June 15, 2007

அழித்து எழுதும் ஆற்றல்-


ஊடகவெளி 6-
அழித்து எழுதும் ஆற்றல்-
கடந்த இரண்டு மாதகாலமாகத் தினசரி ஒரு நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. காதில் விழும் சொல்லாக இருந்த நிலை மாறி கண்ணில் படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்து கொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகர்ப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் , அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடு கூடிய முகத்தையும்¢ கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி சில பத்துத் தடவையாவது பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
திருநெல்வேலி நகரத்தில் வாழும் எனக்கு மட்டும் தான் இந்த அரிய வாய்ப்பு என்றில்லை. தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் கால் நடையாகவும்¢ வாகனப் பயணமாகவும் பயணிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கத்தான் செய்திருக்கும். ஒலியாகவும் ஒளியாகவும் பிம்பமாகவும் தமிழர்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் அந்தச் சொல் சிவாஜி. ஒரு வருட காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்டுப் படப்பிடிப்பும், அதன் தொடர்ச்சியான வேலைகளும் முடிந்து இதோ வரப்போகிறது..! அதோ வரப்போகிறது..! எனப் போக்குக் காட்டத் தொடங்கியே சில மாதங்கள் ஆகி விட்ட ஒரு திரைப்படத்தின் பெயர். போக்குக் காட்டத் தொடங்கிய அன்று முதல் சிவாஜி என்ற பெயரைத் தமிழர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஒரு புதிய அர்த்தத்தில். ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் பெருவரவாகத் தமிழகத்தைத் தாக்க உள்ள அந்தப் படம் ஒருவேளை தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பிடித்துப் போய்விட்டால் வெள்ளி விழாக் கொண்டாடலாம். பாட்ஷா தொடங்கி வசூலில் வெற்றிக் கொடி கட்டிய வெற்றிப்பட வரிசைகளில் ஒன்றாக மாறி ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை மேலும் கூட்டக் கூடும். அதன் பிறகு சிவாஜி ஒரு திரைப்படத்தின் பெயர் தான். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு சிவாஜி என்பது ஒரு திரைப்படத்தின் பெயர் மட்டுமல்ல. விழுப்புரம் சின்னையா கணேசனாக இருந்த ஒரு நபர், நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, நடிப்புக்கலையின் சில பரிமாணங்களில் உச்சத்தை அடைய வேண்டும் எனக் கொண்ட ஆசையின் வெளிப்பாடாகப் பெற்ற பட்டத்தின் பெயர் சிவாஜி. மேடை நடிப்பைத் தொடர்ந்து திரைப்பட நடிப்பில் தனது ஈடுபாட்டை ஒருவிதக் காதலும் வெறியும் கலந்து வெளிப்படுத்தி, வாழ்நாள் முழுக்க அது ஒன்றையே தனது அடையாளமாகக் கொண்டு மறைந்து போன ஒரு நடிப்புக் கலை ஆளுமையின் பெயர் சிவாஜி.பராசக்தியில், மனோகராவில், வீரபாண்டிய கட்டபொம்மனில், எனத் தமிழ் வசனங்களை உச்சரிக்கும் முறைக்கு உதாரணமாக இருந்த பெயர் சிவாஜி. உணர்ச்சிகரமான தமிழ்க் குடும்பங்களில் இருந்த அண்ணணாக, கணவனாக, தந்தையாக, வேலைக்காரனாக, காதலனாக, மகனாக எல்லாம் தனது மிகை நடிப்பின் வழியே நிமிர்ந்து நின்ற பெயர் சிவாஜி. புதிய பறவை, சிவந்த மண், தங்கப் பதக்கம், கௌரவம் போன்ற படங்களில் மேற்கத்திய வகைமாதிரி கதாபாத்திரங்களின் வெளிப்பாடாக வந்து போன ஆளுமை சிவாஜி.சவாலே சமாளி, பழனி, எனத் தொடங்கி கிராமத்துப் பாத்திரங்களில் வாழத் தொடங்கிய வாழ்க்கையை முதல் மரியாதையிலும் , தேவர் மகனிலும் முழுமையடையச் செய்த கலைஞனின் பெயர் சிவாஜி. ஓராண்டுக்கு முன்புவரை சிவாஜி என்ற சொல்லைச் சொல்லியவுடன் நினைவுக்கு வரும் அடையாளங்கள் அனைத்தும் வரப்போகும் திரைப்படப் பெயரின் விளம்பரங்கள் வழியாக அழிக்கப்படும் வேலை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அழிக்கப்பட்ட அடையாளங்களுக்குப் பதிலாக திரைக்கு வரும் படம் எழுதப் போகும் அடை யாளங்கள் எவை என்பதையும் படத்தின் முன்னோட்டமே சொல்லிவிட்டது. சிவாஜி என்பது ஒருவிதத்தில் நளினம் (The Style), ஒருவிதத்தில் காதலன் (The lover), இன்னொரு விதத்தில் கேலி (The fun), மற்றொருவிதத்தில் அச்சமூட்டுபவன்(The terror), யோசித்துப் பார்த்தால் சீர்திருத்தக்காரன், (The reformer), அவன் தான் சக்தி (The force).மொத்தத்தில் அவன் ஒரு தலைவன் (The boss). எனப் புதுப்புது அர்த்தங்களை எழுதப் போகிறது ரஜினிகாந்தின் சினிமா. [கொள்ளைக் கூட்டத்தின் தலைவனா..? கொள்கைக் கூட்டத்தின் தலைவனா..? என்பதைப் படம் வந்தபின் எழுதப்படும் விமரிசனங்கள் சொல்லக்கூடும்]இப்படிச் சொன்னவுடன் ஷங்கர், ரஜினிகாந்த், ஏவிஎம் கூட்டணி சிவாஜி எனப் பெயர் வைத்து நடிகர் திலகம் சிவாஜியின் பெயரை அழிக்கும் சதித்திட்டத்தோடு படம் எடுத்தார்கள் எனக் கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இந்தக் கூட்டணிக்கு அந்த நோக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை; அவர்கள் நினைத்தது சிவாஜியின் பெயருக்கு இன்னொரு பரிமாணத்தைச் சேர்க்கப்போகிறோம் என்பதாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பின்பற்றும் பெருந்திரள் வாதம் (Populism) வேறுவிதமான ஆற்றல் உடையது என்பதுதான் கவனிக்க வேண்டியது. நிகழ்கால ஊடகங்களின் அடிப்படைத் தத்துவமாக பாப்புலிசம் ( populism ) என்னும் பெருந்திரள்வாதம் தான் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பாப்புலிசம் என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்த ௲ populus- என்ற சொல்லிலிருந்து உருவான ஒரு சொல்.ஆங்கிலத்தில் பீயூப்பிள்- People-என்பதே மூலச்சொல். அதன் பொருள் மக்கள் என்பதுதான். தேசத்தின் மக்கள் என்ற அர்த்தத்தில் தேசப்பற்றையும் சேர்த்துக் கொள்ளும் இயல்புடையது.மக்கள் ஆட்சி, மக்கள் கலை, மக்கள் சினிமா என ஒவ்வொன்றோடும் அது சேரும் போது பெருந்திரளின் சார்புடையது என மாற்றம் அடைந்து பொது மக்கள் என்னும் கவசத்தைத் தனதாக ஆக்கிக் கொள்ளும் இயல்புடையது. அப்படியொரு கவசம் கிடைத்தவுடன் அதன் உதவியுடன் ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களையும் அர்த்தங்களையும் அழித்துவிட்டுப் புதிய அர்த்தங்களை எழுதுவதில் தயக்கம் காட்டுவதே இல்லை. பெருந்திரளை வசப்படுத்துவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாப்புலிசம் உறுதியான தத்து வத்தையோ, இலக்குகளையோ வைத்துக் கொள்வதில்லை. மக்கள்கலை எனச் சொல்லிக் கொண்டாலும் மக்களின் ரசனையுணர்வையும் வாழ்க்கை முறையையும் மாற்றுவதற்கு உறுதியான கலை இலக்கியக் கோட்பாடு எதனையும் பின்பற்றுவதும் இல்லை. இதில் ஆச்சரியமான ஓர் உண்மை என்னவென்றால் பெருந்திரள் வாதம் என்பதை வலதுசாரிகளும் விரும்புகின்றனர்; இடதுசாரிகளும் விரும்புகின்றனர் என்பதுதான். இடதுசாரிகள் சொல்லும் பெருந்திரள் வாதமும், வலதுசாரிகள் பயன்படுத்திய பெருந்திரள் வாதமும் அடிப்படையான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் மைய நோக்கம் அதிகாரத்தை நோக்கி நகர்தல் என்பதும், ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களை அழித்துவிட்டுப் புதிய அடையாளங்களை எழுதுதல் என்பதுமாகத் தான் இருக்கிறது.வலதுசாரிப் பெருந்திரள் வாதம் தேசியம், புனித இனம், கலப்பற்ற பண்பாடு, கடவுளால் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்பதான அடிப்படைவாதச் சொற்களை உத்திகளாகப் பயன்படுத்தி அதிகார மையங்களைக் குறி வைக்கின்றன என்றால், இடதுசாரிப் பெருந்திரள்வாதம் அதிகாரத்தை நோக்கி நகர உழைக்கும் வர்க்கம், நடுத்தரவர்க்கம், விவசாயக் கூலிகள், ஏழைகள், பாமரர்கள், பாட்டாளி வர்க்கம் என்பதான சொல்லாடல்களை உற்பத்தி செய்கின்றன. பெருந்திரளான தமிழ் மக்களைக் கவர வரும் சிவாஜியின் கதாநாயகனான ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்,மட்டுமே பெருந்திரள் வாதத்தின் பிரதிநிதிகள் என்று நினைக்க வேண்டியதில்லை. அப்படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், வசனகர்த்தா சுஜாதா என அனைவருமே மக்கள் கூட்டத்தின் ரசனைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். அவர்கள்,‘மக்களைச் சென்று சேர வேண்டும்; மக்கள் விரும்பு கிறார்கள், அதனால் படம் எடுக்கிறோம்’ என்று சொல்பவர்கள். ஆனால் அப்படிச் சொல்வதெல்லாம் திரள்மக்கள் மூலம் கிடைக்கக் கூடிய பணம், பொருள், அதிகாரம் ஆகியவற்றைக் குறிவைத்துச் சொல்வது என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. பெருந்திரள் வாதத்தை எந்தக் கேள்விகளுமற்று ஏற்றுக் கொள்ளும் ஊடக வலைப்பின்னல், பெருந்திரள் வாதத் தோடு இணைந்து வரும் தனித்த அடையாளத்தையும் கூட அப்படியே ஏற்றுக் கொள்ளவே செய்கிறது. இதற்கும் தமிழ் நாட்டில் உதாரண நிகழ்வொன்று நடந்து கொண்டிருக்கிறது. கவிஞர் கனிமொழி எந்தக் கேள்விகளும் இல்லாமல் பெருந்திரள் ஊடகப் பரப்பில் கவிஞர் கனிமொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளார். அவரது அரசியல் நுழைவைக் குறித்து துருவித் துருவிக் கேள்விகள் எழுப்பும் பத்திரிகைகள், கனிமொழி என்ன வகையான கவிதைகள் எழுதுபவர்;அவரது இலக்கியம் சார்ந்த, பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் தமிழ்நாட்டிற்கு புதுவகை அரசியலைக் கொண்டுவருமா? என்பதை அறிந்து கொள்ளும் விதமாகக் கேள்விகளை எழுப்பவே இல்லை. கலைஞர் கருணாநிதி என்ற பெருந்திரள் அடையாளத்தைப் போலக் கவிஞர் கனிமொழி என்பதும் இன்னொரு பெருந்திரள் அடையாளம். அவ்வளவுதான். பெருந்திரள் வாதம் மட்டுமே ஆபத்தானது என நினைக்க வேண்டியதில்லை; அதனோடு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கைகோர்த்துக் கொள்ளும் ஊடக வலைப் பின்னல்களும், அதைவிட ஆபத்தானவைதான்.


