ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தை நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டீர்களா.? படம் திரைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பின் பார்க்கச் சென்ற எனக்குக் கிடைத்த அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஐம்பது ரூபாயக்கான வரிசையில் நின்ற என்னிடம் தரப்பட்ட டிக்கெட்டிற்கு வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் நூறு. ஐம்பது ரூபாய் டிக்கெட் என்றில்லை எல்லா வகையான டிக்கெட்டு களுமே இரட்டை விலையில் தான் விற்கப்பட்டன; விற்கப்படுகின்றன. பல ஊர்களில் சில அரங்குகளில் இருமடங்கிற்குப் பதிலாக மும்மடங்கு விலையாகக் கூட விற்கப் பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.டிக்கெட் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மட்டும் கேளிக்கை வரியைப் பெற்றுக் கொண்டு கூடுதல் விலை வைத்துக் கொள்ளவும் விற்றுக் கொள்ளவும் அரசே அனுமதிக்கிறது என்பது விநோதமான தகவல் அல்ல. இரண்டு மடங்கோ மும்மடங்கோ வைத்து விற்கப்படும் பணத்திற்கு அரசாங்கம் எப்படி வரி வசூலிக்கும்? என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அதையும் தாண்டி சிவாஜி என்பது சுத்தமான தமிழ்ப் பெயர் என்பது உறுதியாகி விட்டால் கேளிக்கை வரியிலிருந்தும் அரசு விலக்கு அளித்து விடும்.
நூறு ரூபாய் தந்து படம் பார்க்கச் சென்ற என்னைப் போன்ற பார்வையாளர்களுக்கு சிவாஜி படம் தரும் செய்தி: கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும் என்பது தான். இந்த ஒருவரிச் செய்தியைப் பிரமாண்டமான காட்சி
களில் தந்துள்ளது தான் இயக்குநர் ஷங்கரின் உழைப்பு. அவரோடு சேர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த், வசன கர்த்தா எழுத்தாளர் சுஜாதா என ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ள அந்தப் பிரமாண்ட சினிமாவில் கதை என்று எதுவும் இல்லை; ஆனால் சமூகத்திற்கான செய்தி இருப்பதாக பத்திரிகைகளும் படம் பார்த்த நடுத்தர வர்க்க மனிதர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் பொதுப்புத்தி

பொதுமக்களின் சராசரி மனநிலையுடன் ஒத்துப் போகும் ஒருவரிச் செய்தியைச் சினிமாவாக ஆக்க வேண்டும் என்றால் அதைக் கதையாக ஆக்க வேண்டும். அவ்வளவுதான். தமிழ்ச் சினிமாவிற்குள் செயல்படும் இயக்குநர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் ஒருவரிச் செய்திகளைக் கதையாக ஆக்குவது ஒன்றும் சிரமமான காரியமே இல்லை. அவர்களுக்குச் சிரமமாக இருப்பதெல்லாம் அந்தச் செய்தியைச் சொல்லப்போகும் கதாநாயக நடிகன் யார் என்பதும், அவனுக்கேற்ப கதைப்பின்னல்களையும் காட்சிகளையும் படப்பிடிப்பையும் எவ்வாறு அமைப்பது; எவ்வாறு படம் பிடித்துக் காட்டுவது என்பது மட்டும் தான் சிரமமான காரியங்கள். தமிழ் சினிமாவிற்குள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் இயக்குநரின் முக்கியமான வேலை எந்தச் செய்தியை எந்த நடிகன் வழியாகச் சொல்வது என்பதைத் தீர்மானிப்பது மட்டுமாகத் தான் இருக்கிறது. பெரும்பாலும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துக் களையே படத்தின் செய்தியாக ஆக்கிக் காட்டுவதைத் திரும்பத்திரும்பச் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ்ப்பட இயக்குநர்கள். உண்மையான காதல் எல்லா நிலையிலும் வெற்றி பெறும் என்ற பொதுப்புத்தி சார்ந்த நம்பிக்கை தான் தமிழில் எடுக்கப்படும் தொண்ணூறு சதவீதப் படங்களின் ஒரு வரிச் சொல்லாடல் அல்லது செய்தி. அதிலிருந்து மாறுபடுகிறவர்கள், அநீதிகளை அழிக்க நாயகன் ஒருவன் வருவான் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவ்விரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து தருவது பெரும்பாலும் வெற்றிப்படச் சூத்திரமாக இருக்கிறது.

