July 27, 2007

உலகமயச் சூழலில் கல்வி முறை மாற்றங்கள் :

நமது கல்வி புதியன படைக்கும் ஆற்றலை வளர்க்கவில்லை; மனப்பாடம்
செய்வதையும் அதன் வழியாகத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும்
வழிமுறைகளையையும் தானே வளர்க்கிறது?
இந்தக் கேள்வி, பேராசிரியர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் வந்த போது கேட்கப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்டவர் கோவை நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர். அதற்கு அவர் சொன்ன பதில்,
முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள கல்வி முறையில்
மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்
என்பது. கேள்வி ஒரு பள்ளி மாணவரால் கேட்கப்பட்டது என்றாலும், நமது கல்விமுறையின் மீது அதிருப்தி கொண்ட பலருக்கும் இதே கேள்வி உண்டு. இந்தக் கேள்வியைக் கேட்பவர் களுக்கு பேராசிரியர் அளித்துள்ள விடையும் கூட ஏற்றுக் கொள்ளத் தக்க விடைதான். ஏனென்றால் அவர் சொன்ன பதிலில் ஆழமான புரிதல் உள்ளது. அடிப்படையிலிருந்து மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது.
மாற்றம் என்பது தொடர்வினை
கொஞ்சம் பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால் சுதந்திர இந்தியாவின் கல்வித்துறை பல்வேறு கல்வி முறைகளைப் பரிந்துரை செய்ததும், அவை நடைமுறைப் படுத்தப்பட்டதும் நினைவுக்கு வரலாம். முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கி அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து உருவாக்கப்பட்ட வழிமுறைகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்பதும் கூட நினைவுக்கு வரலாம். இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தேடினால், அனைவரும் சுட்டிக் காட்டுவது நாம் பின்பற்றும் கல்வி முறை யின் நோக்கத்தைத் தான். காலனிய அரசாங்கம் நடைமுறைப் படுத்திய மெக்காலே கல்வி முறையில் பெரிய அளவு மாற்றங்களைச் செய்யாமல் புதிய இலக்குகளை அடைய முடியாது எனச் சுட்டிக் காட்டு கின்றனர். பிரிட்டானிய ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களையும், அதிகாரிகளையும் உருவாக்கத் தேவையான கல்வியைத் தான் இந்தியர் களுக்கு வழங்கினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் விடுதலை அடைந்த இந்தியா அக்கல்வி முறையில் தொடக்கத்திலேயே மாற்றங்களைச் செய்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திகின்றனர்.
கல்வி முறையில் அடிப்படை மாற்றங்கள் உடனடித் தேவை என்பதை நமது முன்னாள் குடியரசுத் தலைவர் உணர்ந்திருந்தது போல கல்வித் துறை ஆலோசகர்களும் உணர்ந்து தான் இருக்கின்றனர். அடிப்படை மாற்றங்கள் தேவை என்பது பற்றி இன்று தான் உணரப்பட்டுள்ளது என்பதும் உண்மை இல்லை. பல முறை அந்த யோசனைகள் முன் வைக்கப்பட்டு, மாற்றங் களும் கூடச் செய்யப்பட்டதுண்டு. ஒரு தேசத்தின்மக்கள் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும் என ஓர் அரசாங்கம் கருதுவதும், அதற்கான திட்டங்களைத் தீட்டுவதும் முன்னுரிமைப் பணிகளாகும். அம்முன்னுரிமைப் பணி அரசாங்கத்தின் மற்ற பணிகளை எளிமைப் படுத்தக் கூடியது, தேசத்தின் வளர்ச்சிப் போக்கோடும், நடைமுறைகளோடும் தேசத்தின் மக்களை ஒத்திசைந்தவர்களாக ஆக்கவல்லது கல்வி ஒன்றுதான் . இதனை உணர்ந்திருந்த அரசுகள் தொடர்ந்து கல்வித் துறைக்கு முன்னுரிமை வழங்கியே வந்துள்ளன. ஆனால் விளைந்த பயன்கள் எதிர்பார்த்தனவாக இல்லை. மாணாக்கர்களின் பயணம் என்னவோ செக்கு மாட்டுப் பயணமாகத் தான் இருந்து வருகிறது.
உருப்படியான மாற்றம்
ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை மூன்று கட்டங்களாக இருந்த நமது பள்ளிக் கல்வி, ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்கல்வி,மேல்நிலைக் கல்வி என நான்கு கட்டங்களாக மாறியது. தமிழகத்தின் முதல்வராக திரு எம்.ஜி.ராமச் சந்திரன் இருந்த போது கல்லூரிகளில் இருந்த புதுமுக வகுப்புகள் நீக்கப்பட்டு, பள்ளிக்கல்வியின் பகுதியாக- மேல்நிலைப் பள்ளிக் கல்வியாக மாற்றப் பெற்றது. தமிழகப் பள்ளிக் கல்விமுறையில் இம்மாற்றம் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம்¢. பள்ளியில் தமிழ் வழியில் பாடங்களைக் கற்ற பலரும் கல்லூரியில் நுழைந்து புகுமுக வகுப்பில் ஆங்கில வழியில் பாடங்களைக் கற்க முடியாமல் திணறியதும், தேர்ச்சி அடைய முடியாமல் கற்றலைப் பாதியில் நிறுத்திக் கொண்டதும் நடந்து கொண்டிருந்தது. இதனை மாற்றி, ஏராளமான மாணாக்கர்களை ஓராண்டு கூடுதலாகப் படிக்கச் செய்தது அந்த மாற்றாம். அத்துடன் அதிகமானவர்களைக் கல்¢லூரிக்கல்வியைத் தொடர வைத்தது. கல்லூரிக் கல்வியில் எதனைத் தேர்வு செய்து, கற்பது எனத் திட்டமிட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கிய அந்த மாற்றம் மிக முக்கியமான மாற்றம்¢. இன்று ஏராளமான தொழிற்கல்விக் கூடங்களும், பொறியியல் கல்லூரிகளும் தோன்றியுள்ள நிலைக்கும், அவற்றை நாடிச் சென்று மாணாக்கர்கள் கல்வி கற்க முனைவதற்கும் இந்த மாற்றம் தான் தூண்டுகோலாக இருந்தது.