ஊடகவெளி 5-
வெளிகளைக் கடக்கும் விளையாட்டு
‘தரமான பொருட்கள்; குறைந்த விலை, நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள் ‘எனப் போட்டி வியாபாரம் தனது இலக்குகளைத் தீர்மானித்துக் கொண்டு செயல்படும் காலத்தில் இந்திய மக்கள் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள்¢. வியாபாரத்தில் போட்டிகளை அனுமதித்தால், நுகர்வோருக்கு நன்மை கிடைக்கும் என்பது தாராளமயப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. இந்த அடிப்படை விதி நடைமுறை யிலுள்ள சந்தையில் சரியாகப் பொருந்தி வருகிறதா..? என்று கேட்டால் ஆதரவான பதிலும் சொல்ல முடியாது ; எதிரான பதிலையும்¢ சொல்லி விட முடியாது.எந்தப் பதிலைச் சொன்னாலும் புள்ளி விவரங்கள் வேண்டும். ஒரு வேளை பொருளாதாரத் துறை ஆய்வாளரோ, புள்ளியியல் துறை அறிஞரோ, அதற்கான பதிலைத் தர முடியும். புள்ளி விவரங்களைத் திரட்டும் வழிமுறை களும், கைவசம் உள்ள புள்ளிவிவரங்களை, கைவசம் உள்ள முடிவுகளுக்கேற்ப விளக்கும் சாமர்த்தியங்களும் நிபுணத்துவமும் அவர்களுக்குத் தான் உண்டு. நிபுணர்களின் சாமர்த்தியங்கள் எல்லா நேரத்திலும், எல்லா தளங்களிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. அரசியல் தளத்தில் அத்தகைய நிபுணத்துவம் ஏற்படுத்திய எதிர்மறை விளைவின் பருண்மையான வெளிப்பாடு மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பதவி பறிப்பு. பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் வல்லுநர்களும் கூடத் தாராளமயப் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறார்களே தவிர அதன் விளைவுகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. திரட்டப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு நுகர்வோருக்கு இத்தனை சதவீதம் லாபம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ;இதுவரை மானிய விலையில் உணவுப்பொருட்களைப் பெற்று வந்த அடித்தட்டுப் பொருளா தாரத்தைச் சேர்ந்த பிரிவினரில் இத்தனை சதவீதம் பேர் தாராளமயச் சந்தையில் பொருட்களை வாங்கும் சக்தி யுடையவர்களாக மாறியிருக்கிறார்கள் என்ற கணக்கைச் சொல்வதில்லை. அதே போல் தரமான பொருட்கள் மட்டுமே சந்தையில் உள்ளன; மற்றவை உற்பத்தியை நிறுத்திக் கொண்டு போட்டிச் சந்தையிலிருந்து விலகிக் கொண்டன என்பதையெல்¢லாம் உறுதியாகச் சொல்லும் வல்லுநர்களும் இல்லை.ஊடக வெளியில் அலையும் காட்சித் தொகுப்புக்களையும் அதன் தொடர்ச்சியான கருத்துருவாக்க விளையாட்டுக் களையும் பற்றிப் பேசுபவர்களுக்குப்¢ புள்ளிவிவரங்கள் அவ்வளவாக உதவும் எனச் சொல்ல முடியாது. இந்திய வாடிக்கையாளர்களை மனிதர்கள் என்ற நிலையில் இருந்து வேறொன்றாக மாற்றிக் காட்டும் விளம்பரங்கள் உண்டாக்கும் பாவனைகள் விதம் விதமானவை. குறிப்பாகக் குளிர் பானங்களின் விளம்பரங்களும் , வாகனங் களின் விளம்பரங்களும் மனிதர்களைப் பிம்பங்களாக மாற்றிக் கனவுலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. நடப்பு வாழ்க்கையிலிருக்கும் வெளிகளைக் கடந்து பயணிக்கும் அனுபவம் கிடைப்பதாகக் காட்டும் இத்தகைய விளம்பரங்கள் ’இயல்பிலிருந்து மாற்றம்‘ என்பதின் மேல் மனிதர்களுக்குள்ள ஈர்ப்பை வளைத்துப் போடு கின்றன. குளிர்பான விளம்பரங்களில் ஒன்றில் நடிகை அசின் பறக்கும் பொம்மைப் பெண்ணாக மாறி வீடு , சாலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் என எல்லாவற்றையும் மறந்து இளைஞனொருவனுடன் காடு , மலை, கடல் எனப் பயணம் செய்துவிட்டுத் திரும்பவும் பழைய நிலைக்கு வருகின்றாள். நான்கு சக்கர வாகனம் ஒன்றின் விளம்பரத்தில் தாத்தாவும் பாட்டியும் தங்கள் வயதை மறந்து இளம் பருவத்துக் காதல் நினைவுக்குள் பயணம் செய்வதாகக் காட்டப்படுகின்றனர். மற்றொரு விளம்பரத்தில் இளம்பெண்கள் இரு சக்கர வாகனப் பயணத்தை கடல் அலைகளைக் கிழித்துக் கொண்டு பறக்கும் அச்சமற்ற பயணமாக உணர்கின்றனர். அண்மையில் மறைந்த ழான் போத்ரியா புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுவதை விட ஊடக வெளியில் உண்டாக்கப்படும் பாவனைகள் பற்றியே அதிகம் விவாதித்துக் கொண்டிருந்தார் என்பதை இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளலாம்.பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் சொன்னார்: தரமான பொருட் களுக்கு மட்டுமே சந்தையில் அனுமதி என்ற கட்டுப்பாடோ, அவை மட்டுமே நுகரப்படும்; மற்றவை ஒதுக்கப்படும் என்ற நிலையோ இந்தியச் சந்தையில் இல்லை. இந்த அம்சம் தான் பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியச் சந்தையைக் குறிவைக்க முக்கியக் காரணங்களாக இருக்கின்றது. ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரிக்கும் முதல்தரமான தொலைக்காட்சிப் பெட்டியையோ, சலவை இயந்திரத்தையோ வாங்கும் சக்தி கொண்ட உயர் வருவாய்ப் பிரிவினரும் இங்கு உண்டு; அதே நிறுவனங்கள் வேறு பெயரில் தயாரிக்கும் நாலாம் தர, ஐந்தாம் தரத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், சலவை இயந்திரங்களையும் வாங்கும் இயல்பு கொண்ட கீழ்மத்திய வருவாய்ப் பிரிவினரும் உண்டு என்பதுதான் அவர் சொன்னதின் சாரம். அவரே இன்னொன்றும் சொன்னார்: தாராளமயப் பொருளாதாரச் சந்தையும் போட்டிப் பொருளாதார நிலைமை களும் பன்னாட்டு மூலதனமும் இந்தியாவைத் தங்கள் விளையாட்டுக் களமாக ஆக்கிய பின்பும் கூடத் தமிழக முதலாளிகள் இன்னும் முதலாளியவாதிகளாக ஆகவில்லை என்று சிரிப்போடு சொன்னார். அந்தச் சிரிப்புக் கான அர்த்தத்தையும் அவரே விளக்கியபின்புதான் எனக்குப் புரிந்தது. ஒரு முதலாளியின் குணாம்சத்தை அளக்கும் கருவியாக மூலதனத்தை மட்டும் சொல்வோமானால் இங்கு முதலாளிகள் பலர் உண்டு தான். தரகு முதலாளிகளாகவும், பன்னாட்டு முதலாளிகளாகவும் கூட அவர்கள் வகைப் படுத்தப் படலாம். ஆனால் , மூலதனம் மட்டுமே முதலாளிய அடையாளம் அல்ல. தாராளவாத மனோபாவம் என்ற அடிப்படையான குணம் ஒன்றும் அதற்கு உண்டு. உழைக்கும் உடலையும், செயல்படும் புத்திசாலித் தனத்தையும் ஒத்துக் கொள்ளக் கூடிய குணம் முதலாளியத்தின் முக்கியமான பண்பு. அந்தப் பண்புதான் எதனையும் பேசித்தீர்க்கலாம் என்ற நம்பிக்கையை உறுதி செய்கிறது. சட்டத்திற்குக் கட்டுப்படுகிறது; அல்லது கட்டுப்படுவதான பாவனையாவது செய்கிறது. தமிழக முதலாளிகள் இதற்கு மாறானவர்கள். சுரண்டுவதில் கூட சொந்த சாதிப் பாசத்தைக்¢ காட்டுபவர்கள். சொந்த சாதி ஏழைகளுக்கே முன்னுரிமை கொடுத்து வேலையில் அமர்த்திக் கொள்பவர்¢கள். சொந்த சாதி ஒதுக்கீடு முடிந்த பின்புதான் மற்றவர்களை அனுமதிப்பனவாக தேசிய முதலாளிகளின் நிறுவனங்கள் உள்ளன என்பதை நண்பரின் சிரிப்பு சொன்னது. அவர் சொன்னது ஏறத்தாழ உண்மைதான். முதலாளியும் தொழிலாளியும் சாதிச் சங்கத்தில் ஒன்றாக இருப்பதால் , தொழிற்சங்கம் தேவையில்லாமல் போய்விடும். கோயில் கொடையிலும், கல்யாணம், பூப்புனித நீராட்டு என வீட்டு விசேஷங்களுக்கு முதலாளியோ, முதலாளி வீட்டு நாய்க்குட்டியோ வந்து மொய் எழுதிவிட்டுப் போய்விடுவதால், போனஸ், இழப்பீடு எனத் தனியாகக் கேட்க வேண்டியதில்லை. தமிழக முதலாளிகள் என்றில்லை, இந்திய முதலாளிகளே இப்படித்தான் இருக்கிறார்கள். தரகு வணிகத்தில் ஈடுபடுவதற்கு மட்டும் அல்ல; சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதற்குக் கூடக் குறிப்பிட்ட சாதிகளுக்குத் தான் இங்கு தைரியமும் விருப்பமும் இருக்கிறது. குறிப்பாகத் தலித்துகளுக்கு வியாபார வெளி எப்பொழுதும் மறுக்கப்பட்ட வெளிதான். ஆனால் ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களின் சில்லறை வர்த்தக நுழைவை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்த முனையும் போது மட்டும் சாதி வெளிகள் கடந்த ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்திய வாழ்க்கை எந்த விதத்தில் பார்த்தாலும் வெளிகளைக் கடக்கும் கணங்களில் இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. அந்தக் கணத்திற்குள் பருண்மையான வேறுபாடுகளும் இருக்கின்றன. நுகர்வுத் தளத்தில் இருப்பது நிர்ப்பந்தமற்ற ௲ பிரக்ஞையற்ற வெளி கடத்தல். அதனை எதிர்க்கும் போராட்டத்தளத்தில் இருப்பதோ நிர்ப்பந்தத்தின் விளைவு. நிர்ப்பந்தங்கள் விலகும் போது பிரக்ஞையற்று நிர்ப்பந்தமற்ற ஈர்ப்பில் மனித மனம் நுழைந்து விடுகிறது என்பது தான் ஆச்சரியமான உண்மையாக இருக்கிறது.