பொது வெளியில் கேள்விகளற்று நம்பப்படும் இத்தகைய நம்பிக்கையின் மாற்று வடிவங்களையே படத்தின் செய்திகளாக உருவாக்கிப் படம் எடுக்கும் இயக்குநர்கள், சொல்லப்படும் செய்தியின் பொருத்தப்பாட்டைப் பற்றி எப்பொழுதும் அக்கறை கொள்வதில்லை. அதனால் தான் தமிழில் வரும் வெற்றிப்படங்கள் தமிழர் வாழ்விலிருந்து விலகியே நிற்கின்றன. வாழ்க்கை சார்ந்த- சமூக இருப்பின் சூழல் சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் போக்கில் அதன் பொருத்தப்பாடு சார்ந்த கேள்விகளைக் கேட்டுக் கொள்ளாமல் மரபான கருத்துக்களைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு கதை சொல்லும் உத்தியில் படம் எடுக்கும்போது திரைப்படம் அதன் அடிப்படை வரையறையான கலை அல்லது ஊடகம் என்பதிலிருந்து விலகித் ‘தொழில்’ என்ற வட்டத்திற்குள் நுழைந்து விடுகிறது.

தமிழின் வெற்றிகரமான இயக்குநர்களின் அடையாளம் என்பது அவர்கள் எந்தக் கதாநாயகர்களைக் கொண்டு ஏற்கெனவே சொல்லப்பட்ட செய்தியைப் புதிய வடிவில் சொல்கிறார்கள் என்பதில் தான் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாச் செய்திகளையும் எல்லாக் கதாநாயகர்களும் சொல்லிவிட முடியாது என்ற தௌ¤வு தான் இயக்குநர்களை இங்கு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. நாயகன் வழியாகச் சொல்லும் செய்தி மனித உறவுகளின் புதிர்களில் அதிகம் பேசப்படாத ஒன்றாகவோ, ஏற்கெனவே இருந்த நம்பிக்கை மீது புதிய பரிமாணத்தில் கேள்விகளை முன் வைப்பதாகவோ இருப்பதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும் என்று வெற்றிகரமான இயக்குநர்கள் விரும்புவதே இல்லை. அதற்காக தமிழ் வாழ்வின் வரலாற்றையோ, இருப்பின் பிரச்சினைகளையோ , சந்திக்கும் நெருக்கடிகளில் மனிதர்கள் எடுக்கும் முடிவின் காரணங்களையோ ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என அவர்கள் நினைப்பதும் இல்லை. அப்படி நினைக்காத வரை அவர்களிடமிருந்து தமிழின் வாழ்வைப் பேசும் கலைப் படைப்பான ஒரு சினிமா வரப்போவதுமில்லை.

ஷங்கரின் நகலெடுப்புகள்

இயக்குநர் ஷங்கர் தமிழின் வெற்றிகரமான இயக்குநராக தொடர்வது கூட பொதுப் புத்திசார்ந்த ஒரு வரிக் கதையை விரிவான பரப்பிற்குள் பின்னிக் காட்டுகிறார் என்பதால் மட்டும் தான். ஒரு சாதாரணக் குடும்பத்து மனிதனின் நியாயமான கேள்வி என்பதில் தொடங்கும் அவரது படங்கள், அந்த மனிதனை சுலபமாகத் தேச எல்லைக்குள் இறக்கி விட்டுப் பெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதாகக் காட்டுகின்றன. முதல் படத்தில் (ஜெண்டில்மேன்) இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாகத் தகுதியும் திறமையும் மதிக்கப் படவில்லை; அதனால் தான் இளைஞர்கள் தவறான பாதைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் எனச் சொன்னதில் தொடங்கி, கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும் என்று சொல்லும் சிவாஜி வரை இந்திய சமூகம் முன்னேறாமல் இருப்பதற்கான தடைகள் எவை என்பதைப் பற்றி விதம் விதமாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்.