பள்ளிக் கல்விமுறையில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறாத மெட்ரிக்குலேசன் பள்ளிகள் எனப் பலவகையான பள்ளிகள் செயல்படுவது போல் கல்லூரிக் கல்வி முறையிலும் கூட பல மாற்றங்கள் நடந்துள்ளன. சுதந்திரம் அடைந்து இருபது ஆண்டுகள் வரை சென்னைப் பல்கலைக்கழகம் என ஒரே பல்கலைக் கழகம் இருந்த நிலை மாறி, இன்று இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளிலும் பல்வேறு வகையான பாட முறைகள் வழக்கில் உள்ளன. பருவ முறை, அல்பருவ முறை, அரசுக் கல்லூரிகள், அரசு இணைவு பெற்று நிதி உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள், சுயநிதிக்கல்லூரிகள், சமுதாயக் கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் எனப் பலவகையான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வியிலும், கல்லூரிக் கல்வியிலும் பல வகையான நிறுவனங்களும் முறைகளும் செயல்பட்டாலும், பாட முறைகளும் தேர்வு முறைகளும் பெருமளவில் மாற்றமில்லாமலேயே இருக்கின்றன. அதை விடவும் முக்கியமாகக் கடந்த காலங்களில் கற்பித்தல் நெறியிலும் கற்கை முறையிலும் மாற்றங்களே நடக்கவே இல்லை என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று.அப்படியான மாற்றங்கள் நடக்காத வரை மாணாக்கர்களின் அறிவித்திறனில் முன்னேற்றம் என்பதோ, புத்தாக்க முயற்சிகளில் ஈடுபாடு காட்டுதல் என்பதோ சாத்தியம் இல்லை என்பது உணரப்பட வேண்டும். இன்று பள்ளிக்கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் படித்து முடித்து விட்டுப் பட்டப்படிப்பைத் தொடர வரும் பலரின் கற்றல் அறிவு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. தாய் மொழியான தமிழிலும், போதனை மொழியான ஆங்கிலத்திலும் பிழையின்றி எழுதும் திறன் இல்லை. ஒவ்வொரு நாளும் இந்த நாட்டிலும், சொந்த ஊரிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. பள்ளியில் கற்றுத் தந்த பொதுக் கல்வி எந்த ஆர்வத்தையும் அவரிடத்தில் உண்டாக்காமலேயே கல்லூரிக்கு அனுப்பி வைக்கிறது. தனக்குத் தரப்படும் கல்வி தனது எதிர் காலத்தைத் தீர்மானிக்க உதவும் அல்லது உதவாது என்ற விவரத்தைத் தெரிந்து கொள்ளா மலேயே அதனைக் கற்று முடிக்கின்றனர். பெறப்பட்ட பட்டத்திற்கும் பார்க்கப் போகும் வேலைக்கும் தொடர்பு இருக்க வேண்டுமா என்ற கேள்வியை அவர்கள் கேட்டுக் கொள் வதாகவும் தெரியவில்லை.
புரிதலில் இல்லாத இலக்கற்ற பயணங்களை முன்மொழியும் இந்தக் கல்வியைத் தரும் ஆசிரியர் களும் எந்தவிதக் கேள்விகளும் இல்லாமலேயே அவர்கள் பணியைச் செய்துவிட்டுச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கற்பிக்கிறவர்களும் எந்தவிதக் குற்ற உணர்வையும் தோற்றுவிக்காமல், கற்பவர்களிடம் எந்தவிதச் சிந்தனையையும் தோற்று விக்காத இந்தக் கல்வி முறையில் செய்ய வேண்டிய மாற்றம் என்பது இதுவரை செய்யப்பட்டது போல வடிவ மாற்றமாக மட்டும் இருக்கக் கூடாது. உள்ளடக்க மாற்றமாகவும், கற்பித்தல் முறையிலும் புதியன புகுத்தும் மாற்றமாகவும் இருக்க வேண்டும்.ஒரு மனிதன் மாறிவிட்டான் என்பது உடுத்தும் உடை, உண்ணும் உணவு, வாழும் இடம் ஆகிய அடிப்படைத் தேவைகளில் நடக்கும் மாற்றங்களை மட்டும் குறிப்பதில்லை; அவற்றிற்கும் மேலாக அவனது தன்னிலையில் ஏற்படுத்தும் பண்பு மாற்றமே அடிப்படை மாற்றமாகும். தன்னை உணர்தலும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை உணர்தலும் அவனது பண்பு மாற்றத்தின் காரணங்களாலேயே உண்டாகும். இதுவரை கல்வித்துறையில் நடந்த மாற்றங்கள் வடிவ மாற்றங்களையே முன் மொழிந்துள்ளன. அதனோடு சேர்ந்து பண்பு மாற்றங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் கல்வி, கற்பித்தல்- கற்றல் என இரு நிலையிலும் மாற்றங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்.
உயர்கல்வியிலும் மாற்றங்கள்
ஆரம்பக்கல்வியில் அடிப்படை மாற்றங்கள் பற்றிப் பேராசிரியர் அப்துல்கலாம் முன் வைத்த கருத்துக்களோடு , இந்திய அளவிலும் தமிழக அளவிலும் செய்யப்பட உள்ள வேறு வகை மாற்றங்கள் பற்றிய பேச்சுகளும் செய்திகளாக அடிபடுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி இரண்டு முன்மொழிதல்களை சட்டமன்றத்தில் முன் வைத்தார். அவ்விரண்டில் பொறியியல் கல்லூரிகள் சார்ந்த முன் மொழிதல் நடை முறைக்கு வந்து கொண்டிருக்கிறது. கலை, அறிவியல் பட்டங்களை வழங்கும் பொதுப் பல்கலைக் கழகச் சட்டம் (Common University Act)நடைமுறைக்கு வரக்கூடும். வரப்போகும் இம்மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டிய தேவை கல்வித் துறை சார்ந்தவர்களின் கடமை மட்டும் அல்ல; மக்கள் அனைவரின் கடமையும் கூட. ஏனெனில் இந்த மாற்றங்கள் இந்திய தேசம் உலகமயமாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் அறிமுகமாகின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பொதுநிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல் பட்ட பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஒன்றாக ஆக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் தன்னாட்சிக் கல்லூரிகளையும் தவிர அனைத்திலும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களுடன் பயிற்றுமுறை, தேர்வு முறை போன்றன ஏற்படுத்தப்பட்டு பொதுத் தன்மைக்குள் வந்தன. ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகத் திரும்பவும் அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப் பட்டுள்ளது. திருச்சி¢, கோயம்புத்தூரில் அதன் கிளைகள் தொடங்கி நடந்து வருகின்றன. அவை தனிப் பல்கலைக் கழகங்கள் என்பதாகச் செயல்படத் தொடங்காமல் அண்ணா பல்கலைக் கழகத்தின் கிளைகளாக மட்டுமே இருப்பது நல்லது எனப் பலரும் கருத்துரைக்கின்றனர். அந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத் தான் தனியொரு பெயரைச் சூட்டிக் கொள்ளாமல், அண்ணா என்றே பெயரே கோவையோடும் திருச்சியோடும் சேர்க்கப் பட்டுள்ளது எனக் கருதலாம். அதனால் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் பொது நிலைப்பட்ட சட்ட திட்டங்களோடும், பாடத் திட்டங்களோடும் சென்னை முதல் குமரிவரையுள்ள கல்லூரிகளின் வழியே பொதுவாகச் செயல்படும் வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் இந்தப் பொதுநிலைப் பாடத் திட்டங்களும், சட்டதிட்டங்களும், நடைமுறைகளும், கலை அறிவியல் பட்டங்களை வழங்கும் பல்கலைக் கழகங்களில் இல்லை.