ஊடகவெளி -4
விளையாட்டல்ல; யுத்தம்
என் கையிலிருக்கும் செல்போன் [Cell phone] கருவிக்குத் தமிழ்ச் சொல்லைக் கண்டு பிடிக்கும் முயற்சியை அநேகமாகக் கைவிட வேண்டியதுதான் என்று தோன்றுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னாள் செல்போன் ஓன்றை வாங்கியவுடன் கைபேசி என மொழி பெயர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த மொழி பெயர்ப்பு அந்தக் கருவியின் இருப்பிடத்தை வைத்துச் செய்த மொழி பெயர்ப்பு. ஏற்கெனவே இருந்த வீட்டுத் தொலை பேசியையும் கையில் வைத்துத் தான் பேச வேண்டும் என்றாலும், இருந்த இடத்தை விட்டு வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் செல்போனைக் கையோடு எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதால் ‘கைபேசி’ என்ற பெயர்ப்பு சரியெனத் தோன்றியது. நண்பர் ஒருவர் அலைபேசி எனத் தனது முகவரி அட்டையில் அச்சிட்டிருந்ததைப் பார்த்தேன்.அலையும் இடங் களுக்கெல்லாம் தகவலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதாலும், அங்கிருந்த படியே தகவல்களை அனுப்ப முடிகிறது என்பதாலும் அலைபேசி என்ற மொழி பெயர்ப்பு சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், செல்போனின் பயன்பாடுகளைப் பார்த்தால் அந்த மொழி பெயர்ப்பும் போதாது என்று தான் தோன்று கிறது. தனது குறுஞ்செய்திகளின் வழியாகத் தந்தியின் வேலையையும் தனதாக்கிக் கொண்டு விட்டது செல்போன். தந்தியின் இடத்தை மட்டும் அல்ல, வானொலி, கேமிரா, தொலைக்காட்சிப் பெட்டி என எல்லாக் கருவிகளின் இடத்தையும் கூடத் தனதாக்கிக் கொண்டு விட்டது. இணையத் தளமாகக் கூட ஆகிக் கொண்டிருக்கிறது. பல நோக்குப் பயனுடையதாக ஆகி விட்ட செல்போனை இப்பொழுது எப்படி மொழி பெயர்ப்பது .? ஒவ்வொரு அர்த்தமாக உருவாக்கி, உருவாக்கி உடனுக்குடன் அழித்துக் கொண்டிருக்கும் அதனைத் தமிழில் எப்படிச் சொல்லுவது என்று தெரியவில்லை? இப்போதைக்குச் செல்போன் என்றே சொல்லி விட்டு , அதில் நடக்கும் விளையாட்டு ஒன்றுக்குள் நுழையலாம். இந்த விளையாட்டு அர்த்தங்களை உருவாக்கி அழிக்கும் விளையாட்டு அல்ல; கருத்துக்களை உண்டாக்கி மடைமாற்றம் செய்யும் விளையாட்டு. விளையாட்டு சிறியது என்றாலும், எதிர்பார்ப்பு பெரியது என்றே நினைக்கிறேன்.எனது செல்போனுக்கு வந்த அந்தக் குறுஞ்செய்தி ஆங்கில எழுத்துக்களில் இருந்தது. அதனைத்¢ தமிழில் தருகிறேன்; 1. Yes my lord.. ( எஸ் மை லார்ட்..) - இன்னா நைனா..2. Objection my lord.. (அப்செக்சன் மை லார்ட்..)- அமிக்கி வாசி அன்னாத்தே..3. Court adjourned .. (கோர்ட் அட்ஸெண்ட் ..)- இன்னொரு தபா பாக்கலாம்..4. Objection over ruled .. (அ ப்செக்ஷன் ஓவர் ரூல்டு)-கௌம்பு .. காத்து வரட்டும்..5. Order.. Order. (ஆர்டர் .. ஆர்டர்.. ) -அய்யே கம்முனு கெடம்மெ.. இக்குறுஞ்செய்தியை உருவாக்கியவரின் நோக்கம் என்னவாக இருக்கும்? அதனைத் தனது செல்போனில் பார்த்த வுடனேயே நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் பரிமாறிக்(Forward) கொள்பவர்களின் நோக்கங் கள் என்னவாக இருந்திருக்கும்? நீதிமன்ற விவாதங்கள் தமிழில் நடக்க வேண்டும் எனத் தமிழக அரசு விருப்பம் தெரிவித்த போது, அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. அந்த நேரத்தில் தான் இந்தக் குறுஞ்செய்தி உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டது. அப்படியானால் அதன் நோக்கம் அரசின் விருப்பத்தை ஆதரிப்பதா.? அல்லது எதிர்ப்பதா..? இரண்டும் இல்லை. இரண்டிற்கும் நடுவில் விளையாட்டுத் தனமாகக் கேலி செய்து விட்டு ஒதுங்குவது மட்டும் தான் எனப் பலருக்கும் தோன்றலாம். எனக்கும் கூட அப்படித்தான் முதலில் தோன்றியது.ஆனால் அப்படி மட்டும் நினைத்துக் கொள்வது சரியான புரிதல் அல்ல என்பதும் எனக்குப் பட்டது. பொதுவாகக் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்பவர்களின் அடிப்படை மனோபாவம் தகவலைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் அல்ல. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக் கிணங்க,தான் வாசித்த ஒரு குறுஞ்செய்தி தரும் நகைச்சுவை உணர்வைத் தனது நண்பர்களுக்கும் , தெரிந் தவர்களுக்கும் அளித்திட வேண்டும் என்ற பெருவிருப்பம் அதில் உண்டு. தனிமனிதர்களின் அந்தரங்கத் திற்குள் நுழைவது, பொதுவெளியில் இயங்குபவர்கள் மீது கோபத்தை வெளிப் படுத்துவது, விமரிசனம் செய்வது என்ற நோக்கங்களும் அவர்களுக்கு உண்டு. நீதிமன்றத்தில் நடக்கும் ஆங்கில விவாதத்தைச் சேரித்தமிழ் எனச் சொல்லப்படும் வட்டார மொழியில் பெயர்த்துத் தந்து உருவாக்கப்பட்டுள்ள குறுஞ்செய்தி , தகவல் பரிமாற்றம் அல்ல என்பதை உறுதியாகச் சொல்லலாம். நீதி மன்ற மொழியாகத் தமிழை ஆக்கும் முயற்சி எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுபவர்களின் மறைமுக எதிர்ப்பின் வெளிப்பாடும் கூட என்று சொன்னால் பலர் மறுக்கலாம். ஆனால் பொதுப்புத்தியின் உளவியலைக் கட்டமைத்துச் செயல்படும் ஊடக வெளியாகச் செல்போனின் குறுஞ்செய்திகளும் இருக்கின்றன என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் வலிமையுடன் நிரூபித்து வருகின்றன. இந்தியாவின் குடியரசுத் தலைவராக மதிப்பிற் குரிய அப்துல் கலாம் அவர்களே தொடர வேண்டும் என்ற கருத்து உருவாக்கப்பட்டது குறுஞ் செய்திகள் வழியாகத்தான். அதே குறுஞ்செய்திகள் தான் இப்பொழுது இன்போசியஸ் நாராயணமூர்த்திக்காக வாக்குகளை அளித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி பற்றியும், உலகக் கோப்பைக் கிரிக் கெட்டில் தோற்றுத் திரும்பிய இந்திய அணி பற்றியும் உருவாக்கப்பட்ட குறுஞ்செய்திகள் அனைத்தும் எரிச் சலுடன் புன்னகைத்துக் கொள்வதற்கானவை என்பதை நினைவு படுத்திக் கொண்டால் போதும். இந்தியாவில் கிரிக்கெட் ஜுரத்தின் ஆரம்பம் ஆங்கிலப் பத்திரிகைகளின் விளையாட்டுப் பக்கங்களாகத்தான் இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.சுதந்திரப் போராட்டக் காலத்துத் தினசரிகளை ஒரு ஆய்வுக்காகப் பார்த்தபோது அன்றைய விளையாட்டுப் பக்கங்களையும் கிரிக்கெட் தான் பிடித்துக் கொண்டிருந்துள்ளது என்பது தெரிய வந்தது. போட்டிகளைப் பற்றியும் வீரர்களைப் பற்றியும் எழுதப்படும் செய்திகள் ஆங்கிலப் பத்திரிகைகளின் வாசகர்களுக்கு எப்பொழுதும் அலுப்பூட்டுவதே இல்லை; திகட்டத் திகட்டப் புள்ளிவிவரங்கள்; பெரிய பெரிய புகைப்படங்கள் விரிவானஅலசல்கள் எனக் கிரிக்கெட்டுக்குத் தந்த முக்கியத்துவம் மற்ற விளை யாட்டுக்களைக் காணாமல் ஆக்கிவிட்டது. தேசிய விளையாட்டான ஹாக்கியைப் பற்றிய செய்திகளைப் போட்டி கள் நடக்கும் போது மட்டும் தான் தருகின்றன. ஆனால் கிரிக்கெட்டிற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் எல்லா காலத்திலும் இடம் உண்டு.இந்தியாவில் கிரிக்கெட் மட்டையைப் பிடித்துக் கூடப் பார்க்காதவர்களும் கிரிக்கெட் பற்றிய புள்ளிவிவரங்களை அள்ளி விடுகிறார்கள் என்றால் காரணம் ஆங்கிலத் தினசரிகள் தான். ஆங்கிலத் தினசரிகளின் விளையாட்டு இன்று இந்திய தேசத்தின் விளையாட்டாக மாறிப்போய்விட்டது. இந்திய விளையாட்டுத் துறையின் முகத்தை மாற்றியதில் மட்டுமல்ல, இந்தியாவின் முகத்தை மாற்றுவதிலேயே ஆங்கில ஊடகங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய மொழி களின் ஊடகங்கள் பொதுவாக அதில் கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை. அவற்றின் ஒற்றை நோக்கம் வாசகர் எண்ணிக்கைப் பெருக்கம்; வியாபார வளர்ச்சி என்பதாக இருப்பதால் தேசிய எல்லைகளை விட்டு வட்டார எல்லைகளையே தங்களின் பரப்பளவாகக் கொள்கின்றன. வட்டார எல்லையின் அடையாளம் மாநிலமாக இருந்த நிலை மாறி மாவட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆங்கில ஊடகங்களின் இயல்பே தேசிய எல்லையாகவும், சர்வதேச அடையாளமாகவும் இருப்பதால் அவை தொடர்ந்து தேசத்திற்கான- உலகத்திற்கான கருத்தை உருவாக்குவதிலும்,கலை, பண்பாடு, விளையாட்டு போன்றவற்றின் அடையாளங்களை மாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.