இந்தியனில் லஞ்சம் தான் தடை என்றார்; முதல்வனில் அதிகார வெறியும் அதைத் தக்க வைக்க எல்லாக் குறுக்கு வழிகளையும் பின் பற்றும் கட்சி அரசியலும் தான் காரணம் என்றார். அதையே கொஞ்சம் மாற்றி அந்நியனில் தனிமனிதர்களின் பொறுப்பின்மையும், ஒதுங்கி நிற்கும் மனநிலையும், காரணம் என்றார். ஒவ்வொரு படத்திலும் தடைகள் என வெவ்வேறு சீர்கேடு கள் சுட்டிக் காட்டப்பட்டாலும் அதைத் தீர்ப்பதற்கான வழியாக அவர் காட்டுவது ஒன்றே ஒன்றைத் தான். புத்திசாலித்தனமும் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்து அடித்து நொறுக்கும் தனிமனிதனும் தான் அவரது தீர்வுப் பிம்பம். இந்த பிம்பம் நடைமுறை வாழ்க்கையில் காண இயலாத அசகாய சூரத்தனம் நிரம்பிய நாயகப் பிம்பம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கொடியவர்களை அழிக்க அவதாரம் எடுக்கும் நாயகர்களாக- தனிமனித வன்முறையில் முழுமையும் நம்பிக்கை கொண்ட இளைஞர்களைக் கதாபாத்திரங்களாக்கி , அர்ஜுன், கமல்ஹாசன், விக்ரம், ரஜினிகாந்த் போன்ற நாயக நடிகர்களை நடிக்க வைப்பதன் மூலம் பார்வையாளனுக்குப் படம் பார்க்கும் போது ஒரு கனவுலகத்தைக் காட்டுவதில் தான் ஷங்கரின் வெற்றிக்கான சூத்திரம் இருந்து வந்துள்ளது.

அந்தக் கனவுலகம் யதார்த்த வாழ்க்கையில் உண்டாக்கக் கூடியதா? என்ற கேள்வி எழும்ப விடாமல் தடுக்கும் விதமாக நம்பகத்தகுந்த காட்சி அமைப்புகளும், பாடல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளையும் கலந்து தருவதிலும் ஷங்கர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார். இந்த உத்திகள் ஷங்கரின் எல்லாப் படங்களிலும் இருந்தவைதான். ரஜினி நடித்துள்ள சிவாஜியிலும் அதே உத்திகள்; அதே நாயக பிம்ப உருவாக்கம்; அதே கதாநாயக நடிகையின் உடல் கவர்ச்சி எனத் தொடர்ந்துள்ளது. மொத்தத்தில் சிவாஜி புதிய படம் அல்ல; ஷங்கரின் முந்திய படங்களின் நகல் தான். அரைத்த மாவை திரும்ப அரைக்கும் வேலைக்கு இத்தனை கோடிகளும், இவ்வளவு காலமும், இவ்வளவு விளம்பரங்களும் எதற்கு என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. இந்தக் கேள்வியோடு கறுப்புப் பணத்திற்கெதிரான இந்த படம் எத்தனை கோடி வெள்ளைப் பணத்தைக் கறுப்புப் பணமாக மாற்றப் போகிறது என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ளலாம்.