தமிழகத்திலுள்ள பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் தனித்தனியே தங்களுக்கென விதிகள், அமைப்புக்கள், பாடத்திட்டங்கள் கொண்டவைகளாக உள்ளன. அடிப்படையில் இவை அனைத்தும் மைய அரசின் மனித வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுகின்றன. அதே நேரத்தில் பல்கலைக் கழகங்களின் பேரவை, ஆட்சிக்குழு போன்றவற்றைக் கூட்டித் தங்களுக்கான விதிகளை உருவாக்கிக் கொள்ளும் தன்னாட்சித் தன்மையையும் பெற்றுள்ளன. மாநில அரசும் அதன் சட்டமன்றமும் கூடத் தலையிட முடியாத அளவு பாதுகாப்பான நிலை பல்கலைக்கழகச் சட்டங்களில் உள்ளன. பல்கலைக்கழகங்கள் அறிஞர்களும், பொதுநலனில் அக்கறை கொண்ட கல்வியாளர்களும் பணியாற்றும் அமைப்பு என்பதால் இத்தகைய தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் செயல்படும் பாடத் திட்டக் குழுக்கள், அந்தப் பல்கலைக் கழகம் அமைந்திருக்¢கும் மாவட்ட மக்களின் உணர்வுகளையும் சூழலையும் மனதில் கொண்டு பாடங்களைச் சேர்த்துக் கொள்ள வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் அதன் பின்னணியில் இருந்தன. ஆனால் வரப் போகும் பொதுப் பல்கலைக்கழகச் சட்டம், இந்தத் தன்னாட்சி நிலைக்கு- சுயாட்சித் தன்மைக்கு எதிரான விதிகளைக் கொண்டது என்ற ஐயங்கள் உள்ளன.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் உருவாக்கிக் கொண்ட தனிப் பல்கலைக்கழகச் சட்டங்கள் நீக்கப் பட்டு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான சட்டத்தைக் கொண்டுவரும் அரசின் நோக்கத்தில் உலகமயச்சூழல் என்ற பின்னணி இருந்த போதிலும் வேறு சில காரணங்களும் உள்ளன. பல்கலைக் கழகங்களின் வருவாய் மற்றும் செலவினங்கள், அதன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு மற்றும் சலுகைகள், புதிய ஊழியர்களை நியமித்தல் போன்றவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறைகளைப் பின்பற்றுகின்றன. அவற்றில் சிக்கல்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு இழுபறிகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழலில் ஆட்சியில் அரசாங்கத்தாலும், நீதிமன்றங்களாலும் அவற்றைத் தீர்க்க முடியாத அளவு தனிச்சட்டங்கள் காரணங்களாக உள்ளன. ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் செயல்படும் ஆட்சிப் பேரவை, கல்வி நிலைக்குழுக்கள், பாடத்திட்டக்குழுக்கள் போன்றவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் வெவ்வேறு விதமாக உள்ளன. அவற்றின் அதிகாரங்களும் கடமைகளும் கூட ஒன்று போல இல்லை.
அறிவார்ந்த தளத்தில் விவாதங்கள் நடக்க வேண்டிய இந்த அமைப்புக்களில் நடக்கும் விவாதங்களும் கூடப் பல நேரங்களில் நமது சட்டமன்ற, நகரசபைக் கூட்டங்களோடு போட்டி போடுகின்றன. பல்கலைக்கழகங்களின் வருவாயில் பெருமளவுத் தொகை இந்த அவைகளின் உறுப்பினர்களுக்கான படிகளாகவே செலவாகின்றன என்ற கருத்தும் கூட ஓரளவு உண்மையாக இருக்கலாம். அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் உரிமையும் இப்போதைய தனிச் சட்டங்களில் இல்லை . எனவே எல்லாவற்றையும் களையும் விதமாகப் பொதுப் பல்கலைக் கழகச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கமாக இருக்கிறது. அதன் படி பல்கலைக்கழக மானியக்குழு அனுப்பிய மாதிரிப் பல்கலைக்கழகச் சட்டம் சில ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் தமிழக அரசின் புதுச் சட்டம் தயாரிக்கப் பட்டது. இப்போது அது வருமா ? வராதா..? என்பதும் தெரியவில்லை.
தமிழக அரசால் கொண்டு வரப்படவுள்ள பொதுப் பல்கலைக்கழகச் சட்டம் கல்வியாளர் களாலும் கல்வித்துறை சார்ந்த அமைப்புக்களாலும் விவாதிக்கப் பட்டது. முடிவுகள் எதுவும் எடுக்கப் பட்டதாகவோ, செயல்படுத்தப் படப் போவதாகவோ தெரியவில்லை. ஆனாலும் விவாதப் பொருளாகியுள்ளது என்பதே வரவேற்கத்தக்கது தான். எந்த ஒரு கருத்தையும் பொருளையும் விவாதிக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும் தங்கள் நலனை மையப்படுத்தியே எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பதை வெளிப்படுத்துவார்கள் என்பது பொதுவான நியதி. அதே நேரத்தில் தங்கள் நலனுக்காக அதைச் செய்யவில்லை பொது நலனை முன்னிட்டே இந்நிலைபாட்டை மேற்கொள்கிறோம் எனக் கூறவும் செய்வார்கள்.
இதற்கு மாறாக எந்தவொரு மாற்றத்தையும் வெளியில் இருந்து பார்க்கும் மனநிலையில் யோசித்துப் பார்த்தால் தான் அதன் சாதக பாதகங்களைப் புரிந்து கொள்ள இயலும்.