ஆங்கில ஊடகங்களின் ஆதிக்கப் பின்னணியில் இந்தியர்களின் கைகளில் இருக்கும் வந்து சேர்ந்திருக்கும் செல்போன்கள் செய்யும் மாயங்கள் ஆச்சரியமூட்டுவனவாக ஆகிக் கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வங்கதேச அணியிடம் தோற்ற உடனே கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பார்வையாளர்கள் அனுப்பிய குறுஞ்செய்தி [ SMS ] வாசகங்களை வாசித்தவர்களுக்கும் , அவற்றில் வெளிப்பட்ட ஆத்திரத்தைக் கவனித்தவர்களுக்கும் நான் சொல்வதின் அர்த்தம் புரியக்கூடும். வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் இயல்பானது என்பதும், திறமையான வீரர்களைக் கொண்ட அணி வெற்றி பெறும் என்பதும் அடிப்படையான உண்மை. ஆனால் இந்தியர்களைப் பொருத்தவரை இந்தியக் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கருதுவது வாடிக்கையாக ஆகிவிட்டது. ஆகி விட்டது என்பதை விட- ஆக்கப்பட்டு விட்டது. ஆக்குவதில் ஊடகங்களின் பங்கு முதன்மையானது. அதிலும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின் பங்கு முன்னோடியானது. ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின் பின்னணியில் கிரிக்கெட் விளையாட்டை நேரடி ஒளிபரப்பாக வழங்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வியாபார நோக்கமும், லாபவெறியும் இருக்கிறது என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. இந்திய அணி தோற்றுத் திரும்பிய பின்னும் உலகக் கோப்பையை வாங்கப்போகும் அணியைப் பற்றி விவாதிப்பதைப் போல அணியை மறு சீரமைப்புச் செய்வதைப் பற்றி ஆங்கில ஊடகங்களும், ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி அனுப்புபவர்களும் விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் அதில் செயல்படும் மனோபாவம் என்ன என்பது தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது தானே. ஒரு நாளில் ஒன்பது மணி நேரம் நடக்கும் ஒரு விளையாட்டை நேரடியாக ஒளிபரப்புவதும், அவ்வொளி பரப்பிற் கென சிறப்பு வர்ணனையாளர்களையும் மந்திரா பேடி உள்ளிட்ட விளையாட்டு நிபுணர்களையும் நியமித்து கூடுதல் இன்னிங்ஸாகப் பேசிக் கொண்டே இருப்பது ஒருவித ஆக்கம் என்றால், செய்தி அலை வரிசைகள் ஓட விடும்/உருளும் செய்திகள் [Flash News] இன்னொரு வகையான ஆக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி ஆக்குவது ஆபத்தானது என்பதை ஊடகங்களில் செயல்படுபவர்கள் உணர்ந்த தாகத் தெரியவில்லை. தேசப்பற்று என்பதாகவும், தேசிய உணர்வை உண்டாக்குதல் என்பதாகவும் முன்னிறுத் தப்படும் செயல்களில் தான் வெறியூட்டப்படும் பின்னணிகளும் மறைந்¢து கிடக்கின்றன. செய்தி அலைவரிசைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் செய்திகளை உருட்டிக் கொண்டும், மின்னல் வெளிச்சம் எனத் தலைப்புச் செய்திகளைத் தந்து கொண்டும் இருக்கும் ஆங்கில அலை வரிசைகளுடன் இணைந்து செல்போனின் குறுஞ்செய்திகள் மைய நீரோட்டத்தின் பொதுப்புத்தியைத் தகவமைத்துக் கொண் டிருக்கின்றன. இத்தகவமைப்பு பல நேரங்களில் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கெதிராகவே இருக் கிறது. இடது ஒதுக்கீடு என்பதை மையப்படுத்தி ஆங்கிலத் தொலைக் காட்சி செய்தி அலைவரிசைகள் நடத்தும் விவாதங்கள், வாக்கெடுப்புகள், விளக்கங்கள் என எல்லா வற்றிற்கும் செல்போனிலிருந்து வரும் குரல்களும் குறுஞ்செய்திகளும் தான் ஆதாரங்கள். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற தகைசால் நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பெரும் கலவரங்களும் அசம்பா விதங்களும் நடக்கின்றன என்பதாகக் காட்ட விரும்பும் ஆங்கிலச் செய்தி அலை வரிசைகளின் விருப்பம் பெரும்பான்மை இந்தியர்களின் கருத்து அல்ல. ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் யோசித்து, ஆங்கிலேயர் களாகவும், ஆங்கிலேயர்களுக்காகவும் வாழ விரும்பும் மிகச் சிறிய எண்ணிக்கை கொண்ட இந்தியர்களின் மனோபாவம் அது. ஆங்கிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற விவாதங்கள் மிகுந்த கண்ணியத்தோடு நடந்து கொண்டி ருக்கிறது; ஏனென்றால் ஆங்கிலம் கனவான்களின் மொழி. அம்மொழியின் இயல்பே கண்ணியத் துடனும் நாகரிகத்துடனும் நடந்து கொள்ளும்படி தூண்டுவது தான். அதற்கு மாறாகத் தமிழ் போன்ற மாநில மொழிகளில் பேசத் தொடங்கினால், தரமும் கண்ணியமும் நாகரிகமும் காணாமல் போய்விடும். இப்படியொரு நம்பிக்கை தமிழ்/ இந்திய நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பிரிவினருக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒருவர்தான் இந்தக் குறுஞ்செய்தியை உருவாக்கி இருக்க வேண்டும். அடிப்படையில் தமிழ் விரோதிகளாக இருக்கும் அந்தப் பிரிவினர் தங்கள் கருத்துக்களை- எதிர்ப்புணர்வை நேரடியாகச் சொல்லும் தைரியமும் இல்லாதவர்கள். தெருவில் இறங்கிப் போராடும் ஆற்றல் அற்றவர்கள். ஆனால் மூளை மட்டும் வீங்கிக் கிடப்பதாக நம்புபவர்கள். அங்கதமும் கேலியும் உடல் வலிமை அற்றவர்களின் வலிமையான ஆயுதமாக இருந்தது. இப்போது அவர்கள் குறுஞ்செய்தி என்னும் சாணையால் தீட்டிப் பயன்படுத்துகிறார்கள் . ஆக நடப்பது விளையாட்டு அல்ல; யுத்தம்.


ஊடகவெளி -3
அழிபடும் அந்தரங்கம்
பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் ‘கன்னட’ என்ற சொல்லை அவரே சேர்த்து வைத்திருந்தாரா..?அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தான் சேர்த்துச் சொல்கின்றனவா..? என்பது உறுதியாகத் தெரியவில்லை. அந்தப் பெயரைச் சுற்றி எழுப்பப்படும் புனைவுகளுக்கும், எழுதப்படும் கதைகளுக்கும் வண்ணங்கள் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால், நான் பரிந்துரை செய்வன; பச்சையும் நீலமும் கலந்த செஞ்சுடர் இருட்டு என்பது தான்.செஞ்சுடர் இருட்டாகப் பரவி விரியும் காட்சிகளில் மிளிரும் பச்சை வண்ணமும் நீல வண்ணமும் உண்டாக்கும் உணர்வுகள் எப்படிப் பட்டவை; அவை பார்வையாளர்¢களின் மனத்தில் எழுப்பும் உணர்வுத் தூண்டல்கள் என்ன வகையானவை என்பதை விளக்குவதற்கு புள்ளியியல் விவரங்கள் தேவையில்லை. வண்ணங்கள் பற்றிய பாரம்பரிய அறிவே கூடப் போதும்¢. ஆனால் காட்சிச் சாதனங்களுக்குச் சற்றும் குறையாமல் எழுத்தும் உணர்வுத் தூண்டலைச் செய்யும் வல்லமை உடையன என்பதைத் தர்க்க பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் புள்ளிவிவர ஆய்வொன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். அந்த ஆய்வு வெறும் புள்ளியியல் துறையோடு நின்று விடாமல், மருத்துவ உளவியல் துறையையும் இணைத்துக் கொண்ட புள்ளியியல் ஆய்வாக இருந்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கக் கூடும். தமிழின் அச்சு ஊடகங்கள் உண்டாக்கும் உணர்வுத் தூண்டல்கள் பலவிதங்களில் நோய்க்கூறுகள் கொண்டவை என்பதால் தான் மருத்துவத்துறையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். முதன்மை வண்ணங்களோடு துணைமை வண்ணங்களைக் குழைத்து வண்ணக் கலவையை உருவாக்குவதும், அதன் உதவியால் வரையப்படும் காட்சிகளால் பார்வையாளர்களின் ஆழ்மனப் பரப்பிற்குள் புகுந்து, உணர்வு களைக் கிளறிப் பரவசப் படச் செய்வதும் ஓவியக் கலைஞர்களின் முன் உள்ள சவால். ஆனால் ஓவியம், புகைப்படம், சிற்பம் போன்ற காட்சிச் சாதனங்களால் மட்டுமே நேரடியான உணர்வுத் தூண்டல் சாத்தியம் என்பதில்லை. மொழியைப் பயன்படுத்தி எழுதப்படும் புனைவுகளுக்கும் அத்தகைய உணர்வுத் தூண்டல்கள் சாத்தியம் தான் என்பதை நமது வாராந்திரிகள்- குறிப்பாகப் புலனாய்வு இதழ்கள் சரியாகத் தெரிந்து வைத்திருக்கின்றன.தமிழ்ப் புலனாய்வு இதழியலின் முன்னோடி எனச் சொல்லிக் கொள்ளும் ஜூனியர் விகடனுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என அட்டையில் அச்சிட்டுக் கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை வெளிவரும் அந்த இதழ் வெள்ளி விழாக் கொண்டாட்டத்திற்காகத் தன் வாசகர்களுக்கு தந்துள்ள சிறப்புப் பரிசு ரெட்லைட் ராஜாவின் கதை என்ற தொடர். விபச்சாரத் தொழிலை அனைத்துவித நவீனத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி நடத்தி வந்த பிரசாத்தின் லீலைகள் பற்றியது. எழுதுபவர் அதன் மூத்த உதவி ஆசிரியர்களுள் ஒருவரான எஸ்.