சிவாஜி/ ரஜினியின் இரட்டை வேடம்

‘அரசாங்கத்திற்கு வரிகட்டாமல், தனிநபரிடம் சேரும் பணமே கறுப்புப் பணம்’ என ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நான் படித்தவன் இல்லை; எனக்கு இதுவெல்லாம் தெரியாது என்றெல்லாம் சொல்லி சட்டத்தின் பிடியிலிருந்து சாமான்யன் ஒருவன் தப்பித்து விட முடியாது. சம்பளம் மூலமாகவோ வியாபாரத்தின் வழியாகவோ தன்னிடம் சேரும் ஒவ்வொரு ரூபாயையும் ஒவ்வொரு தனிமனிதர்களும் கணக்கில் காட்டாமல் செலவழிக்கும் நிலையில் கறுப்புப் பணப் புழக்கத்தில் பங்கேற்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்.அந்த வகையில் சிவாஜி படம் பார்க்க நான் தந்த நூறு ரூபாயில் ஐம்பது ரூபாய் கறுப்புப் பணமாக மாறி விடத்தான் போகிறது. ஆக சிவாஜி படம் பார்க்கும் ஒவ்வொருவரும் கறுப்புப் பணப் புழக்கத்திற்கு உதவியவர்களாக ஆகப் போகிறார்கள். ஆனால் சிவாஜி கறுப்புப் பணம் பற்றி வேறு விதமாகப் பேசுகிறது.

அரசதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்,அவர்களோடு கூட்டு வைத்திருக்கும் தாதாக்களும், அடியாட் களும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தைக் கறுப்புப் பணப் பொருளா தாரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையின் மேல் ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு, அந்தக் கறுப்புப் பணத்தையும் அதைப் பயன்படுத்தி சுகபோக வாழ்க்கை வாழும் கூட்டத்தையும் ஒழித்துக் கட்டி விட்டால் இந்தியா வல்லரசு நாடாக ஆகி விடும் எனச் சொல்கிறது சிவாஜி. அதைச் செய்து முடிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து மென்பொருள் பொறி யாளன் வடிவில் வருபவன் தான் சிவாஜி. சிவாஜியாக வந்து சூரத்தனத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்குப் போய்த் திரும்பவும் எம்.ஜி.ஆர் ( ஆர். என்பது ராமச்சந்திரனைக் குறிக்கும் ஆர் அல்ல; ரவிச்சந்திரனைக் குறிக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும் ) எனப் போலிப் பாஸ்போர்ட்டுடன் இந்தியாவில் தங்கி விடும் ஒரு என்.ஆர்.ஐ.யின் கதை இது.

சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட அறக்கட்டளையை உருவாக்கி, பல்கலைக்கழகம், தொழிற்சாலையென மக்களுக்குப் பயன்படும் நிறுவனங் களைத் தொடங்க அமெரிக்காவிலிருந்து வந்தவன் சிவாஜி. வந்தவன், இவற்றுக்குத் தடையாக இருக்கும் அரசதிகாரத்தையும் அதன் கூட்டணியையும் எதிர்த்துப் போராடும் அதே நேரத்தில், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள் கொண்ட பெண்ணைத் தேடித் திருமணம் செய்து கொள் வதையும் முக்கியமான வேலையாக வைத்துக் கொள்கிறான். சமூகத் தடைகளை எதிர்த்துப் போராடுவதில் தீவிரமான வெளிப் பாட்டைக் காட்டும் சிவாஜி, மனைவியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நகைச்சுவை பாணியைக் கடைப்பிடிப்பானா என்ற கேள்வியை எல்லாம் பார்வையாளர்கள் எழுப்பிக் கொள்ளக் கூடாது. அப்படியான கதாபாத்திரத்தை உருவாக்குவது இயக்குநரின் விருப்பம் மட்டும் அல்ல; நடிகர் ரஜினிகாந்தின் இரட்டை நடிப்புக்கு வாய்ப்பை உண்டாக்கும் நோக்கமும் கொண்டது என்று பதிலை உருவாக்கிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