பொதுப் பல்கலைக்கழகச் சட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் எதிர்நிலைப் பாட்டுடன் கருத்துக்களை கூறுவதில் முன்னிலை வகிப்பவர்களாக ஆசிரியர் சங்கங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் இருந்தனர். ஒரு சில பல்கலைக் கழக நிர்வாகங்களும் கூட எதிர்நிலைப் பாட்டை வெளிப்படுத்தின. அத்தகைய எதிர்நிலைப் பாட்டை முன் வைப்பவர்கள், வட்டார அடையாளம், அனைத்துத் தரப்பினருக்கும் பிரதித்துவம், தனித்தன்மை, உயர்கல்வியில் தன்னாட்சி என்ற கருத்துக்களை முன் வைத்துப் பேசினார்கள். அதே நேரத்தில் பொதுப் பல்கலைக் கழகச் சட்டம் வந்தால் ஒரே இடத்தில் பணியாற்றும் இப்போதைய நிலை மாறி, மாறுதலுக்குரிய பணியாகத் தங்களின் பணிநிலைமை மாறலாம் என்ற அச்சம் ஆசிரியர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் இருக்கிறது. அதே போல் தங்கள் பல்கலைக் கழக நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்திப் பெற்ற உரிமைகள், சலுகைகள் போன்றன பறிக்கப்படலாம் என்ற அச்சமும் இருக்கிறது. இதைத் தவிர நிர்வாகத்தில் இருப்பவர்களின் அதிகார வரம்புகள்- பணி அமர்த்தல், பதவிகள் அளித்தல், சலுகைகள் வழங்குதல் போன்றன - குறைக்கப்படும் என்ற அச்சமும் முன் நிற்கின்றன. ஆனால் இந்த அச்சங்களும் நிலைப்பாடுகளும் மாணவர்களை மையப்படுத்தியனவாக இல்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அவர்களில் பெரும்பாலோர் இப்படியொரு சட்டம் வர உள்ளது என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அல்லது தங்களுக்குத் தொடர்பில்லாத விவாதங்கள் என்பதாக ஒதுங்கிப் போகிறார்கள் என்பது வருந்தத் தக்க யதார்த்தம். பணிப் பாதுகாப்பு ,இருக்கும் அதிகாரம் பறி போதல் போன்றன தனிநபர் நலன் என்பதை அடிப்படை யாகக் கொண்டவை. பொது நலன் என்னும் பார்வையில் விவாதிக்கத் தக்கன அல்ல. அந்த விவாதங்கள் எப்போதும் வளர்ச்சிக்கு தடை போடும் நோக்கம் கொண்டவை எனக் கருதி விட்டு விடலாம். ஆனால் பாடத்திட்டங்கள் பற்றிய முன் வைப்புக்கள் அப்படிப் பட்டன. பொருட்படுத்தி விவாதிக்க வேண்டியன.
பொதுப் பல்கலைக்கழகச் சட்டம், உருவாக்கப் படும் பாடத்திட்டத்தில் 60 சதவீதம் பொதுநிலைப் பாடங்களையும், 40 சதவீதப் பாடங்கள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் வட்டாரச் சூழலைக் கணக்கில் கொண்டும் அமையும் என்ற கருத்து நிலவுகிறது. வட்டாரச் சூழலைக் கணக்கில் கொள்ளுதல் என்பதும், அப்பகுதி மக்களின் மன உணர்வுகளுக்கு இடம் அளித்தல் என்பன பெரும்பாலும் கலையியல் மற்றும் சமுதாய அறிவியல் துறைகளுக்கு மட்டுமே பொருத்தமானது. அறிவியல் துறைகளின் பாடங்கள் எப்பொழுதும் உலக அளவில் அமையக் கூடியனவாக இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் இங்கு வட்டார நிலைமையைக் கணக்கில் கொள்ளுதல் என்ற பெயரில் ஆசிரியர்கள் நலன் முன்னிறுத்தப்பட்டு பாடங்களைக் குறைத்தல், புதிய பாடங்களுக்குத் தடை போடுதல் போன்றன தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இத்தகைய சிந்தனைப் போக்கு உலகமயச் சூழலுக்கு நமது மாணவர்களைத் தயார் படுத்தாமல் பின்னுக்கு இழுத்துப் போகும் காரியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகமயம், தாராளமயம், தனியார் மயம் நமது தேசத்திற்குத் தேவையா என்று கேட்டால் அதற்கான விவாதங்கள் வேறானதாக இருக்கலாம். தேசத்தின் பொதுத் தன்மையாக இவற்றை ஏற்றுக் கொள்வது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பின்பு ஒன்றிரண்டு பல்கலைக் கழகங்களோ, மாநிலமோ அத்தோடு ஒத்துப் போக மாட்டேன் என்பது தங்களின் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களைக் கூட்டத்தோடு ஓட விடாமல் தடுத்து நிறுத்தும் செயல்களாக ஆகி விடும். ஒரு வேளை உலகமயம் என்னும் இன்றைய நடைமுறை எதிர்பார்த்த வெற்றியையும் இலக்குகளையும் தரத் தொடங்கி விட்டால் அப்போது பொது நீரோட்டத்திற்குள் அந்த மாநிலத்தையோ, பல்கலைக் கழகத்தையோ சேர்த்து விடுவது சிக்கலான ஒன்றாகி விடும். இந்த நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் எதிர்ப்புணர்வை மட்டும் காட்டிக் கொண்டிருப்பது அர்த்தமுடையதாக ஆகாது.
மாணவர்கள் கோணத்தில் பார்க்கும் போது எளிமையான இன்னொரு நன்மையும் இருக்கிறது. ஏதாவதொரு காரணத்தால் இடம் மாற நேரும் ஒரு மாணாக்கர் சிக்கல் இல்லாமல் புதிய இடத்தில் ஒரு கல்லூரியில் சேர்ந்து கல்வியை இடையீடின்றித் தொடரும் வாய்ப்பு பொதுப் பல்கலைக் கழகச் சட்டத்தின் படி உண்டு. இப்போதுள்ளது போல் வேறுபாடான கட்டணங்கள் வசூலிப்பது மாறலாம். தமிழகம் முழுக்க ஒரே கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் வசூலிக்கும் நிலை உருவாகும். ஒரே கட்டணம்; ஒரேவிதமான கல்வி என்பது உலகமயச் சூழலின் அடிப்படைத் தத்துவமாக இருக்க வேண்டியது என்பது காலத்தின் நிர்ப்பந்தம். காலம் தரும் நிர்ப்பந்தத்திற்கு நாம் பணியாவிட்டால் அதே காலம் நம்மை இறந்த காலத்து மனிதர்களாக ஆக்கி விடும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகமயமாகும் சூழலை இந்திய அளவில் தடுக்க முடியாத நிலையில் பொதுநிலைக் கல்வி முறைக்கு மாறுவதே புத்திசாலித்தனமும் கூட. அப்படி மாறும் போது பள்ளிக் கல்விக்கென முன் வைக்கப்பட்ட கற்கை நெறி- கற்றல் முறை என்ற இரண்டையும் கணக்கில் கொள்ளவும் வேண்டும்.கரும்பலகைகளும் அவற்றில் எழுதும் சுண்ணாம்புக் கட்டிகளும் இன்னும் பல்கலைக் கழகங்களின் வரவு செலவுகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு முடிவு கட்டும் போது தான் வகுப்பறைக் கல்வி முடிவுக்கு வரும். வகுப்பறைகளின் இடத்தைத் தொழில் நிறுவனங்களும் சமூக நிறுவனங்களும் பிடித்துக் கொள்ளும் நிலையில் உலகமயத்தின் பலன்கள் வெளிப்படையாகத் தெரிய வரலாம்.

