழக்குகளும் தொடர்கதைகளின் அத்தியாயங்களாக ஆகி வருவதை வருத்தத்தோடு கவனித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சமூகப் பொறுப்பின்பாற்பட்டதாகாது. ஏனென்றால் பொதுச் சமூகத்தைப் பாதிக்கக் கூடிய வழக்குகளின் நடவடிக்கைகளும் முடிவுகளும் திருப்பங்கள் நிறைந்த தொடர்கதைகளாக ஆக்கப்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் எத்தகையன என்பதைச் சரியாகக் கணித்துச் சொல்லும் ஆற்றல் நீதிமன்றங்களுக்கே கூட இல்லை. சமூகத்தின் பொது அமைதிக்கே கூட சில வழக்குகளின் முடிவுகள் பாதகத்தை ஏற்படுத்தி விடக்கூடும்.இத்தகைய வழக்குகள் பல நீதிமன்றங்களின் எல்லைக்குள் வராமலேயே முடிந்திருக்க வேண்டியவை என்ற போதிலும் அவற்றில் தொடர்புடைய தனிநபர்கள் தொடக்க நிலையிலேயே நீதிமன்றங்களின் கதவைகளைத் தட்டிவிடுகின்றனர். தனக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்ற சுயநலத்தின் பெயராலும், சிலவகையான குழுக்கள் பாதிக்கப் படக்கூடும்; அதனைத் தடுத்தாக வேண்டும் என்ற பொது நலத்தின் பெயராலும் தொடரப்படும் வழக்குகள் கால எல்லைக்குள் இயங்க வேண்டிய அமைப்புகளை இயங்க விடாமல் செய்து வருகின்றன.
இந்தப் போக்கு அதிகரித்து வருவது நீதிமன்றங்களின் மேல் குடிமைச் சமூகத்திற்கும் அதன் உறுப்பினர்களான குடிகளுக்கும் உள்ள நம்பிக்கையைக் காட்டலாம் என்று பலர் வாதிடக்கூடும். அதே நேரத்தில் மக்களாட்சி முறையின் மேலும் அதன் தொடர் அமைப்புக்கள் மேலும் நமது சமூகம் நம்பிக்கை இழந்து கொண்டே வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பாசனத்திற்கு அணையிலிருந்து நீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை கூட நீதிமன்றங்களுக்கு வருகின்றன. இந்தக் கோரிக்கையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசின் பொதுப்பணித்துறையைச் சார்ந்தது. அரசின் வேலை வாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள் அறிவிக்கை வந்த நிலையிலேயே நீதிமன்றங்களை அணுகி தடைகள் வாங்கப் படுகின்றன. போக்குவரத்துத் துறையில் அதன் ஊழியர் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதற்கும், அரசு மருத்துவ மனைகளில் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படவில்லை என்பதற்காகவும் நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை வருவது நல்லதல்ல.

மக்களாட்சி நடக்கும் ஒரு நாட்டில் எல்லாத் துறை சார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் ஒன்று போல இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானதல்ல. ஆனால் நமது நாட்டில் ஒரேயொரு துறைசார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் கூட ஒன்று போல இருப்பதே இல்லை. அந்த நேரத்துச் சிந்தனையில் தற்காலிகமான முடிவுகளே எடுக்கப் படுகின்றன. அப்படி எடுக்கும் முடிவுகள் அந்த நேரத்தில் ஏற்கத் தக்கது போலத் தோன்றலாம். சரியான நீதி கிடைத்து விட்டது என்று கூடச் சொல்லலாம். ஆனால் தற்காலிக மகிழ்ச்சி பல நேரங்களில் அந்தத் துறையின் பொது நியதிக்குப் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை சார்ந்த பல முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். குறிப்பாகத் தொழில் கல்விப் படிப்புகளான மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் படியே தான் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டிலும் அந்தத் தொடர்கதை பல கட்டங்களைத் தாண்டித் தான் நடந்து வருகிறது. மருத்துவக் கல்விக்கான அனுமதி நிரந்தரமான முடிவு என்று யாராவது சொல்ல முடியுமா.? அத்தோடு தனியார் மற்றும் சுயநிதிப்பொறியியல் கல்லூரிகளின் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் முடிவுகளையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.டாக்டர் தொழில் தான் உன்னதமானது; இந்த தேசத்தில் அதிக பட்ச இலட்சியம் என உருவாக்கப் பட்டுள்ள பொதுப் புத்தியின் ஓட்டத்தோடு ஊடகங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் வெளியிடுகின்றன. அப்பொதுக் கருத்தோட்டத்தின் தாக்கத்தோடு தான் நீதித்துறையின் வழிகாட்டுதலும் இருக்கிறது.
ஒரு கல்வி வாரியம் பின்பற்றும் பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள்கள் சென்ற ஆண்டு எளிமையானவை; இந்த ஆண்டு கடினமானவை என்ற வாதங்கள் எல்லாம் பொதுப்புத்தி சார்ந்த வாதங்களாக இருக்க முடியுமே தவிர அறிவியல் பூர்வ உண்மை களாக இருக்க முடியாது. அத்துடன் நிகழ்காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்; கடந்த காலம் என்பது இறந்துவிட்ட காலம் என்று முடிவு செய்து அவர்களுக்கு வாய்ப்பே வழங்கக் கூடாது என வாதிடுவது எப்படிச் சரியாக இருக்க முடியும்.