கோயிலுக்குப் போகும்போது மட்டும் பாவாடை, தாவணியில் வரும் அந்தத் தமிழ்ப் பண்பாட்டுப் பெண்ணோடு (ஸ்ரேயா என்னும் தமிழ் பேசத் தெரியாத நடிகை) நாயகன் ஆட்டம் போடும் இடங்கள் தமிழ்நாட்டின் தர்மபுரியோ, தச்சபட்டியோ அல்ல என்பதைக் கவனித்து விட்டு இன்னொரு கேள்வியையும் கேட்கக் கூடாது. ஆஸ்திரேலியா, ஸ்பெயின், எகிப்து எனப் பல நாடுகளின் பின்னணியில் தமிழ்ப் பண்பாட்டுக்குச் சற்றுப் பொருந்தாத ஆடைகளுடனும், ஒப்பனைகளுடனும் குதியாட்டம் போடும் நாயகனுக்குத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தோடு கூடிய பெண் எதற்கு என்று கேள்வி கேட்பதையும் தவிர்த்து விட வேண்டும்.

இவையெல்லாம் ஷங்கர் தனது படங்களில் கடைப்பிடிக்கும் உத்தி என்பதாக எடுத்து கொள்ள வேண்டும். அந்த உத்திகள் எதற்காகப் பயன்படுகிறது என்ற கேள்வியை வேண்டுமானால் மனதிற்குள் கேட்டுப் பதில்களைத் தேடிக் கொள்ளலாம். ஷங்கர் இயக்கும் படங்களில் கனவையும் நடப்பையும் கலந்து ஒருவித நம்பகத்தன்மையை உண்டாக்கும் காட்சிகள் இந்த நாயகிகள் வரும் காட்சிகள். நாயகனின் வன்முறையான இன்னொரு பக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அவனைக் காதலிப்பதும், கனவில் சஞ்சரிப்பதும் மட்டும் தான் அவர்கள் வேலை. நாயகிகள் மட்டும் அல்ல; நாயகிகளைத் தன்னோடு இணைத்துப் பொய்க்கனவுகள் காணும் பார்வையாளத் தமிழ் இளைஞனும், அந்த நாயகியின் இடத்தைத் தன்னுடைய இடமாகப் பாவித்துக் கொள்ளும் பார்வையாளத் தமிழ்ப் பெண்களும் கூட அந்தக் கனவுலகில் சஞ்சரிக்கும்படி தூண்டப்படுகின்றனர் என்ற பதிலை நமக்குள் சொல்லிக் கொள்ளலாம்.