July 18, 2007

சிதைக்கப்படும் அமைப்புகள்

பத்திரிகைகளின் செய்திக் கிடங்குகளில் நீதிமன்றங்களும் ஒன்று என்பது இதழியல் மாணவர்களின் பாலபாடம். இதழியல் கல்வி, ஊடகக் கல்வியாக மாறிவிட்ட சூழ்நிலையிலும் நீதிமன்றங்கள் அந்த நிலையை விட்டுக் கொடுத்து விடவில்லை. அச்சு ஊடகங்களுக்கும் காட்சி ஊடகங்களுக்கும் நீதிமன்றங்கள் செய்திகளை வழங்கும் கிடங்குகளாகவே இருக்கின்றன ; சில மாற்றங்களுடன்.நீதிமன்றங்களைச் செய்திக் கிடங்காக வைத்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுபவை பெரும்பாலும் செய்திக் கட்டுரைகளாக இருந்தன. அதற்கேற்ப நிதானமும் சட்டத்தின் நுட்பங்களும் வாசகர்களுக்கு வந்து சேரும் நிலைமையும் இருந்தது. அந்த நிலைமை இப்பொழுது முடிவுக்கு விட்டது. இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்கள், பரப்பூட்டும் தலைப்புச் செய்திகளை வழங்கும் அமைப்புகளாக மாறி வருகின்றன.தொலைக்காட்சிகளின் செய்தித் தொகுப்பில் தினசரி உயர் நீதிமன்றங்கள் அல்லது உச்சநீதிமன்றக் கட்டிடங்கள் காட்சி ரூபத்தில் வந்து போகின்றன. பல நேரங்களில் நீதிமன்றக் கட்டிடத்தின் பின்புலத்தில் வழக்குரைஞர்கள் தொலைக்காட்சிக் காமிராக்களுக்குப் பேட்டி ளிக்கின்றனர்.

அண்மைக்காலத்தில் சில வழக்குகளில் நீதிமன்றங்கள் தரும் தடைகளும் விடைகளும் ஊடகங்களில் இடம் பெறும் தொடர்கதைகள் மற்றும் தொடர்களின் இடத்தையும் பிடித்துக் கொள்ளும் அளவுக்குத் திடீர் திருப்பம் கொண்டனவாகவும் சுவாரசியம் நிறைந்தனவாகவும் மாறி வருகின்றன. இப்படிச் சொன்னவுடன் வந்தனா- ஸ்ரீகாந்த் , பிரசாந்த்-கிரகலெட்சுமி போன்ற திரைப்படப் பிரபலங்களின் குடும்ப வழக்குகள் நினைவுக்கு வந்தால் அதற்குப் பொறுப்பு நீதிமன்றங்கள் மட்டுமல்ல; ஊடகங்களும் தான். இவ்விரு வழக்குகளை ஒத்த நூற்றுக்கணக்கான வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு வகையான நீதிமன்றங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வாதி- பிரதிவாதிகளின் பணவசதிக்கேற்ப முறையீடுகள், மேல் முறையீடுகள் என அவை தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன. அத்தகைய வழக்குகளில் இடம் பெறும் வாதிகளும் பிரதிவாதிகளும் அவர்களைச் சார்ந்த உறவினர்களும் பொதுச் சமூகத்தின் வெளிச்சத்தில் அறியப்படாத பாத்திரங்கள். அதனால், அந்த வழக்குகள் ஒரு நாள் செய்திக் கட்டுரைகளாகச் சில செய்தித்தாள்களில் இடம் பெறுவதோடு முடிந்து போய்விடுகின்றன. கணவனால் கைவிடப்பட்ட மனைவி, இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபன் என்னும் பொதுச் சொற்களால் எழுதப்படும் அந்தச் செய்திக் கட்டுரைகள் பல நேரங்களில் சமூகவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களின் தரவுகளாக அமைவதைத் தாண்டி வேறு வகையான முக்கியத்துவம் எதையும் பெறுவதில்லை. ஆனால் பிரபலங்களின் வழக்குகளை அப்படி முடிப்பதை நீதிமன்றங்களும் விரும்புவதாகத் தெரியவில்லை; அவை குறித்துச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் விட்டுவிடுவதாக இல்லை.

தனிமனிதர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை நீதிமன்றங்களின் கையில் ஒப்படைத்து விட்டு ஒவ்வொரு நாளும் எழுதப்படும் திருப்பங்கள் நிறைந்த அத்தியாயங்களின் பாத்திரங்களாக ஆகிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பொதுச் சமூகம் கவலைப்பட வேண்டியதில்லை.அப்படி மாறுவது தவிர்க்கவே முடியாத ஒன்று என்னும் நிலையில் தான் குடும்ப வழக்குகள் நீதிமன்றங்களின் விசாரணைக் கூண்டுகளில் ஏறுகின்றன.அத்தகைய வழக்குகளால் பாதிக்கப் படுகிறவர்கள் தனிமனிதர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே என்பதால் பொதுச் சமூகத்திற்கு அத்தகைய வழக்குகள் சுவாரசியமான தொடர்கதை வாசிப்பாக இருப்பதைத் தவிர வேறு பரிமாணங்களைத் தரப்போவதுமில்லை. இதற்கு மாறாகப் பொதுச் சமூகத்தை- குடிமைச் சமூகத்தின் பெரும்பாலான மனிதர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வழக்குகளும் தொடர்கதைகளின் அத்தியாயங்களாக ஆகி வருவதை வருத்தத்தோடு கவனித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சமூகப் பொறுப்பின்பாற்பட்டதாகாது. ஏனென்றால் பொதுச் சமூகத்தைப் பாதிக்கக் கூடிய வழக்குகளின் நடவடிக்கைகளும் முடிவுகளும் திருப்பங்கள் நிறைந்த தொடர்கதைகளாக ஆக்கப்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் எத்தகையன என்பதைச் சரியாகக் கணித்துச் சொல்லும் ஆற்றல் நீதிமன்றங்களுக்கே கூட இல்லை. சமூகத்தின் பொது அமைதிக்கே கூட சில வழக்குகளின் முடிவுகள் பாதகத்தை ஏற்படுத்தி விடக்கூடும்.இத்தகைய வழக்குகள் பல நீதிமன்றங்களின் எல்லைக்குள் வராமலேயே முடிந்திருக்க வேண்டியவை என்ற போதிலும் அவற்றில் தொடர்புடைய தனிநபர்கள் தொடக்க நிலையிலேயே நீதிமன்றங்களின் கதவைகளைத் தட்டிவிடுகின்றனர். தனக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்ற சுயநலத்தின் பெயராலும், சிலவகையான குழுக்கள் பாதிக்கப் படக்கூடும்; அதனைத் தடுத்தாக வேண்டும் என்ற பொது நலத்தின் பெயராலும் தொடரப்படும் வழக்குகள் கால எல்லைக்குள் இயங்க வேண்டிய அமைப்புகளை இயங்க விடாமல் செய்து வருகின்றன.
இந்தப் போக்கு அதிகரித்து வருவது நீதிமன்றங்களின் மேல் குடிமைச் சமூகத்திற்கும் அதன் உறுப்பினர்களான குடிகளுக்கும் உள்ள நம்பிக்கையைக் காட்டலாம் என்று பலர் வாதிடக்கூடும். அதே நேரத்தில் மக்களாட்சி முறையின் மேலும் அதன் தொடர் அமைப்புக்கள் மேலும் நமது சமூகம் நம்பிக்கை இழந்து கொண்டே வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பாசனத்திற்கு அணையிலிருந்து நீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை கூட நீதிமன்றங்களுக்கு வருகின்றன. இந்தக் கோரிக்கையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசின் பொதுப்பணித்துறையைச் சார்ந்தது. அரசின் வேலை வாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள் அறிவிக்கை வந்த நிலையிலேயே நீதிமன்றங்களை அணுகி தடைகள் வாங்கப் படுகின்றன. போக்குவரத்துத் துறையில் அதன் ஊழியர் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதற்கும், அரசு மருத்துவ மனைகளில் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படவில்லை என்பதற்காகவும் நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை வருவது நல்லதல்ல.