சரவணகுமார். முகம் மறைக்கப்பட்ட பெண்களின் வண்ணப்படத்தோடு விரியும் அந்தக் கட்டுரை(கதை)த் தொடர் உருவாக்கும் உணர்வுகள்¢ என்னவாக இருக்கும்..? அதனைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்களிடம் கேட்டுப் பார்த்தால் மட்டும் போதாது. அவர்களது நாடியையும் பிடித்தும் பார்க்க வேண்டும். ஜூனியர் விகடனுடன் எல்லாவிதத்திலும் போட்டி போடுவதாக நம்பும் நக்கீரன் பிரசாத் தொடர்பாகவும் தனது போட்டியை உறுதி செய்துள்ளது. ஜூனியர் விகடனை விட ஒரு படி மேலே போய் கன்னட பிரசாத் எழுதும் நிஜத் தொடரான ‘இருட்டு உலகம் ‘ என்பதின் மூலம் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. உண்மை துணிவு உறுதி என்ற வாசகத்தை அடையாள வாசகமாகக் கொண்டுள்ள நக்கீரன் நிஜத் தொடர்களின் ஆர்வலன் என்பது வரலாறு. ஆட்டோ சங்கர், சந்தன வீரப்பன், சிவகாசி ஜெயலட்சுமி என அதன் புகழ் பெற்ற நிஜக் காவியங்கள் ஒரு பானை சோற்றில் சில பதங்கள் தான். தமிழின் முன்னோடிப் புலனாய்வு இதழ்களான ஜூனியர் விகடன், நக்கீரன் அளவுக்கு பிற புலனாய்வு இதழ்கள் தொடர்களை வெளியிடவில்லை என்றாலும் , தனிக் கட்டுரைகளைப் படங்களோடு வெளியிடத் தவறியதில்லை . இருட்டை வெளிச்சம் போட்டுக் காட்டும் எழுத்துப் புனைவுகளைப் புலனாய்வு இதழ்களின் இதழியல் ப(£)ணி என்பதாகச் சுருக்கி விட வேண்டியதும் இல்லை தான். புலனாய்வு இதழ்களை வெளியிடும் அதே நிறுவனங் களின் வாரப் பத்திரிகைகளும் கூட அக்கறை காட்டும் விசயங்கள் தான் அவை. வெளிப்படுத்தும் அக்கறை களில் குமுதத்திற்கும் ஆனந்த விகடனுக்கும் குங்குமத்திற்கும் சின்ன சின்ன வேறுபாடுகள் இருக்கிறதே ஒழிய இந்தப் போக்கிலிருந்து விடுபட்ட ஒரு வார இதழையோ, புலனாய்வுப் பத்திரிகையையோ தமிழ் அச்சு ஊடகங் களுக்குள் அடையாளப்படுத்தி விட முடியாது. பல நேரங்களில் நாளிதழ்களும் கூட அந்த நோயப் பரப்பலைத் தவற விடுவதில்லை. சரவணபவன் ஹோட்டல் அதிபர் கைதான போது, அவரோடு தொடர்புடைய பெண்களின் கதைகளை ஒட்டுமொத்தத் தமிழ் வாசகப் பரப்பிற்கும் விருந்தாக்கியவை நமது அச்சிதழ்கள் என்பது ¢ மறந்து விடக் கூடிய நிகழ்வுகள் அல்ல. இன்று வட்டார எல்லைக்குள் சுருங்கிக் கொண்டு விட்ட நாளிதழ்கள் இந்தப் பரபரப்பை வேறு தளங்களுக்கு நகர்த்திக் கொண்டு விட்டன. மைய நீரோட்ட சமூகத்தால் அங்கீகரிக்கப் படாத முறை மாறிய காதல் உறவுகள், கள்ளக் காதல் ஜோடிகளின் தற்கொலைகள் அல்லது கொலைகள் என நகர்ந்து விட்டன. தமிழின் ‘நம்பர் ஒன்‘ இடத்திற்குப் போட்டியிடும் இதழ்கள் இதனை வாசக ஈர்ப்பு உத்தியாகவே பயன்படுத்துகின்றன. கடந்த ஒரு மாத காலத்தில் முதலிடம் பிரசாத்திற்குத் தான் என்றாலும், அவரோடு போட்டி போட்ட பெயர்களாக தேவிப்பிரியா, பிரித்தி வர்மா என்ற பெயர்களும் பரபரப்பில் இருக்கத்தான் செய்கின்றன.இவர்களுக்கு முந்திய பரபரப்பு சிம்பு- நயன்தாரா காதல் விவகாரமும் தனியறைப் படங்களும்.அதற்கு முன் நடிகை சிநேகாவின் காதல் . அப்படியே கடந்த காலத்திற்குள் பயணம் செய்தால், ஜீவஜோதி, செரினா எனப் பெண்கள் பெயர்களும் டாக்டர் பிரகாஷ், பாதிரியார் யோபு சரவணன் போன்ற ஆண்களின் பெயர்களும் நினைவுக்கு வரலாம். உங்கள் நினைவுப் பாதை இன்னும் ஆழமானது என்றால், சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, போன்ற தற்கொலை செய்து கொண்ட நடிகைகளின் பெயர்களும் பிம்பங்களும் கூட நினைவுக்கு வரலாம்.மரபான நம்பிக்கைகளின் படியும், நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் படியும் குற்றவாளிகள் எனக் கருதத் தக்க இவர்களை-இவர்களின் வாழ்க்கைக் கதையை இந்தப் பத்திரிகைகளின் பக்கங்களில் எழுதிக் காட்டுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்..? பின் பற்றவேண்டிய முன் மாதிரிகளாக இவர்கள் முன் நிறுத்தப் படவில்லை என்பது உறுதி. அதே நேரத்தில் ஒதுக்கப்பட வேண்டிய முன் மாதிரிகள் என்று வலியுறுத்துவதும் இல்லை என்பதும் உண்மை. அவர்கள் அறியாமல் குற்றம் செய்து விட்டார்கள் என்று வாதிடுவதும், அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல என வலியுறுத்துவதையும் கூட அந்தக் கட்டுரைகளோ , தொடர்களோ தௌ¤வாக வெளிப்படுத்து வதில்லை. அதற்கு மாறாக வேறொரு நோக்கத்தைத் தௌ¤வாக வெளிப்படுத்துகின்றன.மனித உயிரியின் அந்தரங்க வெளிக்குள் தற்காலிக பிம்பங்களை அலைய விட்டு அடக்கி வைக்கப்படும் பாலியல் தூண்டல்களை கிளறிவிடும் வேலையைச் செவ்வனே செய்வது தான் அந்த நோக்கம்.கடந்த ஒரு மாத காலமாக அச்சடிக்கும் பெயராக கன்னட பிரசாத் என்ற பெயர் இருக்கிறது என்றாலும், அவரோடு சேர்த்து மெல்லப்படும் பெரும்பாலான பாத்திரங்களுக்கு பெயர்கள் சொல்லப்படுவதில்லை. அந்தப் பாத்திரங் களில் ஆண்கள் என்றால் அவரது பதவி அடையாளம் அல்லது கட்சி அடையாளம் சொல்லப்பட்டு மறைக்கப் படுகிறது. பெண்கள் என்றால், உடல் அடையாளங்கள் விவரிக்கப்படுகின்றன. அதிலும் நடிகைகள் என்றால் பலரை நினைவூட்டும் குறிப்புக்கள் திட்டமிட்டுத் தரப்படுகின்றன. பிரசாத், டாக்டர் பிரகாஷ், பாதிரியார் யோபு சரவணன் போன்ற ஆண் மையத் தொடர்களிலும் கூட பெண்களின் உடலே முக்கியக் காட்சிப் பொருளாக எழுதிக் காட்டப்பட்டன. பணத்தேவை காரணமாகப் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில் தொடங்கி, அதற்கெனத் தனியான உடை, ஒப்பனைகள் செய்வது, ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்துவது, ரகசியப்பயணங்களையும் சந்திப்புக்களையும் மேற்கொள்வது, எல்லை மீறிய பாலுணர்வு ஆசைகளின் வெளிப்பாடு, உடல் உறவுக்காக அலைதல், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அல்லது எதிர்ப்பு எனப் பெண்களை மையப்படுத்தி எழுதும் பகுதிகளே கூடுதல் இடத்தைப் பிடித்துள்ளன என்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. ¢கட்டுப் பெட்டியான நாயகிகளைக் கொண்ட திரைப்படம் ஒன்றில் கனவுப் பாடலாகவோ , நினைவுப் பாடலாகவோ இடம் பெறும் காமரசம் கொப்பளிக்கும் வார்த்தை மொழிகளையும் உடல் மொழியையும் கொண்ட பாடலில் ஆட்டம் போடும் கவர்ச்சி நடிகைகள், பார்வையாளனின் அந்தரங்க வெளிக்குள் தற்காலிகமாக நுழைந்து வெளியேறுவதைவிட ஆபத்துக்கள் நிரம்பிய நுழைவுகள் இவை என்பதை நமது அச்சு ஊடகங்கள் உணர்ந்துள்ளனவா..? என்று தெரியவில்லை. வாசகனின் அந்தரங்க வெளிக்குள் பச்சையும் நீலமும் கலந்த நிழல் பிம்பமாக பெயரில்லாக் கதாபாத்திரங்களாகப் பெண்களும், குறியீட்டு அடையாளத்தோடு ஆண்களும் , உலவும் அந்த உலகம் வாசகனின் மனத்தில் உண்டாக்குவது நோய்க்கூறு நிரம்பிய மனநிலையைத் தான் என்பதை ஆய்வு செய்து விளக்க வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் வாயரிசம் (voyeurism) என்றொரு வார்த்தை உண்டு. மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளைக் காண்பதன் மூலமாக உண்டாக்கப்படும் பாலியல் தூண்டல்களைக் குறிக்கும் சொல் அது. ஆண் குறியையும் பெண் குறியையும் புகைப்படமாகக் காட்டுவது மட்டுமல்ல; உடலுறவுக் காட்சிகளைப் படமாகக் காட்டும் போது தூண்டப்படும் பாலியல் தூண்டல்களையும் அந்தச் சொல்லே அர்த்தப்படுத்தப்படும்.இந்த அர்த்தத்தை முழுமை யாகத் தரக் கூடிய ஒரு சொல் தமிழில் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அச்சு ஊடகங்களில் பணியாற்றும் பலர் பெண்ணுடலையும் ஆண்- பெண் உறவையும் எழுதிக் காட்டப் பயன்படுத்தும் மொழிப்பயன் பாட்டையும் வர்ணனைகளையும் குறிக்க அந்தச் சொல்லையே பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. அந்த எழுத்து முறைக்குள் அந்தரங்க ஆசைகளுக்கான தீனியோடு , பெண்கள் மேல் ஆணாதிக்க மனோபாவம் வெளிப்படுத்தும் அச்சுறுத்தலும் இணைந்தே வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாடு இரண்டு நோக்கங்களைக் கொண்டவை. ஒன்று. புதிய வெளிக்குள் பயணத்தைத் தொடங்கிய பெண்கள் எல்லாக் கட்டுப்பாடுகளையும் உதறித் தள்ளிய - எதற்கும் தயாரான பெண்கள் என்று தங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் நோக்கம் கொண்டது. இன்னொன்று அச்சுறுத்தலை ஏற்று அவள் தனது வெளிப்பாடு களை நிறுத்திக் கொண்டு குடும்ப வெளிக்குள் திரும்பவும் ஒடுங்கி விடவேண்டும் என்று ஆசைப்படும் நோக்கம் கொண்டது. இந்த இரண்டு நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இந்த எழுத்து முறையைக் குறிக்க வாயரிசம் (voyeurism) என்ற வார்த்தையும் அது தரும் அர்த்தமும் கூடப் போதாது என்றே தோன்றுகிறது. பொருத்தமான வார்த்தையைத் தமிழ் கூறும் நல்லுலகம் உருவாக்கிப் பயன்படுத்துவதாக. இந்த இடத்தில் ஊடகங்களைப் பற்றி யாரோ ஒரு அறிஞன் சொன்னதை மட்டும் சொல்லி முடித்து விடலாம்; விரிக்கப்பட்டுள்ள வலைப்பின்னல்களின் வழியே தகவல்கள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன.கூவி அழைக்கும் வார்த்தைகளாகவும் (oral form) அச்சிடப்பட்ட எழுத்துக் களாகவும்(printed form) நிறுத்தி வைக்கப்பட்ட காட்சிகளாகவும் ( visual form) அலையும் பிம்ப அடுக்குகளாகவும் (moving image form) வாசகனின் புலன்களைத் தாக்கும் தகவல்களை அர்த்தப்படுத்திக் கொள்ள அவனுக்கு உள்ள ஒரு மூளை போதாது .