ஷங்கரின் அரசியல் தளமும் உள்நோக்கங்களும்

தாராளமயப் பொருளாதாரத்தின் விளைவாக நடந்துள்ள மாற்றத்தால் இந்திய இளைஞர்கள் அமெரிக்க போன்ற நாடுகளில் ஏராளமான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். (கல்யாண வயதிற்கு முன்னால் ஓர் மென்பொருள் பொறியாளன் அமெரிக்காவில் 200 கோடியெல்லாம் சம்பாதிக்க முடியாது என்று தர்க்கம் சார்ந்த கேள்வி யையும் கேட்கக் கூடாது) அதை இந்தியாவில் நியாயமான முதலீடாக ஆக்கிச் சமூக மாற்றத்தில் பங்கேற்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள அரசமைப்பின் நடவடிக்கைகளும் அரசியல்வாதிகளும் அதற்குத் தடைகளாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டைப் படம் முக்கியமான கருத்தாக வைக்கிறது. தாராளமயப்பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டபின்னும் பழைய அனுமதி நடவடிக்கைகள் இந்தியாவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற வாதம் பெரும் முதலாளிகளின் வாதம் தான்.
இந்த வாதத்தில் உண்மைகள் இல்லாமல் போய்விடவில்லை.தனியார் மயத்தை ஏற்றுக் கொண்டாலும் முழுமையாக அதை நம்பாமல் பின்வாங்கும் சறுக்கல்கள் இன்றைய ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்கிறது. அதை விமரிசனம் செய்யும் உரிமை படைப்பாளிகளுக்கு உண்டு. மாற்று வதற்கான வழிமுறைகள் என்ன என்று அடையாளம் காட்டும் வேலை யையும் , அரசியல் சிந்தனை சார்ந்த கருத்தியலையும் ஒரு படைப்பாளி முன் வைக்கலாம். அந்த முன் வைப்பு அவரது நிலைப்பாடு சார்ந்த நம்பிக்கை என்ற அளவில் விவாதிக்கத் தக்கதுதான். குரு படத்தில் மணிரத்னம் அதைத் தான் செய்திருந்தார். மணிரத்னம் முன் வைத்த அந்தக் கருத்து இந்திய மக்களின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற போதிலும் கலைஞனின் நம்பிக்கை என்ற நிலையில் விவாதிக்கத் தக்கது. அப்படியான முன் மொழிதலை ஷங்கர் எப்பொழுதும் செய்ததே இல்லை; அப்படிச் செய்யாமல் தனிமனித சாகசத்தை எல்லாப் படங்களிலும் தீர்வாகக் காட்டுவதனால் தான் ஷங்கரின் படங்களைக் கனவுகளின் உற்பத்திச் சாலை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

‘இந்தியாவிற்கு ஜனநாயகம் எல்லாம் ஒத்து வராது; நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் தேசப்பற்று கொண்ட சர்வாதிகார ஆட்சி தான் ஏற்றது’ என்பது பொதுப் புத்தி சார்ந்த ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையைத் தான் தனது படங்களின் அடிப்படைக் கருத்தாக வைத்துக் கொண்டு படம் எடுப்பவர் ஷங்கர். இந்தக் கருத்தை முன் வைத்து விட்டு, தடையாக இருக்கும் சக்திகள் எவையென அடையாளப்படுத்திக் காட்டி, அவற்றைத் தனது அசகாய சூரத் தனத்தால் கதாநாயகன் நொறுக்கித் தள்ளித் தனது இலட்சியத்தை அடைந்தான் எனத் தொடர்ந்து படம் எடுத்துக் கனவுகளாக விற்றுக் கொண்டு இருப்பவர். அந்த வியாபாரத்திற்கு ஒவ்வொரு படத்திலும் அவர் மாற்றும் சரக்கு நாயகர்களும் , நாயகிகளும் மட்டும் தான்.

‘‘கறுப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க முடியும்; அதற்குத் தனது சாகசத்தின் மீதும் புத்தி சாலித்தனத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட சிவாஜி போன்றவர்கள் தேவை ’’ என்ற செய்தியைச் சொல்ல ரஜினிகாந்த் என்ற வேகமாக ஓடும் குதிரை மீது, ஷங்கர் என்கிற பயிற்சியாளரை நம்பி ஏ.வி.எம். என்ற தயாரிப்பு நிறுவனம் கட்டிய பணம் ஐம்பதிலிருந்து அறுபது கோடிகள் வரை இருக்கலாம் எனப் பத்திரிகைகள் சொல்கின்றன. இம்மூவருமே ஒரு வகையில் பிரபலமான பிம்பங்கள் தான். இவர்களை வைத்து இந்தச் செய்தியைச் சொன்னாலும் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஷங்கருக்கு எழுந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் சொல்லும் செய்தி பழையது. நாடகத்திலும் திரையுலகத்திலும் ‘கிளிஷே’ என்று அழைக்கப்படும் வகையான நகலெடுப்பு அது . இந்தச் சந்தேகத்தால் தான் ஷங்கர் தனது பழைய சரக்கின் ஊடாக புதுவகை வாசனைப் பொருட்களையும் சேர்த்துள்ளார். அப்படிச் சேர்த்துள்ள புதுவகை வாசனைப் பொருட்களாவது புதுமையானதா என்றால் அதுவும் கூட இல்லை.