மக்களாட்சி நடக்கும் ஒரு நாட்டில் எல்லாத் துறை சார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் ஒன்று போல இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானதல்ல. ஆனால் நமது நாட்டில் ஒரேயொரு துறைசார்ந்த எண்ணங்களும் முடிவுகளும் கூட ஒன்று போல இருப்பதே இல்லை. அந்த நேரத்துச் சிந்தனையில் தற்காலிகமான முடிவுகளே எடுக்கப் படுகின்றன. அப்படி எடுக்கும் முடிவுகள் அந்த நேரத்தில் ஏற்கத் தக்கது போலத் தோன்றலாம். சரியான நீதி கிடைத்து விட்டது என்று கூடச் சொல்லலாம். ஆனால் தற்காலிக மகிழ்ச்சி பல நேரங்களில் அந்தத் துறையின் பொது நியதிக்குப் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை சார்ந்த பல முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். குறிப்பாகத் தொழில் கல்விப் படிப்புகளான மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் படியே தான் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டிலும் அந்தத் தொடர்கதை பல கட்டங்களைத் தாண்டித் தான் நடந்து வருகிறது. மருத்துவக் கல்விக்கான அனுமதி நிரந்தரமான முடிவு என்று யாராவது சொல்ல முடியுமா.? அத்தோடு தனியார் மற்றும் சுயநிதிப்பொறியியல் கல்லூரிகளின் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் முடிவுகளையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.டாக்டர் தொழில் தான் உன்னதமானது; இந்த தேசத்தில் அதிக பட்ச இலட்சியம் என உருவாக்கப் பட்டுள்ள பொதுப் புத்தியின் ஓட்டத்தோடு ஊடகங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் வெளியிடுகின்றன. அப்பொதுக் கருத்தோட்டத்தின் தாக்கத்தோடு தான் நீதித்துறையின் வழிகாட்டுதலும் இருக்கிறது.
ஒரு கல்வி வாரியம் பின்பற்றும் பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள்கள் சென்ற ஆண்டு எளிமையானவை; இந்த ஆண்டு கடினமானவை என்ற வாதங்கள் எல்லாம் பொதுப்புத்தி சார்ந்த வாதங்களாக இருக்க முடியுமே தவிர அறிவியல் பூர்வ உண்மை களாக இருக்க முடியாது. அத்துடன் நிகழ்காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்; கடந்த காலம் என்பது இறந்துவிட்ட காலம் என்று முடிவு செய்து அவர்களுக்கு வாய்ப்பே வழங்கக் கூடாது என வாதிடுவது எப்படிச் சரியாக இருக்க முடியும்.
இதே தேசத்தில் தான் அரசாங்கம் நடத்தும் குடிமைப் பணியாளர் - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.- தேர்வுகளுக்குப் பல மருத்துவர்களும், பொறியாளர்களும், கல்லூரிப் பேராசிரியர்களும் தயார் செய்து தேர்வு எழுதுகின்றனர். ஏற்கெனவே அந்தத்துறையில் வேலைகளைப் பெற்றுக் கொண்டு பணியில் சேர்ந்த பின்னும் படித்து குடிமைப் பணிகளுக்கு வருகின்றனர். அங்கெல்லாம் ஏற்கெனவே உங்களுக்கு வேறு வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது; அதனால் உங்களுக்கு இங்கு நேர்காணல் கிடையாது எனச் சொல்வதில்லை. அதற்கு மாறாக அமைப்புகளும் ஊடகங்களும் பாராட்டுக்களை வழங்குவதையே கண்டுள்ளோம்.
ஒரு தேசத்தின் குடிமகன் அல்லது குடிமகள் எந்தத் துறையில் தனது அறிவைப் பெறுவது என்பதையும், அந்த அறிவை எந்தக் கூட்டத்திற்குப் பயன்படுத்துவது என்பதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டுமே ஒழிய அமைப்புகளின் தற்காலிக முடிவுகளால் தீர்மானம் ஆவதாக இருக்கக் கூடாது. எல்லா வகையான கல்விப் பட்டங்களிலும் சேருவதற்கு அந்தத் துறை சார்ந்த கல்வியாளர்களின் குழுவான பாடத்திட்டக் குழுவினர் தான் அடிப்படை விதிகளை உருவாக்குகின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட விதிகள், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பொதுப் பேரவைகளான ஆட்சிப் பேரவைகளில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுகின்றன. அவ்வொப்புதலையும் கூடப் பல்கலைக்கழகங்களின் உயர் அமைப்புக்களான ஆட்சிக் குழுக்கள் விரிவாக விவாதித்து மேலொப்புதல் வழங்கலாம் அல்லது மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பலாம். இத்தகைய வழிமுறைகள் இப்போதுள்ள உயர்கல்வித்துறையில் இருக்கின்றன.கல்வித்துறையில் மட்டும் அல்ல; அரசு மற்றும் பொதுத்துறைகள் எல்லாவற்றிலும் இந்த நான்கு அடுக்கு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் அந்தத்துறை சார்ந்த பல தரப்புப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். அவர்களோடு பொது மக்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன. அவற்றைத் தலைமையேற்று ஒருங்கிணைக்கும் பொறுப்பில் தான் அந்தத்துறையின் தலைமைப் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.