ஊடகவெளி -2
அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பு..?
இந்திய ஊடக வெளிகள் கடும் போட்டியின் களன்களாக உள்ளன. சேரி, ஊர், கிராமம், நகரம், மாநகரம் என எல்லா வெளிகளையும் கடந்த காட்சிகளை விரித்துக் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்திய யதார்த்தத்தைக் கண்டு கொண்டனவாக இல்லை. பல நேரங்களில் இந்தியச் சமூகத்தில் நிலவும் எல்லாவகை வேறுபாடுகளையும் புறந்தள்ளி விடும் சித்திரங்களையே அவை தீட்டிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களின் யதார்த்த வாழ்க்கைக்குப் புறம்பான விவாதங்களை முன்னெடுக்கும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின்¢ உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத நிலைதான் வட்டார மொழி அலைவரிசை களிடம் காணப்படுகின்றன. 2007, ஜனவரியில் அதிகம் தோன்றிய பிம்பங்கள் யார் ? என்று கேள்வியைக் கேட்டு ஒரு குறுஞ்செய்திப் போட்டி நடத்தினால் முதலிடத்தைப் பிடிப்பதில் காதல் ஜோடி ஒன்றிற்¢கும், ஒரு அபலைப் பெண்ணுக்கும் (?) நிச்சயம் கடும் போட்டி இருக்கும். மணிரத்னத்தின் குரு படத்தின்¢ படப் பிடிப்போடு சேர்ந்து வளர்ந்த அந்தக் காதல், அப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னால் நிச்சயம் செய்யப் பட்டது. ஒருவேளை அப்படத்தின் வெற்றி விழாவிற்கு பின்னால் மணவிழாக் காணலாம். ஆனால் தேச நலனையும் மக்கள் நலனையும் முன்னிட்டு நமது ஊடகங்கள் அந்தக் காதலை எப்படியெல்லாம் வளர்த்தெடுத்தன; எத்தனை முறை ரகசியமாய்த் திருமணத்தை நடத்தி முடித்தன என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. குறிப்பாக ஆங்கிலத்தில் செய்திகளை வாசித்துக் கொண்டும் உருட்டிக் கொண்டும் இருக்கும் 24 மணி நேரச் செய்தி அலைவரிசை களின் அக்கறைக்கு இந்திய நாட்டின் நகரவாசிகள்-குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் நிச்சயம் நன்றிக் கடன் செலுத்தத் தான் வேண்டும். எத்தனை சதவீதம் வட்டியுடன் செலுத்துவார்கள் என்பதுதான் தெரியவில்லை. காதல் வயப்பட்ட ஐஸ்வர்யாராய்- அபிஷேக் பச்சன் ஜோடிக்குத் தான் முதலிடம் என்ற நினைப்பை கிளிசரின் போடாமல் வெளியேற்றிய தனது கண்ணீரால் தட்டிப் பறித்துவிட்டார் அந்தப் பெண். இலண்டன் தொலைக் காட்சி அலைவரிசை ஒன்று [சேனல் ஃபோர்] நடத்தும் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்ட இந்தித் திரைப்பட நட்சத்திரம் ஷில்பா ஷெட்டி தான் அந்த அபலைப் பெண். வேறுபட்ட பண்பாட்டுப் பின்னணிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பலரோடு சேர்ந்து வாழும் , அந்த நேரடி நிகழ்ச்சிப் போட்டியில் கலந்து கொள்வதற்கே ஷில்பாவுக்குப் பல லட்சங்கள் கிடைத்திருக்கும். வெற்றி பெற்றால் கிடைக்கும் தொகை லட்சங்களில் அல்ல; கோடியில். போட்டியில் கலந்து கொண்ட ஷில்பா ஷெட்டிக்கே முடிவில் வெற்றி கிடைத்தது ; கோடிகளும் புதிய பட வாய்ப்புகளும் கூடக் கிடைத்து விட்டன.ஷில்பா ஷெட்டி அடைந்த வெற்றி அவரது திறமையினாலும் பங்கேற்பினாலும் அடைந்த வெற்றி என எந்த ஒரு ஊடகமும் சொல்லவில்லை. அந்த வெற்றியின் பின்னணியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சோகசித்திரம் ஒன்று இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். வெள்ளை இனவெறி கொண்ட ஒரு நடிகையின் [ஜேட் கூடி] இனவாதச் சொற்களாலும், அவமானப்படத்தக்க பழிப்புரைகளாலும் தாக்கப்பட்ட அபலை இந்தியப் பெண்ணுக்கு அடித்த யோகம் என்பது நிகழ்ச்சியை நடத்திய அலைவரிசை நான்கு நிர்வாகத்திற்கும் தெரியும். ஷில்பா ஷெட்டிக்கு 63 சதவீதம் அளவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த அந்தத் தொலைக்காட்சியின் பார்வையாளர்¢களுக்கும் தெரியும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெள்ளைத்திமிரைக் காட்டும் ஆங்கிலேயர்கள், அதிலிருந்து தப்பிக்கும் உத்தியையும் உடன் நிகழ்வாக ஆக்கி விடுவதைத் தான்¢ அவர்களின் பெருமிதமாக உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது. தனியொரு வெள்ளைக்காரி காட்டிய இனவெறியை ஒட்டு மொத்த பிரிட்டானிய சமூகமும் சேர்ந்து துடைத்துவிட்டதாக நம்பச் செய்துவிட்டது ஷில்பாவின் வெற்றி. பிரிட்டானிய ஊடகங்களும் அதன் பார்வையாளர்களும் நடத்திய ஷில்பா ஷெட்டி நாடகத்திலாவது அவர்களைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு உத்தி வெளிப்பட்டது என விட்டு விடலாம். அந்தச் சோக நாடகத்தை இந்திய ஊடகங்களும் அரசியல் கதாபாத்திரங்களும் தங்கள் வசனங்களையும் சேர்த்துக் கோப நாடகமாக ஆக்கி மறு ஒளிபரப்பு செய்ததுதான் அறுவெறுப்பாக இருந்தது. அந்நிய மண்ணில் இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம் எனக் கருதிக் கோபப் பட ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் முதலில் அந்தப் பெண் அதை அவமானமாகக் கருத இருக்க வேண்டும்; நிகழ்ச்சியிலிருந்து வெளியிருக்க வேண்டும். இந்த முதல் நிபந்தனையை நிறைவேற்றாமல், போட்டியின் முடிவில் கிடைக்கப் போகும் பெருந்தொகையைக் குறிவைத்து நகர்ந்த அந்தப் பெண் வடித்த கண்ணீரும் , அவருக்காக இந்திய ஊடகங்கள் கொட்டிய கண்ணீரும், நீலிக் கண்ணீராகப் போனதுதான் கோப நாடகத்தை, அபத்த நாடகமாக முடித்து விட்டன. இந்த இடத்தில் இன்னொரு கேள்வியைக் கூட எழுப்பலாம். இனவாதச் சொல்பிரயோகத்திற்கெதிராகக் கண்டனங்களை எழுப்புவதற்கு இந்திய ஊடகங்களுக்கு உண்மையிலேயே யோக்கியதை இருக்கிறதா..? என்பதுதான் அந்தக் கேள்வி. கைர்லாஞ்சியில் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் பிரபலமான நடிகையாக இல்லாமல் இருக்கலாம். அவளது கொலைக்குக் காரணமாக இருந்தது இனவெறியை விடக் குரூரமான சாதி வெறி என்பதை நமது ஊடகங்கள் மறந்து விடுவது ஏன்.? ஆதிக்க சாதியினரால் நடத்தப்படும் வெறித்தனங்களை நாகரிக சமூகத்திற்கு விடப்பட்ட சவால்களாகக் கணித்துக் கண்டனக் கணைகளைத் தொடுக்காமல், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கும்படி தூண்டுவது எது? இனவெறியை விடக் கூடுதல் வன்மத்துடன் உச்சரிக்கப்படும் சாதியவெறிச் சொல்லாடல்களுக்கும், செயல்பாடுகளுக்கும் இந்திய தேசத்தில் பஞ்சமா என்ன? சமீபத்திய [ 5, பிப்ரவரி ,2007] அவுட் லுக் பத்திரிகையில் எழுதப் பட்ட கட்டுரை ஒன்றில், சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள், புதிய பறையர்களாகக் கருதி ஒதுக்கப்படுகிறார்கள்["Smokers the New Outcasts- Growing middle class intolerance makes smokers feel like pariahs"] என்று ஒரு வரியை எழுதியிருக்கிறார் ரகு கர்னாட் என்ற மனிதர். இந்திய சமூகத்தில் பறையர்கள் உள்ளிட்ட தீண்டப்படாத சாதி மனிதர்களை ஒதுக்கி வைப்பது உறுத்தாத ஒன்றாகத் தானே இந்த மனிதருக்கு உள்ளது. நடுத்தர வர்க்கத்தின் சகிப்பின்மையின் மீது கோபம் கொள்ளும் இவருக்கும் இவரைப் போன்ற மனிதர்களுக்கும் ஒதுக்கி வைக்கப்படும் மனிதக் கூட்டம் ஒன்று இந்திய சமூகத்தில் இருப்பது உறைக்காமல் போனது எப்படி? இந்த நேரத்தில் தலைப்பையும் உள்ளடக்கிய வேதாகமத்தின் அந்த வாசகம்,’’ உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தைப் பார்க்காமல், அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்ப்பதென்ன..? ‘’ என்பது தான் நினைவுக்கு வருகிறது காலச்சுவடு, மார்ச், 2007/60-63

ஊடகவெளி -1
குறுகிய மனங்கள் குறுக்கப்படும் மனவெளிகள்