பட்டிமன்றப் புகழில் வளம் வந்த சாலமன் பாப்பையாவையும் அவரது கூட்டாளி ராஜாவையும் மசாலாவில் சேர்க்கப்பட்ட சரக்குத் துகள்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் முறையே இந்தப் படத்தின் நாயகியின் பக்கத்து வீட்டுக்காரராகவும் நாயகியின் அப்பாவாகவும் நடிக்க வைக்கப் பட்டதின் நோக்கம் என்ன? பட்டிமன்றப் பிரபலம் வெற்றிக்கு உதவக்கூடும் என்பதைத் தாண்டி இன்னொரு நோக்கம் இருந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. படத்தில் கறுப்பு நிற மனிதர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளு வதோடு கறுப்பு நிறப் பெண்களைக் கேலிக் குரியவர் களாகக் காட்டுவதைத் திசை திருப்பும் உத்தியாகக் கூட இருக்கலாம்.கறுப்பு நிறத்தை வைத்து வெற்றி பெற்ற ஊடகப் புகழ் பிம்பமான பாப்பையாவைக் கொண்டே கறுப்பு நிறப் பெண்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் போது யார் கேள்வி எழுப்பப் போகிறார்கள்? விவரம் தெரிந்த சாலமன் பாப்பையாவே பிரமாண்ட சினிமா வுக்குள் தலையைக் கொடுத்து விட்டால் அப்பாவியாகத் தான் இருக்க முடியும் போலும்.

அதே போல் இந்தப் படம் சேரி மனிதர்களாகக் காட்டப்படும் அடியாட்கள் பற்றிய பார்வையிலும், பன்னாட்டுப் பணத்தை கள்ளத் தனமாகக் கடத்து வதில் முஸ்லீம்கள் கைதேர்ந்தவர்கள் எனக் காட்டும் போதும் உள்நோக்கத் தோடு செயல்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். சேரியில் வாழும் உடல் வலிமை கொண்டவர்கள் எப்பொழுதும் அடியாட்களாக இருக்க மட்டுமே லாயக்கானவர்கள். அவர்களுக்குத் தேவை பணம். நோக்கத்தையோ விளைவு களையோ பற்றிக் கவலைப் படாமல் பணத்திற்காக மட்டுமே மாறி விடக்கூடிய மனம் படைத்தவர்கள் நகரத்துச் சேரி மனிதர்கள் என்கிறது இந்தப் படம். ஆனால் இன்றுள்ள சேரி மனிதர்களின் அரசியல் பாத்திரம் அத்தகைய பரிமாணத்தைத் தாண்டி தனி அடையாளத்தோடு அணி திரண்டு கொண்டிருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் நிகழ்கால அரசியல் பார்வை இயக்குநருக்கும் வசனகர்த்தாவுக்கும் இல்லாமல் போனது உண்மையா.? அல்லது இருட்டடிப்பா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

ஒரு பழைய நினைவு

கறுப்புப் பணப் புழக்கத்திலேயே உயிர் வாழும் பல தொழில்கள் இந்தியாவில் இருக்கிறது என்றாலும் இந்தியசினிமா தான் தொண்ணூறு சதவீதம் கறுப்புப் பணத்தில் இயங்கி முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் தொழில. கறுப்புப் பணப் புழக்கத்தில் மட்டும் அல்ல, தனிமனித வாழ்வு சார்ந்த அறவியல், ஒழுக்கம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றிலும் விதிமீறல் களை மட்டுமே தங்களின் அடிப்படை நியதிகளாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர் களின் கூடாரம் தமிழ் சினிமா உலகம். இதை அதற்குள் ஏதாவது ஒரு வேலை காரணமாக நுழைந்து விட்டுத் திரும்பும் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். பால், வயது, நிறம், மதம், சாதி, பொருளாதாரம் என வேறுபாடுகள் காட்ட வாய்ப்புள்ள நிலைகளில் அதைத் தள்ளி வைத்து விட்டு மனிதர்களை மனிதர்களாக நடத்துவதற்கான பொது நியதிகள் அங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதை ஏராளமான உதவி இயக்குநர்களின், துணை நடிகைகளின், தோல்வியடைந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் கதைகள் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அதுதான் இந்தத் தமிழ் சமூகத்திற்குத் தேவையான கருத்தை- சமூக மேம்பாட்டுச் செய்தியைச் சொல்லும் ஊடகமாகவும் கலையாகவும் நம்பப்படுகிறது என்பதும் நகைமுரண்தான்.