நடைமுறையில் நமது அமைப்புக்கள் அவ்வாறு செயல்பட வில்லை என்பதே தனிமனிதர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு துறையின் ஆலோசனை அமைப்புக்களும் அதன் உறுப்பினர்களும் தங்களின் கடமை களையும் உரிமைகளையும் தவற விட்டு விட்டு அந்தந்த துறையின் தலைமைப் பொறுப்பாளர்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு எல்லாவற்றிற்கும் ஒப்புதல் அளிப்பவர்களாக இருக்கின்றனர் என நினைக் கிறார்கள். அல்லது தனக்கும் தனது குழுவிற்கும் சாதகமான அம்சங்களுக்காக வாதாடி அதிகாரத்தில் பங்கு பெற்றுக் கொள்பவர்கள் மட்டுமே என்று கருதுகிறார்கள். பொதுநலன் சார்ந்து தனது உறுப்பினர் கடமை யாற்றும் மனிதர்களைக் காண முடியாத நிலையில் அந்த அமைப்புக்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், அந்தத் துறைக்கு வெளியில் இருந்து நீதியைப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.இந்தப் போக்கைத் தீவிரப்படுத்தும் விதத்தில் நீதிமன்றங்களும் ஊடகங்களும் பணியாற்றுகின்றன. அது ஒருவிதத்தில் ஆறுதலற்றவனுக்கு ஆறுதல் தரும் கானல் நீர் தான். என்றாலும் இந்தப் போக்கு தொடர்ந்து கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பதைச் சொல்ல வேண்டியவர்கள் ஊடகத்துறைச் செயலாளிகளும் அறிவாளிகளும் என்பதை மறந்து விடக் கூடாது.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க நமது அமைப்பு ஏற்படுத்தியுள்ள இந்தப் பல அடுக்கின் உறுப்பினர்கள், ஒவ்வொரு கட்டத்திலும் அதனைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களைப் பதவி காரணமான தலைவர்கள் என்பதாகப் பார்க்க வேண்டுமே ஒழிய, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப் பட்டவர்களாகக் கருத வேண்டியதில்லை. அமைப்புகளில் செயல்படும் ஒவ்வொருவரும் சிந்தனை செய்வதும், செயல்படுவதும் அவசியம். அனைவருக்குமாகத் தலைவர்களே சிந்திப்பார்கள் என நினைப்பதும், அவர்களது சிந்தனைகளின் படி செயல்படும்போது கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பணியில் பங்கு பெற்றதாகவே இருக்கும். அதனால் தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படும் போது இந்த நீதிமானின் ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை என்று சொல்லித் தப்பித்து விட முடியாது.

July 07, 2007

மாய யானையின் ஊர்வலம்

ஒரு மாநிலம் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரியதாக இருப்பது மாநில வளர்ச்சிக்கு நன்மை தருமா என்று கேட்டால் நிர்வாகவியல் சார்ந்தவர்கள் சொல்லும் பதில் ‘இல்லை’ என்பது தான். பரப்பளவில் சிறியதாக இருப்பதே நிர்வாக வசதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ற நிலை என்பது நவீன அரசியல் அறிவு சொல்லும் உண்மை . பழைய வரலாறும் கூட அதைத் தான் சொல்கிறது. சோழப் பெருமன்னர்கள், தங்கள் நாட்டை மண்டலங்களாகவும் துணை மண்டலங்களாகவும் பிரித்து ஒவ்வொன்றிற்கும் பொறுப்புடையவர்களாக மண்டலாதிபதிகளை நியமித் திருந்தார்கள் என்று வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். இந்தியாவில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட மாமன்னர்கள் இருந்ததாகவும் வரலாற்று ஆதாரங்கள் சொல்கின்றன.
நிகழ்கால அரசியல் அறிவையும் வரலாற்று நிகழ்வுகளையும் பொய்யாக்கும் விதத்தில் இந்தியாவில் ஒரு மாநிலம் இருக்கிறது. அதன் பெயர் உத்தரப் பிரதேசம். மக்கள் தொகை அளவிலும் நிலப்பரப்பு அடிப்படையிலும் மிகப் பெரிய மாநிலம்அவ்வாறு இருப்பது அந்த மாநிலத்துக்குப் பெருமையே அல்ல; அம்மாநிலம் பொருளாதார வளர்ச்சியடையாமல் இருப்பதற்குக் காரணமே பெரிதாக இருப்பது தான் என்று ஒருவர் வாதிடலாம். ஆனால் ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மைக்கு உள்ள வலிமையை உணர்ந்த வர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். இந்தியாவின் தலைமை யமைச்சர் களாகப் பல ஆண்டுகள் அதிகாரம் செலுத்திய நேரு குடும்பத்தின் சொந்த மாநிலம் உத்திரப் பிரதேசம் என்பது மட்டுமல்ல; காங்கிரஸ் அல்லாத கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிக்குத் தலைமை தாங்கிய சௌத்திரி சரண்சிங், விஸ்வநாத் பிரதாப் சிங், அடல்பிகாரி வாஜ்பாய் போன்றவர்களைத் தேர்வு செய்து அனுப்பிய மாநிலமும் உத்திரப்பிரதேசம் தான். இந்தியப் பாராளு மன்றத்திற்கு அதிகப் படியான உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பும் அந்த மாநிலம் இந்திய தேசத்தின் நிகழ்கால அரசியலில் வகிக்கும் பங்கு எப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது.
நிகழ்கால அரசியல் போக்கின் திசையைத் திருப்பி விடும் நிகழ்வுகளும் இயக்கங்களும் உத்தப்பிரதேசத்திலிருந்து கிளம்பி இருக்கின்றன. சுதந்திர இந்தியாவின் அரசியல் திசையைத் திருப்பிய பெரும் நிகழ்வுகள் பல உள்ளன என்றாலும் முதலிடத்தை பிடிக்கக் கூடிய நிகழ்வு பாப்ரி மஜ்ஜித் இடிப்பு என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பு. அயோத்தி நகரத்தில் இருந்த அந்தக் கட்டிடப் பகுதிதான் புராண நாயகன் ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சையை மையப் படுத்தி 1992-இல் ஏற்பாடு செய்யப்பட்ட ரத யாத்திரையும் கட்டிட இடிப்பும் இந்தியாவில் ஏற்படுத்திய அதிர்வலைகள் கடந்த பத்தாண்டு களாக கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மதப் பெரும் பான்மையின் ஆட்சி என்ற அடிப்படையில் இயக்கம் நடத்தும் பாரதீய ஜனதாகட்சியின் எழுச்சிக்குக் காரணம் அந்த நிகழ்வுதான்.1992 ல் ஏற்பட்ட அதிர்வலை களுக்குச் சற்றும் குறையாத அதிர்வலைகளை கடந்த மாதத்தில் நடந்த உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. சமயச் சார்பற்ற அரசியல் என்பதையும், மதப் பெரும்பான்மையின் அதிகாரம் என்பதையும் ஓரங்கட்டி விட்டு எழுந்துள்ள இந்த அதிர்வலைக்குப் பின்னணியில் இருப்பது சாதிப் பெரும்பான்மையின் அதிகாரம் என்னும் கருத்தியல் ஆகும்.
பகுஜன் கட்சியின் தலைவியான மாயாவதி தனது சின்னமான யானையை முன்னிறுத்தி அடைந்துள்ள இந்த வெற்றி இந்தியாவிற்குப் புது வகை அரசியலை அறிமுகப் படுத்தியுள்ளது என்று தேசியப் பத்திரிகைகள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளின் கூட்டணி என்பதற்கு மாறாகச் சாதிகளின் கூட்டணியால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதும், சாதி அமைப்பில் அடிநிலையில் உள்ள ஒருவரின் தலைமையை அதிகாரத்தின் உச்சியிலேயே இருந்து பழக்கப் பட்ட ஆதிக்க சாதியினர் தொடர்ந்து ஏற்றுச் செயல்பட மாட்டார்கள் எனவும் ஆருடம் கூறப்பட்டாலும் மாயாவதியின் அரசியல் எதிர்கால இந்தியாவின் அரசியலாக இருக்கப் போகிறது என்பதை மறுக்கவும் முடியாது.