ஒரு மனித உயிரை எடுக்க, எந்தக் காரணமும் தேவையில்லை என்ற சிந்தனையைத் தந்துள்ளன இந்திய சாதியப் பிளவுகள். தனது சாதிக்குக் கீழான சாதி எனக் கருதும் ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவனை அடிக்கவும், பெண்ணாக இருந்தால் அவளிடம் வன்புணர்ச்சி கொள்ளவும், அதிகாரம் தனக்கு இருக்கிறது எனக் கருதும் ஆதிக்க உணர்வின் உச்சம், அவர்களைக் கொலை செய்யவும் உரிமை இருப்பதாகக் கருதுகிறது. சேடப் பாளையத்தில் சிவாவைக் கொலை செய்ததின் பின்னணியில் செயல்படும் மனநிலை இ¢ந்த ஆதிக்க சாதி மனநிலைதான் .சிவா கொலைச் செய்யப்பட்டதைத்¢ தொடர்ந்து அந்தக் கிராமத்திற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார், முதலில் செய்த வேலை , காலையில் அனுப்பிய வாழ்த்துக்களை வாபஸ் வாங்கும் செய்தியை அனுப்பியது தான். தலித்துக்களுக்குப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களே இல்லையோ என ஆதங்கப் பட்ட அவர், ‘‘ தீண்டாமையைக் கடைப் பிடித்துக் கொண்டு சக மனிதர்களைக் கேவலமாக நடத்தும் இந்திய ஆதிக்க சாதி மனிதர்களுக்கும் அந்த உரிமை இல்லை’’ என்று கோபப்பட்டார், புத்தாண்டுக் கொண்டாட்டம், அடிப்படையில் வேறுபாடுகளுக்கு எதிரானது. எதிரே வருபவர்களின் கைகளைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்துச் சொல்லும் வாய்ப்பை வழங்குவது. அந்த வகையில் அது தீண்டாமைக்கும் எதிரானது கூட. ஆகவே தீண்டாமையால் - சாதி ஆதிக்கத்தால்- நிரம்பி வழியும் மனத்தோடு இந்தியர்கள் சொல்லும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அர்த்தமற்றவை; அதனைச் சொல்ல இந்தியர்களுக்கு அருகதை இல்லை என்று ரவிக்குமாரின் கோபத்தைப் புரிந்து கொண்டேன். நானும் ஓர் இடைநிலைச் சாதி மனிதன் என்பதால்- அந்தக் குற்ற வுணர்வுடன் வாழ்த்தைத் திருப்பி அனுப்பி வைத்தேன்.ரவிக்குமாருடன் தொலைபேசியில் பேசியதால் எனக்குக் கிடைத்த அந்தச் செய்தியைத் தமிழக மக்களுக்குத் தொலைக்காட்சி ஊடகங்கள் அன்று இரவுச் செய்தியாகத் தரும் என்று எதிர்பார்த்தேன். தேசிய நெடுஞ் சாலைகளில் நடக்கும் விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை என்ற தகவலை தினந்தோறும் படத்துடன்¢ சொல்லும் தமிழ் தொலைக் காட்சிச் செய்தியாளர்களுக்கு சிவாவின் கொலை செய்தியாகத் தோன்ற வில்லை போலும். அதனைக் கண்டு கொள்ளவில்லை. காட்சி ஊடகங்களைப் போலப் பொறுப்பற்றனவாக அச்சு ஊடகங்கள் இருப்பதில்லை என்ற கருத்தை அடுத்த நாள் காலையில் வந்த செய்தித்தாள்களும் பொய்யாக்கின. திருநெல்வேலியில் கிடைக்கும் தமிழ், ஆங்கிலத் தினசரிகள் ஒன்றில் கூட அந்தச் செய்தி இடம் பெறவில்லை.அடுத்த நாள் மாலையில் திரும்பவும் ரவிக்குமாரைத் தொடர்பு கொண்டபோது ரவிக்குமார், காவல் துறையினரால் தாக்கப்பட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் என்ற செய்தியை அவரது செல்போனில் வேறு ஒருவரின் குரல் சொன்னது. என்ன நடந்தது என்பதை அவர் சுருக்கமாகவும் சொன்னார். அங்கே பேராசிரியர் கல்யாணியும் உடன் இருந்தார் என்ற தகவல் தெரிந்ததால் அவருடன் தொடர்பு கொண்டேன். பேரா.கல்யாணி நடந்ததை விரிவாகச் சொன்னார்; கொல்லப்பட்ட சிவாவின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வேண்டியதும், சட்ட நடவடிக்கைகளையும், அரசு உதவிகளையும் பெற்றுத் தர வேண்டியதும் சட்டமன்ற உறுப்பினரின் கடமை என்ற பொறுப்புடன் ரவிக்குமார் அங்கு சென்றுள்ளார். உயர் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை முன்நின்று செய்துள்ளார். அவரது தலையீட்டாலும் முதல் அமைச்சர் வரை நேரடியாகப் பேசக் கூடிய சட்டமன்ற உறுப்பினர் என்பதாலும் எல்லாம் சரியாகவே நடந்துள்ளது. அரசு தர வேண்டிய உதவி களுக்கு உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்ட விதிகளின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். சிவாவின் உடல் திரும்பவும் அவரது சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அங்கு பதற்றம் கூடியுள்ளது. சேரி இளைஞர்களின் கோபம் கூடிய போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரசு தனது பொறுப்புக்களைச் சரியாகச் செய்து விட்ட நிலையில் வன்முறையில் இறங்குவது கூடாது என்ற உண்மைநிலையை உணர்த்தி யிருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப் பாளர்கள். அதையும் மீறி இறுதி ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டு விட்டது. பதற்றத் தீ பற்றிக் கொள்ள ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னின்று நடத்திய எம்.எல்.ஏ . ரவிக்குமார் தாக்கப்பட்டுள்ளார். சிவாவின் உடலை மையப்படுத்தி நடந்த வழக்குப் பதிவு, பேச்சு வார்த்தை, ஊர்வலப் பாதுகாப்பு போன்றவற்றை முன்நின்று நடத்தும் ரவிக்குமார் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பது காவல்துறையினருக்குத் தெரியும். தெரிந்தே தாக்கியிருக்கிறார்கள். தாக்கிய அதிகாரி, ‘‘எம் எல் ஏ மட்டுமல்ல; இவன் தான் பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுக்கிறான் ’’ என்று சொல்லியே தாக்கியிருக்கிறார். முகத்திலும் முதுகிலும் பலத்த காயங்களுடன் தப்பி விட்டார் ரவிக்குமார், பேராசிரியர் கல்யாணி சொன்ன இந்தத் தகவல்கள் தந்த அதிர்ச்சியை விடக் கூடுதலான அதிர்ச்சியை நமது ஊடகங்கள் தந்தன. முதல் நாள் சிவாவின் கொலையைச் சொல்லாத தொலைக் காட்சி மற்றும் செய்தித்தாள்கள், ரவிக்குமார் தாக்கப்பட்ட செய்தியையும் சொல்லவில்லை. ரவிக்குமாரை ஆதிக்க சாதியினர் தாக்கியிருந்தால் அதனை ஆத்திரத்தின் விளைவு எனச் சொல்லலாம். ஒடுங்கியும் அடங்கியும் வாழ்ந்தவர்களுக்கு உரிமைகள், போராட்டங்கள், அதிகாரம், ஆகிய வார்த்தைகளையும், அதன் அர்த்தங்களையும் கற்றுத்தந்து அடங்க மறுப்பவர்களாக ஆக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அவர் என்பது நீண்ட கால ஆத்திரத்திற்கான காரணங்கள். உடனடி ஆத்திரத்திற்கும் அன்று காரணங்கள் இருந்துள்ளன. தனி நபர் மோதலாகவும், அதன் தொடர்ச்சியாகக் கலவரம் எனப் பதியப் படும் வழக்குகளே இதுவரை நடந்தவை. ஆனால் ரவிக்குமாரின் தலையீட்டால், சிவாவின் கொலை தீண்டாமை ஒழிப்புச் சட்ட வழக்காக மாறும் அபாயம் உண்டு. அதனால் தண்டிக்கப்படலாம் என்ற அச்சம் கூடியிருக்கலாம். தங்களை அச்சத்திற்குள்ளாக்கும் ஒரு தலித்தை சாதி ஆதிக்கம் எப்பொழுதும் ஏற்பதில்லை. அவனுக்கு உடனடித் தண்டனை வழங்கிப் பாடம் கற்பிக்கவே விரும்பியுள்ளது. வரலாற்றில் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ரவிக்குமாரையும் அந்த உதாரணங்களில் ஒன்றாக ஆக்கும் முயற்சி இது . அச்சத்தின் வெளிப்பாடுகள் ரவிக்குமாரைத் தாக்கியது ஆதிக்க சாதியினர் அல்ல; காவல் துறையினர். ரவிக்குமாரைத் தாக்கிய காவல்துறை அதிகாரியின் மனநிலை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும். அந்த ஆய்வு ஓர் அதிகாரியின் மனநிலை பற்றிய ஆய்வு மட்டுமாக இருக்க முடியாது. அதிகார வர்க்கத்திற்குள் செயல்படும் சாதியத்தைப் பற்றிய ஆய்வாக அது அமையக் கூடும்.போராட்டங்களில் ஈடுபடும் எல்லா எம்.எல். ஏ.க்களையும் நமது காவல் துறை தாக்கியதில்லை. பொது நலனில் அக்கறை கொண்டும், ஒரு குறிப்பிட்ட குழுவின் நலனுக்காகவும் போராட்டங்களை முன் எடுத்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்பு வரை பேசிய கொள்கைகளுக்கு விரோதமானது என்று தெரிந்த பின்பும் ‘மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளிக்கிறேன்’ எனச் சொல்லி ஆதரவு தரும் மதிப்பிற்குரிய எம்.எல்.ஏ.க்களை நமது ஜனநாயகம் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறது. வாக்கு வங்கி அரசியலை உறுதி செய்வதற்காக யாரோ தொடங்கும் போராட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு முன்னின்ற உறுப்பினர்களும் கூட நினைவுக்கு வருகிறார்கள்.அவர்களில் ஒருவர் கூட காவல் துறையினரால் தாக்கப் பட்டதில்லை. அதிகபட்சமாக அவர்கள் எல்லாம் கைது செய்யப் படுவார்கள்; அதுவரை இருந்த கோபம், வீராவேசம் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு வெற்றிப் புன்னகையுடன் புகைப் படம் எடுத்துக் கொண்டு காவல் துறை வாகனத்தில் ஏறிப் போவார்கள். ஆனால் ரவிக்குமார் மட்டும் தாக்கப்பட்டுள்ளார்; வன்மையாகத் தாக்கப்பட்டுள்ளார்.சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் இரண்டு அடையாளங்களே அவரை அடிக்கலாம் என்ற துணிச்சலைத் தந்திருக்கிறது. முதல் அடையாளம் அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒரு தலித் என்பது. தீண்டக் கூடாத சாதியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அடிக்கலாம் என்ற தைரியத்தைத் தந்தது அதிகாரியிடம் செயல்படும் ஆதிக்க சாதி மனவுணர்வே. அதிகாரவர்க்கத்தினரிடம் தங்கியிருக்கும் ஆதிக்க சாதி மனவுணர்வுகள் களையப்பட வேண்டிய ஒன்று. அரசின் வருவாய், கல்வி, மற்றும் காவல் துறையினருக்கு நடத்தப்படும் புரிந்துணர்வு முகாம்களின் வடிவமும் உள்ளடக்கமும் மாற்றப் பட்டு தவறிழைப் பவர்களுக்கு எதிரான சட்டங்களும் , கிடைக்கக் கூடிய தண்டனைகளும் நினைவூட்டப்பட வேண்டும் எனத் தோன்றுகிறது. சட்டங்களும் தண்டனைகளும் விடுதலையைப் பெற்றுத் தரப் போவதில்லை என்றாலும், அதிகார வர்க்கத்தினருக்கு அச்ச மூட்டும் ஒன்றாகவாவது இருக்கக் கூடும் அல்லவா.?சிறுபான்மையினர் பற்றிய சொல்லாடலில் சட்டப்படியான உரிமை, அதிகாரப்பங்கீடு பற்றிய விவாதப்புள்ளிகள் அண்மைக் காலத்தில் மையப்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியா முழுக்க இருக்கும் அதிகார வர்க்கத்தில் பெரும்பான்மையோர் இந்துக்கள்.அவர்கள் சிறுபான்மையோர்களை மதிப்பதில்லை; எதிரிகளாகப் பார்க்கின்றனர். அதனால், சிறுபான்மை யோருக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட வேண்டும்; சட்டப் பாதுகாப்பே அதற்குச் சரியான தீர்வு என்ற வாதம் தேச அளவில் நடந்து கொண்டிருக்கிறது.