இதே தேசத்தில் தான் அரசாங்கம் நடத்தும் குடிமைப் பணியாளர் - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.- தேர்வுகளுக்குப் பல மருத்துவர்களும், பொறியாளர்களும், கல்லூரிப் பேராசிரியர்களும் தயார் செய்து தேர்வு எழுதுகின்றனர். ஏற்கெனவே அந்தத்துறையில் வேலைகளைப் பெற்றுக் கொண்டு பணியில் சேர்ந்த பின்னும் படித்து குடிமைப் பணிகளுக்கு வருகின்றனர். அங்கெல்லாம் ஏற்கெனவே உங்களுக்கு வேறு வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது; அதனால் உங்களுக்கு இங்கு நேர்காணல் கிடையாது எனச் சொல்வதில்லை. அதற்கு மாறாக அமைப்புகளும் ஊடகங்களும் பாராட்டுக்களை வழங்குவதையே கண்டுள்ளோம்.
ஒரு தேசத்தின் குடிமகன் அல்லது குடிமகள் எந்தத் துறையில் தனது அறிவைப் பெறுவது என்பதையும், அந்த அறிவை எந்தக் கூட்டத்திற்குப் பயன்படுத்துவது என்பதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டுமே ஒழிய அமைப்புகளின் தற்காலிக முடிவுகளால் தீர்மானம் ஆவதாக இருக்கக் கூடாது. எல்லா வகையான கல்விப் பட்டங்களிலும் சேருவதற்கு அந்தத் துறை சார்ந்த கல்வியாளர்களின் குழுவான பாடத்திட்டக் குழுவினர் தான் அடிப்படை விதிகளை உருவாக்குகின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட விதிகள், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பொதுப் பேரவைகளான ஆட்சிப் பேரவைகளில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுகின்றன. அவ்வொப்புதலையும் கூடப் பல்கலைக்கழகங்களின் உயர் அமைப்புக்களான ஆட்சிக் குழுக்கள் விரிவாக விவாதித்து மேலொப்புதல் வழங்கலாம் அல்லது மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பலாம். இத்தகைய வழிமுறைகள் இப்போதுள்ள உயர்கல்வித்துறையில் இருக்கின்றன.கல்வித்துறையில் மட்டும் அல்ல; அரசு மற்றும் பொதுத்துறைகள் எல்லாவற்றிலும் இந்த நான்கு அடுக்கு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் அந்தத்துறை சார்ந்த பல தரப்புப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். அவர்களோடு பொது மக்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன. அவற்றைத் தலைமையேற்று ஒருங்கிணைக்கும் பொறுப்பில் தான் அந்தத்துறையின் தலைமைப் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.

நடைமுறையில் நமது அமைப்புக்கள் அவ்வாறு செயல்பட வில்லை என்பதே தனிமனிதர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு துறையின் ஆலோசனை அமைப்புக்களும் அதன் உறுப்பினர்களும் தங்களின் கடமை களையும் உரிமைகளையும் தவற விட்டு விட்டு அந்தந்த துறையின் தலைமைப் பொறுப்பாளர்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு எல்லாவற்றிற்கும் ஒப்புதல் அளிப்பவர்களாக இருக்கின்றனர் என நினைக் கிறார்கள். அல்லது தனக்கும் தனது குழுவிற்கும் சாதகமான அம்சங்களுக்காக வாதாடி அதிகாரத்தில் பங்கு பெற்றுக் கொள்பவர்கள் மட்டுமே என்று கருதுகிறார்கள். பொதுநலன் சார்ந்து தனது உறுப்பினர் கடமை யாற்றும் மனிதர்களைக் காண முடியாத நிலையில் அந்த அமைப்புக்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், அந்தத் துறைக்கு வெளியில் இருந்து நீதியைப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.இந்தப் போக்கைத் தீவிரப்படுத்தும் விதத்தில் நீதிமன்றங்களும் ஊடகங்களும் பணியாற்றுகின்றன. அது ஒருவிதத்தில் ஆறுதலற்றவனுக்கு ஆறுதல் தரும் கானல் நீர் தான். என்றாலும் இந்தப் போக்கு தொடர்ந்து கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதைச் சொல்ல வேண்டியவர்கள் ஊடகத்துறைச் செயலாளிகளும் அறிவாளிகளும் என்பதை மறந்து விடக் கூடாது.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க நமது அமைப்பு ஏற்படுத்தியுள்ள இந்தப் பல அடுக்கின் உறுப்பினர்கள், ஒவ்வொரு கட்டத்திலும் அதனைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களைப் பதவி காரணமான தலைவர்கள் என்பதாகப் பார்க்க வேண்டுமே ஒழிய, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப் பட்டவர்களாகக் கருத வேண்டியதில்லை. அமைப்புகளில் செயல்படும் ஒவ்வொருவரும் சிந்தனை செய்வதும், செயல்படுவதும் அவசியம். அனைவருக்குமாகத் தலைவர்களே சிந்திப்பார்கள் என நினைப்பதும், அவர்களது சிந்தனைகளின் படி செயல்படும்போது கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பணியில் பங்கு பெற்றதாகவே இருக்கும். அதனால் தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படும் போது இந்த நீதிமானின் ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை என்று சொல்லித் தப்பித்து விட முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்