சினிமா என்னும் தொழிற்சாலை எப்படிப் பட்டதாக இருக்கிறது என்பதை அறிய விரும்பினால் சுஜாதா எழுதிய கனவுத் தொழிற்சாலை நாவலை நீங்கள் படிக்க வேண்டும்.ஆம் சிவாஜி படத்திற்கு வசனம் எழுதியுள்ள சுஜாதாதான் அந்த நாவலையும் எழுதியவர்.இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே சினிமாவை தொழிற்சாலை எனச் சரியாகக் கணித்து பாராட்டுக் களையும் பெற்றவர். நாவலாசிரியர்சுஜாதா அப்பொழுது பாராட்டப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன.கலையாகவும், ஊடகமாகவும் இருக்க வேண்டிய சினிமா, கனவுகளை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக ஆகி விட்டதே என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது; கோபம் இருந்தது; அதன் வழியாக ஒரு சமூகப் பொறுப்புள்ள மனிதனாகவும் எழுத்தாளனாகவும் அடையாளப் படுத்திக் கொள்ள முடிந்தது. அப்படியான அடையாளம் அனைத்தையும் தொலைத்து விட்டு அந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான அடிப்படைக் கச்சாப் பொருளை உற்பத்தி செய்து தரும் நோய்க் கிருமிகளுடன் அவரும் ஐக்கியமாகி வி¢ட நேர்ந்து விட்டதுதான் தமிழ் சினிமாவின் முரண் வளர்ச்சி போலும்.

25-06-07

கருத்துகள்

Jayaprakash Sampath இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான விமர்சனம்.

நீங்கள் குறிப்பிட்டுக்கும் விஷயங்களில் சில, சில இடங்களில் மேல்போக்காக இருக்கின்றன என்று தோன்றுகிறது.

//இதை அதற்குள் ஏதாவது ஒரு வேலை காரணமாக நுழைந்து விட்டுத் திரும்பும் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். பால், வயது, நிறம், மதம், சாதி, பொருளாதாரம் என வேறுபாடுகள் காட்ட வாய்ப்புள்ள நிலைகளில் அதைத் தள்ளி வைத்து விட்டு மனிதர்களை மனிதர்களாக நடத்துவதற்கான பொது நியதிகள் அங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதை ஏராளமான உதவி இயக்குநர்களின், துணை நடிகைகளின், தோல்வியடைந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் கதைகள் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அதுதான் இந்தத் தமிழ் சமூகத்திற்குத் தேவையான கருத்தை- சமூக மேம்பாட்டுச் செய்தியைச் சொல்லும் ஊடகமாகவும் கலையாகவும் நம்பப்படுகிறது என்பதும் நகைமுரண்தான்//

முற்றிலும் உண்மை. இந்த நிலையை புனைவு/ அ-புனைவு மூலம் பிறருக்கு எடுத்துச் செல்ல வேண்டிவர்கள், சினிமா இயக்குனர்களுக்கு வசனமெழுத வாய்ப்பு வேண்டி தூது விட்டுக் கொண்டிருக்கிற போது, வேறென்ன செய்ய முடியும்.. வலைப்பதிவுகள் புலம்புவதைத் தவிர்த்து?:-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்