நாட்டின் தலைமை அமைச்சரான டாக்டர் மன்மோகன்சிங்கே தொடங்கி வைத்த இந்த வாதம் நடத்தப்பட வேண்டியது தான். சிறுபான்மையோருக்கு அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டியன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதைவிட முதலில் விவாதிக் கப்பட வேண்டியதும் ஒழிக்கப்பட வேண்டியதும் சாதீய வாதம் என்பது உணரப்பட வேண்டும். இந்திய சமுதாயம் ஜனநாயக சமுதாயமாக மாறுவதற்கு முதல் முட்டுக் கட்டை சாதியவாதம் என்பது உணரப்படாத வரை முன்னேற்றம் என்பது விலகிச் செல்லும் கானல் நீராகத்தான் இருக்கப் போகிறது. ரவிக்குமாரைத் தாக்கிய காவல் துறை அதிகாரிக்கு ஆத்திரம் ஊட்டிய இன்னொரு அடையாளம் அவர் ஓர் எழுத்தாளர் என்பது. பத்திரிகைகளில் எழுதப்படும் கட்டுரைகள், காவல்துறையின் வரம்பு மீறிய அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கக் கூடியன. அதைக் காவல் துறையினர் எப்பொழுதும் விரும்புவதே இல்லை. அதனால் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் அச்சம் தரும் எதிரிகளாகவே கருதுகின்றனர். வாய்ப்புக் கிடைத்தால், அவர்கள் மீது வன்முறையைச் செலுத்தத் தயங்குவதே இல்லை. ஆதிக்க சாதிகளின் வன்முறைத் தாக்குதலும் ஒருவித அச்சத்தின் வெளிப்பாடு என்றால், காவல் துறையினர் பத்திரிகையாளர்கள், எழுத் தாளர்கள் மீது நடத்தும் தாக்குதலும் இன்னொரு வகையான அச்சத்தின் வெளிப்பாடு என்று தான் தோன்றுகிறது. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் மக்களின் மனசாட்சிகள்; அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்; இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க இவை அடிப்படையான தேவைகள் எனச் சொல்லும் அதே நேரத்தில் பத்திரிகைகள் அவற்றின் நம்பகத்தன்மையை இழந்து கொண்டே வருகின்றன என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வருணிக்கப்¢பட்ட பத்திரிகைகளும், அவற்றின் புதிய பரிமாணங்களான தொலைக்காட்சி ஊடகங்களும் முழுக்க முழுக்க வணிகமயமாகிக் கொண்டு வருகின்றன என்று சொல்லும் குற்றச் சாட்டு புதிய குற்றச் சாட்டு அல்ல. பலரும் சொன்னவை தான். ஆனால் வணிகமயமாவதற்குக் கடைப்பிடிக்கும் உத்திகள் அடிப்படை அறங்களிலிருந்து விலகிச் செல்பவை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியன.குறுக்கப்படும் மனவெளிகள்தமிழ் நாடு முழுவதையும் தனது வாசகப் பரப்பின் எல்லையாகக் கருதிய நாளேடுகள் இன்று இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களின் பரப்பையே, வாசகப் பரப்பாகக் கருதுகின்றன. அந்த எல்லைக்குள்ளும் கூட மையப் படுத்தும் பரப்பு என்பது ஒரு மாவட்டத்தின் பரப்பாகவே இருக்கின்றன. மையப் படுத்தப்படும் பரப்பின் செய்திகளுக்கு அதிக இடமும் அதன் வாசகப்பரப்பாக இருக்கும் அடுத்தடுத்த மாவட்டங்களின் செய்திகளுக்கு அடுத்த இடமும், அதனைத் தொடர்ந்து பொதுச் செய்திகளுக்கு மூன்றாவது இடமும் தருகின்றன. பொதுச் செய்தி என்பன பெரும்பாலும் சென்னையை மையமிட்டவைகளாகவோ, சில நேரங்களில் டெல்லியை மையமிட்டவைகளாகவோ இருக்கும். ஒரு பதிப்பின் வாசகப்பரப்பாக இருக்கும் மாவட்டங்களைத் தாண்டி பிற மாவட்டத்து நிகழ்வுகளை நாளேடுகள் வெளியிட வேண்டும் என்றால் அந்தச் செய்தி தனிநபர் சார்ந்த பரப்பரப்புச் செய்தியாக இருக்க வேண்டும். பரப்பரப்பு என்பதற்கு நமது பத்திரிகைகள் வைத்துள்ள அளவுகோல்கள் விநோதமானவை. வழக்கமல்லாத முறைகளில் நடக்கும் சடங்குகள், ஆண் பெண் உறவுகள், தனி நபர் குற்றங்கள் , அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துக்கள் போன்றன வற்றையே பரபரப்புச் செய்திகளாகக் கருதி வண்ணப்படங்களுடன் நாளிதழ்கள் வெளியிடுகின்றன. தமிழில் வரும் எல்லா நாளிதழ்களும் இந்த உத்தியைக் கடைப்பிடிக்கின்றன என்றே சொல்லலாம். இன்றைய தமிழ் வாசகனுக்குத் தங்கள் மாவட்டச் செய்தியுடன் மாநில அளவில் நடக்கும் அரசியல், திரைப்பட நிகழ்வுகளையும், தேசிய , சர்வதேசிய அளவுச் செய்திகளாகப் போர்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் , தனிநபர் சாகசங்கள், விளையாட்டுத் துணுக்குகள் போன்றன வற்றைத் தந்தால் போதும் என முடிவு செய்து விட்டனர் நமது ஊடகத்துறையினர். அந்த முடிவில் தொலைந்து போன செய்திகளில் முதன்மையானவை தமிழகத்தின் பிற மாவட்டத்து நிகழ்வுகள் தான். கடலூர்ப் பதிப்புகளுக்குச் செய்திகளாக இருந்த சிவாவின் கொலையும் ரவிக்குமாரின் மீதான தாக்குதலும் மதுரைக்கும், மதுரைக்கும் தெற்கேயுள்ள திருநெல்வேலிக்கும் செய்திகளாக ஆகாமல் போன பின்னணியில் இருப்பது ஊடகவியலின் வணிக உத்திதான். இதுபோன்ற விடுதல்களால் பொது மக்கள் உளவியலில் உண்டாகப் போகும் விளைவுகள் அலட்சியப்படுத்தத் தக்கவை அல்ல என்பதைச் சொல்லித் தான் ஆக வேண்டும். ஒரு நாளேட்டைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அல்லது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையின் செய்திகளை மட்டுமே கேட்டபடியே காட்சிகளைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவை தேர்ந்தெடுத்துத் தரும் செய்திகள் மட்டுமே அப்போதைய நிகழ்வுகள் என நம்பத் தொடங்கி விடுவார்கள் என்பது ஊடகவியலில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள். தொடர்ச்சியான பார்வையாளர்களின் மனவெளியைக் குறுகிய பரப்பிற்குள் நிறுத்திக் கட்டமைக்கும் நாளேடுகளும் தொலைக்காட்சிச் செய்திகளும் ஊடகவியலின் அடிப்படை நோக்கங்களைத் தவற விடுகின்றன என்பதோடு, நடுநிலைத் தன்மையைத் தவறவிடுகின்றன என்றும் சொல்லலாம். நடுநிலையைத் தவறவிடும் ஒவ்வொரு கணமும் சார்பு நிலைப்பாடுகளுக்குள்¢ நுழைவது தவிர்க்க முடியாதது. சார்புநிலை என்பதை அரசியல் சார்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தில் புரிந்து கொள்ளாமல் அவை செயல்படும் பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் சமய, சாதி, பாலினம் சார்ந்த ஒழுக்க விதிகள் என எல்லாப் பரிமாணங்களோடும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உத்தியை அப்படியே பின்பற்றாமல் இதிலிருந்து விலகிச் செல்லும் தன்மையுடையன அரசியல் கட்சிகள் நடத்தும் ஊடக வலைப்பின்னல்கள். பன்னாட்டு மூலதனத்தை நோக்கி நகரும் பெரும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைக் குறி வைப்பன அவை. தனது வாசகர்களையும் பார்வையாளர்களையும் பொதுவெளிக்¢கு உரியவர்களாக மாற்றி வாக்கு வங்கியாக மாற்றும் நோக்கமும் அவற்றிற்கு உண்டு. எதிரெதிரான நோக்கங்களோடும் அடிப்படைகளோடும் இயங்கும் அவ்விரண்டிற்கும் இடையுள்ள உறவையும் முரணையும் தனியாக விவாதிக்க வேண்டும். இப்போதைக்கு சில கேள்விகள் மட்டும் 1] மனித உரிமைகள் ஆணையம், பெண்கள் மேம்பாட்டு ஆணையம், ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு ஆணையம் போன்றவற்றை அமைத்து அவற்றிற்குத் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நியமித்து அறிக்கைகள் விடும் மைய, மாநில அரசுகள் செயல்படுத்தத் தக்க அதிகாரங்களை வரையறை செய்யாமல் , வெறும் அறிக்கைகளைத் தரும் அமைப்புக்களாக வைத்திருப்பது ஏன்? அரசு அமைத்த ஆணையங்கள் X காவல் துறை என்ற முரண்கள் தோன்றும் போதெல்லாம் முடிவுகள் காணப்படாமல் தள்ளிப் போடப் பட்டதுதானே வரலாறு.2] தனது நிருபர்கள் தாக்கப்பட்டால் கூட கண்டித்துப் பெட்டிச் செய்தி போடும் இதழ்கள் உண்டு. விகடன் குழுமமே கூட அப்படியான பெட்டிச் செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால் ரவிக்குமார் எழுதும் மனித உரிமைகளை மையப் படுத்திய கட்டுரைகளை வெளியிடும் ஜூனியர் விகடன் அவரது தாக்குதல் பற்றிய கட்டுரையை நிருபரிடமிருந்து பெற்று வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டது. விகடன் குழுமத்தின் அக்கறைகள் மனித உரிமைகளை மையப்படுத்திய அவரது கட்டுரைகளை வெளியிடுவதோடு முடிந்து விடக்கூடியது தானா..? 3] ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதற்காக சிவாவின் கொலையையும் ரவிக்குமார் மீது நடந்த தாக்குதலையும் முற்றிலும் நிகழ்கால அரசியல் பின்னணியில் விளக்கி அறிக்கைகள் அளிப்பது தலித் அரசியல் கோட்பாட்டிற்கு ஏற்புடையது தானா..? பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதி மனநிலையை மையப்படுத்தாமல் தி.மு.க.வோடும், பா.ம.க.வோடும் உள்ள உறவைப் பிரிக்க நினைக்கும் சதி எனச் சொல்லுவது விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுக்க விரும்பும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு எந்த வகையில் உதவக்கூடும்..?
காலச்சுவடு, பிப்ரவரி,2007/60-63

No comments :