மாயாவதியின் தலைமையை ஏற்று வெற்றி பெற்றுள்ள 206 சட்டமன்ற உறுப் பினர்களில் தலித்துகள் 61 பேர்தான். பிராமணர்களின் எண்ணிக்கை 34. ஆக மொத்தம் 95 தான். மீதமுள்ள 111 பேரில் இசுலாமியர்கள் 30; இதரப் பிற்பட்ட சாதியினர் 51; ஆதிக்க சாதிகளான ராஜ்புத், ஜாட், குர்மி,யாதவ்கள் 30 பேர் தேர்வு பெற்றுள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்தப் புள்ளி விவரங்களைச் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளும் ஒருவர் இந்தக் கூட்டணியை வெறும் பிராமணர் -தலித் கூட்டணி என்று சொல்லி விட முடியாது. சாதி அமைப்பில் இடையில் உள்ள பிற்பட்ட வகுப்பினரும் மிகப் பிற்பட்ட வகுப்பினரும் கூட பகுஜன் சமாச கட்சியின் உறுப்பினராகி, அக்கட்சியின் சின்னமான யானையை ஏற்றுக் கொண்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை மறந்து விடவும் மறுத்து விடவும் முடியாது. ஆனால் தேசியப் பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் திரும்பத் திரும்பப் பிராமணர் -தலித் கூட்டணி என்றே சொல்கின்றன.
உத்திரப் பிரதேச அரசியலைக் கடந்த இருபதாண்டுகளாகக் கவனித்து வரும் யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள் . இன்று மாயாவதி தனியொரு கட்சி யின் தலைவியாக வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தரக் கூடிய கருத்தியல் தளத்தையும் செயல் தளத்தையும் ஏற்படுத்தியவர் அவரது அரசியல் முன்னோடி கன்சிராம் என்பதை வரலாறு மறக்காது.. ஏற்கத் தக்க கூட்டணி அல்ல என்ற போதிலும் பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டணி சேரும்படியும் , விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படும் என்ற தெரிந்த நிலை யிலும் முலயாம் சிங்கின் சமாஜவாதிக் கட்சி யோடும் கூட்டணி வைத்து அரசியல் அதிகாரத்தைப் பெறுவது பற்றி வழிகாட்டியவர் கன்சிராம். தலித் துகளுக்கு அரசியல் அதிகாரத்தின் ருசி என்ன என்பதை அறியச் செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக் கோளோடு கன்சிராம் எடுத்த முடிவுகள் தான் இன்று தனியொரு கட்சியின் வெற்றியாக மாற்றிக் காட்டியிருக்கிறது. மாயா வதியின் வெற்றிக்குக் காரணமான அந்த மாய யானையின் தும்பிக்கைக்குக் கூட்டணி வலிமையை எவ்வாறு உருவாக்குவது என்னும் சிந்தனையைப் பலவிதமாக யோசித்துச் சொன்னவர் அவர்.1970-களுக்குப் பின் தனக்கான கொள்கையையும் இலக்குகளையும் தீர்மானித்துக் கொண்டு செயல்பட்ட அரசியல் சிந்தனையாளர்களில் முதன்மையானவர் கன்சிராம் என்பதை வரலாறு எழுதிக் காட்டத் தான் போகிறது.
சுதந்திர இந்தியாவில் அடித்தள மக்கள் ஆட்சி அதிகாரத்தின் ருசியிலிருந்து விலக்கி வைக்கப் பட்ட தந்திரத்தை இப்போது உணர்ந்து விட்டார்கள். அவர் களுக்கு எதிராக இருந்த தடைகள் எவை எனச் சரியாகக் கணிக்கும் பக்குவநிலைக்கு வந்து விட்டார்கள் என்பதும் ஓரளவு உண்மைதான். தன்னை அணுகும் ஒவ்வொருவரையும் சந்தேகத்தோடு எதிர்கொள்ளும் அறிவை ஏற்கெனவே அம்பேத்கரின் சிந்தனைகள் கற்றுத் தந்துள்ளன. என்றாலும் கன்சிராமின் வழிகாட்டுதலில் உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி நடத்திக் காட்டிய அந்த மாயத்தைப் போல ஒவ்வொரு மாநிலத்திலும் தலித் அரசியல் மாயங்கள் நிகழ்த்தும் எனச் சொல்லவும் முடியாது. ஏனெனில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதற்கெனத் தனியான குணங்களையும் சமூகவயத் தன்மைகளையும் கொண்டிருக்கின்றன.எடுத்துக் காட்டாகத் தமிழ்நாட்டின் நிலைமைமையையே கூட எடுத்துக் கொள்ளலாம்.
இங்குள்ள பட்டியல் இனத்தவர்கள் தலித் என்ற அடையாளத்தோடு ஒன்றிணைவதில் பெரும் தடைகள் இருப்பதாக நம்புகின்றனர். வடமாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் பட்டியல் இனத்தில் ஆதிதிராவிடர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு என்றே நம்பப்படுகிறது. அதே போல தென்மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் தேவேந்திர குலத்தவரைத் திரட்டும் சக்தி கொண்டதாகப் புதிய தமிழகம் கருதப்படுகிறது. இவ்விரு அமைப்புகளும் அடிப்படையில் தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகளாகத் தோன்றுவதால் தெலுங்குமொழியைப் பேசும் மொழியாகக் கொண்டிருக்கும் அருந்ததியர்கள் இவ்வமைப்புகளோடு பேச்சு வார்த்தைக்கே தயாரில்லாமல் இருக்கின்றனர்.
உத்திரப் பிரதேச மாதிரியைத் தமிழகத்திற்குப் பொருத்திக் காட்டி வெற்றி பெற விரும்பும் நிலையில் இம்மூன்று சாதியினரையும் வழி நடத்தும் இயக்கங்களும் தலைமைகளும் ஒன்றிணைவது முதல் நிபந்தனையாக இருக்கிறது. அடுத்த கட்டமாக அவர்கள் தமிழகத்தில் அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சாதி, மொழி, மற்றும் மதச் சிறுபான்மையினருடன் விவாதத்தைத் தொடங்க வேண்டும். அந்த விவாதங்களில் பல்வேறு விதமான புரிதல்களும் விட்டுக் கொடுத்தல்களும் நடந்தாக வேண்டும்.
இதுவெல்லாம் நடக்குமா என்று கேட்டால் உடனடியாகப் பதில் எதுவும் சொல்லி விடமுடியாதுதான்.அதிகாரத்தை நோக்கிய பயணங்கள் நேர்கோட்டுப் பயணங்கள் அல்ல என்பதை அறிந்தவர்கள் அதற்கான முயற்சிகளைக் கைவிடுவதில்லை. விளிம்புநிலை மனிதர்கள் இப்போது அதை அறிந்தவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்திய தேசத்தின் யதார்த்தம்.